உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
முதற்பகுதி : உதயம்
அத்தியாயம் 11. கல்யாண ஏற்பாடுகள் சோமு வேலைக்கு அமர்ந்து பத்துப் பதினைந்து நாட்களுக் கெல்லாம் ரங்க ராவினுடைய மைத்துனர் பிள்ளை சாம்பமூர்த்தியும் அவனுடைய விதவைத் தாயாரும் வந்தார்கள். வந்து சாத்தனூரிலே நாலைந்து நாட்கள் தங்கினார்கள். இந்த நாலைந்து நாட்களில் சோனிபாயும் சாம்பமூர்த்தியின் தாயாருமாகப் பேசிப் பேசிக் கங்காவுக்கும் சாம்பமூர்த்திக்கும் கல்யாணம் செய்துவிடுவது என்று நிச்சயித்துப் பிறகு ரங்கராவுக்கும் தெரிவித்தார்கள். இதிலே சம்பந்தப்படாதவர்கள் போலத் தனித்து ஒதுங்கி நிற்க முயன்றார்கள் சாம்பமூர்த்தியும் கங்காவும். ஒதுங்கி நிற்பதுபோலப் பாவனை செய்தார்கள். சாம்பமூர்த்தி தன் மாமாவைப் போல அவ்வளவு பணக்காரனல்ல. அவன் தகப்பனார் வைத்துவிட்டுப் போயிருந்த சொத்து, சொல்பந்தான். ஆனால் ரங்க ராவுக்கு கங்கா ஒரே பெண் ஒரே குழந்தை. அவருடைய ஆஸ்தி எல்லாம் அவருக்குப் பிறகு கங்காவுக்கும், அவள் மூலம் சாம்பமூர்த்தியையுந்தான் சேரும். பொருளைப்பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. சாம்பமூர்த்தி படித்தவன். அந்த வருஷந்தான் அவன் பி.ஏ. பரீøக்ஷ கொடுத்து முதல் வகுப்பில் நல்ல தரத்தில் தேறியிருந்தான். நல்ல பையன்; கொஞ்சம் சாதுதான்; தெய்வ பக்தியுள்ளவன். உருவத்திலும் குணத்திலும் தங்கள் மகள் கங்காவுக்கு மிகவும் ஏற்றவன் என்று சோனிபாயும் ரங்க ராவும் நினைத்தார்கள். இவ்வளவு நல்ல இடத்தில் தன் பிள்ளைக்குக் கல்யாணம் ஆகிறபோது சாம்பமூர்த்தியின் தாயாருக்கு என்ன ஆக்ஷேபம்? தவிரச் சாம்பமூர்த்திக்கும் இஷ்டந்தான். ஜாதகமும் பொருந்தியிருந்தது. கல்யாணத்திற்கு நாளும் பார்த்தாகிவிட்டது. ஆனி மாதத்தில் ஒரு சுபமுகூர்த்தத்தில் செய்வது என்று பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. பிறகு சாம்பமூர்த்தியும் அவன் தாயாரும் ஊருக்குத் திரும்பி விட்டார்கள். கல்யாணத்திற்குக் குறிப்பிட்டிருந்த நாளுக்கு இன்னம் ஒரு மாசமும் ஒரு வாரமும் இருந்தன. கல்யாணம் நிச்சயமான தினத்திலிருந்து கல்யாண ஏற்பாடுகள் வெகு விமரிசையாக, ‘ஜரூரா’கத் தொடங்கி விட்டன. நடு முற்றத்திலே உலை போட்டுக்கொண்டு மூன்று தட்டார்கள், நான்கு பையன்கள் உதவி செய்ய, தினம் அதிகாலையிலிருந்து இருட்டும் வரையில், சாப்பிடப்போகும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம், கை ஓயாமல் ‘லொட்டு லொட்டு’ என்று தட்டிக் கொண்டிருந்தார்கள் அல்லது வாய் ஓயாமல் தங்கத்தை உலையிலிட்டுப் ‘புஸ் புஸ்’ என்று ஊதிக் கொண்டிருந்தார்கள். கங்காவுக்காக நூற்றிருபது பவுன்கள் உருமாறுவதற்கு இருந்தன. தேவையான வெள்ளிப் பாத்திரங்களைக் கும்பகோணம் கடைத் தெருவிலே வாங்கிவிடலாம் என்று தீர்மானித்தார்கள். அப்படியும் சில சாமான்களை வெள்ளி வாங்கிக் கொடுத்துத் தனியாகச் செய்யச் சொல்வதே நல்லது என்று தீர்மானித்தார்கள். அதற்கும் தட்டார்களே