முதற்பகுதி : உதயம்
அத்தியாயம் 15. கல்யாண விமரிசை

     எவ்வளவோ விமரிசையான கல்யாணங்கள் பல நடந்த காலம் அது. விமரிசையான கல்யாணங்களுக்குப் பெயர்போன காலம் அது. நாட்டிலே சுபிக்ஷம் இருந்தது. பணக்காரர்களோ அரசியல் வாதிகளோ ஏழைகளின் கஷ்டங்களை எண்ணிக் கண்ணீர் விட ஆரம்பிக்காத காலம் அது என்று சொல்லலாமா? ஒருவன் கையில் பணமும் இருந்து, இப்படிச் செய்ய வேண்டும் என்கிற ஆசையும் இருந்தால் எவ்வளவு விமரிசையாக வேண்டுமானாலும் கல்யாணம் செய்யலாம், கொண்டாடலாம். இல்லாதவர்களும் கல்யாண வீட்டுக்காரர்களுடன் சேர்ந்துகொண்டு கொண்டாடுவார்கள்; குதூகலிப்பார்கள்; குறைகூறமாட்டார்கள். வேலையும் பணமும் அற்றவர்கள் தினசரிப் பத்திரிகைகளுக்கு, ‘இப்படிப் பணத்தை வீண் விரயம் செய்து கல்யாணம் செய்யலாமா?’ என்று விவாதங்கள் கிளப்பிக் கடிதங்கள் எழுத மாட்டார்கள். வயிற்றுவலிக்காரர்களும், ஏழைக் குறும்புக் காரர்களும், பத்திரிகைகளில் நம்பிக்கை வைப்பவர்களும், சோஷியலிஸ்டுகளும் தோன்றாத காலம் அது! மக்களுக்கு அறிவூட்டி அவர்களை முன்னுக்குக் கொண்டு வருவதே கருமமும் சிரத்தையும் கண்ணுங் கருத்துமாகக் கொண்ட சமூகச் சீர்திருத்தக்காரர்களும், பத்திரிகைகளும் இல்லாத காலம் அது!

     ஆகவே சாத்தனூரிலும் சுற்றுப்புறத்திலும் உள்ள ஜனங்கள் எல்லோரும் கங்காபாய் சாம்பமூர்த்தி ராயர் கல்யாண விமரிசையைப் பற்றிப் பேசிப்பேசிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ‘அனாவசியமாகப் பேசுகிறோம், சமுதாய நலத்துக்கு எதிர் செய்கிறோம்’ என்று அறியாமலே அப்பாவிகளான அவர்கள் அந்தக் கல்யாண விமரிசையைப் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சிதம்பரத்திலிருந்து தஞ்சாவூர், திருவையாறு, திருச்சினாப்பள்ளி வரையில் ஒரு தலைமுறையில் எங்கே கல்யாணம் என்கிற பேச்சு வந்தாலும் யாராவது ஒரு கிழவர், நேரில் போய்ப் பார்த்தவர் சொல்லுவார்; “கல்யாணம் என்றால் எல்லாம் கல்யாணமாகிவிடுமா? ஸார். சாத்தனூர் ரங்க ராவ் ஆத்துக் கல்யாணம்மாதிரி முன்னேயும் இருந்திராது; பின்னேயும் இருந்ததில்லை; இனிமேலும் இருக்கப்போவதில்லை” என்று. இந்த வாக்கியம் இல்லாமல் கல்யாணங்களைப் பற்றிய பேச்சுப் பூர்த்தியாவதே அபூர்வம். முன் காலத்திலெல்லாம் ராஜாக்கள் வீட்டுக் கல்யாணங்கள் எவ்வளவு விமரிசையாக நடக்குமோ அவ்வளவு விமரிசையாக நடந்தது கங்காபாய்க்கும் சாம்பமூர்த்தி ராயருக்கும் கல்யாணம்.

