27

     “தூங்கப் போ” என்று மணியக்காரர் கெட்டியப்பனிடம் சொல்லும் போதே, ‘இன்றைக்கு தூக்கமேது?’ என்று அவன் தன்னுள் எண்ணிக் கொண்டான். ஆனால் அதை யாரிடமும் சொல்லவில்லை. “இதோ அப்படியே” என அங்கிருந்து கிளம்பினான்.

     எங்கும் ஒரே இருள். மயிர் பிடித்தால் மயிர் தெரியாத அவ்வளவு இருட்டு. கரடுமுரடான நதிக்கரைத் திட்டுக்களைத் தாண்டிக் கெட்டியப்பன் தன் திசை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். மேலே போர்த்தியிருந்த துப்பட்டியை எடுத்து உருமாலாகத் தலையில் சுற்றிக் கொண்டு, “ஊருக்கூடிச் செக்குத் தள்ளுகிறதாம். ஊதி விட்டால் விழுகிற அந்த நோஞ்சானை தொலைக்க என் கையில் இருக்கிறது மருந்து” என்று வாய்விட்டுச் சொன்னான். யாராவது அக்கம் பக்கம் இருக்கிறார்களா என்று சுற்றிலும் ஒரு முறை பார்த்தான். அந்த மையிருளில் செடி, கொடிகளின் சாயல்தான் தெரிந்தது. பழைய பத்திய முறையை அனுசரித்து மருந்து கொடுக்கிறானா அல்லது சாஸ்திர சிகிச்சையைக் கையாளுகிறானா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

     இரண்டொரு இடத்தில் சேறு வழுக்கி விட்டதையும், குழுகுண்டுகளில் கால் இடறியதையும் சமாளித்துக் கொண்டு, நனைந்து போன கால் செருப்பைக் கழற்றித் தூர எறிந்துவிட்டு குடிசை போய்ச் சேர்ந்தான். இவனை எதிர்பார்த்துக் கொண்டு இரண்டு பேர் அங்கே காத்திருந்தார்கள்.

     இவனைக் கண்டதும், “அடே, என்னப்பா நம்பினால் பெரிய கல்லாத்தான் தூக்கி கொடுத்திடுவாய் போலிருக்குதே. எந்நேரம் வரச் சொன்னது? இப்போ வந்திருக்கிறாய்” என்று ஒருவன் சொன்னான்.

     இன்னொருவன், “குடிக்கத் தண்ணி கேட்டா குளிப்பாட்டக் கொண்டு வருவான். சாமி சத்தியமா பூசாரிக்குத் தெரியாதா? வெறும் பேச்சு பேசறதைவிட காரியத்தைப் பார்ப்போம்” என்றான்.

     “சரி, சரி, வாஸ்தவமப்பா” என்று கெட்டியப்பன் சொல்லி அவர்களுக்கு முன்னால் தானே வழிகாட்டிப் போவதிலிருந்து அவனுக்கு முன்பே விஷயம் தெரிந்திருக்க வேண்டும்.

     “ஆறிப் போனால் ருசிப்படாது. எல்லாம் சுடச்சுட பார்த்துடோணும்” என்றான் ஒருவன்.

     “என்ன கெட்டீனா, அவன் தனியாக அங்கே காவலுக்கு இருக்கிறான். ஒவ்வொன்றாக பதம் பார்த்து சரிகட்டி விட்டால்?” என்று மற்றவன் சொன்னான்.

     “அவனை உசிரோடு புதைச்சுட மாட்டேன். சரி எவனாச்சு முழிச்சுக் கொண்டிருக்கப் போறான். அங்கபோய் பேசிக்கலாம்” என்று கெட்டியப்பன் சொல்லவும் சம்பாஷணை அடங்கிற்று.

     காலடிச் சத்தங்கூட பலமாகக் கேட்காமல் நடந்து மூவரும் மடுவுத் தோப்புக்குள் நுழைந்து விட்டார்கள். அடிக்கு அடி பின்னிக் கிடந்த மரம், செடி, கொடிகளுக்கிடையே தங்கு தடையின்றி தாராளமாகச் சென்று ஒரு பாழடைந்த கிணற்று மேட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அந்தக் கிணறு ரொம்ப ஆழமில்லை. சும்மா பத்து அடிதான் இருக்கும். ஆனால் அந்த இருட்டில் வகை தெரியாமல் உள்ளே சிக்கிக் கொண்டால் ஊனமின்றிக் கரையேறுவது அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்ததே. அதற்குச் சற்றுத் தள்ளி ஒதுக்கமான ஓரிடத்தில் கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது. “அதோ அங்கு தான்” என்று ஒருவன் கை நீட்டினான்.

