முதற்பகுதி : உதயம்
அத்தியாயம் 7. ஆசைகள்

     “ஐயோ பாவம்!” என்றார் மாடிப் பள்ளிக்கூடத்துச் சொந்தக் காரரும் தலைமை உபாத்தியாயருமான சுப்பிரமணிய ஐயர்.

     “ஐயோ பாவம்!” என்றாள் அவருடைய மனைவி ஜானகி யம்மாளும் அவருடன் சேர்ந்துகொண்டு.

     இருவரும் சோமுவையும் அவனுடைய நிலைமையையும் எண்ணி “ஐயோ பாவம்!” என்றார்கள்.

     ஆனால் அப்படி அவர்கள் இருவரும் சோமுவைப்பற்றி எண்ணிப் பரிதாபப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. மேட்டுத் தெருவிலேதான் பிறந்தான்; கறுப்ப முதலியின் மகனாகத்தான் வந்து அவதரித்தான்; வள்ளியம்மை என்கிற ராக்ஷசப் பெண்ணைத்தான் தாயாகப் பெற்றான். ஏழு எட்டு வருஷங்கள் இவ்வுலகில் வாழ்ந்து விட்டான்; ஆனால் அந்த வருஷங்களில் அவன் எள்ளளவு சுகபோகத்தையும் அறிந்து அநுபவித்தது இல்லைதான். கண்ட இடத்திலெல்லாம் கறுப்பன் மகன் என்று அவனைக் காறி உமிழ்ந்தார்கள். அகப்பட்டுக் கொண்ட இடத்திலெல்லாம் உதைத்துப் புடைத்தார்கள். காணவொட்டோ மென்று அவனைச் சாத்தனூர் வாசிகள் எல்லோருமே கரித்தார்கள்! நண்பர்கள் என்று ஆதரவு காட்ட யாருமே இல்லை. உலகிலே வாழ்க்கையிலே நம்பிக்கை பிறந்து விடும்படியாக அவன் எதையும் அறியவில்லை.

     இருந்தும் சோமு அதிருஷ்டசாலிதான் பாக்கியவான்தான் என்றே சொல்ல வேண்டும். அவன் கனவுகள் கண்டு கொண்டிருக்கிறான். இந்த மாயம் நிறைந்த உலகிலே பொய்யுலகிலே மனிதனுடைய கனவுகளைத் தவிர வேறு எந்த விஷயங்கள்தாம் உண்மையானவை என்று யார் நிச்சயமாக தெளிந்து சொல்ல முடியும்?

     கனவுகள், ஆசைகள், லக்ஷ்யங்கள் என்று இன்னும் உருப்பெறாத லக்ஷ்யங்கள் எல்லையற்றன, எண்ணிக்கையற்றன அவன் உள்ளத்திலே தோன்றித் துடிக்கத் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு கனவாக, ஒவ்வோர் ஆசையாக, ஒவ்வொரு லக்ஷ்யமாக அவன் ஆராய்ந்துகொண்டே, மேலே மேலே, சூரியனை நோக்கிப் பாயும் கழுகைப் போல பறந்து கொண்டிருந்தான். ஆசைகளையும் கனவுகளையும் ஆரம்பம் முதலே அதிகமாகப் படைத்திருப்பவனை அதிருஷ்டசாலி என்று சொல்லாமல் வேறு என்னதான் சொல்வது? அவன் அதிருஷ்டசாலி அல்ல என்றால் வேறு யாரை இவ்வுலகில் அதிருஷ்டசாலி என்று சொல்லிவிட முடியும்? கடைசிக்கணக்கில் சித்திரகுப்தன் பேரேட்டில் மனிதன் என்று பிறந்துவிட்டவனுக்கு உள்ளவையெல்லாம் அவன் ஆசைகளும் கனவுகளும் லக்ஷ்யங்களுமே! வேறு என்ன? இவை பலிக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை. வாழ்க்கையைப் பரிபூரணமாக ஆனந்தமாக பூராத்திட்டம் அநுபவித்து வாழ்வதற்கு ஆசைகள், கனவுகள், லக்ஷ்யங்கள் இவை போதும் வேறு எதுவுமே தேவையில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

     உண்மையிலே சோமு அதிருஷ்டசாலிதான்!

     ஆறு வற்றிக் கிடக்கும்போதும், ஆற்றில் ஜலம் ஓடிக் கொண்டிருக்கும்போதும், மான்குட்டி துள்ளி ஓடி விளையாடும் போதும், மயில் தோகை விரித்து ஆடும்போதும், ஆடாது வெறும் நடைபோடும் போதும், வண்ணான் வேட்டி தேய்க்கும் போதும், கோயில் மணி அசைந்து அசைந்து இன்னிசை எழுப்பும் போதும், மழை பெய்யும் போதும், ஆகாயமளவுக் காற்றிலே புழுதித் தேர் எழுந்து உருளும் போதும், குயவனின் சக்கரம் சுற்றும்போதும் எப்போதும் எங்கும் சோமு நின்று நின்று எல்லா விஷயங்களையும் கவனித்துக் கவனித்துத் தன் மனசிலே அடக்கிக் கொண்டு வந்ததற்கு என்னதான் அர்த்தம்? அவன் எண்ணிறந்த, வார்த்தைகளில் அகப்படாத சிந்தனைகளில் ஆழ்ந்து கிடந்தான் என்பதற்கு என்ன அர்த்தம்? வளர்ந்து பெரியவர்களாகிச் சிந்திக்கவே மறந்து போய்விட்டவர்கள் அவன் சிந்தனைகளைச் சிந்தனைகள்தாம் என்றே ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அவன் உள்ளத்திலே துடித்து ஓடியவை எல்லாம் வெறும் ஏக்கங்கள், ஆசைகள், கனவுகள் வேறு அல்ல. ஆனால் சோமுவின் விஷயத்திலே அவனுடைய சிந்தனைகள் எல்லாமே ஆசை உருவங்கள்தாம் பூண்டு வந்தன என்று சொல்வது மிகையே ஆகாது!

