20

     துக்கமும், சுகமும் மாறி மாறி வருவதுதானே? துக்கம் வந்தால் சோர்வடைவதும், சுகம் வந்தால் களிப்படைவதும் ஆழ்ந்தோர் செய்கையாகுமா? இந்தத் தத்துவத்தை உணர்ந்தவள் போலத்தான் நாகம்மாள் சோகத்தில் கலந்து குடும்பத்தில் எவ்வித பேச்சும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், ‘ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்கும் கொக்கைப்’ போல் தன் காரியத்தில் கண்ணாயிருந்தாள். அடைப்பட்ட சிங்கம் அறுத்துக் கொண்டு போக முயலும் வேகத்தில் அவர்களிடமிருந்து பிரிந்து செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள்.

     முன்பொரு நாள் அந்தி வேளையில் அவள் கெட்டியப்பனைச் சந்தித்த அதே குடிசையில் இன்று நாகம்மாளைக் காண்கிறோம். ஆனால், முன்னதிற்கும், இப்போதைக்கும் எவ்வளவோ வித்தியாசம். மனிதர்கள் தான் மாறுகிறார்கள் என்றால் குடிசையுமல்லவா மாறிக் கொண்டிருக்கிறது. அச்சின்னஞ் சிறு குடிசை ஏனோ வேண்டா வெறுப்பாகத் தன் மீது போர்த்தியிருந்த தென்னங்கீற்றுகளைத் தூக்கி எறிந்து விட்டது. என்ன கோபமோ இரண்டொரு சட்டங்களும் பெயர்ந்து ‘போகட்டுமா? நிற்கட்டுமா?’ என்று கேட்பதைப் போல் ஓரங்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதோடு குடிசையைக் கபளீகரம் செய்யக் கிளம்புவதைப் போன்று சுற்றிலும் செடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. முன்பு துளி வெளிச்சத்தையும் புக விடாது தடுத்த குடிசை இப்போது பால் நிலாவைக் கொட்டிக் கொள்கிறது. ஒரு வேளை சந்திர வெளிச்சத்தின் மேல் ஏற்பட்ட மோகமாயிருக்கலாம்.

     கெட்டியப்பன் ஏதோ பிரமாதமாக யோசித்துக் கொண்டிருந்தான். என்ன இவன் கூடவா விஷயங்களை இங்ஙனம் ஆழ்ந்து சிந்திக்கிறான்? என்று ஆச்சரியம் எழலாம். ஆம், நல்லதோ கெட்டதோ எதற்கும் யோசனை வேண்டித்தானே இருக்கிறது?

     நாகம்மாள் அவனுக்கு எதிரில் சற்று தள்ளிக் குடிசை வாயிலைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். வெகுதூரத்திற்கப்பால், வேலிக் கோடியும், அதற்குப் பின்னும் அவள் கண்களுக்குத் தெரிந்தன. எங்கும் வெண்காந்தி உள்ளத்தை அள்ளிக் கொள்ளும் வண்ணம் குளிர்ச்சியுடன் படர்ந்து கிடந்தது.

     “என்ன சும்மாவே இருக்கிறாயே, உனக்காக நான் எவ்வளவெல்லாம் செய்து தயாராக வச்சிருக்கிறேனே” என்றான் கெட்டியப்பன்.

     நாகம்மாள் எங்கோ பார்த்துக் கொண்டே, “அப்படி என்ன பண்ணிவிட்டாய்? சின்னப்பன் என்னைக் கூப்பிட்டு ஒண்ணும் கேக்கலையே” என்றாள்.

     “நீ இப்படி இருந்தா கேக்காதிருப்பது மட்டுமா? சொல்லாமலே போய்விட மாட்டானா?” என்றான் கெட்டியப்பன்.

     “எங்கே?”

     “எங்கேயா?”

     “பின்னே சொன்னாலல்லவா தெரியும். எங்கே அந்த சனியன் பிடிச்ச ஊருக்கா?” என்று சற்று ஆத்திரத்துடன் கேட்டாள்.

     “பின் வேறெ எங்கே?”

     நாகம்மாள் பெருமூச்சுடன், “சரிதான் நிச்சயமாயிட்டதா எல்லாம்? எனக்குத் தெரியாதே?” என்றாள்.

     “உனக்கு எதுதான் தெரிஞ்சு இருக்குது? இனி கிணற்றிலே போட்ட கல்லு மாதிரி, சும்மா இருந்து சுகமில்லை. உடனே இரண்டில் ஒன்று சொல்லச் சொல்லு” என்றான் கெட்டியப்பன்.

     நாகம்மாள் என்னவோ ஞாபகப்படுத்திக் கொள்ள முயலுகிறவள் மாதிரி தலையைக் குனிந்து கொண்டு ஆலோசித்தாள்.

     கெட்டியப்பன் கை நெட்டை எடுத்துக் கொண்டே, “நீ என்னதான் பண்ண உத்தேசித்திருக்கிறாய்? கள்ளன் போன மூணாம் நாள் கதவை இழுத்துச் சாத்தி பிரயோசனமென்ன?” என்றான்.

     “சரி, நாளைக்கு நான் கட்டாயம் கேக்கிறேன். ஆமாம், என்ன சொல்லுவாங்க? நான் சொல்றதைக் காதிலே போட்டுக்குவாங்களா, மாட்டாங்களா?”

