உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
அத்தியாயம் 9. மானபங்கம் துறவிகளைத் தவிர்த்து, இவ்வுலகில் திரவியம் தேட ஆசையில்லாதவர் எவரும் இல்லை. அவ்வாசைக்கோர் அளவுமில்லை; அவ்வாசைக்காகப் படும் துன்பங்களுக்கும் கணக்கில்லை. ஆயினும் இத்துன்பங்ளெல்லாம், இருக்கும் பொருளை இழக்க நேரிடும்பொழுது படும் துயரத்திற்கு ஒருநாளும் ஈடாகா. மனிதர்களின் இயற்கை இவ்வாறு அமைந்திருப்பதும் கடவுளின் மாயையே. ஆறாத் துயரத்துடன், தன் சொத்துக்கள் ஒவ்வொன்றாகத் தன்னைவிட்டு நீங்குவதை வெங்கடாசலம் பார்த்துக்கொண்டே இருந்தான். இக்காரியங்களெல்லாம் மதுரையின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றன. முதலில், வருஷக் கணக்காகக் அவனிடம் வேலைசெய்த பண்ணையாட்கள், வேறிடம் பிழைப்புத் தேடிக்கொள்ளக் கண்ணும் கண்ணீருமாக விடைபெற்றுக் கொண்டனர். பிறகு, ஒரு கறவைப் பசுவும் ஒரு ஜதை எருதும் போக, மற்றெல்லா மாடுகளும் விற்கப்பட்டன. அவைகளோடு, பெரிய வைக்கோற்போரும் போயிற்று. அதன் பிறகு, குன்றுபோல் குவிந்திருந்த எருக்குவியலும் அகற்றப்பட்டது. இனி எந்த நன்செய்க்கு எருப் போடவேண்டும்? மற்றும், அநேக சாமான்கள் வெங்கடாசலத்திற்குத் தெரியாமலே விற்கப்பட்டனவென்ற வதந்தி ஏற்பட்டது. அதற்குக் காரணம், மதுரைக்கு வெங்கடாசலத்தின் மனத்தைப் புண்படுத்த இஷ்டமில்லாததே. வரவர வெங்கடாசலத்தின் வியாதி முற்றிப் பார்சுவ வாயுவாகத் திரும்பி, அவனைப் படுக்கையில் தள்ளிற்று. ஆறுமாதம் படுத்த படுக்கையாய்க் கிடந்தான். பிறகு அவன் ஒருவாறு சமாளித்துக் கொண்டபோதிலும், அவன் உடம்பு அந்த இடியிலிருந்து கரை தேறவில்லை. அவனுக்கு இடுப்பு ஸ்வாதீனமற்றே போய் விட்டது. உதவியில்லாமல் எழுந்து உட்காரக்கூட, அவன் சக்தி யற்றவனாய்விட்டான். இனி வாழ்நாளையெல்லாம் முடமாகவே கழிக்கவேண்டுமோ என்ற பயம், அவனுக்கு அடிக்கடி உதித்தது. ஆனால், ஓயாத நம்பிக்கையும் தைரியமும் உள்ளவனாகையால், என்றைக்காவது ஒருநாள், தன் ஆரோக்கியமும் ஐசுவரியமும் திரும்புமென்று எதிர்பார்த்தான். ஒரு வருஷம் கடந்தது. வெங்கடாசலத்தின் வீட்டுப் புது நட வடிக்கைகளெல்லாம் பழையவையாயின. தற்கால நிலைமையைவிடச் சற்றுப் பெருஞ்செல்வாக்கில் எப்பொழுதாவது அவர்கள் வாழ்ந்திருப்பார்களென்ற சந்தேகங்கூட வராதபடி, மாறுதல் அவ்வளவு பூரணமாய் ஏற்பட்டுவிட்டது. வெங்கடாசலம் ஒரு சிறு அறையில் பழைய கட்டிலின்மேல் மல்லாந்து படுத்துக் கொண்டு, கூரையைப் பார்த்துத் தனக்குத் தானே பேசிக் கொள்வதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியவில்லை. எப்பொழுதாவது, வறுத்த