உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் 1. ஆலங்கட்டி மழை காற்றோ, மழையோ, வெயிலோ, நிழலோ, குழந்தைகளுக்கு எப்பொழுதும் வெட்டவெளியில் விளையாடுவதுதான் இஷ்டம். முன்ஜாக்கிரதையுள்ள பெற்றோர்கள், இதற்கு இடங்கொடுக்க மாட்டார்கள். ஆனால், வீரமங்கலம் கிராமத்திலிருக்கும் பெற் றோர்களோ, இதற்கு நேர்விரோதம். அவர்கள்மேல் தப்பில்லை; அவர்களுடைய குழந்தைகள் அடங்காப்பிடாரிகள்; சொன்னாலும் கேட்கமாட்டார்கள். வீரமங்கலம், காவேரிக்கரையோரமுள்ள ஒரு சிறு கிராமம். அதற்கும் ரெயிலடிக்கும் 10 மைல் தூரம் இருக்கும். இந்த 10 மைலில், காவேரியே 1 மைல் தூரம்; 5 மைல் காட்டுப்பாதை; பாக்கி 4 மைல், வண்டிகள் போக்குவரவுக்கு வசதியுள்ள ரஸ்தா. இப்படிப்பட்ட ஊர், இந்தக் காலத்தில்கூட நவீன நாகரிகங்களிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறது என்றால், அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை; அதனுடன், சுமார் இருபத்தைந்து வருஷங்க ளுக்குமுன், புராதனமான கிராமவாழ்க்கையிலிருந்து எள்ளளவும் பிசகவில்லையென்று சந்தேகமின்றிக் கூறலாம். வீரமங்கலத்துக் குழந்தைகள் அடங்காப்பிடாரிகளென்று முன்னமே சொன்னோம். அவர்களுக்குக் காற்று, மழை என்றாலே, ஒரே கொண்டாட்டம். ஏனென்றால், ஊரெல்லாம் தென்னஞ் சோலையாதலால், காற்றுக்குத் தென்னை நெற்றுக்களும் பழுத்த மட்டைகளும் உதிரும். இவைகளைப் பொறுக்குவதற்கு அச்சிறுவர்கள் பயமற்று இங்குமங்கும் ஓடித் திரிவார்கள். அதிலும் வெயிற்காலத்தில் ஒரு புயற்காற்று அடிக்க ஆரம்பித்தாலோ, அவர்களுடைய ஆனந்தத்திற்கு அளவே இல்லை. கோடை மாம்பழக் காலமல்லவா? மாம்பழத்துக்கு ஆசைப்படாத குழந்தை எது? வீரமங்கலத்திலோ, மாமரத்துக்குப் பஞ்சமே இல்லை. மூலைமுடுக்கெல்லாம் மாமரந்தான். வாய்க்கால் கரை யெல்லாம் மாமரந்தான். ஆனால், யாரோ கஷ்டப்பட்டுப் பயிரிட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். எந்தக்காலத்திலோ, யார் பழத்தைத் தின்று கொட்டையை எறிந்தார்களோ, மரங்கள் மட்டும் வளர்ந்துவிட்டன. காயோ பழமோ, தேவையானவர்கள் தங்களுக்கு இஷ்டமான மரங்களில் பறித்துக் கொள்ளலாம்; கேட்பார் இல்லை. ஆனால், நாரில்லாத பழம் மட்டும் மருந்திற்குக் கூடப் பார்க்க முடியாது. இதனால், வீரமங்கலத்துக் குழந்தைகளுக்கு யாதொரு குறைவும் இல்லை. ஒட்டு மாம்பழத்தை அவர் கள் எப்பொழுதும் தின்றிராவிடினும், உள்ளூர்ப் பழத்தின்மேல் அவர்களுக்கு ஆசை அதிகமென்பதைத் திண்ணமாகச் சொல்லலாம். ஏனெனில், இவைகளுக்கு இனிப்பும் அதிகம்; ஒருமணி நேரத்திற்குக் குறையாமலும் ஒரு பழத்தைச் சாப்பிடலாம்; இல்லாவிடில், சடைசடையாய் நார் இருப்பதன் பயன் என்ன? இக்குழந்தைகளின் மாம்பழ ஆசையெல்லாம், ஒரு கோடை நாள் பிறபகலில் நிறைவேறிற்றென்றே சொல்லலாம். இருண்ட மேகங்களால் ஆகாயமெல்லாம் கருக்கல் மேலிட்டிருந்தது. இடியும் மின்னலும் இவ்வளவென்று சொல்லமுடியாது. பிரம்மாண்ட மான மழை பெய்வதற்கு வேண்டிய குறிப்புக்கள் இருந்தன. ஆயினும், மேகங்களைத் துரத்தி