அத்தியாயம் 8. கால வித்தியாசம்

     அடுத்த வருஷம் முழுவதும், வெங்கடாசலம் படுத்த படுக்கையாகக் கிடந்தான். முதலில் இரண்டு மாதம், தீவிரமான காய்ச்சல் அடித்தது. பிறகு, அதன் மூலமாகப் பின்காலில் கீல்வாதம்போல் ஒரு கோளாறு ஏற்பட்டது. அந்த வியாதியினாலும், அதற்கு நாள்படச் செய்யவேண்டியிருந்த வைத்தியத்தினாலும், அவனுக்குச் சினேகிதர்களைப் பார்க்க விருப்பமில்லாததனாலும், அவன் வீட்டை விட்டு வெளியே தெருத் திண்ணைக்குக்கூடப் போவதில்லை. அண்ணாமலைத் தாத்தாவும் வீரப்பனும் அவன் குடும்பத்தாரும் மட்டும், அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போவார்கள். மதுரை, எப்பொழுதாவது எட்டில் பத்தில் வரும்போது, தான் ஜீவன விஷயமாகத் திரியவேண்டியிருப்பதால் அடிக்கடி வரமுடிய வில்லையென்று, மன்னிப்புக் கேட்டுக் கொள்வதுபோலச் சொல்வான். அதைக் கேட்கும்போதெல்லாம் வெங்கடாசலத்தின் மனம் கஷ்டப்படும். முன்போல் அவ்வளவு சகாயம் செய்யச் சக்தி யில்லாவிட்டாலும், அறுவடையின்போது அவனுக்கு மாமூலாய்க் கொடுக்கப்படும் தானியத்தை அவன் எடுத்துக் கொள்ளலாமென்று கேட்டுக்கொண்டான்.

     மதுரை, அநேகமாய் மீனாக்ஷி வீட்டில் காலத்தைக் கழித்து வருவது வெங்கடாசலத்திற்குத் தெரியும். அதனால் அவனுக்குக் கோபம் ஒன்றுமில்லை, சந்தோஷமே. ஏனெனில், மீனாக்ஷியிடத்தில் சிநேகமாயிருப்பதால், தனக்கு அவளால் யாதொரு தீங்கும் வராதபடி மதுரை பார்த்துக்கொள்வான் என்பது, அவனுடைய திடமான நம்பிக்கை. அந்த வருஷம் நன்செய் விளைச்சல் திடமாகவே இருந்தது. சாப்பாட்டுச் செலவுக்குப் போகக் கையிலும் கொஞ்சம் பணம் மிகுந்தது. ஆனால், அவன் ரெட்டியாருக்குக் கொடுக்கவேண்டிய கடனை அடியோடு மறந்துவிட்டான். அதற்குக் காரணம், ரெட்டியாராவது அவருடைய ஏஜெண்டாவது, அவன் வழிக்கே வராமல் இருந்ததுதான்.

