உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
அத்தியாயம் 2. அத்தையில்லா வீடு சொத்தை வீட்டிற்குச் சமீபமாய் வரவர, மல்லனுக்குத் துக்கம் அதிகரித்தது; நடை குறைந்தது. கையிலிருந்த மாம்பழ மூட்டையிலிருந்து ஒரு புறமாய்க் கீழே தவறி விழும் பழங்களைக்கூட அவன் கவனிக்கவில்லை. வெகுசீக்கிரத்தில் வீட்டில் தன்னை அன்புடன் ஆதரிப்பார்கள் என்ற எண்ணத்தால், அவன் வாங்கின அடிகளின் வலி பதின்மடங்கு அதிகமாகத் தோன்றிற்று. அழுகையால் கண்கள் வீங்கியிருந்தன. வீட்டுத் திண்ணைக்கு வந்தவுடன், விம்மி விம்மி அழ ஆரம்பித்தான். அப்பொழுது, அவன் மோவாய்கட்டை வழக்கம்போல் ஒரு புறமாக ஒதுங் கிற்று. வாசற் கதவண்டை நின்று கொண்டிருந்த அவன் தாய், அவனுடைய நிலைமையை முதலில் பார்த்தாள். “ஐயையோ! என் கண்ணே, கண்ணே! எந்தப் பாவிடா உன்னை அடிச்சான்?” என்று கட்டி அணைத்துக் கேட்டாள். ஆனால், மல்லன் அவளை, “நீ போ, நீ போ,” என்று அலட் சியமாய் உதறிக்கொண்டு உள்ளே நுழைந்தான். அவன் அத்தையும் தகப்பனும் சாவகாசமாய்ப் புளியம்பழங்களை உடைத்துப் புளியை எடுத்தவாறே, வரப்போகும் அறுவடையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்தச் சமயத்தில், ஒரு பெரிய அழுகைக் குரலோடு மல்லன் அவர்கள் முன் தோன்றினான். “என் கண்ணே! என் அப்பா!” என்று கம்மின குரலோடு கதறி, அவன் அத்தை மீனாக்ஷி தன் இரு கரங்களாலும் அவனை வாரி மார்பின்மேல் அணைத்துக்கொண்டாள். அவன் தகப்பன் மாயாண்டி, தன் செல்லப்பிள்ளையின் உடம்பையெல்லாம் தடவிக்கொடுத்து, அவன் காயங்களை உற்றுப் பார்த்தான். சற்று விலகி அவன் தாய் தேவானை, அப்பனும் அத்தையும் செய்யும் பணிவிடைகளை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவர்கள் எவ்வளவு சமாதானப்படுத்தியும், மல்லன் தேம்புதல் கொஞ்சத்தில் நிற்கவில்லை. மெள்ள மெள்ள அவனே ஆய்ந்து ஒய்ந்து, நடந்த விஷயங்களைக் கூறினான். இதைக் கேட்டவுடன் மீனாக்ஷிக்கு அடங்காக் கோபம் வந்தது. “என்ன அக்கிரமம்? அந்த நண்டு வீரப்பன் மகள் கால் வளுக்கிக் கீளே விளுந்ததுக்கு, இப்படியா அடிக்கிறது? அவன் மண்டையை ஒடச்சாலென்ன?” என்று பல்லைக் கடித்துக்கொண்டு அடிவயிற்றிலிருந்து பேசினாள்; பேச்சுக்கூடச் சரியாகத் துவனிக்க வில்லை. “அந்தப் பய வேலனுக்கு, இப்பவே வள்ளியைக் கட்டிக் கிட்ட தாக எண்ணம்,” என்றான் மாயாண்டி. “அடே, அவன் என்ன வேண்ணா எண்ணிக்கட்டும். அவுங்க கண்ணாலந்தான் பண்ணிக்கட்டும், ஒடங்கட்டைதான் ஏறட்டும் - யாருக்கென்ன? அந்தப் பேயி இந்தக் கொளந்தையை இப்படிக் கொல்லுவானேன்?” என்று கர்ஜித்தாள். ஆத்திரத்திலே கடைசி வார்த்தைகள் காதுக்குப்படாமல் அமுங்கிப் போயின. “அவுங்க பண்ணை வச்சிருக்கிற கொளுப்பு அது,” என்றான் மாயாண்டி. “ஆமாம்; பெரிய பண்ணை? எத்தினி நாள்டா தள்ளப்போவுது? வீரப்பனுக்கு அப்பவே எறக்கந்தான். அந்த