அத்தியாயம் 20. நியாயப்போக்கு - மண்ணாசை - Mannasai - சங்கரராம் (டி.எல். நடேசன்) நூல்கள் - Sanakararam (T.L.Natesan) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.comஅத்தியாயம் 20. நியாயப்போக்கு

     மறுதினம் காலை ஒன்பது மணிக்கே, வீரமங்கலத்துக் கிராம வாசிகள் ஜில்லா கோர்ட்டைச் சுற்றியிருந்த மரங்களின் அடியில் கும்பல் கும்பலாகக் கூடினார்கள். அவர்கள் போடும் கூச்சலால் அவ்விடம் ஒரு சந்தைக்கு ஒப்பாயிருந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம், கோர்ட்டுச் சேவகர்கள் வந்தார்கள். அவர்களைக் கண்டதும், குடியானவர்களின் குரல் சற்றுத் தாழ்ந்தது.

     நியாயஸ்தலத்தின் கதவுகள் திறக்கப்பட்டவுடனே சுப்பையா பிள்ளை, மதுரை முதலியவர்களை உள்ளே அழைத்துக்கொண்டு போய், நல்ல இடத்தைத் தேடி அவர்களை உட்கார்த்தி வைத்தார். மல்லனும் அவன் கட்சிக்காரர்களும், அகப்பட்ட இடத்தில் உட்கார்ந்து கொண்டார்கள். வர வர, நியாயஸ்தலத்தில் வக்கீல்களின் நடமாட்டம் அதிகரித்தது. மணி பத்தரை அடித்ததும், நியாயாதிபதி பிரவேசித்தார். உடனே அமளி அடங்கிற்று. எல்லோரும் எழுந்து, நியாயாதிபதி ஆசனத்தில் அமர்ந்த பிறகு உட்கார்ந்தார்கள்.

     கோர்ட்டு உத்தியோகஸ்தர், நியாயாதிபதியின் முன் சில தஸ்தாவேஜ÷களை வைத்துக்கொண்டிருந்த பொழுது, இரண்டு போலீஸார்கள் வேலனை உள்ளே இழுத்துக்கொண்டு வந்தனர். வேலனைப் பார்த்தமட்டில், அக்கிராமவாசிகள் அனைவரும், பேசிக்கொண்டது போல ஒரே காலத்தில் பெருமூச்சு விட்டார்கள். நியாயாதிபதி, அவர்கள் பக்கம் கடுத்துப் பார்த்துவிட்டுத் தம் முன்னிருந்த காகிதங்களைப் பார்வையிட்டுக்கொண்டே போனார்.

     ஆனால் வேலனுடைய தோழர்கள், அவனுடைய பரிதாப மான நிலைமையைப் பார்த்து மனமுருகி, தாங்கள் நியாய ஸ்தலத்தில் இருப்பதையும் மறந்து, ஒருவருக்கொருவர் பேசத் தொடங்கினார்கள். சுப்பையா பிள்ளை அவர்களுக்கு எச்சரிக்கை செய்ய முயலுமுன் கோர்ட்டுச் சேவகன், அவர்கள் மௌனமாய் உட்கார்ந்திராவிடில் வெளியே தள்ளப்படுவார்கள் என்று மிரட்டினான். அதன்மேல், அப்பேதைக் குடியானவர்கள் பெட்டியிலடைத்த பாம்பு போல் அடங்கிவிட்டனர்.

     வேலன் கூண்டில் நிறுத்தப்பட்டான். மனம் நொந்து, உடல் மெலிந்து, கண் மூடிக் காட்டில் விடப்பட்டவன்போல அவன் திகைத்து நின்றான். அவனைப் பார்க்க மிகவும் பரிதாபமாயிருந்தது. ஒரு குடியானவனுக்குத் தன்னை அறியாமலே அழுகை வந்துவிட்டது. சத்தம் செய்யாமல் அவன் கண்ணீர் சொரிந்தான். தன்னால் இயன்ற மட்டும் முயன்றும், அதை அடக்க முடியவில்லை.

     மாயாண்டியின் பிணத்தை அறுத்துப் பரிசோதித்த டாக்டர், முதல் சாக்ஷியாக அழைக்கப்பட்டார். அவர், மாயாண்டி இறந்தது உண்மையென்றும், எவ்விதமான காயங்களால் இறந்தான் என்பதையும் சொல்லித் தம் வாக்குமூலத்தைச் சீக்கிரமாக முடித்தார். இரண்டாவது சாக்ஷி, மல்லன். அவனைச் சர்க்கார் வக்கீல் வெகுநேரம் விசாரித்தார். அவன், வார்த்தைக்கு வார்த்தை, தன்னையும் தன் தகப்பனையும் வேலன் குத்திக் கொன்று விடுவேனென்று பயமுறுத்தி வந்ததாகச் சொல்லிக்கொண்டே வந்தான். கடைசியாக, கொலை செய்வதற்குமுன் அன்றிரவு, வேலன் வள்ளி வீட்டிற்குச் சென்று, அவன் மல்லனைக் கட்டிக் கொண்டால் அவளையும் வெட்டி விடுவதாகச் சபதம் செய்ததாக மல்லன் சொன்னான். இதைக் கேட்டதும் வேலனுக்குப் பேராவேசம் வந்துவிட்டது.

     “ஐயோ! அநியாயப் பொய்யங்க!” என்று நியாயாஸ்தலம் அதிரும்படி வேலன் உரக்கக் கூவினான்.

     “இடையில் பேசாதே!” என்று ஜட்ஜு கடுமையாகக் கண்டித்து, வேலனை ஏற இறங்கப் பார்த்தார். அப்பொழுது, அவருடைய அபிப்பிராயமும் சற்று மாறுதல் அடைந்தாற்போல் தோன்றிற்று. பிறகு, “உன்முறை வரும்பொழுது, நீ சொல்ல விரும்புவதை யெல்லாம் சொல்லலாம்” என்று நிதானமாகச் சொன்னார்.

