அத்தியாயம் 4. சாத்தனூர் எல்லைகள் - முதற்பகுதி : உதயம் - பொய்த்தேவு - Poithevu - க. நா. சுப்ரமண்யம் நூல்கள் - Works of Ka.Naa.Subramanyam - சென்னை நூலகம் - ChennaiLibrary.com


முதற்பகுதி : உதயம்
அத்தியாயம் 4. சாத்தனூர் எல்லைகள்

     கறுப்ப முதலி போன பிறகு பல நாட்கள், ஆறுதல் சொல்ல வந்தவர்கள் யாரையும் கிட்ட அண்ட விடாமல், அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக, தன் துயரைத் தன் மனசிலேயே மூடி வைத்துக் கொள்ளத் தவியாகத் தவித்தாள் வள்ளியம்மை. ஆனால் காலக் கிரமத்தில் செய்வது இன்னது என்று அறியாமல் தானாகவே மனம் தேறித் தினசரி அலுவல்களைக் கவனிக்கத் தொடங்கி விட்டாள். முன்னாலெல்லாம் என்றால், அவள் பழைய வள்ளியம்மையாக இருந்த காலத்தில், போன காதலன் போகட்டும் என்று விட்டு விட்டுப் புதுக்காதலன் தேடத் தலைப்பட்டிருப்பாள். இப்பொழுது அவள் மனம் காதலையோ காதலனையோ நாடவில்லை. எப்படியோ கறுப்பனுடன் வாழ்ந்த நாட்களில் அவள் மாறிப் போய்விட்டாள். அவளுடைய மனசே ஒடிந்துவிட்டதுபோல இருந்தது. முன்போலெல்லாம் இரைந்து பேசுவதும் இல்லை; யாரையாவது வலுச்சண்டைக்கு இழுத்து ஆர்ப்பாட்டங்கள் செய்வதும் இல்லை அவள். தன் நினைவுகளை முக்கியமாகக் கறுப்பனுடன் வாழ்ந்த நாட்களின் ஞாபகங்களை, அடியோடு மறந்து விட விரும்பினாள். கறுப்பனைப் பற்றி நினைப்பதை நிறுத்திவிட்டால் போதுமா? அது போதவில்லை, ஆகவே தன்னுடைய தினசரி அலுவல்களை அதிகரித்துக் கொண்டு அவற்றில் வெகு உற்ஸாகத்துடன் ஈடுபட்டாள்.

     சர்வமானிய அக்கிரகாரத்திலே புதிதாக குடியேறியிருந்த ஒரு பணக்கார ராயர் வீட்டிலே வேலைக்கு அமர்ந்தாள். ஓர் எருமை மாட்டை வாங்கிக் கட்டிக் கொண்டு தயிர், வெண்ணெய், நெய் வியாபாரம் செய்யத் தொடங்கினாள். கறுப்பன் ஞாபகார்த்தமாக இருந்த தன் ஒரே பிள்ளையைச் சீராட்டிப் பாராட்டி வளர்க்கத் தலைப்பட்டாள். தினத்தில் அறுபது நாழிகை நேரம் போதாது போல இருந்தது அவளுக்கு.

     வாழ்க்கையிலே தன் ஒரே மகன் சோமசுந்தரத்தைத் தவிர அவளுக்கு வேறு ஒரு விதமான பிடிப்பும் ஏற்படவில்லை.

     சாத்தனூர் வாசிகளுக்கு, மொத்தத்தில், கறுப்பன் தொலைந்ததில் பரமதிருப்தி என்று தான் சொல்ல வேண்டும். திருப்தி இல்லாமல் எப்படி இருக்க முடியும்? முக்கியமாக ‘உடையவர்கள்’ வாழைத்தாறு முதலிய தங்கள் உடைமைகளுக்கு இனித் தங்கள் இஷ்டம்போல விலை கூறலாம், விரட்டுவதற்குக் கறுப்பன் இல்லை என்று எண்ணிச் சந்தோஷப்படாமல் இருப்பார்களா?

     ‘இல்லாத’ காளைகள் சிலர், முக்கியமாக மேட்டுத் தெருக் காளைகளில் பலர், கறுப்பன் போய்விட்டான், இனித் திரும்பமாட்டான் என்பது நிச்சயமானவுடன் ஊரிலே அவனுடைய ஸ்தானத்திற்கு போட்டி போடத் தொடங்கினார்கள். கறுப்பனுக்கு இருந்த உடல் வலுவோ, மனத்தெம்போ, அறிவோ, சாதுரியமோ, அவர்களில் யாருக்கும் இல்லை. அவர்களில் பிச்சாண்டியின் பெயரை உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள் கூடத் துணிச்சலாக உபயோகிக்க மாட்டாமல் தயங்கினார்கள். அவர்களுடைய தயக்கம் அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டது. வாழைக்காய் விலை கேட்கப் போன இடங்களில் கூட ‘உடையவர்கள்’ அவர்களுக்கு அசைந்து கொடுக்க மறுத்தார்கள். அவர்கள் என்னதான் கம்பீர நடை போட்டாலும், அதட்டினாலும் உருட்டினாலும், மிரட்டினாலும் ‘உடையவர்கள்’ மசியவே இல்லை. கறுப்பன் இனித் திரும்ப மாட்டான் என்பதனாலேயே தைரியம் பிறந்து விட்டது போலும் அவர்களுக்கு! “உனக்கும் இல்லை இனிக் கறுப்பன் திரும்பினால் அவனுக்குக்கூட இல்லை” என்று கூறி விட்டார்கள் ‘உடையவர்கள்’. கறுப்பன் இருந்திருந்தால் எது வந்தாலும் வரட்டும் என்று கூசாமல் இரவோடு இரவாக வாழைத்தாறை வெட்டிக் கொண்டு போயிருப்பான். ஆனால் அவன் ஸ்தானத்தில் அமர்ந்து விட ஆசைப்பட்ட இந்த போலிக் கறுப்பர்களுக்கு அவனைப் போலப் பேசத்தான் தெரிந்ததே தவிர அவனைப் போலக் காரியம் எதுவும் செய்யத் தெரியவில்லை. இம்மாதிரி நாலைந்து தடவை முயன்று தோல்வியுற்ற பின் இந்தக் காளைகள் தோல்வியை ஒப்புக்கொண்டு, தாமாகவே பின் வாங்கி விட்டார்கள்.

