உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
அத்தியாயம் 3. ஒரு வழிகாட்டி வெங்கடாசலத்தின் வீட்டுத் திண்ணையில், அவன் சிநேகிதர்களெல்லாம் கூடிப் பேசிப் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். நல்ல மழை அடித்து எங்கும் சேறும் சகதியுமாயிருந்ததால், ஒருவருக்கும் வெளியே நடமாட இஷ்டமில்லை. அந்தக் கூட்டத்திலிருந்த விருத்தாப்பியர்களுக்குத் தங்கள் பிறவித் தொழிலாகிய விவசாயத்தைப் பற்றியே பேச இஷ்டம். ஆனால், மற்றெல்லாரும் வீண் வம்படித்து உல்லாசமாகக் காலம் கழிக்க ஆரம்பித்ததால், இக்கிழவர்கள் மட்டும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். வேடிக்கையாகப் பேசி எல்லோரையும் சந்தோஷப்படுத்துவதில் மதுரை வெகுசமர்த்தன். பிறரை வயிறு வெடிக்கச் சிரிக்கச் செய்தாலும், அவன் முகத்தில் புன்சிரிப்புக் கூடத் தோன்றாது. மனிதர்களுக்கோ மிருகங்களுக்கோ வீக்கம் ஏற்பட்டால், அதை எப்படி இலகுவாக்குவதென்பதைப் பற்றி ஒரு தர்க்கம் ஏற்பட்டது. ஒவ்வொருவனும் தன் அபிப்பிராயத்தைச் சொன்னான். அப்பொழுது மதுரை பேச வாயெடுத்தான். ஆனால், மாயாண்டி வருவதைப் பார்த்து, உடனே சம்பாஷணையை மாற்றினான். “என் பேச்சைக் கேளுங்க. நமக்குத் தெரியாத விசயத்திலே நாம் தலையிட்டுக்கக் கூடாது. அந்த மருந்து சமாசாரத்தைப்பத்தி என்னன்ன வேணுமோ, இதோ மாயாண்டியைக் கேளுங்க. அவன் அதிலே பளகினவன்,” என்றான் மதுரை. உடனே, கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர் கொல்லென்று சிரித்தார்கள். மாயாண்டி, சற்றுப் பிரமித்து, “அது என்னாது?” என்று கேட்டான். “வீக்கத்துக்கு மருந்தைப் பத்திப் பேசிக்கிட்டிருந்தோம்.” மறுபடியும் சிரிப்புக் கோஷமாய்க் கிளம்பிற்று. இதன் உள் மர்மத்தை அறியாதவர்கள் - அவர்களில் வெங்கடாசலம் ஒருவன் - பக்கத்திலிருந்தவர்களை விஸ்தரிக்கும்படி வற்புறுத்தினார்கள். “உனக்கு வேறே பொளப்பில்லை - யாரையாவது கேலி பண்ணிக்கிட்டு இருக்கணும்,” என்று மாயாண்டி ஆக்ஷேபித்த போதிலும், அவனை அறியாமல் அவனுக்குக் கொஞ்சம் சிரிப்பு வந்தது. “நான் பொய்யா சொல்றேன்? அதுலே ஒனக்கு இருக்கிற அனுவோகம் யாருக்கு..” மறுபடியும் சிலர் சிரித்தார்கள். வெங்கடாசலத்துக்குப் பொறுக்கமுடியவில்லை. “அட, நீங்களே பேசிக்கிட்டு நீங்களே சிரிச்சுக்கிட்டா எங்களுக்கென்னா தெரியிது? சமாசாரத்தைத்தான் சொல்லித் தொலையுங்களேன்,” என்றான் வெங்கடாசலம். “இதோ, இது சிரிக்கிற விசயமில்லை. காளிபட்டி பெரியண்ணக் கிளவனாரைக் கேட்டா....” “போதுண்டா, மதுரை