     அடுத்த சாக்ஷி, போலீஸ் ஸப் இன்ஸ்பெக்டர். அவர் கதையை ஜோடித்து, ஆதியிலிருத்து அந்தம் வரையில் வெகு நேர்த்தியாகச் சொன்னார். தாதன் செய்த உதவியை, அவர் மெச்சிப் பேசினார். அவன் இல்லாவிடில் இக்கொலையே வெளிப்பட்டு இராதென்று அவர் உறுதியாகச் சொன்னார். அவர் பின் சாக்ஷி சொன்ன போலீஸ் சேவகனும் அவருடைய வாக்குமூலத்தையே ஸ்திரப்படுத்தினான்.

     பிறகு, தாதன் சாக்ஷிக் கூண்டிற்கு வந்து சேர்ந்தான். அவன் ஏதோ வேதனைப்படுவதுபோல் தோன்றினான். கைகளைப் பிசைந்துகொண்டு, அவன் இப்புறமும் அப்புறமும் விழித்து விழித்துப் பார்த்தான். கொலையைப் பற்றி என்ன தெரியுமென்று அவனைக் கேட்டபொழுது, அவன் விவரமாக ஒன்றும் சொல்லவில்லை. அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை வருவதற்குப் பத்து கேள்விகள் போடவேண்டியிருந்தது. அவன் பார்வை, அடிக்கடி தன் கிராமத்தார் உட்கார்ந்திருக்கும் இடத்தையே நோக்கிச் சென்றது. இதை நன்றாய்க் கவனித்து வந்த நியாயாதிபதி அவனைக் கோபத்தோடு கண்டித்தார்.

     “இதோ பார், நீ உண்மையை மறைத்து வைக்கிறாய் பொய் சொல்வதற்குத் தண்டனை என்னவென்று உனக்குத் தெரியுமா?”

     “தெரியாதுங்க!”

     “கடுங்காவல்.”

     “ஐயோ!” என்றான் தாதன், தூக்கிவாரிப்போட்டுக் கொண்டு. “நான் உளுமையைச் சொல்லிடுறேனுங்க?” என்று கெஞ்சினான். ஆனால் அதே சமயத்தில், அநேகர் அவனைக் கண்தெறிக்கப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் அவனுக்குப் புலப்பட்டது. அவன் தலையை நிமிர்த்தினான். எதிரே எமன் போல் சடையன் காணப்பட்டான். அந்த முரட்டுப் பயல் எதற்கும் துணிந்தவன்; இவனை விழுங்கி விடுவதுபோல், கண் கொட்டாமல் அவன் முகத்தைப் பார்த்தான். தாதனுக்கு, தொடை நடுக்கம் எடுத்துவிட்டது. புத்தியில்லாமல் இந்த வம்பில் ஏன் அகப்பட்டுக்கொண்டோமென்று அவனுக்கு ஆய்விட்டது. உண்மையைச் சொன்னால் மாயாண்டி கதிதான்; சந்தேகமில்லை. அந்தப் போக்கிரி சடையன், சொன்னதைச் செய்தே தீருவான். பொய்யைச் சொன்னாலோ கடுங்காவலாம்! கடுங்காவலென்றால், என்ன இமிசைப்படுத்து வார்களோ? மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், அவன் இவ்வாறு தவித்தக்கொண்டிருக்கும் பொழுது, ஜட்ஜு திடீரென்று ஒரு கேள்வி கேட்டார். “வேலன் வேஷ்டியை ஜலத்தில் அலசிக்கொண்டிருந்தபொழுது, ரத்தக் கறைகளை நீ பார்த்தாயா?”

     “ஆமாம்... ஊ... இல்லீங்க தொரையே! நாம வாளத்தாரு வெட்டுறப்போ, அந்தப் பாலு உளுந்தா, அதேமாதிரி கரை ஆவுதுங்க. நான் அதை என்னான்னு சொல்றதுங்க?” என்று அவன் இழுத்தான்.

     ஜட்ஜுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. “உன் அபிப்பிராயத்தை நான் கேட்கவில்லை, ஜாக்கிரதை! நீ உண்மையை ஒளித்து வைக்கிறாய். உனக்கு ஒரு தடவை எச்சரிக்கை செய்தாய் விட்டது. மறுபடியும் பொய் சொன்னால், கட்டாயம் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன், தெரிந்ததா? இப்பொழுது கேட்ட கேள்விக்குப் பதில் சொல். ‘ரத்தக் கறை போக மாட்டேன் என்குது’ என்று வேலன் உன்னிடம் சொன்னதாக, நீ போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சொன்னதுண்டா இல்லையா?” என்றார்.

     “சொன்னேனுங்க, யசமான்; மறந்திட்டேனுங்க, யசமான்! ஒங்க காலுலே விளுந்து கும்பிடுறேனுங்க! இந்த ஒரு தரம் மன் னிச்சிடுங்க! இனுமே பொய்யே சொல்லமாட்டேனுங்க! சத்தியமா, அங்காளம்மன் அறியச்சொல்றேனுங்க!” என்று தாதன், கைகால்கள் பதறப் பதறக் கெஞ்சினான். இதற்குள், நியாயஸ்தலத்தின் வாசற் படி முன் ஏதோ சிறிது கலவரம் ஏற்பட்டது. முதலில், நியாயாதிபதி அதைக் கவனியாதவர் போலிருந்தார். ஆனால், இரண்டொரு நிமிஷங்களுக்கெல்லாம் இரைச்சல் அதிகமாயிற்று. நியாய ஸ்தலத்தில் இருந்தோர் அனைவரின் திருஷ்டியும், அவ்விடத்தே சென்றது. அங்கே கூடியிருந்த வீரமங்கல கிராமத்தார் எல்லோரும், ஆச்சரியம் பொறுக்கமாட்டாமல் பற்பல விதங்களாகக் கோஷித்தனர். ஆனால் அக்கலவரத்தில், ‘சோளன்’ என்ற பெயர் மட்டும் மிகவும் அடிபட்டது.