     ஊரிலே கறுப்பனுடைய ஸ்தானத்தை அடைந்து விட வேண்டும் என்று போட்டியிட்ட காளைகளில் சிலர் வேறு ஒரு காரியத்திலும் துணிச்சலுடன் ஈடுபட்டார்கள். வேறு எது எப்படியானாலும், வள்ளியம்மையினுடைய உள்ளத்திலேயாவது கறுப்பனுடைய ஸ்தானத்தைக் கைப்பற்றிவிடுவது என்று சிலர் தீவிர முயற்சி செய்தார்கள். இது வரையில் யாருடைய நட்பையுமே சுவைத்தறியாத சிறு பயல் சோமுவுடன் நட்புப் பாராட்டி அவன் மூலமாகவாவது தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்று சிலர் எண்ணினார்கள். சோமுவுக்குத் தின்பண்டங்கள் ஏராளமாக கிடைத்தன. இந்தக் காலத்தில் வெளியே கிளம்பினால் உடன் வருவதற்கு, துணை வருவதற்கு இரண்டொருவர் எப்பொழுதுமே தயாராக இருந்தனர். இதனாலெல்லாம், இவ்வளவு நாளும் தனிமையிலே, மனிதர்கள் என்றால் சுபாவமாக ஏற்பட்டிருந்த ஓர் அவநம்பிக்கையுடன் ஒதுங்கிப் போய்கொண்டிருந்த சோமு மனிதர்களிடம் நம்பிக்கைகொண்டு, நட்புப் பூண்டு பழக ஆரம்பித்தான். சோமுவுக்கு இரண்டொரு விஷயங்களில் இலாபம் கிடைத்தது. மற்றவர்களுக்கு, காரியார்த்தமாக அவனை அண்டியவர்களுக்கு, எவ்விதமான இலாபமும் கிடைக்கவில்லை. வள்ளியம்மைக்கு இப்பொழுது வயசு இருபத்தைந்துக்கு மேல் இருக்கும் என்றாலும் ‘தளதள’ வென்ற மேனியும், தளராத உடலும், கரிய விரிந்த விழிகளும், பூமி அதிரும் நடையுமாகப் பார்க்க வசீகரமாகத்தான் இருந்தாள். ஆனால் தன்னை நாடிய காளைகளில் யாரையும் அவள் தன் அண்டையில் வரக்கூட அனுமதிக்கவில்லை.

     சாத்தனூரிலே மட்டுமன்றி வள்ளியினுடைய உள்ளத்திலும் கூடக் கறுப்பனுடைய ஸ்தானம் காலியாகவே கிடந்தது.

     ஐந்து வயதான சோமுப்பயல் தன் தகப்பன் போன பிறகு அவனைப்பற்றி என்னதான் நினைத்தான் என்று நிச்சயமாக சொல்ல முடியாது. சாதாரணமாக அவன் தன் தகப்பனைப் பற்றி நினைப்பதே இல்லை. ஆனால் தினம் காலையிலும் மாலையிலும் அவனுக்குப் பழக்கமாகியிருந்த அந்தப் பூகம்பமும் புயலும் இல்லாமல் வீடே வெறிச்சோடித்தான் கிடந்தது. சமயம் பார்த்து முதுகிலே இரண்டு வைப்பதற்கு ஆள் இல்லாததால் சோமுவுக்குத் “துருதுரு” என்றுதான் இருந்தது. வாலை அவ்வப்போது ஒட்ட நறுக்குவதற்கு யாருமே ஆள் இல்லாததால் அவன் வால் கிளைத்துத் தழைத்து வளர்ந்து கொண்டிருந்தது. இப்பொழுதெல்லாம் வள்ளியம்மை அவனைத் தொட்டு அடிப்பதே கிடையாது. தன் இஷ்டப்படி எல்லாம் ஊரிலே திரிந்து அலைந்து அறிவின் எல்லைகளைத் தொட முயன்று கொண்டிருந்தான் அவன்.

     சாத்தனூர் மிகவும் சிறிய ஊர்தான். ஆனால் அதற்குள் சுற்றிச் சுற்றி வந்து சோமு அறிவின் எல்லைகளை அதி சீக்கிரமே எட்டி விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். அறிவும் அநுபவமும் விநாடிக்கு ஒரு வண்ணமாக அவனுக்கு ஏற்பட்டு அவன் மனசை பண்படுத்திக் கொண்டிருந்தன; சோமசுந்தர முதலியாரைச் சிருஷ்டித்துக் கொண்டிருந்தன.

