அத்தியாயம் 12. ஓர் எச்சரிக்கை

     வேலன் தன் புதுவேலையை வெகு திறமையாகச் செய்து வந்தான். முதலில் பிறர் ஏதாவது நினைப்பார்களோவென்று அவன் சங்கோசப்பட்டான். ஆனால், வரவர அந்த உணர்ச்சி மறைந்து, 'நாம் சுயமாகக் கஷ்டப்பட்டு நம் தாய் தந்தையரைக் காப்பாற்றுகிறோம்,' என்ற உற்சாகம் மேலிட்டது. இரண்டு வாரங்களுக்குள், வேலன் மற்றவர்களைவிட அதிகத் திறமையும் நாணயமும் உள்ளவனென்பதை அவன் முதலாளி கண்டுகொண்டான்; அவனுக்கு அதிகச் சம்பளம் கொடுத்து நிரந்தரமாக வைத்துக் கொள்வதாகவும் சொன்னான். இதைக் கேட்ட வேலனுக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது.

     ஒருநாள் பிற்பகல் சுமார் மூன்று மணி இருக்கும்; வாய்க்கால் கரையில் வேலன் இளநீர் குடித்துக்கொண்டிருந்தான். அவனைச் சுற்றிலும் குவியல் குவியலாய்த் தேங்காய்கள் விழுந்துகிடந்தன. வீட்டிற்குக் கொண்டுபோவதற்காக இரண்டு இளங்காய்களைக் காம்புகளினால் ஒன்றாகக் கட்டிக்கொண்டிருந்தான். அச்சமயத் தில், வீரப்பனும் மதுரையும் அவ்வழியே போவதைப் பார்த்தான். அவனுக்கு அவர்களைக் காண்பதில் இஷ்டமில்லை. ஆனால், அவர்கள் அவனைப் பார்த்துவிட்டதால், அவன் எழுந்திருந்து மரியாதை செய்ய வேண்டியதாயிருந்தது. தான் செய்துகொண்டிருக்கும் வேலையை எண்ணி முதலில் அவன் சிறிது கூச்சப்பட் டான். பிறகு, அவர்கள் தன்னிடம் பேசவந்த பொழுது, அவன் தன் நாணத்தை ஒருவாறு மறைத்துக்கொண்டான். சம்பாஷணையிலிருந்து, அவர்கள் தன் 'அப்பா'விடம் ஒரு முக்கிய விஷயத்தைப் பற்றிப் பேச அவசரமாகப் போவதாகத் தெரியவந்தது.

     அவர்கள் சென்றதும், வேலனுக்குப் பற்பல யோசனைகள் பிறந்தன. வெகு நாளாய் அவன் வீட்டுப் பக்கமே வராதவர்கள் இன்றைக்கு ஒன்று சேர்ந்து வரவேண்டுமானால், அதில் ஏதோ மர்மம் இருக்கவேண்டும். அதுவும் தவிர, அவர்கள் நடந்து கொண்டே இரண்டு மூன்று தடவை அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். அவனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களென்பதில் சந்தேகமில்லை. விஷயம் என்னவாயிருக்கும்? நல்லதொன்றும் இராதென்றமட்டில் வேலன் ஊகித்துக்கொண்டான். அவர்களைப் பின்தொடர்ந்து போகவேண்டுமென்று அவன் ஆத்திரப்பட்டான். அவன் வேலையும் முடிந்துவிட்டது. ஆனால் அவன் முதலாளி, காய்களையெல்லாம் வண்டிகளில் ஏற்றிவிட்டு வீட்டுக்குப் போகும்படி சொல்லியிருந்தான். அதற்குமுன் எப்படி அவ் விடத்தை விட்டு அகலுவது? ஆகையால், பல்லைக் கடித்துக் கொண்டு, கடைசிக் காயை வண்டியில் எடுத்துப் போடும்வரையில் அவன் தங்கினான். பிறகு, கட்டிவைத்திருந்த இளநீர்க் காய்களைத் தோளில் தொங்கவிட்டுக்கொண்டு, விரைவாக வீட்டுக்குச் சென்றான்.

