25

     முதல் நாள் இரவு சுகமாகப் படுத்து நித்திரை செய்தவள் இன்று இரவு நரக வேதனையை அனுபவித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். முதல் நாள் சிரிப்பும் சந்தோஷமுமாக பேசிக் கொண்டிருந்தவர்களிடம் இன்று நாகம்மாவால் உற்சாகமாக நடந்து கொள்ள முடியவில்லை. மணியக்காரர் வீட்டு உட்புற ஆசாரத்தில் தூணில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள் நாகம்மாள். அடிபட்ட குழந்தை மேலும் கீழும் பார்ப்பதைப் போல மணியக்காரர் தம்முடைய கிருதா மீசையைத் தடவிக் கொண்டே ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தார். கெட்டியப்பன் குனிந்த தலை நிமிரவில்லை. முதலியார் முகத்தில் மட்டும் எவ்வித குறியுமில்லை. நாகம்மாளைப் பார்க்கும் போதெல்லாம் முகத்தில் அனுதாபக் குறியை எங்கிருந்தோ வரவழைத்துக் கொண்டார். அங்கொரு மூலையில் படுத்திருந்த பெரியவரின் கட்டில் கிறீச் சப்தமும் இடையில் மேல்புறத்திலுள்ள வண்ணான் வீட்டிலிருந்து அரைகுறைப் பேச்சுச் சப்தமும் காதில் விழும். அவன் அடிக்கடி, “கழுதை, கழுதை” என்று சொல்வது கழுதையைப் பற்றியோ அல்லது அவன் மனைவியைப் பற்றியோ என்பது நமக்குத் தெரியாது. “என்னவோ எல்லாமே போய்விட்டது போல் இப்படி உட்கார்ந்து விட்டீர்களே” என்று முதலியார் ஆரம்பித்து, “நாம் எதிர்பார்த்ததுதானே இவையெல்லாம்” என்றார்.

     மணியக்காரர் திடுக்கென தலையைத் தூக்கினார். பாவம் அவர் இதொன்றையும் எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது. “நீங்க சொல்ல வேண்டியிருக்க, சும்மா பேசாமெ இப்படிச் சிலை போல் உட்கார்ந்து விட்டால்?” என்றார் முதலியார்.

     மணியக்காரர் கொஞ்சம் தொண்டையைத் தீட்டினார். ஆனால் கரகரப்பு நீங்கவில்லை.

     “எப்படி, அதை இன்னொரு தரம் சொல்லு, நேற்று நீ தூங்கிக் கொண்டிருக்கும் போது வந்து கதவைத் தட்டி...” என்று சொல்லி நிறுத்தினான் கெட்டியப்பன். “அதை சும்மா கேட்பதில் என்ன இருக்கிறது?” என்று சலிப்புத் தோன்றியவர் போல் மணியக்காரர் சொல்லவும், “நீங்க என்ன இப்படி எல்லாமே மெழுகி விடுகிறீர்களே. அப்புறம் பார்க்கப் போனா, கல்லும், முள்ளும் நிறைந்த இடம் கூட சுத்தமாகத்தானே இருக்கும்! சின்னப்பன் மேல் குற்றம் சொல்லுவதற்கே இடம் இருக்காது” என்று கொஞ்சம் அழுத்தமாகவே முதலியார் கூறினார்.

     “எப்பொழுது தான் சின்னப்பனிடம் குற்றம் இருக்கப் போகிறது?” என்று பேச்சு முடிவதற்குள் பெரியவரிடமிருந்து பதில் வந்தது. அவர் கட்டில் சமீபத்திலிருந்ததால் அவர் சொல்வது நன்றாகவே இவர்களுக்குக் கேட்டது.

     “கட்டுச் சோற்றுக்குள் எலியை வைத்துக் கட்டியது போல்” என்று கெட்டியப்பன் வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டு, “உங்களையும் கட்டிலையும் அப்புறம் கொண்டு போய் வைத்துவிட்டுத் தான் நாங்கள் பேச வேண்டும்” என்று எழுந்தான்.

