முதற்பகுதி : உதயம்
அத்தியாயம் 3. நினைவும் மறதியும்

     எல்லோருக்குமே உள்ளது தான், நாலு வயசில் நடந்த ஒரு சம்பவம் அற்ப விஷயம், நாற்பதாவது வயசிலும் எல்லா விவரங்களுடனும் பரிபூரணமாக சில சமயம் அநாவசியமாக என்று கூடச் சொல்லத் தோன்றுகிறது! ஞாபகம் இருக்கும். நேற்று நடந்த ஒரு காரியம் இன்று, அறுபது நாழிகை நேரத்திற்குள்ளாகவே பனி போல மேகம் போலக் கலைந்து மறைந்து விடுகிறது. எவ்வளவுதான் மண்டையை உடைத்துக்கொண்டாலும் ஞாபகத்துக்கு வருவதே இல்லை.

 

தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

சூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

ஸ்டீபன் ஹாக்கிங்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

காலம்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

குடும்ப நாவல்
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

கொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-1
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

மறக்கவே நினைக்கிறேன்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

கதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

வீடு, நிலம், சொத்து : சட்டங்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

சுந்தர் பிச்சை
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

சர்மாவின் உயில்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

குடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு
இருப்பு உள்ளது
ரூ.195.00
Buy

பசியின் நிறம் வெள்ளை
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

சித்தர்களின் காம சமுத்ரா
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

நீலகண்டம்
இருப்பு உள்ளது
ரூ.245.00
Buy

சரோஜா தேவி
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

ராக்ஃபெல்லர்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

ஆன்மா என்னும் புத்தகம்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

ரெயினீஸ் ஐயர் தெரு
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy
     பிற்காலத்தில் அதாவது மேட்டுத்தெருச் சோமுப்பயல் வளர்ந்து பெரியவனாகிச் சோமசுந்தர முதலியார் ஆன பிறகு யோசித்து யோசித்துப் பார்ப்பார். அவருடைய குழந்தைப் பருவத்து நினைவுகள் சிற்சில ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமே இல்லாத ஞாபகங்கள் சிற்சில சம்பவங்களின் சாயைகளாகத் திரும்பத் திரும்ப அவர் மனசிலே எழுந்து மறையும். எப்பொழுது சிந்தித்தாலும் அதே நினைவுகள் தான் மீண்டும் மீண்டும் வருமே தவிரப் புதிதாக எதுவும் ஞாபகம் வராது. ஏன் இந்தச் சில ஞாபகங்கள் மட்டும் அவர் மனசில் பதிந்திருந்தன. மற்றவை எல்லாம் ஏன் காலமென்கிற இருள் போர்வைக்குள் மறைந்து விட்டன என்று அவர் அடிக்கடி தீவிரமாகச் சிந்திப்பதுண்டு.

     மனிதனுடைய ஞாபகம், மனசு, ஏதோ ஒன்றைக் கவ்விப் பிடித்துக் கொள்ளுகிறது. இப்படிப் பிடித்துக் கொள்ளும் ஒரு விஷயத்திற்கு ஒன்பது விஷயங்களை நழுவ விட்டுவிடுகிறது. முக்கியம், முக்கியம் அல்லாதது என்பதுபற்றி யெல்லாம் கவலைப்படுவதே இல்லை இந்த மனசு. ஒரு விஷயத்தைப் பிடித்துக்கொண்டால் ஆயுசு பூராவும் அதை நழுவ விடவே விடாமல் வைத்துக் காப்பற்றியும் தருகிறது. இது மனசின் கிறுக்கு என்று சொல்லலாமே தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை. பெரிய பெரிய தத்துவாசிரியர்கள் பலர் தங்கள் ஆயுள் காலம் பூராவையும் இந்த ஒரே விஷயத்தைப்பற்றி ஆராய்ந்து விசாரிப்பதிலே செலவிட்டிருக்கிறார்கள்; மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் எல்லோரும் இறுதியில் கண்டுள்ள முடிவு என்ன தெரியுமா? இதிலும் இதுபோன்ற பல விஷயங்களிலும் முடிவு காண்பதே முடியாத காரியம் என்கிற ஒரே முடிவுதான்.