     சோமுவுக்கு எட்டு ஒன்பது வயசு ஆவதற்கு முன்னமே அவன் மனசிலே எட்டாயிரம், ஒன்பதினாயிரம், எண்பதினாயிரம், ஒன்பது லக்ஷம் என்கிற கணக்கில் ஆசைகள் தோன்றி மறைந்து விட்டன. கணத்திற்கு ஓர் ஆசை. வினாடிக்கு ஒரு கனவு. ஒரு வினாடி தோன்றிய ஆசை அடுத்த விநாடி வரையில் நீடிக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை. ஆனால் தோன்றியபோது தோன்றுகிற காலத்தையும் நீடிக்கிற நேரத்தையும் அந்த ஆசை நிரப்பியது. அவன் ஆசைகளின் தன்மையே அலாதியானது அவற்றின் தரமே அற்புதமானது!

     பிறந்த அன்றைக்கே மனிதனுக்குப் பசி தாகம் என்கிற ஏக்கங்கள் தோன்றி விடுகின்றன. இந்தப் பசி தாகம் என்கிற இரண்டு ஆசைகளும் சிரமமில்லாமல் சரிவர நிறைவேறி வரும் வரையில் மனிதனுடைய உள்ளத்திலே வேறு எந்த ஆசையுமே தலை தூக்குவதில்லை. பசிதாகத்தை ஆசைகளாக, ஏக்கங்களாக, அறியத் தொடங்கியபின்தான், அவை நிறைவேறாத காலத்திலேதான், வேறு பலவிதமான ஆசைகள், கனவுகள், ஏக்கங்கள் மனிதன் மனசிலே தலைவிரி கோலமாகப் பேயாட்டம் ஆடத் தொடங்குகின்றன. ஏழைகளாகப் பிறந்து பசிதாகத்தைப் பரிபூரணமாக அறிந்தவர்களுக்கு மட்டுமே உள்ளத்திலே எண்ணிறந்த அற்புதமான கனவுகள் நிறைந்திருப்பதற்கும் பணக்காரர்களாகப் பிறந்துவிட்டவர்களுக்கு ஒரு திருப்தி, வயிறு நிறைந்த தன்மை, சோம்பல், தூக்கம் இவை தவிர வாழ்க்கையிலே வேறு ஒன்றுமே இல்லாதிருப்பதற்கும் பொதுவாக இதுதான் காரணம் போலும்! பசியையும் தாகத்தையும் தலை தூக்கவிடாமல் வயிற்றை நிரப்பிக் கொண்டு வளர்ந்து பெரியவர்களாகி விட்டவர்களுக்கு இவ்வுலகில் வாழ்வதன் மகிமைகள் பூராவும் நிச்சயமாகத் தெரியாது என்று தைரியமாகவே சொல்லலாம்.

     பொதுவாக இந்த விஷயங்கள் எப்படியானால் என்ன? சோமு என்கிற இந்தப்பையன் விஷயத்திலே ஆரம்பம் முதலே பசி தாகம் என்கிற ஏக்கங்கள் பரிபூரணமாக இருந்தன. கறுப்பன் இருந்த காலத்திலே அது சற்று அதிகமாகவே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சாத்தனூர்க்காரர்களை அதட்டி மிரட்டி உருட்டி அவன் சம்பாதித்த தெல்லாம் அவன் குடிப்பதற்கே போதாது. சில நாள் வள்ளியம்மை சம்பாதித்துக் கொண்டு வந்ததையும் பிடுங்கிக் கொண்டுபோய்க் கள்ளுக்கடையில் கொடுத்துவிட்டு வந்து விடுவான். குருவியைப் போல வள்ளியம்மை குப்பையைக் கிளறிக் கிளறிச் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருந்ததையுங்கூட அவன் சில சமயம் நிர்த்தாக்ஷிண்யமாக அடித்துக் கொண்டு போய்விடுவான். வீட்டிலே எல்லோரும் பட்டினியாகத்தான் படுக்க வேண்டும். பல இரவுகள், பசி தாகத்தை மறக்கும் உத்தேசத்துடனேயே சோமு சுயப்பிரக்ஞையுடன் கனவுகள் கண்டுகொண்டே படுக்கையில் கிடப்பான். ஒரு துக்கத்தை மறப்பதற்காகக் கனவுகளை முயலும் பழக்கம் அவனுடைய ஆயுள் பூராவும் நீடித்து இருந்தது. கனவுகள் ஆசைகளைக் கிளறின. ஆசைகள் ஏக்கங்களைத் தூண்டின.

