26

     ராமாயி இப்போது ஒரு புது வழக்கத்தை கைக் கொண்டிருந்தாள். அதுதான் பேசப் பேசத் தூங்குவது. என்ன கேட்டதென்பதே தெரியாது. ஏதோ வாயில் வந்ததைச் சொல்லிவிட்டு குறட்டை விடுவது ரொம்பச் சர்வசாதாரணமாகப் போய்விட்டது. சின்னஞ்சிறு சருகசைப்புக்கே திடுக்கிட்டுத் தலைதூக்கும் தன் மனைவி ஏன் இப்படித் தூங்குகிறாள் என்ற விவரத்தை ஏனோ சின்னப்பனும் கேட்பதில்லை. இப்போது இரண்டு தரம் குரல் கொடுத்தும் ராமாயி ‘உம்’ கொட்டிக் கொண்டே பேசாமலிருந்ததற்கும் இவன் கோபித்துக் கொள்ளவில்லை.

     சின்னப்பனுக்கு எத்தனையோ கவலைகள். மைத்துனன் பிரிவுக்குப் பின் தன் குடும்பத்திலும் பிளவு ஏற்பட்டு விட்டது. ஆனால் முக்கியமாக நாகம்மாள் வாசல்படி தாண்டியதுதான் அவனுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. அதிலும் மணியக்காரர் வீட்டிற்குப் போயிருக்கிறாள் என்பதைக் கேட்டு அதிக ஆத்திரம் கொண்டான். எதற்கும் தான் ஒன்றும் முன்னால் போவதில்லை என்று திடம் செய்து கொண்டான். ‘ஊரார் பேச்சைக் கேட்டு இப்படி குட்டிச்சுவராய் போய்விட்டாளே’ என்று நினைக்கவும் அவனுக்கு இரக்கமாத்தானிருந்தது.

     தன்னுடைய அண்ணன் காலத்தில் நடந்த அநேகம் சம்பவங்கள் நேற்றுத்தான் நடந்தது போலிருந்தது. இவனுக்குக் கலியாணமாகும் முன் குளிப்பதற்கெல்லாம் வெந்நீர் நாகம்மாளே எடுத்து வைப்பாள். வேண்டாமென்று மறுத்தாலும் ஒரு தரத்துக்கு இரண்டு தரமாக முதுகும் தேய்த்து விடாது இருக்க மாட்டாள். எந்த வித கல்மிஷமும் இல்லாதிருந்தவள் இன்று விஷமாக மாறிவிட்டது அவனுக்கு ஆச்சரியமாகத்தானிருந்தது.

     நாகம்மாள் கோபத்தில் வீட்டை விட்டுப் போய்விட்டாளே யொழிய அவள் குழந்தை ஏனோ தாயுடன் செல்ல மறுத்துவிட்டது. இதற்குக் காரணம் ராமாயி காட்டும் அபார வாஞ்சையா?

     யாரோ நடவையைத் திறந்து கொண்டு வரவும் வெளியே பந்தக்காலில் கட்டியிருந்த எருமை தான் உள்ளே வருகிறதாக்கும் என ‘த்த, கெரகம்’ என்று சின்னப்பன் விரட்டினான். இவனுடைய அதட்டலுக்கு எருமையாயிருந்தால் அடுத்த எட்டு எடுத்து வைத்திருக்காது. ஆனால் விருந்துக்கு அழைக்க வந்த மாரி நாவிதன் அப்படிப் போய் விட முடியுமா? வந்த சிரிப்பை அடக்க முடியாது அவன் சிரித்துக் கொண்டே வந்தான்.

     “சாமி, பந்தி உட்டாச்சுங்க. தேவைக்காரர் வளவிலே சாப்பாட்டுக்கு கூப்பிடறாங்க” என்றான் மாரி.

     சின்னப்பன் சாப்பிட்டு வெகு நேரமாயிருந்தது. அவன் மனைவியும் முத்தாயாளும் கூடச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டார்கள். மத்தியானமே விருந்துச் சங்கதி தெரியுமென்றாலும் அவனுக்குப் போக இஷ்டமில்லை. பத்துப் பேருக்கு முன்னால் இப்போதெல்லாம் போவதென்றாலே அவனுக்கு நெருப்பு மேல் நடப்பதைப் போலிருந்தது. அவனுடைய இஷ்டதெய்வம் பிரசன்னமாகி எங்காவது மனிதப் பூண்டற்ற ஒரு இடத்திற்கு அவனை அழைத்துப் போவதாகச் சொன்னால், சந்தோஷமாக அன்பு அழைப்புக்கு உட்பட்டிருப்பான்.

