18

     சிவியார்பாளையத்தில், மற்றெந்தப் பக்கங்களையும் விட, கிழக்குப் பக்கத்தில் தான் அழகு மலர் சொரிந்து நிற்கிறது. பிஞ்சு பூவோடு குலுங்கும் பச்சை மரம் போலும், நுரை அலையோடு கூடிய நிறைநதி போன்றும் அங்கு தான் குளிர்ச்சி கட்டோடு படர்ந்து கிடக்கிறது. குடை பிடித்தாற் போல குவிந்திருக்கும் கருவேல மரங்களும், மலர் குலுங்கும் ஊஞ்ச மரங்களும், பூச்செறிந்து வேலியைச் சுற்றியிருக்கும் கொடி வரிசைகளும், ஓயாது மணங்கலந்து வீசும் ரஞ்சிதத் தென்றலும் சேர்ந்து அப்பிரதேசத்திற்கு அத்தனை வனப்பை அளித்திருந்தது. அவ்வழி நடக்கையில், பாதத்திற்கு மட்டுமல்ல, மனதிற்கே ஒரு உற்சாகம் பிறக்கும். சுற்றியிருக்கும் அச்சுகச் சூழ்வில் நம் கற்பனை சென்றுவிட்டாலோ உலகத்தையே மறந்து விடுவோம்.

     இப்போது அந்த வழியாகத்தான் மணியக்காரரும், நாராயணசாமியும் களத்துக் காட்டிற்குப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டு போனார்களே ஒழிய இக்காட்சியைக் கண்டு களிக்கவில்லை. நின்று நோக்கவில்லை. ஒரு வேளை தினம் பார்ப்பதால் சலிப்பு ஏற்பட்டு விட்டதாக்கும்.

     நாராயணசாமி உறுதியான குரலில் “சீக்கிரமாக முடிவு கட்டீட வேணும். நீங்கள் சும்மா அப்படியே அவளிடம் அசைத்து வையுங்கள். அந்தப் பூமி நம்மை விட்டு எங்கே போயிடப் போறது. தவிர நம்ம களத்துக் காட்டோரம் இருக்குது பக்கத்து இனம். இனத்தோடயே சேர்ந்து விடட்டும். நான் எல்லாம் வழி செய்து விடறேன். அவள் எங்கே நம்மை விட்டுப் பறந்திடப் போறாள்?” என்றான். “ஆமாப்பா, அதை எப்படியாவது வாங்கினால்தான் புல்லுக்குப் பஞ்சம் இருக்காது. மாடு கன்றுகளைக்கொரையில் கட்டிவிடலாம். தீவனத்துக்கு அடித்தட்டுகிற போது வண்டியைக் கட்டிக் கொண்டு வெளியூர் களுக்குப் போக வேண்டியதில்லை.”

     “அப்படித்தான் செய்ய வேணும். வசப்பட்டா ஒட்டனைக் கூப்பிட்டு வெட்டுக்குக் கூட விட்டுப் பார்க்க வேணும்...” என்றான் நாராயணசாமி.

     “கிணத்துச் சமாச்சாரம் எல்லாம் நிலத்தை வாங்குவதற்கு முந்தியேவா? இதுதானப்பா எருமை வாங்கிக் கட்டின கதை” என மணியக்காரர் சொல்லிச் சிரித்தார். “நல்லாச் சொன்னீங்க” என்று கூடச் சேர்ந்து கை தட்டிக் கொண்டே சிரித்தான் நாராயணசாமி.

     மணியக்காரர் உற்சாகமாக, “என்ன நாராயணா, எல்லாம் சரிதான். நாகம்மா பக்கம் நாமெல்லாரும் நிண்ணும் கடைசியிலே ஒண்ணும் எடுபடாது போனா என்ன செய்வது? அவமானமாகவல்ல போயிடும்” என்றார்.

     “ஒருக்காலும் போகாது. நம்மை மீறி அப்படிப் போயிடுமா?”

     “போகாதுண்ணா கையில் பிடிச்சு நிறுத்துற விசயமா? சின்னப்பன் கோர்ட்டு வரையிலும் பாக்கிறதாக உறுதி கொண்டிருந்தால்? செயம் சாயுமா?” என்றார் மணியக்காரர்.

     “சின்னப்பனாவது கோர்ட்டுக்குப் போறதாவது. கனவில் கூட எண்ணிப் பார்க்க மாட்டான்! பத்துப் பேர் பாத்து நாம் சொல்றதுதான் சட்டம். இதுக்கு அப்பீலே கிடையாது.”

     “அப்படிச் சொல்லலாமா?”

     “ஏங்கூடாது. என்னதாஞ் செய்வான்? சொல்லுங்கள். அப்படி வித்திட்டு போறதானாலும் எவன் வாங்க வருவான்? எங்கே விரல் விடுங்கள் பாக்கலாம்” என்று அபாரக் கோபம் வந்தவன் போல் கேட்டான்.

