அத்தியாயம் 6. சிறு பொறி

     சிலர் எக்காரியத்தைச் செய்தாலும் அது அவர்களுக்குக் கைகூடி வருகிறது; மற்றும் சிலர், எதைத் தொட்டாலும் அது நாசமாய் விடுகிறது. முன் வகுப்பினர்க்கு அநுகூலமாகச் சந்தர்ப்பங்களும் உதவி செய்கின்றன. பின் வகுப்பினர்க்குப் பிரதிகூலமாக, அசந்தர்ப்பங்களும் பாழடிக்கின்றன. வெங்கடாசலத்தின் கை கொள்ளிக் கை என்பதில் சந்தேகமில்லை. புதுவிஷயங்களைக் கிரகிப்பதில் அவன் சாமர்த்தியமுள்ளவன்; ஆனால், எதையும் நீடித்துச் செய்ய மாட்டான். விவசாயத்தில் நாளைக்கு ஒரு புதுவழியைச் செய்ய யத்தனிப்பான். சீக்கிரத்தில் பலன் பெறாவிட்டால் அம்முயற்சியை அவன் அதோடு விட்டுவிடுவான். இதனால் அவனுக்குக் கஷ்டமும் நஷ்டமுமே தவிர வேறொன்றும் இல்லை. ஆனால், அவன் பிரயத்தனங்களிலிருந்து பிறர் லாபமுறைகளைக் கற்றுக் கொண்டார்கள்.

     கழுகுப்பட்டியில் ‘சீட்டுக்கிழித்தான் கடலை’ பயிராவதைப் பார்த்த பிறகு, வெங்கடாசலத்திற்கு உடனே தன் புன்செய் நாற்பது ஏக்கர்களிலும் அதை விளைவிக்க வேண்டுமென்ற ஆசை பிறந்தது. ஆனால், செய்நேர்த்திக்கு அவனிடம் பணமில்லை. குறைந் தது இரண்டாயிரமாவது தேவையாயிருக்கும். அவனிடத்தில் இரு நூறுகூட இல்லை. கேட்காத இடங்களிளெல்லாம் அவன் கேட்டுப் பார்த்தான். பணம் பெயரவில்லை. இம்மாதிரி அவசரங்களுக்கு அவனுக்குச் சகாயம் செய்பவர் ரெட்டியார் ஒருவரே; அவரும் ஊரில் இல்லை. பர்மாதேசத்தில் சுற்றிக் கொண்டிருந் தார். அவர் மானேஜருக்கு, ரெட்டியாரைக் கேட்காமல் கடன் கொடுக்க இஷ்டமில்லை. ரெட்டியாருக்கு எழுதிப் பதில் வருவதற்குள் இரண்டொரு மாதமாய் விடும். பிறகு, மற்றொரு வருஷம் காக்கவேண்டியிருக்கும்! வெங்கடாசலம் தன் ஆத்திரத்தில், இதைக் காட்டிலும் பெரிய விபத்துத் தன் வாழ்நாளில் எப்பொழு தும் சம்பவிக்காதென்று நினைத்துக் கொண்டான்.

     அவன் இம்மாதிரி தவித்துக்கொண்டிருக்கும்போது, “மீனாக்ஷியைக் கேட்கக்கூடாதா?” என்று மதுரை யோசனை சொன்னான். வெங்கடாசலத்திற்குச் சிரிப்பு வந்தது. அந்த எண்ணமே அவனுக்குப் பிறக்கவில்லை. அவளுடைய நடத்தைகள் அவனுக்கு எப்பொழுதும் பிடியா. அதில் இன்னும் முக்கியமான விஷயமென்னவென்றால், அவன் தன்னை அவ்வாறு வெறுப்பது, மீனாக்ஷிக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், அவளிடம் பணம் எப்பொழுதும் இருக்கும். அவன் எண்ணம் நிறைவேறுவதற்குச் சகாயம் பண்ணக்கூடியவள், கிராமத்தில் அவள் ஒருத்தியே. அவளைச் சட்டை பண்ணி எப்படிக் கேட்பது? அப்படிக் கேட்டும் இல்லையென்று சொல்லிவிட்டால், எவ்வளவு அவமானமா யிருக்கும்?