     மேட்டுத் தெருக் குழந்தையைப்பற்றி வேறு யார் ஞாபகம் வைத்துக்கொண்டிருந்து நமக்குச் சொல்லப் போகிறார்கள்? சோமசுந்தர முதலியாருடைய பிற்கால ஞாபகங்களைத் தவிர அவருடைய குழந்தைப் பருவத்தைப்பற்றி அறிந்துகொள்ளுவதற்கு வேறு ஆதாரமே இல்லை என்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

     “கறுப்ப முதலிக்குப் பிள்ளை பிறந்திருக்கிறதா? பிள்ளையா ? அது ஒன்று தான் அவனுக்கு குறைச்சலாக இருந்தது இவ்வளவு நாளும்! அந்த ராக்ஷசக் குஞ்சுக்கும் சேர்த்து இனி நாம் தானே அழுது ஆக வேண்டும்! நம்ப தலை விதி! அந்தக் கறுப்பைக் கேட்பாரில்லையே! அட தெய்வமே!நீதான் கேட்க மாட்டாயா?” என்று ‘உடையவர்கள்’ காதில் செய்தி விழுந்தவுடன் மனம் நொந்திருப்பார்கள்; ‘உடையவர்கள்’ என்றால் ஏதோ கொஞ்சம் நன்செய்யோ, புன்செய்யோ, தோப்போ, துரவோ, வீடோ, வாசலோ, கடையோ, கண்ணியோ, பணமோ, காசோ உடையவர்கள் என்று அர்த்தம். அவர்கள் கறுப்பனிடம் பயமும் ‘உடையவர்கள்’ தாம்!

     ஒன்றும் இல்லாதவர்கள், சாத்தனூர்க் கிராமத்தில் எந்தக் காலத்திலுமே ஒன்றும் இல்லாதவர்கள் நிறைய பேர்வழிகள் இருக்கத்தான் இருந்திருக்கிறார்கள். கறுப்பனுக்கு இருந்த சாமர்த்தியத்தில் செல்வாக்கில் ஒரு சிறு பகுதி நூற்றில் ஒரு பங்குகூடத் தங்களுக்கு இல்லையே என்று மனம் நொந்தார்கள். பொறாமையுடன் அங்கலாய்த்தார்கள். “பிள்ளையா பிறந்திருக்கு அவனுக்கு? அவனுக்கு என்னப்பா சாத்தனூரிலே கொடிகட்டிப் பறக்கிறது. அவன் வச்சது சட்டம்!” என்று சொல்லியிருப்பார்கள் இவர்கள் விஷயம் தெரிந்தவுடனே.

     சோமசுந்தர முதலியாருடைய ஞாபங்களிலே எப்பொழுதும் முதல் இடம்பெறுவது கோயில் மணிகளின் சப்தந்தான். அதிகாலையில் ‘கணகண’ வென்று அமைதியைக் கலைத்துக்கொண்டு இன்ப வெள்ளமாக எழுந்து பரவி அடங்கும் அந்த மணி ஓசையை அவனுடைய இரண்டாவது வயசுக்கு முன்னரே கவனிக்கத் தொடங்கிவிட்டான். சாத்தனூர் என்கிற பெயரிலே பிற்காலத்தில் சோமசுந்தர முதலியாருக்குக் கோயில் மணிகளின் ஓசை தொனிக்கத் தொடங்கியதற்கு முக்கிய காரணம் இதுதான்.

     இரண்டாவது ஞாபகம் சூரிய ஒளி. வீட்டுக் கூரையிலுள்ள ஓர் ஓட்டை வழியாக உள்ளே பிரவேசித்த சூரிய ரச்மிகள் மெல்லிய மூங்கில் குழாய்போலத் தரையைத் தொடுகின்றன. அந்த வெளிச்சத்திற்குள்ளே தூசும் தும்பும் பறக்கின்றன; தங்கமும் வெள்ளியும், மஞ்சளும் நீலமும், அந்த ஒளியிலே கைகோத்துத் தட்டாமாலை சுற்றித் தாண்டவ மாடுகின்றன. தன் கையைக் காலை ஆட்டினால் அந்தத் தங்கமும் வெள்ளியும் மஞ்சளும் நீலமும் தூசும் தும்பும் இன்னும் அதிவேகமாகத் தாண்டவமாடுகின்றன என்று பையன் எப்படியோ கண்டு கொண்டு விட்டான். அவ்வளவு தான் அந்தக்குழாயின் அருகிலே நின்று கொண்டு கையையும் காலையும் ஆட்டி ஆட்டி, அந்த நித்திய தாண்டவத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே தன் ஆயுள் பூராவையும் கழித்து விடலாம் என்று தோன்றுகிறது பையனுக்கு. பெரியவர்கள் அசடுகள் இதைக் கவனிக்காமல் எங்கேயோ எதையோ எண்ணி ஏங்கிச் சுற்றித் திரிகிறார்கள் என்று பையன் தர்க்க ரீதியில் எண்ணுகிறான். இரவிலே அந்த ஒளிக் குழாயைக் காண முடிவதில்லை. ஆனால் மறுநாள் பொழுது விடியும் போது எங்கிருந்தோ மாயமாக வந்து அந்த அறையை, பையனின் மனசை, உலகையே ஒளிமயம் ஆக்குகிறது. 