     உண்மைதான். கறுப்பன் போனபிறகு வள்ளியம்மை ஏதோ சொல்பம் சம்பாதித்தாள்; தனக்கும் தன் பிள்ளைக்கும் தேவையானது, போதுமானது, சம்பாதிக்கத்தான் சம்பாதித்தாள்; ராயர் வீட்டிலே அவள் வேலை செய்யப் புகுந்த நாள் முதல் அவளுக்கும் அவள் மகனுக்கும் வயிறார உண்பதற்குப் போதியது கிடைத்தது. வீட்டிலே பால் தயிர் நெய் வியாபாரமும் ஏதோ கொஞ்சம் இலாபகரமாகத்தான் இருந்தது. தவிரவும் வள்ளியம்மை தன்னையும் அறியாமலே, தூரத்திலிருந்தபடியே, சாத்தனூர் ‘உடையவர்களின்’ சுவடிலே நடக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தாள். ஆனால் சோமு உரிய வேளைக்குச் சாப்பிட்டுப் பசி தாகத்தை, அவற்றின் வேகத்தைத் தணித்துக் கொள்ள முயலுவதில்லை. தெருத்தெருவாக ஊரெல்லாம் அலைந்து திரிந்து ஒவ்வோர் இடத்திலும் நாழிகைக் கணக்கில் நின்று பார்த்துவிட்டுப் பசிதாகத்தை அளவுக்கு மீறியே வளர்த்து மூள விட்டுவிடுவான். வயிற்றை நிரப்பிக் கொள்கிற காரியம் அவ்வளவு அவசியமானதாகவோ முக்கியமானதாகவோ அவனுக்குப் படவில்லை.

     மேட்டுத் தெருச் சிறுவர் சிறுமியருக்குச் சிருஷ்டி ரகசியம் அப்படி ஒன்றும் மிகவும் ரகசியமான விஷயம் அல்ல. தினசரி அவர்கள் கண்ணெதிரே நடக்கிற காரியங்களை அவர்கள் பார்த்துக் கவனிக்காமல் இருக்க முடியுமா? மனிதர்கள் வேண்டுமானால் ஏதோ இலை மறைவு காய் மறைவு என்று ஓரளவு மறைத்து வைக்கலாம் இயற்கையில் மற்றவை எல்லாம், பிராணிகள், பறவைகள் எல்லாம் பகிரங்கமாகத்தானே சிருஷ்டித் தொழிலில் ஈடுபடுகின்றன. எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனித்ததுபோல இதையும் ஆழ்ந்து கவனித்தான் சோமு. பெண் உருவம் அவனுக்குப் பழக்கமானதுதான், தூரத்திலிருந்து. ஆனால் நெருங்கிப் பார்க்கவேண்டும் என்கிற ஆசை உண்டாவதிலே தவறு என்ன? எதை எண்ணி ஆசைப்படுகிறோம் என்று அறியாமலே சோமு ஏங்கினான். பிள்ளைமார் தெருப் பையன்களைப் போலத் தானும் சாய வேட்டி கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான் சோமு. கொஞ்ச காலம் இந்த ஆசை அவன் மனசில் மற்ற எல்லா ஆசைகளையும் தூக்கி அடித்தது. வானத்திலே கிரகண காலத்திலே ராகு என்கிற பாம்பு முழு மதியை விழுங்க முற்படுகிறது. ஆனால் ஏதோ கொஞ்சம் விழுங்கியவுடன் மேலே விழுங்க மாட்டாமல் விழுங்கியதையும் துப்பிவிட்டு ஓடி விடுகிறது அல்லவா? அதுபோலவே சோமுவின் உள்ளத்தைச் சாயவேட்டி என்கிற ஆசை கவ்வி விழுங்கிவிடப் பார்த்தது. சாய வேட்டி, சாய வேட்டி என்று ஓயாமல் ஜபம் செய்து வள்ளியம்மைத் தொந்தரவு செய்தான் சோமு. அவள் வாங்கித் தரவில்லை. காசில்லாத காரணங்கூட இல்லை. முக்கியமாக கறுப்பன் பிள்ளை புதுச்சாயவேட்டி கட்டிக் கொண்டால் மேட்டுத் தெருவாரும் பிள்ளைமார் தெருவாரும் என்ன சொல்வார்களோ என்கிற பயந்தான் வள்ளியம்மைக்கு. அவள் வாங்கித் தரவில்லை. ராகு சந்திரனை விழுங்கமாட்டாமல் வேறு இரை தேடிக்கொண்டு போவது போல, சோமுவின் மனசும் வேறு ஆசைகளை நாடிப் போய்விட்டது. ஆனால் சாயவேட்டி என்கிற லக்ஷ்யம் அவன் மனசை விட்டு அடியோடு அகன்றுவிட வில்லை. எந்த வினாடி வேண்டுமானாலும் விசுவரூபம் எடுப்பதற்குத் தயாராக ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்தது அது. வேறு ஏதோ ஒரு சின்ன ஆசையிலே சின்னப்பையன் அதை மறந்து விட்டான்; அவ்வளவுதான்.

