ராஜ மோகினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) ஆசிரியர் உரை வாசக நேயர்களே! தமிழகத்தின் ‘பொற்காலம்’ என்று வரலாற்றுப் பேராசிரியர்கள் மிகப் பெருமிதத்துடன் கூறிடும் காலம் சோழர்கள் தமிழகத்தில் ஆண்ட சிறப்பு காலத்தையே! சோழ மாமன்னர்களில் இராஜராஜனும், இராஜேந்திரனும் இரு பெரும் ராஜ ரத்தினங்கள் என்று வங்கத்தின் வரலாற்று மேதை திரு. சர்க்கார் அவர்கள் மிகச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் கே. கே. பிள்ளை அவர்கள் தமது ‘தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்’ என்னும் நூலில் ‘இராஜேந்திரனின் வடநாட்டுப் படையெடுப்பானது ஒரு பெரும் திக்கு விசயமாகும். வடஇந்தியாவில் அவன் பல மன்னர்களை வென்று வாகை சூடினான். கஜினி முகமது கி.பி. 1018 கன்னோசி ராஜ்யபாலனை வென்று, வழக்கம் போல கோயில்களை இடித்தும், அவற்றின் உடைமைகளைச் சூறையாடியும், ஊருக்கு எரியூட்டியும், நாட்டுக்குப் பேரிழப்பை விளைத்தான். தனக்கு எதிராகக் காஜுராஹோ மன்னன் வித்தியாதரன் ஒரு கூட்டணி நிறுவியதற்காக அவனை ஒடுக்க எண்ணி 1021-22ல் அவன் மீது படையெடுத்து வந்தான், ஆனால் இதே ஆண்டுகளில்தான் முதலாம் இராஜேந்திரன் கங்கை கொள்ளுவதற்காக வடநாடு விசயம் செய்தான். இந்த வரலாற்று நவீனத்தின் அடிப்படை மேலே விளக்கியுள்ள பேராசிரியரின் கருத்தின் வழி பிறந்ததுதான். கஜினியும் இராஜேந்திரனும் சந்தித்தது போரில் என்பதைக் காட்டிலும் சாகசமான ராஜதந்திரப் போரில் என்பதனை வலியுறுத்தும் பான்மையில் நான் இதனை எழுதியுள்ளேன். நான் இதுகாறும் எழுதியுள்ள வரலாற்று நவீனங்கள் யாவினும் பெரும்பாலான பகுதியை உண்மையான வரலாற்று விளக்கத்துக்கும் சிறுபான்மையை நவீனம் என்ற அம்சத்துக்காகச் சேர்க்க வேண்டிய ருசிகரமான கற்பனைக்கும் இடமளித்து வரும் முறையிலேயே இந்நவீனத்தையும் எழுதியுள்ளேன் என்பதை வாசக நேயர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறேன். அன்பன் ய. லட்சுமி நாராயணன் 03-08-1982 சென்னை-17. |