     “உம் பார்ப்போம்” என்று கூறிவிட்டு, “அதோ அங்க பரப்பா, யார் நம்ம ராமசாமியா எதிரில் வருவது” என்று கை நீட்டிக் காட்டினார்.

     நாராயணசாமி பார்த்துவிட்டு, “என்னவோ தெரியலெ ஆனா ராமசாமியின் சாயல் இருக்குது. இருந்தாலும் கால் எடுத்துப் போடுவதையும், கழுத்து அசைப்பதையும் பாருங்க. என்ன, ராமசாமி இப்படியா நடப்பான்?” என்றான்.

     இவர்கள் இப்படிப் பேசப் பேச அந்த மனிதரே வந்து விட்டார். அவரைக் கண்டவுடன் மணியக்காரர் மரியாதைக் கும்பிடுடன் அமோகமாக வரவேற்றார்.

     “அடடா, எங்களை எல்லாம் மறந்து விட்டீங்களா? ஏனோ உங்க ஊரையுட்டே அடி எடுத்து வைப்பதில்லையே! இன்றைக்கு மழை கட்டாயம் வரும்” என்றார். “என்னைக் கண்டதும் மழை வருகிறதானா நித்தம் உங்க ஊருக்கு வந்திட்டுப் போவேனே! என்ன முதலியாரே, உங்க மணியக்காரர் சொல்றதைப் பாரப்பா” என்றார் வந்தவர்.

     “எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ? நீங்களும் தான் வந்து பாருங்களேன். ஒரு வேளை வெங்கமேட்டாரார் வந்தால் மழையும் தான் வருமோ என்னவோ!” என்று நாராயணசாமி சொல்லவும், ‘கட கட’ வென அங்கே சிரிப்பொலி கிளம்பியது.

     அதற்குப் பின் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தனர். “அப்புறம் ஏனப்பா நீங்கள் இத்தனை பேர் இருந்தும் சின்னப்பன் நிலத்தை வெளியூராருக்கு விக்க விடுவதா? நீங்க யாராச்சு வாங்க ஐவேஜு இல்லையா” என்று வெங்கமேட்டுக்காரர் கேட்டார்.

     “என்ன அது? என்ன சொன்னீங்க?” என்று இருவரும் ஏக காலத்தில் கேட்டனர். இவர்களுடைய ஆச்சரியத்தையும், முகத்தில் பரவிய திகைப்பையும் கண்டு வெங்கமேட்டார், “உங்களுக்கு அப்படியானா இந்த பேச்சே எட்டவில்லையா?” என்றார்.

     முதலியார் விடாது, “யாரோ சொன்னாங்க. ஆனா அந்த ஆளுக்கு வாங்க முதல் ஏது என்று நெனச்சோம்” என்றான்.

     “முதல் ஏதா? என்னுங்க நம்ம சரளைக்காட்டாரு மவன் குட்டியப்பன் கை இப்போ தனியாகவா பேசுதுங்க? இந்த வருஷம் பருத்தியிலே இரண்டு பெரிய காகிதத்துக்கு மேலே அடிச்சுட்டானுங்களே”என்றார்.

     “அப்படியா? சரளைக்காட்டார் மவன் வாங்குகிறாங்கனின்னு உங்ககிட்ட ஆரு சொன்னது?”

     மணியக்காரரின் குழப்பத்தையும் கலக்கத்தையும் கண்ட முதலியார் கோபப் பார்வையுடன் கண்ணடித்துக் கொண்டே, “இப்படித்தான் கேளான் மாதிரி பேச்சுக் கிளம்பும், பின்பு அடங்கிப் போகும்” என்றான்.

     “அப்படியில்லையப்பா; எங்கிட்டயே குட்டியப்பன் சொன்னான். இப்போ அவன் யோசிக்கிறதெல்லாம் பூமியைப் பத்திக்கூட அல்ல. சின்னப்பன் அண்ணன் ஊட்டுக்காரி குறுக்கே பூந்துக்கிட்டு விளாறு விடறாளாம். இதுக்குத்தான் பிடியாப் பேச்சுக் கொடுக்க மாட்டீங்கறான்.”