பட்டாணிக் கடலை கிடைத்தால், அதை அவன் ஒவ்வொன்றாகக் கொறித்துக் கொண்டிருப்பான். இவ்வளவு தரித்திர தசையை அனுபவிக்கும் இம்முடவன், ஒரு காலம் ஊரெல்லாம் அவன் பெயரைச் சொன்னாலே, அழுத குழந்தைகூட வாயை மூடும்படியான தோரணையில் இருந்தவன் என்று நிரூபிக்க, அவன் பார்வையில் ஒரு குறியும் காணப்படவில்லை. சதா பத்துப் பேரோடு கலந்திருக்க ஆசைப்படுவோனுக்கு, இப்பொழுது ஏகாந்தமே தோழனாக ஏற்பட்டது. அவனைக் காண வருவோர் நாளுக்கு நாள் குறைந்தனர். வரவர மதுரையும் வீரப்பனுங்கூட வருவது அரிதாயிற்று. அண்ணாமலைத் தாத்தாவின் கண்ணில் பூப்படர்ந்து பார்வையே தெரியாமல் போய்விட்டபடியால், அவர் வருகையும் அடியோடு நின்றுவிட்டது. எது எப்படியிருந்தபோதிலும், காலத்தின் ஓட்டம் நிற்குமா? மற்றொரு வருஷம் சென்றது. பின்னும் ஒரு வருஷமும் ஆயிற்று. ஆனால், வெங்கடாசலத்திற்கு நற்கதி எவ்வகையிலும் ஏற்பட வில்லை. அதற்குப் பதிலாக, ஐந்நூறு ரூபாய் கடன்தான் அதிகரித்தது. ஏனெனில், ஒரு வருஷம் புன்செய் சாவியாயிற்று; மற்றொரு வருஷம் தானியத்தின் விலை மிகவும் குறைந்தது. வேலனுக்கு இப்பொழுது கிட்டத்தட்ட பதினாறு வயதிருக்கும். குடும்ப விஷயங்களைப் பற்றிக் கவனிக்க வேண்டிய பாரம் அவன்மேல் விழுந்தது. கவனிக்கவேண்டிய விஷயங்கள் அதிகமாய் இல்லாவிடினும், நாளடைவில் வரவுக்கும் செலவுக்கும் சரிக்கட்டுவது அசாத்தியமாயிற்று. வேலன் நாளுக்கு நாள் பெரியவனாக, அவன் புத்தியும் அதிகரித்தது. இதுவரையிலும் அவன் கஷ்டமென்பதே அறியான். இப்பொழுது பலவிதத் துன்பங்களில் ஈடுபடவேண்டி வந்தபொழுது, அவனுக்கு ஓர் ஆச்சரியம் உண்டாயிற்றே யொழிய, அவன் மனம் தளரவில்லை. அவன் படும் அவஸ்தையில் நேரம் போவதே தெரியவில்லை. விளையாட்டுப் போல் அவனுக்கு வயது பதினெட்டாகிவிட்டது. அவன் முகத்தில் ஆண்மைத்தனமும் உறுதியும் நிச்சயமும், மேலிட்டு விளங்கின. வெகுகாலத்திற்கு முன்னரே, தனக்கும் தன்னை அருமையுடன் வளர்த்தோர்க்கும் உள்ள சம்பந்தத்தை அவன் அறிந்தான். ஆயினும், எப்பொழுதும்போல் அவர்களை, “அம்மா, அப்பா,” என்றே அழைத்துவந்தான். அவர்களுடைய பெருந்தன்மைக்கும் தயாள குணத்திற்கும், அவர்களை மெச்சினான். அவர்களுக்குத் தான் பட்டிருக்கும் கடனை எவ்விதத்திலும் தீர்த்துக்கொள்ளமுடியா தென்று நினைத்தான். அவர்களுடைய கஷ்ட தசையை நீக்கி, மறுபடியும் அவர்களைப் பழைய நிலைமையில் கொண்டுவந்து வைக்காவிட்டால், தன் ஜன்மம் வீணாகுமென்று நம்பினான். அவர்களுக்குச் சுகத்தைத் தேடித் தருவதற்காகத் தன் உயிரையும் அளிக்கச் சித்தமாயிருந்தான். ஆனால், அவன் உயிரின் மதிப்பென்ன? - திடீரென்று, தன் தந்தையைப்போல் வெளிநாட்டுக்கு