உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
அத்தியாயம் 16. சட்டத்தின் திட்டம் சூரியோதயத்திற்கு ஒருமணி நேரம் இருக்கும். இருட்டு மெதுவாக மறைந்துகொண்டிருந்தது. ஆயினும், அப்பொழுதே விவசாயிகள் ஒவ்வொருவராகத் தங்கள் நிலங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். சிலர் இதற்குள் தங்களுடைய வேலையையுங் கூடத் துவக்கிவிட்டனர். தாதனுடைய கொடிக்கால் தோட்டம், மற்றவர்களுடைய நிலங்களைக் காட்டிலும் சிறிது எட்டாக்கையில் இருந்தது. பல வாய்க்கால்களையும் வரப்புகளையும் தாண்டித்தான் அவன் அங்கே போகவேண்டும். தாதன் ஓர் ஓடையைத் தாண்டிக் கொண்டிருந்த பொழுது, தனக்கு மேல்புறத்தில் எவனோ ஒருவன் கைகால் அலம்புவதுபோல அவனுக்குக் காணப் பட்டது. இது வெகு சகஜமான சம்பவமாயிருந்தபோதிலும், தாதனுக்குச் சற்று வியப்பு உண்டானதற்குக் காரணமென்ன வென்றால், அம்மனிதன் ஒரு கந்தையை அணிந்திருந்த போதிலும், அதை அலசிக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிழித்து எறிந்துகொண்டேயிருந்தான். தாதன் அவனை அணுகி உற்றுப் பார்த்தான்; அவன் வேலன்! அவனுடைய துணியெல்லாம் ரத்தக்கறையாயிருந்து. அவன் தாதனைத் தலையெடுத்துப் பேச எத்தனிப்பதுபோல் தோன்றிற்று. ஆனால், நாவிலிருந்து வார்த்தை மட்டும் எழும்பவில்லை. பிறகு வெகு கஷ்டப்பட்டு, “இந்தக் கறை போகமாட்டேங்குதே!” என்று அவன் முணுமுணுத்தான். “ரத்தக்கறை அவ்வளவு சுளுவாய்ப் போயிடுமா?”என்று சொல்லிவிட்டுத் தாதன், தன் வெற்றிலைத் தோட்டத்திற்கு விரைவாகப் போவதுபோல் பாவித்து, தலை மறைந்ததும் கிராமத்திற்கு வேறொரு வழியாக ஓடினான். வம்பு, தாதனோடு கூடப் பிறந்தது. தினம், இவன் அப்படி அவன் அப்படி என்று வீண் வம்பு அடிக்காவிட்டால், அவனுக்கு உண்ட உணவு கூட செரிக்காது. தற்சமயம் தான் கண்டதை ஊரில் ஒருவர் தவறாமல் எல்லாரிடமும் சொல்வதைத் தவிர, மேலான காரியம் வேறொன்றும் அவனுக்குப் புலப்படவில்லை. ஆதலால், முதல்முதலாக அவன் மல்லன் வீட்டிற்கு ஓடினான். அங்கே, மாயாண்டியின் சவத்தைச் சுற்றிப் பெண் பிள்ளைகள் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தார்கள். இழவுக்காக வந்த ஜனங்களும், ஒரு பெருங் கும்பலாய்க் கூடியிருந்தார்கள். அவர்கள் மத்தியில், தாதன் தான் கண்ட காட்சியை வர்ணித்தான். அவன் வார்த்தைகள் ஒவ்வொருவர் மனத்திலும் ஈட்டிபோல் பாய்ந்தன. அந்தப் பாவி வேலனை அந்த விநாடியிலேயே கொன்று விட வேண்டுமென்றார்கள் சிலர். ஆனால், மற்றும் சிலர் அப்படிச் செய்வது மிகவும் ஆபத்தான காரியமென்றும், அவனைத் தண்டிக்கப் போக, தாங்களே தண்டனைக்கு உட்படுவார்களென்றும் எச்சரிக்கை செய்தார்கள். கொலைக்குத் தயாராக இருக்கும் முரடனைப் பிடிப்பது சுலபமான காரியமல்ல வென்றான் ஒருவன். அவன் கையில் கத்தி