ஊதாரி வெங்கடாசலத்துக்கு ஒரு கோடி ரூபாயிருந்தாக்கூடப் பத்தாது.” “இப்போதிக்கி, ஊரிலே அவுங்கதானே பெரிய பண்ணைக் காரங்க?” என்றான் மாயாண்டி. “போதுண்டா, இங்கே உக்காந்துகிட்டு, அவன் பெரியவன் இவன் பெரியவன்னு சொல்லிக்கிட்டு...” என்று மீனாக்ஷி சிடுசிடுப்பாய்ச் சொன்னாள். பிறகு, மல்லனுடைய முழங்காலில் ஒரு பெரிய காயத்தைப் பார்த்துக் கோபாவேசம்கொண்டு, வேலனையும் அவன் தாய் தந்தையரையும்கூட, வெகு தூஷணையாகப் பேசினாள். ஆனால், அது முன்னமே இருந்த ஒரு புண்; கொஞ்சம் அடிபட்டதால் அப்படித் தோன்றியதென்றதை அவள் அறியாள். “நீ வெங்கடாசலத்துக்கிட்டே இப்பவே ஓடு. அவன் வளக்கிற நாய் என்னா வேலை பண்ணிட்டுதின்னு சொல்லு. பாளாப் போனவன்! பிள்ளைகுட்டி இல்லாட்டி, இந்த மாதிரிப் பிசாசுங் களையா வளக்கணும்? சத்திரம் சாவடி கட்டக்கூடாது? அவன் இன்னிக்கிப் பண்ணின வேலைக்கு, அவனைச் சரியா அடிக்காட்டி, அவன்மேலே பிரியாது பண்ணி ஜெயிலுக்கு அனுப்பிச்சுடுவேன்னு சொல்லு. எந்திரிச்சுப் போயேன்,” என்று கட்டளையிட்டாள். மாயாண்டி கையைப் பிசைந்தான். கொஞ்சம் பல்லையும் இளித்துக்கொண்டு, “கொளந்தைக சண்டையிலே நாம் ரொம்ப தூரம் போவக்கூடாது,” என்றான். “அடே பயங்காளி!” என்று மீனாக்ஷி வீறிட்டுக் கூச்சலிட்டாள். அப்பொழுது அவளுக்குப் புரையோடினது; திக்குமுக்காடிப் போனாள். குடிக்கத் தண்ணீர் வேண்டுமென்று ஜாடை காட்டி னாள். தேவானை ஓடி, ஒரு லோட்டாவில் ஜலம் கொண்டுவந்தாள். அதை மாயாண்டி வாங்கி, ஜலத்தைத் தன் தமக்கையின் வாயில் ஊற்ற முயன்றான். ஆனால், மீனாக்ஷி அவனை அலட்சி யமாகத் தடுத்து, அவன் கையிலிருந்த லோட்டாவைப் பிடுங்கித் தண்ணீரைப் பருகினாள். உடனே குணமும் ஏற்பட்டது. பெருமூச்சு விட்டுக்கொண்டு மௌனத்துடன், கண்களில் ததும்பின நீரைத் துடைத்துக்கொண்டிருந்தாள். மாயாண்டி, உடனே வெங்கடாசலத்தினிடம் போவதாகச் சொன்னான். மீனாக்ஷி, அவன் சொற்களைக் காதில் ஏற்றுக் கொள்ளவில்லை. “நான் இப்பவே போய், கண்டிப்பாகச் சொல்லிவிட்டு வாரேன். வீரப்பன் கிட்டேயும் சொல்லிடறேன். இன்னும் நாலு பெரியவங்க கிட்டக்கூடச் சொல்றேன்,” என்று மாயாண்டி கதறினான். இதற்கெல்லாம் மீனாக்ஷி வாயைத் திறக்கவில்லை. மாயாண்டி எழுந்து மெள்ள நழுவினான். ஒரு வயிற்றிற் பிறந்தவர்களுக்கு, இவ்வளவு தாரதம்மியம் எங்குமே இராது. மீனாக்ஷி, பூதாகாரமான ரூபத்தையுடையவள். மாயாண்டியோ, ஆகாரமில்லாமல் மெலிந்து ஒடுங்கிப்போன நரிக்குட்டிபோல் இருந்தான். மீனாக்ஷியின் தோற்றமோ, ஓர் ஆண் மகன்கூடக் கெட்டான்; ஆனால், பார்ப்பவர்களுக்கு ஓர் அருவ ருப்பு உண்டாகும்படி உதடுகள் மிகத் தடித்தும், கண்ணிமைகள் வீங்கினாற்போல் பருத்துத் தொங்கி, விழிகளைப் பாதி மூடிக் கொண்டும் இருந்தன. குரல், எப்பொழுதும் தொண்டை கட்டிக் கொண்டாற்போல் இருந்தது. மாயாண்டியைப் பார்ததாலோ, பல