     “இதென்ன இது? குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாலே பெண்ணா, ஆணா என்று கேட்பதைப் போலிருக்குதே! நீ கேளு, சரியாக ஒத்து வந்தாச் செய். இல்லாத போனா ஊர் கூடி நாயம் போடலாம். பத்துப் பேர் முன்னாலே வந்து சொல்லட்டும். இதை எல்லாம் மணியக்காரர் ஊட்டில் பேசியிருக்கிறோம். நீ ஒண்ணப்பத்தியும் அஞ்சாதே. என்ன வந்தாலும் மணியக்காரர் தாக்காட்டுவார். நீ சும்மாயிரு. சின்னப்பன் எப்படி இல்லீன்னு கையை விரிப்பானோ பார்ப்போம்.”

     “இதில் இன்னொரு பாவி வந்து குறுக்கே நிக்கறாளே? அந்த எமன் இல்லாத போனா பரவாயில்லெ. சாமி வரம் கொடுத்தாலும், பூசாரிக்கு மனம் வராதே” என்றாள் நாகம்மாள்.

     கெட்டியப்பன் கொஞ்சம் எக்களிப்பாக, “அவ தான் தொலைஞ்சிட்டாளே! அவ மகனை எடுத்து நடு ஊட்டிலே போட்டிருக்கும் போது நிப்பாளா?” என்றான்.

     நாகம்மாள் மனதில் இந்த வார்த்தைகள் சுருக்கெனத் தைத்தது. முகத்தைச் சுளித்துக் கொண்டு, “சும்மா ஏன் சத்தம் போடறாய், யாராச்சு இந்தப் பக்கம் வரப் போறார்கள்” என்றாள்.

     “இங்கே எவன் வருவான்? நீ ஏன் இப்படி பயந்து சாவரே?”

     நாகம்மாள் எழுந்தாள். அவள் எழுந்து விட்டாளென்றால், மின்னல் வேகத்தில் மறைந்து விடுவாள். “சரி நான் போகட்டுமா?” என்று அவள் கேட்கு முன்பு சடக்கென கெட்டியப்பன் கை உயர்ந்தது! ஆனால் யாது காரணத்தினாலோ, அப்படியே கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.

     நாகம்மாள், “அதோ வேலிக்கு மேலே நிலா வந்துவிட்டது. கிழக்காலக் காட்டை சுத்திப் பாத்து வர நேரமாச்சு என்று தான் சொல்லோனும்” என்று கூறிவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தாள். கெட்டியப்பன், குடிசைக்கு முன்னால் அவள் போவதைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான். சுற்றிலும் ஒரே நிலக்காடு. அந்த மனோகரமான மயக்கத்தைத் தாங்க மாட்டாது தான் என்னவோ, கெட்டியப்பன் கீழே கிடந்த தென்னந்தடுக்கின் மேலே தலை சாய்த்தான்.

     நாகம்மாள் வீட்டு வாசல்படியில் அடியெடுத்து வைத்தாளோ, இல்லையோ, “யாரது?” என்று கோபத்துடன் சின்னப்பன் கேட்டான்.

     “ஏன்?” என்றபடியே மேலே நடந்தாள். சின்னப்பன் எழுந்து வந்து, “என் மானம் போகுதே” என்றான் சற்று கடினமாக.

     “மானமும் கீனமும் போறது ஏனோ? அப்படி ரோசக்காரராயிருந்தா, பிரிச்சு விடுங்களேன்” என்று நாகம்மாளும் அதே தொனியில் சொன்னாள்.

     எதிர்பாராத இப்பதிலால் திகைப்படைந்தாலும் சட்டென, “உங்களை யார் கட்டிப் போட்டிருக்குறாங்க. நல்லா பிரிஞ்சு கொள்ளலாமே” என்றான் வேகமாக.

     “எனக்கு உண்டான பங்கை ஒதுக்கீட்டால் விலகிக் கொள்கிறேன். உங்களுக்கு வேணுமானால் ஒரு கும்பிடு கூடப் போட்டுட்டு போயிடறேன்” என்றாள்.

     சின்னப்பனுக்கு கோபம் முன்னிலும் அதிகமாகப் பொங்கிக் கொண்டு வந்தது. இத்தனை நாளாக யார் யாரோ சொல்லியதைக் கூட காதில் போட்டுக் கொள்ளாமல் விட்டிருந்தான். இன்று தான் தெரிந்தது. “ஓஹோ பங்கு வேண்டுமா? சரி எந்தக் காமாட்டிப்பயல் கேட்கச் சொன்னானோ அவனை வரச்சொல்” என்று உக்கிரமாக மொழிந்தான்.

     நாகம்மாள் ‘கப்சிப்’ என அடங்கிவிட்டாள். சின்னப்பனுக்குப் பங்கு கேட்பவள் பேரில் கூட அவ்வளவு கோபம் இல்லை. அவளைத் தூண்டி விட்டு வேடிக்கைப் பார்க்கிறவர்கள் மேல் தான் அபாரக் கோபம் வந்தது. “பாக்கலாமே இவர்கள் சமத்தை! எப்படித்தான் வாங்கி விடுவார்களோ?” என்று இன்னும் கண்டபடி வைது கொண்டு அப்பால் சென்றுவிட்டான்.



நாகம்மாள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27