என் பேச்சை எடுக்காதே,” என்று மாயாண்டி கோபமாகச் சொன்னான். ஆனால், மதுரை அவனைச் சட்டைச் செய்யாமல் சொல்லத் தொடங்கினான். “ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாலே, பெரியண்ணனுக்கு உடம்பெல்லாம் தலையிலிருந்து காலு வரையிலும் வீங்கிப் போச்சு. பாவம் கௌவனுக்கு வலி பொறுக்கமாட்டலெ. என்னென்னமோ வைத்தியம் செஞ்சு பார்த்தான். ஒண்ணும் பலிக்கல்லை. இந்தச் சமயத் திலே, மாயாண்டி ஏதோ வேலையாக் காளிபட்டி போய்ச் சேர்ந் தான். கௌவன் கெதியைப் பார்த்தான். உடனே அவனுக்கு, ஆரோ கத்துக்குடுத்த நல்ல மருந்து ஒண்ணு ஞாவகத்துக்கு வந்திச்சு.” இப்பொழுது மாயாண்டி, மதுரையைத் தடுத்துப் பேச முயன்றான். ஆனால், மதுரை அவனை அடாதடியாய் அடக்கி விட்டுத் தொடர்ந்து சொல்லலானான். “ஒரு வீசை முந்திரிக் கொட்டையை வாங்கியாரச் சொன்னான். அதை வாணாயிலே போட்டு வறுத்து, ஒரு அரக்காப்படி எண்ணெய்போலே எடுத்தான் - என்ன முளிக்கிறயே, காத்தான். முந்திரிக் கொட்டை எண்ணெய் தெரியாதா? பாத்தா விளக்கெண்ணெயாட்டம் இருக்கும். ஆனால், தொட்டாக் கை புண்ணாயிடும் - ஊம், இந்த எண்ணெயைக் கைப்படாதே ஒரு உரிமட்டையிலே தோச்சுத் தோச்சு, பெரியண்ணன் உடம்பெல்லாம் தடவிட்டு, ‘கொஞ்ச நாளிலே எல்லாம் சரியாய்ப் போயிடும்’ இன்னிட்டு மாயாண்டி போயிட்டான். சேத்தநேரம் பெரியண்ணனுக்கு ஒடம்பெல்லாம் ஒரே தெனவா இருந்திச்சு. ஒரு புண்ணு ஆறும்போது அப்படித்தானே இருக்கும்? அதாக்குமின்னு எண்ணிக்கிட்டான். சொறிஞ்சிக்கணுமின்னு எவ்வளவு ஆத்திரமா இருந்தாலும், பல்லைக் கடிச்சிக்கிட்டுச் சும்மா இருந்தான், பாவம் ஆனால் கொஞ்ச நேரத்திக்கெல்லாம், மேலே கொதிக்கக் கொதிக்கத் தண்ணி ஊத்தினாப்போலே இருந்திச்சாம். இன்னும் கொஞ்ச நேரத்திக்கெல்லாம், ஆலைக் கொப்பரையிலே தூக்கிப் போட்டாப்போலே இருந்திச்சாம். கௌவனுக்குத் தாங்க மாட்டலே. ‘எரியுதே, எரியுதே’ இன்னு குய்யோ முறையோன்னு கூச்சப்போட ஆரம்பிச்சுட்டான். அவன் மவ எங்கேயோ வேலை செஞ்சிக்கிட்டு இருந்தவ, கூச்சலைக் கேட்டு ஓடியாந்து, அவனை மொள்ளத் தூக்கி ஓக்காத்திப் பாத்தா. அப்போ, அவன் தோலு கூட கையோடே ஒட்டிக்கிட்டு வந்திட்டுது. சங்கதியைக் கண்டுக் கிட்டா. உடனே உடம்புலே இருந்த எண்ணெயெல்லாம் மொள்ள வளிச்சி எடுத்தா. என்ன மொள்ள எடுத்தாலும் தோலென்னமோ கையோடு வந்திடுச்சு. அப்புறம், உடம்பு சொகமாக ரெண்டு மாசமாச்சு. ஆனால், வீக்கமெல்லாம் பறந்தோடிப்போச்சு. பெரியண்ணனுக்கு ஒடம்புலே எலும்புதானே