ஏற்பாடு செய்தார்கள். இவர்களும் வீட்டிலே வந்து உட்கார்ந்துகொண்டு ‘லொட்டு லொட்டு’ என்று தட்ட ஆரம்பித் திருப்பார்களே யானால், தெருவில் இருந்தவர்களுக்கெல்லாம் பைத்தியம் பிடித்திருக்கும்; ஓயாத சப்தம் கேட்கும் என்று சோமு எண்ணினான். நல்ல வேளையாக இந்த வெள்ளித் தட்டார்கள் அவரவர்கள் வீட்டிலேயே வேலை செய்து சாமான்களை எடைபோட்டு ஒப்பித்துவிட்டுப் போனார்கள். முதலில் ரங்க ராயருடைய வீடு, பிறகு சர்வமானிய அக்கிரகாரம், பிறகு சாத்தனூர்க் கிராமம், அதற்கும் பிறகு கும்பகோணம் கடைத்தெரு என்று ஒன்றன்பின் ஒன்றாக ரங்க ராவினுடைய மகளின் கல்யாண ஏற்பாடுகளால் அமர்க்களப்பட்டன. பித்தளை வெள்ளிப் பாத்திரங்கள் வாங்கினார்கள் ஏராளமாக வாங்கினார்கள். பிறகு ஆயிரக் கணக்கானவர்கள் விருந்து சாப்பிடுவதற்குத் தேவையான மளிகைச் சாமான்கள் வாங்கிச் சேகரித்தார்கள். பால், தயிர், நெய் எல்லாவற்றிற்கும் முன் கூட்டியே சொல்ல வேண்டியவர்களிட மெல்லாம் சொல்லி வைத்தார்கள். கல்யாண தம்பதிகளுக்கென்று ஏராளமான விலையுயர்ந்த ஜவுளி தினுசுகள் வாங்கினார்கள். நெருங்கிய பந்துக்களுக்கென்று ஆடம்பரமான துணிமணிகள் வாங்கினார்கள். பிறகு தூர பந்துக்கள், ஏழைகளான உற்றார் உறவினர்கள் இவர்களுக்குச் சாதாரண வேட்டி, புடவை, ரவிக்கைகள் வாங்கி வைத்தார்கள். பிறகு, “அடாடா! விட்டுப்போய் விட்டதே!” என்று மீண்டும் போய் ஏராளமாகத் துணிமணிகள் வாங்கி வந்தார்கள். கடைசியாக வேலைக்காரர்கள், அண்டிப் பிழைப்பவர்கள், நம்பிப் பிழைப்பவர்கள் எல்லோருக்கும் அவரவர்களுக்கு ஏற்றபடி இன்ன இன்னது வாங்குவது என்று தீர்மானித்து வாங்கினார்கள். மேளகாரர்களைப் பேசி அச்சாரம் கொடுத்தார்கள். பாட்டுக் கச்சேரிகள் செய்வதற்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சதிர்க் கச்சேரிக்கும் ஏற்பாடாயிற்று. தேவையான மாலைகளுக்குச் சொல்லி அச்சாரம் கொடுத்தார்கள். சந்தனம், வெற்றிலை முதலியவற்றிற்கு ஏற்பாடு செய்தார்கள். எல்லாவற்றிற்கும் முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் சமயத்தில் தேவையான சாமான் தேவையான அளவு கிடைக்காது போய்விட்டால் என்ன செய்வது? இப்படியாகத் தினம் காலையிலும் மாலையிலும் இரண்டு வேளையும் ரங்க ராவ் பெட்டி வண்டியையோ கோச்சு வண்டியையோ ஓட்டிக் கொண்டு வரச்சொல்லிக் கும்பகோணத்துக்குக் கிளம்புவார். தினம் அவருடன் இரண்டு வேளைகளிலும் கும்பகோணம் போய்வரும் பாக்கியம் சோமுவுக்குக் கிடைத்தது. விடிய நாழிகைப் பொழுது இருக்கும்போதே எழுந்து குளித்துவிட்டுச் சோமு, ‘பளபள’வென்ற மேனியுடன் சாய வேட்டியை இழுத்து இடுப்பிலே வரிந்து கட்டிக்கொண்டு கும்பகோணத்துக்குக் கிளம்பத் தயார் ஆகிவிடுவான். அவன் தயாராக இருப்பதற்கும் ரங்க ராவ் விழித்து எழுந்திருப்பதற்கும் சரியாக இருக்கும். அவரும் ஸ்நானம், ஜபம் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு கையில் வெள்ளிப் பூண் போட்ட ஏரழஞ்சிக் கழியை எடுத்துக்கொண்டு