ராஜ மோகினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

18

     ‘இந்துஸ்தானத்தின் இணையற்ற மாமன்னர், கீழை நாடுகளின் சூரியன்’ என்று சீனரும் மற்ற உலக நாடுகளில் உள்ளவரும் விருந்தளித்து மதித்த சோழ மாமன்னன் பரகேசரி இராஜேந்திர சோழ தேவன் அம்மாபெரும் மண்டபத்தில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். அரபு நாட்டுக் கலிபாவின் பிரதிநிதியாக வந்த அலிமன்சூர், அவனுடைய குருநாதர் இருவரும் அந்த மண்டபத்தில் கஜினி முகமது பின் தொடர நுழைந்து சோழனை வணங்க “வாருங்கள் மதிப்புக்குரிய காலிபாவின் பிரதிநிதிகளே... கொங்கனத்தில் இறங்கி இங்கு இவ்வளவு விரைவில் வந்தது பற்றி மகிழ்ச்சி. அங்கு அரபு நாட்டில் கலிபா மற்றவர்கள் நலம் என்பது உம் வரவிலிருந்தே புரிகிறது. நல்லது... அப்படி அமரும் முதலில்” என்று அமர்ச்சியுடன் அவர் கூறியதும் மும்முறை குனிந்து சலாம் செய்த காலிபாவின் தூதர் தமது அரசர் அளித்திருந்த பரிசுகளைக் கொண்டு வரும்படி உத்திரவிட பலர் ஓடோடி வந்தனர் பரிசில்களுடன்.

     சுல்தான் கஜினிக்கு எல்லாமே ஏதோ கனவில் நிகழ்வனவாகவே தோன்றியது.

     ‘அரபு நாடு எங்கே...? தமிழ் அரசன் எங்கே? எதுவுமே புரியவில்லையே. கலிபாவே தமது அன்பு காணிக்கைகளை அளிக்கும் அளவுக்குப் பெரியவனா என்ன? நான் எத்தனை நாடுகளை அழித்திருக்கிறேன்? எத்தனை கோயில்களை இடித்திருக்கிறேன்? எத்தனை விக்கிரஹங்களை உடைத்திருக்கிறேன். அம்மாதிரி இந்தச் சூரியன்- சூரியன் என்று இவர்கள் கூத்தாடும் இந்தச் சோழன் செய்திருக்கிறானா? ஏதோ பல நாடுகளை வென்றிருக்கிறானாம். கடல்களில் இவனுடைய பெரும் கப்பற்படை ஆட்சி செலுத்துகிறதாம். என்ன இருந்து என்ன... இவன் ஒரு காபீர்தானே. இது ஏன் நம் மதிப்புக்குரிய கலிபா அவர்களுக்குப் புரியவில்லை.’

     இவ்வாறு குமுறிய எண்ணங்களால் திணறிய கஜினியின் காதில் “எங்கள் வணிகர்களுக்கு உங்கள் கடலோடிகள் செய்த பேருதவிக்கு உடனடியாக நன்றி கூறும்படி கலிபா கட்டளையிட்டுள்ளார்.”

     “நல்லது. மகிழ்வுடன் ஏற்றோம். எனினும் இது எங்கள் கடமை. யவனர்கள் கலங்கள் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போகாமல் கடலோடும் நெறிகளை மீறியது பெருங்குற்றம்” என்றான் சோழ மன்னன்.

     “இன்று சோழர் சிறையில் அந்த நாலாயிரம் பேர்களும் இருப்பதாக அறிய மிக்க மகிழ்ச்சி என்பதையும் அறிவிக்கச் சொன்னார்” என்று கலிபாவின் பிரதிநிதி கூறியதும் சுல்தான் முகமது கஜினி திடுக்கிட்டான்.

     ‘இதென்ன உளறல்... ஆனானப்பட்ட யவனர்கள் நாலாயிரம் பேர்களை இந்தச் சோழன் சிறை பிடித்தானா? இதெல்லாம் சாத்தியமா? நமது மதிப்புக்குரிய அரபு நாட்டுத் தலைவர்களாலேயே செய்ய இயலாத ஒன்றை இவன் செய்ததாக ஏன் உளறுகிறார் இந்தக் கலிபாவின் மகன்...’

     “நமது கடலோடிகள் அவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்குவர்.”

     “எங்கள் அரபு வாணிகன் இருநூற்று வரைப் பிடித்திருப்பதாகவும் அறிந்தோம்...”

