உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதற்பகுதி : உதயம்
அத்தியாயம் 5. காவேரிக் கரையிலிருந்து காவேரி நதியைக் கவிகள் பாடியிருக்கிறார்கள். இரண்டாயிரம் வருஷ காலமாகப் பாடியிருக்கிறார்கள், இன்னமும் இரண்டாயிரம் வருஷங்களோ, இருபதினாயிரம் வருஷங்களோ, இரண்டு லஷம் வருஷங்களோ பாடிக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். உண்மையிலே காவேரி நதியின் புகழுக்கு எல்லை இல்லைதான். ஏதோ ஒரு மலை உச்சியில், எப்பொழுதோ ஒரு சமயம் அகஸ்திய முனியின் கமண்டலம் கவிழ்ந்ததாம் அன்று முதல் காவேரி நதி ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறார்கள். சோழ மன்னர்களுள் சிறந்தவன் என்று கவிகளும் சரித்திர ஆசிரியர்களும் புகழ்ந்திருக்கும் கரிகால் வளவன் தன் நாட்டை வளப்படுத்தும் உத்தேசத்துடன் காவேரி நதிக்குக் கரைகள் கட்டிக் கிளைகள் வெட்டி ஒழுங்குபடுத்தினான். அதன் கரைகளிலே ஆலயங்கள் எழுந்தன. அந்த ஆலயங்களிலே தேவர்கள் தாமாகவே விரும்பிக் குடியேறினார்கள். ஒரு புது நாகரிகமே உற்பத்தியாகி அதன் கரைகளிலிருந்து பரவிற்று. நதியின் இரண்டு கரைகளிலும் அற்புதமான ஆசிரமங்கள் அமைத்துக் கொண்டு மனிதர்கள் குடியேறினார்கள். தனி ஆசிரமங்கள் நாளடைவில், படிப்படியாகப் பெருகின; சேர்ந்து சிறு சிறு கிராமங்கள் ஆயின. தனி மனிதர்கள் ஒன்றுபட்டார்கள். ஒரு புதுச் சமூகமும், ஒரு புது நாகரிகமும், ஒரு புது வாழ்க்கை வழியும் உதயமாகின. எத்தனையோ தலைமுறைகளின் பாவங்களைப் போக்கி இருக்கிறது இந்தக் காவேரி. தலைமுறை தலைமுறையாக வந்து கொண்டிருக்கும் மனிதர்களின் பசியை ஆற்றியிருக்கிறது. இந்தக் காவேரி நதியையும் இதன் கரைகளிலுள்ள ஆலயங்களையும், கிராமங்களையும், அவற்றின் நாகரிக வளத்தையும், அதன் ஓட்டத்தையும் கவிகளைத் தவிர வேறு யார் பாட முடியும்? ஆனியிலிருந்து தை மாசி வரையில் எட்டு ஒன்பது மாசங்கள் காவேரியாற்றிலே ஜலம் ஓடுகிறது. மனிதனுடைய மனசும் ஆத்மாவும் சரித்திரப் பரப்பிலே சில இடங்களில் வறண்டு அஸ்தமித்துவிடுவது போலவே வருஷத்தில் மூன்று நான்கு மாசங்கள் காவேரி ஆறு, வெண் மணலும் வெயிலுமாக வறண்டு கிடக்கிறது. சாத்தனூர்க் கிராமத்தில் சர்வமானிய அக்கிரகாரத் துறையிலே நின்ற சோமு என்கிற மேட்டுத் தெருப் பையன் காவேரி ஆறு ஓடுவதைப் பார்க்கிறான். அவனுக்குப் பாவ புண்ணியமோ, சரித்திரமோ, கவிதையோ தேரியாது. அகஸ்தியன் என்ற ரிஷியைப் பற்றியும் அவன் அறியான். ஆனால் அவன் காவேரி நதியை அறிவான். அந்தக் காவேரி நதி, அவனுடைய வாழ்க்கையை மற்ற எல்லாவற்றுடனும் சரித்திரம், கவிதை, பக்தி, நாகரிகம் எல்லா வற்றுடனும் பிணைக்கப் பார்க்கிறது. ஆற்றிலே புது வெள்ளம் வருவதைப் பார்ப்பவர்கள் பாக்கிய சாலிகள் என்று சொல்லுகிறார்கள். அவர்கள் பாக்கியசாலிகள் என்பது உண்மையாகவேதான் இருக்க வேண்டும். மூன்று நான்கு மாசத்து அழுக்குகளை