     சாத்தனூருக்கு கிராமத்துக்கு எல்லைகள் சொல்வது சுலபமே. அதிகாரிகள் ஏதோ எப்படியோ இதற்குள் அடங்கியதுதான் சாத்தனூர் என்ற எல்லைகள் வகுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த எல்லைகளுக்குள் சோமுவுக்கு ஏற்பட்ட அநுபவங்களின் எல்லைகளையும் அந்த அநுபவங்களின் காரணமாக அவனுக்கு ஏற்பட்ட அறிவின் எல்லைகளையும் விவரிப்பதுதான் மிகவும் சிரமம்.

     சாத்தனூர் எல்லைக்குள் இருந்ததை எல்லாம் ஆறு வயசு ஆவதற்கு முன்னரே சோமு பூராவும் ஆராய்ந்து விட்டான்.

     சாத்தனூர் நடு மத்தியிலே இருந்தது கோயில் சிவன் கோயில். தஞ்சையில் புகழுடனும் ஆண்மையுடனும் வீரத்துடனும் சோழர்கள் ஆண்டு சோழ சாம்ராஜ்யத்தை மீண்டும் ஸ்தாபிப்பது என்று முயன்ற காலத்திலே கட்டப்பட்ட கோயில் அது. மிகவும் புராதனமானது என்று சொல்ல முடியாது. ஆனால் பழைய காலத்துக் கோயில்தான். கவனிப்பார் இல்லாமல் க்ஷீண தசையில் இருக்கிறது. வெளி மதிற் சுவர்களெல்லாம் இடிந்து விழுந்துகொண்டிருக்கின்றன. வெளிப் பிரகாரங்களில் ‘சில்’ லென்று பூத்திருக்கும் சிறு நெறிஞ்சிக் காட்டிலே பயபக்தியுடன் தான் நடக்க முடியும். ஆனால் உள்ளே மண்டபங்களும், தூண்களும், கர்ப்பக்கிருகமும், விக்கிரகங்களுள் முக்கியமானவையும் அன்றைக்கு இன்று நிலைகுலையாமல் அற்புதமாகத்தாம் இருக்கின்றன. அந்த நாட்களிலிருந்து இன்றுவரையில் அந்தக் கோயிலிலே ‘நம்புகிறவர்களுக்கும்’ குறைவு இல்லை. ஒவ்வொரு நாளும் மாலையில் கும்பல் ‘ஜே ஜே’ என்றுதான் இருக்கும்.

     சாதாரணமாகப் பெரிய கோயில்களுக்கெல்லாம் நான்கு கோபுரங்கள் இருக்கும்; ஆனால் சாத்தனூர் கோயிலுக்கு உள்ளது ஒரே கோபுரந்தான், தெற்கு கோபுரம் ஒன்று மட்டுந்தான். கிழக்கே ஒரு பெரிய வாசல் உண்டு. அது உத்ஸவ காலங்களில் மட்டுந்தான் திறக்கப் பட்டிருக்கும். மற்ற காலங்களில் அதன் கதவுகள் அடைத்தே கிடக்கும். தெற்கு வாசல் வழியாகத்தான் கோயிலுக்குள் புக வேண்டும். வேறு வழி இல்லை. சுற்றியிருந்த தெருக்களை விடப் பத்தடி உயரத்தில் ஒரு சிறு குன்றின் மேல் இருப்பது போல இருந்தது கோயில். கர்ப்பக்கிருகம் தெரு மட்டத்திலிருந்து இருபது அடி உயரத்தில் இருந்தது. கோயில் மணி உயரத்தில் முப்பது முப்பத்தைந்து அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. கோயிலில் மணி அடித்தால் சாத்தனூர் கிராமம் பூராவுமே கேட்கும். அதிகாலை விடிவதற்கு மூன்று நாழிகை நேரம் இருக்கும் போதே மணி அடிக்கப்படும். முதல் ஜாமத்துக்குப் பிறகு நள்ளிரவு வரையில் ஐந்து ஜாமங்களுக்கும் மணி அடிக்கப்படும். சாத்தனூர் கோயில் விக்கிரங்களை விட அந்த மணி தான் சோமுவின் மனசை அதிகமாகக் கவர்ந்தது என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. வெறும் உலோகத்தை உருக்கி வார்த்து அந்த மாதிரி இனிய நாதம் எழுப்பும் சக்தியை அதற்கு கொடுத்தவன் உண்மையிலேயே ஒரு கலைஞனாகத்தான் இருக்கவேண்டும். அது தனி இசை; உள்ளத்தைக் கவர்ந்து உயிரையே ஓடச் செய்யும் இசை; மனிதனின் ஆத்மாவைக் கவ்வி இழுத்துக் கடவுளின் பாதார விந்தங்களிலே பணியச் செய்வதற்கு என்று ஏற்பட்ட இசை. தமிழிலே உள்ள பக்திப் பாடல்களை எல்லாம் விடச் சிறந்த இசை அந்தக் கோயில் மணி ஓசை என்று சொல்வது மிகையே ஆகாது.

