பொய்த்தேவு
முன்னுரை

     திருவாசகத்தை - பாராயணம் என்று சொல்ல முடியாது - திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்த காலம் அது. திருவாசகத்திலுள்ள வரிகளில் எத்தனையோ மனசில் நின்றிருக்கலாம். மனசில் நின்றிருக்கலாகாதா என்று நானே நினைத்த சில வரிகள் மனசில் நிற்கவே இல்லை.

     ஆனால் இரண்டு வரிகள் என் அகக் காதில் விடாது ஒலித்துக் கொண்டிருந்தன:

     “அத்தேவர் தேவ ரவர்தேவர் என்றிங்ஙன்
     பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே.”

     இன்று மனிதனுக்குத் தெய்வம் ஓர் இன்றியமையாத சாதனமாகிவிட்டது. “நாத்தழும்” பெற நாத்திகம் பேசுகிறவனுக்குங் கூட, ஒரு கோணத்திலிருந்து பார்க்கும் போது, தெய்வம் அவசியமாகத்தான் தோன்றுகிறது.

     மனிதனுக்கு ஒரு தெய்வம் திருப்தி அளிப்பதில்லை. பல தெய்வங்கள் தேவையாக இருக்கின்றன. ஒவ்வொரு விநாடிக்கு ஒரு தெய்வம் தேவையாக இருக்கிறது என்று சொல்லுவது மிகை ஆகாது.

     இந்த விநாடியின் ஒரே தெய்வம் அடுத்த விநாடி பொய்த்து விடுகிறது; பொய்த்தேவாக ஆகிவிடுகிறது.

     மனிதனின் ஆசைகளுக்கு, கனவுகளுக்கு, லக்ஷ்யங்களுக்கு, உருவே பெறாத பல சிந்தனைகளுக்கு, தெய்வங்கள் என்று பெயர் தருவதே சரியான விஷயம் என்று எனக்குத் தோன்றியது.

     ஆனால் சோமு முதலியாரைப் போன்றவர்களே தங்கள் தெய்வங்களாக உள்ளவர்களும் நம்மிடையே இல்லாமல் இல்லை.

     சோமு முதலியாரும், மற்றும் இக்கதையில் வருகிற பேர்வழிகளும் வெறும் கற்பனைதான். தெரிந்த மனிதர்கள் யாரையும் வர்ணிக்க நான் முயலவில்லை!

     தமிழில் ஆசையும், தமிழ் இலக்கணம் என்று சொல்லப்படுவதில் அவநம்பிக்கையும் கொண்ட என்னுடைய இந்தப் புஸ்தகத்தில் காணப்படுகிற இலக்கண சுத்தங்களுக்கெல்லாம் கலைமகள் காரியாலத்தார் தாம் பொறுப்பு.

     இந்தப் புஸ்தகத்தை நான் எழுதத் தொடங்கிய காலத்தில், முணுக்கு முணுக்கென்று ஒரே விளக்கு அதிக வெளிச்சம் தராமல் எரியும் கார்ப்பக்கிருஹத்திலிருந்து கொண்டு, என் காரியங்களில் குறுக்கிடாமல், என் வீட்டு வாசலில் இருந்தபடியே கவனித்து வந்த,

சிதம்பரம்
செங்கழுநீர்ப் பிள்ளையாருக்கு
இப்புஸ்தகத்தைச் சமர்ப்பணம் செய்கிறேன்.


க.நா.சுப்ரமண்யம்

சிதம்பரம்
1946, விஜயதசமி