முதற்பகுதி : உதயம்
அத்தியாயம் 2. அவதாரம்

     புண்ணிய பூமியாகிய பரத கண்டத்திலே,தேன்மொழியாம் தமிழ் மொழி வழங்கும் தென்னாட்டிலே, எல்லா வளங்களும் ஒருங்கே செழித்துக் கொழிக்கும் காவேரி நதியின் தீரத்திலே, திவ்விய க்ஷேத்திரமாகிய சாத்தனூரிலே, ஆயிரம் நாப்படைத்த அந்த ஆதிசேஷனும் அளவிட்டுச் சொல்ல முடியாத அருமை பெருமைகள் படைத்த மேட்டுத்தெருவிலே, சுமார் ஐம்பது ஐம்பத்திரண்டு வருஷங்களுக்கு முன் அவதாரம் செய்தருளினான் சோமு.

     அவன் அவதாரத்துக்கு முக்கிய காரணமானவர்கள் அவன் பெற்றோர் கறுப்ப முதலியும் வள்ளியம்மையுந்தாம். கறுப்ப முதலி என்பவன் வள்ளியம்மையின் கணவன் அல்ல. ஆதிகாலத்தில் வள்ளியம்மைக்குக் கணவன் என்று ஒருவன் இருந்ததுண்டு. ஆனால் அந்தக் கணவன் சோமுவின் திருவவதாரத்துக்கு ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னமே வள்ளியம்மையுடன் சேர்ந்து வாழ்வதில் உள்ள சிரமங்களைப் பரிபூரணமாக உணர்ந்து ‘நம்மால் இது ஆகாது’ என்று தீர்மானித்து ஒதுங்கி விட்டான்; சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டான். பருவத்தில் சுதந்திரமாக வள்ளியம்மை தன்னை சேர்த்துக் கொள்ளுவாருடன் சேர்ந்து கொண்டு காலம் கழித்து வந்தாள். இது போன்ற காரியங்கள் அன்றும் சரி இன்றும் சரி மேட்டுத் தெருவிலே மிகவும் சகஜமானவைதாம். கறுப்ப முதலியுடன் அவள் வாழ்ந்த காலத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள். மூத்தது பெண், ஐந்து வயதில் மரித்துவிட்டது. இரண்டாவதுதான் பிள்ளை, சோமு என்கிற சோமசுந்தரம். 

     சகல விதங்களிலும் வள்ளியம்மை மேட்டுத்தெருப் பெண்களின் பிரதிநிதியாக இருக்க லாயக்கானவள். மேட்டுத் தெருவாரின் குணாதிசயங்கள் எல்லாமே ஆண் பெண் இருவருடைய குணாதிசயங்களுமே வள்ளியம்மையிடம் அடைக்கலம் புகுந்திருந்தன என்று சொல்லலாம். யாரும் நிகரில்லை என்று பேசுவாள் யாரும் நிகரில்லை என்றுதான் நடப்பாள். உருவத்திலே அவள் பெண் தான் சற்று வசீகரமான பெண்தான் என்று கூடச்சொல்லலாம். நல்ல உறுதியும் வலுவும் பெற்ற தேகக்கட்டு; பளபளவென்று இருண்ட மேனி; சிக்குப்பிடித்த நீண்ட கூந்தல்; தைரியமாக நிமிர்ந்து யாரையும் உருட்டிப் பார்க்கும் அகன்ற விழிகள். இடுப்பிலே சிவப்புத்துணி. நெற்றியிலே ரத்தச் சிவப்பான குங்குமமும் இருண்ட மேனியும் அகன்ற கண்களும் பளபளக்க அவள் தெருவில் பவனி வரும் போது சக்தி பக்தர்களுக்குக் கை எடுத்துக் கன்னத்திலே போட்டுக் கொள்ளவேண்டும் என்றுதான் தோன்றும். மகமாயி ஆதி மகமாயி உருவத்திலே சற்றேறக்குறைய இவளைப் போலத்தான் இருப்பாள் என்று பக்தர்கள் எண்ணியதில் தவறில்லை என்று தான் சொல்லவேண்டும்.

