16

     தோப்பிலிருந்து பிரிந்து சென்ற கெட்டியப்பன் விவரமென்ன? அவன் வாக்குறுதி செய்து தந்தபடி காரியத்தில் கண்ணாயிருக்கிறானா? அவனை நம்பியவள் உருப்பட என்னென்ன காரியங்கள் செய்து வருகிறான்? இவற்றைத் தெரிந்து கொள்ளுமுன் சிவியார் பாளையம் மணியக்காரரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

     மணியக்கார கருப்பகவுண்டர் நல்ல பராசாரியான ஆள். கருவேலங் கட்டை மாதிரி அவரது காலும் கையும் உறுதியாயிருக்கும். அவரது நிறமும் கருஞ்சாந்து போலத்தான். கிருதா மீசைக்கும், அவரது மேனிக்கும் வித்தியாசமே தெரியாது. இவரது முறுக்கு மீசையில் எலுமிச்சங்கனியை நிறுத்தலாம்! என்ன? நிறுத்தியே காண்பித்திருக்கிறார்! அவருடைய மார்பு கடப்பைக்கல் போன்றிருந்தது. இன்னும் மற்ற அவயங்களும் கச்சிதமாக அமைந்திருந்தன. அவர் ஏதாவது தேகப்பயிற்சி செய்கிறாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது.

     இந்தத் தேகக் கட்டு இவர்கள் வம்சத்திற்குப் பரம்பரைச் சொத்து. இவருடைய தகப்பனாரும் இப்படித்தான். நல்ல ஆஜானுபாகு. எப்போதும் வெளியே போகும் போது நெற்றிக்கட்டு, தடியுடன் தான் செல்வார். தம்மைக் கண்டவர்கள், குறுகி, ஒடுங்கி எண்சாண் உடம்பும் ஒரு சாணாகப் போகவேண்டுமென்பது அவரது ஆசை. ஆனால் அவரது ஆசை எவ்வளவு தூரம் பூர்த்தியாயிற்றென்பது நமக்குத் தெரியாது.