     ரெட்டியார், பர்மா தேசத்தில் ஒரு வர்த்தக விஷயமாய் ஏற்பட்ட பெரிய நஷ்டத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது, அவனுக்குத் தெரியாது. எவ்வளவோ சிரமப்பட்டும், ரெட்டியாரால் நஷ்டத்திலிருந்து தப்பமுடியவில்லை. பிறகு, வெறுப்புடன் அவர் ஊர் திரும்பினார். உள்ளூரில் மூலைக்கு மூலை சிதறிக் கிடக்கும் லேவாதேவிகளை ஒன்றாகச் சேர்த்துக் கவிழ்ந்த கப்பலை மறுபடியும் நிமிர்த்த அவர் முயன்றார். இதன்பொருட்டு, ஒவ்வோர் இடமாகப் பார்த்துக் கொண்டு, கடைசியாக ஒருநாள் மாலை சுமார் நாலுமணி நேரத்திற்கு, அவரும் அவருடைய ஏஜெண்டும் வெங்கடாசலத்தின் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களைக் கண்டதும் வெங்கடாசலத்திற்கு அடி வயிற்றில் இடி விழுந்தாற்போல் இருந்தது. அவர்களை வெகு மரியாதையுடன் வரவேற்று உபசாரங்கள் பண்ணத் தொடங்கினான். ஆனால், அவற்றையெல்லாம் மறுத்து, ரெட்டியார் தாம் வந்த காரியத்தைத் தெரிவித்தார். ஒரு வாரத்திற்குள் முதலையும் வட்டியையும் திருப்பிக் கொடுக்காவிட்டால், பணத்தை வசூல் பண்ணிக் கொள்ளும் விதம் தமக்குத் தெரியுமென்று, அவர் உறுதியாகச் சொன்னார். இதைக் கேட்டவுடன் வெங்கடாசலம் திகைத்து விட்டான். நாடி ஆடவில்லை. வட்டி முழுவதையும் கொடுத்து விடுவதாகச் சொன்னான். ரெட்டியார் கேட்கவில்லை. பேச்சோடு பேச்சாய், அவன் மீனாக்ஷியிடம் கடன் வாங்கியிருப்பது தமக்குத் தெரியுமென்று அவர் சொன்னார். அதற்கு வெங்கடாசலம் எவ்வளவோ சமாதானங்கள் கூறியும் பயனில்லை. தனக்கு நேர்ந்த பெரும் விபத்தையும் அவன் எடுத்துரைத்தான். எதற்கும் ரெட்டியார் மசியவில்லை. கடைசியாக, அவன் அவ்வளவு வற்புறுத்துவதனால், ஒரு மாதம் தவணை கொடுப்பதாகச் சொல்லிப் புறப்பட்டுப் போய்விட்டார்.

     வெங்கடாசலம் திக்குதிசை தெரியாமல், பைத்தியம் பிடித்தவன்போல் உட்கார்ந்திருந்தான். பணத்தைத் திருப்பிக் கொடுக்கா விட்டால், ரெட்டியார் பிராது செய்துவிடுவார் என்று வெங்கடாசலத்திற்கு நிச்சயமாகிவிட்டது. கச்சேரி வரையிலும் போனால், தன் சொத்துக்கெல்லாம் ஆபத்து வரும் என்பதில் சந்தேகமில்லை. முதன் முதலில், கிராமத்திற்கெல்லாம் உயர்தரமான தன் ‘நத்தைத் தோட்ட’த்துக்குத்தான் சனி பிடிக்கும். அதன் பேரில் ஆசைப்படாதவன் ஊரில் யார்? அது கோர்ட் மூலமாய் ஏலத்திற்கு வந்துவிட்டால்... - அதற்குமேல் அவன் மனம் ஓடவில்லை. அதை நினைக்கும்போதே அவன் நெஞ்சம் பதறிற்று. அவன் வேர்த்து விறுவிறுத்துப் போய்விட்டான். நாக்கு வறண்டது. பல்லைக் கடித்துக்கொண்டு, ரேழியில் கீழும் மேலுமாக நடந்தான். “ஓ நத்தைத் தோட்டமே, நத்தைத் தோட்டமே,” என்று கலங்கினான். தலைமுறைக் கணக்காகத் தன் குடும்பத்தார் பெருமையுடன் ஆண்டுவந்த அந்தத் தங்கமான நிலத்தைத் தன் காலத்திலா இழப்பது? ஒரு காலும் முடியாது. தான் இறந்தாலும் சரி, அதை விற்கமாட்டேன்... அதைக் கைப்பற்றத் தைரியமுள்ளவன் எவனோ பார்க்கலாம்... குத்துச் சண்டை செய்பவன்போல் கைகளைக் கெட்டியாக மூடிக்கொண்டு, பல்லைக் கடித்தான்.