நாய்களால் துரத்தப்பட்டு வெருண்டு ஓடும் ஒரு சோனி நாயின் முகந்தான் ஞாபகத்துக்கு வரும். இவ்வளவு பயமும் பயத்தால் நடுங்கிப் பதுங்கும் பாவமும் ஏற்பட்டதற்குக் காரணம், அவன் வெகுகாலம் உடுப்புக்கும் உணவுக்கும் இடிபட்டதால் இருக்கலாம். எல்லோரையும் சந்தோஷப்படுத்த வேண்டுமென்ற ஆவலால், சந்தர்ப்பம் இல்லாமல் எப்பொழுதும் புன்சிரிப்போடிருக்கும் வழக்கத்தால், அவன் முகத்திற்கு ஒரு மூடத்தன்மை வாய்த்தது. போதும் போதாதற்கு குரலும் கீச்சுக் குரல். அவன் மதிப்பைப் போக்குவதற்கு இன்னும் என்ன தேவை? மாயாண்டி சென்ற சில நிமிஷங்கள் வரையில், மீனாக்ஷி வாய் திறவாமல் மல்லன் தலையைத் தடவிக் கொண்டிருந்தாள். நடந்த சச்சரவில், மல்லன் தன் துன்பங்களையெல்லாம் மறந்துவிட் டான். இருந்தாற்போலிருந்து மீனாக்ஷி முணுமுணுக்கத் தொடங்கினாள். “சோம்பேறிப் பய! கையாலே ஒண்ணும் ஆவாது. எல்லாத்துக்கும் நான்தான் மாரடிக்கணும். அவன் ஒரு ஆம்பிள்ளையாம்? மடையன். பன்னியாட்டம் தின்பான். அது ஒண்ணுதான் தெரியும்.” தன் கணவனைப்பற்றி இவ்வாறு பேசினால், சுயமரியாதை யுள்ள எந்த ஸ்திரீயாவது பொறுப்பாளா? ஆனால், தேவானை சுயமரியாதை என்பதை அடியோடு மறந்துவிட்டவள். இல்லாக் கொடுமையால், தானும் தன் புருஷனும் பிள்ளை குட்டியில்லாத ஒரு பணக்கார விதவையின் ஆதரவுக்கு உட்பட்டு, எட்டு வருஷங்கள் இருந்ததால் வந்த தீமை அது. தேவானை, தன் மதினியின் கோபம் தணியும் வரையில், கைகட்டி அசையாமல் சிலைபோல் நின்றாள். இந்தச் சமயத்தில், வீட்டுப் பின்கட்டில் ஏதோ பாத்திரம் கீழே விழுந்தாற்போல் பெரிய சப்தம் கேட்டது. “கொல்லைக் கதவைத் தெறந்து போட்டுட்டு வந்திட்டாயா என்ன?” என்று எரிந்து விழுந்தாள் மீனாக்ஷி. உடனே தேவானை, நடுக்கத்துடன் பின்கட்டுக்கு ஓடினாள். என்ன காட்சி? கையிலே சோற்றுப்பானை, வாயிலே விழுங்கியும் விழுங்காமல் ஒருவாய்ச் சோறு - இந்த நிலைமையில், உயர்ந்து மெலிந்து, சுமார் பதினெட்டு வயதுள்ள ஒரு வாலிபன் அவளுக்குமுன் நின்றான். “எம் பெத்த வவுறே?” என்று தேவானை துக்கித்து, அடிவயிற்றில் அடித்துக்கொண்டாள். “அவ இங்கே வந்தாலும் வருவாடா. பொளக் கடைக்கிப் போ. வெக்கப் போருக்குப் பின்னாலே போ,” என்று ரகசியமாகச் சொல்லி, அவனைத் துரத்திவிட்டுச் சமையல் அறைக் கதவைத் தாழ்ப்பாளிட்டாள். பிறகு மீனாக்ஷியிடம் வந்து, ஏதோ பித்தளைத் தட்டை எலி பரணிலிருந்து தள்ளிவிட்டதாகவும் மற்றப்படி ஒன்றும் சேதமில்லையென்றும் தெரிவித்தாள். மீனாக்ஷி நம்பிவிட்டாள். “சரி, நான் தங்கம்மா ஊட்டுக்குப் போய் வாறேன். நீ வாசக் கதவைத் தெறந்து போட்டுட்டு, தெருவுலே போற ஆட்டையும் மாட்டையும் உள்ளே நொளைய விடாதே,” என்று மீனாக்ஷி தேவானையை அதட்டிவிட்டு, மல்லனை அழைத்துக் கொண்டு வெளியே போனாள். அவர்கள் போனவுடனே, தேவானை வாசற்கதவைத் தாழ்ப்பாளிட்டாள். இதுவும் ஒரு நல்ல