     இதைக் கண்ட இவர்களிருவரும், இன்னம் பூரா விபரங்களையும் கிரகிக்கலாமென, “ஊரில் ஒரு ஏழை எளிய கைம்பெண் இருந்தா, இருப்பதா எங்காவது ஓடிப்போவதா? உங்களுக்கே தெரியுமே, சின்னப்பன் ஆளோடு ஆளாக இருந்தவன் தானே? அவன் அண்ணன் தோன்றி கஷ்டப்பட்டுச் சம்பாதித்தான். அவன் குடுத்து வைக்காமல் போய்விட்டான். என்னவோ இருக்கிற வரையிலும் ஒழுங்காக இருந்தான். செத்தவனைப் பத்தி பேசி என்ன பயன்? இல்லெ, இதை எதுக்குச் சொல்ல வந்தேன்னா, அப்படிப் பிழைச்சவன் பொண்ணும், பெண்டாட்டியும் திண்டாடட்டும்னு விட்டுட்டு எல்லாத்தையும் சின்னப்பன் தானே சுருட்டீட்டு போவட்டும் எங்கிறீங்க! அவ்வளவு தானே?” என்றார் மணியக்காரர்.

     வெங்கமேட்டார், “அப்படியும் அந்த அக்ரமம் நமக்கு வேண்டாம். ஏதோ கால் அரை அவளுக்கும் ஒதுக்கிடச் சொல்லலாம்” என்றார்.

     “இதென்ன தானம் கொடுக்கிற மாதிரி. அவள் ஏன் அப்படி வாங்கிக் கொள்கிறாள்? தன் புருஷன் சொத்தில் பாதி வந்தால் வரட்டும். இல்லாது போனா வேண்டியதில்லையிண்ணு அவள் சொல்லீட்டிருக்கிறாள்” என்றார் மணியக்காரர்.

     “வேண்டாம் என்றால் அதையும் இழந்து விட வேண்டியதுதான். அவன் ஒரேயடியாக இல்லை எங்கிறான்னு வச்சிக்குவோம்! சின்னப்பனிடம் இவள் எப்படி வாங்குவாள்?”

     “அதென்ன நீங்க அப்படிச் சொல்றீங்க? எப்படியும் நியாயம் இவளுக்கு இருக்கும் போது வாங்காமலா விடுவாள்? அதற்கெல்லாம் தான் நீங்க இருக்கிறீங்களே” என்றார் மணியக்காரர்.

     வெங்கமேட்டார், “நாங்க இருந்து என்னசாமி செய்றது? இவளுக்கு பங்கு பாகை சரியாகக் கொடுக்க வேணுமிண்ணா கேட்பவர்கள் சிரிப்பார்களே” என்றார்.

     மணியக்காரர் சற்று வேகமாக, “நீங்கள் ஒரே பேச்சைத் திருப்பித் திருப்பிப் பேசுறீங்க. கதையைச் சொல்லி விடுவித்தால் கேக்க ஒத்துக் கொள்வானா மாட்டானா? சின்னப்பன் குறுக்கே கிடந்த துரும்பை எடுத்தவனல்லவே...” என்றார்.

     “ஆமா, ஆமா அதுவும் அப்படித்தான். எப்படியும் சின்னப்பன் போயிட்டால் கச்சை, கிச்சை ஒண்ணும் இருக்காது” என்று வெங்கமேட்டார் கூறி முடிப்பதற்குள் “இப்போது இருந்துதான் என்ன அரக்கீட்டான்?” என்றார் முதலியார்.

     வெங்கமேட்டார், “அப்படியா? கட்சியின்னு பேருக்கு ஒருத்தன் இருந்தாக்கூட கட்சிதான். அவன் பங்காளிகளுக்கும் நாலு பேர் அவனை விட்டுவிடுவாங்களா? என்னமோ அவன் மச்சினன் கெட்டிக்காரனா இருந்தா இவன் ஏன் போறான்? அது போவட்டும், இந்தக் கெட்டியப்பன் அங்கே கொஞ்சம் எடவாடுங்கறாங்களே, கடைசியிலே பொம்பளெ முண்டை பேரைக் கெடுத்திட்டா இந்த எளவு அசிங்கமல்லவா?” என்றார்.

     “நீங்கள் இப்படி ஆரம்பிச்சுட்டா அப்புறம் யாரை என்ன சொல்ல இருக்கிறது? நாகம்மா சங்கதி உங்களுக்குத் தெரியாதா? இத்தனை வருசமா இல்லாமே இனியா அவ அப்படித் திரியப் போறாள்? சே, சே, என்னத்தைச் சொல்றது போங்க” என்றார் மணியக்காரர்.

     “ஆமாமாம். அந்த மசப்புள்ளே அப்படியெல்லாம் போக மாட்டாள். சரி, சரி எல்லாம் பாப்போம். இன்னைக்கு சாவகாசமாகப் பேசமுடியலெ. இன்னொரு நாளைக்கு வர்றேன்” என்றார் வெங்கமேட்டார்.

     “எங்களுக்கும் நேரமில்லெ. அடடா, பொழுதே போயிட்டதே! சரி போய்வாங்க” என்று இருவரும் மேலே நடந்தார்கள்.



நாகம்மாள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27