கிளம்பத் தயாராவார். அவர் நெற்றியிலே கீற்றுச் சந்தனம் பளபளக்கும். கிளம்புகிற சமயத்திலே சோனிபாய் வெள்ளி டம்ளரில் தன் கையாலேயே காபி ஆற்றிக் கொண்டுவந்து கொடுப்பாள். அந்த நாளில் சாத்தனூரிலே காலை வேளையில் காபி சாப்பிட்டவர் ரங்க ராவ் ஒருவர்தாம். அவர் காபி சாப்பிடும் வழக்கத்தை வேறு எங்கேயோ கற்றுக்கொண்டு சாத்தனூருக்குக் கொண்டு வந்தார். காபி சாப்பிட்டானதும் கங்கா பணப் பெட்டியைத் திறந்து நிறைந்திருக்கும் ஒரு பணப் பையைக் கொண்டுவந்து தன் தகப்பனார் கையில் கொடுப்பாள். அதை வாங்கிச் சோமு கையில் கொடுப்பார் ரங்க ராவ். சோமு பணப் பையைக் கொண்டுபோய் வண்டியில் வைப்பான். ரங்க ராவ் அவனைத் தொடர்ந்து போய் வண்டியில் ஏறிக்கொள்வார். பெட்டி வண்டி கட்டியிருந்தால் சோமு வண்டி ஓட்டு கிறவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளுவான். கோச்சு வண்டியானால் பின்புறம் இருந்த படியிலே ஏறி இரண்டு புறங்களிலும் இருந்த இரண்டு பித்தளைப் பிடிகளையும் பிடித்துக் கொண்டு நிற்பான். எந்த வண்டியில் போனாலும் கும்பகோணம் கடைத்தெருவை அரை நாழிகைக்குள் அடைந்துவிடுவார்கள். இத்தனைக்கும் மாட்டையோ குதிரையையோ வண்டிக்காரன் அடித்து ஓட்டக்கூடாது. இரைந்து அதிகமாக அதட்டவும் கூடாது. வண்டிக்காரன் கை தவறியாவது குதிரையையோ மாட்டையோ அடித்து விட்டானானால் அவ்வளவு தான் அந்த ஆசாமியை மறுபடியும் வண்டி ஓட்ட அநுமதிக்க மாட்டார் ரங்க ராவ். அவருடைய மாடுகளும் குதிரைகளும் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவை. கொஞ்சங்கூட இடக்குப்பண்ணாமல் சிட்டாகப் பறக்கும். தெருவோடு போகிற வேறு வண்டிக்காரன் யாராவது தன் மாடுகளைச் சப்தம் போட்டு விரட்டிக் கொண்டிருந்தானானால் கூட ரங்க ராவுக்குக் கோபம் வரும். வண்டியை நிறுத்தி அந்த வண்டிக்காரனை, “அப்படி என்னடா அவசரம் உனக்கு?” என்பார். மாட்டை அடித்துக் கொண்டிருந்தானானால் தன் வண்டியை நிறுத்தி இறங்கி அந்த வண்டிக்காரனுக்குப் புத்தி சொல்லிவிட்டுத்தான் மேலே போவார். கும்பகோணம் கடைத்தெருவை அடைந்து வண்டி நின்றவுடன் சோமு இறங்கி வந்து வண்டிக் கதவைத் திறந்துவிடுவான். ராயர் இறங்குவார். பணப் பையை எடுத்துச் சோமுவின் கையில் கொடுப்பார். கைத்தடியை வலது கையில் பிடித்துக் கொண்டு கடைக்குள் போவார். நிறைந்திருக்கிற அந்தக் கனமான பணப் பையைத் தூக்கிக்கொண்டு அவரைப் பின்தொடர்வான் சோமு. கடைக்கார்களுக்கு ரங்க ராவைப் பற்றித் தெரியும். அவரை விசேஷமாகவே கவனிப்பார்கள். அவர் பேரமே செய்யமாட்டார். தமக்கு வேண்டியது, பிடித்திருந்தது எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு, “எல்லாம் எவ்வளவு ஆயிற்று?” என்பார். கடைக்காரன் சொன்னது தான். மறுபேச்சே பேசமாட்டார் ரங்க ராவ். சோமு கையிலிருந்து பணப் பையை வாங்கி, அதன் வாயைச் சுற்றிக் கட்டியிருக்கும் கயிற்றை அவிழ்த்துக் கடைக்காரன் கேட்டதை அப்படியே எண்ணிக் கொடுத்துவிடுவார். திறந்த பையை அப்படியே