மிஞ்சிச்சு. தோலும் நெறம் மாறிச்சு. இன்னும் என்னா வேணும்? இன்னிக்கும் பெரியண்ணன் ஊட்டண்டே போவக்கூட மாயாண்டிக்குப் பயந்தான்.” “அவ்வளவும் பொய்,” என்றான் மாயாண்டி, சிடுசிடுப்புடன். “சரி இருக்கட்டும், நீ என்னோடே பெரியண்ணன் வீட்டுக்கு வா. ஒனக்குப் பத்து ரூபா தாரேன்,” என்றான் மதுரை. “அட, என்னமோ நல்ல எண்ணத்தோடே பண்ணினான்,” என்று வெங்கடாசலம், மாயாண்டிக்குச் சகாயமாகப் பேசினான். இந்தச் சமயத்தில், வேலன் இரண்டு மூன்று சிநேகிதர்களோடு குதித்துக் கூச்சலிட்டுக் கொண்டு, தெருவிலிருந்து வீட்டில் நுழைந்தான். அப்பொழுதுதான் மாயாண்டிக்குத் தான் வந்த காரியம் நினைவுக்கு வந்தது. ஆனால், மதுரை செய்த பரிகாசத் தினாலும் அங்கிருந்த பெருங்கும்பலினாலும், வந்த விஷயத்தைப் பற்றிப் பேச அவனுக்குத் தைரியமில்லாமற் போய்விட்டது. ஒரு மூலையில் உட்கார்ந்து, பிறர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந் தான். பேச்சிலே சற்று ஓய்ச்சல் வந்த சமயம் பார்த்து, அண்ணாமலைத் தாத்தா புகுந்தான். “என்ன வெங்காடசலம், சீட்டுக்கிளிச்சான் கடலையைப் பத்திக் கேள்விப்பட்டாயா?” என்றான். “சீட்டுக்கிளிச்சான் கடலையா? புதுப் புதுச் சமாசாரம் கொண்டாரையே, தாத்தா,” என்றான் வெங்கடாசலம். “நமக்குத் தெரியாட்டி, புதுசின்னு எண்ணிக் கொள்றம். களுகு பட்டி சுப்பிரமணிய படையாச்சியைத் தெரியுமில்லை ஒனக்கு? - அவர் புஞ்சைக்காட்டிலே போட்டிருக்காங்களாம். அது ஒரு கடலைதானாம். ஆனா, நம்ப பொட்டுக் கடலைபோலே நாலு அஞ்சு பங்கு பெரிசா இருக்குதாம். வெள்ளாமை, காச்சுத் தள்ளிடு தாம். சுப்பிரமணிய படையாச்சி கை ரொம்ப எறங்கிப் போயி....” “என்ன தாத்தா, நம்மூருலே நல்ல நஞ்சை நெலங்களா வாங்கப் பாக்கறாராமே?” “அதுக்குள்ளே அவசரப்படுறியே. அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். ஆரோ வெளிநாட்டுலேருந்து வந்தவங்க, அந்தக் கடலையிலே நாலு அஞ்சு மரக்கா கொடுத்தாங்களாம். அதை ரகசியமாகப் பயிரிட்டுப் பாத்தாராம். மாசூலு, நம்ப பொட்டுக்கடலை ஒரு கலமின்னா, அந்தக் கடலை மூணுகலம் கண்டுச்சாம். அவ்வளவுதான், கடனை ஒடனை வாங்கி, கையிலே இருந்த எல்லாப் பணத்தையும் போட்டு, அவரு புஞ்சை எரணூத்திச் சொச்சம் ஏக்ராவிலேயும் போட்டுத் தள்ளிட்டாரு. ரெண்டு மூணு மாசம் வரையிலும் அவருக்குத் திக்குத் திக்குன்னுதான் இருந்தது. இந்த லச்சணத்திலே, அந்த வருசம் மளைகூடக் கொஞ்சம் கொறவுதான் - எல்லாம் இப்போதான் - மூணாம் வருசம். எப்படியோ தட்டுக்கிட்டுப் பயிரு தலை