14

     யாருடைய வருகைக்கு முன் தன் காரியத்தை முடித்துக் கொள்ள நாகம்மாள் எண்ணியிருந்தாளோ, எவருக்கு செய்தி எட்டுமுன்பே எல்லாவற்றையும் தீர்த்துக் கொள்ள ஆலோசித்தாளோ, எந்த முகத்தைக் காணுமுன்பே பிரிந்து விட நினைத்தாளோ, அந்த முகம் இன்று பிரசன்னமாகிவிட்டது. சின்னப்பனுடைய மாமியார் ஊரிலிருந்து வந்திருந்தாள். அந்த அம்மாள் தான் இவ்வளவு கசப்புக்கும் காரணம். அவளே இக்கிளர்ச்சியை முதலில் கிளப்பி விட்டவள்.

     போன வருஷத்தில், மகளைப் பார்த்து விட்டுப் போக வந்திருந்தவள், பேச்சு வாக்கில் கெட்டியப்பனிடம், “ஊருக்குள்ளே கட்சி வரவரப் பலப்பட்டுக்கிட்டு வர்றதாமே” என்றாள். அப்போதெல்லாம் கெட்டியப்பன் அடிக்கடி வீட்டுக்கு வருவது கிடையாது. எப்போதாவது ஒரு நாள் வருவான். சின்னப்பனிடம் வெளியிலிருந்து பேசிவிட்டுப் போய்விடுவான். அவன் அடாவடிப் பேர்வழி தான். கவைக்காகாதவன் தான். இருந்தாலும் இரண்டு கட்சிக்கும் பொதுவாக நடந்து கொள்வதில் விருப்பமுள்ளவன். இல்லாவிட்டால் இரண்டு இடத்திலும் செல்வாக்குப் பெற முடியாதல்லவா? இப்படிப்பட்ட ஆளைத் தன் மருமகன் கட்சியில் சேர்த்தி விடச் செய்த முயற்சியின் விளைவுதான் இது. கெட்டியப்பன் இதைப் பயன்படுத்திக் கொண்டு, “நான் இருக்கும் போது எந்தப் பயல் வாலாட்டுவான். நீங்க கவலைப்பட வேண்டியதில்லை” என்றான். காளியம்மாள் “அதாங்கேட்டேன். நீங்கல்லாம் இவ்வளவனுசரணையா இல்லாட்டி இருக்கிற பூமியை வித்திட்டு மகளையும், மருமவனையும் என்னோடு இட்டுச் செல்லலாமென யோசிச்சேன். பாவம்! ஒண்டிக்காரனை இத்தனை கசக்கு முசக்குக்குள்ளே ஏன் தனியாக விட்டு வைக்கோணும்? நான் இருக்கவே இருக்கிறேன். அங்கு பண்ணையும் பாய்ச்சலையும் பார்த்துக்கிட்டுப் பையனுக்குத் தொணையாக இருப்பாங்களேன்னு பாத்தேன்” எனத் தொடர்ந்து பேசினாள்.

     கெட்டியப்பனும் சமயம் பார்த்து, “நாகம்மாள் சங்கதி என்ன?” என்றான்.

     “அவளுக்கென்ன வந்துவிட்டது. இருந்தால் வீட்டைக் காத்துக்கிட்டு இங்கிருக்கிறாள். இல்லாது போனா அங்கதான் வரட்டுமே. இனி அவளுக்கென்ன? சாகிற வரையிலும் சோறும், சீலையும் தானே. குழந்தை பெரிசானால் சித்தப்பன் இருக்குறாங்க, கலியாணம் காட்சி எல்லாம் பார்த்துக்கறாங்க. இங்கென்ன பத்துக் குழந்தையா இருக்குது?” என்றாள்.

     கெட்டியப்பனுக்கு அப்போது தோன்றிய யோசனைதான் நாகம்மாளைப் பங்கு கேட்கத் தூண்டிவிட்டு இவ்வளவு தூரத்திற்கு வந்திருக்கிறது.