முதலிய அபாயமான ஆயுதங்கள் இருப்பது நிச்சயம் என்றும், அவன் அகப்பட்டுக் கொள்வதற்கு முன் பலரைக் கொல்வான் என்பதில் சந்தேகமில்லை என்றும் சொன்னான் மற்றொருவன். இவைகளை யெல்லாம் கேட்ட பிறகு, உயிருக்கும் துணிந்து வேலனைப் பிடிக்கவேண்டுமென்ற ஆத்திரம் யாருக்கும் பிறக்கவில்லை. நிஜமாகவே, பழிக்குப் பழி வாங்கவேண்டுமென்ற ஆத்திரம் மல்லனுக்கு இருந்தது. ஆயினும், ரத்தவெறி பிடித்த வேலன் முன் போவதற்கு அவன் பயப்பட்டான். போதும் போதாததற்கு, ஊரில் ஒருவதந்தி கிளம்பியிருப்பதாக ஒருவன் சொன்னான். அதாவது, வேலன் மாயாண்டியின் குடும்பத்தை அடியோடு ஒழித்து விட்டு, பிறகு தன்னைத் தானே போலீஸாரிடம் ஒப்பித்துக் கொள்வதாகச் சத்தியம் செய்தானாம். இதைக் கேட்டதும், மல்லன் தற்சமயம் வேலனைச் சந்திப்பதைக் காட்டிலும் மூடத்தனம் வேறொன்றும் இல்லை என்று தீர்மானித்தான். முன்னமே பள்ளியிலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவன் தகவல் அனுப்பியிருந்தான். இப்பொழுது, இன்னும் இரண்டு ஆட்களை அங்கே அனுப்பி, நடந்த விருத்தாந்தங்களை யெல்லாம் சொல்லச் சொல்லி, போலீஸாரையும் கையோடு கையாய் அழைத்து வரச் சொன்னான். இதற்கு மேலே வேறு எதுவும் மல்லனுக்குச் செய்ய இஷ்டமில்லை. தாதனுக்குப் புளித்துப் போய்விட்டது. வேலனைப் பார்த்து, அப்படி நடுங்குவதற்குக் காரணமேயில்லை என்று அவன் உறுதியாகச்சொன்னான். ஆனால், அதற்கு மல்லன் அசைய வில்லை. “அவன் கையிலே அருவா இருக்குதா? இல்லையா?” என்று தாதனைக் கேட்டான். “அருவா இருந்தா என்ன? கொன்னுப் புடுவானா? இப்போ, எங்கிட்டே இல்லையா அருவா?” என்றான் தாதன். “அவன் சங்கதி உனக்கென்னா தெரியும்,” என்று சொல்லி விட்டு மல்லன், சாவுக்குச் செய்யவேண்டிய காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினான். அதன்மேல் தாதன், முகத்தைச் சிடு சிடுத்து முணுமுணுத்து, அவ்விடத்தை விட்டு அகன்றான். ஆனால், இவ்வளவு சுவாரசியமான விஷயத்தை எளிதில் விட்டு விட அவனுக்கு மனம் வரவில்லை. ஊருக்குள் சென்று, தாதன் வேலனைக் கண்ட செய்தியை அவன் பரப்பினான். வேலனைப் ‘பிடிப்பதற்கும்’ சிலரை அழைத்தான். ஆனால், அவனுக்கு வம்புப் பயித்தியம் தவிர வேறொன்றும் தெரியாதாகையால், வேலனிடத்தும் அவன் பெற்றோர்களிடத்தும் கிராமத்தார் வைத்திருந்த அன்பையும் அனுதாபத்தையும் அவன் அறியான். அவன் மற்றொரு முறை வேலனைப் பிடிக்க வேண்டு மென்ற எண்ணத்தை வெளியிட்ட பொழுது, வேலனின் தோழன் ஒருவன், அவன் குடுமியைப் பிடித்து இழுத்து, வாயை மூடும்படி அதட்டினான். வெகு கோபத்தோடு தாதன் அவனை எதிர்த்துச் சென்ற பொழுது, மற்றொருவன் அவன் காலைத் தடுக்கிவிட் டான். கைகளைக் கீழே ஊன்றி இராவிட்டால், தாதன் குப்புற விழுந்திருப்பான். பக்கத்திலிருந்த சிறுவர்களும் வண்டு