     வாய்த்துடுக்கிலும், அட்டகாசத்திலும், உடல் வலுவிலுங்கூட அவள் மேட்டுத்தெரு ஆண்களுக்குச் சரி நிகர் ஆனவள்தான். அவளுக்குக் கணவனாக இருந்து ஈடு சொல்லமாட்டாதவன் அவன். இருவரும் சேர்ந்து கணவனும் மனைவியுமாக வாழ்ந்ததெல்லாம் நாலைந்து மாசங்கள்தாம். ‘மனைவிக்குப் பயந்துதான் ஓடிவிட்டான் அவன். நாகப்பட்டினம் சேர்ந்து அக்கரைச் சீமைக்குக் கப்பல் ஏறும் வரையில் மேற்குப்பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அவ்வளவு பயம் அவனுக்கு’ என்று ஊரார் சொல்லிக் கொண்டார்கள். தன்னைத் தொட்டுத்தாலி கட்டினானே என்பதால் திரும்பி வந்தால் அவனைச் சரியானபடி உரிய மரியாதைகளுடன் வரவேற்க வேண்டுமே என்று வள்ளியம்மை இரண்டொரு மாசங்கள் காத்திருந்தாள். பிறகு காத்திருந்தது போதும் இனி வரமாட்டான் என்று தீர்மானித்துத் தன் இஷ்டப்படி திரியத் தொடங்கிவிட்டாள்.

     அவளுடைய காதல் நாடகங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. அவை பற்றி விரிவாக எதுவும் சொல்லி இங்கே கணக்கெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சித்திரபுத்திரன் கணக்கெழுதி வைத்திருப்பான். ஆனால் அவனால் கூடப் பூராவும் எதுவும் விடாமல் எழுதியிருக்க முடியுமா என்பது சந்தேகந்தான். சலிப்பெய்தி ஒன்றிரண்டு சம்பவங்களை அவன்கூட விட்டிருந்தாலும் விட்டிருப்பான்!

     எல்லா விதங்களிலுமே அவளுக்கு ஏற்றவனான கறுப்ப முதலியுடன் சிநேகம் ஏற்படும் வரையில் அவள் தன் இஷ்டப்படியெல்லாம் திரிந்து கொண்டிருந்தாள். கறுப்பனைச் சந்தித்து, சிநேகம் செய்து கொண்ட பிறகு ஏதோ புரோகிதர் எதிரே, அக்கினி சாட்சியாக, அருந்ததி பார்த்துக் கல்யாணம் செய்து கொண்ட மாதிரிதான், இருவரும் மனம் ஒத்துச் சேர்ந்து குடித்தனம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள். அதற்குப் பிறகு வள்ளியம்மை பிற புருஷனைக் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை என்று சொல்லத்தான் வேண்டும்.

     தினம் பொழுதுவிடிந்தால், பொழுது சாய்ந்தால் கறுப்பனுக்கும் வள்ளிக்கும் இடையே நடக்கும் சண்டைகளுக்கும் சல்லாபங்களுக்கும் குறைவில்லை. இரண்டும் பகிரங்கமாகத் தெருவிலேதான் நடக்கும். அவர்களுக் கிடையே நடப்பது எதற்குமே ஒளிவு மறைவுக்கு அவசியமே இல்லை!

     மேட்டுத்தெருவிலே இந்த மாதிரி காட்சி சகஜந்தான் என்றாலும், மேட்டுத்தெரு வாசிகள் கூடக் கறுப்பனும் வள்ளியும் சண்டை போடுகிறார்கள் என்றால் தூரத்தில் நின்று, பயபக்தியுடன், அதை ஒரு லட்சியச் சண்டையாகப் பாவித்துக் கவனித்துப் பல புதுப்புது விஷயங்களைத் தெரிந்து கொள்வார்கள்.

     இதெல்லாம் எப்படி இருந்தால் என்ன? வள்ளி என்றால் கறுப்பனுக்கு ‘உசிரு’. கறுப்பன் என்றால் வள்ளிக்கும் அப்படியே.

     காதல் என்கிற இந்த விஷயத்தில் மட்டும் ஏன், எப்படி என்று ‘கிண்டிக் கிண்டித்’ தத்துவ ஆராய்ச்சி செய்து பார்ப்பதிலே லாபம் இருப்பதே இல்லை. ஈசுவர சிருஷ்டி என்னவோ அப்படித்தான்!

