4

     எண்ணெய் நிறைய இருந்தும் ‘காற்று’ குறைந்து விட்டதால் ‘கேஸ்லைட்’ கொஞ்சம் கொஞ்சமாக உயிர் விட்டுக் கொண்டு வந்தது. பிரகாசமாக வெளிச்சம் அடித்துக் கொண்டிருந்த அந்த விளக்குக்கு என்ன நேர்ந்து விட்டதோ? இனி ‘லைட்டுக்காரனை’க் கூப்பிட்டுத்தானே அதை ‘ரிப்பேர்’ செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த மாதிரி விளக்குகளைக் கண்டிருக்கிறார்களே ஒழிய பாவம் அவர்களுக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. யாராவது சிறு குழந்தைகள் விளக்கருகில் சென்றாலும், அவர்கள் அதட்டுகிற அதட்டலில் குழந்தைகள் நடுநடுங்கிப் போய்விடும். நாலு நாளைக்கு வாடகைக்கு வாங்கி வருவார்கள். கூடவே விளக்கைக் கொளுத்த, அணைக்க ஒரு ஆளையும் கையோடேயே கூட்டி வந்து விடுவார்கள். இந்த விசித்திர வேடிக்கைகளைப் பிரமாண்டமான கூட்டம் கண்டுகளிக்கிறதே! ஆனால் அந்த விளக்குக்காரன் எங்கே?

     அவன் எந்த வீட்டுத் திண்ணையில் படுத்துத் தூங்குகிறானோ? ஊர்ப் பண்ணாடி தீவட்டிக்காரனைக் கூப்பிட்டவுடன், அரைத் தூக்கத்திலிருந்த ராமவண்ணான் ஒரு பந்தத்தைக் கொளுத்திக் கொண்டு ஓடி வந்தான். அவன் தலைமயிர் அந்த வெளிச்சத்தில் சிவப்பு வர்ணம் பூசியிருப்பது போல் தெரிந்தது. அடிக்கடி கையில் தொங்க விட்டிருக்கும் கலயத்திலிருந்து எண்ணெயைக் கரண்டியில் எடுத்துவிடும் போதெல்லாம் தன்மேலும் சிந்திக் கொண்டான். சற்று நேரத்திற்கு முன் அங்கு காணப்பட்ட உற்சாகம் கொஞ்சம் சோபை குன்றிவிட்டது. ஊர்ப் பண்ணாடி உத்திரவிடவும், நாலைந்து பேர்கள் லைட்டுக்காரனைக் கூட்டி வர நாலு திக்குகளிலும் ஓடினார்கள். அப்போதுதான் நிலவு வெளிக்கிளம்பி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. மங்கலாக இருண்டிருந்த வழிகளில் அவர்கள் வேகமாகச் செல்லும் போது தட்டுத் தடுமாறிக் கொண்டே ஓடினர். வீட்டுத் திண்ணையில் பகல் பூராவும் துணி துவைத்த சலிப்பில் வீராயி தூங்கிக் கொண்டிருந்தாள். பண்டிகை நாளானதால் ஏராளமான வேஷ்டியும் புடவையும் அலசி, அலசி எடுத்து அவள் இடுப்பு முறிந்திருந்தது. அந்த ஆயாசத்தோடு அவள் அயர்ந்து தூங்கும் போது ஒரு சிறுவன் ஓடி வந்து ‘தடதட’வென்று அவளைத் தட்டி எழுப்பினான். “சீக்கிரம் வா, விளக்குப் போச்சு” என்று அவசரமாக அந்தச் சிறுவன் சொல்லவும், அலறி அடித்துக் கொண்டு அவள் எழுந்தாள். அவள் முகத்தைக் கண்டதும், சிறுவன் பெரிய ஏமாற்றத்தோடு திரும்பி வேகமாக நடக்கையில் வாசலில் அடித்திருந்த முளை தடுக்கிவிடவும், கரணம் போட்டுக் கொண்டு வீதியில் விழுந்தான். இந்த விதமாக அந்த இரவு லைட்டுக்காரனைத் தேடப் போனவர்களுக்கு நேர்ந்த விபத்துகள் எவ்வளவோ!

     கடைசியாக பாதித் தூக்கத்திலும், முழுத் தூக்கத்திலும் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த முக்கால்வாசிப் பேர்களை எழுப்பியான பிறகு லைட்டுக்கார நடராசனைக் கண்டுபிடித்து விட்டார்கள். நடராசனுக்கு முதலில் இவர்கள் சொல்வது ஒன்றுமே புரியவில்லை. ஆனால் கண்ணைத் துடைத்துக் கொண்டு, “உடைந்து விட்டதா?” என்றான். அவர்கள் சொல்வதிலிருந்து லைட்டுக்கு என்ன நேர்ந்து விட்டது என்று அவனால் ஊகிக்க முடியவில்லை. பின்னர் அவன் கோவிலுக்கு வந்து சேர்ந்த போது கூட்டம் முக்கால் வாசிக்கு மேல் கலைந்துவிட்டது. பந்தம் பிடிப்பவன் கீழே உட்கார்ந்திருக்கும் நடராசனை சுட்டுவிடுபவன் போல் பந்தத்தைச் சாய்த்துப் பிடித்துக் கொண்டிருந்தான். அதிலிருந்து கிளம்பும் எண்ணெய்ப் புகையை அவனால் சகிக்க முடியவில்லை. சற்று நேரத்தில் ‘கேஸ்’ ஏற்றவும் பழையபடி வெளிச்சம் வீசியது.