மழையைத் தடுப்பதற்கு ஒரு பெருங்காற்றுக் கிளம்பிற்று. அவ்வளவுதான்; குழந்தைகளெல்லாம், மாமரங்களிடம் ஓட்டம் பிடித்தார்கள். காற்றின் அகோர வேகத்தால் மேகங்கள் சிதறிப் போயினவே யொழிய, ஒருதுளி மழைகூடக் கீழே விழவில்லை. மரங்களெல்லாம் தவித்துத் தடுமாறித் தலைவிரித்தாடின. அப்பொழுது உதிர்ந்த மாம்பழங்களுக்குக் கணக்கே இல்லை. அரைப்பழம், முழுப்பழம், அணில் கடித்த பழம் - எல்லாவிதங்களும் பழமாரியாய்ப் பொழிந்தன. ஒவ்வொரு குழந்தைக்கும் தான் தூக்கமாட்டாத அளவு பழங்கள் இருந்தபோதிலும், ஒன்றுக்காவது மரங்களை விட்டுவர இஷ்ட மில்லை. காற்றுச் சற்றுக் குறைவுபட்டது. உடனே மழை பெய்யத் தொடங்கிற்று. கேவலம் மழைக்கு வீரமங்கலத்துக் குழந்தைகள் பயந்தவர்கள் அல்ல. ஆனால், வர வர மழையோடு கோலிபோன்ற சில கட்டிகள் விழ ஆரம்பித்தன. இவை, கைக்கு வழுக்கலாயும் தொடமுடியாதபடி அவ்வளவு குளிர்ச்சியாயும் இருந்தன. அங்கே ஏறக்குறைய இருபது குழந்தைகள் இருந்தார்கள். வயது, ஆறிலிருந்து பன்னிரண்டு வரையிலும் இருக்கும். அவர்களில், ஆலங்கட்டி இன்னதென்று தெரிந்தவன் ஒருவன்தான். அவன், மற்றவர்களுக்கு ஆலங்கட்டியைப் பற்றி வர்ணிக்கத் தொடங்கினான். அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கட்டிகள் படபடவென்று விழ ஆரம்பித்தன. கல்லெறிவதுபோல் இருந்தது. குழந்தைகள் தாங்க முடியாமல், திடுக்கிட்டுச் சமீபத்தில் வையாபுரியின் தோட்டத் திலிருந்த குடிசையை நோக்கி ஓடினார்கள். ஆனால் அந்தக் கிழவன், சில தினங்களுக்கு முன் தன் தோட்டத்தைச் சுற்றி ஒரு பெரிய வேலியைப் போட்டு வைத்திருந்தான். இருந்தபோதிலும், போக்கு வரவுக்கு ஓர் இடத்தில் இடுப்பு உயரத்திற்கு ஒரு கவைக்கட் டையை நட்டு வைத்திருந்தான். மாம்பழ மூட்டையைச் சுமந்து கொண்டு, அந்தக் கவை மரமேறிச் செல்வதற்குக் குழந்தைகள் மிகவும் கஷ்டப்பட்டன. வேலன் தாண்டிப் போனபின், வள்ளி ஏறிப் போவதற்குச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். அப்பொழுது, மல்லன் வெகுவேகமாக வந்து, அவளைத் தடுத்துத் தான் முன்னே சென்றான். இடிபட்ட வள்ளி, கால்வழுக்கிக் கவைமரத்திற்குச் சமீபத்திலிருந்த வடிகாலில் விழுந்தாள். உடனே ஐயோவென்று கூக்குரலிட்டு அழுதாள். இதைக் கேட்ட வேலன், மாம்பழங் களைக் கீழே போட்டுவிட்டுத் திரும்பி ஓடிவந்தான். வள்ளியின் நிலைமையைப் பார்த்து, அவனும் அவ்வடிகாலில் குதித்தான். இதற்குள் வள்ளி எழுந்து விட்டாள். அவள் உடையெல்லாம் நனைந்து விட்டது. உடம்பெல்லாம் சேறு. தேம்பித் தேம்பி அழுதாள். அந்த வடிகால் ஏறக்குறைய ஐந்தடி ஆழம் இருக்கும். அகலம் மூன்று அடிக்குமேல் இராது. அதன் இரண்டு பக்கங்களும் ஒரே ஈரக்களி. கரைமேல் ஏறுவதற்கு யாதோர் ஆதரவும் இல்லை. தப்பித் தவறி ஒரு வேரோ கொடியோகூடக் கண்ணுக்குத் தென்பட வில்லை. வள்ளியைக் கரையேற்றிவிட, வேலன் வெகு ஆத்திரமாயிருந்தான். அதனால், அவளை அவன் உடனே தன் தோள்பட்டை வரையில் தூக்கிவிட்டான். அப்பொழுது