     “ஆமாம் கிணற்றுப் புறா மாதிரி ‘பொட, பொட’வென முழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான் பாரு. ஏண்டா டேய்” என்று கொஞ்சம் உற்சாகமாகக் கத்திவிட்டு, “மிச்சம் இருக்குதோ, இல்லையோ? எல்லாம் சுருட்டி வாய்க்குள் போட்டுக் கொண்டாயா?” என்றான் கெட்டியப்பன்.

     “போனது போக இருக்கிறது மிச்சம்” என்று தன்னிடம் வந்த விருந்தினர்களை உபசரித்தான் அங்கிருந்த மரியாதை தெரிந்தவன்.

     மூன்று பேரும் உட்கார்ந்தனர்.

     “சரக்குத் தயார் தானப்பா” என்று அங்கிருந்தவன் கூறிக் கொண்டே கலயங்களை எடுத்து வந்தான். புதிதாக அப்போதுதான் இறக்கிய தென்னங்கள்ளு ‘சொய்’ என்ற சப்தத்துடன் நுரை மிதக்க நின்றது. அதைக் கண்டதும் ஆவலாக ஒருத்தன் அப்படியே கலையத்தோடு தூக்கினான்.

     “என்னடா வெறி எடுத்தவனாக இருக்கிறாய். முதலில் இது முடியட்டும்” என்று பானையோடு வறுவல் வகைகளை அவன் எடுத்து வைத்தான். “பனங்கோட்டை ஒண்ணும் இல்லையா?” என்று பானம் செய்ய பண்டம் விசாரித்தவாறே கெட்டியப்பன் ஆகாராதிகளை சுவைக்கத் தொடங்கினான்.

     அன்றைக்கு அங்கு நடந்த கோலாகலங்களை எல்லாம் நம்மால் வர்ணிக்க முடியாது. அடடா! துண்டுக்கறியும் ஒவ்வொரு வாய் மதுவும் உள்ளே செல்லும் போது அவர்களுக்கு இந்த லோகத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பே இருக்கவில்லை.

     வெகுநேரம் கொண்டாட்டம் போட்ட பிறகு, இன்பச் சுற்று சுற்றிய பின் மூன்று பேரும் தலை சாய்த்தனர். மஹா மயக்கத்தில் அவர்கள் இந்த வெறும் நிலத்தில் கண் மூடினர். ரோஜாப்பூ மெத்தை அளித்திருந்தால் கூட நித்திரைக்கு லாயக்குப் படாதென்று தள்ளியிருப்பார்களென்று நினைக்கிறோம்.

     இத்தனை அமளி துமளியிலும் கெட்டியப்பன் நினைவு தவறாது மிதமாகவே இருந்தான். கண்கள் மட்டும் திரண்டு செஞ்சிவப்பா யிருந்தன. சிறு குழந்தைகள் கண்டால் நிச்சயம் பயந்துவிடும்.

     “என்னடா விடிந்து விட்டதா?” என்று தன்னோடு உட்கார்ந்திருக்கும் செங்காளியிடம் கெட்டியப்பன் கேட்டான். செங்காளி பொட்டென்று கைத்தடியை ஊன்றி எழுந்து பார்த்துவிட்டு, “இப்பொழுது தான் கிழக்கு வெளுக்கிறது. ஆச்சு விடிகிற சமயம் தான்” என்றான். அப்போது ஒரு காகம் ‘கா’ எனக் கத்தியது. “அடே, டே கோழி கூப்பிடுகிறதே?” என்று எழுந்தான் கெட்டியப்பன்.

     “எங்கே வயிற்றுக்குள்ளிருந்தா? இன்னும் சரியா செரிக்கவில்லை போலிருக்கிறதே?” என்று காளி சிரித்தான்.

     “நீயும் வா” என்று கெட்டியப்பன் சொல்லிக் கொண்டே நடந்தான். எங்கே என்று கேட்காமலே. “நம்ம ஆசாமிகளின் தூக்கம் கலைவது எப்போ?” என்று கேட்டுக் கொண்டே செங்காளியும் பின் தொடர்ந்தான். வேறு விஷயங்களில் மற்றவர்களுடன் கெட்டியப்பன் எவ்வளவு தூரம் சரசம் வைத்துக் கொண்டாலும் ஏதாவது அந்தரங்க காரியமாயிருந்தால் செங்காளியைத் தான் தன்னோடு இட்டுச் செல்வான். செங்காளியும் குருவுக்கு ஏற்ற உத்தம சிஷ்யனாகவே இருந்தான். சாமி மாடு போல அவன் வஞ்சகமின்றி வளர்ந்திருந்தான். பனைமரத்து அடிக்கட்டை போல இருக்கும் அவன் தேகம். ஊரார் சொத்தை தின்றே சேகேறியிருந்தது.

