உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதற்பகுதி : உதயம்
அத்தியாயம் 12. வதந்தியும் உண்மையும் தினம் இரண்டு தரம் போய்ப் போய் வந்த அலுப்போ என்னவோ தெரியவில்லை. அன்று ரங்க ராவ் காலையில் கும்பகோணத்துக்குக் கிளம்பவில்லை. அல்லது வாங்க வேண்டிய சாமான்களெல்லாம் வாங்கி ஆகியிருந்தாலும் இருக்கலாம். காலையில்தான் கிளம்ப வில்லையே, மத்தியானம் எங்கே கிளம்பப் போகிறார் என்று எண்ணிச் சோமு பல நாட்களாகச் சிதம்பரத்தைப் பார்த்துக் குதிரைச் சவாரி செய்யாத பாவத்தைப் போக்கடித்துக் கொள்ளும் உத்தேசத்துடன் மத்தியானம் சோறு தின்றவுடன், ரங்க ராவ் படுத்துச் சற்றுக் கண்ணயர்ந்திருந்த சமயம், குதிரை லாயத்துப் பக்கம் போனான். அவன் போன சமயம் குதிரை லாயத்தில் சிதம்பரத்துடன் யாரோ ‘குசுகுசு’ வென்று பேசிக் கொண்டிருப்பது போலச் சப்தம் கேட்டது. என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்க வேண்டும் என்கிற நினைப்பே இல்லை சோமுவுக்கு. ஆனால் சிதம்பரத்தைத் தேடிக் கொண்டு யார் அப்படி வந்து ரகசியம் பேசுகிறார்கள் என்று அறிய அவன் விரும்பினான். தவிரவும் சுவரோரமாக நின்று ஒட்டுக் கேட்க விரும்பியிருந்தால் கூட எதுவும் காதில் விழுந்திராது என்பது நிச்சயம். லாயத்தில் பேசிக்கொண்டிருந்த ஆசாமி அவ்வளவு மெதுவாக, ஜாக்கிரதையாகப் பேசினான் ஒரு வார்த்தையாவது தெளிவாக வெளியே கேட்கவில்லை. ஆனால் இரண்டொரு வினாடிகள் கழித்து ஒரு சப்தம் தெளிவாகச் சோமுவின் காதிலே விழுந்தது யாரோ ஏழெட்டு ரூபாய்களை எண்ணுகிற சப்தம் அது. தவிரவும் அதற்குமுன் ரூபாய் எண்ணிப் பழகாதவர்கள் எண்ணுகிற சப்தம் அது. ரங்க ராவ் போல ரூபாய்களை ஏராளமாக எண்ணிப் பழகியவர்கள் அதிகச் சப்தம் செய்யாமல் எண்ண முடியும் என்பது சோமுவுக்குத் தெரியும். சிதம்பரத்திடம் ரூபாய்க் கணக்கில் பணம் இல்லை, இருக்க முடியாது என்பது சோமுவுக்குத் தெரியாதா? சில்லறையோ, ரூபாயோ, எது கையில் கிடைத்தாலும் கிடைத்தவுடனே பூராத் திட்டமும் குடித்துவிடுபவன் அவன். யாருக்கும் காசு பணம் கொடுக்கப்பட்டவன் அல்ல. ஆகவே வந்திருந்தவன் தான் சிதம்பரத்துக்குப் பணம் வெள்ளிப் பணமாக, ரூபாய் ரூபாயாக எண்ணிக் கொடுத்துக் கொண்டிருந்தான் என்று சோமுவின் மனசிலே பட்டது. ஏன் சிதம்பரத்திற்கு அவன் பணம் கொடுத்தான்? எதற்காக? ரங்க ராவினுடைய குதிரையைத் திருட்டுத்தனமாக விற்றுக் கொண்டிருந்தானா சிதம்பரம்? ஏழெட்டு ரூபாய் என்றால் அல்ப சொல்பமல்லவே என்று எண்ணினான் சோமு. இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களில் யாராவது வெளியே வந்து தன்னைக் கண்டுவிட்டால் ஆபத்து என்று எண்ணியவனாகச் சோமு முன் ஜாக்கிரதையுடன் “அண்ணாத்தே! அண்ணாத்தே!” என்று கூப்பிட்டுக் கொண்டே லாயத்திற்குள் புகுந்தான். சிதம்பரமும் அவனைத் தேடிக்கொண்டு வந்திருந்தவனும் குதித்து எழுந்தார்கள், திடுக்கிட்டுப் போய். ஆனால் சோமுவைக் கண்டவுடனே ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான் சிதம்பரம். தன்னைத் தேடி