     வெங்கடாசலத்திற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

     அவன் இஷ்டப்பட்டால், மதுரை எப்படியாவது முடித்துக் கொடுப்பதாகச் சொன்னான். ஆனால், வெங்கடசாலத்துக்கு அந்த வார்த்தையில் நம்பிக்கையில்லை. மதுரை சாமர்த்தியசாலிதான். மீனாக்ஷி யமகாதகியாயிற்றே. மதுரையைப்போல் பத்துப்பேர்களை விழுங்கிவிடுவாளே. ஆகட்டும் என்று முதலில் சொல்லி, பிறகு ஊரெல்லாம் அச்சமாச்சாரத்தைப் பரப்பிக் கடைசியில் இல்லை யென்று சொன்னாலும் சொல்லுவாள். அவள் அவ்வளவு செய்யக்கூடியவள்!

     இரண்டு மூன்று தினங்கள், வெங்கடாசலம் தீர்க்காலோசனை செய்தான். அவளை விட்டால் வேறு விதியில்லை என்று பட்டது. பிறகு, மதுரை சொற்படி நடக்கத்தான் வேண்டுமென்று ஒருவாறு தீர்மானித்துக்கொண்டான். ஆனால், மதுரையை மட்டும் வெகு தந்திரமாக, வார்த்தையோடு வார்த்தையாய் விஷயத்தை எடுக்கும்படி அவன் கேட்டுக்கொண்டான். ஏனென்றால், ஒருகால் அவள் இசையாவிட்டாலும் தனக்கு அதிக அகௌரவம் வரக் கூடாதென்பதே அவன் கருத்து.

     இந்தப் பயத்திற்கு யாதொரு காரணமுமில்லையென்பது, மதுரையினுடைய நிச்சயமான நம்பிக்கை.

     கிராமத்திற்குள் எவ்வளவோ சாமர்தியசாலியாயிருந்த போதிலும், மதுரைக்கு அவன் தரித்திர தசை மட்டும் நீங்கவில்லை. பார்வைக்கு ஒடிந்து விழுவதுபோல் இருப்பான். அவன் குழந்தை குட்டிகளெல்லாரும் அப்படித்தான். ஆகார விஷயங்களில், வஞ்சனையற்றுச் சாப்பிடுவான். அவனுக்கு இஷ்டமில்லாத உணவு எதுவுமே இல்லை. அது ஒருவேளை அதிகமாயிருக்குமோ என்ற கவலையும் இல்லை. அவன் அநேகமாய் வெங்கடாசலத்தின் ஆதரவினால் ஜீவித்து வந்தான். அதற்கு அவன் இருதயபூர்வமாக நன்றி பாராட்டி வந்தான். ஆதலால், வெங்கடாசலத்திற்குக் கஷ்ட தசை வரவர, அவனுக்கு மனம் நொந்தது. சில காலத்திற்கெல்லாம், வெங்கடாசலத்தினால் தனக்கு யாதோர் உதவியும் ஏற்பட மாட்டாதென்பதை நன்குணர்ந்தான். வாழ்நாளெல்லாம் தக்கவர்க்குத் தக்கபடி இனிய மொழிகளைப் பேசிக் காலங்கழித்தவனாதலால், கஷ்டமான வேலை ஒன்றும் தன்னால் இனிமேல் செய்யமுடியாதென்பதும் அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆகையினால், ஊரிலுள்ள இதர பண்ணைக்காரர்களிடம் வெகு நல்லதனமாகவே நடந்து கொள்ள வேண்டுமென்று நிச்சயித்துக் கொண் டான். அதிலும், மீனாக்ஷியோடும் மாயாண்டியோடும் மிகவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டுமென்று அவனுக்குப்பட்டது. நாளுக்கு நாள் அவர்கள் கை உயர்ந்து கொண்டே வந்தது. அவன், மாயாண்டியை அநேக சமயங்களில் அசடாக்கினது உண்மைதான். உண்மையிலேயே மாயாண்டி மூளையற்றவனாகையால், அவனைத் தட்டிக்கொடுத்துச் சரிப்படுத்துவது அசாத்தியமான வேலையல்லவென்று, தன்னைத்தானே மதுரை சமாளித்துக் கொண்டான்.