     “சும்மா உட்காரு” என்று மணியக்காரர் அதட்டினார். பெரியவர், “நானே எழுந்து போகிறேன். ஆனால் உனக்குப் பயந்து கொண்டல்ல. என்ன கேட்டியணா, இங்கே ரொம்ப வேக்காடாக இருக்கிறது. காற்றாட அந்தப் பக்கம் போறேன். போறதிற்குள் சின்னபுள்ளெகிட்ட ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்” என்று நாகம்மாள் புறம் திரும்பினார். எப்போதும் மரியாதையாகவே அவரிடம் நடந்து வந்த நாகம்மாள் எழுந்திருக்க முயன்றாள். பெரியவர், “வேண்டாம் உட்காரம்மா. ஒரு வார்த்தை பாக்குக் கடிக்கிற நேரத்திற்குள் சொல்லி விடுகிறேன்” என்று தொடங்கினார்.

     “திருமனை செய்யத் தெரியாதவன் தேர் வேலைக்கு அச்சாரம் வாங்கினானாம். ஒரு காணி நிலத்தை கிளறிப் பாங்காகப் பிழைக்கத் தெரியாத இந்தக் கெட்டியப்பனா உனக்குப் பங்கு வாங்கி கொடுக்கிறவன்! இது எல்லாம் நடக்காத சங்கதிகள். ஒரு நாளைய கூத்துக்கு மீசையைச் சிரைத்த கதையாக முடியும். இப்போது பாரு ஊடும் குடித்தனமா இருந்தவள் குழந்தையை விட்டுவிட்டு வெளியில் வந்து திண்டாட்டத்தில் மாட்டிக் கொண்டாய். நீ சொன்னதெல்லாம் நானும் கேட்டேன். நீ யாருக்காக இந்தப் பங்கு பிரிக்கச் சொல்லுகிறாயோ அந்தக் குழந்தை கூட, உன்னிடம் வர மறுத்து விட்டதென்றால், பின் என்னத்துக்கு இந்தச் சச்சரவு எல்லாம்? ‘இதெல்லாம் அவர்கள் போதனை அது, இது’ என்று காரணம் சொல்லாதே. அதிலெல்லாம் பிரயோஜனமில்லை. அது போகிறது. இப்போது முதலியார் சொன்னது போல் ‘எல்லாம் முழுகிப் போய்விடவில்லை.’ நீ காலையிலே பேசாமல் விசயம் மூணாம் பேருக்குத் தெரிவதற்கு முன்பே நல்லதனமா போய்விடுவது நல்லது.”

     நாகம்மாள் ஒன்றுமே பேசவில்லை. பதிலுக்குக் காத்திராமல் பெரியவரும் அப்பால் போய்விட்டார்.

     “சரி, வழக்கப்படி இது நடப்பதுதானே. என்ன நீங்க கூடப் பேச்சிலே மயங்கிப் போய்விட்ட மாதிரியிருக்கிறதே” என்றார் முதலியார்.

     “இதைப் போல ஐம்பத்தெட்டு பேச்சுத்தான் என்னை மயக்க முடியுமா? நான் வேறு சங்கதிகளைப் பற்றி ஆலோசித்தேன்” என்றார் மணியக்காரர்.

     “அதைத் தான் சொல்லுங்களேன்” என்று நாகம்மாள் கேட்டாள்.

     “நீ வீட்டுக்குப் போய்விடக் கூடாதா?” கொஞ்சம் தயங்கிக் கொண்டு தான் சொன்னார். அனைவரும் மௌனமாயிருக்கவே, “அங்கிருந்து கொண்டு நாம் காரியத்தைச் சாதிப்பதை விட வெளியில் இருப்பது அவ்வளவு சிலாக்கியமானதா?” என்றார்.

     “அது சிலாக்கியமோ, கிலாக்கியமோ, இனி அந்தப் பேச்சு இல்லை. நான் அந்தப் பக்கம் கூட தலைவைத்துப் படுக்க மாட்டேன். அவர்கள் கொளமாத்தைத் தெரிந்த பிற்பாடு அங்கு இருந்து கொண்டிருக்கலாமா? வெசம் வைக்கக் கூட அஞ்ச மாட்டார்கள். உங்களை நான் நம்பினேன். நீங்கள் எப்படி உட்டாலும் செரி.”