     அடுத்த நாள் புதன்கிழமை ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ‘கிண், கிண்’ என்று நெல் குத்தும் மனோகரச் சத்தம்; கோவிலுக்கும் வீட்டிற்கும், வீட்டிற்கும் கோவிலுக்கும் ஜனங்கள் ஓயாமல் நடந்து கொண்டிருந்தார்கள். அன்று ஒரு தோட்டத்திலும் ஏற்று இறைப்பதைக் காணோம். ஏன், தோட்டத்திற்கு யாருமே போவதைக் காணோம். ஏதாவது வாழைக்காய், வாழை இலை, மிளகாய், இளநீர் வேண்டுமானால், கொண்டுவரத் துள்ளிப்பாயும் இரண்டொரு சிறுவர்களே தோட்டத்துப் பாதையில் காணப்பட்டார்கள். மாரியம்மன் பண்டிகைக்காக முறுக்கு, மிட்டாய்கள், வெற்றிலை பாக்கு, சூடம், சாம்பிராணி கடைகள் பக்கத்தூரிலிருந்து செட்டியார்கள் கொண்டு வந்திருந்தார்கள். பொரிகடலைக் கடைகள் தான் அதிகம் வந்திருந்தது. ஒரு வளையல்காரன் “அம்மா வளையல் வளையல்” என்று கத்திக் கொண்டே ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தான். கோவில் முன்னால் கருங்கல் அடுப்புகள் அநேகம் தயாராயிருந்தன. அவைகளின் மீது அழகான புது மண் பாத்திரங்களில் சாதம் கொதித்துக் கொண்டிருந்தது.

     அதோ, வெண்கலத் தொனியில் ஒரு பெண் பேசுவது கேட்கிறதே, அது யாரது? அந்தப் புடவைக்கட்டிலிருந்தும், பாய்ச்சல் நடையிலிருந்தும் நாகம்மாளாகத்தான் இருக்கவேண்டுமென்று ஊகித்துக் கொண்டிருப்பீர்கள். ஆமாம், நாகம்மாள் தான். சுளிக்கும் மின்னல் போல அங்குமிங்கும் திரிந்து கொண்டிருக்கிறாள். சற்றைக்கொருதரம் ராமாயியிடம் வந்து “கல்லைச் சரியாகத் தள்ளி வை. கரண்டியை அந்தப் பக்கம் வைக்காதே; குழந்தையைப் பார்த்துக் கொள், அடுப்பண்டைப் போகப் போகுது” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். ராமாயிக்கு இதெல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. கஷ்டப்பட்டுக் கஷாயம் குடிக்கும் குழந்தையைப் போலப் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள். சில சமயம், “எனக்கே இதெல்லாம் தெரியும்” என்பாள். உடனே நாகம்மாளுக்குப் பிரமாதமாகக் கோபம் வந்து விடும். “அப்படியா, இதோ நான் போய்விடுகிறேன்” என்று நாலு எட்டு வைத்துவிட்டுத் திரும்பி, “உனக்காக நான் போய்விட்டால், பின்னே என்ன இருக்குது?” என்று நின்று கொண்டு உருட்டி விழிப்பாள். அங்கு கடல் ஒலிபோல் முழங்கும் அத்தனை கதம்பம் குரல்களையும் ராமாயினால் சகித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க முடிந்தது. ஆனால் கெட்டியப்பன் அங்கு செய்யும் அட்டகாசங்களை அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. காட்டு ராஜா போல கண்களை எதற்காக அவ்வளவு சிவப்பாக்கிக் கொண்டிருந்தானோ? பெருங்காற்றைப் போல கும்பலில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான். ஒரு கடைக்காரனை அந்த இடத்தில் சாமான் விற்கக் கூடாதென்பான். ஒரு புறம் கட்டியிருக்கும் தோரணத்தைப் போய் அறுத்து விடுவான். எங்காவது ஒரு மூலையில் யாராவது ஒரு சக்கிலிப் பெண் கல் அடுப்புக் கூட்டி அப்போதுதான் நெருப்பு மூட்டுவாள்; இவன் பார்க்காதவன் போல காலால் உதைத்துக் கொண்டே செல்வான். இதையெல்லாம் பார்த்து ராமாயி, “பகவானே அவனுக்குக் கூலி கொடுப்பார்” என்று சும்மாயிருந்தாள். ஆனால், அவன் தன் பாத்திரங்களை கேட்காமல் எடுத்துக் கொள்வதும், திடீரென்று எங்கோ போய் பஞ்சாமிர்தம், பழங்கள் கொண்டு வருவதும், குழந்தையை எடுத்துக் கொண்டு கொஞ்சுவதும் அவளுக்குப் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் மேலாக அவனது ஆட்டபாட்டங்களைக் கண்டு, நாகம்மாள் ஆனந்தப்பட்டுக் கொண்டு அவனிடம் பேசுவதையும் சிரிப்பதையும் காணக்காண ராமாயிக்கு கோபமும் வெட்கமும் பொங்கிக் கொண்டு வந்தது. ‘இந்த மாதிரி பொண்ணும் உலகத்தில் இருப்பாளா? என்ன மான ஈனமில்லாச் செய்கை’ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டாள்.

     மாலை நான்கு மணிக்குப் பூஜை முடிந்து யாவரும் பொங்கலோடு வீடு திரும்பினர். குழந்தை முத்தம்மாளை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு இன்னொரு கையில் சாமான்களிருந்த கூடையைத் தலையில் வைத்துக் கொண்டு ராமாயி வீட்டிற்குப் புறப்பட்டாள். அதே சமயம் கோவிலுக்குப் பின்புறத்தில் நாகம்மாள் கெட்டியப்பனுக்கு என்னவோ மடியிலிருந்து எடுத்துக் கொடுத்தாள். அதைக் கண்டு முகத்தைச் சுளித்துக் கொண்டு ராமாயி வேகமாக நடந்தாள்.



நாகம்மாள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27