     இவைகளையெல்லாம் உத்தேசித்து, மீனாக்ஷியோடு பேசி உறவாட அவகாசம் எப்பொழுது வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

     அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமைத் தினம், ஊருக்கு அப்பால் ஒருமைல் தூரத்திலிருக்கும் இலுப்பைத் தோப்பில், அவர்கள் தங்கள் குலதெய்வத்திற்குப் பொங்கலிட்டுப் படைப்பதாக அவனுக்குத் தெரியவந்தது. அன்றைத் தினம், தற்செயலாக வந்தவன்போல அவர்கள் பொங்கலிடும் இடத்திற்குச் சென்றான்.

     “ஒ, நீங்களா பொங்கலிடுகிறீங்க?” என்றான் மதுரை, மலர்ந்த முகத்துடன். “நான் கன்னிப்பாளையம் போய்வாறேன். வாய்க்காங் கரையிலிருப்பது யாரின்னு தெரியில்லை. என் சகலப்பாடி ஊட்டிலே பொங்கலிடனுமின்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அவுங்கதானாக்குமின்னு பாத்தேன்,” என்று வந்ததற்குக் காரணம் சொல்வதுபோல் கூறினான். மீனாக்ஷிக்கு முதலில் உண்டான வியப்பு, அவன் சொன்ன காரணத்தால் நீங்கிற்று.

     “போற வளியிலே, நீ இந்தப் பக்கம் திரும்பினது எனக்கு ரொம்ப சந்தோசம்,” என்றாள் மீனாக்ஷி, கம்மியகுரலுடன். பின்னர், “இந்தச் சின்ன சங்கதிக்கு யாரைக் கூப்பிறது?” என்று நகைத்தாள்.

     பருத்து வீங்கினாற் போலிருந்த அவள் கண்ணிமைகள், விழிகளை முக்கால் பாகம் மறைத்துக்கொண்டன.

     “மெய்தான், மெய்தான். ஒத்தரைக் கூப்பிட்டா இன்னொத்தரைக் கூப்பிடணும். அதுக்கு முடிவு ஏது?” என்றான் மதுரை.

     “அதுக்காக நீ போயிடாதே. நீ இருந்து கொஞ்சம் பொங்கலைத் தின்னுட்டுத்தான் போவணும். சாமிக்குப் படச்சுதில்லையா?” என்று மதுரையைக் கட்டாயப்படுத்தி நிறுத்திவிட்டாள். வெங்கடாசலத்தினுடைய நிலைமையை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் அவளுக்கு இருந்தது. அது மதுரைக்குத் தெரியாவிட்டால் வேறு யாருக்குத் தெரியும்? மதுரை, முதலில் இருக்க இஷ்டமில்லாதவன்போல் பாவித்துக் கடைசியாகச் சம்மதித்தான்.

     பாலும் அரிசியும் வெந்துகொண்டே இருந்தன. பொங்கல் பக்குவமாவதற்கு இன்னும் சிறிது நேரம் ஆகும்போல் இருந்தது. அப்பொழுது மதுரை, மீனாக்ஷியிடம் பேச்சைக் கொடுத்து ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்திற்குத் தாவி, கடைசியில் தானும் வெங்கடாசலமும் கழுகுப்பட்டிக்குப் போனதைப் பற்றியும் வெங்கடாசலம் உத்தேசித்திருக்கும் பிரயத்தனங்களைப் பற்றியும் சொன்னான்.

     “இந்த மாதிரிப் புதுசு புதுசாப் பயிரிட்டு அவனுக்கு அலுத்துப் போவலே? இருந்ததை வச்சக்கிட்டு சொகமா இருக்கக்கூடாது?” என்று மீனாக்ஷி, வெறுப்புடன் சொன்னாள்.

     “ரெட்டியார் கடனைத் தீர்க்கவெண்டாமா!” என்றான் மதுரை.

     “அதுவும் அவனாப் பண்ணிக்கிட்டதுதானே? இதுவா கடனைத் தீக்கற வளி? செலவைக் குறைச்சிக்கிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா மீத்துவைக்கிறது.”