     சாதாரணமாகக் கல்யாணம் என்றால் நாலு நாட்கள் என்று தான் பெயர். ஆனால் ரங்க ராவ் வீட்டுக் கல்யாணத்திற்கு வந்த விருந்தாளிகள் பத்துப் பதினைந்து நாட்கள் விருந்தாளிகளாகத் தங்கி அமர்க்களம் பண்ணினார்கள். உறவினர்கள் மட்டுமல்ல; வெகுதூரத்துக்கு அப்பாலிருந்து நண்பர்கள், பெரிய பெரிய உத்தியோகஸ்தர்கள் எல்லாம் லீவு வாங்கிக் கொண்டு வந்து, இன்னும் லீவுக்கு எழுதிப் போட்டுவிட்டுத் தங்கி விட்டார்கள் ரங்க ராவினுடைய விருந்தாளிகளாக.

     நான்கு நாட்கள் சாத்தனூர்க் கிராமம் பூராவுமே ரங்க ராவ் வீட்டிலேதான் விருந்துண்டது. கும்பகோணத்திலிருந்து கால்வாசிப் பேர் சாத்தனூருக்கு வந்துவிட்டார்கள். அக்கிரகாரத்திலே நாலு வீடுகளில் சமையல் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது போதாமல் கீழ வீதியிலே இருந்த சத்திரங்களிலும் கல்யாண விருந்து நடந்தது. ஏழைகள், எளியவர்கள், பந்துமித்திரர்கள், பிராம்மணர்கள், பிராம்மணர் அல்லாதவர், பள்ளுப்பறை பதினெட்டுச் சாதிக்குமே தனித் தனிப் பந்தியாக விருந்தளிக்கப்பட்டது. அந்தக் கல்யாண விருந்து நடந்த நாலு தினங்களில் மட்டும் ஒரு லக்ஷம் இலைகளுக்குமேல் விழுந்திருக்கும் என்று சொல்வது மிகையாகாது. வாழைத் தோட்டங்கள் மலிந்த சாத்தனூரிலும் சுற்றுப்புறத்திலும் உள்ள வாழைமரங்கள் எல்லாம் மொட்டையாகிவிட்டன என்று ஒரு கிழவர் விவரித்தது பொய்யல்ல என்றுதான் சொல்லவேண்டும்.

     “ஆஹா! ஆஹா! என்ன சாப்பாடு!” என்பார் ஒரு கிழவர் ஞாபக இன்பத்திலே முகம் மலர. “மாயவரத்திலே, சமையல்காரர்களுக்குப் பெயர் போன மாயவரத்திலே, அதே முகூர்த்தத்தில் நடக்க விருந்த பல கல்யாணங்களுக்குச் சமைப்பதற்கு ஆளே அகப்படாமல் போய்விட்டது. எல்லாச் சமையல்காரர்களும் சாத்தனூர்க் கல்யாணத்துக்குப் போய் விட்டார்கள்!” என்றார் ஒரு கிழவர்.

     “மேளக் கச்சேரிகள் பாட்டுக் கச்சேரிகள் இரண்டு சதிர்க் கச்சேரிகள் ஆஹா! பிரும்மானந்தம்!” என்பார் இன்னொரு கிழவர்.

     “மாப்பிள்ளை அழைக்கும்போதும் நாலாம் நாள் ஊர்வலத்தின்போதும் வாணவேடிக்கைகளுக்கு ஏற்பாடாகியிருந்தது. மடாதிபதிகள் பட்டம் ஏறும்போதும், கோயில் உற்சவ காலங்களிலுங் கூடத் தனக்கு இவ்வளவு பணம் சேர்ந்தாற்போலக் கிடைத்ததில்லை என்று ஒரு வாணக்காரன் என்னிடம் நேரில் சொன்னான்” என்பார் ஒரு கிழவர். “அவன் ஒருத்தன் தானா? அவனைப்போல நாலு வாணக்காரர்கள் பணம் வாங்கிப் போனார்கள்” என்பார் இன்னொரு கிழவர், நேரில் கண்ட மாதிரி.