காலமென்று நினைத்துக்கொண்டு, அவள் பின்கட்டுக்குச் சென்றாள். அந்த வாலிபன் சாப்பாட்டை முடித்துக் கொண்டிருந்தான். கண்ணும் கண்ணீருமாகச் சற்றுநேரம் அவனையே தேவானை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு, “நீ சாப்பிட்டு எத்தனை நாளாச்சுடா?” என்று விசனத்துடன் வினாவினாள். “எத்தினி நாளானா என்னம்மா? இப்பவாவது கெடச்சுதா இல்லையா? இந்தத் திருடு ரொம்ப துணிச்சலில்லே?” என்று சிரித்தான். ஆனால் தேவானையோ, மனம் நொந்து அழுதுகொண்டு, “அடே, சோளா! ஏதாவது வேலை வெட்டி செஞ்சு பொளைக்கக் கூடாதாடா?” என்றாள். “நான் என்னாம்மா பண்ணுவேன்? நான் போன எடமெல்லாம் என் பங்காளி கூடவே வாறானே. ஒருவன் தவுராதே எல்லாரு கிட்டேயும் என்னைத் திட்டினான். நான் திருடனாம், குடிகாரனாம், பொய்யனாம் - ஊம், இன்னும் என்னா வேணும்? ஒரு தோப்பன் தன் மவனுக்குச் செய்யற ஒவகாரம் இது? - பிச்சைக் காரப்பய? என்னிக்காவது ஒரு நாளைக்கு, அவன் காலையும் கையையும் ஒடிச்சுப் போடாட்டி ஏன்னு கேளு.” “அடப்பாவி, வாணாண்டா! வாணாண்டா! ஒன்னைப் பெத்த தோப்பண்டா; ஏண்டா பாவத்தைத் தலையிலே கட்டிக்கிறே? அவுங்கமேலே என்னடா தப்பு? நம்ம தலையெளுத்து. இல்லாட்டி அந்த முண்டச்சி, அவ பணத்தோடே இங்கே வந்துசேருவானேன்?” “அந்த முண்டச்சியெச் சொல்லுவானேன்? இவனுக்கு எங்கே போச்சு மூளை? இவனைப்பத்தி ஊர்லே பேசிக்கிறதைக் கேட்டா, நாக்கைப் பிடுங்கிட்டுச் சாவலாம்.” “சோளா! சோளா! நீயுமாடா என் உயிரை எடுக்கணும்? இந்தப் பேச்சு வாணாண்டா. என் வவுறு எரியுதடா. ஒங்க அப்பாவைத் திட்றயே, ஒன் சங்கதி என்ன? குடிச்சிட்டுத் திரியறது ஒனக்கு வெக்கமாயில்லையா? ஊரெல்லாம் ஒன்னெ பத்தி என்ன பேசறாங்களோ, அது ஒனக்குத் தெரியுமா?” “நான் ஆருக்கு என்னா பண்ணிட்டேன், அம்மா? கஷ்டம் பொறுக்காதப்போ கொஞ்சம் குடிக்கிறேன். இல்லாட்டி, பைத் தியம் பிடிச்சுச் சாவ வேண்டியதுதான். என்னாலே ஆரும் துன்பப் பட வேண்டாம். இன்னும் கொஞ்சகாலம் அப்பாலே, கண்டியோ பினாங்கோ ஓடிடறேன். என் பங்காளி அங்கே வரமுடியாது; பாத்துக்கறேன் - இது இருக்கட்டும். வெங்கடாசலம் ஊட்டுக்குச் சும்மா சும்மா போயிட்டு வராப்படியிருக்குதே. என்ன சங்கதி? கடன் கிடன் கொடுத்து, அவங்க வீடு வாசலெல்லாம் கட்டிக் கிலாமின்னு யோசனையா?” “அட பாவி, அவுக இடத்திலே நல்லது ஒண்ணுகூட ஒனக்குத் தெம்படலையா? ஏண்டா பாவத்தையெல்லாம் தலையிலே கட்டிக்கிறே? நீ என்னா பண்ணுவே, அந்த விதியின் வேலை. இல்லாட்டி, என் பாளாப்போன வவுத்திலே நீ எண்டா பொறக் கணும்? - ஐயோ! ஆரோ கதவு இடிக்கிறாங்க, நான் போறேன். நீ எக்கேடு வேணா கெட்டுப்போ. இங்கே நிக்காதே,” என்று அழாத துக்கத்துடன், அவள் வீட்டு முன்கட்டுக்குச் சென்றாள். மனம் நொந்து முகம் வாடிச் சோளன் சற்றுத் தயங்கி நின்றான். பிறகு, சுவர் ஏறிக் குதித்துப் போய்விட்டான். |