     வீரப்பனும் மதுரையும் எந்தக் காரியத்தை உத்தேசித்து வந்தார்களென்பது, அவன் தாய்க்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், இருவருமாய்ச் சேர்ந்து 'அப்பா'வுக்குக் கடுங்கோபம் வரும்படி செய்துவிட்டுப் போய்விட்டார்களென்று மட்டும் அவள் சொன்னாள். காலதாமதம் செய்யாமல், வேலன் உடனே தன் ‘அப்பா’வின் அறைக்குச் சென்றான்.

     ‘அப்பா’வின் முகம் படபடப்பாயிருப்பதை அவன் பார்த்தான். அவன் வாயைத் திறப்பதற்கு முன்னமே ‘அப்பா’ ஆரம்பித்து விட்டான்: “வேலு, இப்படி ஒக்காரு. அந்தப் பயக, மதுரையும் வீரப்பனும் இப்பொத்தான் வந்திட்டுப் போனாங்க. என்னத்துக்கு வந்தாங்க தெரியுமா? நம்ப நெலத்தையெல்லாம் வித்திடணுமின்னிட்டு புத்தி சொல்லவாம்! யாருக்குத் தெரியுமோ? - அந்தக் கொசப்பட்டிக் கங்காணிப் பயலுக்கு. அவன் நம்மூரை யெல்லாம் வளச்சு வாங்கிட்டான். நம்முதையும் கட்டிக்கிணுமின்னு பாக்கறாப்போல இருக்குது. அதுவும் அவுங்க சொல்றதையல்ல நீ கேக்கணும்! நம்ம நன்மைக்காவத்தான் விக்கணுமாம்! மதுரை இவ்வளவு நன்னி கெட்டவன்னு நான் நெனைக்கல்லே. மீனாச்சி கிட்டே பணம் வாங்கச் சகாயம் பண்ணினான்; நெசந்தான். நான் இல்லேன்னு சொல்லல்லே. ஆனா, நான் எவ்வளவு செஞ்சிருக்கேன். அவனுக்கு ஏதுநாச்சும் நெஞ்சுலே ஈரம் இருந்தா, அவனே தெரிஞ்சிக்குவான். அட, அவனை உட்டுத் தள்ளு; எச்சிக்கலை நாயுங்க, எங்கே எச்சிக்கலை உளுதோ அங்கேதான் ஓடும். வீரப்பன் சங்கதியைச் சொல்லு. என் வவுத்துலே இருக்கிறதெல்லாம் அறிஞ்சவன் அவன் ஒருவன்தான். அவனே அவனோடு சேந்துக் கிட்டானே!”

     “மதுரை சொல்லிக்கொடுத்திருப்பாரு,” என்றான் வேலன்.

     “அது ஒண்ணும் இருக்காது. அவனுக்கே என்னமோ பிடிச்சுக் கிட்டுது. நெலத்தை விக்காட்டி ரொம்பத் துன்பப்படுவோமாம் - மடையன்! வித்தாக்க, என் மனசு என்ன பாடுபடும் என்கிறதை அவன் காணல்லியே! எங்க பாட்டாரு, ஊருக்கு அப்பாலே இருந்த ஒரு அரைக்காணி நெலத்தை, தம் பேச்சைக் கேக்காதே வித்திட்டாருன்னிட்டு, எங்க முப்பாட்டாரு சீதபேதி கண்டு செத்தாரு. தோட்டந் தொரவூன்னா சும்மாத்தானா? உயிருக்கு உயிரில்லையா? நம்ம ‘தாலிகட்டு’க்குப் போயிட்டா, அந்த மாமரங்க, ‘வா வா’ன் னிட்டு அளைக்கிறாப்போல் அல்ல இருக்குது! ‘நத்தக்காட்டு’க்குப் போனா, வாய்க்காலோரம் இருக்கிற மணல் திட்டுலே கொஞ்ச நேரம் ஒக்காரதே வரமுடியாதே. வேலி, வரப்புங்கூட நம்மெக் கண்டு பேசராப்பலே இருக்குதே. இதெல்லாம் மடையன்களுக்குத் தெரியமா? - துன்பப்படணுமாம், துன்பம்! பட்டா என்ன குடி கெட்டுப்போச்சு? வேலு, இப்போ சொல்றேன் பாரு, நம்ப நெலங்களெல்லாம் நம்ம கிட்டே திரும்பி வந்திடுது - ஆமாம், அங்கிருந்துதான் பணம் வருது. ஆமாம்! அவன்கிட்டே இருந்து தான். சந்தேகமில்லை! - ஆனா, நான் அவனைப் பார்க்கமாட்டேன்,” என்று கூரையைப் பார்த்தபடி ஆள்காட்டி விரலை ஆட்டிக் கொண்டு, தனக்குத்தானே பேச ஆரம்பித்தான் வெங்கடாசலம்.