     ஓர் உயரமான இளைஞன், உள்ளே நுழைவதற்காகக் கோர்ட்டுச் சேவகனோடு வாதாடிக்கொண்டிருந்தான். அவனுடைய இளைத்த உடம்பையும் பரட்டத் தலையையும் அழுக்கடைந்த கந்தையையும் பார்த்தால், அவன் பஞ்சத்தில் அடிபட்டவன் போல் காணப்பட்டான். வர வர, அவனுக்கு ஆத்திரம் அதிகரித்தது. சேவகனை மீறிக்கொண்டு போக அவன் யத்தனித்தான்.

     “அடபாவி! நான் உள்ளே போயாவணுமே! நான் ஜர்ஜி அய்யாவோடு பேசி ஆவணுமே! இல்லாட்டி, அநியாயமா ஒரு பாவமும் அறியாத பையன், அவனையல்ல கொன்னுடுவாங்க! எங்கப்பனைக் கொன்னது நான்தானின்னு தொரைகிட்டே சொல்லணும், ஐயா. நான் உளுமையைச் சொல்லப்போனா, உனக்கென்னா ஐயா வந்திச்சு? உடு ஐயா!” என்று கையை ஆட்டிக்கொண்டு அவன் கூக்குரலிட்டான்.

     நியாயாதிபதி, அவனை உள்ளே விடும்படி கோர்ட்டுச் சேவகனுக்கு உத்தரவு கொடுத்தார்.

     “தொரையே! நானே எங்கப்பனைக் கொன்னேனுங்க. கடவுளுக்குப் பொதுவாகச் சொல்றேனுங்க. வேலன் ஒரு பாவத்தையும் அறியான். அநியாயமாய் அவன் உயிரை எடுத்திடாதிங்க! அவனை உட்டுட்டு, என்னை என்ன ஓணுமின்னாலும் பண்ணிக்கிங்க! சுட்டாலும் சரி, தூக்குப்போட்டாலும் சரி; நான் பொளச்சுது போதுங்க. குடிவெறியிலே செஞ்சிட்டேனுங்க. அவரு என்ன தீமை செஞ்சாலும், பெத்த அப்பனைக் கொல்லலாங்களா? இப்போ, நான் கடந்து தவிக்கிறது, ஆண்டவனுக்குத்தான் தெரியுங்க, எசமான்! உசிருக்கு உசிரு வாங்கிடுங்க!” என்று சொல்லி விட்டுச் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான்.

     அச்சமயத்தில், நியாய ஸ்தலத்தின் மாட்சிமையும் கௌரவமும் காற்றாய்ப் பறந்தோடின. எங்கும் ஒரே பரபரப்பாயிருந்தது. ஒருவருக்கொருவர் ரகசியமாகப் பேசத்தொடங்கினர. நியாயாதிபதி, சர்க்கார் வக்கீலோடு ஒரு நிமிஷம் கலந்து யோசித்தார். பிறகு, கண்மூடிக் கண் திறப்பதற்குள் நியாய ஸ்தலத்தில் அமைதி ஏற்பட்டுவிட்டது. வேலன் கூட்டிலிருந்து இறக்கப்பட்டான். பிறகு, குற்றவாளி என்று ஒப்புக்கொண்டவனைச் சேவகன் கோர்ட்டார் உத்தரவுப்படி கூட்டில் ஏற்றினான். அவன், தன் பெயர் சோளனென்றும் வயது இருபத்தாறென்றும், தான் மாண்டுபோன மாயாண்டியின் மூத்த மகனென்றும், வாக்குமூலம் கொடுத்தான். கொலை செய்ததற்குக் காரணத்தைக் கேட்டபொழுது, அவன் பெருமூச்சு விட்டு, “அது ஒரு பெரிய கதை!” என்று சொன்னான்.

     “அந்தக் கதையைத்தானே கோர்ட்டார் கேட்க வேண்டுமென்கிறார்கள்?” என்றார் சர்க்கார் வக்கீல். அதன்மேல், சோளன் சற்றுச் சலிப்புடன் தலையை அசைத்து, “அதைச் சொன்னதாலே, எனக்கு என்ன கொறஞ்சு போவுதுங்க? நான் பொறந்து வளந்ததைக் கேக்கயாரு பிரியப்படுவாங்க? அதுக்காவச் சொன்னேனே ஒளிய, வேறே என்னாங்க? சரீங்க, சுருக்கமாய்ச் சொல்லிடுறேன்.”

     “அதற்காக, நடந்த விஷயங்களை விட்டுவிடாதே,” என்று நியாயாதிபதி எச்சரிக்கை செய்தார்.

     “ஐயோ, சாமி! நான் ஏன் உடறேன்? நான் எதுநாச்சுக்கும் பயந்தா அல்ல?”

     “சரி, மேலே சொல்லு,” என்றார் நியாயாதிபதி.