வந்திருந்த புது ஆசாமியிடம், “யாரோ என்னமோன்னு பயந்திட்டியா மச்சான்? அது யாரு தெரியுமில்லை? நம்ப கறுப்பன் மேட்டுத் தெருக் கறுப்பன் இல்லை...” என்றான். “எந்தக் கறுப்பன்?” என்றான் வந்தவன். “மேட்டுத் தெருவிலே வேறு யாரு கறுப்பன்? அந்தக் கறுப்பனுடைய மவன்தான் இவன். நம்ப ராயரு வூட்லேதான் இவனும் வேலை செய்யறான்!” என்றான் சிதம்பரம். இப்படிச் சொல்லிக்கொண்டே சிதம்பரம் தன் கையிலிருந்த ரூபாய்களை இடுப்புத் துணியிலே ரகசியமாகச் செருகி மறைத்துக் கொள்ள முயன்றான். ஆனால் அவ்வளவு பணத்தை அவன் என்றுமே இடுப்பில் செருகி அறியாதவன். ஆகவே ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு ரூபாய்கள் கீழே நழுவி விழுந்தன. தரை, மண் தரைதான் என்றாலும் நன்றாகக் கெட்டிப்பட்ட தரை. தரையிலே விழுந்த ரூபாய்கள் "டணார் டணார்' என்று சப்தித்தன. “அரிசிலாற்றங் கரைக்கு வாரயோன்று கேக்க வந்தேன். நீ எங்கெ வரப்போறே இப்ப? கையிலே காசுவேறே இருக்கே. கீழமாங்குடி போனாத்தானே உடம்பு சரியாகும்!” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டுச் சோமு அங்கிருந்து வெளியேறிவிட யத்தனித்தான். சிதம்பரம், “இன்னிக்கி எம் மச்சான் வேறு வந்திருக்கு, எப்படித்தம்பி நான் வரது? நாளைக்குப் பாத்துக்கலாமேங்கறேன்!” என்றான். சோமுவைப் பின்தொடர்ந்து சிதம்பரமும் அவன் ‘மச்சானும்’ வெளியே வந்தார்கள். அப்படி அவர்கள் தன்னைப் பின்தொடர்ந்து வந்ததற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்து அறிந்து கொள்ளச் சோமுவுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அவன் அங்கே எங்காவது ஒளிந்து நின்று தாங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டு விடப்போகிறானே என்று ஒளிந்து கொள்ள இடந்தராமல் அவர்கள் லாயத்துக்கு வெளியே வந்து விட்டார்கள். அவர்கள் நின்ற இடத்திலிருந்து சோமு போகிறானா நிற்கிறானா என்பதை அவர்கள் கவனிக்க முடியும். விஷயம் எதுவாக இருந்தாலும் இனி அங்கு நிற்பதிலே லாபம் இல்லை என்று கண்ட சோமு நேரே காவேரிக்கரைப் பக்கம் நடந்தான். காவேரிக்கரை மேட்டின்மேல் நின்றுகொண்டு அவன் திரும்பிப் பார்த்தபோது சிதம்பரமும் அவன் ‘மச்சானும்’ இன்னமும் லாயத்துக்கு வெளியே தோட்டத்தில் நின்றுகொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். மிகவும் தாழ்ந்த குரலில், ரகசியமாகத்தான் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள் என்பது அவர்கள் முகபாவத்திலிருந்து தெரிந்தது. தன் சிந்தனைகளைத் தொடரச் சோமுவுக்கு நேரம் இல்லை. அதற்குள் வீட்டிலிருந்து வந்த வேலைக்காரி ஒருத்தி, “சோமு, சோமுன்னு ஐயா தேடிக்கிட்டிருந்தாரே உன்னை? எங்கேடா போயிட்டே! ஐயா கும்பகோணத்துக்குப் போறாங்க போலிருக்கு. தெருவிலே பொட்டிவண்டி கூட நின்னிட்டிருந்துச்சு!” என்று சொன்னாள். குதிரை லாயம் இருந்த தோட்டத்துக்குள் போகாமல் சோமு அதை ஒட்டிய பாதை வழியாக ஓட்டமும் நடையுமாகச் சென்றான். ஆனால் அவன் போனபோது தெருவிலே ராயர் வீட்டுக்கு எதிரிலே