     வேலனுக்கு சிறிது பயம் ஏற்பட்டது.

     “வளியிலே போறவங்க எதுநாச்சும் சொன்னா, அதுக்கா நாம் நொந்துக்கறது? ஒதச்சுத் தள்ளுங்க, அப்பா. ‘ஒங்க யோசனையும் வேணாம், நீங்களும் எங்க ஊட்டண்டே வரவேணாம்’ இன்னிட்டு, அவுங்களைக் கண்டு நான் சொல்லிடுறேன்,” என்றான் வேலன்.

     “அப்படியே சொல்லு. அந்தப் பொளப்பத்த பயக இனிமே இங்கே வரத் தேவிலே.”

     “அம்மா ஆப்பம் சுடுறாங்க. ரெண்டு கொண்டாரட்டுமா?”

     “வாணாம். அது நெஞ்சிலியே நிக்கிது. ஆனா, சரிப்பட்டா கொஞ்சம் பொரி வாங்கியாந்தின்னா, படுத்தவாக்கிலே கொறிச்சுக்கிட்டு இருப்பேன்,” என்று வெங்காடசலம், தன் மனம் படும் கஷ்டத்தை மூடிவைக்க முடியாமல் சொன்னான்.

     தன் ‘அப்பா’வுக்குப் பொரியே ஒரு தின்பண்டமானதைப் பற்றித் துக்கித்து, வேலன் உடனே கடைக்குச் சென்று அதை வாங்கிக் கொடுத்தான். ஆப்பங்கள் சுடச் சுட இருந்தன. வேலன் தின்பதற்கு ஆசைப்பட்டான். ஆனால், அலமேலு அவனுக்குப் பரிமாற வில்லை.

     “கொஞ்சம் பொறு. வள்ளி தேன்பாகு கொண்டு வருவா; போட்டுக்கிட்டுச் சாப்பிடலாம்.”

     “அவ இப்போ வருவான்னிட்டு ஒனக்கு எப்படித் தெரியும்? - அவ காலு சரியாப்போச்சா?”

     “ஒ, அப்பவே சரியாப் போச்சே. அவ இப்போ வாரேன்னு சொன்னாள். அவளும் அவுங்கம்மாவும் காலம்பற வந்து, ரொம்ப நாளி பேசிக்கிட்டு இருந்தாங்களே.”

     “அது என்னாது! ஆச்சரியமா இருக்குதே. நீ இந்நேரம் எங்கிட்டச் சொல்லல்லியே!”

     “என்னமோ, வேலையிலே மறந்திட்டேன். அது... வள்ளிக்கும் மல்லனுக்கும் கண்ணாலம் நிச்சயமாயிட்டுதாம். எல்லாம் நல்ல வளியா நடந்தா, இந்த மாசக் கடைசியிலே முடிஞ்சிடுமாம்...”

     “அதுக்குள்ளாரவா? - ஏன் எல்லாம் நல்லபடியா நடக்காதெ என்ன?”

     “கண்ணாலத்துலேமுட்டும், தாலி கட்றவரையிலும் எதுவுஞ் சொல்ல முடியாது. இந்தச் சேதி சொல்லத்தான் லச்சுமி வந்தா; அப்படியே எனக்கும் கொஞ்சம் கண்ணைத் தொடைச்சிட்டுப் போனா.”

     “ஒன் கண்ணைத் தொடைப்பானேன்?” என்றான் வேலன், உதட்டைக் கடித்துக்கொண்டு.

     அலமேலு பெருமூச்சு விட்டாள். “ஒரு காலத்துலே, ஒனக்கும் அவளுக்கும் கண்ணாலம் பண்ணிடறதூன்னிட்டுப் பேசிக்கிட்டோம். இந்தக் கதிக்கு வருவோமின்னு, கனவுலேகூட நெனைக் கில்லையேடா, என்னப்பா!” என்று அவள் பல பல வென்று கண்ணீர் விட்டாள்.