சோமுவிடம் கொடுப்பார். பையின் கனத்தில் கால்வாசி குறைந்திருக்கும். சோமு பையை மூடி அதன் கழுத்திலே கயிற்றை இறுகக்கட்டி வைத்துக்கொள்வான். ராயர் வாங்கிய சாமான்களை எல்லாம் கடைப் பையன்கள் கொண்டுபோய் வண்டியில் வைப்பார்கள். ரங்க ராவ் வேறு ஒரு கடையை நோக்கிப் போவார். கையில் பணப் பையுடன் தொடருவான் சோமு. வண்டி பின்னால் வந்து கொண்டிருக்கும். சில சமயங்களில் சாமான்கள் வாங்குவதற்குச் சோனிபாயும் கங்காவும் ரங்க ராவுடன் வருவார்கள். அவர்கள் வருகிற தினங்களில் வியாபாரம் இவ்வளவு சுலபமாக முடிந்துவிடாது. பணப் பையைத் தூக்கிக்கொண்டு நிற்கும் சோமுவுக்குக் கால்கள் கடுக்கும், கைகளும் கடுக்கும். இது வாங்கலாமா அது வாங்கலாமா என்று அவர்கள் முடிவு செய்வதற்கே இரண்டு நாழிகை நேரம் பிடிக்கும். வேண்டியதை எடுத்து வைத்துவிட்டு விலை கேட்டுப் பேரம் செய்யவும்ஆரம்பித்து விடுவார்கள். ‘கும்பகோணம் கடைத்தெருவையே ஐந்து ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம்’ என்று ஒரு காலத்தில் எண்ணியிருந்த சோமுப் பயலின் கண்கள் திறந்தன. ‘கை கடுக்கிற இந்தப் பையைப்போல இரண்டாயிரம் இருந்தாலும் போதாது’ என்கிற நினைவு ஏற்பட்டது அவனுக்கு. எங்கே சென்றாலும் ரங்க ராவுக்கு எல்லோருமே எவ்வளவு மரியாதை செலுத்தினார்கள் என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான் சோமு; பிறகு ஆனந்தப்பட்டான். அவருடைய பணப்பையைச் சுமந்து நின்ற தனக்கும் அந்த மரியாதையிலே ஒரு பகுதி உரித்தாயிற்று என்று எண்ணி ஆனந்தப்பட்டான். ரங்க ராவுக்குக் கிடைத்த மரியாதைக்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம். அவர் படித்தவர், சர்க்கார் காரியாலயத்தில் பெரிய பதவி வகித்தவர், அறிவாளி, குணசாலி, பெரிய மனுஷ்யர், உயர் குலத்தில் உதித்தவர் வேறு எவ்வளவோ காரணங்களும் இருக்கலாம். ஆனால் அதெல்லாவற்றையும் விடப் பெரிய காரணம், முக்கிய காரணம், அவரிடம் பணம் இருந்ததுதான் என்பதை அறிந்து கொள்ளச் சோமுவுக்கு அதிக காலம் பிடிக்கவில்லை. தான் தூக்கிக்கொண்டு வந்த அந்தப் பணப்பைதான் ரங்க ராவுக்கு உலகம் காட்டிய மரியாதையின் அளவுகோல் என்று சோமு சுலபமாகவே புரிந்துகொண்டான். பணப்பை என்கிற லக்ஷ்யம் அவன் உள்ளத்திலே உரம் பெற்றது. கும்பகோணத்திலே ரங்க ராவ் சாமான்கள் வாங்குவதற்கு மட்டும், கடைத்தெருவுக்கு மட்டுந்தான் போனார் என்பதில்லை. அவருக்குக் கணக்கற்ற நண்பர்கள் இருந்தார்கள். மேலக் காவேரிச் சர்வமானிய அக்கிரகாரத்தில் ஆரம்பித்துக் கும்பகோணத்துக் கீழண்டைக் கோடித் தெருவரையில் அவருடைய நண்பர்கள் பலர் வசித்து வந்தார்கள். ஊரிலே பெரிய மனுஷ்யர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் எல்லோரும் அவருக்குத் தெரிந்தவர்கள்தாம். சர்க்கார் உத்தியோகஸ்தர்களில் முக்கியமானவர்கள் எல்லோரையுமே அவருக்குத் தெரியும். சோமுவும் ரங்க ராவுடன் கும்பகோணத்தில் அவர் போன இடங்களுக் கெல்லாம் போனான். கும்பகோணத்துத் தெருக்களெல்லாம் சோமுவுக்குப் பரிசயமாயின. கும்பகோணத்துப் பெரிய