     “உன்னைப்போல் எல்லாரும் அவ்வளவு கெட்டிகாரங்களா இருப்பாங்களா?” என்றான் மதுரை, புன்னகையுடன்.

     “ஆமாம், என் கெட்டிக்காரத்தனத்தை நீதான் மெச்சிக்கணும்,” என்றாள் மீனாக்ஷி. ஆனால், உள்ளூற அவளுக்கு மிகவும் சந் தோஷம் உண்டாயிற்றென்பது நன்கு விளங்கிற்று. “இந்தக் கடலைக்கு எவ்வளவு செலவளிக்கப் போறானோ?” என்றாள் அவள்.

     “ரெண்டு மூணு ஆயிரமாவது ஆவாதா!” என்றான் மதுரை.

     “இம்பிட்டுத்தானே! ரெட்டியாரு குடுக்கறாரு. அவர் இருக்கச்சே அவனுக்கு என்ன கொறவு?”

     “ரெட்டியாரைக் கேக்கறதாக அவனுக்கு எண்ணமில்லை” என்று மதுரை பொய் சொன்னான்.

     “நீ சொல்லறது ரொம்ப ஆச்சரியமாய் இருக்குதே. ஏன் அப்படி?”

     “ரெட்டியாரு மலைமேலே உக்காந்து இருக்கறதா எண்ணிக்கிட்டு இருக்காராம். அதனாலே, அவருகிட்டே போக இஷ்ட மில்லையாம். இந்தச் சின்னத்தொகையை ஊரிலேயே ஆருகிட்ட யாவது பெரட்டிக்கலாமின்னு சொல்லிக்கிட்டு இருக்கான்.”

     “நம்மூரிலேயா பெரட்டறது! - இங்கே எல்லாரும் பணத்தை மூட்டைகட்டித்தான் வச்சுக்கிட்டு இருக்காப்போல! அப்படியிருக்கிறவன், ஒத்தன் ரெண்டுபேருகூட எனக்குத் தெம்படலையே! உனக்குத் தெரியுமா, யாருகிட்ட வாங்கப் போறான்னு?”

     “ஊம். எல்லாம் பேச்சோட நிக்குது. அந்தக் கடலையைப் பயிரிடறானா இல்லையோ. இன்னும் ஒண்ணுமே நிச்சயமாகலையே. ஏம், அந்த ஒத்தரு ரெண்டுபேரிலே நீகூட இருக்கலாம்,” என்று சிரித்துக்கொண்டு மதுரை சொன்னான். “என்னைக் கேலி பண்றயா?” என்று கேட்டாள் மீனாக்ஷி. அவள், மதுரையின் மனத்தில் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்தாள்.

     “மெய்யாலும் சொல்றேன்; கேலி ஒண்ணுமில்லை. ஒன் தலையிலே அவன் என்ன கல்லுப்போட்டான்? நீதான் அவனுக்கு என்ன தீங்கு பண்ணிட்டே? இல்லே, அவன் இன்னும் ரெண்டு மூணாயிரம் ரூவாய் கடன் தாங்க மாட்டானா?”

     “இப்போ, அதைப் பத்தி யார் சொன்னாங்க? பயித்தியக்காரனாட்டம் பேசறயே - அவன் பெரிய மனுசன் ஆச்சே! எங்ககிட்டே யெல்லாம் லேவாதேவி வச்சிப்பானா?”

     மதுரை சிரித்துக்கொண்டே, “உங்கிட்ட அப்படிச் சொன்னானா?” என்றான்.

     “எல்லாச் சங்கதியும் நாம் சொல்லித்தானா தெரிஞ்சிக்கிணும்?”

     “நான் ஒண்ணு சொல்றேன், கேளு. நம்ப ஊரெல்லாம் தேடினா, அவனை நல்லா அறிஞ்சுகிட்டவங்க ரெண்டு மூணு பேருகூடக் கிடைக்கமாட்டாக. அதுக்குக் காரணமும் எனக்குத் தெரியும்; எல்லாம் அவன் வாயிதான்!”