     “என்ன பயித்தியம் அம்மா, நீ! நாம் என்னா கதிக்கு வந்துட்டோம்? நாம் எப்படி ஆவறோம் பார். இதுக்கா அளுவறது?” என்று வெகு அன்புடன் அவள் கரங்களைத் தடவிக்கொடுத்தான்.

     “ஆவறது ஆவட்டும். ஆண்டவன் ஆணையில்லாட்டி, ஒண்ணும் நடக்காது. ஆனா, எனக்கு என்னா பொறுக்கமாட்டிலே யின்னா, வள்ளியோடே நடத்தைதான். அவளுக்கு என்னா சந்தோசம் அவனைக் கட்டிக்கிறதுலே! கூடை கூடையாக நகையிருக்குதாம். அதைப்பத்தி என்ன பெருமை அடிச்சுக்கறா!”

     “அதுலே என்ன ஆச்சரியம், அம்மா? பொம்பளெங்க எல்லாம் அப்படித்தான்; அவுங்களுக்கு நகைதானே வேணும்?”

     “ஆமாண்டா, ஒனக்கு ரொம்பத் தெரியும்!” என்ற அலமேலு சொல்லிக்கொண்டிக்கும் பொழுதே, வள்ளி ஒரு சட்டி தேன்பாகுடன் வந்து சேர்ந்தாள். அவள் முகத்தில் ஆரோக்கியமும் லாவண்யமும் பிரகாசித்தன.

     “இதோ, ஒங்களுக்கெல்லாம் நல்ல தேன்பாகு கொண்ணாந்திருக்கேன்,” என்றாள் வள்ளி, சிரித்த முகத்துடன்.

     “சரி, இப்போநாச்சும் ஆப்பத்தைக் கொண்டாம்மா. என்ன தீஞ்ச நாத்தம் வருதே. அடுப்பிலே அப்படியே வச்சிக்கிட்டு வந்திட்டாயா? - பாரு பாரு,” என்று அலமேலுவைச் சமையலறைக்குத் துரத்திவிட்டு, அவள் முதுகு மறைந்ததும், வேலன் வள்ளியை முத்தமிட எத்தனித்தான். ஆனால், அதற்கு வள்ளி இடம்கொடுக்க வில்லை.

     “சும்மா இரேன்; உன்னாலேயே காரியமெல்லாம் கெட்டுடும் போல் இருக்குதே,” என்று வள்ளி அவனைச் சற்றுக் கண்டித்தாள்.

     “ஒரு சமாசாரம் இருக்குது; அத்தையை மொள்ள எங்கூட்டுக்கு அனுப்பிச்சிடுறேன் - என்ன அத்தே, ரொம்ப தீஞ்சு போச்சா!” என்று, அலமேலு சமையலறையிலிருந்து வருவதைப் பார்த்துக் கேட்டாள்.

     “ஒண்ணும் ஆவல்லை. இதோ, சுடச்சுடக் கொண்டாந்திருக்கேன். வேணத்தை சாப்பிடுங்க,” என்று அலமேலு சொல்லிக் கொண்டே, அவர்களுக்கு ஆப்பங்களைப் பரிமாறி, அவற்றின் மேல் தேன்பாகையும் ஊற்றினாள்.

     “அத்தே, எங்கம்மா ஒன்னைச் சட்டுனு வரச்சொன்னாங்க. ரெண்டு மூணுவகை ஊறுகாய் பண்ணிக்கிட்டு இருக்கா, அதுக் கெல்லாம் நீ வந்துதான் உப்புக்காரம் போடணுமாம்.”

     “கண்ணாலத்துக்காங் காட்டியும்?”

     “அதைக் கேக்கணுமா, அத்தே?” என்றாள் வள்ளி புன்னகையுடன்.

     “வேலு, வள்ளிக்கும் மல்லனுக்கும் அடுத்த மாசம் மூணாந்தேதி வாக்குலே கண்ணாலம், தெரியுமல்ல?”

     “அதுக்குள்ளறவா! இன்னும் எட்டுநாள்கூட இல்லையே. கண்ணாலம் என்கிறது ஊரெல்லாம் தெரிஞ்ச சங்கதிதான். ஆனா, அவ்வளவு சட்டுனு முடிஞ்சிடுமின்னு நான் நெனைக்கல்லே,” என்றான் வேலன்.