     கறுப்ப முதலி வெறும் அட்டகாசத்தினாலேயே வாழ்க்கைப் போரை மிகவும் வெற்றிகரமாக நடத்தி வந்தவன். மேட்டுத்தெரு மட்டுமல்ல சாத்தனூர் முழுவதிலுமே அவன் அட்டகாசம் செலாவணி ஆகி வந்தது. சின்ன விஷயங்கள் முதல் பெரிய காரியங்கள் வரையில் எல்லாம் அவன் சக்திக்கு உட்பட்டவைதாம்.

     அக்கிரகாரத்திலே போய் வாழைத்தாறு விலைகேட்பான். விலை படியாது. “பூமாலை மவன் கறுப்பன் கிட்டேயா சாமி நீ இப்படி பேரம் பண்றே? உம்... நாளைக் காலையிலே அந்தத்தாறு அந்த மரத்திலே இருந்திடுமா?” என்று மீசையில் கை போட்டபடியே கேட்டுவிட்டுத் திரும்பி அலட்சியமாக ஆடி அசைந்துகொண்டு அங்கிருந்து நகருவான். அதற்குள் ‘இதேதடா வம்பில் மாட்டிக்கொண்டோமே!’ எள்று தோட்டக்கார ஐயருக்குத் தோன்றிவிடும். கறுப்பனைத் திருப்பிக் கூப்பிட்டு நயமாகப் பயபக்தியுடன் பேசி அவன் கேட்ட விலைக்குக் காலணா அரையணாக் குறைவாகவே அவனிடம் வாழைத்தாறை விற்றுவிடுவார். “ஆம்புள்ளைச் சிங்கமாக்கும் இந்தக்கறுப்பன்!” என்று மீசை மேல் போட்ட கையை எடுக்காமலே முணுமுணுத்துவிட்டுப் பிறகு அந்த வாழைத்தாறைத் தூக்கமாட்டாமல் தூக்கிக் கொண்டு போய்க் கருப்பன் கடைத் தெருவில் விற்று விடுவான். வாங்கியது போலத்தான் விற்பதும். வாங்கிய விலைக்குச் சரியாக இரண்டு பங்கு கேட்பான். சரியாக இரண்டு பங்கு; அதற்கு மேலும் கேட்க மாட்டான்; குறைவாகவும் கேட்க மாட்டான் . வாழைத்தாறுடன் கருப்பனைக் கண்டதுமே கடைக்காரர்கள் பயந்து போவார்கள்; யார் மடியில் இன்று கை வைக்கப் போகிறானோ என்று அந்தரங்கத்தில் பீதி அடைவார்கள். “என்ன கருப்பண்ணே? நீயே தூக்கிட்டு வரணுமாங்காட்டியும் இத்தே! சொன்ன காசைக் கொடுத்திட்டு நான் போய் எடுத்திட்டு வந்திட மாட்டேன்!” என்று மரியாதையாகப் பேசிக் கொண்டே கடைக்காரன் கறுப்பன் கேட்ட காசை எடுத்து மறு பேச்சு பேசாமல் அவனிடம் கொடுத்து விடுவான். கடைக்காரன் மனசில், “நல்ல வேளை; இன்னிகுச் சனியன் ஒரு வழியாக விட்டது. அதிகமாகக் கேக்காமே போனானே! என்னிக்கித்தான் இந்தக் கறுப்பு ஊரிலேருந்து ஒழியுமோ?” என்று இருக்கும். இன்னும் என்னவெல்லாமோ கூட இருக்கும். ஆனால் அதையெல்லாம் மனம் விட்டு வெளியே சொல்லிவிட முடியுமா?

     ஊரில் அநியாய விவகாரம் செய்ய முயலுபவர்கள் எல்லோருக்குமே உற்ற துணைவன் கறுப்ப முதலிதான். முந்திக் கொண்டு அவனைத் தன் கட்சியில் சேர்த்துக் கொள்ளுகிறவன் தான் அதிர்ஷ்டசாலி. அவன் பக்கந்தான் இறுதி வெற்றி என்பது நிச்சயம். கொஞ்சம் நில புலங்களும், நிறையப் பொழுதும், அரை குறைச் சட்ட ஞானமும், அளவற்ற பொருளாசையும் படைத்த மிராசுதாரர்கள் நிறைந்த சாத்தனூரிலே நாள் தப்பினாலும் விவகாரம் தப்பாது. நாளொரு மேனியும் விவகாரத்திற்கு ஒரு வண்ணமுமாகக் கறுப்ப முதலியின் செல்வாக்கு, சாத்தனூர் கிராமத்திலே வளர்ந்து கொண்டிருந்தது.

     சிலம்ப வித்தையிலே சூரன் என்ற புகழ் அவனுக்கு அந்தப் பிராந்தியத்திலே. அந்த நாளில் சிலம்பத்திலே அவனை வெல்வதற்கு ஆள் கிடையாது என்று சொல்லிக் கொண்டார்கள். அதாவது பிச்சாண்டியைத் தவிர. ஆனால் அந்தப் பிச்சாண்டி மாத்திரம் யார்? அவனும் அதே மேட்டுத் தெருவான்தானே!

     உள்ளதெல்லாம் போதாது என்று பிச்சாண்டியே கறுப்பனுக்கு உறவு. ஏதோ சிற்றப்பன் முறை என்றும் உறவு விட்டுப் போகாமல் பிச்சாண்டியும் கறுப்பனும் அடிக்கடி ரகசியத்தில் சந்தித்து அளவளாவினார்கள் என்றும் ஊரில் வதந்திகள் பரவிக் கொண்டிருந்தன. தன் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்துவதற்காகக் கறுப்பனே இம்மாதிரி வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருந்தான் என்று பலர் அறிந்து கொண்டார்கள் ஆனால் அறிந்து கொண்டதை எல்லாம் பகிரங்கமாக வெளியே சொல்லி விட முடியுமா?

     வள்ளியம்மை தன்னுடைய அருமை மகன், ஒரே மகன் சோமுவைப் பெற்றெடுத்த போது கறுப்ப முதலியின் செல்வாக்கு சாத்தானூரிலும் சுற்று வட்டப் பிரதேசத்திலும் உச்ச நிலையை எட்டியிருந்தது.

     சோமு பிறந்த அன்று இவ்வுலகிலே என்ன என்ன அற்புதங்கள் நிகழ்ந்தன என்று பௌராணிகர்கள் யாரும் எழுதி வைக்கவே இல்லை. அவர்கள் மேல் பிசகு  என்றும் சொல்லி விட முடியாது. சோமு என்று ஒருவன் பிறந்ததோ பிறக்கப்போகிறான் என்பதோ பௌராணிகர்களுக்குத் தெரியவே தெரியாது. அவர்கள் கலிகாலத்தில் உலகை உய்விக்கவென்று தோன்ற இருந்த கல்கி அவதாரத்தின் ஆகிருதியைச் சிந்திப்பதிலேயே தங்கள் கற்பனையின் எல்லைகளை எட்டி விட்டார்கள். அதற்குப் பின்னர் அவர்கள் கற்பனை சூனியமாகி விட்டது. சிந்தனை சுருங்கி விட்டது.

     சோமு பிறந்த அன்று எவ்வளவோ அற்புதங்கள் நிகழத்தான் நிகழ்ந்திருக்கும். ஆனால் அற்புதங்களை நம்பாத காலம் இது. புத்தன், ஏசு முதலியவர்கள் பிறந்த காலத்திலே அற்புதங்கள் நிகழ்ந்தன என்று கவிகள் எழுதி வைத்திருப்பதை நம்பாமல், “கவிகள் பொய் சொல்கிறவர்கள். உண்மை ஒன்றையே லஷ்யமாகவும் அடிப்படை யாகவும் கொண்ட தினசரிப் பத்திரிகைகளில் வந்தால்தான் எதையுமே நாங்கள் நம்புவோம்” என்று சொல்லுகிற ‘பொதுஜன’ காலம் அல்லவா இது? 

     தவிரவும் சோமு பிறந்த அன்று அற்புதங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்கிற அவசியந்தான் என்ன? அப்படி ஏதாவது அற்புதம் நிகழ்ந்திருந்தாலும் யார் கவனித்து ஞாபகம் வைத்திருக்கப் போகிறார்கள்?