     காட்சி மாறுகிறது. தூங்கிக் கொண்டிருந்த பையன் திடுக்கிட்டு விழித்துக்கொள்கிறான். எங்கேயோ ஒரு மூலையில் ‘மினுக் மினுக்’ என்று எரிந்துகொண்டிருக்கும் விளக்கு இருளை அதிகப்படுத்திக் காட்டுகிறது. நிமிர்ந்து கூரையைப் பார்க்கிறான் பையன். ஒளிக் குழாயைக் காணோம். அவன் படுத்து உறங்க ஆரம்பித்தபோது அது அங்கே இருந்ததாகத்தான் ஞாபகம் அவனுக்கு. அந்த ஒளிக் குழாய் எங்கே போய்விட்டது; அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு. ஆனால் எழுந்தவுடனே ஒரு விஷயம் அவன் கவனத்தைக் கவருகிறது. பூகம்பமும் புயலும் அவன் அறியாத அநுபவங்கள். ஆனால் பூகம்பம் என்றால் இதுதான் புயல் காற்றென்றால் இதுதான் என்று அவனுக்கு அறிவிப்பதற்காகவே போலும் ஒரு விஷயம் நடக்கிறது! வீடே ‘கிடுகிடெ’ ன்று ஆடுவது போல இருக்கிறது. கந்தைத் துணியைப் போர்த்துக் கொண்டு படுத்திருந்த பையன் எழுந்து கந்தைத் துணி காலைச் சுற்ற நிற்கிறான் நிதானிக்கிறான். அவன் ஆயாவின் குரல் தான் பூகம்பத்தின் காரணம் என்று தெரிகிறது; அவன் அப்பனுடைய ஆர்ப்பாட்டங்கள் தாம் புயல் காற்றுக்கு மூல காரணம். அவன் ஆயாளுடைய குரல் அது தன் ஆயாளுடைய குரல் தானா என்ற சந்தேகம் வருகிறது பையனுக்கு. அது அவளுடைய சாதாரணக் குரல் அல்ல. எவ்வளவு கோபமும் ஆத்திரமும் ஆக்ரோஷமும் தொனிக்கின்றன அந்தக் குரலிலே இப்பொழுது! வார்த்தை மழைக்கு இடையே ‘தடதட’ வென்றும், ‘மடமட’ வென்றும், ‘பளீர் பளீர்’ என்றும் அடிகள் விழும் சப்தமும் கேட்கிறது நடுநடுவே. கால்கள் பின்ன, இருட்டிலே தட்டுத் தடுமாறிக்கொண்டு சப்தம் கேட்கிற திசையை நோக்கி நடக்கிறான் சோமு. அம்மா... அம்மா... என்று குரல் கொடுக்கிறான். ஆனால் அவர்கள் செய்கிற கலாட்டாவிலே போடுகிற சப்தத்திலே அவன் குரல் அவர்கள் காதிலே எப்படி விழும்?...

     இந்த மூன்று குழந்தைப் பருவத்து நிகழ்ச்சிகளும் பிற்காலத்தில் சோமசுந்தர முதலியாருக்கு அடிக்கடி ஞாபகம் வரும். தம் குழந்தைப் பருவத்தைப் பற்றி எண்ணும் போதெல்லாம் ஆரம்பத்தில் ஓசை, ஒளி, புயல் என்கிற இதே வரிசையில் இந்த மூன்று விஷயங்களுமே ஞாபகத்துக்கு வரும். இதில் விசேஷம் என்னவென்றால், மூன்றாவது நினைவுக் காட்சி எப்பொழுதும் பூர்த்தியாகாமலே நின்று விடுகிறது. அவர்கள் சண்டையில் குறுக்கிட்டபின் என்ன நடந்தது என்பது ஞாபகமே வருவதில்லை.

     திடீரென்று ஒரு நாள் பையனுடைய கால் ஆடு சதையிலே ஈட்டி பாய்ச்சியது போல, நெருப்புச் சுட்டது போல ஓர் உணர்ச்சி. அவ்வளவுதான் சோமசுந்தர முதலியாருக்கு ஞாபகம் வந்தது. ஆனால் அவருடைய வலதுகால் ஆடு சதையிலே அவர் பெரியவரான பிறகு கூட நீண்ட வடு ஒன்று இருக்கத்தான் இருந்தது. அந்த வடுவின் காரணமாகிய சம்பவத்தைப்பற்றி அவர் மனசில் ஞாபகம் இருந்ததெல்லாம் ஈட்டியால் பாய்ச்சியது போன்ற, நெருப்புச் சுட்டது போன்ற அந்த ஒரே உணர்ச்சி தான். அந்தச்சம்பவத்தின் மற்ற அம்சங்களெல்லாம் அடியோடு மறந்து விட்டன.