     “கண்ணாலமானா என்ன அத்தே? நான் மாறிடுவேனா? கொளந்தப்போ இருந்து ஒங்கமேலே எல்லாம் பிரியமா இருந்திட்டு, இப்போ மட்டும் வேறே ஆவனா? நீங்க அப்படி ஆவீங்களோ என்னமோ! நான் செத்தாலும் எப்பவும் போலத்தான் இருப்பேன்.”

     அலமேலு விழித்தாள். அவள் மூளையை இழந்துவிட்டது போலக் காணப்பட்டாள்.

     “என்ன அத்தே, முளிக்கிறே?” என்றாள் வள்ளி, விஷமத்துடன்.

     “ஒண்ணும் இல்லேம்மா. இந்தக் காலத்தவங்க சங்கதியே, எனக்கு ஒண்ணும் விளங்கல்லே. எங்க நாளெல்லாம் - அது ஒரு போக்கு. கண்ணாலத்தைப் பத்தி நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு அசட்டையாய்ப் பேசுறீங்களே!”

     “ஐயோ, அத்தே! அப்பாவி நீ!” என்று சொல்லிக்கொண்டு வள்ளி, கையை அலம்பி அலமேலுவைக் கட்டிக்கொண்டாள்.

     “போனால் போவுது; நீ எங்கூட்டுக்குச் சட்டுனு போ. இல்லாட்டி, எங்கம்மா என்னைத் திட்டுவா. எந்திருச்சுப் போயேன்; போ,” என்று வள்ளி வற்புறுத்தினாள்.

     “என்ன இவ்வளவு அவசரம், அடுப்பைக் கிடுப்பை அணைக்க வேண்டாமா? எல்லாத்தையும் போட்ட இடத்திலே போட்டுட்டா போவச் சொல்றே?”

     “அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ போ, அத்தே. எங்கம்மா முன்னெப்போல இல்லே. எடுத்ததுக்கெல்லாம் என்னைத் திட்றா. அவளுக்குப் பயம், நான் எங்கே மல்லனைக் கட்டிக்கமாட்டே னோன்னிட்டு. அவ, ஒண்ணும் இல்லாத்துக்கெல்லாம் பயந்துக் கிட்டா, நான் என்னா செய்யறது? அவன் ஊருக்கெல்லாம் பணக் காரனிங்கிறது எனக்குத் தெரியாதா? அவனைக் கட்டிக்கிட்டாச் சொகமா இருக்கமாட்டேனா? நான் என்ன அவ்வளவு புத்தி கெட்டவளா? எங்கம்மாவுக்கு எனக்கு ஒண்ணும் தெரியாதின்னிட்டு நெனைப்பு. அது போவுது; நீ எந்திருச்சிப் போயேன். நீ எனக்குத் திட்டு வாங்கி வெக்கணும்னு பாக்குறே. எந்திரி, போ போ,”என்று அலமேலுவை இமிசைப்படுத்தி துரத்திவிட்டாள்.

     “ரொம்பக் கத்துக்கிட்டெயே,” என்றான் வேலன், சிரித்துக் கொண்டு.

     “கத்துக்காட்டி, என்ன பண்றது? இன்னும் ரொம்ப நாளைக்கு நாம் ஒத்தரை ஒத்தரு காணமுடியாது.”

     “ஏன்?”

     “அந்த மூளிக்கண்ணுப் பயல், நான் இங்கேயும் அங்கேயும் அலையக்கூடாதுங்குறான்னா; அதுவும் ஒங்க ஊட்டுக்கு வரவே கூடாதாம்! அவனைச் சமாதானப்படுத்தறதுக்கு, எங்கம்மா ஊட்டைவிட்டே நகரக் கூடாதுங்குறா. அந்தச் சோனிப்பய இப்பவே என்னை அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிட்டான்; நல்லாருக்குதில்லை? அவன் முப்பாட்டன் பொறந்து வந்தாக்கூட, அவன் எனக்குத் தாலிகட்ட மாட்டான்னிட்டு, அவன் கண்டுக்கல்லே! இன்னொரு சங்கதி. நான் கொஞ்ச நாளைக்கு ஒரு அறையிலே பூந்துக்கிட்டு, உள்பக்கம் தாப்பாப் போட்டுக்கப் போறேன்; சிரிக்காதே. எல்லாத்தையும் கேளு. எங்கப்பாவுக்கு ஒரு தங்கச்சி இருந்தாங்களாம். அந்த அம்மாவுக்கு, கணணாலத்துக்கு மொத நாள் பயித்தியம் பிடிச்சிப்போச்சாம். நான் அந்த அம்மாவைப் பாத்ததே இல்லை. நான் பொறக்காத்துக்கு முந்தியே செத்துட்டாங்களாம். நான் அந்த அம்மாவைப் போலையே இருக்கேனாம் - அப்போ, என் கண்ணாலத்தும்போது, எனக்கு மட்டும் ஏன் பயித்தியம் பிடிக்கக்கூடாது? ஒரு குடும்பத்துலே பயித்தியம் இருந்தா, அது ஆருக்காவது வந்துக்கிட்டு இருக்குமாமே - நீ சிரிச்சாச் சிரி - நான் அப்படித்தான் செய்யப்போறேன். இல்லாட்டி, தாலி கட்டாமெ இருக்கிற வளி வேறொண்ணும் எனக்குத் தெம்பிடுல்லே.”