     “அப்படியா? நாகச்சந்திரன் எம்மிடம் இது பற்றிக் கூறவில்லை” என்று நாகச்சந்திரன் நின்ற பக்கம் திரும்பியதும், சட்டென்று எழுந்த அவர், “மிகச் சின்ன விஷயம் சக்கரவர்த்திகளே. இவர்கள் கடல் கொள்ளையடித்ததாக உறுதிப்பட்டிருக்கிறது.”

     “அநியாயம். அரபு வீரர் மீது கையைவைக்கும் துணிச்சல் ஒரு காபீருக்கு இருப்பதை நாம் பொறுக்க முடியாது...” என்று திடீரென்று கத்திவிட்டான் கஜினி.

     அதுவரை அரபு தூதுவரும், சோழரும் நடத்திய உரையாடலைக் கவனித்தபடி அந்த மண்டபத்தில் அமர்ந்திருந்த மன்னர்கள் துணுக்குற்றெழுந்தனர். அவர்கள் கைகளில் வாட்கள் மின்னின.

     அரபு தூதுவர் பதறிப் போய், “ஏ! சுல்தான், உனக்கு என்ன வந்துவிட்டது திடீரென்று? ஏன் இப்படி மரியாதையில்லாமல், யார் முன்னே நிற்கிறோம் என்று அறியாது கூச்சல் போடுகிறாய்?” என்று கலிபாவின் தூதுவன் சுல்தானைப் பிடித்து உலுக்கியதும் அவன் சற்றே நிலைகுலைந்து போனான்.

     ‘தனது அரபு சகோதரர்களைக் சிறைப்பிடித்தவனை வெட்டு குத்து என்று கட்டளையிடாமல் தன்னையே தாக்கிப் பேசுகிறாரே இவர்’ என்று எண்ணிக் குமைந்து போனான்.

     “இந்துஸ்தானத்தின் இணையற்ற சக்கரவர்த்திகளே! மன்னிக்க வேண்டும். தங்கள் மனதில் ஒரு சிறிதளவும் கிலேசமுண்டு பண்ணிவிடக் கூடாது என்பது கலிபாவின் கட்டளை. எனவே இந்தப் பதட்டக்காரனின் சார்பில் நானே மன்னிப்பு கோருகிறேன்” என்றார் அரபு தூதுவர்.

     “தேவையில்லை. மதிப்புக்குரிய கலிபாவின் சிறப்புக்கு இங்கு ஊறு எதுவும் நேராது. நேர்மையான அரபுகளுக்கு ஆபத்து எதுவும் நேராது. அது இருக்கட்டும். தங்களுடன் வந்திருக்கும் இன்னொருவரான அவர் யார்? ஏன் திடீரென்று அப்படிக் கத்தினார் என்பதை அவர் வாயாலேயே அறிவித்திட அனுமதிக்கிறோம்” என்றான் சோழன்.

     அரபு தூதுவர் மவுனம் ஆனார்.

     அவையினர் யாவரும் வியப்பும் ஏளனமும் முகத்தில் களையிட சுல்தான் முகமதை உற்றுப் பார்த்தனர்.

     கஜினிக்கு இதெல்லாம் தாங்கவில்லை. இனியும் பொறுப்பதற்கில்லை. துணிச்சலுடன் கத்தினான்.

     “நான், நான் யாரா? நான்தான் மகாபயங்கரனான விக்கிரஹ நிக்கிரஹன். இந்துஸ்தானத்திலுள்ள காபீர்களின் பரம வைரி. என் பெயர் அமீர் சுல்தான் முகமது. கஜினி என்றாலே நடுங்கும் இந்துஸ்தானம். இந்தப் பேரும் ஊரும் போதுமல்லவா?” என்று ஆத்திரத்துடன் கேட்டான் கஜினி.

     சோழன் அவனை வியப்புடன் பார்த்துவிட்டு “ஓகோ! அந்தக் கஜனி முகமது நீதானா? நல்லது. நம்முடைய தூதுவரான் ராஜா ஜெகவல்லப தேவர், உன்னைப் பற்றிக் கூறியுள்ளார். அது உண்மை என்று நீ இப்போது நீ நிரூபித்து விட்டாய். உனக்கு ஒரு முகூர்த்த காலம் அதாவது இரண்டரை நாழிகை, நம்முடன் பேசுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்படும். அப்போது நீ கூற வேண்டியதையெல்லாம் கூறிவிடலாம். நல்லது. இப்போது நீ போய் உனக்கு அளிக்கப்பட்டுள்ள இடத்தில் அமைதியாக அமர்ந்து இங்கு நிகழ்வதைப் பார்த்துக் கொண்டு இரு. உம்... நமது நண்பர்கள் யாவரும் தமது வாட்களை உறையில் இட்டு அவரவர்கள் இடத்தில் அமர்ந்திருங்கள். எகிப்து நாட்டு பேராசன் மகன் அதோ வருகிறான். உலகத்தின் புராதன நாட்டுப் பெருமகனை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்” என்றதும் “ஜெய் இராஜேந்தர்!” என்று அனைவரும் வாழ்த்தொலி எழுப்பினர்.