     ஆனால், அவன் கோபவெறியெல்லாம் வெகு சீக்கிரத்தில் தணிந்துவிட்டது. நெருக்கடியின் உண்மை, உள்ளங்கை நெல்லிக்கனிபோல் பிரத்தியக்ஷமாயிற்று. ஆத்திரப்படுவதால் என்ன நடக் கும்? புத்தி மாறாட்டந்தான் ஏற்படும். மதுரை, யோசனை செய்து சூழ்ச்சிகள் செய்வதில் வெகு சமர்த்தன். வெங்கடாசலத்திற்கு எவ்வளவோ தடவைகளில், அவன் அப்படி உதவி செய்திருக்கிறான். ஆனால், அவனை இப்பொழுது பார்ப்பதே அரிதாய் விட்டது. ஏன்? தான் முன்போல் அவனுக்குப் பொருளுபகாரம் செய்யக் கூடாததனால் அல்லவா? எவ்வளவு அற்பத்தனம்... அடுத்த க்ஷணத்தில் வெங்கடாசலத்தின் பெருந்தன்மை மேலிட்டது. மதுரையின் மேல் தப்புச் சொல்வது பாபமென்று அவனுக்குப் பட்டது. தன் வீட்டில் உட்கார்ந்திருந்தால் அந்த ஏழை, ஜீவனத்திற்கு என்ன செய்வான் என்று தானே சமாதானம் செய்துகொண்டான். இந்த நெருக்கடியிலிருந்து எவ்விதம் தப்பித்துக் கொள்வதென்று மூளை கலங்க யோசித்தான். யாதொரு வழியும் காணவில்லை. உடம்பு காய்ச்சல் வந்தாற்போல் கொதித்துக் கொண்டிருந்தது. திக்குத் திசையற்றுத் தவிக்கும் அவன் மனம், ஒரு நிமிஷமாவது ஒரு விஷயத்தைப் பற்றி சாந்தமாய் யோசிக்கச் சக்தியற்றதாய்விட்டது. எந்தச் சிநேகிதனிடமாவது தனக்கு நேரிட்ட கஷ்டத்தை மனமாரச் சொல்லாவிட்டால், அவன் தனக்குப் பைத்தியம் பிடித்து விடுமென்று நினைத்தான். உடனே வேலனைக் கூப்பிட்டான். வேலன் வீட்டில் இல்லை. அவன் குரலைக் கேட்டு, மனைவி அலமேலு வந்தாள். அலமேலு, எந்த விஷயத்திலும் தலையிட்டுக்கொள்ள மாட்டாள். ஆனால் அன்றைத்தினம், தன் கணவனுக்கும் ரெட்டியாருக்கும் நடந்த சம்பாஷணையை அவள் உள்ளிருந்தவாறே கேட்கும்படி நேரிட்டது. தன் மனைவியைக் கண்டதும், வெங்கடாசலத்தின் துக்கம் பின்னும் அதிகரித்தது. அவள் பரமசாது; வெளுத்ததெல்லாம் பாலென்று நினைப்பவள். தன் புத்தியின்மையால் அவளுக்குக் கஷ்டம் ஏற்பட்டால், அதை எப்படிச் சகிப்பது? அதைக் காட்டிலும் பெரிய துரோகம் அவன் என்ன செய்ய முடியும்? கணவனும் மனைவியும், சில வினாடிகள் ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்தார்கள். பரஸ்பரம் இருந்த துக்கத்தை உணர்ந்தார்கள். வெங்கடாசலம் வாயெழும்பாமல் படும் துயரத்தை அறிந்து, அலமேலு மெள்ளச் சொல்லலானள்:

     “வேலு, புண்ணாக்கு வாங்கியார மருதூருக்குப் போயிருக்கான். வெளக்கு வெச்சுத்தான் வருவான். எதுனாச்சும் வேலையிருக்குதா?”

     “ஒண்ணுமில்லை. அவனை மதுரை ஊட்டுக்கு அனுப்பனுமின்னு பாத்தேன் - இன்னிக்கு ரெட்டியாரு வந்திருந்தாரு தெரியுமல்ல? எனக்கு ஒரு பயத்தைக் காட்டிட்டுப் போயிருக்காரு.”