     இன்னொரு ஞாபகம் அக்கா முனியக்கா செத்துக் கிடக்கிறாள். அப்போது சோமுப் பயலுக்கு வயசு மூன்றுக்கு மேல் இராது. ஆனால் முனியக்கா செத்துக்கிடப்பதும் அதை ஒட்டிய சில சம்பவங்களும் சிறுவனுடைய மனசிலே அழியாமல் பதிந்து விட்டன. அவன் ஆயாள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புரண்டு புரண்டு அழுகிறாள். ‘மடார் மடார்’ என்று அவள் அடித்துக் கொள்வது ஊரெல்லாம் ஒலிக்கிறது. நேற்றும் அதற்கு முன் தினமும் ஓடியாடி அவனைத் தூக்கி வைத்துக் கொண்டு அதட்டித் திட்டி அடித்துக் கிள்ளிப் படாத பாடும் படுத்தி வைத்த அந்த அக்கா முனியக்கா அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல், அசையாமல் கொள்ளாமல் கிடக்கிறாள். யாரும் கவனிக்காத சமயத்தில் ஜாக்கிரதையாக ஒரு விரலால் அவளைத் தீண்டிப்பார்க்கிறான் பையன். நெருப்பைத் தொட்டது போல அவன் தன் விரலையும் கையையும் பின்னுக்கு இழுத்துக் கொள்ளுகிறான். நேற்று பிடித்து வைத்த மழை ஜலம் போலச் சில்லென்றிருக்கிறது அவள் உடல். காரணத்தையே அறியாமல் “...க்கா! ...க்கா!” என்று பையனும் அழத் தொடங்குகிறான். அவனை எடுத்து அணைத்துக் கொண்டு அவன் ஆயாளும் ஓ வென்று அலறுகிறாள். இதற்குள் கறுப்ப முதலி வந்து விட்டான். பையன் மீண்டும் உரக்க அழத் தொடங்கியவுடன், “சும்மா கிடடா சவமே!” என்று சொல்லிவிட்டு அவன் அப்பன் அவனைக் ‘கரகர’ வென்று பிடித்திழுத்து ஆயாளின் மடியிலிருந்து கீழே தள்ளுகிறான். பிறகு முனியக்காளைத் தூக்கிக் கொண்டு போய் விடுகிறான். அக்கா திரும்பி வரவே இல்லை அப்பன் மட்டுந்தான் வந்தான்.

     வேறு ஒரு சம்பவம். அக்கா இறந்ததற்குப் பல நாட்கள் கழித்து நடந்தது இது. அவன் ஆயாள் அவனை இடுப்பிலே தூக்கிக்கொண்டு தெருவைத் தாண்டிப் போகிறாள். ஒரு வீட்டிற்குள் நுழைகிறாள். அவனை ரேழியில் ஒரு மூலையில் உட்கார வைத்துவிட்டு “எழுந்திருச்சியோ, தோலை உரிச்சுப்புடுவேன்” என்று சொல்லிவிட்டுப் போகிறாள். அவள் சொல்லிவிட்டுப்போனது அவனுக்கு ஞாபகம் இருந்தது. ஆனால் அதே இடத்தில் அவனால் அதிக நேரம் குந்தியிருக்க முடியவில்லை. எழுந்து ஆயாள் போன பக்கமே போகிறான். கூடத்தில் யாரும் இல்லை. ஒரு மூலையில் நாலைந்து துணிகள் கிடந்தன. சோமு எப்படியோ அந்தத் துணிகளண்டை போய் அவற்றின் மேல் படுத்து ‘ஹாய்யாக’ உறங்கிவிட்டான். ‘பளீர்’ என்று சொடுக்கிய புளிய மிலாறு முதுகில் உறைத்த பின் தான் விழித்துக்கொண்டான். “ராசா வூட்டுப்புள்ளே கெட்ட கேட்டுக்கு ...” என்று கூறிக் கொண்டே ஒருவர் புளிய மிலாற்றை மீண்டும் சொடுக்குவதைக் கண்டு அவன் வீறிட்டு அலறி ஊளையிட்டுக்கொண்டே ஓடிவிடுகிறான். ஆயாள் வந்ததும் அவளும் எதற்காக அப்படித் தன்னைப் புடைத்தாள் என்பது தான் அவனுக்குப் புரியவில்லை.