யெல்லாம் அடித்துக் கொண்டு நுரையும் திரையுமாக செக்கச் செவேலென்று புது ஜலம் வெண்மணலிலே பாம்பு போல பாம்பு நாக்கை நீட்டி நீட்டிக் காட்டுவது போல நெளிந்து நெளிந்து வரும் காட்சியே புனிதமானதுதான். ஒரு தரம் பார்த்திருப்பவர்கள் அது புனிதமானதுதான் என்று ஒப்புக் கொள்வார்கள். புனிதம் என்று எதுவுமே உலகில் இல்லை என்று சொல்கிறவர்கள் முதலில் காவேரியில் புது வெள்ளம் வருவதைப் போய்ப் பார்த்து விட்டு வந்து சொல்லட்டும். எங்கேயோ, எட்டாத் தொலைவில் உள்ள கடல் என்கிற ஒரு லஷ்யத்தை நோக்கி எவ்வளவோ கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறது அந்த ஆறு. ஒரு வருஷத்திய உணவுக்கு, ஒரு வருஷத்திய சுக சௌக்கியங்களுக்கு தான் என்கிற தனி ஒரு மனிதனுடைய உணவுக்கு மட்டும் அல்ல; பெண்டு பிள்ளைகள், அன்புடையவர்கள், விரோதிகள், அன்போ விரோதமோ இல்லாதவர்கள், எல்லோருக்குமே உணவுக்கு அடிப்படை நீர்ப் பெருக்குத்தான் என்று எண்ணியிருப்பவர்கள் நம்பி இருப்பவர்கள் ஆற்றிலே புது வெள்ளம் வருவதை எப்படிப் பார்ப்பவர்கள் என்று கற்பனை செய்து பார்க்க வேண்டும்! அப்போதுதான் புது வெள்ளத்தின் அருமை புரியும்! புது வெள்ளத்திலே குளித்தால் உடம்புக்கு ஆகாது என்பது ஐதீகம். புது வெள்ளம் வந்ததும் ஒரு வாரமாவது ஆற்றிலே குளிப்பதில்லை என்றுதான் எல்லோரும் சங்கல்பம் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் இந்தச் சங்கல்பத்தை நடைமுறையில் காப்பாற்றிக் கொள்வது எளிதல்ல. நாளைந்து நாட்களுக்குள்ளாகவே ஊரெல்லாம் காவேரிக்குக் கிளம்பிவிடும், குளிப்பதற்கு. காவேரிக் கரையில் வசித்துக் கொண்டே வீட்டில் கிணற்றிலிருந்தோ அண்டாவிலிருந்தோ செம்பு செம்பாக எடுத்து விட்டுக் கொண்டு குளிப்பவனை உண்மையிலே நோயாளி என்றுதான் சொல்லவேண்டும். அவன் உடல் மட்டும் அல்ல; அவன் மனசும் உள்ளமும் தீராத நோய் வாய்ப்பட்டுத்தான் இருக்கின்றன. சந்தேகம் இல்லை. வாழ்விலே இன்பம் என்கிறார்களே, அது இதுதான். காலையில் எழுந்து காவேரி நதியில் உடலும் உள்ளமும் குளிரக் குளித்துவிட்டு வருவதே இன்பம்! இன்பம் என்பது இதுதான். ஆடிப் பதினெட்டு வந்து விடுகிறது அதி சீக்கிரமே வந்து விடுகிறது. அன்று காவேரி ஆற்றங்கரை இருக்கும் கோலத்தைக் கவிகளாலும் வர்ணிக்க முடியாது. ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் கோலாகலமும் உற்சாகமும் நிறைந்து ததும்புகின்றன. ‘உடையவர்கள்’ ஒரு தினுசாகத் தங்களிடம் உள்ளதற்கு ஏற்றபடி கொண்டாடுகிறார்கள் ஆடிப் பதினெட்டை. இல்லாதவர்களும் கொண்டாடாமல் இருந்து விடுவதில்லை. எப்படியோ அன்று காவேரிக் கரை நெடுக ஆனந்தமாக இருக்கிறது. ஆண் பெண் குழந்தைகள் அடங்கலுக்கும் அன்று கொண்டாட்டந்தான். புரட்டாசி மாசத்திலே மழை பெய்யத் தொடங்கிவிடும். மாசம் மும்மாரி என்கிற லக்ஷ்ய பூமியும் சத்திய யுகமும் இங்கே இப்பொழுது