     “தடி, பத்திரம்” என்று மட்டும் கெட்டியப்பன் சொன்னான். அவன் கால்கள் நேராகப் போக மறுத்தன. சில கட்டைகளில் மோதிக் கொண்டன. பள்ளங்களில் ‘கிணுக்’கென இறங்கினான். “என்ன தடம் தெரியலையா?” என்று கேட்பதையும் கவனியாது ஆற்றுக்குச் செல்லும் இட்டேறியில் இறங்கினான் கெட்டியப்பன்.

     செங்காளிக்கும் கொஞ்சம் மசமசப்பாகத்தான் இருந்தது. இருந்தாலும் தடுமாறாது பின் நடந்தான். மிருதுவான கூதல் அடித்துக் கொண்டிருந்தது. பட்டிகளிலிருந்து உடம்பை உதறிக் கொண்டே பண்டம் பாடிகள் வெளிக் கிளம்பின. எங்கோ இரண்டொரு நாய்களின் அர்த்தமற்ற குரைப்புச் சத்தத்தோடு, ஆட்டுக்குட்டிகளின், ‘ம்மா’ வென்ற சப்தமும் சுருதிலயமாகக் கலந்தன. அவர் இருவரும் தோப்பைக் கடந்து, நதி மணல் தாண்டி ஊரடியில் உள்ள சின்னப்பன் தோட்டத்து வேலி வந்து சேர்ந்தனர். கெட்டியப்பன் கையிலிருந்த கழியால் வேலியை ஓங்கி ஒரு தட்டுத் தட்டினான். வேலி முட்கள் சிதறின. உள்ளே போக பெரிய வழி ஏற்பட்டது. “அந்தப் பக்கமாக தடம் இருக்கும் போது இது எதற்கு?” என்றான் செங்காளி. அந்த முட்களை சீராக எடுத்து வைக்கக் குனிந்தான். கெட்டியப்பன் திரும்பி, “வேறெ வேலை இல்லெ? காலையிலெ வேலி நடத்தான் இங்கே வந்தோமா? அங்கே பாரு கிணற்று ஓரம் ரொம்ப கூட்டமா இருக்கிறதா” என்றான்.

     செங்காளி பார்த்துவிட்டு, “சரியாகத் தெரியவில்லையே. ஆனால் யாரோ நிற்கிறாப் போலிருக்குது. என்ன நாகம்மள் சங்கதியா?” என்றான்.

     “ஆமாம் அந்த தொல்லைக்குத்தான் நான் போகிறேன்” என்றான்.

     மணியக்காரர் வீட்டில் ஆலோசித்ததைப் போலவே நாகம்மாள் காலையில் போரைத் தொடுத்து விட்டாள். தோட்டத்தில் காலையில் ஏற்றுப் பிடிக்க வந்த சின்னப்பனைத் தடுத்தும் விட்டாள். தொல்லை ஆரம்பமாகி விட்டது. இனி எப்படி முடியுமோ?

     இவர்கள் கிட்ட நெருங்க நெருங்க சின்னப்பன் கடுமையாக அதட்டிப் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

     “உங் கையைக் கால முறுச்சிருப்பேன். எனக்கு வந்த கோவத்தெ அடக்கீட்டேன். ஓடிப்போ, எம் முன்னாலே நிக்காதே!” என்றான் சினத்தோடு.

     “என்ன? நானா ஓடறடு? தலை துண்டாத்தாம் போவட்டுமே” என்றாள் நாகம்மாள்.

     “அவ்வளவு தைர்யமா உனக்கு? அப்படீன்னா இன்னைக்கி அடிதடிக்கினே ஆளுகளையும் வரச் சொல்லிருக்கிறாயா? ஒரு கை பார்த்துட்டுத் தாம் போக உத்தேசமா?” என்று சின்னப்பன் ‘படபட’வெனப் பேசிக் கொண்டே பின்னால் திரும்பினான்.

     அவன் சொல்லியவாறே வந்தவர்களைப் போன்று கெட்டியப்பனும் செங்காளியும் காட்சியளித்தார்கள்.

     அவர்களிருவரையும் கண்டதும் நாகம்மாளுக்கு மனம் ‘பகீர்’ என்றது. என்னவோ முன்னெப்பொழுதும் கண்டிராத ஒரு அதிர்ச்சி அவள் தேகத்தை நடுக்கியது.