     வண்ணான், துறையிலே வேட்டி துவைப்பதைப் பார்க்கும் போதெல்லாம் தானும் வண்ணானைப் போல வேட்டி துவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான் சோமு. வருஷம் பூராவும், நாள் பூராவும் குடியானவன் செய்யும் காரியங்கள் எல்லாம், அவன் உழைப்பெல்லாம் சோமுவின் மனசைக் கவர்ந்தன. கட்டாந்தரையிலே, ‘பிசுக் பிசுக்’ கென்று ஈரங் கசித்த களிமண்ணிலே, கணைக்கால் மட்டுமுள்ள ஜலத்திலே, சேற்றிலே, பச்சைப் பசேலென்று ஓங்கியிருந்த பயிருக்கு நடுவிலே, வருஷம் பூராவும் ஏர்பிடித்து, வாள்பிடித்து உழைப்பது, சரியாக நிமிர்ந்து நிற்க, வானத்தை தெய்வத்தை அண்ணாந்து பார்த்து ஏமாறுவதற்கு போதிய நேரம் இல்லாமல் உழைப்பது எவ்வளவு மகத்தான இன்பம் என்பதைக் கற்பனை செய்து கொண்டு இன்பம் பூராவையும் நுகர ஆசைப்பட்டான் சோமு. தண்ணீர் இறைக்கிற இடத்தில் நிற்கும் போதெல்லாம், பாட்டுப் பாடிக் கொண்டு தானும் ஏற்ற மரத்தில் ஏறி நிற்கவேண்டும் என்று ஆசைப்பட்டான் அவன். மாடிப் பள்ளிக்கூடத்திலே சேர்ந்து படிக்கவும், பள்ளிக்கு வருகிற பையன்களைப் படிப்பிக்கவும், தனக்குச் சக்தி இல்லையே என்று ஏங்கினான். பிள்ளைமார் தெருவிலே ஒரு பணக்கார மிராசுதாருக்குச் சுதேசமித்திரன் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அதை அவர் பிரித்து வைத்துக் கொண்டு படிப்பதைச் சோமு அடிக்கடி பார்த்திருக்கிறான். அது என்ன, எதற்காகப் படிக்க வேண்டும், படித்தால் என்ன என்ன தெரியும் என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது. ஆனால் அவனும் அதுபோல பத்திரிகையைப் பிரித்து வைத்துக்கொண்டு படிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டான். கடைத்தெருவில் இருக்கும் கடைகளில் உள்ளதை எல்லாம் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணுவான். அதை விடச் சிறந்ததாக வேறு ஓர் ஆசை அடுத்த வினாடியே அவன் உள்ளத்தில் உதித்து விடும். தானும் ஒரு கடைக்காரன் ஆகி வியாபாரம் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசிப்பான்!

     பார வண்டிகளையும், பெட்டி வண்டிகளையும், இரண்டொரு கோச்சு வண்டிகளையும் பார்க்கும்போதுதான் சோமுவுக்கு ஆசைகள் கடல் அலைகள் போலப் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக மூண்டு மூண்டு எழும். அந்த ஆசைகள் தோன்றி மறையும் வேகம் சிந்தனை வேகத்தையும் மீறியது என்றே சொல்ல வேண்டும். எத்தனை தினுசு வண்டிகள்தாம் இருந்தன இவ்வுலகில்! அவ்வளவு வண்டிகளிலுமே சவாரிசெய்து பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டான் அவன். ஆனால் பாவம்! அவனைப் பார வண்டியில் ஏற்றிக் கொள்வதற்குக்கூட ஆள் இல்லை.

     ஏதாவது வண்டியில் ஏறி, நெடுக, நாள் கணக்காக, வாரக் கணக்காக, மாசக் கணக்காக, வருஷக்கணக்காக, யுகக் கணக்காகப் போக்குப் போக்கென்று ராஜபாட்டையோடு போய்க் கொண்டே இருக்க வேண்டும் எங்கும் ஒரு வினாடிகூடத் தாமதிக்ககூடாது என்று ஆசைப்பட்டான் சோமு.

     ராஜபாட்டையோடு கிழக்கே போனால் குறப்பாளையம். அதற்கப்பால் ஊர் எல்லைச் சுடுகாடு. அதற்கும் அப்பால் ராஜபாட்டை காவேரி மேட்டைத் தொடும் இடம். அப்பால் புளியஞ்சேரி. அதற்கப்பால் கொட்டையூர். அப்பால் மேலக் காவேரி. சர்க்கரைப் படித்துறை அதாவது கும்பகோணத்துச் சுடுகாடு. அதற்கப்பால் பாலக்கரை. பாலக்கரை தாண்டினால் கும்பகோணம்.

     கறுப்பன் மறைந்ததற்கு அடுத்த வருஷமோ அதற்கு அடுத்த வருஷமோ மகாமகம் வந்தது. குளத்திலே ஸ்நானம் செய்து புண்ணியம் சம்பாதிப்பதற்காக வள்ளியம்மை தன் மகனையும் அழைத்துக்கொண்டு மகாமகத்துக்குக் கும்பகோணம் போனாள். அந்த ஒரு தடவைதான் ராஜபாட்டையிலே ஆசை தீரச் சோமு நடந்திருந்தான். போக்குப் போக்கென்று நடந்துகொண்டே இருந்தார்கள். ஆயாள் அவனுடன் இல்லாவிட்டால் சோமு திண்டாடியே போயிருப்பான். அவன் கால்கள் வலித்தன. அப்பப்பா! என்ன கூட்டம்! என்ன கூட்டம்! உலகத்திலே இவ்வளவு ஜனங்கள் இருக்கிறார்கள் என்று அவனுக்கு அதற்கு முன் தெரியவே தெரியாது. அந்த மகாமகத்துக்குக் கும்பகோணம் வந்தவர்கள் எல்லோரையும் பார்த்து, அவர்களுடைய முகங்களையும் நடையுடை பாவனைகளையும் ஞாபகத்திலே வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான் சோமு. அந்த ஆசையும் நிறைவேறாமல் செய்து விட்டாள் வள்ளியம்மை. “இப்படி ஊர்ந்து போனால் அடுத்த மாமாங்கம் வந்திடும்... நட நட!” என்று அவனை விரட்டினாள்.