ஓடலாமாவென்ற எண்ணம் பிறந்தது. தன் தந்தையைப் பற்றிக் கேட்ட கதைகளெல்லாம் ஞாபகத்திற்கு வந்தன. அவர் இருக்குமிடம் மட்டும் தெரிந்தால்... தன்னை ஏன் ஒரு கங்காணி, பத்து வருஷத்துக் கூலி முன்னதாகவே கொடுத்து அழைத்துக் கொள்ளக் கூடாது? கஷ்டமோ துக்கமோ, நாளுக்கு நாள் அவன் பலவானாய்க்கொண்டே வந்தான். தன் ‘அப்பா’வும் ‘அம்மா’வும் அதற்குச் சம்மதிப்பார்களா? சம்மதிக்கிறது இருக்கட்டும்; தன்னைப் பிரிந்திருக்கச் சகிப்பார்களா? தன்னை உயிருக்கு உயிராய்ப் பாவித்து வரும் அவர்கள், இப்பேச்சைக் கேட்டாலே முர்ச்சை அடைந்து விடுவார்களென்று நம்பினான். என்ன செய்வதென்று அவனுக்குத் தோன்றவில்லை. அப்புறம் வள்ளி வேறு இருந்தாளே... அவளையும் விட்டல்லவா பிரியவேணும்? அவளைப் பற்றி நினைக்கும்போதே அவனுக்கு ஓர் ஆவேசம் உண்டாயிற்று. கொஞ்ச காலத்திற்கு முன்தான், அவள் எவ்வளவு அழகு வாய்ந்தவள் என்பதை அவன் கவனித்தான். வள்ளிக்கு மிஞ்சின அழகு யாருக்குமே இருக்காதென்று திண்ணமாக நம்பினான். அவளுக்குத் தன்மேல் இருந்த அளவற்ற அன்பையும் அவன் அறிவான். ஆனால், வள்ளிக்கு மட்டும் தெரியாதா அவன் அவள்மேல் வைத்திருந்த வாஞ்சை? இருந்தபோதிலும், வரவர அவன் இது வரையிலும் உணராத ஒரு புதிய உணர்ச்சி, அவன் நெஞ்சத்தை ஹிம்ஸிக்கத் தொடங்கிற்று. எப்பொழுதும் அவளுடன் கூடிக் குலாவ உள்ளூற ஆசையிருந்த போதிலும், அவளைக் காணும் போதெல்லாம், தன்னை அறியாமல் கொஞ்சம் லஜ்ஜை உண்டாயிற்று. இதே மாதிரி, அவளும் வெட்கப்படுகிறாளென்பதை அவன் கண்டு கொண்டான். வள்ளிக்கு இப்பொழுது ஏறக்குறைய பதினாறு வயதிருக்கும். அவர்கள் ஜாதி வழக்கப்படி, அவளுக்குக் கல்யாணம் செய்ய வேண்டிய பிராயந்தான். அவர்கள் சிறு குழந்தைகளாயிருக்கும் பொழுது, அவர்கள் இருவரையும் பற்றிப் பலர் அநேக விஷயங்களைப் பேசினது ஞாபகத்துக்கு வந்தது. அது வெகுகாலத்திற்கு முன்போல் தோன்றியது. பார்க்கப்போனால், அது நாலு ஐந்து வருஷங்கள் கூட இராது. ஆனால், அதற்குள் தன் குடும்பத்தில் எவ்வளவு மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன... இதற்கு மேல் அவன் மனம் ஓடவில்லை. முன்னிருந்த சுகத்தின் நினைவும் தற்சமயமுள்ள கஷ்டத்தின் கொடுமையும், அவன் மனத்தைச் சிதறடித்தன. இவ்வாறு பற்பல யோசனைகள் அவன் மூளையைக் கலங்கச் செய்தன. பெரிய நகரங்களில் லக்ஷாதிபதிகள் வசிப்பதாகக் கேள்விப்பட்டிருந்தான். அப்படிப்பட்டவர்களில் யாராவது ஒருவர் கொஞ்சம் மனம் வைத்தால், தன் ‘அப்பா’வின் கஷ்டம் தீர்ந்து