சிண்டுகளும் கை கொட்டிச் சிரித்தார்கள். அம்மானக்கேட்டால், தாதனுக்குக் கோபம் பொங்கிப் போயிற்று. அவனைத் தள்ளினவன் இன்னானென்று அவனுக்குத் தெரியாததால், எல்லாரையும் தாறு மாறுமாக அவன் வையத்தொடங்கினான். அதன்மேல், அங்கிருந் தவர்கள் அனைவரும் அவனைச் சூழ்ந்துகொண்டு, அடிக்கத் தயாரானார்கள். வாயைத் திறந்தால், அடிவிழுமென்ற பயம் தாதனுக்கு ஏற்பட்டது. “மடையா, ஊரான் சங்கதியெல்லாம் நீ ஏண்டா இழுத்துப் போட்டுக்கறே?” என்றான் ஒருவன். “அட பொளுப்புக் கெட்ட களுதே. ஒருத்தன் திண்டாடினா, உனக்கு என்னடா அவ்வளவு சந்தோசம்?” என்றான் மற்றொருவன். “குடிமியைப் பிடிச்சு இன்னொருக்க இளு,” என்றான் ஒரு சிறுவன். அவன் பேச்சை வீணாக்காமல் கும்பலில் யாரோ அப்படியே செய்தார்கள். “காலை வாரி விடு,” என்று ஒரு வாண்டுப் பயல் கூவினான். அவன் இஷ்டத்தையும் நிறைவேற்ற ஒரு வாலிபன் முயன்றான். ஆனால், அங்கிருந்த பெரியோர்கள் அவனைக் கண்டித்துத் தடுத்தார்கள். இவ்வாறு தாதன் சீரழிந்து கொண்டிருக்கும்பொழுது, அலமேலு தன் வீட்டில் இன்னது செய்வதென்று தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு விம்மி விம்மி அழுதபடியே இருந்தாள். தாதன் செய்த பிரசாரத்தால், அப்போது நடந்த சம்பவங்களெல்லாம் அவள் காதுக்கு எட்டியிருந்தன. ஆனால், அவள் புருஷனுக்கு மட்டும், தங்களுக்கு நேர்ந்திருக்கும் பேராபத்தைக் குறித்து ஒன்றுமே தெரியாது. எப்படித் தெரியும்? அவனோ ஓர் அறையில் அடைபட்டுக் கிடந்தான். அவனிடம் எப்படிப் போய்ச் சொல்வது? என்னவென்று சொல்லுவது? தைரியம் வரவில்லையே! அவளுடைய கை கால்கள் சில்லிட்டன. இருதயம் அசைவற்று நின்றது. திடீரென்று, கொல்லையிலிருக்கும் கிணற்றில் விழுந்து உயிரைத் துறக்கலாமென்ற எண்ணம் வந்தது. மறுக்ஷணத்திலேயே, பேயோ பிசாசோ, அவள் கூந்தலைப் பிடித்துக் கறகற வென்று சுழற்றுவதுபோலத் தோன்றிற்று. ஆயினும் கடவுளைத் துதித்துத் துதித்து வழக்கமானபடியால், அவள் தன்னை அறியாமலே ஆண்டவனைப் பிரார்த்தித்தாள். தன் அருமை வேலுவை என்ன செய்வார்களோ? தூக்குப் போட்டுவிடுவார்களோ? ஐயோ, தெய்வமே! அதை அவள் எப்படித் சகிப்பாள். அவளால் உயிரை வைத்துக் கொள்ள முடியாது. அவள் புருஷனும் சாவான். பிறகு அவள் குடும்பமே நிர்மூலமாகிவிடும்! இது யாரிட்ட சாபமோ! சமாசாரத்தைத் தன் கணவனுக்குச் சொல்லலாமென்று, அவனுடைய அறை வரையிலும் அவள் போவாள். பிறகு பயத்தால் தயங்கி, மறுபடியும் வாசற்பக்கம் திரும்புவாள். இவ்வாறு, புத்தி ஸ்திரம் இல்லாமல், கண்ணும் கண்ணீருமாய்ச் சங்கடப்பட்டுக் கொண்டு, அவள் அங்கும் இங்கும் அலைந்தாள். அவளைத் தேறுதல் செய்யவந்த சில சிநேகிதிகளால், அவளுடைய துக்கம் அதிகரித்ததே யொழியக் குறையவில்லை. அவள் இப்படி அனலில் விழுந்த