     “எங்கப்பனை ஏன் கொன்னேன்னுதானே கேக்கறீங்க? அந்த மனிசன் என்னை அவ்வளவு பாடுபடுத்திட்டானுங்க. ஒண்ணா நான் ஒளியணும், இல்லாட்டி அது ஒளியணுமினு எனக்கு ஆயிடுச்சுங்க. அந்த ஆளைக் கண்டபோதெல்லாம், கொன்னு தின்னுடணும்போல, அவ்வளவு வெறுப்பாயிடுச்சுங்க. இருந்தாலும், இருந்தாலும், நான் செஞ்சது தப்புன்னிட்டு எனக்கு இப்போத் தெரியிது, எசமானே! நான் படும் துன்பம் கடவுளுக்குத்தான் தெரியும்! ஆமாஞ் சாமி, இந்தக் கையாலே கொன்னேன் - என்னாத்தை வாரிக் கட்டிக்கிட்டேன்! ஒத்தனை ஒத்தன் கொன்னுட்டா, என்னாத்தை வாரிக்கிட்டிக்கிறான்? சாவாதே எவன் இருக்காஞ் சாமி? செத்தவன் சங்கதிமட்டும் சாவோடு முடிஞ்சிடுத்தின்னுட்டு நெனைக்கிறீங்களா? ஒரு நாளும் இல்லே, சாமி. சாவோடு முடிஞ்சிடல்லே, முடிஞ்சிடல்லே. அந்தச் சங்கதி எனக்குத் தெரியும். ஒரு நாள் தவறாதே, ராவுலே எங்கப்பன் எங்கிட்டே வருது! அது மூஞ்சியைப் பார்த்தா, ஏண்டா இந்த வேலை செஞ்சேன்னிட்டு எனக்காவ வருத்தப்படுறாப்போல இருக்குது! அது வாறதும் போறதும், கனவுபோலே இருக்குது, சாமி. நான் என் வவுத்தெரிச்சலை அதுக்கிட்டே எப்படிச் சொல்லுவேன்! அதோடே, நான் எப்படிநாச்சும் கலந்து பேசித்தான் தீரணும்! ஆமாம், தப்பாமே அதுகிட்டே நான் போவணும்! கத்தியாலே குத்துறதுக்கு இந்தக் கையை நான் தூக்கினப்போ, அது யாரின்னு கண்டுக்கிட்டு, ‘நீயா!’ இன்னு கேட்டுச்சு. இதோ! இப்போ எதிரிலே நின்று சொல்லாற்போல இருக்குதே...நீயா! நீயா!! நீயா!!!” என்று சோளன், பயங்கரமான பார்வையுடன் கூக்குரலிட்டான். பிறகு, தன் பரட்டைத் தலையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு, இடுப்பு ஒடிந்தவன்போல் அவன், பூட்டுச் சட்டத்தின்மேல் சாய்ந்தான். கீழே விழாதபடி, சேவகன் அவனைப் பிடித்துக்கொண்டான். ஒரு நிமிஷத்திற்கு பிறகு, குடிக்கத் தண்ணீர் வேண்டுமென்று கையால் சாடை காட்டினான். உடனே, ஒரு டம்ளர் ஜலம் கொடுக்கப்பட்டது. அதை, ஒரே மூச்சில் அவன் குடித்தான். பிறகு, பெருமூச்சு விட்டுக்கொண்டு அவன், கோர்ட்டைச் சுற்றிப் பார்த் தான். இந்த நாலு ஐந்து நிமிஷங்களுக்கு, நியாய ஸ்தலம் ஒரு பொம்மைக் கொலுபோலக் காணப்பட்டது. சோளனுக்குச் சோர்வு சற்றுத் தணிந்தது என்று தெரிந்ததும் ஜட்ஜு மெதுவாகக் கேட் டார். “உன் தகப்பன்மேல் உனக்கு ஏன் அவ்வளவு வெறுப்பு?”

     “அது என் மூக்கிலே தும்பைச் சாத்தைப் பிழிச்சிட்டுதுங்க. ஊட்டை உட்டு துரத்திச்சு. போனா இடமெல்லாம், அவன் அப்படியாக் கொத்தவன் இப்படியாக் கொத்தவன் இன்னிட்டு, என்மேலே பழி சொல்லுச்சு. சோத்துக்கு இல்லாமெ சாவடிச்சுது. கொல்லுறது ஒண்ணுதான் பாக்கி, மீதி எல்லாம் செஞ்சுடுச்சு. ஆனா, அது எப்பவும் இந்த மாதிரி இல்லைங்க. அந்தப் பாலாப்போன முண்டை ஊட்டுக்கு வந்தப்போ இருந்து, எனக்கு சனியன் பிடிச்சுதுங்க,” என்று சோளன் வெறுப்புடன் முறையிட்டான்.

     “அவள் யார்?” என்று நியாயாதிபதி கேட்டார்.