விடுமேயென்று நினைத்தான். அவன் வேண்டுவது கடன்தானே? இனாமா கேட்டான்? தன் ஜீவியத்திற்குள் வட்டியும் முதலுமாகத திருப்பிக்கொடுக்க மாட்டானா? அவர்களுக்குச் சந்தேகம் இருந்தால் தன் நெஞ்சைப் பிளந்து பார்க்கட்டும்... ஆனால், அப்படிப்பட்ட ஆசாமிகளை எப்படி நாடுவது? இல்லாவிடில், வேறு எந்த விதமாய்த் தன் ‘அப்பா அம்மா’வின் நலத்தைத் தேடலாம்? இப்படி அவர்களுடைய பொறுப்பு மனத்தில் உறுத்த உறுத்த, அவன் மனம் கலங்கித் தனக்குத் தூக்கமோ விழிப்போ வென்று கூடச் சந்தேகிக்கலானான். அவன் முன்போல அடிக்கடி வள்ளி வீட்டுக்குப் போவதை நிறுத்தி விட்டான். அவளுக்குக் கொண்டு போய்க் கொடுக்க என்ன இருந்தது? அவளுடைய தகப்பனாருக்கும் கஷ்ட நிஷ்டூரங்கள் இருந்த போதிலும், தன் ‘அப்பா’வைப் போல் அவ்வளவு மோசமான ஸ்திதியில் அவர் இல்லை. ஆனால், இதனால் வள்ளியின் நடத்தையில் யாதொரு மாறுதலும் ஏற்படவில்லை. அவள் தாய் லக்ஷ்மியைப்பற்றி அதே மாதிரி சொல்ல முடியாது. அவள் வழக்கப்படி நடந்துகொள்வது போலப் பாவித்தாலும், முன்மாதிரி தன்னோடு பேச இஷ்டப்படவில்லை என்பது அவனுக்கு நன்றாய்ப் புலப்பட்டது. அவள், தன் குடும்பத்திலிருந்து சற்று விலகி இருக்க யத்தனிப்பதையும், அவன் கவனித்தான். ஆனால் வள்ளியோ, அவன் வீட்டிற்கு அடிக்கடி வர ஆரம்பித்தாள். அவன், அவள் வீட்டிற்குப் போகாததைக் குறித்து அவள் குற்றம் பாராட்டவேயில்லை. வந்தபொழுதெல்லாம், தன் ‘அம்மா’வின் மேல் முன்னினும் இருமடங்கு அதிகமாக அன்பு பாராட்டினாள். இச்சமயங்களில் அவனும் வள்ளியும் பேசுவது மிகக் குறைவாயிருந்தபோதிலும், அவர்களுக்குப் பரஸ்பரம் ஏற்பட்டிருந்த உணர்ச்சி, பதின்மடங்கு அதிகரித்தது. வள்ளியின் தாய் அவர்களுடைய வீட்டை எட்டிப் பாராமலே அவர்களை அசட்டை செய்துகொண்டிருக்கும் பொழுது, தன் ‘அம்மா’ மட்டும் அவள் வீட்டிற்கு அடிக்கடி போவது, வேலனுக்கு விசனத்தைக் கொடுத்தது. பல தடவைகளில் இதைத் தன் தாய்க்கு அவன் எடுத்துக் காட்டினான். ஆனால், அலமேலு அப்பாவி... அந்த விஷயத்தைப்பற்றி லக்ஷ்மியையே கேட்டுவிட்டாள். பிறகு லக்ஷ்மி, வீட்டை விட்டு நகராதபடி அவ்வளவு வேலை தனக்கு இருந்ததாகச் சொல்லிய பொழுது, அதையும் அவள் நம்பிவிட்டாள். ஒருநாள் சாயங்காலம், ஆற்றோரம் இருந்த அடர்ந்த படுகையில் வேலன் அலைந்து கொண்டிருந்தான். அவனது பசுவின் கண் அடிபட்டு நீர் வடிந்து கொண்டிருந்ததால், அதற்கு வைத்தியம் செய்ய ஒரு மூலிகையைத் தேடிக்கொண்டிருந்தான். அவ்விட மெல்லாம், இலந்தை மரங்களும் நொச்சிப் புதர்களுமாக