     சாத்தனூர் சிவன் கோயிலை நாயன்மார்களுள் யாரும் பாடியிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் தங்கள் ஊர், பாடல் பெற்ற ஸ்தலம் என்றுதான் ஊர்காரர்களின் அபிப்பிராயம். நாயன்மார்களுள் யாரும் பாடாமல் போனது அவர்களுடைய குறையைக் காட்டியதே தவிர, கோயிலையோ, மூர்த்தியையோ குறைபடுத்துவது ஆகாது என்று சாத்தனூர் வாசிகள் நினைப்பதில் தவறில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சுற்று வட்டப் பிரதேசத்திலிருந்து பக்த கோடிகள் வண்டி கட்டிக்கொண்டும், நடந்தும் வந்து சாத்தனூர்ச் சிவன் கோயிலில் உள்ள மூர்த்திக்கு அர்ச்சனை அபிஷேகம் முதலியன செய்வித்துக் கண்குளிரக் கண்டு களித்துத் திரும்புவார்கள். சிவன் கோயில்தான் அது என்றாலும், அதிலே தனியாக ஒருமூலையில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணிய சுவாமிக்குத்தான் மகிமையும் விசேஷமும் அதிகம் என்பது பக்த கோடிகளில் பலரடைய அபிப்பிராயம். சிவ பெருமானுக்கு வேளை தவறாமல் பூஜையும் நைவேத்தியமும் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் சுப்பிரமணிய சுவாமிக்கு எதுவும் தவறாது. வேளை தவறாது, பூஜை தவறாது, அர்ச்சனை அபிஷேகங்களும் தவறா. குறிப்பிட்ட நாட்களில் பக்தர்கள் காவடி கொண்டு வருவார்கள். நாதஸ்வரம் ஒலிக்கும்! அந்த இன்பவசப்பட்டுச் சோமு காவடி தூக்குபவர்களுடன் ஆடிப் பாடிக் கொண்டு கோயிலுக்குப் போவான். வெகு உற்ஸாகத்துடன் அபிஷேகம் ஆராதனைகள் எல்லாம் முடியும் வரையில் இருந்து சுவாமி கும்பிட்டுவிட்டு வருவான். தெய்வத்தின் விசேஷப் பாதுகாப்புக்குப் பக்தி சிரத்தைதான் முக்கிய காரணம் என்று ஒப்புக்கொண்டால் சோமுவிடம் தெய்வத்துக்கு விசேஷப் பிரியம் இருக்க வேண்டும் என்பதையும் ஒப்புக் கொண்டே தீர வேண்டும். காவடி தூக்கி வருபவர்களைவிடச் சோமுவுக்குத் தான் இந்தச் சந்தர்ப்பங்களிலே பக்தி சிரத்தையும் தெய்வத்தினிடம் ஈடுபாடும் அதிகம் என்பதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை.

     கிருத்திகைக்குக் கிருத்திகை முருகன் சந்நிதியில் ஒரே கூட்டமாக இருக்கும். பல ஊர்களிலிருந்தும் ஜனங்கள் நாள் பூராவும் வந்து கொண்டே இருப்பார்கள். குருக்கள்மார் அன்று நாற்பது ஐம்பது நாழிகை நேரமும் சற்றுக்கூட ஓய்வென்பதே இல்லாமல் முருகனுக்குக் கர்ப்பூரம் ஏற்றிக் காட்டிய வண்ணம் இருப்பார்கள்.

     முருகன் சந்நிதியில் சில நாட்களில், மாலை வேளையிலே, பிசாசு ஓட்டுவார்கள். வேப்பிலையும் கையுமாகத் தாடி வளர்த்த சாமியார்கள் பலர் தலைவிரி கோலமான பெண்கள் புடைசூழ வந்து சந்நிதியிலே ஆர்ப்பாட்டங்கள் செய்வார்கள்; பயங்கரமான காட்சிதான் அது. சோமு பயந்துகொண்டே ஆனால் அலுக்காமல் நின்று பார்ப்பான். சிலநாட்கள் இருட்டி வெகு நேரம் வரையில்கூட நின்று விடுவான். இருட்டிலே வீடு திரும்புகையில் அவன் மனம் ‘திக்திக்’ என்று அடித்துக் கொள்ளும்.

     சாயங்கால நேரத்தில் விளக்குகளெல்லாம் ஏற்றியபின் கர்ப்பக் கிருகத்தில் நின்ற முருகன் உருவத்தைப் பார்க்கும் போதெல்லாம் சோமுவுக்குத் தன் தகப்பன் கறுப்பனின் ஞாபகம் வரும். ஏன் என்று அவனுக்கே தெரியாது!

     சுவாமி, மணிச் சப்தம், ஜன நடமாட்டம், நாகஸ்வரம், காவடிகள் இவை போதா என்று கோயிலிலே சோமுவின் மனசைக் கவருவதற்கு வேறு சில விஷயங்களும் இருந்தன. கோயிலைச் சேர்ந்த நந்தவனத்திலே நாலைந்து மயில்கள் சுயேச்சையாக நடைபோட்டுக் கொண் டிருந்தன. சில சமயம் அவைகளில் சில தோகை விரித்து ஆடும்! ஆகா! எவ்வளவு அற்புதமான காட்சி! ஒரு பிராகாரத்தில் மதில் சுவரோரமாக ஒரு பெரிய இடத்தை வளைத்து வேலி கட்டி அங்கே மூன்று மான்குட்டிகளை வைத்திருந்தார்கள். பெரிய கிழட்டு யானை ஒன்றும் இருந்தது, தெற்குப் பிராகாரத்திலே நந்தவனத்திலே விதவிதமான புஷ்பங்கள் பூத்துக் குலுங்கியிருக்கும், வருஷம் பூராவும். மஞ்சள் நிறமாகப் பூப் பூத்த ஒரு செடியின் காய்கள் காற்றடிக்கும் போதெல்லாம் வெள்ளி மணிகள் போல ஒலிக்கும். அந்தச் செடிக்கு சரியோ தப்போ கிண்கிணி என்று பெயரிட்டிருந்தான் சோமு. கோயில் மணி ஓசைக்கு அடுத்தபடியாக இந்தக் கிண்கிணிச் சப்தம் சோமுவின் மனசைப் பெரிதும் மயக்கியது.