     “இப்போ சொன்னியே, அது சரியான பேச்சு! நாக்குலே எவ்வளவு துடுக்கு! எவ்வளவு விசம்!” என்று மீனாக்ஷி சீறினாள்.

     “ஆனால், நீ நெனைக்கிறபடி அவன், அவ்வளவு கெட்டவனில்லே. எந்த விசயத்தையும் ரொம்பநாள் யோசிக்க அவனுக்குக் கையாலாவாதே! புத்திக் கொறவின்னிட்டு நான் சொல்லணுமா?” என்று மதுரை, தன் மனச்சாக்ஷிக்கு விரோதமாகச் சொன்னான்.

     “அது என்னமோ நிசந்தான்” என்று மீனாக்ஷி ஒப்புக் கொண்டாள்.

     “நீ என்ன சொல்றே? - ஒரு பந்தியத்துக்காவது அவனை உங்கிட்டே பணம் வாங்கும்படி பண்றேன், பாக்கிறயா?”

     “அவனுக்குக் கடன்கொடுக்கணுமின்னு எனக்கு ரொம்ப அக்கறையா?”

     “இல்லாட்டி, உங்கிட்டத்தான் வாங்கணுமின்னு அவனுக்கு அவசியமா?” என்று உடனே மதுரை பதில் கூறினான். பிறகு, “நிசம்மா உங்கிட்ட வாங்குறாப்படி அவனுக்கு எண்ணமேயில்லை. இதெல்லாம் நான் என்னாத்துக்குச் சொன்னேனின்னா, அநியாயமா ரொம்பப் பேரு அவன் மேலே கெட்ட அபிப்பிராயம் வச்சிருக்காங்க. அது தப்பு. அவன் அவ்வளவு கெட்டவன் இல்லே. இன்னொரு விசயம். எம் மனசுலே இருக்கிறதை வெளியாக்கிடறேன்,” என்று குரலைக் குறைத்து ரகசியமாகச் சொல்லத் தொடங்கினான்: “நம்மூரு நல்லது பொல்லாததை நெனச்சா, அவன் மறுபடியும் ரெட்டியார்கிட்டே கடன் வாங்கக்கூடாதுன்னு எனக்கு. இப்போ இருக்கிற கடனைக்கூட, நம்ம ஊராரு ஆரு கிட்டையாவது மாத்திடணுமின்னு நான் யோசிக்கிறேன். ரெட்டி யார்கிட்டே இனிக் கடன் வாங்கவேண்டாமின்னு அவன் மனசைக் கலச்சுது நான்தான், போயேன்.”

     மீனாக்ஷிக்கு மர்மங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. மேலே மதுரை சொல்லத் தொடங்கினான்: “மீனாச்சி, நீ ரொம்ப சாமர்த்தியக்காரி; வஞ்சனையில்லாமே சொல்லு, எத்தினி நான் வெங்கடாசலம் இப்படித் தள்ளுவான்?”

     மீனாக்ஷி வாயைத் திறக்கவில்லை. தன் சாமர்த்தியத்தையும் புத்திசாலித்தனத்தையும் மதுரை மெச்சுவதைக் கேட்டு, அவள் பரமானந்தத்தில் மூழ்கினாள். மதுரை நன்றி கெட்டவனல்ல; வெங்கடாசலத்தைத் தூஷணையாகப் பேச அவன் மனம் கஷ்டப்பட்டது. ஆனால், அவன் நன்மைக்காகவே அல்லவா தான் இவ்வாறு பாசாங்கு செய்யவேண்டியிருக்கிறதென்று மதுரை சமாதானப்படுத்திக் கொண்டு, பின்வருமாறு கூறினான்: “நம்மூரெல்லாம் ஒரு ஜாதி. பாக்கப்போனா, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இல்லாமெ இருக்காது. எனக்கு என்ன எண்ணமின்னா - நம்பிளவன் சொத்தை நம்பளவனே ஒருத்தன் கட்டிக்கணுமேயொளிய, அது பிறத்தியானுக்குப் போவக்கூடாது என்கிறதுதான். இதை, வாயை விட்டு எனக்குச் சொல்ல இஷ்டமில்லை. நீ சொல்லும்படி பண்ணிட்டே,” என்றான்.