     சாத்தனூரில் இருந்தது ஒரே ஒரு கோயில்தான். கும்பகோணத்திலே பெரிய பெரிய கோயில்களாக எவ்வளவு கோயில்கள் இருந்தன! ஒவ்வொன்றிலும் பெரிய பெரிய மணிகளாக எவ்வளவு மணிகள் இருந்தன! அவை எல்லாம் சேர்ந்து ஒலித்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தான் சோமு.

     சாத்தனூர்க் கடைத் தெருவைப்போல ஆயிரம் மடங்கு பெரிதாக இருந்தது கும்பகோணம் கடைத்தெரு. என்ன என்ன சாமான்கள்! அவை எவ்வளவு அழகாக இருந்தன! அவற்றை வாங்கத்தான் எவ்வளவு ஜனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்து நின்றார்கள்! அப்பப்பா! என்ன கூட்டம்! என்ன கூட்டம்!

     நெல்லைக் குற்றி அரிசியாக்கும் மில் ஒன்றைப் பார்ப்பதற்கு வள்ளியம்மை சோமுவையும் அழைத்துக் கொண்டு போனாள். மிகவும் சிறிய மில்தான் அது. கும்பகோணத்திற்கே புதுசு. தவிரவும் சுற்று வட்டத்திலிருந்த கிராமத்து ஜனங்கள் பலர் இந்த மாதிரி மில்லை அதற்கு முன் பார்த்ததில்லை. அதிசயம் பார்க்க ஏகப்பட்ட பேர் வந்து கூடிவிட்டார்கள். ஏதோ ஒரு பெரிய சக்கரம் சுழன்றுகொண்டிருந்தது. நெல்லைக் கூடை கூடையாக எடுத்து ஒரு வாயிலே கொட்டினார்கள். வேறு ஒரு வாய் வழியாக அரிசியும் இன்னொரு வாய் வழியாக தவிடும் உமியும் வெளியே வந்து கொட்டின. மேலே கொட்டிய நெல் எப்படி அரிசி ஆயிற்று என்பது சோமுவுக்குத் தெரியவில்லை. அதே நெல்தானா அரிசியும் உமியுமாக ஆயிற்று என்று விழித்தான். நெல் கொட்டும் வாய்க்குள் இறங்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டான், சோமு. மில்லில் வேலை செய்துகொண்டிருந்த ஆள் ஒருவன் அவனைத் தூக்கி அந்த வாய்க்குள் போட்டுவிடுவதாகப் பயமுறுத்திய போது, அவன் பயப்படவே இல்லை. “போடு பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்” என்றான் பையன். “அவலாகிப் போயிடுவே நீ!” என்று சொல்லிவிட்டு அவனைக் கீழே இறக்கி விட்டுவிட்டான். வள்ளியம்மை கிளம்ப வேண்டும் என்றாள். இருட்டு முன் சாத்தனூர் போக வேண்டாமா? ஆயுள் பூராவும் அந்தச் சக்கரம் சுழலுவதைப் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருக்கலாம் என்று தோன்றிற்று சோமுவுக்கு.

     ஆனால் வள்ளியம்மை கிளம்பிவிட்டாள். சோமுவையும் "தரதர' வென்று இழுத்துக் கொண்டு கிளம்பினாள். பையன் தயங்கித் தயங்கித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனான். வெளியே தெருவுக்கு வந்தபின் பையன் சில வினாடிகள் யோசனையில் ஆழந்திருந்தான். பிறகு கேட்டான்: ""நம்மூரில் எல்லாம் பாட்டுப் பாடினால்தானே அம்மா, நெல்லு அரிசி ஆகும்! இங்கே பாட்டுச் சப்தமே கேட்க வில்லையே!'' என்று. என்ன பதில் சொல்வது என்று வள்ளியம்மைக்குத் தெரியவில்லை; விழித்தாள். ஆனால் அவள் பதில் சொல்ல வேண்டிய அவசியமே நேரவில்லை. தெருவில் வேறு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன, பையனின் கவனத்தைக் கவர.

     அந்த ராஜபாட்டை மகாமகக் குளத்தையும் தாண்டி நெடுகக் கிழக்கு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. “இப்படியே நீளப்போகலாமே அம்மா!” என்று சொல்லிப் பார்த்தான் பையன். “பெரியவன் ஆன அப்புறம் நீ என்னையும் இட்டுகிட்டுப் போவலாம்!” என்று சொல்லிக் கொண்டே வள்ளியம்மை அவனைத் ‘தரதர’ வென்று இழுத்துக் கொண்டு ஊரை நோக்கித் திரும்பிவிட்டாள். பாலக்கரை தாண்டினார்கள். மீண்டும் சூரியன் கண்ணைக் குத்திற்று. வெயில் அதிக உக்கிரமாக இல்லை என்றாலும் நடப்பது எதிர் வெயிலில் நடப்பது மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. சோமுவுக்கு நாள் பூராவும் நடந்தது காலையும் வலித்தது. “வண்டியிலே போகலாமே அம்மா” என்றான். “நீ கெட்ட கேட்டுக்கு வண்டி வேறயா?” என்றாள் வள்ளியம்மை.