புழுப்போல் தவிக்கையில், மதுரையும் வீரப்பனும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டதும் அலமேலுவின் துக்கம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. ‘ஹோ’ என்று கதறிக் கதறி அழுதாள். மதுரை, அவளைச் சமாதானப்படுத்த முயன்றான். வீரப்பனோ, துக்கத்தில் மூழ்கி, வாய் திறக்கமாட்டாமல் தலை குனிந்து நின்றான். “வாணாம் அம்மாடி! அவன் ஒத்தன் இருக்கான். பயப்படாதே, அவனுக்குக் கண்ணுத் தெரியாது! இதெல்லாம் ஒரு சோதனை. என் பேச்சை நம்பு. வேலுவுக்கு ஒரு தீங்கும் வராது. சங்கதி அவனுக்குத் தெரியுமா?” என்று மதுரை, வெங்கடாசலத்தின் அறையைக் காட்டிக் கேட்டான். “தெரியாதண்ணா, நான் எப்படிச் சொல்லுவேன்! அவுக நாலஞ்சு தரம் கூப்பிட்டுக்கூட, எனக்குப் பதில்சொல்ல வாய் வரல்லியே! ஐயோ! கேட்டா இடிஞ்சு போவாரே!” என்று அவள் குமுறிக் குமுறி அழுதாள். “வாணாம், வாணாம் அம்மாடி! இதுவும் நம்ம நலுமைக் கித்தானின்னு எண்ணிக்கோ,” என்று சொல்லிக்கொண்டே மதுரை, ஓசை செய்யாமல் வெங்கடாசலத்தின் அறைக்குச் சென்றான். வீரப்பன் மெதுவாக அவனைப் பின்தொடர்ந்தான். அவனுக்குப் பின் அலமேலு நடுங்கிக் கொண்டே போனாள். மதுரை, கதவண்டைச் சற்றுத் தாமதித்தான். கதவு பாதி திறந்திருந்தது. அதை அவன் மெதுவாக முழுதும் திறந்தான். வெங்கடாசலம் அப்புறமாகத் திரும்பிப் படுத்திருந்ததால், மதுரை வந்ததை அவன் பார்க்கவில்லை. அவன் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதாகக் காணப்பட்டான். “நீ எந்த வளி உட்டாலும் சரி, உன் பிரியமுடா அப்பா!” என்று முணுமுணுத்தது மட்டும், அங்கு வந்த மூவர் காதிலும் பட்டது. அந்தத் தொனியிலிருந்து, அவன் ஏதோ பெருங் கஷ்டத்தை எதிர் பார்ப்பதுபோலத் தோன்றிற்று. உண்மையில், இரவு இரண்டு மணியிலிருந்து அவனுக்குத் துக்கமேயில்லை. விஷயம் இன்னதென்று தெரியாவிட்டாலும், ஊரில் ஏதோ ஒரு பெருங் குழப்பம் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று மட்டும், அவன் கண்டுகொண்டான். அக்குழப்பத்தால் தனக்குத் தீமை ஏற்படப் போகிறதென்ற ஓர் எண்ணமும், அவனுக்குப் பிறந்தது. இதற்குச் சகாயமாக, கூப்பிடுமுன் ஓடிவரும் தன் மனைவி, அவன் பலமுறை அழைத்தும் தலைகாட்டவில்லை. அவள் வீட்டில் இருந்தாளோ இல்லையோ என்ற சந்தேகங்கூட, அவனுக்கு உண்டாயிற்று. ஒருகால் அவள் வெளியே போயிருந்தால், வேலனாவது பதில் கூறக்கூடாதா? அவனுமா வீட்டில் இல்லை? இருவருமாக ஒரே காலத்தில் எங்கே போயிருப்பாள்? இவ்விஷயங்களைப் பற்றி நினைக்க நினைக்க, வெங்கடாசலத்திற்கு மனக்கலக்கம் அதிகரித்தது. வெங்கடாசலம், மதுரையின் பக்கம் திரும்புவதாகத் தோன்றவில்லை. ஆகையினால், மதுரை அவனை மெதுவாக அழைத்தான். வெங்கடாசலம் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். பிறகு, அவன் ஒவ்வொருவராக