     “அவரு என்னா பண்ண முடியும்? பணத்தைத்தானே வாங்கிட்டுப்போவாரு?” என்றாள் அலமேலு.

     வெங்கடாசலம் துயரத்தோடு துயரமாய்ச் சிரித்துக்கொண்டு, “அது அவ்வளவு சுளுவா முடிஞ்சிடுற வேலையா?” என்றான்.

     “நான் கொஞ்ச நேரத்துக்கெல்லாம், லச்சுமி ஊட்டுக்குப் போறேன். அப்போ, அவரை வரச்சொல்றேன். அவரு பொளுதினைக்கும், மீனாச்சி ஊட்டுத் திண்ணை மேலேதானே உட்காந்திருக்காரு.”

     “சரி - வீரப்பனையும் பாக்கணும். ஆனா, அவன் இப்ப ஊட்லே இருக்கமாட்டான். வந்த ஒடனே, நான் வரச் சொன்னேனிட்டு அவன் பெண்சாதிகிட்டே சொல்லு,” என்றான் வெங்கடாசலம்.

     அலமேலு, “சரி,” என்று தலையை ஆட்டிக்கொண்டு அப்புறம் சென்றாள்.

     அலமேலுவைப்போல் அமரிக்கையுள்ளவரைக் காண்பதே அரிது. மிகவும் தெய்வபக்தி யுள்ளவள். அவள் வாழ்க்கை, வீட்டு வேலையிலும் ‘சாமி கும்பிடுவதி’லும் அடங்கியிருந்தது. தன் புருஷன், பொருளை எவ்வாறு செலவழிக்கிறானோ என்ற கவலையே அவளுக்கு இல்லை. ஆனால், வரவர அவர்கள் க்ஷீண தசையை அடைந்து வருவது மட்டும் அவளுக்குத் தெரிந்தது. இதைப் பற்றித் தன் நிமித்தமாக அவள் கவலைப்படவேயில்லை. அவளுக்குப் படாடோபமில்லை யாதலின், செலவும் அதிகமில்லை. ஆனால், தன் கணவன் செல்வாக்கில் ஆசையுள்ளவனாகையால், அவன் வாழ்வுக்குக் குறைவு வராமலிருக்க வேண்டு மென்று, சதா கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டாள். அதுவும் இன்றைத் தினம், கவலையும் விசனமுமுற்ற அவன் முகத்தைப் பார்க்கப் பார்க்க, அவள் மனம் துடித்தது. அந்நிலைமையில் அதுவரை அவனை எப்பொழுதுமே கண்டதில்லை.

     அன்றிரவு வெங்கடாசலம், வீரப்பன், மதுரை - இம் மூவருமாக வெங்கடாசலத்தின் வீட்டில், வெகுநேரம் வரையில் தீர்க்க ஆலோசனையில் ஆழ்ந்திருந்தார்கள். ரெட்டியாரின் கடனைக் குறித்து ஏதோ பேச்சு நடக்கிறது என்பதைத் தவிர, அவளுக்கு வேறொன்றும் தெரியாது; தெரிந்து கொள்ளுவதற்கும் அவளுக்கு இஷ்டமில்லை. அவள் பண்டைக்காலத்து மனுஷி. அவளுக்கு அவள் புருஷன் தெய்வத்துக்குச் சமானமானவன்; புருஷனல்லால் மனைவிக்கு யாதொரு பாத்தியதையும் கௌரவமும் இல்லை யென்பது அவளுடைய கொள்கை. இந்நம்பிக்கை அவளுடைய ஜாதி தர்மம்; பிறப்போடு கூடப் பிறந்தது. இல்வாழ்க்கையில் அவளுக்குத் தெரிந்த கடமை ஒன்றே - பயபக்தியுடனும் அழியாக் கற்புடனும் தன் கணவனுக்குப் பணி செய்வதே. எவ்வளவுக் கெவ்வளவு சரியாக இக்கடமையைச் செய்து வந்தாளோ, அவ்வளவுக்கவ்வளவு அவளுடைய பரசுகம் நிலை நிற்குமென்பது, அவளது பூரண நம்பிக்கை. புருஷனைத் தழுவாமல், பிரத்தியேகமாய்க் கஷ்டசுகம் மனைவிக்கு ஏது? இம்மாதிரி எண்ணங்களை யுடையவளுக்குத் தன் கணவனுடைய ஆஸ்தி பாஸ்தியில் யாதொரு பற்றுதலும் இராமலிருந்ததில் என்ன ஆச்சரியம்?