நிறைந்திருந்தன. பூமியில் அங்கங்கே சிவந்து பழுத்த இலந்தைப் பழங்கள் உதிர்ந்திருந்தன. வேலன் ஒன்றைப் பொறுக்கி ருசிபார்த்துக் கொண்டிருக்கையில், அருகிலிருந்த ஒரு புதருக்கப்பால் பேச்சுக் குரல் கேட்டது. அவன் சற்றுக் கவனித்துக் கேட்டான். அங்கே, மல்லனும் மாரியும் முனியனும் இருப்பதாகத் தெரியவந்தது. மாரியும் முனியனும் பொறுக்கிகள் என்று அவனுக்குத் தெரியும். யாராவது கடிக்க இரண்டு துண்டங்கள் போட்டால், நாயைப்போல் பின் தொடருகிறவர்கள். அவர்களுடைய துஷ்ட சம்பாஷணையிலிருந்து, அவர்கள் ஏதோ திருட்டுவேலைக்கு அங்கே கூடியிருப் பதாக அவனுக்குத் தோன்றியது. தான் அவர்களுக்குத் தெரியாதிருக்கும் பொருட்டு, ஓசை செய்யாமல் அவன் அந்தப் புதரில் மெள்ள நுழைந்தான். அப்புதரின் நடுவில் கொஞ்சம் மணல் பாய்ந்த காலிநிலம் இருந்தது. அதற்குள், நாலு பக்கங்களிலும் கோவைக் கொடி அடர்ந்து திரைபோட்டாற்போல் தொங்கிக் கொண்டிருந்தது. தரையோடு தரையாய்ப் படுத்துக்கொண்டு, சத்தம் இல்லாமல் ஒரு கொடியைத் தள்ளிப் பார்த்தான். அவர்கள் கை கால்கள் மட்டும் காணப்பட்டன. மற்றொரு கொடியை விலக்கினான். அவர்கள் செய்வதெல்லாம் நன்றாகப் புலப்பட்டது. அப்படியா? திருட்டுத்தனமாய்க் குடிக்கவா ஆரம்பித்துவிட்டார்கள்? மல்லனுக்கு அநேக கெட்ட நடத்தைகள் உண்டென்பது வேலனுக்குத் தெரியும். ஆனாலும், குடியும் உண்டென்பது அவனுக்கு இப்பொழுதுதான் தெரிந்தது. அவர்களுடைய காரியம் முடிந்துவிட்டது. காலிக் கலயங்களை அவர்கள் எறிந்துகொண்டிருந்தார்கள். நல்லகாலமாய், ஒன்று வேலன் மீது விழாமல் தப்பியது. மல்லன் வெகு உற்சாகமாயிருந்தான். அவனுடைய அட்டகாசமான பேச்சானது, சீவனற்ற அவன் தேகத்திற்கு ஒத்திருக்கவில்லை. சம்பாஷணை படிப்படியாக மல்லன் கல்யாணத்தில் வந்து இறங்கிற்று. அண்ணன் சோளனுக்குக் கல்யாணமாகாமல் தம்பி மல்லனுக்கு எப்படியாகுமென்று முனியன் ஆஷேபித்தான். “அது நம்ப சாதி வளக்கத்துக்கு விரோதமாச்சே. நீ பண்ணிக்கலாமின்னு சோளன் உத்தரவு கொடுத்திட்டா, அப்போ சரி,” என்றான் முனியன். “உத்தரவு கொடுக்கிறதுக்கு அவன் யாரு? அவன் ஒரு எச்செப் பொறுக்கற நாயி. அவன் எங்கூட்டுப் பக்கங்கூட வரமாட்டானே... அவனை ஊட்டைவிட்டுத் தொரத்தி எத்தினி நாளாச்சு... அவன் இனிமே மருவாதியா இருந்தால்கூடச் சோறும் துணியுந்தான் கிடைக்கும். எங்க அத்தை, எல்லாம் அப்பவே ஏற்பாடு பண்ணிட்டாங்களே. அத்தைக்குத் தெரியாததா? அவன் பாச்சா ஒண்ணும் பலிக்காது,” என்றான் மல்லன். முனியன், அவன் வார்த்தையை அங்கீகரித்ததை உணர்த்தத் தலையை ஆட்டினான். “இருந்தாலும், நீதாண்டா