     தன்னுடைய தாயார் ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்றால் எந்தப் பெண்ணுக்குத் தான் சந்தோஷம் இல்லாமலிருக்கும்? ராமாயி சிரிப்பும் விளையாட்டுமாய் பூரித்துப் போனாள். குழந்தையை எடுத்துக் கொஞ்சுவாள். அதே சமயம் மேல் உலைத் தண்ணீரை எடுத்துப் புளி கரைத்துக் கொள்ளுவாள். வாசலுக்குப் போவாள். வீட்டிற்குள் வருவாள். அப்படியே தன் தாயாரிடம் தொட்டதும் விட்டதுமாய் இரண்டொரு வார்த்தை பேசிக் கொள்வாள். இப்படியாக உற்சாகத்திலே தேக்கித் திளைத்துக் கொண்டிருந்தாள் ராமாயி. ஆனால் நாகம்மாளோ மூன்றாவது மனுஷியைப் போல ‘வாங்க’ என்று கேட்டதைத் தவிர வேறு வார்த்தையே வைத்துக் கொள்ளவில்லை!

     என்னவோ பெரிய வியாதி வந்து விட்டவளைப் போல பெரிய துப்பட்டியை எடுத்துப் போர்த்தி ஒரு மூலையில் படுத்துக் கொண்டாள். ராமாயி “சாதத்துக்கு என்ன போடறது அக்கா?” என்று பலதடவைக் கேட்ட பிறகு, “என்னைக் கட்டையிலே வைச்சிருந்தா யாரைப் போய் கேப்பாய்?” என்று கடிந்து மொழிந்தாள்.

     இந்த வார்த்தைகளைப் பாதி கேட்டும், கேட்காதவள் போல, விஷயம் விளங்காத காளியம்மாள், “உடம்புக்கு ஒண்ணுமில்லையே” என்று நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். சௌக்கியமாய் இருக்கிற தேகத்தில் என்ன தெரியும்? எப்போதும் போலவே தான் உடம்பு இருந்தாலும் காளியம்மாள், “கொஞ்சம் கனகனப்பாயிருக்கிறாப் போலிருக்கிறது. வட்டச்சேறை கொத்தமல்லியைப் போட்டு கசாயம் வச்சுக் கொண்டு வரட்டுமா?” என்றாள்.

     “எனக்கு ஒரு பண்டிதமும் வாண்டாம்” என்று ஒரே பேச்சில் சொல்லிவிட்டு நாகம்மாள் இழுத்துப் போர்த்திக் கொண்டாள். காளியம்மாளுக்கும் விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கிற்று. அதற்குள் ராமாயி தன் தாயாரின் கையைப் பிடித்து வெளியே கூட்டி வந்து, “இந்த ரண்டு மாசமா இந்தக் கூத்துத்தான். இன்னம் சங்கதியெல்லாம் கேட்டா, நீ இங்கே பச்சைத் தண்ணி கூட வாயில் ஊத்தாமல் இப்போதே போயிடுவாய்” என்று தன் தாயாரிடம் சொன்னது, நாகம்மாள் காதிலும் லேசாகப் பட்டிருக்க வேண்டும். அதனால் தானோ என்னவோ போர்வையை எடுத்து எறிந்து விட்டுக் களைக் கொத்தையும் கூடையும் எடுத்துக் கொண்டு, “புல்லுக்குப் போறேன், நீ அப்படியிப்படி வீட்டுக்கு வெளியில் கால் எடுத்து வைத்திடாதே” என்று தன் மகளை எச்சரித்துவிட்டுப் புறப்பட்டாள்.

     “இதென்ன நோவம்மா! வந்தபடியே போயிட்டுதே. ‘திப்புத் திப்புனு’ புல் கொண்டாரப் போறாளே!” என்று காளியம்மாள் ஆச்சரியப்பட்டாள்.



நாகம்மாள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27