இல்லை. புரட்டாசிக் கடைசியில் ஆரம்பித்து ஐப்பசி முடிய, சில வருஷங்கள் அதற்குப் பிறகுங் கூட அடை மழை பெய்கிறது. காவேரி ஆறு கரை புரண்டு ஓடுகிறது. இந்தக் காலத்திலே ஆற்றிலே இறங்கி ஸ்நானம் செய்வது கூடச் சற்றுச் சிரமந்தான். பெண்களும் சிறு பிள்ளைகளும் வீட்டிலேயே குளித்து விடுவது நல்லது. குளிரவும் ஆரம்பித்து விடுகிறது. காவேரி ஆற்று ஜலம் ‘சிலு சிலு’ வென்று இருக்கும். வீட்டுக் கிணற்று ஜலம் ‘வெதுவெது’ வென்று இருக்கும். திடீரென்று எங்காவது காவேரிக் கரையில் ஓரிடத்தில், ஒரு நாள் ஐப்பசி மழைக்குப் பிறகு உடைப்பு எடுத்துக் கொண்டு விடும். காவேரியின் கரை மேடுகள்கூடத் தெரியா நாலடி ஐந்தடி ஜலத்தில் ஆழ்ந்து கிடக்கும். வயல்களிலெல்லாம் கண்ணுக்கு எட்டிய தூரம் எங்கே பார்த்தாலும் ஒரே ஜலமாகத்தான் தெரியும். உடைப் பெடுத்துக்கொண்ட காலத்திலே ஊர் எப்படியோ ஒன்றுபட்டுவிடும் பின்னரும் முன்னரும் ஊர்க்காரர்களுக்கிடையே வேற்றுமைகளும் விரோதங்களும் வாதங்களும் பெருத்திருக்கும். ஆனால் உடைப்புக் காலத்திலே எல்லோரும் ஒன்றுபட்டுத்தான் ஆகவேண்டும். வேறு வழியே கிடையாது. இல்லாவிட்டால் ஊரே அழிந்துவிடாதா? சில வருஷங்கள் மிகவும் பாடுபட்டு வளர்த்திருந்த பயிர் பூராவும் வெள்ளத்திலே சேதமாகி விடும். ஆனால் என்ன செய்வது? காவேரித்தாய் கொடுத்தாள்; அவளே எடுத்துக் கொண்டாள்; கொடுத்தவள் எடுத்துக் கொண்டாளே என்று கோபப்பட்டுக் கட்டுமா? நம்பிக்கையுடன் அடுத்த போகத்தை எதிர்பார்த்துக் காத்திருந்து ஆகவேண்டியதைச் செய்வதைத் தவிர வேறு வழியே கிடையாது. குடியானவர்கள்தாம், ஏழைமக்கள்தாம் வெள்ளம் வருகிற காலத்திலே மிகவும் சிரமப்படுகிறவர்கள். வீடு இடிந்து விழுந்திருக்கும்; மாடு கன்று செத்திருக்கும்; உற்றார் உறவினர்கூடத் தெய்வாதீனமாக வெள்ளத்திலே உயிர் இழந்திருப்பார்கள். ஆனால் எவ்வளவுதான் மகத்தான கஷ்டங்கள் வந்தாலும் தாங்கிக் கொள்ளும் சக்தியை ஈசன் அவர்களுக்கு ஏராளமாகக் கொடுத்திருக்கிறான். அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள். அவர்களும் தாங்கிக் கொள்ளும் சக்தியை இழந்துவிட்டு நிற்பார்களேயானால் உலகமே இரண்டு தலைமுறைகளில் அழிந்து போய்விடாதா? தாய் அடிப்பாள், அடிக்கத்தான் அடிப்பாள், ஒவ்வொரு சமயம் ஓங்கியே அடித்து விடுவாள். அப்படிச் செய்ய அவளுக்கு என்னதான் கோபமோ? ஆனால் மறு வருஷம், மறு நாள், மறு விநாடியேகூட அள்ளிக் கொடுப்பாள். அன்பு ததும்ப அணைத்துக் கொள்வாள். அடிக்கும் போது வருந்த வேண்டியதுதான்; அணைக்கும் போது மகிழ வேண்டியதுதான். மற்ற வேளைகளில் பூமியை நம்பி உழைக்க வேண்டியதுதான்; உழைக்க வேண்டியதுதான் ஓயாது உழைக்க வேண்டியதுதான். இதுவே குடியானவர்களின் வாழக்கைத் தத்துவம். வெள்ளம் வந்து போனபின் மீண்டும் வெயில் காயத் தொடங்கி விடும். நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் ஏறும். இந்த