     அதே சமயம் அம்மண்டபத்துள் நுழைந்தான் எகிப்திய அரசகுமாரன் அறுபது வீரர்கள் புடைசூழ.

     “அல்லாகு அக்பர்” என்று இராஜேந்திர சோழன் கூற எகிப்திய இளவரசன் தாழ்ந்து பணிந்து வந்தணை செய்ய, அவனைக் கைலாகு கொடுத்து வரவேற்றான் சோழன்.

     “தங்களுக்கு எல்லா நலமும் கூடத் தாம் இறைவனை வழிபடுவதாக என் தந்தை அறிவிக்கச் சொன்னார்.”

     கஜினி திகிலடித்து நின்றான் இக்காட்சிகண்டு.

     ‘இதெல்லாம் உண்மையா? அல்லது காண்பதெல்லாம் கனவா?’ தன் உடம்பை ஒரு தரம் கிள்ளிவிட்டுக் கொண்டான். ‘உண்மைதான். வலிக்கிறதே. அப்படியானால் எகிப்திய மாமன்னன் கூட இந்தக் காபீரிடம் வணக்கம் தெரிவிக்கிறான்.’

     எகிப்திய இளவரசன் ஏகப்பட்ட பரிசில்களைத் தர அவற்றைத் தமது மெய்யுதவிகள் மூலம் பெற்ற சோழன் ஒரு தங்கக் கோபுரத்தை அவனுக்குப் பிரதிப் பரிசாகக் கொடுத்தான். எகிப்தியனும் அதை மிகவும் மதிப்புடன் பெற்று அதன் வேலைப்பாட்டினை, நீண்ட நேரம் வியப்புடன் பார்த்தான்.

     “எங்கள் நாட்டுப் பிரமிட்டுக் கோபுரங்களை நினைவூட்டும் இந்தக் கோபுரம் மிக வேலைப்பாடாக இருக்கிறது. தவிர எங்களுடைய பிரமிட்டுகளை உருவாக்கியதே கூட உங்கள் தமிழர்கள்தான் என்று சில வரலாறுகள் கூறுகின்றன. இதைப் பார்த்தால் அது உண்மையாகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது...” என்றான் எகிப்திய இளவரசன்.

     “இளவரசனே, இன்றைக்குச் சற்றேறத்தாழ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே உருவானவை உங்கள் பிரமிட்டுக் கோபுரங்கள். அதே சமயம் எங்கள் முன்னோர் அங்கெல்லாம் கடல் கடந்து வந்திருக்கின்றனர். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எங்கள் முன்னோர் கடலோடி பல நாடுகளில் தங்கிப் பல வகையில் செயல்பட்டுள்ளனர். சுமேரியத் தமிழ் மக்கள் இன்றளவும் பாபிலோனியாவில் வாழ்கின்றனர். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிடக் கலையில் மிகத்திறமையாக செயல்பட்ட அம்முன்னோர் நீங்கள் கூறுவது போல அங்கு உலகம் பிரமிக்கும் பிரமிட்டுக் கோபுரங்களை உருவாக்குவதில் உதவி புரிந்தனர் என்றால் அதிசயம் இல்லை. உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு நிம்மதி... நீங்கள் எல்லோரும் புதிய மதத்தில் சேர்ந்த பிறகு உங்கள் பரம்பரையினர் அவற்றையெல்லாம் இடித்துத் தள்ளாமல் காத்து வருவதே பெருமைக்குறியது” என்றார் சோழர்.

     எகிப்திய இளவரசன் சட்டென்று “நாங்கள் இஸ்லாமியர். எனவே ஒழுக்கமும் அடக்கமும் எங்கள் சமயத்தின் அடிப்படை. இந்த அடிப்படைக்கு அழிவு விரோதமானது” என்றான்.

     “எனக்குத் தெரியும் அது. ‘பல கடவுள்களை, மார்க்கங்களைப் பின்பற்றுபவர்களை புறக்கணித்து விடுங்கள்’ என்றுதான் உங்கள் மறை கூறுகிறதேயன்றி அவர்கள் அழித்து ஒழித்து நாசமாக்கி விடுங்கள் என்று கூறவில்லை” என்றான் சோழன்.

