உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
அத்தியாயம் 7. கடைசிக் கந்தாயம் மீனாக்ஷியை இலுப்பைத் தோப்பில் மதுரை சந்தித்த இரண்டு வாரங்களுக்குள், வெங்கடாசலம் அவளிடமிருந்து இரண்டாயிரம் மட்டும் அல்ல, மற்றும் ஓர் ஆயிரம் ரூபாய்கூட, எதிர்பாராத செலவுகளுக்காக வெகு முன் ஜாக்கிரதையுடன் கடன் வாங்கி விட்டான். பிறகு, மிகவும் மும்முரமாக அவன் தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தான். மழைக்காலம் சிறிது முன்னதாகவே ஆரம்பிக்கும் போல் தோன்றினபடியால், ஏராளமான ஆட்களை அமர்த்தி, அவன் அதிசீக்கிரத்தில் நடவை முடித்துவிட்டான். அந்த வருஷம், சோளம் நன்றாய் விளையும் என்று குறிசொன்னதாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தினாலே, ஊரெல்லாம் சோளமே புன்செய்த் தானியமாக இருந்தது. ஆகையினால், அவன் கடலைத் தோட்டம் நாற்பக்கங்களிலும் சோளக்காடுகளால் சூழப்பட்டிருந்தது. நாளடைவில் சோளத்தட்டுக்கள் பருத்து ஓங்கி வளர்ந்து, வெங்கடாசலத்தின் நாற்பது ஏக்கர் கடலைக் காட்டில் சிறு பாகங்கூடக் கண்ணுக்குத் தெரியாமல், மறைத்துக் கொண்டன. இவ்வாறு சம்பவித்ததைக் குறித்து, வெங்கடாசலத்திற்குச் சந்தோஷமே. ஏனெனில், படாத கண்பட்டுத் தன் கஷ்டமெல்லாம் வீணாய்ப் போய்விட்டால் என்ன செய்வது என்று அவன் பயந்திருந்தான். அவன் பயத்துக்கு நல்ல காரணம் உண்டு. சோளக்காடுகளைத் தாண்டிக்கொண்டு, அவன் கடலைத் தோட்டத்திற்குச் சென்றால், பாலைவனத்து நடுவே பசுந்திட்டுப்போலக் கடலைச் செடிகள் பச்சைப் பசேலென்று சோபித்துக் கொண்டிருந்தன. அவைகளுக்கு அனுகூலமாக மழை தவறாமல் பெய்தது. அவ்வருஷம் புன்செய் ‘வெள்ளாமை புரண்டு’ போகப் போகிறதென்று, குடியானவர்களெல்லாம் அறுப்புக் காலத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு மாதந்தான் - அப்பால், வெங்கடாசலம் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பலன் கிடைத்துவிடும் - கடைசியோ கடைசியிலாவது தனக்கு வெற்றி வந்ததைப் பற்றி அவன் பரமானந்தப் பட்டான். வெற்றியாவது வெற்றி - ‘சீட்டுக் கிழித்தான் கடலை’ என்ற பெயரை, ‘உயிரைக் கொடுத்தான்’ கடலை என்று மாற்ற வேண்டுமென்று, அவனுக்குத் தோன்றிற்று. அறுவடையான பிறகு, தானியத்தை ஒன்றுக்குப் பாதியாய் விற்றால்கூட, அவன் கடனெல்லாம் தீர்ந்து, கையிலும் ஏராளமான திரவியம் மிஞ்சு மென்பதை நன்குணர்ந்தான். கனவிலும்கூடத் தன் முயற்சி இவ்வளவு வெற்றி பெறுமென்று அவன் நினைக்கவில்லை. அண்ணாமலைத் தாத்தாவோ, வெங்கடாசலத்தோடு இணைபிரியாமல் திரிந்துகொண்டிருந்தான். அக்கிழவனின் குதூகலத்திற்கு அளவேயில்லை. வெங்கடாசலத்திற்கு நன்மை ஏற்பட்டுவிட்ட தென்று ஒருபுறம் சந்தோஷம்; தன் தூண்டுதலாலல்லவா இம்முயற்சி செய்தான் என்று ஒரு புறம் பெருமை. ஒரு நாள் சாயங்காலம், வெங்கடாசலம் அண்ணாமலைத் தாத்தாவையும் மற்றும் சில சிநேகிதர்களையும் தன் கடலைத் தோட்டத்திற்கு அழைத்துக்கொண்டு போனான். அவனுக்கு ஒரு வாரத்திற்குள் அறுப்பு ஆரம்பிக்க வேண்டுமென்று தோன்றிற்று. இருந்தபோதிலும், நாலுபேர் அபிப்பிராயங்களையும் தெரிந்து கொள்வதற்காக அவன் அவர்களை அழைத்துச் சென்றான். தோட் டத்தில் மூலைக்கு மூலை ஒருவராகப் புகுந்து, அங்குமிங்கும் கடலைக் காய்களைப் பிடுங்கி உரித்து மென்று