உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதற்பகுதி : உதயம்
அத்தியாயம் 10. குதிரைச் சவாரி சோமுப் பயல் அன்றே ரங்க ராவ் வீட்டிலே சேவகனாக வேலைக்கு அமர்ந்துவிட்டான். மறுநாளே அவனுக்கு ஜரிகைச் சீர் போட்ட சாயவேட்டி ஒரு ஜோடியும் கிடைத்து விட்டது. சுற்றிலும் கெட்டிச் சிவப்புச் சாயமும், நடுவிலே நண்பகலில் ஒளி கக்கும் குரியனைப்போல வட்டமான தூய வெள்ளையும், ஓரங்களில் பளபளத்த இரண்டு சன்ன ஜரிகைக் கம்பிகளுமாக அந்தச் சாய வேட்டிகள் சோமுவின் உள்ளத்தை அள்ளிக் கொண்டன. சாத்தனூர் என்கிற குக்கிராமத்திலே, சர்வமானிய அக்கிரகாரம் என்கிற ‘பார்ப்பாரத் தெரு’விலே ரங்க ராவ் என்கிற ஒரு ‘பென்ஷன்’ உத்தியோகஸ்தர் வீட்டிலே, வேலைக்கு அமர்ந்த வேலைக்காரன் என்று தன்னைப்பற்றி எண்ணவில்லை அவன். ஏதோ ஒரு லக்ஷ்ய பூமியை எட்டிவிட்டவன் போலச் சாயவேட்டி கட்டிக்கொண்டு இறுமாப்புடன் நிமிர்ந்து நடந்தான் அவன். வேலைக்கு அமர்ந்ததற்கு மறுநாளோ, அதற்கு மறுநாளோ, இன்னொரு விஷயமும் தெரியவந்தது அவனுக்கு. ரங்க ராவினுடைய குதிரைகள் கட்டியிருந்த லாயம் தனியாகக் காவேரிக்கரைக்குப் போகும் வழியில் ஒரு தோட்டத்திலே இருந்தது. குதிரைகளைச் சரிவரப் பார்த்துக் கொள்வதற்குச் சிதம்பரம் என்று ஒர் ஆளை அமர்த்தியிருந்தார் அவர். அந்தச் சிதம்பரமும் சாத்தனூர்க்காரன்தான். அதுமட்டுமல்ல; அவனும் மேட்டுத்தெருவான்தான். சோமுவின் தகப்பன் கறுப்ப முதலிக்கு ஒரு காலத்தில் மிகவும் வேண்டியவனாக இருந்தவன். ஒன்றுக்கும் உதவாதவன் சுத்தச் சோதா. மேட்டுத் தெருவாருக்குள்ள துர்க்குணங்கள் பூராவுமே அவனிடம் குடியேறியிருந்தன. அவன் குடித்துவிட்டு நிதானம் தவறாமல் வெறியில்லாமல் இருந்த விநாடியே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் மனிதன் என்கிற பெயருக்காகவேனும் இருக்கவேண்டிய குணங்கள் சிறிதும் இல்லாதவன். அவன் ஒரு காலத்தில் குதிரை வண்டி வைத்திருந்தவன்; அவனுக்குக் குதிரைகளைப்பற்றி எல்லா விஷயங்களும் தெரியும் என்று ரங்க ராவ் சாத்தனூருக்கு வந்த புதுசில் அவருக்கு யாரோ சொன்னார்கள். அதை நம்பி அவர் அவனைத் தம் குதிரைகளைக் கவனிப்பதற்கென்று வைத்துக்கொண்டார். நாளடைவில் அவனுடைய குணாதிசயங்கள் தெரியவரவே அவனை வேலையை விட்டு நீக்கிவிட்டால் தேவலை என்றுதான் நினைத்தார். ஆனால் அவன் அவர் காலில் விழுந்து கெஞ்சினான். பிழைக்க வேறு வழி கிடைக்காதே என்று வேண்டினான். மிகவும் இளகிய மனசு படைத்த ரங்க ராவ் அவன் வாழ்க்கையைக் கெடுப்பானேன் என்று வைத்துக் கொள்ளச் சம்மதித்தார். ஆனால் மற்ற வேலைக்காரர்களிடம் இருப்பதைவிட அவனிடம் அதிகக் கடுமையாகவும் கண்டிப்பாகவும் இருப்பார். அவன் எக்காரணத்தைக் கொண்டும் வீட்டிற்குள் வரக்கூடாது. குதிரைகளினுடைய விஷயங்களைப் பூராவும் அவனே கவனித்துக் கொள்வான். நன்கு கவனித்துக் கொள்வான். அந்த விஷயத்தில் அவனைக் குற்றம் சொல்லவே முடியாது. வண்டிக்காரன் வேறு யாரும் இல்லாத போது அவனே