     அந்தக் காலத்தில் சின்னப்பனின் தந்தை ராமசாமிக் கவுண்டர் தான் ஊரிலே என்ன சச்சரவு நடந்தாலும் பஞ்சாயத்துச் செய்து வைப்பவர். இதைக்காண ஊர் மணியக்காரருக்குப் பிடிக்கவில்லை. ‘என்னடா இது? நம்முடைய மதிப்பென்ன? அந்தஸ்தென்ன? எந்நேரமும் தோட்டி, தலையாரி வாசலில் காத்துக் கொண்டு கிடக்கிறான்கள்; நினைத்த போது பத்துப்பேர் ‘வா’வென்றால் வருவார்கள், ‘போ’ என்றால் போவார்கள். அப்படியிருக்க ஊரிலே இவன் பெரிய நாயக்காரனாகப் போயிட்டானாம்! இவனிடம் போய் பந்தக்காலைக் கட்டிக் கொண்டு நிற்பதாம்! இவன் சொல்கிறதைக் கேட்பதாம்! என்ன இது!’ என்று இப்படி நினைத்தார். இதோடு ராமசாமிக் கவுண்டரை ஒரு கை பார்த்துவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டார். இந்த சங்கை ஊதிவிட்டு நெருப்பாக்க அவரருகே அநேகர் தயாராய் காத்துக் கொண்டிருந்தனர். நல்ல யோசனை சொல்லத்தான் சுலபத்தில் யாரும் முன்னுக்கு வரமாட்டார்கள் என்றால் இப்படி துர்புத்தி சொல்ல ஆட்களா இல்லை. ஏற்கெனவே வீராப்பிலிருந்த மணியக்காரர், ராமசாமிக் கவுண்டர் தன் எல்லை வேலியில் மரம் வெட்டி, சுண்ணாம்பு சுட்டதை, புறம்போக்கில் மரம் வெட்டி சுண்ணாம்பு சுட்டதாக தாசில்தாருக்கு ‘ரிப்போர்ட்’ செய்தார். இதை விசாரித்த மேலதிகாரி உண்மையை அறிந்து, “அப்படித்தான் புறம் போக்காயிருந்தாலும் மரத்தை வெட்டி, அடுக்கி, சுண்ணாம்புக் காளவாயில் போட்டு சுட்டு, சுண்ணாம்பு எடுத்துப் புது வீடு கட்டும் வரையிலும், நீர் என்ன ஐயா செய்து கொண்டிருந்தீர்? இது தானா வேலை பார்க்கிற லட்சணம்?’ என்று மணியக்காரருக்கே ஐந்து ரூபாய் அபராதம் விதித்தார். இந்தப் பூசலுக்குப் பிறகு எவ்வளவோ குட்டிக் கலவரங்கள் - அப்போது தோன்றிய கட்சி, பிரதிக் கட்சிதான், இன்னும் ஊரில் இருந்து வருகின்றன. தன் தகப்பனார் காலத்தில் தோல்வி மேல் தோல்வியானாலும், தானாவது வெற்றி கண்டு விட வேண்டும். சின்னப்பனையும் அவன் பங்காளிகளையும் பிரித்து விட்டு மட்டந்தட்ட வேண்டும் என்று கங்கணங்கட்டிக் கொண்டிருந்தார் மணியக்காரர். இதில் அவர் அநேகமாக வெற்றியும் அடைந்து விட்டார். இப்பொழுது சின்னப்பனை என்ன செய்தாலும் கேள்வி இல்லை. அதற்குத் தகுந்தாற் போல நாகம்மாள் சங்கதி வேறு கிடைத்திருக்கிறது. எப்போதும் மணியக்காரருக்கு யோசனை சொல்வதற்கு அநேக மந்திரிகள் உண்டு. அவர்களில் முதன்மையானவன் நாராயணமுதலி. இவன் ஒரு புளுகுணி, குண்டுப் புரட்டன். எங்கு என்ன நடந்தாலும் துளிவிடாது வந்து சொல்லிவிடுவான். ‘இதற்கு இப்படிச் செய்ய வேண்டும். அவர்கள் சங்கதி அப்படி’, அது இது என்றெல்லாம் யோசனை சொல்வான். ஆனால் நாராயணசாமி முதலியார் விஷயம் அப்படியல்ல. பொட்டுக் குறித்தாற் போல் சொல்வான். எங்கே கல்லெறிந்தால், எந்தப் பழம் விழும் என்ற சங்கதியெல்லாம் தெரிந்தவன் - சாதாரணமாகக் கோர்ட்டு விஷயங்களில் அபாரத் திறமை - மற்றும் சாட்சிக்குச் செல்லும் போது சாப்பிடுவதற்கு எந்த ஓட்டலுக்குப் போனால் ரொம்ப திவ்யமாயிருக்கும், குறிப்பிட்ட மனிதர்களை எங்கு அழைத்துச் செல்வது என்பதெல்லாம் மனப்பாடம். அதனால் தான் மணியக்காரர் கூட “அட, என்னப்பா நம்ப நாராயணன் சொன்னால் எள்ளத்தனை மாறுமா? அவன் நமக்காகத்தானே வேலை வெட்டியெல்லாம் விட்டு வருகிறான்” என்று சொல்வார்.

     ‘வேலை என்ன பறக்கிறது’ என்று நினைத்துக் கொண்டே, “உங்களை விட வேலை என்னங்க பிரமாதம்? நீங்க வரச்சொல்லி விட்டால் என்ன இருந்தாலும் உதறிப் போட வேண்டியதுதான்” என்று சமயம் அறிந்து பேசுவான். “அதுதான் நீ இல்லாமல் நான் ஒண்ணும் செய்கிறதில்லையே” என்று ‘கட கட’ வென்று சிரித்துக் கொண்டே மணியக்காரர் சொல்வார். அதுதான் சமயம் என்று ஐந்து, பத்துக் கடனாகக் கேட்டு வாங்கிக் கொள்வான். அப்புறம் திருப்பிக் கொடுக்கிறதிற்குத்தான், இன்னும் ஐந்தோ, பத்தோ வேண்டியிருக்கிறதே. அதையும் மணியக்காரரிடமே வாங்க வேண்டி இருப்பதால், அவரும் முதலியாரிடம் பணம் திருப்பிக் கேட்பதில்லை.