     “உளுமையைச் சொல்றதிலே என்ன தப்பு? இந்த மாதிரி எண்ணம் எனக்கும் ரொம்ப நாளா உண்டு. ஆனா நீ கோவிச்சிக்காதே. உனக்கு இவ்வளவு ஆலோசனையிருக்கின்னு நான் நம்பவேயில்லை,” என்று அவள், கொழுத்த முகமெல்லாம் புன்சிரிப்பு நிரம்பச் சொன்னாள்.

     “இந்தப் பேச்சு ஆரு காதிலேயாவது விளுந்திடப்போவுது! அதிலேயும் வெங்கடாசலத்துக்குத் தெரியவே கூடாது. அப்பா, மாயாண்டி! நீ ரொம்ப சாக்கிரதையாயிருக்கணும்,” என்று மாயாண்டியை நோக்கிச் சொன்னான் மதுரை.

     “அவனுக்கு நல்லாச் சொல்லு!” என்றாள் மீனாக்ஷி, கடுகடுப்புடன். மாயாண்டி, பேதையோல் விழித்துத் தலையை ஆட்டினான்.

     “உன்னை ஏன் அவனுக்குக் கடன் குடுக்கும்படி சொல்றேன்னு இப்போ தெரிஞ்சிச்சா?”

     “நீ என்ன பயித்தியக்காரனாயிருக்கயே, மதுரை. ‘உனக்குக் கடன் தரேன்’னிட்டு அவங் கால்லே விளச் சொல்றயா?”

     “உம் மனசிலே, நீதான் கெட்டிக்காரீன்னு நீ எண்ணிக் கிட்டு ருக்கே,” என்று மதுரை சற்றுச் சலிப்பாகச் சொல்லி, “நான் உன்னை அவன் கால்லே விளச்சொன்னேனா? தெனவு எடுத்தவன் சொறிஞ்சுக்கிறான். அக்கறை உனக்கோ அவனுக்கோ? பணம் தேவையானா வந்து கேட்டுகிட்டம்; ஒன் தயவை அவன் நாடு கிறானேகிண்டி, நீயா அவன் தயவுக்குக் காத்திருக்கே? இந்த மாதிரிப் பண்ணா நல்லாருக்குமின்னு நான் சொல்றேன். கேட்டாக் கேட்கட்டும், கேக்காட்டிப் போகட்டும். யாருக்குக் குடி முளிகிப் போவுது?” என்றான்.

     இச்சமயத்தில் மாயாண்டியின் மனைவி தேவானை, யாவும் பூஜைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாள். பூஜை முடிந் தவுடன், மதுரையும் அவர்களோடு பிரசாதத்தைச் சாப்பிட்டான். பிறகு, தான் அவர்களோடு சேர்ந்து வீடு திரும்பினால் சந்தேகத்திற்கு இடம் கொடுக்குமென்றும் தான் முன்னதாகவே போய் விடுவது உசிதமென்றும், மீனாக்ஷியிடம் ரகசியமாகச் சொல்லிவிட்டு, மதுரை அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான்.

     இலுப்பைத் தோப்பிலிருந்து வீடு வரும்வரையில், மீனாக்ஷி வண்டியில் வாய் திறவாமலே உட்கார்ந்திருந்தாள். விதவிதமான எண்ணங்கள் அவளுக்கு உண்டாயின. குலதெய்வத்துக்கு இட்ட பொங்கலுக்குக் கைமேல் பலன் கிடைத்துவிட்டதென்று சந்தோஷப்பட்டாள். அவள் நினைத்த காரியங்களெல்லாம் ஜயமானால், ஒரு பெரிய பொங்கலைப் படைப்பதாக அவள் வேண்டிக் கொண்டாள். அவள் வாயைவிட்டு வார்த்தைகள் கிளம்பாவிடினும், மனத்தில்மட்டும், ‘இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கலாம்’ என்ற எண்ணம் ததும்பிக்கொண்டிருந்தது. அதற்குத் தக்கவாறு உதடுகளும் அசைந்து கொண்டிருந்தன.


மண்ணாசை : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22