     “எங்கத்தைக்காரிதான்; எங்கப்பனுக்கு மூத்தவ, அறுத்துப் போனவ. குளந்தை குட்டி கிடையாது. ஆனா, சோத்துக்கு குரவு இல்லிங்க. எங்களவங்க ஏழைப்பட்டவங்க; அதனாலே, அவளை ஒரு பணக்காரக் கிழவனுக்குக் கட்டிக் கொடுத்தாங்க. அவ புருசனைப் பாத்தா, அவ பாட்டானாட்டம் இருப்பானாம். ரண்டு மூணு வருசத்திக்கெல்லாம், அந்தக் கிழவன் செத்தானாம். சொத்தையெல்லாம் வாரிக்கிட்டு, ரொம்ப விசனப்பட்டவளாட்டம் பாசாங்கு பண்ணிக்கிட்டு, எங்க ஊடு வந்து சேர்ந்தா. வந்ததும் வராததுமா, எல்லாரையும் அதிகாரம் பண்ணத் தொடங்கிட்டா. எங்கம்மா ஒரு பயித்தியம். எது சொன்னாலும் பட்டுக்கிட்டு இருந்திச்சு. வர வர, அவ ரொம்ப இமிசை செய்ய ஆரம்பிச்சிட்டா. அவளாலேதான் நாங்க பொளக்கணுமின்னு அவ நல்லாக் கண்டுக்கிட்டா - அப்பாலே, கேப்பானேன்? எனக்கு அப்போ பன்னண்டு வயசிருக்கும் - இம்பிட்டுப் பையன்க. ஒரு நாள், எங்கம்மாளை அவ திட்டிருக்கா பாருங்க, வேறு யாரு நாச்சும் இருந்தா, நாக்கைப் பிடுங்கிக்கிட்டுச் செத்திருப்பாங்க. எனக்குப் பொல்லாத கோவம் வந்திச்சு. அவமேலே, ஒரு கல்லை எடுத்துப் போட்டேன். நெசமாலுஞ் சாமி. செஞ்சத்தை இல்லேன்னு சொல்லுவானேன்? அவ நடத்தை, எங்கப்பனுக்குந்தான் பிடிக்காமே இருந்திச்சு. ஆனா அவ மூச்சுக்கு மூச்சு, மச்சான் ஊட்டுக்குப் போயி, அவன் பிள்ளையை வளத்துக்கரேன்னு சொல்லத் தொடங்கிட்டா. அப்போ, எங்கப்பன் பயந்திடுச்சு. மொள்ள மொள்ள, அவ சொன்னபடியெல்லாம் கேக்கத் தொவங்கிட்டுது. கடைசியிலே, அவ வச்சது சட்டமாயிடுச்சு எங்கூட்டுலே. ஆனா, எம்மேலே இருந்த ஆத்தரம் மட்டும் அவளுக்குப் போவல்லே. நெதம், எங்கப்பன்கிட்டே எதுநாச்சும் கோளி சொல்லி, எனக்கு அடிவாங்கி வைப்பா. நான் ரொம்ப நல்லவனின்னு நான் சொல்லிக்கிலே, சாமி. இருந்தாலும் அவ, ஒண்ணைப் பத்தாக்கி, பொய்யும் புளுகும் சொல்லி, எங்கப்பனுக்கும் எனக்கும் ஆகாதே பண்ணிட்டா. அவளாலேதான் சாமி நான் இந்தக் கதிக்கு வந்தேன்! அவ ஒரு பொம்பிள்ளை - அதுலேயும் வாளாத கட்டுக்களத்தி. எங்கப்பன் ஆம்பிள்ளை இல்லையா? நெசம் பொய்யைக் கண்டுக்க வேணாமா? எது சொன்னாலும் நம்பிடறதுதானா?” இப்பொழுது அவனுக்கு ஆயாசம் ஏற்பட்டது. பெருமூச்சு விட்டுச் சற்றுச் சிரம பரிகாரம் செய்து கொண்டான். ஜட்ஜு, கேள்வி கேட்க வாயெடுத்தார். அதற்குள், அவனே தன் விருத்தாந்தத்தைத் தொடர்ந்து சொல்லலானான்: “திடீரின்னு எனக்கு ஆத்திரம் வந்ததுக்கு என்ன காரணுமுன்னா, அதோ அந்தப் பையன் கண்ணாலந்தான்,” என்று மல்லனைச் சுட்டிக் காட்டிச் சொன்னான். “அவன் எனக்கு எளையவனுங்க. போன மாதமே அவனுக்குக் கண்ணாலம் ஆயிருக்கவேண்டியது. என்னாலே நின்னு போச்சுங்க. அவன் மேலே எனக்குப் பொறாமை ஒண்ணும் இல்லையுங்க; நெசமாலும் இல்லையுங்க. ஆனா, எங்க சாதியிலே ஒரு வளக்கம் உண்டுங்க. மூத்தவனுக்குக் கண்ணாலம் ஆகாட்டி, எளையவனுக்குச் செய்யமாட்டாங்க. அப்படிச் செஞ்சாலும், மூத்தவன் கிட்டே இருந்து, அவன் சம்மதம் வாங்கிப்பாங்க. சம்மதங் குடுக்காட்டித்தான், ஏதோ பூசை கீசை செஞ்சு, அப்புறம் எளையவனுக்குக் கண்ணாலத்தைப் பண்ணுவாங்க. சம்மதம் கொடுக்கவாணாங்கற எண்ணமே எனக்கு இல்லையுங்க. ஆனா, நாயமாப் பாக்கப்போனா, அந்தப் பொண்ணைக் கட்டிக்க வேண்டியவன் வேலுதான்,” என்று அவன், வேலனைக் காண்பித்துச் சொன்னான்.

     “ஊருலே, நாலு பெரியவங்க எங்கப்பன்கிட்டே இந்த நாயத்தைச் சொன்னப்போ, அது சொல்லிச்சாம்: ‘எனக்கு இருக்கிறது ஒரு மகன்தான். எம் மூத்தவன் எப்பவோ செத்துட்டான்’ இன்னுதான்! இந்தச் சங்கதி எங்காதுல உளுந்தப்போ, நான் அரிய மங்கலம் கள்ளுக் கடையிலே இருக்குறேன். எனக்கு உடம்பு எரிஞ்சு போச்சு. இதை உட மானக்கேடு என்ன வேணும்? நாக்கைப் பிடுங்கிக்கிட்டுச் சாவக்கூடாதாங்கிற வரையிலும் ஆயிடுச்சி எனக்கு. போதாக்கொறைக்கு, அன்னிக்குத்தான் ஒரு வாரக்கூலி கையிலே வந்திருந்திச்சு - நான் ஒப்புக்கொள்கிறேன், எசமான். கொஞ்சம் பலமாத்தான் குடிச்சேன். அந்தச் சின்ன சங்கதிக்குக் கூட என்னை, அது ஒரு ஆளா நெனைக்கில்லே பாத்தியான்னு மட்டும், எனக்கு மனசுலே உறுத்திக்கிட்டே இருந்திச்சு. நான் கொட்டாப்புளியாட்டம் இருக்கறப்போ, செத்துட்டேனின்னு சொல்றதா! எனக்கு ஒரே வெறி பிடிச்சுப்போச்சு. செத்தவன் நான் இல்லை, அதுதான்! அதைக் கொஞ்ச நேரத்துல அதுக்குக் காட்டிடணுமின்னு தோணிப் போச்சு. போதை ஏற ஏற, நான் எல்லாத்தையும் மறந்திட்டேன். என் புத்திக்குத் தெம்பட்டது ஒண்ணுதான் - எப்படிநாச்சும் எங்கப்பனைத் தேடிப்பிடிச்சுக் கொன்னுடணும்! நான் ஊருக்கு வாரப்போ, நல்லா இருட்டிப் போச்சு. மூலை முடுக்குலெயெல்லாம் காத்திருந்து பாத்தேன்; அதைக் காண முடியிலே. எனக்கு இன்னும் கொஞ்சம் ஆத்தரமாப் போச்சு - அது அவ்வளவு சுளுவா தப்பிச்சுக்கிறதா! எசமான், என்னைப் பேய் பிடிச்சிடுச்சு! எங்கூட்டுப் பொளக்கடைக்கு ஓடியாந்தேன். அங்கே வறட்டிப் போர் இருந்திச்சு; அதுக்குப் பின்னாலே ஒளிஞ்சுக்கிட்டேன். கொஞ்ச நாளிக்கெல்லாம், அது அந்தப் பக்கம் வந்தது. அதைக் கண்ட ஒடனே, எனக்கு ரெத்த வெறி வந்திடுச்சி! அது மேலே பாஞ்சு உளுந்தேன், அப்பாலே...” மௌனமாய்ப் பல்லைக் கடித்துக்கொண்டு, கண்களை இறுக மூடிக் கொண்டு, கையால் குத்திக் குத்திக் காட்டினான்.