     கல்யாணத்திற்குச் சந்தனமும் வாசனைத் திரவியமும் கொடுப்பதாக அச்சாரம் வாங்கிய சாயபு, அந்தப் பணத்தை முதலாகப் போட்டு ஒரு பெரிய கடை வைத்துவிட்டான் என்றார்கள்.

     புஷ்பம்... ஏன், எல்லாவற்றையும் பற்றி இப்படித்தான் சொல்லிக்கொண்டார்கள்.

     மற்றதெல்லாம் எப்படியானாலும் ரங்க ராவினுடைய ஆஸ்திகளில் கால்வாசிக்குமேல் இந்தக் கல்யாண விமரிசைகளால் கரைந்துவிட்டது என்னவோ உண்மையே! கொள்ளைக்காரர்களிடமிருந்து தம் பொருளைக் காப்பாற்றிவிட்ட உற்சாகத்திலே கையைத் தாராளமாக உதறி, முன்னால் போட்டிருந்த திட்டத்தைவிட அதிகமாகவே செலவு செய்தார். ரொக்கமாகக் கையில் இல்லாததற்கு ஈடு சொல்ல அவருக்குக் கடன் கொடுக்க ‘நான் நீ’ என்று எவ்வளவோ பேர் காத்திருந்தார்கள். காத்திருந்தவர்களில் யாரையும் ரங்க ராவ் ஏமாற்றிவிடவில்லை. தாராளமாகவே கடன் வாங்கினார், வாங்கினது பூராவையும் செலவும் செய்துவிட்டார்.

     தஞ்சைஜில்லா பூராவும் பிச்சாண்டியினுடைய பெயரைக் கேட்டே நடுங்கிக் கொண்டிருந்த சமயத்திலே அந்தப் பிச்சாண்டியின் புகழ் ஓய்ந்து அவனும் சிறையில் அடைபடுவதற்குக் காரணமாக இருந்த கல்யாணம் அது. முடிசூடா மன்னன் என்று எண்ணி யாருக்கும் அடங்காது திரிந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்த அந்தப் பிச்சாண்டி கைதாவதற்கு மூல காரணமாக இருந்தவன் பதினொரு வயசு நிரம்பாத ஒரு சிறுவன் என்றறிந்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா? அந்தப் பையன் பிச்சாண்டிக்குக்கூட ஏதோ ஒரு வழியில் உறவு என்று சொல்லிக் கொண்டார்கள்.

     விஷயம் கேள்விப்பட்டவர்கள் எல்லோரும் அந்தப் பையனைப் பார்ப்பதற்கென்று சாத்தனூர் வந்தார்கள். பையன் பார்ப்பதற்கும் துடியாகத்தான் இருந்தான்.

     இண்டு இடுக்கு இல்லாமல் ஜரிகைவேலை செய்த சிவப்பு வெல்வெட்டுக் குல்லாயும், சிவப்பு வெல்வெட்டுச் சட்டையும், சிவப்பு வெல்வெட்டுச் சராயும், சிவப்பு வெல்வெட்டு ஜோடுகளும் போட்டுக்கொண்டு மாப்பிள்ளை அழைக்கும்போது குதிரையின் லகானைப் பிடித்துக்கொண்டு வந்தவன்தான் அந்தப்பையன்! சோமு என்று பெயர் அவனுக்கு.

     இவ்வளவு விமரிசைகளும் தன்னால்தான் என்று ஓரோர் சமயம் எண்ணினான் சோமு. தனக்காகத்தான் என்று ஓரோர் சமயம் எண்ணினான். அப்படி நினைப்பது தவறு என்று எண்ணினான் ஓரோர் சமயம்.

     வள்ளியம்மை எதுவும் எண்ணவில்லை; அவள் ஆனந்தத்தில் அழுந்திக் கிடந்தாள்!