     இதைத் தொடர்ந்து வேறு ஒரு ஞாபகமும் இருந்தது சோமுவுக்கு. “பயலுக்கு துணிச்சல்தான் இங்கறேன். ஐயமாரு வூட்டுத் துணிலே படுத்து தூங்கறத்துக்கு இம்புட்டுப் பிள்ளைக்குத் துணிச்சல் வந்திரிச்சே” என்ற ஒருவன் பின் வருமாறு சமாதானம் சொன்னான்; “கறுப்பன் மவனுக்குத் துணிச்சலுக்கு குறைவா!” என்று.

     வேறு ஒரு சம்பவம். பையன் வீட்டிலே தரிக்காமல் தெருவிலே தெருவிலே ஓடிக்கொண்டிருக்கிறான். வீட்டிலே யாரும் இல்லை; அப்பனும் இல்லை. யாரோ தெருவோடு போய்கொண் டிருந்தவன் ஒருவன் சோமுவை நிறுத்தி “நீ யாரடா கறுப்பன் மவன்தானேடா!” என்று கேட்டான். கறுப்ப முதலியின் ‘மவனாக’ இருப்பதிலே தான் எவ்வளவு பெருமை! பையன் ‘ஆமாம்’ என்று சொல்லிப் பல்லை இளித்தான். விசாரித்த ஆசாமி அவனைத் தோளிலே தூக்கி வைத்துக் கொண்டு தெருக் கோடி வரையில் போனான். பயலுக்கும் அந்த மாதிரி அவன் தோளின் மேல் சவாரி செய்வது சுகமாகத்தான் இருந்தது. “ஹை! ஹை!” என்று வண்டி ஓட்டினான் ஒய்யாரமாக. தெருக்கோடியிலுள்ள மரங்கள் அடர்ந்த தோப்புக்குள்ளே புகுந்தான் பையனுடன் அந்த ஆசாமி. தான் மட்டும் தனியாக அந்தத் தோப்புக்குள்ளே போகப் பயப்படுவான் சோமு. ஆனால் அந்த ஆசாமி உடன் இருந்ததால் பயம் தோன்றவில்லை. தோப்பிலே அடர்ந்த இருட்டிய நடுப்பகுதியிலே அவனைத் தன் தோளினின்றும் இறக்கிக் கீழே விட்டான் அந்த ஆசாமி. பிறகு அவன் சோமுவை விசாரித்தான். “ஒங்கப்பன் எங்கேடா?” என்றான். “போயிருச்சு!” என்று கையை நீட்டிக் காட்டினான் பையன். “ஆயாள்?” “அதுவும் போயிருச்சு!” என்று மீண்டும் கையை நீட்டினான். “இந்தா பிடி. இதை வாங்கிக்கோ!” என்று அந்த ஆசாமி காரியத்தில் இறங்கிவிட்டான். அதற்குப் பிறகு நடந்ததற்கு என்ன அர்த்தம் என்று சிறுவன் சோமுவுக்கு அப்பொழுதும் புரியவில்லை; பின்னர் வெகுகாலம் வரைக்குங் கூடப் புரியவில்லை. உலக அநுபவம் நிறைய ஏற்பட்டுப் பல இடங்களிலும் அடிபட்டுப் புண்பட்டுப் பண்பட்ட பிறகுதான் சோமசுந்தர முதலியாருக்கு விஷயம் புரிந்தது. அந்த ஆசாமிக்குக் கறுப்ப முதலியுடன் ஏதோ சண்டை போலும் என்ன ஆத்திரமோ! எதற்காக ஆத்திரமோ! அந்த ஆத்திரத்தையும் கோபத்தையும் கறுப்ப முதலியிடமே காண்பித்து வஞ்சம் தீர்த்து கொள்வது நடக்காத காரியம். இதை அறிந்த அவன், கறுப்ப முதலியின் மகன், சிறு பையன், தன் கையில் சிக்கிக் கொண்டதும் தன் ஆத்திரமெல்லாம் தீர வஞ்சம் தீர்த்துக் கொண்டு விட்டான். பையனை அடித்து வெதுப்பி விட்டான். சிறுவனுடைய உடம்பெல்லாம் கனிந்து நீலம் பாய்ந்துவிட்டது. நல்லவேளையாகப் பையன் சிறிது நேரத்திற்கெல்லாமே பிரக்ஞை இழந்துவிட்டான். அந்தப் பூட்டுக்கு அவன் தப்பி பிழைத்தது ஆச்சரியமே! உடம்பு தேறி வீக்கம் வடிந்து அவன் மீண்டும் எழுந்து நடமாட ஒரு வாரத்திற்கு மேல் ஆயிற்று.