வெயிலைவிட வெள்ளம் வந்ததுகூடத் தேவலையே என்று ஓயாமல் ஒழியாமல், அலுக்காமல் சலிக்காமல் உழைப்பவர்கள் நினைப்பார்கள். ஆனால் ஜலத்தைப் போலவே வெயிலும் அவசியந்தானே. வெயிலோ மழையோ, அதற்காக உழைப்பதை அவர்கள் நிறுத்த மாட்டார்கள். குடியானவர்களுடைய உழைப்பு எந்தக் காரணத்தையாவது கொண்டு நின்று போனால் கிராமத்தின் வாழ்க்கையே நின்று விடும்; ஸ்தம்பித்துப் போய்விடும்.ஒருநாள் உழைப்பு வீணானால் இருநாள் உணவு வீணான மாதிரிதான். தனி மனிதர்கள், உழைப்புக்கு அஞ்சி, உழைக்க மறுத்து ஓடிவிடலாம்; படித்துவிட்டுப் பட்டணத்திலே குமாஸ்தாக்கள் ஆகலாம்; தொழிற்சாலைகளிலே மாட்டிக்கொள்ளலாம்; திரை கடலோடித் திரவியம் தேடலாம்; அரசியலிலும் நாட்டின் ஆட்சியிலும் பங்கு பெற்றுவிட்டதாக எண்ணிக்கொண்டு பிரசங்க மேடைகளில் ஏறி ஏறி இறங்கலாம்; ஏதாவது சாமானை ஏழு ரூபாய் விலைக்கு வாங்கி அதற்கு அவசியம் நேர்ந்த இடத்திலே கொண்டு போய்க் கொடுத்து ஏழு ரூபாய் இலாபம் அடிக்கலாம். இலாபத்தைக் கொண்டு மாடி மேல் மாடிவைத்துக் கட்டலாம். ஆனால் உணவுக்குக் குடியானவனை நம்பித்தான் ஆகவேண்டும். நிலத்திலே உழைப்பது என்பது சாசுவதமானது. தனி மனிதர்கள் என்ன செய்தால் என்ன? அந்த உழைப்பின் தத்துவம் என்றுமே மாறாது. காவேரிக் கரையிலே உழைப்பு ஓய்ந்து போகுமேயானால் உலகம் அஸ்தமித்துத்தான் போய்விடும். சந்தேகம் என்ன? பகலில் நல்ல வெயில். இரவில் தாங்க முடியாத குளிர். இது மார்கழி மாசம். இந்த மாசத்திலே அதிகாலையில் எழுந்து காவேரியில் முழுகிவிட்டுப் பட்டை பட்டையாக விபூதியை பூசிக் கொண்டு கோஷ்டியாகப் பஜனை செய்து கொண்டு கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருவதைப் போன்ற புனிதமான காரியம், அநுபவம், உலகிலே வேறு எதுவும் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். சாத்தனூர்க் கோயில் மடைப்பள்ளியிலே கிடைப்பது போன்ற ருசிகரமான பிரசாதங்களும் கிடைத்தால் இன்னும் விசேஷந்தான். தைப்பொங்கல் வந்து விடுகிறது; அறுவடைத் திருநாள், வருஷம் பூராவும் உழைத்துப் பாடுபட்டதற்கு ஏற்ற பலனைப் பெற்றுவிட்டவன் புண்ணியசாலி. பாடுபடாமலே பலன் பெற்றுவிடுகிறவன் அயோக்கியன். பாடுபட்டும் பலன் பெறாதவன் துரதிருஷ்டசாலி. இவ்விருவருக்கும் பொங்கல் நாள் பாவ நாள். மற்றவருக்கெல்லாம் மிகவும் புனிதமான தினந்தான். ஒப்புயர்வில்லாத விருந்துத் திருநாள். பொங்கல் புதுநாளுக்குப் பிறகு காவேரி யாற்றிலே ஜலம் வற்றத் தொடங்கி விடுகிறது. நல்லது கண்ட நல்லவர்களுக்கு ஆனந்தம் பொங்குவது போல, இருகரையும் பொங்கி வழிந்தோடிய காவேரி வற்றத் தொடங்குகிறது. காவேரி பூராவும் தண்ணீர் ஓடியது போய்க் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து முக்கால் காவேரி, அரைக்காவேரி, கால் காவேரி ஜலம் ஓடுகிறது. நாளடைவில் பாதிக்காவேரி வெண்மணலும், மற்ற