உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
முதற்பகுதி : உதயம்
அத்தியாயம் 14. பலா பலன்கள் பிரக்ஞையற்றுக் கீழே விழப்போகிற சமயத்தில் சோமுவுக்கு "வெற்றி பெற்றுவிட்டோம்' என்கிற திருப்தி ஏற்பட்டு விட்டது. அந்த வெற்றியின் சின்னமாகத்தான் மாஜிஸ்டிரேட்டினுடைய குரல், “ஆபத்து உள்ளே மட்டும் அல்ல; வெளியேயும், நாலு பக்கமும் சூழ்ந்திருக்கிறது” என்று பிச்சாண்டிக்கு அறிவித்தது. கொள்ளைக் கூட்டத்தாரில் அன்று சர்வமானிய அக்கிரகாரத்துக்கு வந்திருந்தவர்கள் இருபத்தொன்பது பேரும் ஒருவர் பாக்கியில்லாமல் சிக்கிக்கொண்டு விட்டார்கள்; பிச்சாண்டியும் உள்படத்தான். போலீஸ்காரர்களிலே மூவருக்குப் பலத்த காயம். போலீஸ்காரர்களுக்கு உதவி செய்ய முன்வந்திருந்த குடியானவர்களில் ஏழெட்டுப் பேருக்கு லேசான காயம். அது தவிர வேறு எவ்வித நஷ்டமும் ஏற்படவில்லை. சில சாமான்கள், முக்கியமாக வெள்ளிப் பாத்திரங்களும், பித்தளைப் பாத்திரங்களும், சாக்கிலே போட்டுக் கட்டப்பட்டதாலும் கீழே விழுந்து நசுங்கியதாலும் புது மெருகை இழந்திருந்தன; அவ்வளவு தான். சோமுவுக்கு விழுந்த அடி உண்மையிலேயே பலமான அடிதான். தான் இசைகேடாக மாட்டிக் கொண்டதன் காரணம் முழுவதையும் அறியாவிட்டாலும் தன் தோல்வியில் முக்கியமாகப் பங்கெடுத்துக் கொண்டவன் சோமுதான் என்பதை ஊகித்தறிந்தவன் போலப் பிச்சாண்டி, பையன் பிரக்ஞை இழந்து கீழே விழுந்த பிறகுகூட அவனை உதைத்து அடித்திருக்கிறான். சோமு அவ்வளவு அடிகளையும் உதைகளையும் தின்றும் உயிர் வைத்திருந்ததே பெரிசு என்றுதான் சொல்லவேண்டும். மறுநாள் ரங்க ராவ் கும்பகோணத்திலிருந்து, ‘இங்கிலீஷ்’ டாக்டரை வரவழைத்துக் காட்டினார். “சரியாகப் பார்த்துக் கொண்டால் பையன் பிழைத்துக்கொள்வான்” என்றார் டாக்டர். சோமுவின் உடம்பிலே அநேகமாக எல்லா இடங்களிலுமே மருந்து போட்டுக் கட்டிவிட்டுப் போனார். தினம் காலையிலும் மாலையிலும் வண்டி அனுப்பி டாக்டரை வரவழைத்து மருந்து போட்டுக் கட்டச் சொல்லி ஏற்பாடு செய்தார் ரங்க ராவ். இவ்வளவும் ஆன பிறகு சோமுவுக்குச் செய்ய வேண்டியதை எல்லாம் செய்யாமல் விட்டுவிடுவார்களா? கங்காவும் சோனிபாயும் போட்டி போட்டுக்கொண்டு, தங்கள் வீட்டுப் பிள்ளையே போல, அவனைப் பார்த்துக் கொண்டார்கள். உடம்பு தேறிச் சோமு நடமாட ஒரு வாரம் பிடிக்கும் போலத்தான் இருந்தது. ஆனால் இடையில் கல்யாண முகூர்த்தம் நெருங்கிக் கொண்டிருந்தது. என்ன செய்வது என்றறியாமல் தவியாகத் தவித்தார் ரங்க ராவ். தன் உயிரையும் கொடுத்துக் கொள்ளைக்காரர்களால் தங்களுக்கு ஏற்பட இருந்த நஷ்டத்தையும் அவமானத்தையும் போக்கிக் காப்பாற்றிய சிறுவன் உயிருக்குத் தவித்துப் படுக்கையோடு படுக்கையாகக் கிடக்கையில் கல்யாண மகோத்ஸவத்திலே தம் மனசு செல்வது மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று