     “இப்ப வாரமப்ப, நீ போ” என்று சின்னப்பன் சொன்னான். தான் போகாவிட்டாலும் வெளிக்கு ஏன் காட்டிக் கொள்ள வேண்டும் என்று இப்படிச் சொன்னான்.

     “சரி, சட்டுனு வாங்க” என்று கூறிவிட்டு வேறு வீடுகளை நோக்கி மாரி வேகமாக நடந்தான்.

     பந்தக் காலில் சாய்ந்தபடியே உட்கார்ந்து கொண்டே சின்னப்பன் எதையோ பற்றி யோசித்தான். எப்படிச் சிந்தை சென்றாலும் கடைசியில் நாகம்மாள் விஷயத்திலேயே வந்து நின்றது. ‘இன்னம் தான் என்ன, எம் பேச்சைத் தட்டுவாங்களா? நாம் பாத்து இது செரியில்லையின்னா கேக்கும்ங்கிற உறுதி இருக்குது. ஊடுன்னு இருந்தா கோபதாபம் இல்லாதையா இருக்கும்? என்னமோ, இப்போ போயிட்டாங்க வெடிஞ்சா வாராங்க’ இப்படி எண்ணும் போதே ‘கலைப்பார் கலைத்தால் கல்லும் கரையும். அந்த விடு சூளைகளும் அர்த்தம் கெட்ட மணியக்காரனும் என்ன பண்ணுவாங்களோ’ என்ற நினைவு வரும்.

     ‘சரி என்ன வந்தாலும் இந்தக் கட்டை அதரவா போகுது? எங்க அப்பன் காலத்திலும் அவர் ஒருத்தருக்கும் அடங்கி நடந்தவரல்ல. இந்த மணியக்காரனும், சித்தப்பனும், பெரியப்பனும் மண்ணுக் கவ்வினவங்க தானே! ஒரு கை பார்க்கிறது’ என்று திடம் செய்து கொண்டான்.

     அப்பொழுது முத்தாயா என்னவோ தூக்கத்தில் உளறினாள். ராமாயியும் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள். தன் புருஷன் ஒருமாதிரி பந்தக் காலோரம் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, “ஐயோ சாமத்துக்கு மேலாகுது ஏன் முழிச்சிட்டு இருக்கீங்க” என்றாள்.

     “இப்ப பலபலன்னு வெடிஞ்சு போயி நிலந் தெரியுது. தோட்டம் போக வேண்டாமா?” என்றான் சின்னப்பன். ஆனால் சிரிப்பை அடக்க அவனால் முடியவில்லை.

     ராமாயி கண்டு கொண்டாள். கண்ணைத் துடைத்துக் கொண்டு, “என்ன சத்தம் ஊரடங்கலியா?” என்றாள்.

     “இந்தா அரகமா பேசாதே. அப்புறம் விருந்துக்காரர் ஊட்டிலிருந்து ஆள் வந்தாலும் வரும்.”

     “ஓ! அதுதான் சலம்பலடங்கிலைப் போலிருக்குது. நான் மறந்தே மறந்திட்டனுங்களே! ஆனா நீங்க தான் சோறு உங்கப் போயிட்டு வரப்படாதுங்களா?”

     “நான் என்னத்துக்கு அங்கு போறேன். வேணும்னா முய்யைக் குடுத்திட்டா போறது.”

     அப்போது, “ஆரு ராமாயாளா இந்நேரத்திலே பேசறது?” என்று பக்கத்து வீட்டுக்காரி சுவற்றுக்கு அந்தப்புறத்திலிருந்தபடியே கேட்டாள்.

     “நாங்க என்னக்கா பேசறம்? இத்தனை நேரம் நானும் தூங்கிட்டுத் தான் இருந்தேன். இந்தப் பொழையா தூக்கமொன்னு” என்று கூறிச் சிரித்தாள்.

     அவள் சிநேகிதையும் சிரித்துக் கொண்டே, “ஆமாம் எங்காயா நாகம்மாளைக் கண்ணிலே பாப்பமின்னாக் காணோமே” என்றாள். நடந்த விஷயம் ஒன்றும் இன்னும் அவள் காதுக்கு எட்டவில்லை.

     தன் கணவன் பக்கத்தில் இல்லாதிருந்தால் ராமாயியும் சங்கதியைச் சொல்லியிருப்பாள். இப்போது அதை எல்லாம் சொல்லத் தருணமில்லை. “எப்படியோ உம்மவள் ஒடம்பு நல்லானாச் செரி” என்று ஒரு விதமாகப் பேச்சை முடித்தாள்.



நாகம்மாள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27