     “ஆமாம் நம்மைப் பழிப்பவரைக் கூடப் பொறுத்தருள்க என்றே வணக்கத்துக்குரிய நாயகம் அவர்கள் அருளுரை புரிந்துள்ளார்” என்றான் அரபு நாட்டுக் கலிபாவின் குமாரன்.

     “அதுமட்டுமல்ல இளவரசரே... மக்கத்துத் தீர்க்கதரிசியான நபிநாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு கூறியுள்ள போதனைகள் யாவுமே சிறப்பானவை. மனித குலத்துக்குகே நல்வாழ்வு வாழ வழிகாட்டும் நல் அருள் வாக்குகளாகும்.”

     இவர்கள் இருவரும் உரையாடுவதைக் கேட்க கேட்க கஜினிக்கு என்ன செய்வது அல்லது என்ன பேசுவது எப்படிக் குறுக்கிட்டு எங்கள் இஸ்லாம் பற்றி பெருமையைப் பேச நீ யார்? என்று குற்றஞ்சாட்டுவதா என்றெல்லாம் ஆராய்ந்தானேயன்றி சோழனுக்கு எவ்வாறு தன் சமயம் பற்றி அறிவு ஏற்பட்டது என்று அறிய ஆவல் கொள்ளவில்லை.

     ஆனால் சோழன் நோக்கம் முற்றிலும் வேறு. அங்கு கூடியுள்ளவர்கள் யாவரும் வடபாரதத்தில் மதிப்புள்ள மன்னர்கள். அதாவது காஜுராஹோவின் வித்யாதரன் போன்றவர்கள். எனவே ஒருவர் விடாமல் யாவரையும் மதித்துப் பேசிப் பழகுவதுதான் இன்றைய தனது விஜயத்துக்கு மிகவும் பயனானது என்பதில் கருத்தாயிருந்தான் சோழன். எனவே வித்யாதரன் மூலம் அத்தனைப் பேரையும் ஒருவர் பின் ஒருவராக அறிமுகப்படுத்திக் கொண்டான். இந்த அறிமுக உரையாடல் முடிய ஒரு நாழிகையாகிவிட்டது. பிறகு சோழன் தன்னுடைய காஜுராஹோ விஜய நோக்கம் பற்றி ஒரு அமுக்கமான ஆனால் வெகு அற்புதமானதோர் உரையை ஆற்றினான்.

     “வடபாரதத்தின் மன்னர்கள் அனைவரும் வெளிநாட்டு மன்னர்களும் இங்கு கூடியிருப்பது ஒரு வரலாற்றுப் பெருமை பெற்ற சம்பவம். நான் தமிழகத்திலிருந்து இந்நாட்டிலும் கடல் கடந்த நாடுகளிலும் திக்விஜயம் செய்யும் ஒரே காரணம், சிதறிக் கிடக்கும் நாம், சிற்றரசர்களாகவும் குட்டிச் சமஸ்தானங்களாகவும், பிரிந்து நிற்கும் நாம் ஒன்றுபட்டு அதாவது இணைந்து ஒரு ஐக்கிய நாடாக இந்தப் பரந்த பாரதத்தை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கினால் மாற்றார்கள் நம் மீது வன்முறைகளை ஏவி கொடுமையான போர்களை நடத்துவதைத் தடுத்து நிறுத்த முடியும். குட்டி அரசர்கள் அந்நியர்களிடம் தோல்வி காண்பதால் சற்றுப் பெரிய அரசர்கள் ஒதுங்கியிருக்க முடியாமல் தனியாகவே மோத நேருகிறது. நமக்குள்ளே உள்ள வேற்றுமைகள் உடன்பாடற்ற நிலை அவர்களுக்குச் சாதகமாகி விடுகிறது. இதைத் தடுக்க வேண்டுமானால் நாம் இந்நாட்டை ஐக்கிய நாடாக அதாவது மகாபாரதமாக உருவாக்கிட வேண்டும். அதற்கு ஒரே வழி நெல்லிக்காய்கள் போல சிதறிக் கிடக்கும் நாம் ஒரு குடைக்கீழ் ஒன்றுபட வேண்டும். நான் இதற்கான முயற்சியாகவே இந்த திக்விஜயத்தை மேற்கொண்டேன். என்னுடைய நோக்கத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் என்னுடன் போர் செய்தார்கள். கடல் கடந்த நாடுகளிலும் நான் இவ்வேற்பாடுகளைச் செய்து வருகிறேன்.