ஏற இறங்கப் பார்த்தான். தன் மனைவியின் முகச்சின்னங்களைப் பார்த்ததும், அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “என்னாது?” என்று பதறிக் கூவினான். “மாயாண்டி போயிட்டானப்பா! யாரோ கொன்னுட்டாங்க!” என்றான் மதுரை மெதுவாக. “என்னா! கொன்னுட்டாங்களா? ஏன்? யாரு கொன்னாங்க? எப்போ?” என்று வெங்கடாசலம் அடுக்கடுக்காய்க் கேள்விகள் கேட்டான். “பாதி ராத்திரி இருக்குமாம், பொளக்கடைப் பக்கம் போனானாம். அப்போ, எவனோ வந்து குத்திட்டானாம். இப்போ... இப்போ, சில சாதிகெட்ட களுதைங்க, வேலன் மேலே பளியைப் போடப் பாக்குதுங்க...” “என்னாது!” என்று வெங்கடாசலம் கர்ஜித்தான். “வேலு, மாயாண்டியைக் கொல்றதா! எந்தக் கூருகெட்ட பய சொன்னான்? அங்கயே அவன் பல்லை ஒடைக்கக் கூடாது? அட, அவன் கனவுலேகூட ஒருவனுக்குத் தீங்கு நெனைக்கமாட்டானே! அப்பேர்க்கொத்தவன் மேலேயா இந்தப் பளியைப் போடுறாங்க! அடே! எங்க கை எளச்சுப் போனால், எங்கமேலே எது வேணு மின்னாலும் சொல்லலாமா? அவுங்க வாய்க்கு வந்ததைச் சொன்னால், நீங்களும் கேட்டுக்கிட்டு இருந்தீங்களா? எங்களுக்கு அவ்வளவு பரிஞ்சுக்கிட்டுப் பேசக்கூட உங்களுக்கு வாயில்லாமே போயிடுச்சா?” என்று வெங்கடாசலம், அழாத துக்கத்தோடு சொன்னான். அதே சமயத்தில், தெருப்பக்கம் ஒரு பெரிய கூக்குரல் கேட் டது. பலபேர் சேர்ந்து தெருக்கதவைத் தட்டும் சப்தமும் காதில் விழுந்தது. மதுரையும் வீரப்பனும், வெங்கடாசலத்தின் அறையை விட்டு வெளியே ஓடிவந்தார்கள். அலமேலுவும் அவர்கள் பின்னே ஓடிவந்தாள். வந்து பார்த்தால், ஒரு கிழிந்த கோவணத்தைத் தவிர வேறொரு வஸ்திரமுமின்றி, வேலன் முற்றத்தில் நின்று கொண்டிருந்தான். இவர்களைப் பார்த்ததும் வேலன், வீரப்பனுடைய மேல் வேஷ்டியை வாங்கி இடுப்பில் சுற்றிக்கொண்டான். “நம்மூரு சனங்க, எவ்வளவு மானங்கெட்ட களுதைங்க, மாமா! இடுப்பிலே துணி ஒண்ணும் இல்லையே, யாரும் காணாதே ஊட்டுக்கு ஓடியாந்துடலாமின்னு நான் பதுங்கிப் பதுங்கி வந்துக்கிட்டு இருக்கேன். என்னைத் தொரத்தறாங்களே. என்னை நரிவேட்டையல்ல ஆடினானுக! செத்தேன் பொளச் சேன்னு ஓடியாந்து கதவைத் தாப்பாப் போடறதுக்குள்ளே, எனக்குத் தாவு தீந்து போச்சு, மாமா,” என்றான் வேலன். மதுரையும் வீரப்பனும் மௌனமாய் நின்றார்கள். அலமேலு, அவனை விட்டு வெகுகாலம் பிரிந்தவள்போல, அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள். இதற்குள், தெருக்கதவைக் கோடாலி போட்டு உடைப்பதுபோல் ஜனங்கள் இடித்துக்கொண்டிருந்தார்கள். இரண்டொரு நிமிஷங்களுக்கெல்லாம், கதவு ‘தபார்’ என்று கீழே தள்ளப் பட்டது. கும்பலெல்லாம், ஒரே குரலொடு பெருங் கூச்சலிட்டது. “இனிஸ்பேட்டர் ஐயாவுக்கு வளி உடுங்க; போலீஸ் ஐயா வுக்கு வளி உடுங்க,” என்று எவனோ ஒருவன் உரக்கக் கத்தினான். இவ்விரைச்சலெல்லாம் வெங்கடாசலத்திற்குக் கேட்காமல் போகவில்லை. அவன் மதுரையையும் வீரப்பனையும் கூப்பிட்டான். பிறகு, அலமேலுவையும் பலத்த குரலோடு அழைத்தான். ஆனால், அவனைக் கவனிப்பார் யாரும் இல்லை. அவ்வளவு சந்தடிக்குக் காரணம் என்னவென்று தெரிந்துகொள்ள, அவன் துடித்தான். கட்டிலை விட்டு எப்படியாவது கீழே இறங்க அவன் முயன்றான். ஆனால், சீவனற்றுத் துணிபோல் துவளும் கால்களை வைத்துக்கொண்டு, அவன் என்ன செய்வான்! கடைசியாக, ஆத்திரம் பொறுக்கமாட்டாமல், அவன் வேணுமென்று புரண்டு, கட்டிலில் இருந்து ‘திடும்’ என்று கீழே விழுந்தான். பிறகு, அடிபட்ட வலியையும் சட்டை செய்யாமல், அவன் வெகு துன்பத்தோடு கைகளால் ஊர்ந்து ஊர்ந்து முற்றத்திற்கு வந்தான். அதே சமயத்தில், ஒரு போலீஸ் உத்தியோகஸ்தர் இரண்டு சேவகர்களோடு உள்ளே நுழைந்து, கும்பலை அதட்டித் தள்ளி நிற்கும்படி கட்டளையிட்டார். “ஐயோ, அப்பா! இது என்னாது! மூக்குலே ரத்தமாக் கொட்டுதே! நீ ஏன் இங்கே வந்தே?” என்று சொல்லிக்கொண்டே வேலன், வெங்கடாசலத்தைத் தூக்கி அவன் முகத்தைத் துடைத்தான். “எனக்கு ஒண்ணுமில்லை, வேலு, ஒண்ணுமில்லே. போலீஸ் ஐயாவெல்லாம் என்னாத்துக்கு வந்திருக்காங்க?” “இவன் உன் மகனா?” என்று போலீஸ் அதிகாரி கேட்டார். வெங்கடாசலம், “ஆமாங்க,” என்று தலையை ஆட்டினான். “சரி, கஷ்டமோ நிஷ்டுரமோ, என் வேலையை நான் பார்க்க வேண்டுமல்லவா? இப்பொழுது, நான் உன் மகனைக் கைது செய்து அழைத்துக் கொண்டு போகவேண்டும்.” “என்னாது? - யாரைக் கைது செய்யப் போறீங்க?” என்று வேலன், எதிர்த்துப் பேசினான். “உன்னைத்தான்”. “எதுக்காக?” “மாயாண்டியைக் கொன்றதற்காக.” ஒரு நிமிஷம் ஒரே நிசப்தமாயிருந்தது. எல்லாரும் பேச்சு மூச்சுவிடாமல், வேலனையே உற்றுப் பார்த்தார்கள். வெங்கடாசலம், குளிர் ஜுரம் வந்தவன்போல் நடுங்கிக்கொண்டிருந்தான். வேலன், வாய் திறவாமல் சற்று நிதானித்தான். பிறகு, “நான் அவனைக் கொல்லணுமின்னு நெனைச்சேன், நெனைச்சா, கொன்னுட்டதாவுங்களா?” என்று அவன் கேட்டான். “எவ்வளவு நாளாய் இப்படிக் கொல்ல வேண்டுமென்று தயார் செய்தாய்?” “தயாரு கியாரு, நான் ஒண்ணும் பண்ணலீங்க. நேத்துச் சாயங்காலந்தான் அவனைக் கொல்லணுமின்னு யோசிச்சேன்.” “உனக்கு ஏன் அந்த யோசனை வந்தது?” “இதெல்லாம் நீங்க ஏன் கேக்கறீங்க?” “என்ன சொல்லுகிறாய்? உஷார்! கேட்ட கேள்வி ஒவ்வொன் றுக்கும் நீ பதில் சொல்லித் தீர வேண்டும்; தெரிந்ததா?” என்று அவர் மிரட்டினார். வெகு சாந்தமாய்க் காணப்பட்ட அப் போலீஸ் ஸப் இன்ஸ்பெக்டர், ஒரு நிமிஷத்தில் வெகு குரூரமுள்ளவர்போல் தோன்றிவிட்டார். வேலனுக்குத் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டதுபோல் இருந்தது. முதல் நாள் சாயங்காலம் நடந்த விஷயங்கள் அவன் நினைவுக்கு வந்தன. உடனே, கோடாலி