அந்தப் பாழும் சேற்றில் அவள் பாதம் சறுக்கி, இருவரும் தொப்பென்று விழுந்தார்கள். வேலன் ஒரு க்ஷணத்தில் எழுந்திருந்து, வள்ளியைத் தூக்கி விட்டான். “சே,சே! இந்தச் சேத்தாலே இவ்வளவும். உனக்கு அடிபட்டிச்சா?” என்று வேலன் துக்கத்துடன் கேட்டான். “அடி ஒண்ணுமில்லை; நம்ப எப்படி மேலே போறது?” என் றாள் வள்ளி. அவளுக்குப் பயம் தெளிந்துவிட்டது. அழுகையையும் நிறுத்திவிட்டாள். “நான் மறுபடியும் ஒன்னைத் தூக்கறேன்; இந்தத் தடவெ ரொம்ப சாக்கிரதையா இருக்கேன். நீ பயப்படாதே,” என்று தைரியம் சொன்னான் வேலன். ஆனால், வள்ளி சம்மதிக்காமல் தலையை ஆட்டினாள். “சரி, இப்படிச் செய்றேனே; நான் கீளே குந்திக்கிறேன். நீ என் தோள்மேலே ஒக்காந்து, என் களுத்தைக் கெட்டியா பிடிச்சுக்கோ. நான் மொள்ள எந்திருக்கிறேன். நீ கரையேறிடலாம்,” என்றான் வேலன். “நான் அப்புறம் உன் கையைப் பிடுச்சு மேலே இளுத்துடறேன்,” என்றாள் வள்ளி, வெகு உற்சாகத்துடன். “அது ஒன்னாலே முடியாது. நான் எப்படினாச்சும் வந்துடுறேன்,” என்றான் வேலன், சிரித்துக்கொண்டு. “எப்படி? சொல்லேன்?” என்று வற்புறுத்தினாள் வள்ளி. “இப்படித்தான்!” என்று சொல்லிக்கொண்டு, வேலன் தன் கால் களையும் கைகளையும் மாற்றி மாற்றி, வடிகாலின் இரண்டு பக் கங்களிலும் உதைத்துக் கொண்டு மேலே ஏறினான். வள்ளியை அக்கிடங்கிலிருந்தது மேலே எடுத்துவிடுவதற்கும், தான் ஏறி வருவதற்கும் வேலனுக்கு ஒரு நிமிஷத்திற்குமேல் ஆகவில்லை. பெருமூச்சு விட்டுக்கொண்டு அவர்கள் குடிசையைச் சேர்ந்த பொழுது, மற்றெல்லாக் குழந்தைகளும் அவர்களுடைய நிலைமையைப் பார்த்துப் பரிதவித்தனர். எல்லோரும் தாங்கள் சேகரித்த பழங்களில் சிலவற்றை வேலனுக்கும் வள்ளிக்கும் கொடுத்தார்கள். இப்படி அனைவரும் வேலனிடத்திலும் வள்ளியிடத்திலும் அன்புகாட்டிச் சந்தோஷமாயிருக்கும் பொழுது, மல்லன் மட்டும் தனியாக ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு, வெகு ஆனந்தமாய் ஒரு மாம்பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும், வள்ளிக்கு ஒரே கோபமாக வந்தது. “எல்லாம் அந்தக் கொரங்கு செஞ்ச வேலைதான்,” என்று மல்லனைக் சுட்டிக்காட்டிச் சொன்னாள். “ஆமாம், ஆமாம்,” என்று அநேகம் குழந்தைகள் கூச்சலிட்டன. “நா... நா... நான்கூடப் பார்த்தேன்,” என்றான் குட்டிக் கிச்சன், திக்கிக்கொண்டு. “அது என்னாது?” என்று வேலன் கடுகடுப்பாய்க் கேட்டான். “அதுதான் என்னைக் கெடங்கிலே தள்ளிச்சு,” என்றாள் வள்ளி, கலங்கின கண்களும் துடித்த உதடுகளுமாய். “நீ முன்னாலே சொல்லல்லியே; ஏன் தள்ளினான்?” “அது முன்னாலே போவறதுக்குத்தான். அதுங் காரியம்தானே அதுக்கு எப்பவும். அதுன் சமாசாரம் ஒனக்குத் தெரியாதா?” என்றாள் வள்ளி. வேலனுக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே, மல்லனிடம் முறைப்பாகச் சென்றான். மீதி அனைவரும் அவனைப் பின்பற்றினார்கள். வேலனுக்குச் சுமார் பன்னிரண்டு வயது இருக்கும். அவன் வயதுக்கு மிகவும் உயரமானவனே. கறுப்பு மனிதர்களுக்குள் சிவப்பு நிறமே