     சர்க்கரைப் படித்துறை... மேலக்காவேரி... கொட்டையூர்... புளியஞ்சேரி...

     புளியஞ்சேரியில் புதுச் சட்டி பானை வாங்குவதற்கென்று வள்ளியம்மை ஒரு குயவன் வீட்டிலே சற்று நேரம் தாமதித்தாள். அந்தச் சமயம் குயவன் ஈரக் களிமண் எடுத்துச் சக்கரம் சுழற்றிச் சட்டிபானைகள் செய்துகொண் டிருந்த காட்சி அபூர்வமான காட்சியாகப்பட்டது சோமுவுக்கு. அந்த இடத்தை விட்டு அவனைக் கிளப்பி அழைத்துக் கொண்டு போக வள்ளியம்மை இல்லாத பாடும் படவேண்டியிருந்தது.

     அன்று சாத்தனூர் மேட்டுத்தெரு வீட்டை அவர்கள் அடைந்த போது இருட்டியேவிட்டது. சோறுகூடத் தின்னாமல் உறங்கி விட்டான் சோமு. நள்ளிரவுக்கு மேல் விழிப்புக்கும் தூக்கத்துக்கும் இடையே ஓர் அவஸ்தையில் சோமு அன்று தான் கண்டதை எல்லாம் மீண்டும் கனவாகக் கண்டான். ஒவ்வொன்றாகக் கண்டு சுவைத்து அநுபவித்தான். சூரிய உதயத்துக்குள்ளாக அவன் மனசிலே ஒரு புது வாழ்க்கைத் தத்துவமே உதித்துவிட்டது போல இருந்தது. அது என்ன தத்துவம் என்றெல்லாம் விவரிப்பதற்கு வார்த்தைகளே அகப்படா. அன்று அந்த மகாமகத்துக்குக் கும்பகோணம் போய் வந்த பிறகு சோமு மாறி விட்டான். புது அநுபவங்கள் பல பெற்று புது மனிதன் ஆகிவிட்டான். தினசரி பார்த்துப் பழகிய சாத்தனூர் காரியங்களையும் அவன் புதுக்கண்கள் கொண்டு பார்க்கத் தொடங்கினான்.

     ராஜபாட்டையிலே மேற்கே அதிக துõரம் போனதில்லை சோமு. அந்தப்பக்கம் சாத்தனூர் எல்லையைக்கூட அவன் தாண்டியதில்லை.

     ராஜபாட்டையை தாண்டி வடக்கே போனால் இரண்டொரு தெருக்களும், மாரியம்மன் கோயிலும், அதற்கப்பால் கண்ணுக்கு எட்டிய வரையில் நெல் வயல்களுமே தெரிந்தன.

     தெற்கே காவேரியாற்றைத் தாண்டி, வேர்க்கடலையும், பாகல், புடல், பூசணி முதலிய காய்கறிகளும் பயிராகும். மாங்குடியையும் தாண்டி, அரிசிலாற்றையும் தாண்டினால் திருவலஞ்சுழிக் கோயில். அந்தக் கோயிலின் தெற்குப் பிரகாரத்திலேதான் ஒவ்வொரு வருஷமும் சாத்தனூர் முருகனின் வள்ளி தினைப்புனம் காப்பாள். திருவலஞ்சுழிக் கோயிலைத் தாண்டிப் போனால் இன்னோர் அகன்ற மண் ரஸ்தா இருந்தது. அது கும்பகோணத்திலிருந்து தஞ்சை போகும் ரஸ்தா என்று சோமுவுக்குத் தெரியும். அந்த ரஸ்தாவுக்கு அப்பால் இருந்தது இருப்புப்பாதை. அதன் மேல் ரெயில் ஓடும்போது வாய்க்குள் விரலை விட்டுக் கொண்டு, ஆச்சரியத்தோடு எவ்வளவோ தரம் பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறான் சோமு. சில சமயம் ரெயில் கத்தும் சில சமயம் புகை விடும் ஆனால் அதுதான் எவ்வளவு வேகமாக ஓடி இரண்டே விநாடிகளுக்குள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுகிறது! ரெயிலுக்குள் உட்கார்ந்துகொண்டு வேலை இல்லாமல் போய்க்கொண்டிருந்தவர்களும் மனிதர்கள்தாம் என்று சோமுவுக்குத் தெரிய வெகுநாட்கள் ஆயின. தெரிந்து கொண்டபின் தானும் அப்படி ரெயிலிலே உட்கார்ந்து கொண்டு போக வேண்டும் என்று ஆசைப்பட்டான் அவன். ஆனால் அவ்வளவு வேகமாக ஓடிக் கொண்டிருந்த அந்த இரயிலுக்குள் எப்படிப் போவது என்றுதான் சோமுவுக்குத் தெரியவில்லை. அவன் தனக்குத் தெரிந்தவர்கள் இரண்டொருவரை விசாரித்துப் பார்த்தான். அவர்களுக்கும் தெரியவில்லை.