     “ஊம். அப்படியானால், நீ உன் தகப்பனைக் கொன்றதாக ஒப்புக்கொள்ளுகிறாய்,” என்றார் நியாயாதிபதி.

     “நான் இன்னும் என்னாத்தைச் சொல்லுவேன்?” என்று பரிதாபகரமாய்ச் சோளன் கைகளை விரித்தான்.

     “உனக்கு எவ்வளவு காலமாய் வேலனைத் தெரியும்?” என்று நியாயாதிபதி கேட்டார்.

     “அவன் பொறந்தப்போ இருந்து தெரியுங்க.”

     “அவன் மேலே உனக்குப் பிரியம் உண்டா?”

     “என்ன எசமான் அப்படிச் சொல்லுறீங்க! அவன் எனக்குக் கூடப் பொறந்தவனுக்கு மேலேயுங்க. தங்கமானவனாச்சுதே! தேடிப்பாத்தா, லெச்சத்துலே ஒரு ஆளு அவனைப் போலக் கெடைக்கமாட்டானே!”

     “ஆகையினாலே, அவனை விடுதலை செய்துவிட்டால் உனக்குச் சந்தோஷந்தானே?”

     “என்ன எசமான், அதைக் கேக்கணுமா? – இல்லாட்டி, நான் ஏன் இங்கே வந்து ஒங்க காலுலே உளணும்? நான் பொளச்சது போதுங்க. கடவுளுக்குப் பொதுவாச் சொல்றேனுங்க; நம்பினா நம்புங்க, நம்பாட்டிப் போங்க. நான் தூக்குப் போட்டுக்கிட்டாவது சாவலாமினு இருந்தேன். ஆனா, ஒரு பாவமும் அறியாத வேலு சிக்கிக்கிட்டானின்னு தெரிஞ்சதும், எனக்கு வவுறு எரிஞ்சு போச்சுங்க, உடனே பள்ளிக்கு ஓடி, ஏட்டு ஐயாகிட்டே உளுமையைச் சொல்லிடலாமின்னு பாத்தேன். அப்போ, உங்களைப்போல் ஒரு புண்ணியவான், ‘வாணாம், நேரா ஜர்ஜு ஐயாகிட்டவே போயிடு’ன்னிட்டு புத்தி சொன்னாரு. அது மேலே இங்கே ஓடியாந்தேன், சாமி.”

     “ரொம்ப சரி, உனக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு இருக்கலாம். நீ உன் சிநேகிதனைக் காப்பாற்ற யத்தனிப்பதும் பெருந்தன்மையே. ஆனால், சட்டம் ஒன்று இருக்கிறதே. வேலன் உன் தகப்பனைக் கொன்றிருக்க, உன்னை எப்படி தண்டிப்பது?”

     “ஐயோ, சாமி! என் பேச்செல்லாம் பொய்யிங்கறீங்களா? ஆண்டவன் அறியச் சொல்றேனுங்க! நீங்க எங்கே சத்தியம் பண்ணச் சொன்னாலும் பண்றேனுங்க! வேலுவுக்கு ஒரு எளவும் தெரியாதுங்க. ஐயோ, கடவுளே! ஒங்களுக்கு ஏன் இந்தச் சந்தேகம் வந் திச்சு!” என்று அவன் தலையில் அடித்துக்கொண்டான்.

     “ஆமாம், நீ உன் தகப்பனைக் கொன்றால், வேலன் உடைக்கு ரத்தக் கறை எப்படி வந்தது?” என்று நியாயாதிபதி கேட்டார்.

     “ஆஹா! அதுவுங்களா?” என்று ஒரு பெருமூச்சுவிட்டுச் சோளன் தலையை ஆட்டினான்.

     “அது இப்படித்தான் இருக்கணுங்க. நான் அந்தப் பாதவத்தைச் செஞ்சிட்டு ஓடிப்போன பொறவு, எனக்கு நாக்கு வறண்டு போச்சி. நல்ல குளுந்த பானைத்தண்ணியாக் குடிக்கணும் போலிருந்திச்சு. கோடையிலே, ஊட்டுலே ரெண்டு பானை இருக்கும் - ஆனால், நான் எந்த ஊட்டுலே பூருவேன், அப்போ, எனக்குக் கள்ளுக்கடை ஞாவகத்தக்கு வந்திச்சு. அங்கே, தப்பாமே பானையிலே தண்ணியிருக்கும். அரிவாளும் கையுமா, உளுந்து அடிச்சிக்கிட்டு அங்கே ஓடினேன். குடிசைக்குள்ளே, உளுந்து கிடந்த ஆளை நான் பாக்கல்லே. கால் தடுக்கி, அவன் மேலே குப்புற உளுந்தேன். அவன் கொஞ்சம் பொறண்டான். என் ரத்தத் துணியெல்லாம்...”

     “அப்படியா!” என்று வெகு ஆச்சரியத்துடன் வேலன் கூவினான். ஒரு க்ஷணம், எல்லோரும் அவன் முகத்தைப் பார்க்கும்படி நேர்ந்தது.

     “நான் கீளே உளுந்தப்போ, அரிவாள் என் கையிலிருந்து நளுவி விளுந்திடுச்சு,” என்று சோளன் தொடர்ந்து சொன்னான்.

     “நல்ல காலம், அது எங்க ரெண்டுபேர் மேலே விளுல்லை. போதையா உளுந்து கிடந்தது வேலுவின்னு தெரிஞ்சப்போ, எனக்கு நம்பிக்கையே வரலியுங்க! கள்ளுக்கடைக்குக் காதவளியிலே போறவன் அவன், அங்கே எப்படி வந்தானோ கடவுளுக்குத்தான் தெரியணும். அவன் மேலே உளுந்து பெரண்டதாலேதான், அவன் வேட்டிக்குக் கறை வந்திருக்கணுங்க; அதுக்குச் சமுசயமே இல்லே,” என்று சோளன் உறுதியாகச் சொன்னான்.