அவர் எண்ணினார். இரண்டு நாட்கள் கழித்து வந்த சாம்பமூர்த்தி ராயரும் அவர் தாயாரும் விஷயம் பூராவையும் கேள்விப்பட்ட பின் ரங்க ராவ் எண்ணியது சரிதான் என்று அபிப்பிராயப்பட்டார்கள். சோனிபாய்க்கும் கங்காவுக்கும், அவர்களும் இதே அபிப்பிராயம் சொல்லியது வெகு திருப்தியாக இருந்தது. அடுத்த வாரத்திலே வேறு ஒரு முகூர்த்தம் உகந்ததாக இருந்தது. அந்த முகூர்த்தத்திலே கல்யாணத்தை நடத்தலாம்; அதற்குள் சோமுவும் எழுந்து நடமாடத் தொடங்கி விடுவான் என்று எல்லோரும் ஏகமனதாகத் தீர்மானித்தார்கள். அப்படியே ஏற்பாடும் செய்தார்கள். கல்யாணத்துக்காக ஏற்பாடாகியிருந்த சாமான்களில் சில வீணாகத்தான் போயின ஆனால் சொல்பந்தான். அதற்காகக் கவலைப்பட்டுக் கட்டுமா? போனால் போகிறதே. அவர்கள் எல்லோரும் எதிர்பார்த்ததைவிட அதிசீக்கிரமே சோமு குணமடைந்துவிட்டான். ரங்க ராவும் அவர் வீட்டாரும் தன்னைக் குணப்படுத்துவதற்காகப் பட்டிருந்த கஷ்டங்களையும், தனக்காகக் கல்யாணமே ஒத்தி வைக்கப்பட்டிருந்தது என்பதையும் அறிந்து அவன் கண்ணீர் பெருக்கினான். சாத்தனூர்பூராவிலுமே, ஏன் கும்பகோணத்திலுங்கூடப் பலநாட்கள் இதேதான் பேச்சாக இருந்தது. பதினொரு வயசு நிரம்பாத ஒரு சிறு பையன், பிச்சாண்டியை தன் பெயரைக்கேட்டே நாலு ஜில்லாக்கள் நடுங்கும்படி செய்திருந்த கொள்ளைக் கூட்டத் தலைவன் பிச்சாண்டியை எதிர்த்துத் தப்பி ஓடி, உதவி அழைத்து வந்து, யுத்தி செய்து, பிடித்துக் கொடுத்து விட்டான் என்பதே பேச்சாக இருந்தது. அந்தப் பையன் பெரியவனானபின் என்ன என்ன செய்வானோ என்று ஆச்சரியப்பட்டார்கள் ஜனங்கள். திருடர்கள் வந்து பிடிபட்டதற்கு மறுநாள் காலையில்தான் வள்ளியம்மைக்கு விஷயம் தெரியும். பிள்ளை அடிபட்டுக் கிடப்பதைக் கண்டு அவள் பதைத்துப்போனாள். ‘பிழைப்பானோ மாட்டானோ என் ஒரே மகன்’ என்று அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு செய்ய வேண்டியதைச் செய்ய முற்பட்டாள். “உங்களுக்குச் சிரமம் எதுக்குங்க? அதுவும் கல்யாண சமயத்திலே... என் வூட்டுக்குத் தூக்கிக்கிட்டுப் போறேனுங்க...” என்றாள் வள்ளியம்மை ரங்க ராவிடம். ரங்க ராவ் நடந்ததை எல்லாம் விஸ்தாரமாக அவளிடம் சொன்னார். தாமும் தம் பெண்டாட்டியும் பெண்ணும் அவனுக்கு எவ்வளவு கடமைப்பட்டிருந்தார்கள் என்றும் சொன்னார். வள்ளியம்மைக்குப் பயம் ஒரு புறம் இருக்கப், பெருமையும் ஒரு புறம் பிய்த்துக்கொண்டு போயிற்று. ஊரிலே கறுப்ப முதலி செய்திருந்த பாபங்களுக்கெல்லாம் தன் மகன் இந்த ஒரே காரியத்தால் பிராயச்சித்தம் செய்துவிட்டான் என்கிற எண்ணம் உண்டாயிற்று வள்ளியம்மைக்கு. இனிமேல் தங்களைப் பற்றி ஊரார் இளப்பமாகப் பேசமாட்டார்கள் என்று எண்ணி ஆனந்தித்தாள். அவள் கண்கள் நிறைந்தன! “சின்னப்பயசாமி, என் பிள்ளை! ஒண்ணும் அறியாப் பயல்!” என்றாள். “இனிமேல் என் பிள்ளைமாதிரி