     இன்றைக்கு மணியக்காரர் மந்திராலோசனை சபை கூடியிருக்கிறது. அங்கே நாராயணசாமி முதலியாருக்கருகில் கெட்டியப்பன் கம்பீரமாக வீற்றிருக்கிறான். வழக்கமாகப் பேசும் ஆசாரத்தில் இன்று கூடவில்லை. ஏனென்றால் வாசலில் நின்றாலும், பேச்சுச் சத்தம் கேட்கும், உட்கார்ந்திருப்பதும் வெளியில் தெரியும். ஆகையால், ரகசியமாக இருக்கட்டுமென, உட்புற அறைக்கு சென்று விட்டார்கள். பேச்சு ஆரம்பமாயிற்று. “என்ன கெட்டியப்பா? சங்கதி எப்படியிருக்குது? காரியம் சல்தியா நடக்காது போலிருக்குதே” என்றார் மணியக்காரர்.

     “அதென்னங்கண்ணா அப்படிச் சொல்றீங்க? மமிட்டிப் பிடியிலே ஒரு தட்டு தட்டினா காரியம் நடக்கறாப்பலிருந்தா இதுக்குள்ளே கக்க வச்சிருக்கலாம்” என்றான் கெட்டியப்பன்.

     “ஆமாம் இதுதான் உங்களுக்குத் தெரியும். நீங்கள் கக்க வைக்கவும், வாந்தி எடுக்கவும் தான் செய்வீர்கள். காரியத்திலே பின் என்ன சாதிப்பீர்கள்?” என்று சிரித்துக் கொண்டே முதலியார் பேச ஆரம்பித்தான்.

     “அதுக்கு என்ன பண்ணித் தொலைக்கிறதுங்க? நான் இன்னும் அந்தப் பக்கமே போகலையே?”

     “இப்படிப் போகாத ஆளுக்கு இந்த வேலை எதற்கினு கேளுங்க? இவர்களை நம்பித்தானே நாம் இந்தக் காரியத்திலிறங்கியிருக்கிறோம். இல்லாட்டி எங்களுக்கென்ன இதில் அக்கறை?” என்று நாராயணசாமி மணியக்காரரைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே சொன்னார். முதலியார் இதைப் பலதடவை மணியக்காரரிடம் கூறியிருக்கிறார். “எதற்கும் நாம் தான் என்று காட்டிக் கொள்ளக் கூடாது. எவனோ ஒருவனை முன்னுக்குத் தள்ளிவிட்டு நாம் பின்னாலிருந்து வேலை செய்ய வேண்டும். இதை அப்படியிப்படி என்று விடக்கூடாது” என்று அநேகம் தடவை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

     “என்ன கெட்டியப்பா, தலையைச் சொறியிறாய்?” என்றார் மணியக்காரர்.

     “அண்ணா, அதுதான் சொன்னனுங்களே நான் போகலாம்னுதான் இருந்தேன். அதுக்குள் அவன் மாமியார் வந்திருக்கிறாள். போவட்டும் அப்புறம் விஷயம் தெரியாமலா போயிடும் என்று சும்மாயிருந்துட்டேன்.”

     “சரி எப்படியும் நாளைக்குப் போய்த் தெரிந்து கொண்டு வந்து விடுங்கள். அதற்கப்புறம் தான் யோசிக்கோணும். அதைத் தெரியாததிற்கு முன் பேசுவதில் பிரயோசனமில்லை” என்றான் நாராயணசாமி.

     “ஆமாம், அப்படித்தானே செய்” என்றார் மணியக்காரர். இவர் நாராயணசாமியின் பேச்சுக்குப் பின் இப்படித்தான் சொல்வது வழக்கம்.

     “ஆனால் நாகம்மாள் ஏதாச்சுங்கேட்டா, நீங்க என்ன சொல்றது?” மணியக்காரர் நாவசைப்பதற்குள் நாராயணசாமி, “இங்கே, கையோட கூட்டிவர முடியாதா?” என்று அவசரமாகக் கேட்டார்.

     “கூட்டி வாரதா? இப்படி நொடிச்சா வரமாட்டாளா?” என்றான் கெட்டியப்பன்.

     “அப்ப சரி” என்றான் நாராயணசாமி.

     “இங்கெதற்கு?” என்று கெட்டியப்பன் ஆரம்பிக்கையிலேயே, “நான் சொல்றேன்” என்று இருமிக் கொண்டே ஒரு கிழவர் அங்கு வந்தார்.



நாகம்மாள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27