வண்டி இல்லை. கிளம்பிவிட்டது போலும். விழுந்தடித்துக் குறுக்குவழியைப் பின்பற்றி ராஜபாட்டைக்கு ஓடினான். ராஜபாட்டையிலே கிழக்கே வெகு தூரத்துக்கப்பால், அடிவானத்துக்கருகே, பெட்டிவண்டி போய்க்கொண்டிருப்பது போல் இருந்தது. எவ்வளவு வேகமாக ஓடினாலும் வண்டியைப் பிடிக்க முடியாது என்று தெரியும் சோமுவுக்கு. வீடு திரும்பி விட்டான். அவன் சர்வமானிய அக்கிரகாரத்துக்குள் நுழையும்போது குதிரை லாயத்தில் சிதம்பரத்துடன் பேசிக்கொண்டிருந்த அதே ஆசாமி தனக்குப் பத்தடி தூரத்தில் போய்க் கொண்டிருப்பதைக் கண்டான். அதே ஆசாமிதான் சந்தேகமில்லை. அவன் ரங்க ராவினுடைய வீட்டைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு சாவதானமாக நடந்து போனான். தன்னைச் சோமு கவனிப்பதை அவன் கவனிக்கவில்லை கவனித்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. வீட்டு வாசலைச் சோமு அடைந்தபோது வீட்டுக்குள்ளிருந்து வள்ளியம்மை வந்து கொண்டிருந்தாள். அவளிடம் சோமு, “அதோ போறான் பாரு ஓர் ஆள், அவன் நம்ப குதிரைக்காரச் சிதம்பரத்துக்கு மச்சானாமே!” என்றான். “யாரு? அந்த ஆளா? குதிரைக்காரச் சிதம்பரத்துக்கா? சிதம்பரத்துக்கு மச்சானும் இல்லை, மாப்பிள்ளையும் இல்லை. யாராவது புதுசா வந்த குடிகாரனை உறவு சொல்லிக்கிட்டிருப்பான்... ஆமாம்! ஒனக்குத்தான் எவ்வளவு தடவை சொல்றது...? அந்தச் சோதாப் பயலோடே சேந்துக்கிட்டுத் திரியாதேடான்னு. புத்தி கித்தி கொஞ்சனாச்சும் இருந்திச்சானா...” என்று தன் மகனைப் பிரமாதமாகக் கோபித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டாள் வள்ளியம்மை. சோமு தன் தாயார் சொன்னதில் கடைசிப் பகுதியைக் காதில் வாங்காமலே வீட்டிற்குள் போய்விட்டான். அவன் மனசிலே எப்படியோ ஏற்பட்ட சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று! ஆனால் உருவே தெரியாத சந்தேகம் அது. காரணங்களே ஏதும் இல்லாத சந்தேகம். ரங்க ராவ் அன்றிரவு திரும்பி வந்ததும் வேண்டுமானால் தன் சந்தேகத்தைப் பற்றிச் சொல்லி ஏதாவது செய்யலாமா என்று யோசித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான். வேறு என்ன செய்ய முடியும் சோமு? அன்றிரவு ரங்க ராவ் வீடு திரும்பியபோது வெகு நேரம் ஆகிவிட்டது. அவருடன் இரண்டு போலீஸ்காரர்களும் துப்பாக்கிகள் சகிதம் வந்திருந்தார்கள். பேச்சு வாக்கிலே ரங்க ராவ் தம் மனைவியிடம், “யாரோ கொள்ளைக் கூட்டத்தார் இந்தப் பிராந்தியத்திலே வந்து இறங்கியிருப்பதாகப் போலீஸ் இன்ஸ்பெக்டரும் மாஜிஸ்டிரேட்டும் சொன்னார்கள். கிராமத்திலே உதவிக்கு இருக்கட்டும் என்று இரண்டு போலீஸ்காரர்களையும் இங்கே ‘டுயூடி’ போட்டு என்னுடன் அனுப்பி வைத்தார்கள். தினம் இரவு இரண்டு போலீஸ்காரர்கள் வந்து காவலாகப் படுத்துக்கொள்வார்கள்” என்றார். அவர் இதைச் சோனிபாயிடம் சொல்லிக்கொண்டிக்கும் போது சோமு கூடத்திலே ரங்க ராவினுடைய படுக்கையைத் தட்டிப் போட்டுக் கொண்டிருந்தான். அவன் சொல்ல வேண்டும் என்று மத்தியானம் நினைத்திருந்த விஷயத்தை அதுவரையில் மறந்துவிட்டான். இப்போது