அதிஷ்டக்காரன். ஊருக்கெல்லாம் அளகான பொண்ணை அடிச்சுட்டே,” என்று நைச்சியமாக, மாரி சொன்னான். “அது யாருடா?” என்று முனியன் வினவினான். “நீ முனியன்கிட்ட இன்னும் சொல்லல்லியா?” என்று மாரி, மல்லனைப் பார்த்து ஆச்சரியத்துடன் சொன்னான். மல்லன் முகம் சந்தோஷத்தால் பூரித்தது. அவன் பருத்த விழிகள் பிதுங்கி வருவனபோல் தோன்றின. “அவனுக்குத் தெரியுமாங்காட்டியுமின்னு இருந்தேன். எங்கே, உன் சாமர்த்தியத்தைப் பார்க்கலாம். முனியா... இந்த ஊருக்கெல்லாம் அளகான பொண்ணு ஆரு?” என்று கர்வத்துடன் கழுத்தைச் சாய்த்துக்கொண்டு கேட்டான். அப்பொழுது அவன் மெலிந்த கழுத்தையும் பருத்த தலையையும் பார்த்தால், குருவியின் தலையில் பனங்காயை வைத்தாற்போல் இருந்தது. முனியனுக்குப் பொறுக்க முடியாத சிரிப்பு வந்தது. ஆனால், வெகு சூதுக்கார னாகையால் சிரிப்பை அவன் பேச்சில் மறைத்தான். “எனக்கு ஏன் தெரியாது? ஆனால், அவளை வேறொத்தனுக்குக் கட்டிக் கொடுக்கறாப்படியல்ல பேசிக்கிறாங்க?” “நீ யாரைச் சொல்றே?” “வள்ளியைத்தான் வேலனைத்தான்.” “வள்ளி என்னமோ சரிதான். ஆனால், வேலன் ஆர்ரா அவன்? பிச்சைக்காரப்பய... அவனுக்குத் திங்கக்கூட சோறு இல்லையே. அவனுக்குப் பொண்ணு வேறே கொடுத்திடுவாங்களோ? அன்னிக்கி எங்க ஊட்டுலே அவுங்கம்மா என்ன சொல்லிக் கிட்டிருந்தாங்க தெரியுமா? வள்ளியைப் பாளும் கெணத்துலே யாவது தள்ளுவாங்களாம்; அவனுக்குக் கட்டிக் கொடுக்க மாட்டாங்களாம். வேலனூட்டு நஞ்சை எல்லாம் எங்ககிட்டே வந்திட்டுது. தெரியுமல்ல? இனிமே, ஒரு மணி நெல்லுகூட கண்ணாலே பாக்கமாட்டாங்க. கொஞ்சநாள் போனா, சோத்துக்கே திண்டாட்டம்தான்.” வேலன் கோபத்தோடு பல்லைக் கடித்தான். ஆனால், அவன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, அசைவற்றுப் பல்லிபோல் தரையோடு தலையாய்க் கிடந்தான். “அவன் சொந்த அப்பன் பிச்சைக்காரன்தானே? மகன் மட்டும் எப்படியிருப்பான்?” என்றான் மாரி, பல்லை இளித்துக்கொண்டு. “அவனை வளத்த அப்பனும் அந்தக் கதிக்கி வந்திட்டானே. பாவம்... நோக்காடு முத்திப்போச்சாம். ரொம்ப நாள் தாங்க மாட்டாங்கராங்க,” என்றான் முனியன். “அவன் செத்தாலும் பொளச்சாலும், வேலன் எரந்துதான் குடிக்கணும்” என்றான் மாரி. “நீ சொல்றது, இப்போ எரக்காதெத் திங்கிறாப்படி... எனக்குத் தெரியும். ஆறு மாசமா எங்க மாமியா ஊட்டேருந்து, அவங்களுக்கு அரிசி பருப்பு வருது - என்ன முனியா, சிரிக்கிறயே? என்னைத் தவிர வள்ளியை எவன் கட்டுவான்?” “நீ பெரிய மனுசன், அப்பா, உன்னாலே ஆவாதது என்ன இருக்குது?” என்றான் முனியன். “இந்தச் சங்கதி