     தன்னை அப்படி அடித்தவனுடைய உருவமும் முகமும் சோமுவினுடைய மனசிலே நன்கு பதிந்து விட்டன. அந்த ஆசாமியை அவன் தன் ஆயுள் உள்ள அளவும் மறக்கமாட்டான். ஐம்பது அறுபது வருஷங்களுக்குப் பிறகு கண்டானானால் கூட அடையாளம் கண்டுகொண்டு விடுவான். ஆனால் அவன் மறுபடியும் சோமுவின் கண்களில் படவே இல்லை.

     இன்னொரு ஞாபகம் ஒரு நாள் பகல் பூராவுமே சூரியனைக் காண முடியவில்லை. வீட்டுக்குள் ஒளிக் குழாய் புகுந்து விளையாடவில்லை. வெளியே கிளம்ப வொட்டாமல் மழை ஓயாமல் தாரை தாரையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. சொட்டச் சொட்ட நனைந்துகொண்டே வீட்டிற்குள் வந்த கறுப்ப முதலியின் வாயில் ஒரு சுருட்டு, ‘தகதக’ வென்று எரிந்து புகைந்து கொண்டிருந்தது. இவ்வளவு ஈரத்திலும் காற்றிலும் மழையிலும் அந்தச் சுருட்டின் நுனியில் நெருப்பு எப்படி அணையாமல் பளிச்சென்று இருந்தது என்று ஆச்சரியத்தில் மூழ்கியவனாக அதையே பார்த்துக் கொண்டு நின்றான் பையன். கறுப்ப முதலி தன் வாயிலிருந்து சுருட்டை எடுத்து “உனக்கு வேணுமாடா பயலே!” என்று கேட்டுக் கொண்டே தன் மகனுடைய முகத்தண்டை கொண்டு வந்தான். ஆச்சரியமும் சிந்தனையும் கலைந்து பையன் விழித்துக்கொண்டான். நாக்குழறத் தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு மழை வேடிக்கை பார்க்கப் போய்விட்டான்.

     சற்று ஏறக்குறைய இதே சமயத்தில்தான் இருக்க வேண்டும் காவேரி ஆற்றிலே ஜலம் ஓடியதைப் போல மேட்டுத் தெருவிலும் ஜலம் ஓடத் தொடங்கிற்று ஒரு நாள். சோமுவின் வீட்டிலே முழங்கால் மட்டும் ஜலம் நின்றது. என்ன வேடிக்கை! திடீரென்று ஒரு நாள் அவ்வளவு ஜலமும் வற்றிப் பழையபடி ஆகிவிட்டதே மேட்டுத்தெரு என்று சோமுப் பயலுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

     ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்த பையனை எழுப்பிச் சாமி பார்க்க அழைத்துச் சென்றார்கள் கறுப்பனும் வள்ளியம்மையும். பட்டாணிக் கடலையையும் முறுக்கையும் வாங்கிக் கொரித்துக் கொண்டே சென்றனர். பையன் அப்பனுடைய தோள்மேல் ‘ஜாம் ஜாமெ’ன்று சவாரி செய்தான். அந்தக் கூட்டமும், தீவட்டிகளும், சாமியும், மேளமும் எல்லாம் மிகவும் உத்ஸாகமாக இருந்தன. அதிர் வேட்டுகளும் வாண வேடிக்கைகளும் பையனைப் பயமுறுத்தித் திகைக்க வைத்தன. சூரன் தலை விழுந்து விழுந்து மீண்டும் மீண்டும் முளைத்து மாறுவதைப் பார்த்த பையன், இரவு நடுச் சாமத்தில் வீடு திரும்பிய போது அப்பனுடைய தலைமயிரை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு, “ஒன் தலையை மாத்திக்கோ மாத்திக்கோ” என்று சொல்லி உலுக்கினான். உபத்திரவம் தாங்கமாட்டாமல் கறுப்பன் அவனைத் தன் தோளில் இருந்து கீழே இறக்கி விட்டு முதுகிலும் ஒன்று ஓங்கி வைத்த பின்தான் அடங்கினான் பையன்.

     சோமசுந்தர முதலியாருடைய குழந்தைப் பருவத்து ஞாபகங்களிலே கடைசியாக ஒன்று மற்ற நினைவுகளுக்கெல்லாம் சிகரம் வைப்பது போன்றது. அந்தச்சம்பவம் நடந்த போது சோமுவுக்கு வயசு நாலு இருக்குமோ ஐந்து இருக்குமோ அவ்வளவுதான். அதற்குமேல் இராது. அந்தச் சம்பவத்தில் பல அம்சங்கள் பையனுக்கு அப்பொழுது புரியவில்லை; வளர்ந்து பெரியவனான பிறகுதான் புரிந்தன. ஆனால் சம்பவம் பூராவும் அவன் நினைவிலே விடாது தொத்திக் கொண்டிருந்தது.