     “வயித்தியம் பண்றமின்னு, ஒன்னை அடிச்சுப் பிடிச்சாங் கோன்னா, என்ன செய்வே?” என்றான் வேலன்.

     “என்னைத் தொடமாட்டாங்கா. எங்கப்பா உட்டுடுவாரா? என் மேலே கையை வச்சா, கொன்னுடமாட்டாரு? நான் மட்டும் சும்மாயிருப்போனா? ஆட்டி வெச்சுடமாட்டேன்! நீயும் வேணும்னா வந்து வேடிக்கையைப் பாரு,” என்று பகபகவென்று சிரித்தாள்.

     “இன்னொண்ணுகூட ஒன்கிட்டச் சொல்லணுமின்னு வந்தேன் - மீனாச்சி ஒனக்கு விரோதமா என்னமோ பண்ணிக்கிட்டு இருக்கா. எங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் அது தெரியும்போல் இருக்குது. எந்நேரமும் குசுகுசுன்னு ரவசியம் பேசிக்கிறாங்க. என்னைக் கண்டா, பேச்சை நிறுத்திடறாங்க. அதைப் பத்தி அடிக்கடி சண்டைகூடப் போட்டுக்கறாங்க. மதுரையும் மீனாச்சியோடே கலந்துகிட்டாப்போலே இருக்குது. அதனாலே, நீ ரொம்ப சாக்கிரதையா இருக்கணும். எதுநாச்சும் முத்திப்போனா, அத்தெகிட்டே சங்கதி சொல்லி யனுப்பு - அத்தெ எங்கூட்டுக்கு அடிக்கடி வரும்படி நான் பாத்துக்கறேன். எனக்கு எதுநாச்சும் தெரிஞ்சுதுன்னா, நானும் சொல்லியனுப்பறேன். அத்தைக்கு இந்தச் சமாசாரமெல்லாம் தெரியவேணான்னு பாத்தேன். ஆனா, இப்போ அந்த அம்மாளையும் கைக்குள்ளே போட்டுக்காட்டி, காரியம் நடவாது. சாமி இருக்காரு, பாத்துக்கலாம்!”

     “நம்மை ஒண்ணாச் சேத்துவச்ச சாமிக்கு நம்மைக் காப்பாத்தத் தானா தெரியாது?” என்று சொல்லிக்கொண்டே, வேலன் மறுபடியும் வள்ளியை முத்தமிட முயன்றான். வள்ளி தலையை அசைத் துக்கொண்டு,

     “வேல், நீ வர வர ரொம்பத் துடுக்கா இருக்கே. கண்ணாலம் ஆவாதே, முத்த... தீண்டவே கூடாது,” என்றாள்.

     “ஐயோ பயித்தியமே! முத்தங் கொடுத்தாத் தப்பா? நீ ஆரு? நான் ஆரு? ஆருநாச்சும் சிரிக்கப்போறாங்க. சாமியாலே கூட ஆவாதே நம்மைப் பிரிக்கறதுக்கு, வாள்ந்தா ஒண்ணா வாளலாம்; செத்தாலும் ஒண்ணாச் சொல்லியபடியே சாவலாம்,” என்று வேலன் அவளை ஆலிங்கனம் செய்துகொண்டான். வள்ளியும் அவன் அபிப்ராயத்தைச் சம்பூர்ணமாக அங்கீகரித்தாள்.


மண்ணாசை : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22