     கோயில் தெற்கு வாசல் வழியாக வெளியே வந்தால் தெரிந்தது சந்நிதித் தெரு. அந்தத் தெருவிலே கோயிலைச் சார்ந்த, கோயிலை நம்பிப் பிழைத்த ஐயர்களும் பட்டர்களும் குடியிருந்தார்கள். நீண்ட தெரு அது. இரு சாரியிலுமாக அறுபது வீடுகள் இருக்கும். கோபுர வாசலை ஒட்டியிருந்த இரண்டு மூன்று வீட்டுத் திண்ணைகளில் அபிஷேக, அர்ச்சனைச் சாமான்கள் விற்கும் கடைகள் இருந்தன. அது காரணமாக அந்த இடத்திற்குச் சின்னக் கடைத்தெரு என்று பெயர்.

     கோயில் தெற்கு மதிள் சுவரை ஒட்டியிருந்த ஒற்றைச்சாரித் தெருவிலும் கோயிலில் வேலை பார்க்கும் பிராம்மணர்கள்தாம் இருந்தார்கள். அந்தத் தெரு வழியாக இருபது முப்பது கஜம் நடந்து வடக்கே திரும்பி இருபது முப்பது கஜம் நடந்தால் கீழச் சந்நிதியை அடையலாம். அடைத்த வாசலும், கோயில் மணிக்கூண்டும் இந்த சந்நிதியில்தான் இருக்கின்றன. கீழச் சந்நிதித் தெரு விசாலமான தெரு. அதில் பத்துப் பதினைந்து வீடுகள் இருக்கின்றன. கோயிலைச் சேர்ந்த மேளக்காரர்களும் தாசிமார்களும் இந்தத் தெருவிலேதான் வசிக்கிறார்கள்.

     கீழச் சந்நிதியோடு போனால் கீழ வீதியை அடையலாம். கீழ வீதியிலே பணக்காரப்பிள்ளைமார் பலரும், இரண்டு மூன்று நாட்டுக் கோட்டைச்செட்டியார்களும் வசிக்கிறார்கள்.விசாலமான தெரு. ஆகையால் இவர்களுடைய வீட்டு வாசல்களிலே வருஷம் பூராவும் கீற்றுக் கொட்டகை போட்டிருக்கும். கொட்டகையிலே ஊஞ்சல் போட்டுக்கொண்டு ஆடிக்கொண்டிருப்பார்கள். அவர்களைத் தூரத்தில் இருந்தபடியே பார்த்துக் கொண்டு நிற்பதிலே சோமுவுக்குப் பரம திருப்தி.

     கீழ வீதியோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மற்ற மூன்று வீதிகளும் சற்றக் குறுகலானவை என்றுதான் சொல்லவேண்டும். தெற்கு வீதியிலும் மேல வீதியிலும் வசிப்பவர்கள் அநேகமாக எல்லோருமே நெசவாளர்கள். நெசவாளர்கள் அல்லாதவர்கள் வெறும் குடியானவர்கள். நெசவாளர்களில் பலர் தினந்தோறுமே தெருவில் தறி போட்டு நெய்து கொண்டிருப்பார்கள். சாத்தனூர் புடவைகளுக்கும் துணிகளுக்கும் எப்பொழுதுமே கும்பகோணத்தில் கிராக்கி உண்டு. தறியிலே அவர்கள் வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டே வாயில் போட்ட விரலை எடுக்காமல் பல நாழிகைகள் அசையாமல் ஆடாமல் நிற்பான் சோமு.

     வடக்கு வீதியும் கீழ வீதியில் ஒரு பகுதியுந்தான் சாத்தனூர்க் கடைத் தெரு. பெரிய கடைத்தெரு என்று பெயர் அதற்கு. அதிலே உள்ளவை இரண்டொரு ஜவுளிக்கடைகளும், நாலைந்து மளிகைக் கடைகளும், ஒரு மிட்டாய்க் கடையும், ஒரு வெற்றிலைக் கடையும், ஒரு பட்டாணிக் கடலைக் கடையும் (சோமுவின் மனசில் இவ்வளவுக்கும் சிகரம் வைத்தது போல) ஒரு வாழைப்பழக் கடையும் இவ்வளவுதான். கடைத் தெருவிலே வாழைப்பழக் கடைக்குப் போய்த் தம்பிடி கொடுத்தால் கடைக்காரன் ஒரு சீப்புப் பழம் தருவான். ஆனால் சோமுவிடம் தம்பிடி ஏது? தம்பிடி இல்லையே என்பதற்காக வாழைப் பழத்தை எண்ணி ஆசைப்படாமல் இருக்க முடியுமா? அந்த வாழைப்பழக் கடைக்கு எதிரே நாக்கில் ஜலம் ஊற நாள் தவறாமல் ஒற்றைக் காலால் நின்று தவம் செய்வான் சோமு. எவ்வளவு நேரம் தவம் செய்தால்தான் என்ன? கடை வாழைப்பழத்தை எடுத்து மகாவிஷ்ணு வந்தால்கூடப் பையனுக்கு இனாமாகத் தந்துவிட முடியுமா? நாள் தவறாமல் சோமு கடைத்தெருவுக்குப் போய் வாழைப்பழக் கடைக்கு எதிரே ஒரு நாழிகை, பட்டாணிக் கடலைக் கடைக்கு எதிரே அரை நாழிகை, மிட்டாய்க் கடைக்கு எதிரே கால் நாழிகை தவங்கிடந்து விட்டுத்தான் மற்ற அலுவல்களைக் கவனிப்பான்.