     யாரோ ஏழெட்டு முரட்டு ஆசாமிகளாக வந்து நள்ளிரவில் நல்ல குடி வெறியுடன் படுத்து உறங்கிக் கிடந்த கறுப்ப முதலியைக் கட்டிப் போட்டுவிட்டார்கள். பையன் தூக்கத்திலிருந்து விழித்துப் பார்த்தபொழுது கறுப்பன் கீழே கிடத்தப்பட்டிருக்கிறான். அவன் கைகளும் கால்களும் உறுதியான தாம்புக்கயிறுகளால் கட்டப் பட்டிருக்கின்றன. தலைவிரி கோலமாகக் காளி சொரூபமாகத் தன் கணவனைக் கட்டிக் கிடத்தியவர்களைக் கிழித்துக் கொல்ல விரும்புகிறவள் போலப் பாய்ந்து தைரியமாக ஆக்ரோஷத்துடன் அந்த ஏழெட்டு ஆண் பிள்ளைகளையும் எதிர்க்கிறாள் ஆயாள். தனியாக அவர்களில் யாரும் அவளுக்கு பதில் சொல்லி மீண்டிருக்க முடியாது என்பது நிச்சயம். ஆனால் எல்லோருமாகச் சேர்ந்து அவள் மேல் பாய்ந்து அவளைப் பிடித்து நிறுத்தி ஓர் அறைக்குள் போட்டுக் கதவைத் தாழிட்டு விடுகிறார்கள். கதவு நல்ல உறுதியான கதவு. கதவைப் போட்டுக் கையாலும் காலாலும் ‘தடால் தடால்’ என்று உதைக்கிறாள் வள்ளியம்மை. அவளையோ அவள் கூக்குரல்களையோஅவள் கதவைப் போட்டு உடைப்பதையோ யாரும் லக்ஷ்யமே செய்ய வில்லை. கட்டிக் கீழே கிடத்தியிருக்கும் கறுப்பனை இருவர் தூக்கிப் போகிறார்கள். கறுப்பன் வாயில் வந்தபடியெல்லாம் பேசி இரைகிறான். அவன் வாய்க்குள் வைக்கோலைப் பந்தாகச் சுருட்டிக் கொடுத்த பின்தான் அவன் பேசுவது நிற்கிறது. அவனைத் தூக்கிக் கொண்டு போய் வெளியில் தயாராக நின்ற பார வண்டியிலே ஏற்றுகிறார்கள். கறுப்பன் கிடந்த இடத்தில் தரைமேல் சிவப்பாக இரத்தம் கசிந்திருக்கிறது. அவனோடு போர் தொடுக்க வந்தவர்களில் இருவருடைய உடலிலும் இரத்தம் கசிந்திருந்தது என்பதைத் திருப்தியுடன் கவனித்தான் கறுப்பனின் பையன். வந்திருந்தவர்களும் ஒருவர் பின் ஒருவராகப் பார வண்டியில் ஏறிக் கொள்ளுகிறார்கள். அவர்களுள் இருவரைச் சோமு அதற்கு முன் பார்த்திருக்கிறான். ஊர்த் தலையாரி ஒருவன் இன்னொருவன் கடைத் தெருவிலே வாழைப் பழக் கடை வைத்திருப்பவன். மற்றவர்கள் எல்லோரும் அந்நியர்கள்; சாத்தனூர்க்காரர்களே அல்ல. வாயில் விரலைப் போட்டுச் சுவைத்துக் கொண்டே, நடப்பது எதிலுமே சம்பந்தப் பட்டுக் கொள்ளாமலே நிற்கிறான் சோமு. ஆனால் அவனையும் எப்படியாவது அந்தச் சம்பவத்திலே சம்பந்தப்படுத்திவிட வேண்டும் என்று நிச்சயம் செய்து கொண்டவன் போலக் கடைசி ஆசாமி பார வண்டியில் ஏறிக் கொள்ளுவதற்குமுன் பையனண்டை வந்து, “அப்பனைப் போல இல்லாமல் நீயாவது யோக்கியமாகப் பிழையடா பயலே!” என்று உரக்கச் சொல்லிவிட்டுப் ‘பளா’ரென்று அவன் கன்னத்திலே ஓர் அறை விட்டான். சோமுவின் காது பாடிற்று. அவன் தலை சுற்றிற்று. அந்த வார்த்தைகள் அவன் காதிலே அவன் ஆயுள் பூராவுமே ரீங்காரமிட்டன என்று சொல்வது மிகையாகாது. சோமுப்பயல் பெரியவனாகிப் பணக்காரனாகிப் பதவி பெற்றுப் பட்டம் பெற்று நல்ல ஸ்திதியை அடைந்த பிறகுங்கூடப் பல நாட்கள் முன்னிரவில் படுக்கையில் படுத்து புரண்டபடியே இந்த வார்த்தைகளை மனசில் புரட்டிப் புரட்டிச் சுவைத்துப் பார்ப்பார் சிந்தித்துப் பார்ப்பார்.