     எதிரில் நின்று கொண்டிருந்த சின்னப்பனையும் அவனுக்குப் பின்னால் பனங்கருக்கோரத்தில் முத்தாயியை இடுப்பில் வைத்துக் கொண்டிருந்த ராமாயியையும் ஏக காலத்தில் பார்த்தாள். தன்னையே ஒரு தரம் மேலும் கீழும் பார்த்துக் கொண்டாள். அவள் கட்டியிருந்த தூய வெள்ளைக் காடாப்புடவை காற்றில் ‘படபட’வென அடித்தது. அந்தப் புடவைக்கும் சின்னப்பனுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருப்பது போலப் பட்டது. ஆமாம்! அன்று தாலி வாங்கின போது ‘பிறந்திடத்துக்கோடி’ அவளுக்குச் சுற்றின போது அருகில் நின்று கொண்டிருந்த சின்னப்பன் கதறியது அவளுக்கு இப்போது ஞாபகம் வந்திருக்கலாம். அவளால் ஒருவரையும் ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை.

     சின்னப்பனுக்கு அடங்காத கோபம் வந்தது. பனம் கருக்கு ஓரம் நின்று கொண்டிருந்த தன் மனைவியை “இங்கு வா” என்று அழைத்தான். நல்ல நாளிலேயே பலமாகப் பேசாதவள் இவைகளைக் கண்டதும் பதுமை போல் மௌனமாகி விட்டாள். இடுப்பிலிருந்து குழந்தை கீழே இறங்க முயற்சித்தது.

     சின்னப்பன் உக்கிரமாக, “நீங்க ரண்டு பேரும் அவசிபார்சுக்கு வந்து சிப்பாய்களா? செரியான காணியாளனுக்கு பொறந்தவங்க தானா?” என்று ஆத்திரத்துடன், வந்தவர்களைப் பார்த்துக் கேட்டான்.

     அப்போதும் அவன் வேகம் தணியவில்லை. இரண்டடி முன் வந்து...

     “இங்கே ஒரு கணம் நின்னுக்கிட்டிருந்தீங்கன்னா, அப்புறம் என்ன நடக்கும்னு தெரியாது!” என்றான். பிறகு சற்று நிதானித்து செங்காளியைப் பார்த்து, “அட, ‘முண்டைப்பயன் செங்காளி மூனூட்டுக்குப் பங்காளி’ன்னு செல்வாந்திரம் சொல்லுவாங்க. உனுக்கு இவ்விடத்தில் என்னடா வேலெ.”

     செங்காளிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

     ஆனால் கெட்டியப்பன், கையிலிருந்த தடியைப் பிடுங்கிக் கொண்டு, “இப்போ என்ன சொன்னாய்? என்ன நடந்திரு?” என்று விரைப்பாகக் கேட்டுக் கொண்டே முன்னால் போனான்.

     “மண்டைக் கிறுக்கு எடுத்து விட்டதா? நீ வருகிற விசையைப் பார்த்தா உனக்குப் போங்காலம் தட்டீட்டது போலிருக்குது” என்று சின்னப்பன் மடிக்குள் கையை விட்டான்.

     நிலைமை எக்கச்சக்கமாய் விட்டதால் பயமுறுத்தத்தானோ என்னவோ சின்னப்பன் கத்தி எடுக்கப் போகிறான் என்று நினைத்துச் செங்காளி, “கெட்டீனா, இந்தா நில்லு அவசரப்படாதே” என்று கூறி அவன் கையிலிருந்த தடியைப் பிடுங்கப் போனான். ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சிவிட்டது. கெட்டியப்பன் தன் கைத்தடியால் ‘மடா’லென்று ஓங்கிச் சின்னப்பன் தலையில் அடித்துவிடான். அந்த அடியின் வேகத்தால் தடி கூடச் சின்னாபின்னமாக முறிந்து விட்டது.

     சின்னப்பன் நிலை கொள்ளாது பூமியில் சாய்ந்தான்.

     சிரசினின்றும் ரத்தம் மளமளவென்று பெருகியது. சித்திரை வெயிலில் சோரும் வாழைக் குருத்தைப் போல அவன் அங்கங்கள் சுருங்கின. முதலில் சுவாசம் பலமாகி, பின் மெதுவாக அடங்கிற்று. குழந்தை ‘ஹே’ வெனக் கத்தி ராமாயியைத் தழுவியது. ராமாயி ‘ஹே’வெனக் கதறிக் கொண்டு சின்னப்பன் மேல் விழுந்தாள்.

முற்றும்.



நாகம்மாள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27