போட்டுத் தன் மார்பைப் பிளப்பதுபோல் ஓர் உணர்ச்சி அவனுக்கு உண்டாயிற்று. “ஐயோ! என் கொடுமையை ஏன் கிளருறீங்க, சாமீ!” என்று வேலன் கெஞ்சினான். ஆனால், போலீஸ் ஸப் இன்ஸ்பெக்டர் விடுகிறவராயில்லை. மேலே சொல்லும்படி அவர் தலையை ஆட்டினார். பிறகு, வேலன் சொல்லத் தொடங்கினான்: “அந்தப் பாவியாலே எங்க ஊடு குட்டிச்சுவராப் போச்சுங்க. எங்களை ஊரை விட்டே தொரத்திடணுமின்னும் பார்த்தான். எனக்காவ நான் எப்பவும் கவலைப்படல்லே; எங்கப்பாருக்காவத்தான். அவன் ஒரு தீமையும் பண்ணக்கூடதேன்னிட்டு நான் பயந்துகிட்டு இருந்தேன். இதை மனசுலே வச்சுக்கிட்டு, நான் எங்காப்பாருக்கு ஒரு யோசனை சொன்னேன். அது அவருக்குப் பிடிக்காதூன்னிட்டு எனக்கு நல்லாத் தெரியும்! அப்படித் தெரிஞ்சும் நான் என்னாத் துக்குச் சொன்னனின்னா...” வேலன் நிறுத்தினான். அவனுக்குப் பெருமூச்சு வந்துவிட்டது; பேசுவதற்குக் கஷ்டப்பட்டான். பிறகு, “எல்லாஞ் சொல்லணுமா, சாமி?” என்று பரிதாபப்படும்படி கேட்டான். “என்ன செய்கிறதப்பா? சட்டப்படி நான் நடக்க வேண்டுமே?” என்று ஸப் இன்ஸ்பெக்டர், சாந்தமாகச் சொன்னார். “ஊம், சரிங்க. நான் எங்கப்பாரை முக்காவாசி நெலத்தை வித்துவிடச் சொன்னேன். அப்படி விக்காட்டி, சாப்பாட்டுக்குக்கூட ஒண்ணும் மிஞ்சாதூன்னு எனக்கு நல்லாத் தெரியுங்க. ஆண்டவனறிய, அவரு நன்மைக்கே நான் அந்த யோசனை சொன்னேனுங்க. ஆனா, அவரு அதை வித்தியாசமா எண்ணிக்கிட்டு, என்னை நன்னிகெட்டவனின்னாரு. அத்தோடு நிக்காதே, கோவத்துலே இன்னும் ஒரு பேச்சுச் சொன்னாருங்க. அதைக் கேட்டப்போ, என் வவுரு எரிஞ்சுபோச்சு! அந்தப் பாவி மாயாண்டி இல்லாட்டி, அவரு ஒருநாளும் அப்படிச் சொல்லியிருக்கமாட்டாரு. என்னாலே பொறுக்கமாட்டல்லே. இப்படியும் ஒரு மனிசன் பொறந்து உயிரோடு இருக்கணுமான்னு ஆயிடுச்சு எனக்கு. உயிருக்கு உயிரா இருந்திட்டு,‘நீ ஒரு வேத்து மனுசன்தானேடா’ன்னு அவரு சொன்னப்போ, என் ஆவி கொலஞ்சு போச்சு! ஐயோ சாமி! இதை யெல்லாம் ஏன் இளுக்கிறீக?” என்று கண்களில் நீர் ததும்பத் ததும்பச் சொன்னான். “பொறுத்துக்கொள் தம்பி, பொறுத்துக்கொள். இது என்ன, அவன் சொல்வது எனக்கு ஒன்றும் தெரியவில்லையே? யாரு வேற்று மனிதன்? என்னவோ நன்றிகெட்டவன் என்கிறான்,” என்று மதுரையைப் பார்த்து ஸப் இன்ஸ்பெக்டர் கேட்டார். அப்பொழுது மதுரை, வெங்கடாசலத்திற்கும் வேலனுக்குமுள்ள பாத்தியத்தைச் சுருக்கமாகச் சொன்னான். “ஓஹோ, அப்படியா சங்கதி? அப்புறம்?” என்று மறுபடியும் வேலனை அவர் தூண்டினார். “அப்பாலே...