அவன்!” என்றார் ரங்க ராவ். அப்பொழுதுதான் கிணற்றடியில் ஸ்நானம் செய்துவிட்டு ஈரப்புடைவையுடன் கூடத்துக்கு வந்த சோனியாய், ‘சூத்திர’ ஸ்திரீயைத் தீண்டிவிட்டால் மீண்டும் ஸ்நானம் செய்ய வேண்டுமே என்பதைக்கூட மறந்துவிட்டு, வள்ளியம்மையைக் கட்டிக்கொண்டு ‘ஹோ’வென்று அலறத் தொடங்கிவிட்டாள். சோமுவுக்கும் வள்ளியம்மைக்கும் தங்களால் ஆனது எது வேண்டுமானாலும் செய்யத் தாம் தயாராக இருப்பதாகச் சொன்னார் ரங்க ராவ். கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வள்ளியம்மை, “உங்க புண்ணியத்திலே உங்க நிழலிலே வளர்ந்து பெரியவன் ஆனால் என் பிள்ளை புழைச்சுக்குவான்” என்றாள். ‘செய்யவேண்டிய எல்லாவற்றையும் அவர்கள் நன்கு கவனித்துக் கொள்வார்கள். அப்பொழுதோ, பின்னரோ தான் செய்ய வேண்டியது இனி ஒன்றும் கிடையாது’ என்று நிம்மதி பிறந்தது வள்ளியம்மைக்கு. கறுப்பன்போன நாள் முதலாக அன்று வரையில் அவள் பட்டிருந்த அவஸ்தை எல்லாம் இந்த நிம்மதியை வேண்டித்தானே? அவளுடைய வாழ்க்கை லக்ஷ்யம் நிறைவேறிவிட்டது. சோமுவுக்கு உடம்பு தேறி மற்ற விஷயங்களைப் பற்றி ஞாபகம் வர ஆரம்பித்தவுடனே முதல் விஷயமாக அவன் குதிரைக்காரச் சிதம்பரத்தைப் பற்றித்தான் விசாரித்தான். கொள்ளைக்காரர்கள் பிடிபட்டதற்கு மறுநாள் முதலே சிதம்பரத்தைக் காணவில்லை என்றும், பயந்து எங்கேயோ ஓடி விட்டான் என்றும் தெரிவித்தார் ரங்க ராவ். கொள்ளைக் கூட்டத்துக்கு உளவாளியாக இருந்தது உண்மையே என்றாலும், அவன் இல்லாவிட்டால் தான் குதிரைச் சவாரி செய்யக்கற்றுக் கொண்டிருக்க முடியாது என்றும், குதிரைச் சவாரி செய்யக் கற்றுக் கொண்டிராவிட்டால் அவ்வளவு சீக்கிரம் கும்பகோணம் போய் உதவி அழைத்து வந்திருக்க முடியாது என்றும், அப்படிச் சீக்கிரம் வராமல் போயிருந்தால் என்ன ஆயிருக்குமோ என்றும் பீடிகை போட்டான் சோமு. “இன்னும் அரை நாழிகை கழித்து வந்திருந்தாயானால் என்ன ஆயிருக்கும் தெரியுமா? எல்லாம் போயிருக்கும்! சுறண்ட வேண்டியதை எல்லாம் சுறண்டிக்கொண்டு போயிருப்பான் பிச்சாண்டி” என்றார் ரங்க ராவ். சோமு, “எனக்காக அந்தச் சிதம்பரத்தை விட்டுவிடுங்கோ ஒண்ணும் பண்ணவேண்டாம் எங்கேயாவது தொலையட்டும். அவனாகப் படுகுழியிலே விழுந்து பாழாகட்டும்!” என்றான். “அவனைப்பற்றி நான் இதுவரையில் போலீஸ்காரர்களிடம் பிரஸ்தாபிக்கவே இல்லை. எப்படியாவது அவன் தொலையட்டும் என்றுதான் விட்டுவிட்டேன்” என்றார் ரங்க ராவ். ஒரு வினாடி யோசித்துவிட்டு ரங்க ராவ் மேலும் சொன்னார். “இது என்ன அல்ப விஷயம். உனக்கு எது வேணுமானாலும் கேள் செய்கிறேன்” என்று. சோமுப்பயலுக்கு உள்ளூற எவ்வளவோ ஆசைகள் குமுறிக் கொண்டிருந்தன. ஆனால் இதுவேண்டும் என்று கேட்கலாமா, அதுவேண்டும் என்று கேட்கலாமா என்று அவன் தயங்கவில்லை. இந்தக் கேள்வி