     அடுத்த வாரமெல்லாம் மதுரை வெகு சுறுசுறுப்பாயிருந்தான். அவன் அடிக்கடி மீனாக்ஷி வீட்டிற்கும் வெங்கடாசலத்தின் வீட்டிற்கும் நடப்பதைப் பார்த்த கிராமத்தார்களுக்குச் சில சந்தேகங்கள் பிறந்தன. அவர்கள், வெங்கடாசலத்தின் நஷ்ட தசைக்காக மிகவும் பரிதபித்தார்கள். ஏழை மக்கள் பரிதாபப்படுவதற்கு மேல் என்ன செய்ய முடியும்? வரவர சமாசாரம் மெள்ள வெளியில் வந்தது. மீனாக்ஷி, வெங்கடாசலத்தினுடைய கடன்களையெல்லாம் தீர்த்துவிட்டதாகவும், அதற்குப் பதிலாக அவனுடைய நன்செய் நிலங்களையெல்லாம் ஸ்வாதீன அடமானத்தில் கைப்பற்றியதாகவும், நிலங்களின் மாசூலை அவள் அனுபவிப்பதால் கடனுக்கு வட்டி கிடையாதென்றும், ஆனால் வெங்கடாசலமோ அவன் வாரிசுதாரர்களோ, அறுபது வருஷத்திற்குள் கடனைத் திருப்பிக் கொடாவிட்டால், நிலங்கள் மீனாக்ஷிக்கோ அவள் வாரிசுதாரர்க ளுக்கோ பாத்தியமாய் விடுமென்றும், எல்லோருக்கும் தெரிய வந்தது. அவன் செய்த காரியம் முட்டாள்தனமானதென்று சிலர் நினைத்தார்கள். மற்றும் சிலர், அப்படிச்செய்திராவிட்டால் அவன் நன்செய் நிலங்களெல்லாம் ஏலத்தில் போயிருக்குமென்று சொல்லி அதை ஆமோதித்தார்கள். ஆனால், எல்லோரும் ஒரு மனமாக, அவன் இனிச் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவான் என்பதை ஒப்புக் கொண்டார்கள். புன்செய் நிலங்கள் எவ்வளவு விஸ்தாரமா யிருந்தபோதிலும், அவைகளிலிருந்து என்ன எதிர்பார்க்க முடியும்? மானம் பார்த்த பூமிதானே...

     கஷ்டப்படாமல் ஜீவனம் செய்யக் கொஞ்சம் நன்செய் நிலத்தை வைத்துக்கொண்டு, பாக்கி யெல்லாவற்றையும் விற்றுக் கடனை அடைக்க வெங்கடாசலத்திற்கும் அவகாசம் இருந்தது; ஆனால், அவனிடம் அவன் சிநேகிதர்கள் அந்தப் பேச்சையே எடுக்க முடியவில்லை. இன்னும் ஏதோ நல்ல காலம் வரப் போகிறதென்றே அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அதற்குள் தனக்கு மரணகாலம் வந்தாலும், தன் முன்னோர் ஆண்டு வந்த நிலங்களெல்லாம் தன் குடும்பத்தை விட்டு விலகவில்லை என்ற எண்ணத்தோடு இறந்தாலும் இறப்பானேயொழிய, அவன் அவைகளை ஒருநாளும் விற்கமாட்டான். வெங்கடாசலம் என்றால் அதுதான். இது ஊரெல்லாம் தெரிந்த விஷயம்.


மண்ணாசை : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22