பாதி தெள்ளிய நீருமாக ஓடும் போது வேறு சமயங்களில் இல்லாத ஓர் அழகோடு காட்சி அளிக்கிறது காவேரி நதி. வெண்மணலில் மாலை வேளைகளில் ஊர்ப் பையன்கள் கிட்டிப் புள் ஆடுகிறார்கள்; பலிங் சடுகுடு ஆடுகிறார்கள்; பச்சைக் குதிரை தாண்டுகிறார்கள்; ஓடியாடி விளையாடுகிறார்கள். இவ்வளவு நாட்களும் அக்கரைக்கும் இக்கரைக்குமாக நாளுக்கு நானூறு தடவைகள் போய் வந்து கொண்டிருந்த தோணியைக் கரையிலே இழுத்துப் போட்டுக் கவிழ்த்து அதன் மேல் சுற்றிலும் கீற்றுகள் போட்டு மூடிவிடுகிறார்கள். இனிமேல் கொஞ்ச நாளைக்கு ஆற்றைக் கடக்கத் தோணி தேவையில்லை. ஜலத்தில் இறங்கி‘வேட்டி’ நனையாமல் அக்கரை போய் விடலாம். இன்னும் சில நாட்களுக்குப் பிறகு குளிப்பதற்கும் குடிப்பதற்கும் தண்ணீர் எடுக்க ஆற்று மணலிலே ஊற்றுக் கிணறுகள் வெட்டுவார்கள். இந்த ஊற்றுக் கிணறுகளைச் சுற்றிலும் வேலி போட்டுக் காபந்து பண்ணுவார்கள். ஒவ்வொரு துறையிலும் அண்டையிலுள்ள ஒவ்வொரு தெருவுக்கும் என்று தனித் தனியாக ஊற்றுக்கள் உண்டு. அந்த அந்தத் தெருக்காரர்கள் அந்த அந்தத் தெருவுக்கு என்று ஏற்பட்ட ஊற்றுகளில் தாம் ஜலம் எடுக்கலாம். யாரும் இந்த விதியை மீறத் துணிவதில்லை. அது எல்லோருடைய சம்மதத்தின் பேரிலும் எல்லோருடைய சௌகரியார்த்தமும் ஏற்பட்டுள்ள ஒரு விதி என்று எல்லோரும் உணர்ந்து நடந்து கொள்கிறார்கள். சில சமயம் யாராவது இந்த விதியை மீறிவிட்டார்கள் என்று கலகம், சண்டை, அடிதடி இவை நடப்பதும் உண்டு. சில வாரங்களில் அந்த ஊற்றுக் கிணறுகளும் வற்றி விடும். சில மாசங்களில் மீண்டும் புது வெள்ளம் வரும்... மீண்டும் காவேரி ஆறு கரைபுரண்டு ஓடும்... மீண்டும் வற்றும்... மீண்டும் புது வெள்ளம் வரும்... இப்படியாகக் காவேரி ஆற்றினுடைய பல தோற்றங்களும் சோமுவுக்கு அவன் சுயேச்சையாக, செய்வதற்கு எதுவும் இல்லாமல், திரிந்துகொண்டிருந்த இரண்டு மூன்று வருஷங்களிலே நன்கு பரிசயமாகிவிட்டன. மற்ற இடங்களில் எல்லாம் நடப்பதைக் கவனித்துக் கொண்டு நின்றது போலவே காவேரிக் கரையிலும் எவ்வளவோ தடவை அவன் சிந்தனையில் ஆழ்ந்தவனாக நின்றிருக்கிறான். வருஷத்தில் பல வாரங்களில் வந்து நின்றது போலவே நாளில் பல ஜாமங்களிலும் வந்து நின்றிருக்கிறான். சர்வமானிய அக்கிரகாரத்துறையில் அதிகாலையிலிருந்தே தருமத் தோணி விடத் தொடங்கி விடுவார்கள். அக்கரைக்கு வேலை செய்யப் போகிறவர்கள், அக்கரையிலிருந்து வேலை தேடிச் சாத்தனூர் வருகிறவர்கள், அதிகாலையிலும் ஒரு ‘தண்ணி’ போட்டு உத்ஸாகம் வரவழைத்துக் கொள்வதற்கு என்று கீழ மாங்குடிக் கள்ளுக் கடையை நாடிப் போகிறவர்கள், அங்கிருந்து திரும்பி வருகிறவர்கள் இப்படியாகத் தோணி போகும் போதும் வரும் போதும் நிறைந்துதான் இருக்கும். அக்கிரகாரத்துப் பிராம்மணர்களில் வயசானவர்கள் அநேகமாக எல்லோருமே அதிகாலையிலேயே, பொழுது சரியாக விடிவதற்கு முன்னரே வந்து காவேரியில் ஸ்நானம் செய்து