     சாத்தனூரிலிருந்து நாலு திசைகளிலும் எவ்வளவு தூரம் போனாலும், இன்னும் போகலாம். மேலே போகப் போக இடம் இருந்துகொண்டே இருந்தது. பாதை இருந்தது. கண்ணுக்கு எதிரே ஒரு நாழிகை வழி தூரத்துக்கு அப்பால் வானம் பூமியைத் தொடுகிறது. பூமி அங்கே முடிந்து விடுவது போலத்தான் தோன்றிற்று. ஆனால் அதற்கு அப்பாலும் நாழிகை வழி தூரம், நாழிகை வழி தூரமாக எவ்வளவோ நாழிகை வழி தூரம் இருந்து கொண்டேதான் இருந்தது. பூமி பரந்து கிடந்தது. வளைத்துக் கொண்டு வானம் வளைந்து கிடந்தது. அங்கெல்லாமும் சாத்தனூரில் வசித்தவர்கள் போலவே ஜனங்கள் வசித்துக் கொண்டுதான் இருந்தார்கள். என்ன ஆச்சரியம்! அங்கெல்லாம் போய் எங்கெல்லாம் மனிதன் போக முடியுமோ அங்கெல்லாம் போய் எல்லோரையும் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான் சோமு.

     இவை எல்லாம் சாதாரணமாக எல்லாச் சிறுவர் சிறுமியருக்கும் தோன்றக்கூடிய ஆசைகள்தாம். விசேஷமாக ஒன்றும் இல்லை. சிலருக்கு ஆசைகள் சற்று அதிகமாக இருக்கும். சிலருக்கு மிகவும் குறைவாகவே இருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம். ஆசைகளின் எண்ணிக்கையிலும் தன்மையிலும் சோமு அதிருஷ்டசாலி என்றுதான் சொல்ல வேண்டும் எண்ணிறந்தன அவன் ஆசைகள். உலகையே வளைத்துச் சுற்றி வர ஆசைப்பட்டான் அவன்.

     இவை தவிரப் பல அசாதாரணமான சாத்தியமே இல்லாத ஆசைகளும் சோமுவுக்கு இருந்தன. இதெல்லாம் சாத்தியம் அல்ல என்று அவன் இளம் உள்ளத்துக்கும் தெரியும்.தெரிந்தும் இந்த ஆசைகளைப் படாமல் இருக்க முடியவில்லை அவனுக்கு.

     மரம் ஆடிக் காற்றிலே அசைந்தாடிப் பூமியிலே நிலைத்து நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். பறவையாகிப் பறக்க விரும்பினான். மயிலாகித் தோகை விரித்து ஆட விரும்பினான். மான் குட்டியாகித் துள்ளிக் குதித்து விளையாட விரும்பினான். நாயாகிக் குரைத்துக் கொண்டே தெருத் தெருவாக ஓட விரும்பினான் அவன்.

     செத்துவிட்டவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதை அறிந்த கொள்வதற்காக அவன் தானும் சாக விரும்பினான். இந்த ஆசையை அவன் தன் அம்மாவிடம் சொன்னபோது அவள் ஏன் அழத் தொடங்கினாள் என்பது அவனுக்குப் புரியவில்லை.

     காவேரியிலே நீராக ஓடிக் கடலிலே கலந்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டான் அவன். கடல் என்றால் எப்படி இருக்கும் என்று அவனுக்குத் தெரியாது. அவன் பார்த்ததில்லை. ஆனால் கடல் என்பது, காவேரி நதிக்கு இருந்தது போலவே, அவனுக்கும் ஒரு லக்ஷ்யமாக இருந்தது.

     சூரியனாகி உலகெலாம் அனல் வீச விரும்பினான். முழு மதியமாகிக் குளிர் நிலவு வீச விரும்பினான். வானத்திலே கருமுகிலாகி மிதந்து முடிவற்ற பிரயாணம் செய்ய விரும்பினான் அவன்.

     எவ்வளவு அசட்டுத்தனமான ஆசைகள்! ஆனால் அசட்டுத்தனம் என்பதற்காக அவற்றின் ஆசைத்தனம் மறைந்துவிடுமா என்ன?

     இவை எல்லாம் அவன் உள்ளத்திலே அவ்வப்போது தோன்றி மறைந்த ஆசைகள். சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு அந்த அந்த வினாடியில் பிறந்து ஆட்சி செலுத்துவது போல அமர்க்களம் செய்து விட்டு அடுத்த வினாடியே மறைந்து விட்ட ஆசைகள்!

     ஆனால் அவன் மனசிலே ஒரே ஒரு ஆசைமட்டும் தோன்றிய வினாடியிலே மறைந்துவிடாமல் வினாடிக்கு வினாடி அதிகரித்து அதிக ஆட்சி செலுத்திக் கொண்டு வந்தது. அவன் எவ்வளவுதான் சிரமப்பட்டு அடக்கி வைத்தாலும் அந்த ஆசை மட்டும் மீண்டும் மீண்டும் கிளைத்துத் தளைத்தது. பணத்தின் சக்தியை அதி பாலியத்திலேயே அறிந்து கொண்டுவிட்டான். அந்தச் சக்தியை அவன் அறிந்து கொண்டு விட்டதன் காரணமாகப் பணம், காசு என்கிற லக்ஷ்யம், ஆசை, கனவு அவன் மனசைவிட்டு அகல மறுத்தது.