     கீழ வீதியோடாவது மேல வீதியோடாவது நேராகத்தெற்கே சென்றால் காவேரிக் கரையை அடையலாம்.

     கீழ வீதியின் நடு மத்தியில், கீழச்சந்நிதி வந்து கீழ வீதியுடன் சேரும் இடத்தில் தேர் முட்டி இருக்கிறது. தேர் முட்டி மண்டபத்தை ஒட்டினாற்போலக் கிழக்கு நோக்கி ஓடுகிறது சின்ன அக்கிரகாரம். ஏழைப் பிராம்மணர்கள் பலருடைய வீடுகள் இந்த அக்கிரகாரத்திலே இருக்கின்றன. அந்தத் தெருவோடு போய்த் தெற்கே திரும்பி மீண்டும் கிழக்கே திரும்பினால் இருப்பதுதான் சர்வமானிய அக்கிரகாரம். பணக்காரப் பார்ப்பன மிராசுதாரர்கள் வசிக்கும் தெரு அதுதான். தெருவின் இருபுறத்திலும் செடிகளும் கொடிகளும் மரங்களும் ஓங்கி வளர்ந்து கோடையிலே நல்ல நிழல் தருகின்றன. பெரிய பெரிய வீடுகளாக முப்பது முப்பத்தைந்து வீடுகள் இருக்கின்றன சர்வமானிய அக்கிரகாரத்திலே. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் பரந்த ஆலோடியும் ஒரு சிறு தோட்டமும் இருக்கின்றன. சாத்தனூர்க் கிராமத்திலே உள்ள மாடி வீடுகள் மூன்றும் இந்தத் தெருவிலேதான் இருக்கின்றன.

     சின்ன அக்கிரகாரம் தாண்டித் தெற்கே திரும்புவதற்குப் பதிலாக வடக்கே திரும்பினால் உள்ளதுதான் பிள்ளைமார் தெரு. பணக்கார மிராசுதாரர்கள் பலர் வசிக்கிறார்கள் அந்தத் தெருவிலே. சற்றுக் குறுகலான தெரு. இரு புறமும் மரங்கள் வளர்ந்திருப்பதால் கோடையிலேகூட அந்தத் தெருவிலே வெளிச்சம் அதிகம் இராது. நீளமான தெரு. நூறு நூற்றிருபது வீடுகளுக்கு அதிலே இடம் இருக்கிறது. ஆனால் உள்ளது சுமார் நாற்பது ஐம்பது வீடுகள்தாம். நடுநடுவே பெரிய பெரிய வீடுகள் இருந்த இடங்களில் வெறும் குட்டைச் சுவர்கள் மட்டுமே காணப்படுகின்றன.

     அந்தப் பிள்ளைமார் தெருவின் ஒரு மத்தியிலிருந்து பிரிந்து வளைந்து வளைந்து சர்வ கோணலாகக் கிழக்கு நோக்கி ஓடும் தெருதான் மேட்டுத்தெரு. அதிலே வீடுகளும் குச்சுகளும் மாறி மாறிக் காட்சி அளிக்கின்றன. சில இடங்களில் அது ரத வீதி போல அகலமாக இருக்கிறது. சில இடங்களில் இரண்டு ஆள்கூடப் போக முடியாத சந்தாக இருக்கிறது. சில வளைவுகளில் தெரு கிழக்கு மேற்காகவும், சில வளைவுகளில் நேர் தெற்கு வடக்காகவுங்கூட இருக்கிறது. அதிலே வீடுகளோ குச்சுகளோ அதிகம் இல்லை. பாழ் மனைகளும் பாழ் மனைகளில் வசிக்கும் ஜந்துக்களுமே அதிகம். மேட்டுத்தெரு என்று அதற்கு யார் எதற்காகத்தான் பெயர் வைத்தார்களோ ஒருவருக்கும் தெரியாது. மழை நாட்களில் மேட்டுத்தெரு மத்தியில் ஒரே குளமாக இருக்கும். வெள்ளம் வந்தால் ஆறாகவே ஓடும். பிள்ளைமார் தெருக் கழிவு நீரெல்லாம் வடிவது மேட்டுத்தெரு வழியாகத்தான்.