     ‘சலசல’வென்று நள்ளிரவில் வண்டி மாடுகளின் சலங்கைகள் சப்திக்கப் பார வண்டி கறுப்பனைச் சுமந்து கொண்டு கிளம்பிற்று. அந்தப் பாரவண்டி மேட்டுத்தெருத் திருப்பம் திரும்பி, ராஜ பாட்டையை அடைந்து சலங்கைகளின் மணி ஓசையும் காற்றிலே அடங்கும் வரையில் மேட்டுத் தெருவில் யாரும் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வரவே இல்லை. பிறகு வந்து வள்ளியம்மை அடைபட்டிருந்த கதவைத் திறந்து அவளை வெளியே விட்டார்கள். அப்படித் தன்னை வெளியே விட்டதற்கு நன்றி பாராட்டாமல் வள்ளியம்மை எல்லோர் மேலும் விழுந்து அடித்துப் பேய் பிடித்தவள்போல நடந்து கொண்டாள். அவளையும் சோமுவையும் தனியே விட்டுவிட்டு மற்றவர்களெல்லோரும் போய்விட்டார்கள்.

     அதற்குப் பிறகு சோமு தன் தகப்பனை மறுபடியும் பார்க்கவே இல்லை.

     இந்த சம்பவத்தினுடைய முழு அர்த்தத்தையும் பின்னர் பிறர் சொல்லித்தான் கொஞ்சம் கொஞ்சமாகச் சோமு அறிந்து கொண்டான். கறுப்பமுதலி ஒருநாள் மாலை குடிவெறியிலே யாரோ ஒரு புது ஆசாமியிடம் சாத்தனூருக்கே புதியவன் சண்டை போட்டு அவனை நையப் புடைத்துவிட்டானாம். அந்தப் புது ஆசாமி அங்கேயே, நின்ற இடத்திலேயே சுருண்டு விழுந்து செத்துவிட்டானாம். ஊர்த் தலையாரியும் பட்டாமணியக்காரரும் மற்றும் பலரும் சேர்ந்து கறுப்பனை ஒழிக்க இதுதான் சமயம் என்று ஏற்பாடு செய்தார்கள். பிள்ளைமார் தெருவிலும், அக்கிரகாரத்திலும் கறுப்பனுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்யப் பலர் தயாராக இருந்தார்கள். கறுப்பன் ஒருவனைப் பிடிக்க ஏழெட்டு ஆண்பிள்ளைகள் தைரியமாக வந்து, இரவில் அவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது கட்டிப் போட்டு விட்டார்கள். கும்பகோணத்தில் தாணாவுக்குக் கொண்டுபோய்ப் போலீசாரிடம் ஒப்படைத்தும் விட்டார்கள். அதற்குப் பிறகு கறுப்பன் என்ன ஆனானோ! சோமுவுக்குத் தெரியாது! தூக்கிலிடப்பட்டு உயிர் நீத்தானோ அந்தமானில் கல்லுடைத்துக் கருமந் தீர்த்தானோ? சோமு அறிந்து கொள்ள விரும்பியதே இல்லை என்ற தான் சொல்லவேண்டும்.

     வள்ளியம்மை அந்த இரவுக்குப் பிறகு கறுப்பனைப் பற்றி ஒரு நாளாவது பேசியதில்லை. நாளடைவில் அவள் அவனுடைய ஞாபகத்தையே தன் மனசிலிருந்து அழித்துவிட்டாள் என்று தான் தோன்றிற்று. ஆனால் அவள் முன் போல் இல்லை; புது மனுஷியாக மாறிவிட்டாள். கறுப்பன் என்ன ஆனான்; என்ன ஆவான் என்று கூட அப்பொழுதோ, பிறகோ அவள் விசாரிக்கவே இல்லை. தன் துக்கத்தைத் தனக்குள்ளேயே வைத்து வளர்க்கப் போதிய தெம்பு அவளுக்கு இருந்தது.

     இந்தச் சம்பவத்துடன் சோமுவின் குழந்தைப்பருவம் முடிந்து விட்டது என்று வைத்துக்கொள்ளலாம். அவனுக்கு வயசு ஐந்தாகி விட்டது அறிவு உதயமாகிக்கொண்டிருந்தது.

சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் :  அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி :  சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி :  மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல் | கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் :  திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் :  அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் :  தினசரி தியானம்