     ஒரு தம்படியைப் பார்த்திருந்தான் அவன். அடிக்கடி அதாவது வருஷத்தில் ஏழெட்டுத் தடவைகள் அவன் கையில் தம்படி இருந்ததுகூட உண்டு. காலணாவைப் பார்த்திருந்தான். அணாவும் பார்த்திருந்தான் அவன். அணாக்காசை அவன் கையால் தொட்டுக்கூடப் பார்த்திருந்தான். செலவழிக்கக் கையில் அரைக்காசு அவனுக்கு அதுவரையிலும் கிடைத்ததே இல்லை. அணாவுக்கு மேற்பட்ட மதிப்புள்ள நாணயங்களை அவன் பிறர் கையில்தான் பார்த்திருக்கிறான். வட்டமான வெண்மையான பளபளவென்று இருந்த சின்னக்காசு இரண்டணா. அதே போன்றதுதான் நாலணா. ஆனால் சற்றுப் பெரியது. அதையும்விடப் பெரியது அரைரூபாய். ஒரு ரூபாயை முழு ரூபாய்க் காசைச் சோமு பிறர் கையில் கூடப் பார்த்ததில்லை; கேள்விப்பட்டிருந்ததுதான்!

     கையில் தம்படி இருந்தால் பட்டாணிக்கடலை வாங்கலாம்; வாழைப்பழம் வாங்கலாம்; கோலிக்குண்டு வாங்கலாம். எதையுமே வாங்காமல் கையில் தம்படிக் காசை வைத்துக் கொண்டு எல்லாக் சாமான்களையுமே பேரம் பேசலாம். காலணா இருந்தால் உப்புப் புளி வாங்கலாம், அரிசி பருப்பு வாங்கலாம், வேறு எவ்வளவோ சோமுவுக்கு அவசியம் என்று தோன்றிய எவ்வளவோ சாமான்கள் வாங்கலாம். கையில் ஓரணா இருந்துவிட்டால் கடைக்காரர்கள் கூட மரியாதையாக நடக்கத் தொடங்கி விடுகிறார்கள் என்று அநுபவப் பூர்வமாக அறிந்திருந்தான் சோமு. ஓரணாவுக்கு மேல் எவ்வளவு இருந்தாலும் என்ன சாமான் இஷ்டப்பட்டாலும் வாங்கலாம். கால்ரூபாய் அரை ரூபாய் இருந்துவிட்டால் சாத்தனூர்க் கடைத்தெரு பூராவையுமே விலைக்கு வாங்கி விடலாம் என்று எண்ணினான் சோமு. கும்பகோணத்துக் கடைத்தெருவை விலைக்கு வாங்குவதானால் கால்ரூபாய் அரை ரூபாய் எல்லாம் போதா முழு ரூபாய்களாக ஒன்றிரண்டாவது வேண்டியிருக்கும்.

     பத்து ரூபாய்கள் முழுசாக இருந்துவிட்டால் உலகையே விலைக்கு வாங்கி விடலாம் என்று தான் சோமு நினைத்தான். யாரிடம் விலை கொடுத்து உலகை வாங்குவது என்பதுதான் இன்னும் சோமுவுக்கு நிச்சயமாகவில்லை. ஆனால் பத்து ரூபாய் சம்பாதித்து உலகையே விலைக்கு வாங்குவது என்ற அவன் தீர்மானித்துவிட்டான்.

     அந்தப் பத்து ரூபாய்ப் பணத்தை லக்ஷ்யமாகக் கொண்டு அவன் ஒரு சமயம் மூன்று தம்படிகள், முழுசாக ஒரு காலணா சேர்த்துக்கூட வைத்திருந்தான். ஆனால் பட்டாணிக்கடலை என்கிற சமீபகாலத்தில் எட்டக்கூடிய லக்ஷ்யம் ஒரு தம்படியைச் சாப்பிட்டுவிட்டது. மறுநாளே வாழைப்பழம் என்கிற லக்ஷ்யம் இன்னொரு தம்படியைச் சாப்பிட்டு விட்டது. எஞ்சிய தனி ஒரு தம்படியால் என்னதான் பிரயோசனம் என்று அதையும் செலவு செய்துவிட்டான் சோமு.

     பணம் என்கிற விஷயம்பற்றிப் பொருளாதர நிபுணர்கள் என்னதான் கனைத்தாலும் என்ன? விதவிதமான அபிப்பிராயங்கள், கொள்கைகள், தத்துவங்களை எடுத்து நிபுணர்கள் வாரிவீசலாம். ஆனால் சாதாரண மனிதனுக்கு அதெல்லாம் எங்கே புரியப்போகிறது? சோமு மிகவும் சாதாரணமானவன். அவன் மனசிலே தம்படி முதல் பத்து ரூபாய் வரையில் உள்ள தத்துவம் எல்லாம் இதுதான்.

     பணம் என்கிற தெய்வம் சோமுவின் வாழ்க்கையிலே அவனுடைய சிறுவயதிலிருந்தே ஆட்சி செலுத்த தொடங்கிவிட்டது; இந்த ஆட்சியின் பலன்களைப் பூராவும் அநுபவிப்பதற்கு அவன் தயாராகிக் கொண்டிருந்தான்.