உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
6 அடுத்த நாள் காலை அமைதி கலைக்கப்படுவதற்கு முன்பே சின்னப்பன் கலப்பையைத் தோளில் சாத்திக் கொண்டு தோடத்திற்குக் கிளம்பினான். அன்று எள்ளு விதைப்பு நாள். அதனால் தோட்டத்து ஆளிடம் முன்னமேயே எருதுகளைப் பிடித்துக் கொண்டு போகும்படி சொல்லியிருந்தான். போகும் போது நாகம்மாளைச் சீக்கிரமாக வரச் சொல்லியிருந்தான். ராமாயி வாசலில் பாத்திரங்களைப் பரப்பி விளக்கிக் கொண்டிருந்தாள். அன்று அவளுக்குச் சாதாரண நாளை விட வேலை சற்று அதிகமாகவே இருந்தது. “நீ இப்படி ஒய்யாரமாக உக்காந்து கொண்டிருக்கிறாய்; நான் போக வேண்டாமா” என்றாள் நாகம்மாள். “ஆச்சு, இதோ தண்ணியும் சுடவைத்துக் கொடுத்துடறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாகக் காரியத்தைக் கவனித்தாள். அப்பொழுது அவளைப் பேசச் சொல்லியிருந்தால், “சாலிட்டு வந்து குளித்துத் தொலையறதுதானே” என்ற வார்த்தைகள் வெளிவந்திருக்கும். ஆனால் அவள் வாயை திறக்கவில்லை. அப்படிச் சொன்னால் வீடே கிடுகிடுத்து விடுமே! இவள் சும்மாயிருந்தாலும் நாகம்மாள் “ராத்திரிப் பூராவும் தலைவலி, படாத பாடுபட்டேன். இப்போ இந்தக் கதகதப் போடேயே ஓடு என்கிறாயா? அப்படிப் போய் பாடுபட்டு கடைசியில் நானா தலையில் கட்டுக்கிடப் போறேன்?” என்று உக்கிரமாக மொழிந்தாள். ராமாயி பதில் பேசவில்லை. அவளிடம் பேசுவதால் வீண் வம்பை விலைக்கு வாங்கிக் கொள்வதாகுமென்று எண்ணி மௌனமானாள். நாகம்மாள் மறுபடியும் என்னவோ தூற்றிக் கொண்டே வீட்டிற்குள் போனாள். அடுப்பில் பால் ‘குபு, குபு’ வென பொங்கிக் கொண்டிருந்தது. கதவோரம் கூட்டின குப்பை ஒதுக்கி வைத்திருந்தது. அதைப் பார்த்து விட்டு, “இதை வழித்துக் கொட்டக்கூட நேரமில்லை! அப்படி வேலை பறக்கிறதோ?” என்று முணுமுணுத்தாள். அவள் சொல்வதைக் கேட்காதவள் போல அவசர அவசரமாகப் பாத்திரங்களைத் துலக்கி வைத்துக் கொண்டிருந்தாள் ராமாயி. இந்த ராணியம்மாளின் லீலைகள் என்று தான் அடங்குமோ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டாள். தனக்கும் என்ன காரணத்தாலோ அவளைத் தட்டிச் சொல்ல மனம் வருவதில்லை. இதை இப்படியே விட்டால் நாலுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தானே போகும்? ஆனால் அதற்காக என்ன செய்வது? “முத்து, இங்கே வா. தலையில் எல்லாம் இத்தனை மண். யாராச்சு இந்த ஊட்டிலே உன்னைக் கவனிச்சு குளிப்பாட்டிவிட உண்டா?” என்று அங்கலாய்த்துக் கொண்டாள். இந்த வார்த்தைகளைக் கேட்க ராமாயிக்கு புண்ணில் கோலை விட்டு உபத்திரவிப்பது போலிருந்தது. இருந்தாலும் சகித்துக் கொண்டு ஒன்றும் பேசாமல் இருந்தாள். நாகம்மாள் ஸ்நான பானம் பண்ணுவதற்குள் வெயில் நன்றாக வந்துவிட்டது. ஆனாலும் அவள் புறப்பட்ட பாடில்லை. தெரு வரையிலும் போய்விட்டு மறுபடியும் வீட்டிற்குள் வருவாள். என்னவோ வைத்து மறந்துவிட்டவள் போல அங்குமிங்கும் தேடிவிட்டு, “எதுதான் வெச்ச இடத்தில் சீராக இருக்கிறது” என்பாள். “இந்த புகையிலையை அக்குச் சந்தில் கொண்டு போய் வெச்சதாரோ? எங்கே கொண்டு போக வெச்சதோ?” என்பாள். ‘எங்க அம்மா ஊட்டுக்குத்தான் கொண்டு போகலாமினு ஒளிச்சு வெச்சேன்’ என்று சொல்லிவிடலாமென ராமாயி நினைப்பாள். ஆனால் அவளிடம் விவாதம் செய்வதில் பயன் ஒன்றுமில்லையெனக் கண்டு, “முத்து மத்தியானம் ஆகிவிட்டது; மாட்டுக்கு கழுநீர் களிஞ்சு வெக்கலே, வா போவலாம்” என்று குழந்தையைக் கூப்பிட்டுக் கொண்டே ராமாயி நகர்ந்தாள். நாகம்மாள் குழந்தையைத் தரதரவென இழுத்துக் கொண்டு, “உனக்கு விடியரப்பவே மத்தியானம் ஆகிடும். மத்தியானம் ஆனா இருட்டி விட்டது என்பாய். பகலை இருட்டென்பவள் என்ன காரியத்துக்கு அஞ்சுவாய்? நேரமாச்சு போ என்று என்னிடம் சொல்றதுதானே! அதுக்கு இத்தனை திருகுதண்டம் ஏன்” என்று ஆத்திரமாகச் சொன்னாள். “நான் சண்டைக் கட்டுக்கு இளச்சவளக்கா” என்று சொல்லிக் கொண்டே ராமாயி கட்டுத்தரைப் பக்கம் கழிதட்டுகளை ஒதுக்கப் போய்விட்டாள். முத்தம்மாளுக்கு இந்த நாடகம் விளங்கவில்லை. எப்பொழுதும் சொந்தத் தாயை விட அதிக செல்லமாக ராமாயி வளர்த்து வருகிறாள்; ஆதலால், “சின்னம்மா நான் உங்ககூடவே வாரேன்” என்று அவள் பின்னால் ஓடினாள் முத்து. “உன்னையும் நாளைக்கு அவளைப் போல் ஒரு ‘தட்டுவாணி’ யாக்கிப் போடுவாள். அங்கே போகாதே வா, அங்கே போகாதே” என்று தன் மகளுக்கு நற்புத்தி கூறி நாகம்மாள் குழந்தையின் கன்னத்தில் ஒரு இடி கொடுத்து விட்டு நடந்தாள். காலம் மகத்தான மாறுதல்களைச் செய்துவிடுகிறது. இந்த கர்வம், அதட்டல், ஆங்காரம் எல்லாம் ஒரு நாளைக்கு மண்ணில் தலை சாய்ந்து விடும். ஒளியின் வேகத்திற்கும் ஒரு எல்லையுண்டு. வீணாக ஏன் மனதை அலட்டிக் கொள்ள வேண்டும்? ஆனால் ராமாயி இந்தச் சித்தாந்தங்களை நினைத்ததாகவே தெரியவில்லை. அவள் கண்களில் தழும்பிய நீரைத் துடைத்துக் கொண்டே கூடையிலிருந்த சாணியைக் குப்பை மேட்டில் கொட்டிவிட்டு, கட்டுத் தரையில் விழுந்து கிடந்த கழிதட்டுகளை பொறுக்கிக் கொண்டிருந்த முத்தாயியைக் கூப்பிட்டாள். சின்னம்மாவின் குரலைக் கேட்டதும் குழந்தை தன் கையிலிருந்த தட்டுகளை எறிந்து விட்டு ஓடி வந்து அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு “அம்மாளை எங்கே போகச் சொன்னாய்?” என்றது. ராமாயி தன்னையும் அறியாமல் “சுடுகாட்டிற்கு” என்று கூறி விட்டாள். ஆனால் அடுத்த கணமே, ‘ஐயையோ ஏன் தான் இப்படிப்பட்ட வார்த்தை வருகிறதோ?’ என்று தன்னையே நொந்து கொண்டாள். அதே சமயம், “நீ போகச் சொன்னவுடன் போயிடுவாளா?” என்ற சத்தம் கேட்கவும் திடீரென திரும்பிப் பார்த்தாள். ஆழ்ந்து யோசிக்காமல் உணர்ச்சியின் வேகத்தில் ஒவ்வொரு சமயம் நிதானமின்றிச் சொல்லி விடுகிறோம். ‘காலம் கழிந்து விடும், வார்த்தை நிற்கும்’. அதனால் சில சமயங்கள் பெரிய அபாயங்கள் கூட நேர்ந்து விடுகிறது உண்டு. ஆனால் அப்படி ஒன்றும் இப்போது ராமாயிக்கு நேர்ந்து விடவில்லை. ஏனென்றால் இந்தக் கேள்விக்குச் சொந்தக்காரியான செல்லம்மாள் அப்படிப்பட்ட குணம் படைத்தவளல்ல. “காத்தாலே எப்பவும் இதுதானா?” என்றாள் செல்லக்காள். “நீயும் பக்கத்திலிருந்து பாத்துக்கிட்டுத் தானே வருகிறாய்” என்றாள் வருத்தத்தோடு ராமாயி. “அவ குணம் தெரிந்தே இருக்குதே; நீ ஏன் வாய் குடுக்கிறாய்?” என்று செல்லக்காள் கேட்கவும், “நானா வாய் குடுக்கிறேன்” என்று தலை மேல் கையை வைத்தாள் ராமாயி. |