என்று சொல்லலாம். உருண்ட பெரிய கண்கள், கூர்மையான மூக்கு, எப்பொழுதும் புன்சிரிப்போடு கூடிய உதடுகள். இயற்கையாகவே திடசரீரமுடையவன். அவன் ஒரு பெரிய பண்ணைக்காரன் குழந்தையாதலால், அவனுக்கு ஊழியஞ் செய்ய வேண்டுமென்பது அவசியமில்லை. ஆயினும் அவன் ஓடிப்பாடித் திரிந்துகொண்டே இருப்பான். கஷ்டமான தோட்டவேலைகளையும் பயிர்வேலைகளையும் அடிக்கடி ஊக்கத்துடன் செய்வான். அதனால் அவனுடைய உடம்பு, தேகப் பயிற்சியின் பயனை அடைந்து வந்தது. “நீ ஏண்டா அவளைக் கெடங்கிலே தள்ளினே?” என்றான் வேலன், மல்லனைப் பார்த்து. மல்லன், புறங்கையில் ஒழுகி ஓடும் மாம்பழ ரசத்தை ருசி யோடு நக்கிக் கொண்டிருந்தான். அவன் வாயைத் திறக்கவில்லை. வேலனுடைய கோபத்தைப் பார்க்கப் பார்க்க, அவனுக்குப் பயம் அதிகரித்தது. வேலனைக் காட்டிலும் நாலு ஐந்து மாதங்கள் பெரியவனாயிருந்தாலும், வேலனுக்குமுன் அவன் மிகவும் சின்னப் பையன்போலவே தோற்றினான். அவன் உடம்பு மிகவும் மெலிந்திருந்தது. அவன் எலும்புகளை யெல்லாம் கணக்கிடலாம். அவனைப் பார்த்தால், இளம்பயிரில் நீருக்குத் தவித்து வண்டுக்கு இரையாகிச் சாவாமலும் பிழைக்காமலும் நாளோட்டும் தென்னங் கன்றுபோல் தோன்றினான். இக்குறையெல்லாம் நிறைவேறினாற் போல், அவன் தலை மட்டும் ஒரே வீக்கமாக வீங்கி, அவன் மெலிந்த கழுத்தின்மேல், குருவித் தலையில் பனங்காயை வைத் தாற்போல் காணப்பட்டது. கண்கள் மட்டும் தலைக்கேற்றவைகள்தாம்; உருண்டு நீண்டு இமைகளுக்கு முன்வந்து நின்றன. விழிப்போ தூக்கமோ, இமைகள் எப்பொழுதும் திறந்த வண் ணமேயிருக்குமென்ற சந்தேகம் ஏற்படும். போதும் போதாததற்கு, முகமெல்லாம் அம்மை தழும்புகள். அந்தப் பரிதாபமான பையன், சண்டை எப்படிப் போடுவான்? அவன் பேசாமல் உட் கார்ந்திருந்தான். “நீ ஏண்டா அப்படிச் செஞ்சே, மூளிகண்ணுப் பயலே?” என்று மிரட்டினான் வேலன். “நான் என்னா பண்ணினேன்? அவதான் கால்தவறி உளுந்துட்டா,” என்று அவன் மெதுவாகச் சொன்னான். “அம்மாம்மா! என்னா பொய்?” என்றாள் வள்ளி, வாய் மேல் கைவைத்துக்கொண்டு. “நீ தள்றப்போ நான் பார்த்தேனே!” என்றான் மற்றொரு பையன். உடனே வேலன், அவன் தவடைமேல் பலமான ஒரு அறை கொடுத்தான். மல்லன் கூக்குரலிட்டு, வேலனைத் தாறுமாறாய் வைதான். வேலனுக்குக் கோபம் அதிகரித்து, மறுபடியும் அடித்தான். திட்டினால் பூசை அதிகமாகுமென்று தெரிந்துகொண்ட மல்லன், தன் தகப்பனிடம் சொல்லி வேலனுக்கு அடிவாங்கி வைப்பதாகப் பயமுறுத்தினான். வேலனோ, “ஒங்க பாட்டங்கிட்ட நீ சொன்னாலும் சரி, ஒங்க முப்பாட்டன்கிட்ட சொன்னாலும் சரி, எனக்கென்ன?” என்று சொல்லிவிட்டுத் திரும்பினான். அவ்வளவு குழந்தைகளுக்குள், மல்லன்மேல் யாருக்கும் இரக்கமில்லாமற்போனது ஆச்சரியந்தான். பாவம்! அவன், தானே அழுது ஓயவேண்டியதாயிருந்தது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஆலங்கட்டி விழுவது நின்றது; மழையும் குறைந்து போயிற்று. பயமில்லாமல் வீட்டுக்குப் போகலாமென்று தெரிந்தவுடன், குழந்தைகளெல்லாம் ஓட்டம் பிடித் தார்கள். |