     ‘சோமு என்கிற இவனை ஏன் படைத்தோம் எதற்காகப் படைத்தோம்?’ என்று அறியாமல் பிரம்மதேவனே ஒரு விநாடி சிந்தனையில் ஆழ்ந்து திக்கு முக்காடிப்போய்ச் சிருஷ்டித் தொழிலைச் செய்யா திருந்துவிட்டால் கூட அது பூலோகத்தில் யாருக்குத் தெரியப் போகிறது?

     அதெல்லாம் ஒரு புறம் இருக்க வள்ளி கறுப்பன் இவர்களின் காதற் கனியாகச் சோமு பிறந்ததே ஓர் அற்புதந்தானே! இந்த ஓர் அற்புதம் போதாதா சோமு புராணத்திற்கு ஆதாரம் கொடுக்க?

     அவன் என்று, எந்தத் தேதியில், எந்தக் கிழமையில் பிறந்தான் என்று கூட இப்போது நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. சுமார் ஐம்பது ஐம்பத்திரண்டு வருஷங்களுக்கு முன் ஒரு நாள் முன்னிரவில் பிறந்தான். சோமுவின் அவதார காலத்தைப் பற்றி இப்பொழுது நிச்சயமாகத் தெரிந்ததெல்லாம் இவ்வளவுதான்.

     மேட்டுத் தெருக் குழந்தைகளுக்குச் சாதாரணமாக யாருமே ஜாதகம் கணிப்பது வழக்கமில்லை. ஆகவே சோமு பிறந்தபோது நவக்கிரகங்களும், அவர்களின் மனைவிமார்களும் எந்த எந்தத் திசையில் யார் யாரை எப்படி எப்படிப் பார்த்துக்கொண்டு, நேசமாகவோ கோபமாகவோ வக்கிரமாகவோ வீற்றிருந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. 

     மேட்டுத் தெருக் குழந்தைகளுக்கென்றே காத்துக்கிடக்கும் யமனையும் மூதேவியையும் மீறி வளர்ந்து சோமு பெரியவனாவான், பணக்காரனாவான், ஒரு நாவலுக்கே கதாநாயகன் ஆவான் என்று மேட்டுத் தெருவில் அன்றிரவு யார் எதிர்பார்த்தார்கள்?

     சோமு பிறந்ததற்கு மறு விநாடி அவன் போட்ட கூச்சல் மேட்டுத்தெரு மட்டுமல்ல, அக்கிரகாரம், பிள்ளைமார் தெரு இரண்டு மட்டும் அல்ல, அவற்றையும் தாண்டிச் சாத்தனூர்க் கிராமம் முழுவதிலும், அதற்கப்பால் சில இடங்களிலுங்கூடக் கேட்டது என்று கொஞ்ச நாள் உலாவிய வதந்தி உண்மையாகவே இருக்கலாம். ஏனென்றால் சோமுவின் குரல் பின்னரும் அசாதாரணமானதாகத்தான் இருந்தது.

     அவன் தாயார் வள்ளியம்மை அன்பு ததும்பி வழிந்தோட அவனிடம் முதல் முதலாகச் சொன்ன வார்த்தைகள் இவை தாம் : “சனியனே! வாயை மூடுடா! சனியனே!”

     இந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கறுப்ப முதலி கீழ மாங்குடியிலிருந்து நேராக வந்து கொண்டிருந்தவன் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தவனாக நிலைப்படியில் சாய்ந்துகொண்டு நின்றான். பிறகு, “இப்ப வேண்டாம்” என்று முணுமுணுத்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். என்ன வேண்டாம், எப்போது வேண்டாம், ஏன் வேண்டாம் என்கிற விஷயங்கள் யாருக்கும் தெரியா. இரவு பூராவும் நிர்மலமான நிலவிலே, வாய்க்கால் மதகின்மேல் படுத்து உறங்கிவிட்டு மறுநாள் காலையில் வீடு திரும்பியபோது இரவு அவன் சொன்ன வார்த்தைகள் அவனுக்கே ஞாபகம் இல்லை. அவற்றின் அர்த்தம் என்ன என்று கடவுள்தான் சொல்ல வேண்டும்.

     ஆனால் கடவுள் எதற்குமே என்ன அர்த்தம் என்று தான் சொல்லுவதில்லையே!