விட்டுப் போய்விடு வார்கள். அவர்களுக்குப் போட்டியாக அந்தச் சமயத்தில் குளிக்க வருகிறவர்கள் பார்ப்பன விதவைகள்தாம். அதற்குப் பிறகு ஒருவர் பின் ஒருவராகவும், கோஷ்டி கோஷ்டியாகவும் அக்கிரகாரத்துப் பெண்களும் சிறுமிகளும் இடுப்பில் குடந்தாங்கி வந்து சாவகாசமாக வம்பளந்து கொண்டே குடந் தேய்த்து, துணி தோய்த்துக் குளித்துவிட்டு ஜலம் எடுத்துக் கொண்டு கிளம்புவார்கள். விடிந்து பத்து நாழிகை நேரத்திற் குள்ளாகவே அக்கிரகாரத்து ஜனங்கள் எல்லோரும் வந்து போய் விடுவார்கள். பிறகு இரண்டு மூன்று நாழிகை நேரம் துறையிலே யாருமே இருக்க மாட்டார்கள், தோணிக்காகக் காத்திருப்பவர்களைத் தவிர. பகல் பதினைந்து நாழிகை சுமாருக்குப் பிள்ளைமார் தெருப் பெண்களும் சிறுவர் சிறுமியர்களும் வருவார்கள். இந்த ஸ்திரீகளும் இடுப்பில் குடந்தாங்கித்தான் வருவார்கள். அவர்களுக்குப் பிறகு ஒருவர் பின் ஒருவராகப் பிள்ளைமார்த் தெரு ஆண்கள் வரத் தொடங்குவார்கள். இவர்களில் கடைசி ஆசாமி வந்து போகும் போது பகல் இருபத்தைந்து நாழிகை ஆகிவிடும். பிறகு வருவார்கள் அக்கிரகாரத்திலிருந்து மாடு குளிப்பாட்ட ஓட்டிக் கொண்டு வருகிற பையன்கள், அங்காடிக்காரிகள், குடியானவர்கள், வயலில் கூலி வேலை செய்பவர்கள், மேட்டுத்தெரு வாசிகளைப் போன்றவர்களும் பிறரும். கடைசிப் பேர்வழி குளித்து விட்டுக் காவேரியை விட்டுக் கிளம்பும் போது அஸ்தமிக்கும் நேரம் ஆகி விடும். அக்கிரகாரத்து ஐயர்மார்கள் வந்து விடுவார்கள் சந்தி ஜபம் செய்ய. அஸ்தமித்து இரண்டு மூன்று நாழிகை நேரம் வரையில் தருமத் தோணி விடுவார்கள். தருமத்தோணி விடுவது நின்ற பிறகு ஆற்றங்கரையிலே யாரும் இருக்க மாட்டார்கள். இந்த ஜாமக் காட்சிகள் ஒவ்வொன்றுமே சோமுவுக்கு மிகவும் அறிமுகமானவைதான். அலுக்காமல் சலிக்காமல் ஊரிலே மற்றக் காட்சிகளை கவனித்தது போலவே அவன் காவேரிக் கரையிலிருந்து காணக்கூடியதை எல்லாம் கண்டு அநுபவித்தான். சர்வமானிய அக்கிரகாரத்துப் படித் துறையில் நின்று சோமு அடிக்கடி சுற்றுமுற்றும் இருந்த எல்லாவற்றையும் கவனித்திருக்கிறான். அங்குள்ளவை எல்லாம் அவனுக்கு மிகவும் பழக்க மானவையே. படித் துறையை ஒட்டினாற்போல அக்கிரகாரத்து மடம் ஒன்று இருக்கிறது. அதிலேதான் காலையிலும் மாலையிலும் ஐயர்மார்கள் உட்கார்ந்து ஜபம் செய்வார்கள். சில விசேஷ தினங்களிலே அங்கே விசேஷ ஆர்ப்பாட்டங்களும் நடப்பது உண்டு. சாயங்கால வேளைகளில் அங்கே ராமாயணம், பாகவதம் படிப்பார்கள். இதை எல்லாம் நெருங்கிப் பார்க்க வேண்டும் என்று சோமுப் பயலுக்கு அளவுகடந்த ஆசை. ஆனால் பார்ப்பனர்கள் அவனை அருகில் அண்டவிடுவதில்லை. அடித்து வெருட்டித் துரத்தி விடுவார்கள். மடத்திற்கு அடுத்தாற்போல ஓங்கிப் பரந்து வளர்ந்திருந்தது ஒரு மூங்கில் புதர். மூங்கில் கழிகள் பல தாழ்ந்து வளைந்து ஆற்று ஜலத்தைத் தொட்டுக்கொண் டிருக்கின்றன. ஆற்று