கோச்சுவண்டி ஓட்டுவான்; வண்டி ஓட்ட வேறு ஆள் இருந்துவிட்டால் அந்த வேலையைக்கூட அவன் செய்யச் சம்மதிக்க மாட்டார் ரங்கராவ். எப்படியோ சோமுவுக்குச் சிதம்பரம் சிநேகிதமாகி விட்டான். தான் கறுப்ப முதலிக்கு நண்பனாக இருந்தவன் என்று சொல்லிச் சொல்லியே அவன் சோமுவுக்கு மிகவும் நெருங்கியவனாகி விட்டான். கறுப்ப முதலியைப் பற்றி விதம்விதமாகக் கதைகளை எல்லாம் சொல்லுவான் அவன். எல்லாம் நிஜம் என்று சொல்வதற்கில்லை. ஆனால் நிஜம்போலவே தான் இருக்கும். இந்தக் கதைகளைக் கேட்பதிலே சோமுவுக்கு விருப்பம் இருந்ததிலே ஆச்சரியம் ஒன்றும் இல்லை. முதலில் இந்தக் கதைகளை உத்தேசித்தே சோமு குதிரை லாயத்திற்குச் சென்று வந்தான். அந்தமாதிரிக் கதைகள் கேட்டுக் கேட்டுச் சோமுவின் மனசு மாறிக்கொண்டிருந்தது கொஞ்சம் கொஞ்சமாக. சோமுவின் மனசை மாற்றவேண்டும் என்று சிதம்பரம் தெரிந்து செய்தான் என்றும் சொல்வதற்கு இல்லை. கறுப்ப முதலியின் மகன் கறுப்ப முதலியைப் போலத்தான் இருப்பான், வேறுவிதமாக இருக்கமாட்டான் என்றுதான் அவன் நினைத்தான். கறுப்ப முதலியின் மகன் நல்லவனாக இருப்பான், அவன் மனசை மாற்ற வேண்டியது அவசியம் என்றெல்லாம் சிதம்பரம் நினைக்கவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் உண்மை என்னவோ இதுதான்: கறுப்ப முதலியைப் பற்றிச் சிதம்பரம் சொல்லக் கேட்ட கதைகள் எல்லாம் உடனே சோமுவின் மனசில் பதிந்துவிட்டன என்றோ உடனேயே அவன் மனசை மாற்றிவிட்டன என்றோ சொல்ல முடியாது. ஆனால் அவை அவன் மனசிலே ஊன்றிவிட்டன; என்றாவது ஒரு நாள் தழைத்துப் பலன் தரத் தொடங்கிவிடும். சோமு அடிக்கடி சிதம்பரத்தைத் தேடிக்கொண்டு போகிறான் என்று கேள்விப்பட்டதுமே ரங்க ராவ் அவனைக் கூப்பிட்டனுப்பிக் கடிந்து கொண்டார்: “அவன் உதவாக்கரைப் பயல் அவனோடு சேர்ந்தால் நீயும் உதவாக்கரைதான், ஜாக்கிரதை!” என்றார். “இனிமேல் அவனோடு பழகவில்லை” என்று பதில் அளித்து விட்டான் சோமு. சொல்லும்போது இனிப் பழகுவதில்லை என்கிற உத்தேசத்துடன்தான் சொன்னான். ஆனால் சொல்லி முப்பது நாழிகை நேரம் ஆவதற்குள்ளாகவே அவனையும் அறியாமலே எப்படியோ, அவனையும் மீறிய ஒரு சக்தி உந்த, சிதம்பரத்தைத் தேடிக்கொண்டு கிளம்பிவிட்டான். நடந்ததை அறிந்த சிதம்பரம் இந்தத் தடவை கறுப்ப முதலியைப்பற்றிக் கதைகள் சொல்வதுடன் நிற்கவில்லை. பையனுக்குக் குதிரைச் சவாரி செய்யக் கற்றுத் தருவதாக ஆசை காட்டினான். முன்னைவிட அதிக நேரம் அதாவது வீட்டிலே வேலையில்லாது ஒழிந்த நேரம் எல்லாம் சிதம்பரத்துடன் கழிப்பது பழக்கமாகிவிட்டது சோமுவுக்கு. சிதம்பரத்துடன் சேர்ந்து தன் பிள்ளை கெட்டுப் போகிறான் என்கிற செய்தி இதற்கிடையில் வள்ளியம்மையின் காதிலும் விழுந்துவிட்டது. அவள் சோமுவைக் கண்டித்தாள். அத்துடன் நின்றுவிடாமல் சிதம்பரத்தையும் தேடிக்கொண்டு போய்க் கண்டித்தாள். பழைய காலத்து வள்ளியம்மையாகப் போய்க் கண்டித்தாள். அன்று மாலை சோமு தன் நண்பனைத் தேடிக்கொண்டு போனபோது