புதுச்செய்தி ஒன்று சொல்லவே சோமுவின் சந்தேகம் ஊர்ஜிதப்பட்டது. அந்தக் கொள்ளைக் கூட்டத்தையும் சிதம்பரத்தையும் எப்படியோ சோமு, அந்தப் புது ஆசாமி மூலம், சம்பந்தப்படுத்தி விட்டான். படுக்கை தட்டிப் போட்டுக் கொண்டிருந்தவன் சிந்தனையில் ஆழ்ந்தவனாக ரங்க ராவ் பக்கத்தில் நகர்ந்தான். அவனைக் கவனித்த ரங்க ராவ், “ஏண்டா பயலே, இன்னிக்கிச் சாயங்காலம் கூப்பிடறச்சே எங்கேடா போயிட்டே? என்ன வரவர மோசமாயிட்டிருக்கே நீ? உன்னை எங்கெல்லாம் தேடறது?” என்றார். “இல்லீங்க...!” என்று ஏதோ சமாதானம் சொல்ல ஆரம்பித்த சோமு அந்த விஷயத்தை விட்டுவிட்டுத் தன் சந்தேகங்களை ஆதியோடந்தமாகச் சொல்லத் தொடங்கினான். தான் குதிரை லாயத்துக்குப் போனதையும், பணம் கொடுத்ததைப் பார்த்ததையும், அவர்கள் இருவரும் ‘குசுகுசு’ வென்று ரகசியம் பேசியதையும் பற்றி விரிவாகச் சொன்னான். பிறகு அதே ஆசாமியைத் தெருவிலே பார்த்ததையும் சொன்னான். சிதம்பரம் அவனைத் தன் மச்சான் என்று உறவு கூறியதையும் சொன்னான். “பாம்புக் குட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் அது ஒருநாள் தீண்டாமல் விடுமா? அந்தச் சிதம்பரம்...” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தாள் சோனிபாய். “இருக்கட்டும். இதெல்லாவற்றையும் கார்த்தாலே சரியாக விசாரித்துக் கொள்ளலாம். இன்றிரவு அப்படி ஒன்றும் நடந்துவிடாது. கவலைப்பட இடம் இல்லை என்றுதான் எண்ணுகிறேன். எதற்கும் கதவுகளை எல்லாம் சாத்திச் சரியாகத் தாழிட்டுப் பூட்டிவிட்டுப் படுத்துக் கொள்வோம்” என்றார் ரங்க ராவ். கங்காவுக்கும் சோனிபாய்க்கும் கொள்ளைக்காரர்கள் என்ற உடனேயே பயம் வந்துவிட்டது. அவர்கள் நடுங்கினார்கள். தவிரவும் வெள்ளியும் தங்கமுமாகக் கல்யாணத்திற்கென்று செய்து வைத்திருந்தது வீட்டிலே ஏராளமாக இருந்தது. “கடவுள் இருக்கார். பார்ப்பம்! காவலுக்குப் பத்து ஆள் கொண்டுவந்து சேர்க்கலாம் என்றால்கூட இப்போ நேரமில்லை. இரவு நாழியாகி விட்டதே! பார்க்கலாம். பிழைத்துக் கிடந்தால் நாளை முதல் இருபது ஆட்களுக்குக் கூலி கொடுத்து இரவிலே காவல் படுக்கச் சொல்றேன். இன்றிரவுப் போது போகட்டும்” என்றார் ரங்க ராவ். வாசலில் தெருத் திண்ணையில் இருந்த இரண்டு போலீஸ் காரர்களையும் வெகு ஜாக்கிரதையாக இருக்கும்படியாகச் சொல்லிவிட்டுக் கதவுகளை எல்லாம் பந்தோபஸ்தாகத் தாழிட்டுக் கொண்டு படுத்தார் ரங்க ராவ். ""நீயும் வீட்டுக்குப் போக வேண்டாண்டா பயலே, இங்கேயே படுத்துக்கோ!'' என்று சோமுவுக்கு உத்தரவிட்டார். சோமுவும் கூடத்திலே ஒரு மூலையில் படுத்துக்கொண்டான், சுருட்டி மடக்கிக்கொண்டு. நடுநிசியிலே வீட்டுக் கதவை யாரோ ‘தடதட’வென்று தட்டும் சப்தம் கேட்டு விழித்துக் கொண்டான் சோமு. உடனேயே புரிந்தது விஷயம் அவனுக்கு. ஒரு விநாடி கூடத் தாமதிக்கவில்லை அவன். கல்யாணத்திற்காகப் புழங்க அந்த வீட்டிலே இடம் போதாதே என்று அடுத்த வீட்டுக்கும் இதற்கும் இடையிலிருந்த சுவரிலே ஓர் ஆள் போகும்படியாக இடித்து விட்டிருந்தார்கள். அந்த