ஜலம் ஓடுவதால் எழுந்த குறுகுறு சப்தத்துடன் மூங்கில் இலைகளுக்கிடையே ‘சலசல’ வென்று காற்றுப் புகுந்து விளையாடிய சப்தமும் கலந்து வெகு அற்புதமாக இசைத்தது. அந்த மூங்கில் புதரும் அதை ஒட்டிய படுகைப் பிரதேசமும் அக்கிரகாரத்துப் பிள்ளையார் கோயிலைச் சேர்ந்தவை. கரை மேட்டின் மேலே ஒரு மரம் மஞ்சளாகப் பூத்துக் குலுங்குகிறது. அந்த மரத்திலே இலையே இல்லை. வெயில் பொசுக்கும் உச்சி வேளையிலே தங்கப் பாளங்கள் பற்றி எரிவதுபோலக் காட்சி தந்த அந்தப் புஷ்பங்களைத் தவிர அந்த மரத்திலே ஓர் இலைகூட இல்லை. வெயில் வேளையிலே பார்ப்பதற்கு மிகவும் அற்புதமான காட்சி இது! அதற்கு அடுத்து உள்ளது ‘ஒருகரை ஐயர் படுகை’. சாதாரணமாக இந்த மாதிரிப் படுகைகளிலே வாழைத்தோட்டம் போடுவதுதான் பழக்கம். ஆனால் ஒருகரை ஐயர் பட்டணம் வரையில் போய்ப் படித்தவர். கண்டுமுதலுக்குக் கூடச் சட்டை போட்டுக் கொண்டுதான் போவார் அவர். அப்படிப்பட்டவர் மற்றவர்களைப் போலத் தாமும் படுகையில் வாழையே போடுவானேன் என்று ஒரு வருஷம் கரும்பு போட்டார். நன்றாக விளைந்தது. நல்ல லாபம் . அடுத்த வருஷமே அக்கிரகாரத்திலும் பிள்ளைமார் தெருவிலும் இருந்த மிராசுதாரர்கள் சிலர் தங்கள் படுகைகளிலும் கரும்பு சாகுபடி செய்தார்கள். ஆனால் அந்த வருஷம் ஒருகரை ஐயர் தம் படுகையில் கரும்பைச் சாகுபடி செய்யவில்லை. புகையிலையைச் சாகுபடி செய்தார். அதற்கு அடுத்த வருஷம் கத்தரித் தோட்டம் போட்டார். ஒருகரை ஐயர் படுகை அப்பால் கிழக்கேயும், படித்துறைக்கு மேற்கேயும் நெடுக வாழைத் தோட்டங்களே இருந்தன. காவேரிக் கரை மேடு நெடுகப் பலவித மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. மாவும் பலாவும் அதிகம். புளிய மரங்களும் நெட்டிலிங்க அசோக மரங்களும் உண்டு. ஆங்காங்கே தென்னஞ்சோலைகளும் தென்பட்டன. சர்வமானியத் துறைக்கு நேர் எதிரே, அக்கரையில் தெரிந்தது மாங்குடி ஐயனார் கோயில். சிறிய கோயில். வெளேரென்று வெள்ளைப் பூசிச் சிவப்புக் காவிப் பட்டைகள் பளிச்சென்று தீட்டப்பட்டிருந்த சுவர்கள். கோயிலுக்கு எதிரே ஓடத் தயாராக நிற்பது போல, முன்னங் கால்களைத் தூக்கிக் கொண்டு தேசிங்கு ராஜனுடைய நீல வேணியைப் போலக் கம்பீரமாக நின்றது ஒரு பெரிய மண் குதிரை. ஓடுவதற்குத் தயாராக நின்ற அந்த குதிரை என்றாவது ஒருநாள் இரவு ஓடியே போயிருந்ததானால் மறுநாள் ஊர்க்காரர்கள் என்னதான் சொல்வார்கள் என்று சோமு அடிக்கடி எண்ணிப் பார்ப்பது உண்டு. அந்த மண் குதிரைக்கு அப்பால் விசாலமான கீற்றுக்கொட்டகை. அதிலே உட்கார்ந்து அடிக்கடி திரௌபதி கதையும் அல்லி அரசாணி கதையும் கேட்டிருக்கிறான் சோமு. எண்ணிறந்த கதைகள் உலக அநுபவங்களை எல்லாம் ஒன்றாகத் திரட்டி உருட்டித் தருவது போன்ற கதைகள் பலவற்றை அவன் ஏழு வயசுக்குள்ளேயே கேட்டு அநுபவித்திருந்தான். அக்கரையில் ஐயனார் கோயிலுக்குக் கிழக்கே ஒரு