அந்தக் கௌட்டு மொடவனுக்குத் தெரியுமோ? அடேயப்பா, அவன் எவ்வளவு கிருவம் பிடிச்சவன்...” என்றான் மாரி. “அவன் என்னத்தைக் கண்டான்? அந்தத் தடிப்பய வேலனுக்கே தெரியாதே. அவனுக்குக் கொஞ்சனாச்சும் மூளையிருக்குதா? ஊட்டுலே சாமான் இல்லாமே, வேளைக்கு வேளை சோறு எங்கிருந்து வருதுன்னிட்டுத் தெரிஞ்சுக்க வேண்டாமா? இந்தச் சமாசாரம் எனக்கு எப்படித் தெரிஞ்சிச்சுன்னா - ஒருநாள் எங்க அத்தையும் மாமியாளும், எங்க கொல்லையிலே கருப்பிலை மரத்துக் கீளே பேசிக்கிட்டு இருந்தாங்க. நான், பக்கத்திலே கேவிரு தட்டு அடுக்கியிருந்திச்சே, அதுக்குப் பொறவே கன்னுக்குட்டிக்கித் தும்பு திரிச்சிக்கிட்டு இருந்தேன். நான் இருந்தது அவுங்களுக்குத் தெரியாது. அப்போ எல்லாச் சங்கதியும் வெளியே வந்திச்சு. எங்க மாமியா இருக்காளே, ரொம்ப சாமர்த்தியம்... வேலன் அம்மாவைத் தள்ளி, அப்பாலத்தான் வச்சிருக்கா. அவுங்க ஊட்டுக்கே போவற தில்லை; ஆனால், என்னா சகாயம் வேண்ணாலும் பண்றாங்க. அப்படிச் செஞ்சாத்தான், தன் கை கீலே உளுந்துபோச்சீன்னிட்டு வேலன் அம்மாவுக்குத் தெரியுமாம் - பாரேன்... கை கீளே உளுந்து, மருவாதியும் கெட்டுப்போனா, சம்பந்தம் எப்படி வச்சிக்கிறது? அதுக்காவத்தானாம் இவ்வளவு பாடும். வேலன் ஊட்டுக்குச் சாமான் எப்படி அனுப்புறாங்க தெரியுமா? - வள்ளி கொடத்தை எடுத்துக்கிறது, அதிலே வேண்டிய சாமானைப் போட்டுக்கறது, ஆத்துக்கு தண்ணிக்குப் போனாப்பலே போயி வேலன் ஊட்டுலே பூந்து, எல்லாத்தையும் கொட்டீட்டு, அப்பாலே ஆத்துக்குப் போய் வந்திடுறதாம். இந்த ரகசியம், வேலன் அம்மா, எம் பொஞ்ஜாதி, எம் மாமியா, இந்த மூணுபேருக்குள்ரவே அடங்கிப்போச்சு. எவ்வளவு கெட்டிக்காரங்க பாத்தையா?” “நீ இப்பவே வள்ளியை ஒம் பொஞ்ஜாதி ஆக்கிட்டையே,” என்று முனியன் சிரித்தான். “ஏன் ஆக்கக்கூடாது? நான் இல்லாமே, வள்ளிக்கு எவன் தாலி கட்டிடுவான்?” என்று மல்லன் தன் மார்பைத் தட்டினான். வேலன், காவேரி திடீரென்று பெருகி உடனே தன் ஊரை முழுகடிக்கக் கூடாதாவென்று நினைத்தான். அப்பொழுதுதான் தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அகௌரவம் பரவாமல் இருக்கும். அந்த முழிகண்ணன், அந்தச் சோனிப்பையன், தன்னை மடையனென்று சொன்னதில் என்ன தப்பு? வீட்டில் சாமான்கள் இல்லாதததைத் தெரிந்து கொள்ளாமல் இருந்தேனே... அவனுக்குமேல் அவன் ‘தாய்’. அவளை விட மூட ஸ்திரீ, உலகில் யாராவது இருப்பாளா? - சுயமரியாதை என்பதே அறியாத ஒரு ஸ்திரீயும் உண்டா? ஆனால், அவன் தன்னைப் பெற்றெடுத்த தாயா? கேவலம் வளர்த்தவள். அவன், மனோவேகத்தைச் ‘சட்’ என்று அடக்கிக் கொண்டான். ஒன்றும் அறியாத அப்பேதையைப் பற்றி அவ்வாறு நினைப்பது தர்மமாகுமா? தன் ‘அப்பா’, ஒரு மோசக்காரி போடும் பிச்சையைத் தின்றா பிழைப்பது? என்ன கஷ்டகாலம்... என்ன அவமானம்... விஷயம் தெரிந்தால், அப்பாவுக்கு வெறிபிடித்து விடுமே... ‘வரவர அவருடைய ஆரோக்கியமும் வெகு விரைவாகக் குறைந்துகொண்டு வருவதல்லாமல், அவருடைய புத்தியும் க்ஷீண தசையை அடைந்துகொண்டு வருகிறது. அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டால் - எவ்வளவு அநுகூலமாயிருக்கும்... அவர் கஷ்டம் அவருக்குத் தெரியாமற் போகுமே... இவ்வளவு துன்பங்களைக் கொடுத்ததற்குக் கடவுள் சீக்கிரம் சாவைத் தரக்கூடாதா?’ உடனே, மெய்மறந்து கைகளைக் கூப்பித் தன் ‘அப்பா’வுக்குச் சீக்கிரம் மரணம் ஏற்படவேண்டுமென்று கடவுளைப் பிரார்த்தித்தான். இதர ஸமயங்களில் இச்செய்கை மிகவும் அறிவீனமானதென்று அவனுக்குப் புலப்பட்டிருக்கலாம்; ஆனால், தற்சமயம் தன்னால் தன் ‘அப்பா’வுக்குப் பண்ணக்கூடிய உபகாரம் இதுதான் என்று அவன் நம்பினான். அவனுக்கு அமைதியாய் இருக்க முடியவில்லை. திண்டு மிண்டாடினான். மல்லனும் அவனுடைய சிநேகிதர்களும் சில நிமிஷங்களுக்கெல்லாம் அவ்விடத்தை விட்டுப் போயிராவிட்டால், இவனைக் கட்டாயம் கண்டு பிடித்திருப்பார்கள். அந்தச் சர்ப்பம் வள்ளியிருந்தாளே, அவளை என்னதான் செய்யக்கூடாது... என்ன மோசம்... என்ன பித்தலாட்டம்... அவளுக்குக் காசும் பணமும் நகையும் நட்டும் தேவையானால், அவள் இஷ்டம்போல் நடந்துகொள்வது தானே... தன்னை ஏன் ஹிம்ஸிக்க வேண்டும்? என்ன பாசாங்கு... பாசாங்கா? - அல்ல, தன்னை நிந்தித்து அவமதித்துத் தன் இகழ்ச்சியான தரித்திர தசையைத் தனக்குச் சுட்டிக்காட்டும் ஒரு சூது... தன்மேல் இவ்வளவு கட்சி கட்டுவதற்குத் தான் அவளுக்கு என்ன அபசாரம் செய்தான்... ஒரு க்ஷணம் தன்னைப்பற்றித் தானே பரிதபித்துக்கொண்டான். அடுத்த வினாடியில், அக்கினியில் எண்ணெய் விட்டதுபோல் அவன் உக்கிரம் ஜ்வாலையிட்டது. அந்தச் சிறுக்கியையும் அவள் தாயையும் கண்டங் கண்டமாக நறுக்கிவிட வேண்டுமென்று நினைத்தான். அவன் சங்கதி அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்குக் கட்டாயம் தெரியப்படுத்துவான்; அதுவும் வெகு சீக்கிரத்தில்... பல்லைக் கடித் தான்; கைக்கருகிலிருந்த கோவைக் கொடியைக் குரங்குப் பிடியாகப் பிடித்து உலுக்கினான். வெடி குண்டினால் நன்றாகக் காயப் படுத்தப்பட்ட ஒரு வேங்கை, போராடச் சக்தியுமற்றுத் தோல்வியை அங்கீகரிக்கவும் சம்மதியாமல் உறுமித் தவிப்பது போல், அவனும் தவித்தான். |