பதம் பார்த்துக்கொண்டு, உல்லாசமாய் அலைந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் இப்படியிருக்கையில், அருகிலிருந்த சோளத்தோட் டத்தில் பெருங்கூச்சல் கேட்டது. சோளத்தட்டுக்கள் மதாளித்து ஆள் உயரத்திற்குமேல் விளைந்திருந்ததனால், கண்ணுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. சிறிதுநேரம் வரையில், இன்னதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. வரவர, அதே கிராமத்தைச் சேர்ந் தவர்களான பெருமாளும் சின்னப்பனும், ஒருவரை ஒருவர் வைது கொள்வது தெரியவந்தது. அவர்களுடைய கோபாவேசத்தையும் பேச்சுத் துடுக்கையும் கேட்டால், வெகு சீக்கிரத்தில் கைகலந்து விடுவார்கள்போல் இருந்தது. அவர்களுக்குச் சமீபத்தில், மதுரை இருந்தான். அவன் அவர்களைப் பெருங்குரலுடன் அடக்கிக் கொண்டு, அவர்களிடத்திற்கு ஓட முயன்றான். ஆனால், சோளத் தட்டுக்கள் காடாய் வளர்ந்திருந்ததனால், மதுரை அவற்றை நீக்கிக்கொண்டு போவதற்குள், வெங்கடாசலம் முதலியோர் வரப்பு வழியாகச் சுற்றிக்கொண்டு வந்துவிட்டனர். ஆனால், அதற்கு முன்னமேயே, பெருமாளும் சின்னப்பனும் அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் ஒருவர் குடுமியை ஒருவர் பிடித்துக்கொண்டு, குத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களை விலக்கிக் விடுவது, வெங்கடாசலத்திற்கும் அவன் சிநேகிதர்களுக்கும் பிரம்மப் பிரயத்தனமாய்விட்டது. அடியெல்லாம் சின்னப் பனுக்குத்தான். அவனுக்கு மூக்கில் ரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு கண் பலமாக வீங்கிப் போய்விட்டது. பெருமாளை மிரட்டியும் நல்ல புத்தி சொல்லியும், அவ்விடத்தை விட்டுத் துரத்தி விட்டார்கள். ஆனால், சின்னப்பனை அவர்களால் சமாதானப் படுத்த முடியவில்லை. பாவம் - பொருளையும் இழந்து அடியும் வாங்கினால், அவன் மனம் எப்படி இருக்கும்? அவன் வாக்கு மூலப் பிரகாரம், சில நாட்களாய் அவன் தோட்டத்தில் சோளக் கதிர்கள் திருட்டுப் போய்க்கொண்டிருந்தனவாம். அது பெருமாளின் மகன் வேலை என்று, அவனுக்குச் சந்தேகம் பிறந்ததாம். அதன்மேல், அவன் மகனைக் கண்டிக்கும்படி பெருமாளைச் சின்னப்பன் கேட்டுக்கொண்டானாம். அதற்காக, அந்த ஈன ஜாதிப் பயல், அவனை ஏகதேசமாய்த் திட்ட ஆரம்பித்தானாம். திருப்பித் திட்டினதற்காக அவன் அடித்தானாம். சின்னப்பன் சொன்னதில் பொய் ஒன்றுமில்லையென்று வெங்கடாசலம் முதலியவர்கள் அறிந்தார்கள். பெருமாள் அயோக்கிய னென்பது ஊரெல்லாம் தெரிந்த விஷயம். அவன் மகன் தகப்பனுக்கு மிஞ்சிப் போகிறவனென்றே தோற்றியது. ஆகையால். வெங்கடாசலம் பஞ்சாயத்துக் கூடி நியாயம் தீர்ப்பதாகச் சொல்லிச் சின்னப்பனைச் சமாதானப்படுத்தினான். மறுநாள் விடியற்காலம் வெங்கடாசலமும் அண்ணாமலைத் தாத்தாவும் வாய்க்கால் கரையோரத்தில் கருவேலங்குச்சிகளால் சாவகாசமாகப் பல்லை விளக்கிக் கொண்டிருந்தார்கள். கறுக்கல் முழுதும் மறையவில்லை. சூரிய உதயத்திற்கு இன்னும் இரண்டு நாழிகை இருக்கும். அவர்களைப்போல் மற்றும் அநேகரும் பல் தேய்த்துக் கொண்டிருந்தார்கள். காலையில் கைகால் கழுவுவதற்கும் பல் விளக்குவதற்கும் வாய்க்கால் கரைக்குப் போவது அவ்வூர் ஆண் பிள்ளைகளுக்கு வழக்கம். கும்பல் கூடினால் பேச்சுத் தானே கிளம்புமானதால், முன்தினம் சாயங்காலம் பெருமாள் செய்த துஷ்டக்காரியத்தை