     நியாயாதிபதி, மற்றொருமுறை சர்க்கார் வக்கீலோடு கலந்து பேசினார். வேலன், மறுபடியும் கூட்டில் நிறுத்தப்பட்டான். தன் உடை ரத்தக்கறையானதன் மர்மம் வெளிப்பட்ட பிறகு, தான் நிரபராதியென்பதை நன்கு உணர்ந்தான் வேலன். கேட்ட கேள்வி களுக்குப் பதில் தட்டுத் தடங்களின்றிச் சொல்லித் தான் ஒரு குற்றமும் செய்யவில்லையென்பதை, உலகமறியும்படி அவன் ருஜுப்படுத்திக் காண்பித்தான். ஆயினும், அவன் குற்றமற்றவன் என்பதைப் பூர்த்தியாய் ஸ்திரப்படுத்துவதற்காக, அவனுடைய வக்கீல், ஆறுமுகத்தின் சாக்ஷியத்தை மட்டும் விசாரிக்கும்படி கோர்ட்டாரைக் கேட்டுக் கொண்டார். அதே பிரகாரம், ஆறுமுகமும் கூட்டில் ஏற்றப்பட்டான். ஆனால், ஆறுமுகம் மிகவும் பயந்து, பேசுவதற்கே கஷ்டப்பட்டான். இருந்தபோதிலும், வேலனின் துர்ப்பாக்கிய நிலைமைக்குத் தானே காரணம் என்பதை மட்டும் அவன் விளக்கிச் சொன்னான்.

     “கோவத்துலே ஒண்ணுக்கொண்ணு பண்ணாமே, ராவெல்லாம் சும்மா உளுந்து கிடந்தா சரியாப் போகுமின்னு, நான் அவனுக்குக் கள்ளை ஊத்தினேனுங்க. அது மாயாண்டிக்கும் நலுமையினு நெனைச்சேன்; இந்த அக்கப்போரெல்லாம் வெளையுமின்னு யாரு கண்டாங்க? தெரிஞ்சா இதுலே தலையிட்டுப்பேங்களா? இனிமே, அந்த வளிக்கே போவமாட்டேனுங்க,” என்று அவன் வாக்குத் தத்தம் செய்தான். நியாயாதிபதி அவனை இறங்கிப் போகச் சொல்லிவிட்டு, சற்று யோசித்தார். அந்தக் கேஸை ஒரு விசித்திரமாயிருந்தது. பிறகு பதினைந்து நிமிஷங்களுக்குள், அவர் வேலனை விடுதலை செய்யும்படியும் சோளனைக் கைது செய்யும் படியும் உத்தரவிட்டார். அங்கிருந்தோரின் குதூகலத்திற்கு அளவே யில்லை. வேலனுடைய தோழர்கள் ஆரவாரம் செய்வதைத் தடுப் பதற்குள், சுப்பையா பிள்ளைக்குப் போதும் போதுமென்று ஆய் விட்டது.

     வேலன், நியாய ஸ்தலத்தை விட்டு வெளியே வந்தானோ இல்லையோ, அவனுடைய சிநேகிதர்கள் அவனைக் குழந்தை போல் சுமந்து ஓடினார்கள். பிறகு, அவர்கள் தங்களுடைய மனப் பூர்வமான அன்பைப் பலவிதத்தில் காட்டிக்கொண்டனர். அவனைச் சூழ்ந்து கொண்டு, எல்லோரும் ஒரே காலத்தில் அவனோடு பேசத் தொடங்கினர். ஒருவன் தட்டிக்கொடுத்தான்; ஒருவன் கையைக் குலுக்கினான்; ஒருவன் முதுகைப் பிடித்தான்; ஒருவன் தலையைத் தடவினான். இவைகளெல்லாம் அவர்களுடைய அன்பிற்கு அறிகுறிகளாயிருந்த போதிலும், அவை இளைத்துக் களைத்திருந்த வேலனுக்கு மிகவும் வேதனையாயிருந்தன. இதை உணர்ந்த மதுரை, நல்லதனமாக அவர்களுடைய பிசகை எடுத்துக் காட்டி, வேலனுக்கு வேண்டிய சௌகரியத்தை ஏற்படுத்தினான். பிறகு, வேலனுக்குப் பிராண சிநேகிதர்களான ஜம்புலிங்கமும் பிச்சையும், அன்றிரவே, வெங்கடாசலத்திற்கு அந் நற்செய்தியைத் தெரிவிப்பதாக வாக்களித்திருந்ததால், விடைபெற்றுக்கொண்டு கிராமத்திற்குப் புறப்பட்டனர். ஆறுமுகம், அவர்களுடைய வழிச் செலவுக்குச் சிறிது பணம் கொடுத்து, வீணாய்க் கஷ்டப்பட்டு வழியெல்லாம் நடக்கவேண்டாமென்றும், பொன்மலைவரையிலும் ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொள்ளும்படியும், புத்திசொல்லி அனுப்பினான்.

     வேலனும் அவனைச் சேர்ந்தவர்களும் சந்தோஷத்தில் மூழ்கியிருந்த பொழுது, சுப்பையா பிள்ளை தம் மனைவியின் உத்தரவுப் படி, அவளுக்குத் தகவல் அனுப்பினார். ஏனெனில், கடவுள் கிருபையால் வேலனுக்கு விடுதலை ஆய்விட்டால், அவனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு நல்ல விருந்து செய்ய வேண்டுமென்று தாயம்மாள் முன்னமே தீர்மானித்திருந்தாள்.

     அவர்களுடைய ஆட்டம் பாட்டமெல்லாம் ஒருவாறு ஓய்ந்த பின், சுப்பையா பிள்ளை மெதுவாக வந்து, வேலனைத் தட்டிக்கொடுத்தார்.