அப்பாலே,” என்று வேலன், ஏதோ நினைவாய்த் திருப்பித் திருப்பிச் சொல்லிவிட்டு, “எனக்குக் கெட்டவெறி பிடிச்சுப் போச்சு. இவ்வளவு துன்பமும் அந்தப் பயலாலேதானே வந் திச்சு? அவனை எப்படியாவது தீத்துடனுமின்னிட்டுக் கங்கணம் கட்டிக்கிட்டேன். அவ்வளவுதானே ஒளிய, நெசமாலும் நான் கொல்லல்லீங்க,” என்றான் வேலன். ஸப் இன்ஸ்பெக்டர் மௌனமாய்த் தலையை ஆட்டினார். பிறகு, “நீ சொல்வது நிஜமானால், உன் துணியெல்லாம் ரத்தமா வானேன்? நீ அவ்வளவு கஷ்டப்பட்டு அதைக் கிழித்து எறிவானேன்?” என்று அவர் கேட்டார். வேலன், திருதிருவென்று விழித்தான்; பதில் சொல்லத் தயங்கினான். பிறகு, “மெய்யாலும் எனக்குத் தெரியாதுங்க,” என்று தடுமாறிக்கொண்டு சொன்னான். “சரிதான், எல்லாம் சட்டப்படி நடக்கும், போ - இதோ, இப்ராஹீம், சவத்தை ஸ்டேஷன் ஆஸ்பத்திரிக்கு ஒரு வண்டியில் போட்டுக்கொண்டு போ. அதை டாக்டர் பரீக்ஷை செய்ய வேண்டும். சரி, நீ வா தம்பி, என்னோடு,” என்று சப் இன்ஸ்பெக்டர் வேலனை அழைத்தார். “நான் ஏன் வரணும், சாமி,” என்று வேலன், மறுத்துச் சொன்னான். “வீண் கேள்விகள் கேட்காதே. வா என்றால் வா,” என்று அவர் கோபித்துக்கொண்டார். “ஐயோ! சாமி! உங்களுக்குப் புண்ணியமுண்டு; அவனை உட்டுடுங்க. என்னை அளைச்சிக்கிட்டுப் போங்க. உளுமையிலே நான்தான் கொலைபாதகன். என்னாலேதான் அவன் கொன்னான். குத்தமெல்லாம் என் பேருலே, சாமி. அவன் அறியாப் பையன். ஐயோ! இல்லாட்டி என்னையுங்கூட அவனோடு அளைச்சிக்கிட் டுப் போங்க. சாமி! சாமி! உங்களைக் கையெடுத்துக் கும்பிடுறேன்,” என்று கைகளைக் கூப்பிக்கொண்டு, வெங்கடாசலம் கெஞ்சினான். ஸப் இன்ஸ்பெக்டர் திரும்பிப் பார்த்தார். “அவசியம் வந்தால், உன்னையும் இழுத்துக்கொண்டு போவோம்,” என்று சொல்லி விட்டு, அவர் வெளியே போய்விட்டார். அலமேலு, தலையில் அடித்துக்கொண்டு புரண்டு புரண்டு அழுதாள். பிறகு அவள், வேலனைப் பின்தொடர்ந்து ஓட யத்தனித்தாள். ஆனால் மதுரை, அவளை மெதுவாகத் தடுத்தான். “அம்மாடி! என் பேச்சைக் கேளு. நீயோ பொம்பிளை. உன்னை அவுங்க பின்னாலே வர உடமாட்டாங்க; துரத்திடுவாங்க. நான் போறேன் வேலுவோடே. அந்தக் கொளந்தப் பயலை நான் இப்போ விட்டுக் குடுத்திடுவேனா? அவனை மீட்டுக்கிட்டு வராதே, நான் ஊடு திரும்பறதில்லே; சத்தியமாச் சொல்றேன் நம்பு; உன் வேலை, வெங்கடாசலத்தைப் பாத்துக்கவேண்டியது. நீ இல்லாட்டி அவன் செத்துப்போயிடுவான். அதோ! பாரு, பாரு! அவனுக்கு வலிப்பு வந்திடுச்சு. ஓடு! ஓடு!” என்று வெங்கடாசலத்தைக் காட்டி, மதுரை சொன்னான். அலமேலு, ஓடித் தன் புரு ஷனைப் பிடித்துக் கொண்டாள். மதுரை, போலீஸாரைப் பின்பற்றி ஓடினான். வெங்கடாசலத்தின் வலிப்பு, படிப்படியாகத் தணிந்தது. ஆனால், அவன் ஆயாசத்தால் சோர்ந்து பிணம்போல் கிடந்தான். இன்னும் அவனுக்கு நினைவு வரவில்லை; மூடின கண்கள் மூடியபடியே இருந்தன. பெருமூச்சைத் தவிர அவனிடம் வெறொரு ஜீவ களையும் காணப்படவில்லை. வீரப்பனும் சில சிநேகிதர்களுமாய்ச் சேர்ந்து, அவனை மெதுவாகச் சுமந்து படுக்கையில் வைத்துக் கவலையோடு அவனைக் காத்துக் கொண்டிருந்தனர். |