எடுத்திடுச்சு. அப்புறம் பாரேன். பச்சைப் பசேலின்னு கண்ணுக்கு எட்டினமட்டும் ஒரே வெள்ளாமைதான். அவரு திஷ்டிக்குச் செலவளிச்சுதே இவ்வளவு அவ்வள வூன்னு இல்லையாம். நாலாவது அறுப்புக் காலம் வந்தவுடனே, நாலு கிராமத்துப் பொம்பளைங்க, விடாது பதினைஞ்சு நாள் வேலை செஞ்சுகூட முடியல்லையாம், போயேன். அவரு மட்டும் அதை அப்படியே குவிச்சு வச்சிருந்தாரோ, அது எவ்வளவு பெரிசு இருக்குமோ சொல்லமுடியாது. ஆனால் ஒண்ணு - எவன் கண்ணாவது பட்டுப் பாளாய்த்தான் போயிருக்கும். இதையெல்லாம் யோசிச்சு, பட்டணத்திலிருந்து மண்டிக்காரங்களை வரவளச்சு, அன்னன்னாடு சரக்கை கோணிகள்ளே போட்டு அனுப்பிச்சுட்டாராம். அந்த வருசம், செலவெல்லாம் போக, முப்பதாயிரம் கெடச் சுதாம்! கடனெல்லாத்தையும் ஒளிச்சாராம். சீட்டெல்லாம் கிளிக்க, பணம் கொடுத்திச்சல்ல; அதனாலே சீட்டுக்கிளிச்சான் கடலேன்னு பேரு வச்சுட்டாங்களாம். இப்போ, அந்தப் பக்கமெல்லாம், அது தான் வெள்ளாமையாம்,” என்று கிழவன் முடித்தான். “என்ன, எல்லாம் கதையாட்டம் இருக்குதே, தாத்தா?” என்றான் வெங்கடாசலம். “கதையா? உனக்குக் குட்டையனையே சொல்லச் சொல்றேன். அவன் எல்லாம் கண்ணாலே பாத்தவன் - குட்டையன் தெரியுமல்ல உனக்கு? என் மச்சான் மவன். இன்னும் ரெண்டு மூணு நாளிலே, சீரங்கத்திலிருந்து வாரான். அவன் வாயாலே கேளேன்.” “தெரிஞ்சுக்கத்தானா முடியாது? களுகுபட்டி ரொம்பத் தொலவா? அம்பது கல்லிருந்தா ரொம்ப. நேரே போனால் எல்லாம் தெரிஞ்சுபோவுது,” என்றான் மதுரை. “இது சரியான பேச்சு. நேரே போய்ப் பாக்கிறதுக்கு மிஞ்சினது ஒண்ணுமில்லை,” என்று அண்ணாமலைத் தாத்தா ஆமோதித்தான். வெங்கடாசலம் பார்வை வீரப்பனை நோக்கிச் சென்றது. “நீ என்ன சொல்லறே, வீரப்பா? நாளைக்குப் புறப்படலாமா? என் காங்கையம் மாடுங்களுக்கும் வேலையில்லை. வண்டிக்கும் புது வில் போட்டிருக்கேன். வேடிக்கையா ஒரு சவாரி போயிட்டு வரலாம். நம்மோடு மதுரை வருவான். உன் பேச்சு என்ன, தாத்தா? உனக்கு வரமுடியுமா?” “கட்டாயமா!” என்றான் அண்ணாமலைத் தாத்தா. “நாம், முசிரியிலேகூட ஒரு நாள் தங்கலாம். நாளன்னிக்கு அங்கே தைப் பூசமாச்சுதே. பன்னிரண்டு ஊரு சாமியல்லா வரும். அதனாலே நாம் இப்போ போனால், வேலைக்கு வேலை பாத்துக்கலாம். சாமிக்குச் சாமியாச்சு, தமாசுக்குத் தமாசும் ஆச்சு,” என்று சிரித்துக்கொண்டு மதுரை சொன்னான். “நீதான் சரியான ஆளு மதுரை. பூசம் சங்கதி எனக்கு மறந்தே போச்சு. நம்மூருக்கும் களுகுபட்டிக்கும் சரியா, முசிரி நடு மையம்,” என்றான் அண்ணாமலைக் கிழவன். “நீ என்ன