     “ஐயோ! என் புத்தியை என்ன சொல்லுவேன்!” என்றான் மதுரை, தன்னையே நொந்துகொண்டு. “நீங்க தயவு செஞ்சு மன்னிக்கணுங்க! எங்க சந்தோசத்துலே எல்லாம் மறந்திட்டோம் - வேலு, ஐயா யாரு, தெரியுமல்ல? (வேலன் தெரியுமென்று தலையை அசைத்தான்.) இந்த மவராசரு இல்லாட்டி, நாங்க ஒன்னை மீட்கறது ஏதப்பா! அவரு செஞ்ச ஒவகாரத்துக்கு, நாம் என்ன பண்ணினாலும் போதாது. ஐயாவைக் கும்பிடு, அப்பா, கும்பிடு.”

     வேலன், மிகவும் வணக்கத்துடன் கும்பிட்டான், சுப்பையா பிள்ளை அவனை ஆசீர்வதித்துச் சொன்னார்: “மதுரையின் பேச்சை நம்பாதே, வேலு. ஒருவரைத் தூக்கி வைக்கிறதுலே அந்த ஆளைப்போலக் கெட்டிக்காரன் யாருமில்லை. இதுலே, தான் படிக்காதவன்னு வேறே சொல்லிக்கிறான்; இன்னும் படித்திருந்தால் என்ன செய்வானோ!”

     “அந்த ஜர்ஜு ஐயாவைத் தொரத்திட்டு, அங்கே உக்காந்துடமாட்டாரு?” என்றான் ஒரு வாலிபன்.

     “பண்ணக்கூடிய ஆளுதான்,” என்றார் சுப்பையா பிள்ளை, புன்முறுவலுடன்: “சரி, இப்பொழுது நீங்களெல்லாம் எங்க வீட் டுக்கு வரணும். ஏதோ, எங்க கையாலே ஆனமட்டும் ஒரு சின்ன விருந்து உங்களுக்குச் செய்யணுமின்னு, வீட்டுலே என் சம்சாரம் ஏற்பாடு பண்ணிக்கொண்டு இருக்குது. சாமி புண்ணியத்துலே எல்லாம் நல்ல விதமாய் முடிஞ்சதுக்கு, நீங்களெல்லாம் ஒரு பொழுதாவது எங்கள் வீட்டிலே சாப்பிடவேணும்,” என்றார்.

     “ஆமாங்க, அம்மாளுக்குச் சங்கதி அதுக்குள்ளே எப்படித் தெரிஞ்சுது?” என்றான் மதுரை.

     “சொல்லியனுப்ப ஆளுதானா இல்லே?”

     “ஆகா! நான் என்னாத்தைச் சொல்வேன்!” என்று மதுரை, சுப்பையா பிள்ளையை உற்றுப்பார்த்தான்; அவன் கண்களில் விசுவாசம் கலந்திருந்தது. “அப்பா, வேலு! அடுத்த காரியம் நீ அம்மாவைப் பாத்து மருவாதி செய்யணும். அவுங்க மனசு தங்கம். பெத்த தாயி கூட அவ்வளவு அக்கறையாப் பாக்கமாட்டா - ஆமாங்க, இத்தினி பேருக்கு ஆக்கணுமே; அந்த அம்மாளாலே முடியுங்களா?” என்று மதுரை, சுப்பையா பிள்ளையை பார்த்துக் கேட்டான்.

     “அவள் சங்கதி உங்களுக்குத் தெரியாது. ஒரு காரியத்தைச் செய்து முடிக்கணுமின்னு தீர்மானம் செய்துட்டால், அதைச் செஞ்சே தீருவாள். அப்பொழுது, அவளால் ஆகாதது ஒண்ணுமேயிராது. நீங்கள் எல்லாம் என்பின்னோடு வராது போனால், நான் அழைக்கவில்லை யென்று என்மேல் சண்டைக்கு வருவாள். உங்களாலே ஆன உபகாரம், எங்க ரெண்டு பேருக்கும் சண்டை மூட்டி வைக்கணுமின்னால், செய்யுங்கள்,” என்றார் சுப்பையா பிள்ளை, வேடிக்கையாய். ஆனால், அவ்வேடிக்கையான பேச்சில் எவ்வளவு உண்மை இருந்ததென்று மதுரைக்கு மட்டும் நன்றாய்த் தெரியும்.

     “என்ன பேச்சுப் பேசுறீங்க! உங்களுக்கு மனசு நோவும்படி நாங்க செய்யத் துணிவமா? என்னாத்துக்கு அம்மாவை வீணாக் கஷ்டப்படுத்தணுமின்னு சொன்னேனேயொளிய, பின்னே என்னாங்க? நான் இனிமே வாயத் தெறக்கமாட்டேனுங்க, நீங்க எது சொன்னாலும் கேக்கத் தயாரா இருக்கேணுங்க,” என்றான் மதுரை.

     “இது நல்லவனுக்கு அடையாளம்,” என்றார் சுப்பையா பிள்ளை, புன்முறுவலுடன்: “இப்போ நாம் செய்யவேண்டிய முதல் வேலை, வேலுவை வீட்டுக்கு அனுப்பவேண்டியதுதான். வர்றவன் போறவனுக்கெல்லாம், அவனைப் பாத்தா வேடிக்கையா இருக்குது. ஒரு ஜட்கா வண்டி பேசுகிறேன்; வேலனும் நீங்கள் மூன்று பேரும் ஏறிக்கொண்டு, நேரா எங்கள் வீட்டுக்குப் போங்கள். நான் இருந்து, இவர்களை அழைத்துக்கொண்டு வருகிறேன்.”

     “இது நல்லா இருக்குதுங்க! நாங்க வண்டியலே போவுறது; நீங்க நின்னு வாரதா!” என்றான் ஆறுமுகம்: “என் பேச்சைச் செத்தக் கேளுங்க. நீங்க, வேலு, மதுரை, வீரப்பன் நாலுபேருமா வண்டியிலே போங்க. நான் இருந்து, இந்த மந்தையை இளுத்துக்கிட்டு வாரேன் - எனக்கு வளி தெரியாதா என்ன?” என்றான்.

     ஆறுமுகத்தின் இஷ்டப்படியே, சுப்பையா பிள்ளை ஒரு குதிரை வண்டியை அமர்த்தி, வேலன், மதுரை, வீரப்பன் சகிதமாய் வீட்டிற்குச் சென்றார்.


மண்ணாசை : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247