சிதம்பரம் குடிவெறியில் நாக்குழற, “உங்காயா பத்திரகாளிடா! நீ இனிமே இங்கே வராதேடா பயலே!” என்றான். குதிரைச் சவாரிப் பழக்கம் பாதியிலே நின்றுவிடப் போகிறதே என்று பயம் சோமுவுக்கு. வெகு பாடுபட்டுச் சிதம்பரத்தைச் சமாதானப் படுத்தினான். “என் ஆயாளுக்கு நான் பதில் சொல்லிடறேன்! இனிமே வூட்லே யாருக்கும் தெரியாமே நீயும் நானும் சந்திக்கலாம். மாங்குடி தாண்டி அரிசிலாற்று மணலிலே குதிரைச் சவாரி பழகினால் யாருக்குத் தெரியப் போவுது?” என்றான் சோமு. திருட்டுத்தனமாகச் சாத்தனூரிலிருந்து வெகு தூரத்துக்கு அப்பால் மாங்குடி தாண்டி அரிசிலாற்றங் கரையிலே தினம் மாலையில் சந்தித்தார்கள் நண்பர்கள் இருவரும். குதிரைச் சவாரி செய்யக் கற்றுக்கொண்டான் சோமு. ரங்க ராவ் அந்தச் சமயம் வீட்டிலே “சோமு! சோமு!” என்று கூப்பிட்டுப் பார்ப்பார். பதில் சொல்லச் சோமு இருக்க மாட்டான். “கழுதைப்பயல்! வரவர மோசமாயிண்டிருக்கான்!” என்பார் ரங்க ராவ். ஆனால் அவன் இன்னமும் சிதம்பரத்துடன் சேர்ந்து கொண்டுதான் மோசமாய்ப் போய்க்கொண்டிருக்கிறான் என்பது அவருக்குத் தெரியாது. போவதில்லை என்று தம்மிடம் சொல்லிவிட்டுப் பிறகு போவான் என்று அவர் நினைக்கவில்லை. சோமுவைத் தேடிய அவர் அதே சமயம் சிதம்பரத்தையும் தேடியிருந்தாரானால் ‘குட்டு’ வெளிப்பட்டிருக்கும். ஆனால் சிதம்பரத்தை ஒருபொழுதும் தேட வேண்டிய அவசியம் நேர்ந்ததில்லை அவருக்கு, அவர் தேடவில்லை. சோமு திரும்பியபின், “எங்கேடா போனா?“ என்று கேட்க மாட்டார் ரங்க ராவ். அது ஒரு விசேஷம். ஏதாவது காரியமாகத் தேடியிருப்பார் அவனை. அந்தக் காரியத்தைச் செய்யச் சோமு இல்லாமற் போய்விட்டால் ஒன்பது பேர் காத்திருந்தார்கள். காரியம் நடந்துவிடும். கூப்பிட்டுப் பார்த்துச் சோமு இல்லாதிருந்தது கூட மறந்துபோயிருக்கும் அவருக்கு. வள்ளியம்மைக்கு மட்டும் அடிக்கடி சந்தேகம் தட்டிக்கொண்டே இருந்தது. தான் எவ்வளவுதான் முன் ஜாக்கிரதையாக என்னதான் செய்தாலும் கறுப்ப முதலியின் மகன் ஆயுள் பூராவும் கறுப்ப முதலியின் மகனாகவேதான் இருப்பானோ, திருந்தமாட்டானோ என்கிற பயம் அவளை அரித்துக்கொண்டே இருந்தது. அவன் நல்லவனாகிவிட வேண்டும் ஊரில் மற்றவர்களைப் போல அதாவது மேட்டுத் தெருவாரைத் தவிர்த்து மற்றவர்களைப்போலத் தன் மகன் ஆகிவிட வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். தன் பிள்ளையைக் ‘காப்பாற்ற’, அதுவும் சிதம்பரத்தினிடமிருந்து காப்பாற்ற, அவள் பெரிதும் விரும்பினாள். ஆனால் ரகசியத்திலே சோமுவும் சிதம்பரமும் அரிசிலாற்றங் கரையிலே சந்தித்தார்கள். ஆற்றுமணலிலே ரங்க ராவின் குதிரைமேல் ஏறிக் குதிரைச் சவாரி செய்யக் கற்றுக்கொண்டான் சோமு. குடி வெறியிலே வாழ்க்கையைப் பற்றிப் பேசிப் பல பல விஷயங்களை அவனுக்குப் போதித்தான் சிதம்பரம். திருட்டுத்தனமாக வளர்ந்த இந்த நட்பும், ரகசியமாகக் கற்றுக்கொண்ட இந்தக் குதிரைச் சவாரியும் இன்னும் சில நாட்களில் எப்படிப் பயன்பட இருந்தன என்று சோமுவுக்கே தெரியாது. |