சொல்றே, வீரப்பா? வாயெத் தெறக்க மாட்டேங்கிறயே,” என்றான் வெங்கடாசலம். வீரப்பன் கடுகடுத்த முகத்துடன், “இப்போ என்ன அவசரம்? போன வருசந்தானே ஜாவா கரும்புக்காக ஐந்நூறு ரூபாயைத் தொலைச்சே.” “தொலைச்சேன்னு சொல்லாதே. ஒரு விசயத்தைத் தெரிஞ்சிக் கணுமின்னா, துட்டுச் செலவளிக்காத முடியுமா? அந்தக் கரும்போடு ஒருபாடு அக்கப்போரு கொடுத்ததனால்தான், இந்த வருசம், கந்தன், சடையன், ஆண்டிப்பத்து, எல்லாருக்கும் லாவம் கிடைச்சுது. ஏன், எனக்கு மட்டும் என்னா? இந்த வாட்டி எனக்கு வெல்லம் கண்டு மொதலு எளுநூறு மணுவாச்சே. போன வருசத்து நஷ்டமெல்லாம் எடுத்திட்டேனே!” “அதெல்லாம் இருக்கலாம். அந்தச் செய்நேத்திக்காகக் கடன் வாங்கினயே; அது இன்னும் அடபடல்லையே, அதுக்கு என்னா சொல்றே?” என்று கேட்டான் வீரப்பன். “இதோ, என் கடனுக்கும் அந்த வெள்ளாமைக்கும் என்ன சம்பந்தம்? நாம் பணத்தை ஆயிரம் வளியிலே செலவளிக்கிறோம். நான் அந்தப் புதுக்கரும்பைக் கண்டுபிடிச்சு, லாவமாய்ச் சாவுபடி பண்ணும்படி செஞ்சதிலே, எனக்குக் காத்துட்டுக்கூட நஷ்டமில்லை.” “சரி, அந்தப் பேச்செல்லாம் இப்போ என்னாத்துக்கு. நான் சொல்றதெல்லாம், ஆத்திரப்படக்கூடாது இன்னுதான்,” என்று வீரப்பன் கொஞ்சம் கடுமையாய் சொன்னான். “நான் பணமா இப்போ செலவளிக்கப்போறேன். அண்ணாமலைத் தாத்தா ‘சீட்டுக்கிளிச்சான் கடலை’ இன்னு ஒரு புதுச்சேதி கொண்ணாந்தாரே, அதை என்னான்னு விசாரிச்சுப் பாக்கத்தானே யொளிய, வேறென்ன?” என்றான் வெங்கடாசலம். ஆனால், அவன் வீரப்பனுடைய மனத்திற்கு விரோதமாய் நடந்துகொள்ள இஷ்டப் படவில்லை என்பது நன்றாய்ப் புலப்பட்டது. “சரி, போகலாம். எனக்கு என்ன பயமின்னா, நீ விசாரிக்கிறதோடே நிக்கமாட்டயேன்னுதான்,” என்று வீரப்பன் புன்சிரிப்புடன் சொன்னான். “நீ பயப்படவேண்டாம். எங்கிருந்து பணம் மொளைக்கும்? கொஞ்சம் சொல்லு,” என்றான் வெங்கடாசலம். இந்தச் சமயத்தில், வேலன் கைக்கு ஒரு பொட்டணமாக எடுத்துக்கொண்டு வீட்டின் உட்புறத்திலிருந்து ஓடி வந்து, “அப்பா, ஒன்னை அம்மா கூப்பிறாங்க,” என்று உரக்கச் சொன்னான். “கையிலே என்னடா பொட்டலம்?” என்று கேட்டான் மதுரை. “தேங்காப் பணியாரம்.” “எங்கே ஓட்டம்?” “வள்ளி ஊட்டுக்கு.” “ஆம்! திருட்டுப்பயலே. எல்லாம் ஒன் பெஞ்சாதிக்குத்தான் கொடுக்கணுமா? மாமனுக்கு ஒண்ணுமில்லியா?” “சும்மா இரு, மாமா!” என்று சிரித்துக்கொண்டே வேலன் ஓடிவிட்டான். வெங்கடாசலம் உள்ளே சென்றதும், கும்பலும் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்துவிட்டது. |