     மேட்டுத்தெருவின் கீழண்டைக் கோடியில் தெற்கு வடக்காக ஓடும் தெரு ஒரு காலத்தில் சேணியர்கள் வசிக்கும் தெருவாக இருந்தது. சோமுவின் குழந்தைப் பருவத்திலேகூட அந்தத் தெருவிலே சேணியர்கள் அதிகம் இல்லை. பத்துப் பன்னிரண்டு முஸ்லீம்கள் சேணியர் தெருவிலே வீடுகள் வாங்கிக் கொண்டு குடியேறி யிருக்கிறார்கள். சாத்தனூர் முஸ்லீம்களில் அநேகமாக எல்லோருமே கொடிக்கால்களில் வேலை செய்பவர்களே. தினம் வெற்றிலைக் கிள்ளி சுற்றுவட்டக் கிராமங்களிலும் கும்பகோணத்திலும் விற்கிறார்கள். சாத்தனூர் வெற்றிலை நன்றாக இருக்கும். நல்ல கிராக்கி உண்டு. அதற்கு இந்தக் கொடிக்கால் முஸ்லிம்களின் கையிலே பணம் ஏறிக் கொண்டிருக்கிறது என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இவர்களில் ஒன்றிரண்டு பேர்வழிகள் பிள்ளைமார்தெருப் பிள்ளைமார் களுக்குச் சமானமாகப் பெட்டி வண்டி போட்டுக்கொண்டு தினம் கும்பகோணம் போய் வருகிறார்கள். ஆனால் சாத்தனூர் ஜன சமூகத்திலே இந்த முஸ்லீம்களுக்கு இன்னும் இடம் ஏற்படவில்லை. யாரும் அவர்களை அங்கீகரிப்பதில்லை. மேட்டுத் தெருவைச் சேர்ந்தவன்தான் சோமு. அவன்கூடத் தன் வயசு முஸ்லீம் சிறுவர்களுடன் சேரக்கூடாது என்று வள்ளியம்மை உத்தர விட்டிருக்கிறாள். அவள் தடை விதித்திருந்ததற்காக ஒன்றும் சோமு பயந்துவிட வில்லை. மொட்டையடித்துக் கொண்டு தலையில் குல்லாய் தரித்திருந்த அந்தச் சிறுவர்களுடன் நெருங்கிப் பழக அவன் விரும்பினான். ஆனால் முஸ்லீம் சிறுவர்கள் அவனை நெருங்க விடுவதில்லை. அவர்களும் ஒதுங்கியே நின்றார்கள்.

     சேணியர் தெருவோடு வடக்கே சென்றால் கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் ராஜபாட்டையில் கொண்டு போய்விடும். ராஜபாட்டை ஓர் அகன்ற சாலை, மண்ரஸ்தா. சோமு சிறுவனாக இருந்த காலத்தில் அதற்கு இன்னும் கப்பிக்கல் என்கிற சிறந்த நாகரீகம் வந்தபாடில்லை. ரஸ்தா நெடுக மாமரங்களும், ஆல மரங்களும், ஓங்கி வளர்ந்து இன்பமான நிழலைத் தருகின்றன. அந்த ரஸ்தாவிலே வீடுகள் அதிகம் இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த பத்துப் பன்னிரண்டு வீடுகளிலும் பரியாரிகளும், வண்ணார்களும், ஏழை முஸ்லீம்களும் வசித்து வந்தார்கள். கடைத் தெருவுக்குத் தெற்கே நீளக் கிழக்கு மேற்காக ஓடி விடுகிறது ராஜபாட்டை.

     ராஜபாட்டைக்கு அப்பால், வடக்கேயும் நாலைந்து தெருக்கள் இருக்கின்றன. அவற்றில் வசிப்பவர்கள் பெரும்பாலும் நிலத்தில் வருஷம் பூராவும் பாடுபடும் ஏழைக் குடியானவர்கள். அந்தத் தெருவுக்கு அப்பால் இருப்பது செக்குமேடு. அதற்கும் அப்பால் மாரியம்மன் கோயில் இருக்கிறது. அதற்கும் வடக்கே தூரத்தில் தென்னந்தோப்புக்கு இடையே தெரிவதுதான் பறைச் சேரி.

     ராஜபாட்டை கிழக்கே சாத்தனூர் எல்லைக்குள் பிரவேசிக்கும் இடத்தில் இருப்பது ஊர்ப் பொதுச் சுடுகாடு. அதை ஒட்டியே காவேரி யாற்றின் ஓரமாக உள்ளது பிராம்மணர்கள் சுடுகாடு. ராஜபாட்டையிலே சுடுகாட்டுக்கு அடுத்தாற் போலுள்ள சேரி குறச்சேரி.

     மேற்கே சாத்தனூர் எல்லையை விட்டு ராஜபாட்டை பிரியும் இடத்தில் உள்ளது கவனிப்பாரற்றுப் பாழடைந்து போய் விட்ட பெருமாள் கோயில்.

     பல தெருக்களிலிருந்து சிறுசிறு சந்துகள் குறுக்கும் நெடுக்கும் ஓடுகின்றன. இந்தச் சந்துகளிலும் அங்கங்கே வீடுகள் இருக்கின்றன. அவற்றிலும் மனிதர்கள்தாம் வசிக்கிறார்கள்.

     காவேரி ஆறுதான் சாத்தனூருக்குத் தெற்கு எல்லை. மற்ற மூன்று பக்கங்களிலும் கண்ணுக்கு எட்டிய வரையில் நெல் வயல்கள் தாம் தென்படுகின்றன.