கேட்டால் இதுதான் பதில் சொல்வது என்று தீர்மானித்து வைத்திருந்தவன் போல முன் ஒரு தரம் சற்றும் தயங்காமல், ‘சாயவேட்டி’ என்று இதே கேள்விக்குப் பதில் சொன்னதுபோல இப்பொழுதும் பதில் அளித்தான். “எனக்கு எழுதப் படிக்கச் சொல்லித்தரச் சொன்னீங்கன்னா...” என்றான் சோமு. இந்த மாதிரியான பதிலை எதிர்பார்க்கவில்லை ரங்க ராவ். ‘சாத்தனூர் மேட்டுத்தெருவிலே, கறுப்பன், கறுப்பன் என்று ஊரெல்லாம் கரித்த ஒரு போக்கிரிக்கும், வள்ளியம்மையா, காளியம்மையா என்று ஊரெல்லாம் பயந்து ஒதுங்கிய ஒரு சிறுக்கிக்கும் பிறந்த இந்தப் பயலுக்குத்தான் மனசிலே என்ன என்ன ஆசைகளடா ஒளிந்து கிடக்கின்றன’ என்று ஆச்சரியப்பட்டார் அவர். ‘எழுதப் படிக்கவன்றோ ஆசைப்பட்டான் அவன்! ஆகா! மனித உள்ளத்தின் தரங்கள், தன்மைகள் எத்தன்மையன என்று யார்தாம் முடிவுகண்டு சொல்லிவிட முடியும்? இந்தப் பயல் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறானே!’ தன்னையும் மீறியே ரங்க ராவ் “பலே” என்றார். பிறகு மீண்டும், “கங்காவின் கல்யாணமெல்லாம் ஆனபிறகு நல்ல நாள் பார்த்துச் சுப்பிரமணிய ஐயரைவிட்டு உனக்கு எழுதப்படிக்கச் சொல்லித்தரச் சொல்லுகிறேன்” என்றார். சற்றுப் பணிவாகத் தயக்கத்துடன் சோமு, “இன்னொன்று கூட...” என்று ஆரம்பித்தான். “நீ எது கேட்டாலும் நடக்கும். தைரியமாகச் சொல்லுடா!” என்றார் ரங்க ராவ். மேட்டுத்தெருக் கறுப்பமுதலியின் மகனாகப் பிறந்து விட்டவனுக்கா துணிச்சலில்லாது போய்விடும்! சோமு, “நம்ப கங்கா அம்மா கல்யாணத்திலே மாப்பிள்ளை அழைக்கறபோது குதிரைமேலே வச்சுத்தானே அழைச்சு வருவாங்களாம்! நான் கும்பகோணத்துக்குச் சவாரி செய்துவந்த அந்த வெள்ளைக் குதிரைமேலே மாப்பிள்ளை அழைக்கணும். மாப்பிள்ளையோட அந்தக் குதிரையை நான் கடிவாளம் பிடிச்சு அழைக்க வரணும்!” என்றான். சோமுவினுடைய கடைசி வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்த கங்கா மாப்பிள்ளையைப் பற்றிப் பேச்சு ஏதோ நடந்து கொண்டிருப்பதை அறிந்ததும் திரும்பிவிட முயன்றாள், வெட்கப் பட்டுக்கொண்டு. ஆனால் ரங்க ராவ் அவளைக் கூப்பிட்டுச் சிரித்துக் கொண்டே, “பார்த்தியா கங்கா! நம்ப சோமுப்பயல் ஆசையைப் பார்த்தியா!” என்று சோமுவின் விருப்பத்தை அவளிடம் சொன்னார். கங்கா தலை குனிந்தபடியே பதில் எதுவும் சொல்லாமல் நின்றாள். ரங்க ராவ் சோமுவிடம், “சோமு, உன் இஷ்டப்படியே ஆகட்டுமடா! சீக்கிரம் நீ எழுந்து நடமாட ஆரம்பித்துவிடு” என்றார். கொள்ளைக்காரர்கள் பிடிபட்டதற்கு ஆறாம் நாள் சோமு நொண்டிக் கொண்டே நடமாட ஆரம்பித்தான். எழுந்தவுடன் முதல் காரியமாக அவன் குதிரை லாயத்துப் பக்கந்தான் போனான். தன்னை அன்றிரவு சுமந்து சென்ற குதிரையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு வெகுநேரம் சிந்தனையில் ஆழ்ந்தவனாக நின்றான். |