தாமரைக் குளமும் ஒரு சிறு மடமும் இருந்தன. அந்த மடத்தின் ஓட்டுக் கூரை மட்டுந்தான் சர்வமானிய தெருத் துறையிலிருந்து தெரிந்தது. மடத்துக்கு அப்பால் அழகான ஒரு தென்னஞ்சோலையின் மத்தியிலே இருந்தது கீழமாங்குடிக் கள்ளுக்கடை. அந்த இடத்துக்குப் போகவே கூடாது என்று அவன் ஆயாள் எத்தனையோ தடவை சொல்லியிருந்தும் அவன் இரண்டொரு தடவை அங்கேயும் போய்ப் பார்த்திருக்கிறான். ஆனால் அவன் போன சமயங்களில் அவன் கவனத்தைக் கவரும்படி அங்கே எதுவும் இல்லை. ஐயனார் கோயிலுக்குக் கிழக்கே இருந்த படுகை கோயில் தோட்டம் அடர்ந்த காடு. அதிலே பாம்பு முதலியவற்றின் சஞ்சாரந்தான் அதிகமே தவிர மனித சஞ்சாரம் எப்பொழுதுமே வெகு குறைவு. ஐயனார் கோயிலுக்கு மேற்கே படுகை இல்லை. கரையும் கரைமேடும் கலந்துவிட்டன. காவேரி ஆறு அங்கே சற்று வளைந்து படுகையை அரித்துவிட்டது. கரை ஓரத்திலே ஓர் இலவமரம் ஓங்கி வளர்ந்திருக்கிறது. கோடையிலும் சரி, மாரியிலும் சரி, அந்த மரத்திலே இலைகள் அதிகம் காண முடியாது. அந்த இலவ மரத்திற்கு அடுத்தாற் போல வேறு ஒரு மரம் இருந்தது. அது என்ன மரம் என்று சோமுவுக்குத் தெரியாது. சாத்தனூரிலே இருந்த வேறு யாருக்குமே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த மரத்திலே சங்கிலிக் கறுப்பன் வாசம் செய்வதாக ஊர் ஜனங்கள் சொல்லிக் கொண்டார்கள். கீழ மாங்குடிக் கள்ளுக் கடையிலிருந்து நிதானம் தவறிக் குடித்துவிட்டு வருகிறவர்கள் கூட அந்த மரத்தடியிலே போகமாட்டார்கள். பகலிலும், இரவிலும் லேசாகக் காற்றடித்தாலும் போதும் அந்த மரத்தின் உச்சியிலிருந்து இரும்புச் சங்கிலி கலகலப்பது போன்ற சப்தம் கேட்கும். ஆடி மாசத்திலே காற்று, சுழன்று சுழன்று விசிறி விசிறி அடிக்கும் போது ஒரு நிமிஷங்கூட ஓயாமல் சங்கிலிச் சப்தம் கேட்கும்; சாத்தனூர் பூராவும் கேட்கும். பயங்கரமான சப்தம் அது. சங்கிலிக் கறுப்பன் விஷயம் உண்மையோ என்னவோ ஆனால் அந்தப் பயம் என்னவோ மிகவும் உண்மைதான். அதற்கு அப்பால் மேற்கே மாமரங்கள் தெரிகின்றன. அவை கோயிலுக்குச் சொந்தமான தோட்டங்களைச் சேர்ந்தவை. அதற்கு அப்பால் வேர்க்கடலை பயிரிட்டிருக்கும் பிரதேசம் இருக்கிறது என்று சோமுவுக்குத் தெரியும். அவன் தன் ஆயாளுடன் அடிக்கடி அந்தப் பக்கம் போயிருக்கிறான். அதற்கு அப்பால் அரிசிலாறு இருக்கிறது. காவேரி ஆற்றங்கரையிலே சர்வமானியத் துறையிலே நின்று படைபடைக்கிற வெயில் காலத்திலும், கொட்டுகிற மழைக் காலத்திலும் சோமு மிகவும் இன்பமான பல நாழிகைகளைக் கழித்திருக்கிறான். அநுபவத்துக்கும் அறிவுக்கும் விரிந்து விரிந்து, மேலும் வேண்டும், இன்னும் வேண்டும், இது போதாதே, வேறு என்ன, வேறு என்ன இருக்கிறது உலகத்திலே என்று, துடியாகத் துடித்துக் கொண்டிருக்கும் இளம் உள்ளத்தின் ஆர்வத்தை அறிந்தவர்களே இந்த அநுபவத்தின் ஆழத்தையும் தரத்தையும் கற்பனை செய்து பார்க்க முடியும்! |