     ஆறேழு வயசாவதற்குள்ளாகவே சோமு இத்தனை தெருக்களிலும் ஒரு தெரு விடாமல் ஆயிரந் தடவையாவது புகுந்து புகுந்து புறப்பட்டிருப்பான். தன் வயசுக்கு ஒத்த நண்பர்களுடனும், தனியாகவும், வயசை மீறிய சிந்தனைகளுடனும் அவன் சாத்தனூர் எல்லைக்குள் எங்கும் திரிந்து அலைவான். கால் வலிக்க வலிக்க மாற்றிக் கொண்டு வாய்க்குள் விரலைத் திணித்துக் கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவனாக ஒவ்வோர் இடத்திலும் வெகு நேரம் நிற்பான். வேறு ஓரிடத்தில் ஏதோ வேலை இருப்பதுபோலக் கிளம்புவான். வேறு எங்கேயாவது போய்ப் பார்த்துக்கொண்டே நிற்பான். அவன் மனசிலே என்ன சிந்தனைகள் எவ்வளவு வேகத்துடன் ஊசலாடின என்பது யாருக்குத் தெரியும்?

     வண்ணான் துணி துவைத்துக்கொண்டிருந்தால், அங்கே நின்று கவனிப்பான் சோமு. வண்ணானுக்கு வேட்டி துவைத்துத் துவைத்து அலுத்துச் சலித்துவிடும். வெற்றிலை போடுகிற சாக்காக ஓய்வு எடுத்துக்கொள்ள உட்கார்ந்து விடுவான். பையன் அலுக்காமல் சலிக்காமல் பார்த்துக்கொண்டே நிற்பான். அப்படிப் பார்ப்பதற்கு என்னதான் இருக்கிறதோ?

     ராஜ பாட்டையிலே எத்தனை தினுசான வண்டிகள் போகின்றன என்று அதிகாலையிலிருந்து இருட்டும் வரையில் நின்று பார்ப்பான்.

     கடைத் தெருவிலே நடக்கும் வியாபாரத்தை எல்லாம் பார்ப்பான். வாங்குவோரையும் விற்போரையும் கூர்மையான கண்கொண்டு பார்ப்பான். பேரம் நடப்பதை எல்லாம் கவனித்து வைத்துக் கொள்வான்.

     வயல் பக்கம் போய்விட்டாலோ கேட்க வேண்டியதே இல்லை. அங்கே வருஷத்தில் முந்நூற்று அறுபத்தைந்தே கால் நாட்களிலும் ஏதாவது வேலை நடந்து கொண்டே இருக்கும். அது எந்த மாசம் என்பதற்கு ஏற்றபடி குடியானவர்களும் பண்ணையாட்களும் ஏதாவது செய்து கொண்டேதான் இருப்பார்கள். உழவர்கள் விதை விதைப்பார்கள், நாற்று நடுவார்கள், களை பிடுங்குவார்கள், நீர் பாய்ச்சுவார்கள், அறுவடை செய்வார்கள், தாள் அடிப்பார்கள், போர் போடுவார்கள். எது நடந்தாலும் சோமுவுக்குச் சுவாரசியமாகவேதான் இருக்கும். எல்லாவற்றையும் முழுச் சிரத்தையுடனும் கவனித்து வைத்துக் கொள்வான் அவன்.

     கொடிக்கால்களின் பக்கம் போனாலோ.... அங்கே அந்த முஸ்லீம்கள் தாம் எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருப்பார்கள்! மாலை வேளையில் பெட்டி வண்டி கட்டிக் கொண்டு ‘ஜாம் ஜாமெ’ன்று கும்பகோணம் போய் வருகிற முதலாளி கூட வேலை செய்துகொண்டிருப்பார்! மற்ற இடங்களுக்குச் சோமு போனால் யாராவது அவனைப் பார்த்துப் ‘போடா அந்தண்டே!’ என்று ஒரு வார்த்தையாவது சொல்வார்கள், தங்கள் கை வேலையைச் சற்றே நிறுத்திவிட்டு. ஆனால் கொடிக்காலில் வேலை செய்கிற அந்த முஸ்லீம்கள் மட்டும் அவனைக் கவனிக்கவே மாட்டார்கள். அவர்கள் தங்கள் வேலையிலே ஆழ்ந்திருப்பார்கள். சோமுவைத் திரும்பியும் பார்க்க மாட்டார்கள். தண்ணீர் இறைத்துக் கொண்டிருப்பார்கள் அல்லது வெற்றிலை கிள்ளி அடுக்கிக் கொண்டிருப்பார்கள். உண்மையிலேயே வெற்றிலை கிள்ளி அடுக்குவது பெரிய கலைதான்! பார்த்திருந்தால்தான் தெரியும் அது.

     கொல்லன் பட்டறை இருந்தது ஊரிலே!

     தொம்பங் கூத்தாடிகள் பலர் வந்து கொட்டி முழக்கிக் கூத்தெல்லாம் ஆடிவிட்டுப் போவார்கள்.

     கோயிலிலே உத்ஸவங்கள் தவறாமல் உரிய காலத்தில் நடந்து வந்தன!

     பல இரவுகளில் தெருக்கூத்துக்கள் நடக்கும்!

     குறச் சேரியை ஒட்டியிருந்த திரௌபதி அம்மன் கோயிலிலே பல இரவுகள் திரௌபதி கதை சொல்வார்கள்!

     குறவர்கள் மூங்கில் வெட்டிச் சிம்பு சீவித் தட்டி கட்டுவார்கள்! அற்புதமான காட்சி அது!

     இன்னும் எத்தனை எத்தனையோ!

     இத்தனையும் அலுத்துப் போனால் காவேரி ஆறு இருந்தது; சிரத்தை வற்றாத சமுத்திரம் அது, இன்ப சமுத்திரம்! அதைப் பார்த்துக் கொண்டே யுகம் யுகமாகக் காலம் தள்ளலாமே!


புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247