வழியாகச் சோமு அடுத்த வீட்டிற்குள் புகுந்து கொல்லைக் கதவைச் சந்தடியில்லாமல் திறந்து கொண்டு வெளியேறினான். கொள்ளைக்காரர்கள் கையில் அகப்பட்டுக்கொண்டு ரங்கா ராவும் சோனிபாயும் கங்காவும் எவ்வளவு துன்பங்களை அநுபவிப்பார்களோ என்ற பயம் சோமுவுக்கு. உதவி கொண்டு வருவதானால் கும்பகோணத்திலிருந்து வந்தால்தான் உண்டு. சாத்தனூரில் யாரும், எந்தத் தெருவாரும், பிச்சாண்டியின் கொள்ளைக் கூட்டத்துக்கு எதிராக ரங்க ராவுக்கு உதவி செய்ய வரமாட்டார்கள் என்பது சோமுவுக்குத் தெரியும். எப்படித் தெரியும் என்று சொல்வதற்கில்லை; அவன் உணர்ந்தது அது தான். இருட்டிலே வேலியோரமாகப் பதுங்கிப் பதுங்கிப் பத்து விநாடிகளில் குதிரை லாயத்தை அடைந்து விட்டான். லாயத்திலே சிதம்பரம் வழக்கத்துக்கும் மீறியே அதிகமாகக் குடித்துவிட்டுப் பிரக்ஞையே இல்லாமல் கிடந்தான். வேகமாகப் போகக்கூடிய வெள்ளைக் குதிரையை அவிழ்த்துச் சந்தடியில்லாமல் சேணத்தை மாட்டி நடத்தி வெளியே கொண்டு போனான் சோமு. தாவி அதன்மேல் ஏறி அமர்ந்தான். ராஜபாட்டையை அடையும் வரையில் சப்தம் ஒலிக்காதிருக்கும் பொருட்டு குதிரையைச் சற்று மெதுவாகவே நடத்தினான். பிறகு ராஜபாட்டையை அடைந்தவுடனே கும்பகோணத்தை நோக்கிக் குதிரையைத் தட்டிவிட்டான். நாலுகால் பாய்ச்சலில் பறந்தது குதிரை. கொள்ளைக் கூட்டத்தார் ரங்க ராவின் வீட்டுக் கதவைத் தட்டிக் கால்மணிநேரம் ஆவதற்குள் கும்பகோணத்தை நோக்கிச் சோமு குதிரைமேல் கிளம்பிவிட்டான். ஒரு நாழிகை நேரத்திற்குள் போதிய போலீஸ் உதவியுடன் திரும்பி வந்துவிடுவது என்கிற உத்தேசம் அவனுக்கு. சற்றேறக்குறைய இதே சமயத்தில் ரங்க ராயர் வீட்டிலே சோனிபாயையும் கங்காவையும் ஓர் அறைக்குள் போட்டுப் பூட்டி விட்டு ரங்க ராவைத் தூணேடு சேர்த்துக் கட்டிக்கொண்டிருந்தார்கள் திருடர்கள். கதவைத் தாமாகத் திறக்காவிட்டால் உடைத்துக்கொண்டு உள்ளே வந்து இம்சிப்பார்கள் என்று எண்ணி ரங்க ராவ் கதவைத் திறந்து விட்டார். சாவிகளை வாங்கிக்கொண்டு அவரைக் கட்டிப் போட்டு விட்டு, “உம்... எங்கெங்கே என்ன என்ன இருக்கிறது? சொல்லுங்கள் மரியாதையாக, நானும் உங்களை மரியாதையாக நடத்தத் தயார்” என்று பிச்சாண்டி சொன்னான் ரங்க ராவிடம். ரங்க ராவ் நடப்பது நடந்தே தீரும் என்று கடவுளின்மேல் பாரத்தைப் போட்டுவிட்டுச் சாவிகளைப் பிச்சாண்டியின் கையில் கொடுத்துவிட்டார். எங்கெங்கே என்ன என்ன இருக்கின்றன என்றும் சொல்ல ஆரம்பித்தார். பிச்சாண்டியின் ஆட்கள் வீட்டிற்குள்ளே இங்கும் அங்கும் நடமாட ஆரம்பித்தார்கள். சோமு அவர்கள் கையில் சிக்கவில்லை என்பதைக் கவனிக்காமல் இல்லை ரங்க ராவ். அவன் சிறு பயல், என்ன செய்வான் என்று அவருக்குத் தெரியாது. ஆனால் ஏதாவது செய்வான் என்கிற நம்பிக்கை மட்டும் அவருக்கு இருந்தது. எவ்வளவு காலஹரணம் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்வது கடவுளின்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நம்பிக்கை இழக்காமல் இருந்துவிடுவது என்று தீர்மானித்தார் ரங்க ராவ். |