மனிதர்கள் வீட்டு வாசல்களில் நின்று பழகினான். பெரிய மனிதர்கள் வீட்டு வேலைக்காரர்கள் பலருடன் பேசிப் பழகினான். பெரிய மனிதர்கள் என்று பெயர் பெற்றவர்கள் எந்த எந்தச் சந்தர்ப்பங்களில் எப்படி எப்படி நடந்து கொண்டார்கள், என்ன என்ன பேசினார்கள் என்பதை ஓரளவு கவனித்து அறிந்து கொண்டான். சோமு வாழ்க்கையிலே புதுப் புதுப் பாடங்களைக் கற்றுத் தெளிந்துகொண்டிருந்தான். இதற்கிடையிலே கங்காவின் கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தன. வீட்டிலிருந்த எண்ணற்ற பீரோக்களும் பெட்டிகளும் அலமாரிகளும் கொள்ளவில்லை அவ்வளவு புடவைகளும் வேட்டிகளும் வந்து குவிந்துவிட்டன கல்யாணத்திற்கென்று. அந்தப் புடைவைகளில் எவ்வளவு ரகங்கள் இருந்தன! விதவிதமான, இழைக்கு இழை ஜரிகை மின்னியவை, கண்ணைப் பறிக்கும் வர்ணச் சேர்க்கைகள் கூடியவை, கொறநாடு, ஆரணி என்று பல ஊர்ப் பெயர்கள் கொண்டவை இவ்வளவு புடைவைகள் உண்டா இவ்வுலகிலே என்று ஆச்சரியப் பட்டான் சோமு என்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. சோமன் ஜோடிகள் தாம் என்ன? எவ்வளவு அழகான முனைகள், பேட்டுகள் போட்ட வேட்டிகளைத் தேடிக் கொணர்ந்திருந்தார்கள்! ஒரு பெரிய அறை பூராவும் ஒன்றின்மேல் ஒன்றாக, உத்தரத்தை எட்டித் தொடும் வரையில் பித்தளைப் பாத்திரங்களாக அடுக்கி யிருந்தன. அடுத்த அறையிலே வெள்ளிப் பாத்திரங்கள் நிறைந்திருந்தன. பகலிலேகூட முன்னெல்லாம் இருட்டாக இருக்கும் அந்த அறையிலே இப்பொழுது ஒரு சிறு கை விளக்கை எடுத்துக் கொண்டுபோனால் போதும். ஆயிரம் இரண்டாயிரம் விளக்குகள் ஏற்றிவைத்ததுபோல் எங்கும் ஒளி வீசிற்று. சாப்பாட்டுச் சாமான்கள் சமையல் அறைக்குள் அடங்கா. எப்படி அடங்க முடியும்? சமையலுக்காகச் சத்திரம்போல இருந்த ஒரு பெரிய வீட்டை அதன் சொந்தக்காரரின் அநுமதியுடன் எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள்! கல்யாணச் சாப்பாடு போடச் சத்திரங்கள் போன்ற நாலு பெரிய வீடுகள் தயாராக இருந்தன. ஆனால் அவை போதுமா என்பது பின்னர்த் தான் தெரிய வேண்டும். சமையலுக்காக ஏற்பாடாகியிருந்த வீட்டிலே ஒன்பது சமையல்காரர்களை இரவு பகல் வேலை வாங்கிக் கொண்டிருந்தாள் சோனிபாய். சீர்வகைக்கு என்றும், விருந்துக்குப் பக்ஷணம் என்றும், வகைவகையான தின்பண்டங்கள் ஏராளமாகத் தயாராகிக் கொண்டிருந்தன. கல்யாணக் கடிதாசு அச்சிட்டு, அனுப்ப வேண்டியவர்கள் எல்லோருக்கும் அனுப்பியாகிவிட்டது. தினம் சாத்தனூர்த் தபாலாபீசிலிருந்து வழக்கமாக அரைவாசி கூட நிரம்பாத ஒரு சிறு பைதான் கிளம்பும். ஆனால் கங்காவின் கல்யாணக் கடிதாசுகள் தபாலில் சேர்ந்த அன்று இரண்டு பைகள் கிளம்பின. இவ்வளவு சுறுசுறுப்புக்கும் இடையே ஒன்றுமே செய்யாமல், செய்வதற்கு ஒன்றுமே இல்லாமல், கையைக் கட்டிக்கொண்டு, சும்மாக் கனவு கண்டுகொண்டு, உட்கார்ந்திருந்தாள் கங்கா. கல்யாணம் நெருங்கிக்கொண்டிருந்தது இன்னும் ஐந்தே நாட்கள்தாம் இருந்தன. |