எல்லோரும் கண்டித்துக் கொண்டிருந்தனர். அந்தச்சமயத்தில் வெங்கடாசலத்தின் பண்ணையாளான ஆதித்திராவிடன் ஒருவன் திணறத் திணற ஓடிவந்து, கைகளை உதறிக்கொண்டு அழாத துக்கத்துடன், “யசமான்! எல்லாம் பாலாப் போச்சே! எல்லாம் அடியோடே போச்சே” என்று கதறினான். அவன் உடம்பு பதறிக்கொண்டிருந்தது. வாயிலிருந்து வார்த்தை வரத் தத்தளித்துக்கொண்டிருந்தது. வெங்கடாசலத்திற்கு ஒன்றும் புரியவில்லை. ஆயிரக்கணக்காக எண்ணங்கள் அவன் மனத்தில் உதித்தன. “சமாசாரத்தைச் சொல்லேண்டா” என்று கெஞ்சுவதுபோலக் கேட்டான். அவன் பண்ணையாள், எச்சிலை விழுங்கிக்கொண்டு வெகு கஷ்டத்துடன் பெருமூச்சை அடக்கிக்கொண்டு, சொல்ல ஆரம்பித்தான்: “சாமி, நான் வெள்ளி மொளைக்கிறதுக்கு முந்தியே நம்ம கடலைக்காட்டுக்கு பொறப்பட்டேனுங்க. பெடாரி கோவிலுகிட்டே போயிட்டிருந்தப்ப ஒரு வாசம் வந்துதுங்க. அப்பவே எனக்குக் கொஞ்சம் சந்தேகம் பொறந்திச்சு. ‘தாலியறுப்பான் குட்டை’க்குப் போனதும் ஒரே அனலாயிருந்திச்சு. எனக்கு வாரிப் போட்டுதுங்க. நம்ம கடலைக்காட்டுப் பக்கம் விளுந்து அடிச்சு ஓடினேன். ஆனா, பனந்தோப்புக்கு அப்பாலே போகமுடியல்லே சாமி. அனலும் பொகையும் அதுக்குள்ர ஒரே முட்டா சூந்துக்கிச்சு. அப்பாலே மேக்கித்திக் காத்துக் கௌம்பிடிச்சு. அனலுக்கு அங்கே நிக்கமாட்டலே. எத்தினி மொசலுங்க காத்தா பறந்திச்சி - ஒரு நரி, பயத்துலே என்னைத் தள்ளிவிட்டு ஓடிச்சு. சோளச்சருவுங்க எரிஞ்சதக்கூடக் கண்ணாலைப் பாத்தேஞ் சாமி! ஐயோ! கிளி கொஞ்சின தோட்டமெல்லாம் வெந்துக் கிட்டு இருக்குதே! அந்த வவுத்தெரிச்சிலே என்னாலே பாக்க முடியில்லியே” என்று அவன் குழறினான். “நாம் இப்போ என்னா பண்றது?” என்று ஒருவன் ஆத்திரத்தோடு கேட்டான். “தலைவிதியேன்னிட்டு இருக்கவேண்டியதுதான். அணைக்கிற நெருப்பா? அட கடவுளே” என்று மற்றொருவன் தலையில் கையை வைத்துக்கொண்டான். “அட, இங்கிருந்துக்கிட்டு வெட்டிப்பேச்சுப் பேசறதுலே என்னடா லாவம்? அங்கே போவலாம் வாங்கடா” என்று சொல்லிக் கொண்டே ஒருவன் ஒடினான். அநேகர் அவனைப் பின்பற்றி ஓடினர். ஆனால், வெங்கடாசலம் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். வாழ்க்கையின் போராட்டத்தில், பின்னும் எந்நாளும் தலைதூக்க முடியாமல் அவன் அடியோடு குலைந்தான் என்பது அவனுக்கு நன்கு விளங்கிற்று. மனிதனோடு போராடலாம்; தெய்வத்தோடு யார் என்ன செய்ய முடியும்? வெற்றியைக் கை நீட்டிக் கவரும் தருணத்தில், தலைமேல் பேரிடி விழுந்தால் எவர்மேல் குற்றம் கூறுவது? இவ்வளவு அநியாயம் தகுமா? அப்படிப் பண்ணாத பாவத்தை என்ன செய்துவிட்டான், ஆனால், ஆண்டவன் செயலைச் சோதிக்க அவன் யார்? இருந்தபோதிலும் - இருந்தபோதிலும், கடவுள் தன்மேல் போட்ட அநியாயத்தை நினைத்து நினைத்து உருகினான். அண்ணாமலைத் தாத்தா, அவன் படும் கஷ்டத்தைப் பார்க்கச் சகிக்கமுடியாமல், குனிந்த தலை நிமிராமல், மௌனமாய் உட்கார்ந்திருந்தான். இரண்டு மூன்று நிமிஷத்திற்குப் பிறகு, வெங்கடாசலம் தூங்கி விழித்தவன்போல் எழுந்திருந்தான். “தாத்தா வண்டியைக் கட்டிக்கிட்டு நாமும் போய் அந்த வேடிக்கையைப் பார்க்கலாம். எல்லாருஞ் செத்தா கலியாணம்போல இல்லியா?” என்று அலக்ஷியமாகச் சொல்வதுபோல் பாவித்துச் சொன்னான். ஆனால், புன்செய்த் தோட்டத்தில் பற்றிய தீ, தன்னையும் எரித்துவிட்ட தென்று அவனுக்கு நன்றாகத் தெரியும். |