     அவளுடைய வேகத்தையும் உணர்ச்சி உருக்கத்தையும் கண்ட முதலியார், “அடடா ஒரேயடியாகக் கோவிக்கிறீர்களே. நாளைக்கு நாலு பேருக்கு எதிரில் சின்னப்பனிடம் காட்ட கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள்” என்றான்.

     “சும்மா இரப்பா, உனக்கு எழவு ஊடுன்னும், கலியாண ஊடுன்னும் வித்தியாசம் தெரிவதில்லை. சும்மா ஒரே சிரிப்புத்தானா? ஆனால் நீ சொன்னதிலும் உண்மையிருக்கிறது. அப்படிச் செய்தால் என்ன?”

     “எப்படி?”

     “எப்படியா? அதுதான் பொது மனிதர் பத்துப் பேரைக் கூட்டி இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்கலாமே. சின்னப்பன் நிலபுலன்களை விற்றுக் கொண்டு ஓடு விடுவதற்கா எல்லோரும் சாதகமாக இருப்பார்கள்?” என்று மணியக்காரர் சுற்றிலும் பார்த்துக் கொண்டே கேட்டார். கெட்டியப்பன், “இதிலெல்லாம் ஒண்ணும் காரியமில்லீங்க” என்றான்.

     “இன்னொரு வழி இருக்கிறது” என்று நாராயணசாமி கூறினான்.

     “என்ன?” என்று மற்றவர்கள் ஏக காலத்தில் கேட்டார்கள்.

     “நாளைக்குக் காலையிலேயே ஏத்துப்பூட்ட சின்னப்பன் தோட்டம் வந்ததும், போய் தடுத்துவிடுவது.”

     “என்ன நம்முடைய ஆட்களை விட்டா?” என்று மணியக்காரர் இடைமறித்தார். “இல்லெ இல்லெ. நாகம்மாளை விட்டே ஏன் என்று கேளுங்கள். அப்படிச் செய்தால் தான் அக்கம் பக்கம் நாலு பேருக்குச் சங்கதி பளிச்சுனு படும். அப்புறம் பேச்சு எடுப்பதற்கும் பேசுவதற்கும் வகையா இருக்கும்” என்ரான்.

     “ஒரு வகையில் எனக்கும் சரியாகத் தோன்றுதப்பா” என்று மணியக்காரர் ஆமோதித்தார்.

     “ஆனால் நான் ஒருத்தியும்...” என்று நாகம்மாள் சற்று தயக்கமாகச் சொல்லவும், “நான் எங்கே செத்தா போயிட்டேன்? கூட வேண்டுமானால் இன்னும் நாலு பேரைக் கூட்டி வாரேன்” என்றான் கெட்டியப்பன்.

     “அடடே, கலகத்திற்குப் போகிற மாதிரி அப்படியெல்லாம் செய்துடாதே. சும்மா எங்கேயோ அசந்தர்ப்பமா போன மாதிரி போ. அது கூட வேண்டியதில்லை. என்ன நாகம்மா, ஆள் எதற்கு வேண்டும் சொல்லு பார்க்கலாம்? பின்னால் தான் பேசிக் கொள்ள நாங்கள் இருக்கிறோம். எவ்வளவு ஆனாலும் செரி. நான் இருக்கிறேன். உன்னை அந்தரத்தில் விட்டுவிட மாட்டோம். தைரியமாக இரு” என்றார் மணியக்காரர்.

     “சரி காலையிலேயே நான் தோட்டத்துக்குப் போய் தடுத்துவிட வேண்டியது, அவ்வளவு தானே” என்றாள் நாகம்மாள்.

     “எங்கப்பா நம்ம தடியைக் காணோம்” என்று கெட்டியப்பன் எழுந்தான்.

     “நீயும் தூங்கப்போ” என்றார் மணியக்காரர்.



நாகம்மாள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27