     “நாம் இப்பொழுதே ஒன்று சேராவிட்டால், இந்நாட்டைக் குட்டி ராஜ்யத் தான்றோன்றிகளின் பகடைகளாக இல்லாமல் ஒன்றுபட்ட இணைப்புச் சக்தியாக மகாபாரதத்தை நிறுவ முயற்சிக்காது போனால் இனி ஒரு ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் முடியாது. அண்மைக் காலத்தில் அதாவது முன்னூறு முற்றூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அரபு நாட்டில் சமயம் ஒன்று புதிதாக அரும்பி அங்குள்ளவர்களை பாரசீகம், துருக்கி, எகிப்து முதலிய நாட்டிலுள்ளவர்களை யெல்லாம் அம்மதத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்து இன்று அவர்கள் யாவருமே ஒரே இனத்தவராக மாற்றிவிட்ட அதிசயத்தைக் கண்டோம். அதே போன்று நாம் இங்கு ஒரு புது சமயம் ‘ஐக்கிய பாரதம்’ என்ற லட்சியத்தையே ஒரு புதிய சமயமாக ஏற்றுக் கொண்டோமானால் பிறகு கொள்ளை, கொலை, நாசம் செய்வோர் வருவதற்கில்லை. சாந்த்ராய் போன்றோர்கள் தவித்துக் கலங்க வேண்டியதில்லை. கன்னோசி வீழ்ச்சியில்லை. சோமநாதபுரம் நிச்சயமாக அழிந்திராது. பீம்தேவ் நசிந்திருக்க மாட்டான். இங்கு காஜுராஹோவில் தனித்து ஒதுங்கிய நிலையில் ராஜா வித்யாதரன் இருப்பதும், ஹரதத்தன் மதம் மாறி தன்னை... நான் இவ்வாறு கூற வருந்துகிறேன். எனினும் உண்மையை நாம் காணாமல் இருக்க முடியாது. அடுத்த அரை நாழிகையில் நான் கஜினியுடன் தனித்துப் பேச இருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு நீங்கள் அனைவரும் இங்கு என்னை மதித்து வந்தது மட்டும் போதாது... நம் வாழ்நாளில் நாம் அனைவரும் ஒன்றே. இந்த நாடும் ஒன்றே என்ற முடிவுக்கு வர இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால் எனது திக்விஜயம் அதன் இலட்சியத்தை அடைந்து விட்டதாகவே கருதுவேன். மாறாக நடப்பின் காலம் நமக்கு ஆதரவாக இல்லை என்றே நினைத்து ஊர் திரும்புவேன். எனவே எல்லோரும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கூட்டாகச் சிந்தித்து ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டுகிறேன். இந்த இடத்தில் நான் இன்னொரு முக்கிய விவரத்தையும் கூற விரும்புகிறேன். இங்கு அரபு, எகிப்து நாடுகளிலிருந்து அந்நாட்டு இளவரசர்கள் வந்துள்ளனர். கஜினியும் வந்திருக்கிறான். அவர்கள் இருக்கும் போது நாம் இம்மாதிரி விஷயங்களைப் பேசிக் கொள்வது சரியா என்று கவலை கொண்ட முகத்தினராகச் சிலர் என்னைப் பார்ப்பதையும் நான் காண்கின்றேன். கவலை நியாயமே. ஆனால் இன்று மேற்கொள்ளப் போகும் முடிவுகளை இவர்கள் அறிந்தால் - அது மிகவும் பயனானது. மாறாகப் போனால், இந்தக் கஜினி. மட்டுமில்லை. இன்னும் பலர் வேறு பெயரில், வேறு வழியில் ஒருவர் பின் ஒருவராகப் படையெடுத்து வந்து கொண்டேயிருப்பார்கள். நான் அங்கே தமிழகத்தில் இருந்து கொண்டு உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? எனவே நாம் நேராகச் செயல்படும் முடிவுக்கு வந்தால் இவர்கள் நிச்சயமாக இனி இந்நாட்டுக்குள் வர யத்தனிக்க மாட்டார்கள். எனவே நிதானமாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். இவர்களும் அதை அறியட்டும். ஏனெனில் நாம் செய்யும் முடிவைப் பொறுத்துதான் இவர்கள் அதாவது இந்த அன்னியர்கள் இங்கு வருவதும் வராதிருப்பதும் முடிவாகும். எனவே இந்த நாடு ஒன்றாக, ஒரே தலைமையில், இருக்கும் தனிப் பெரும் நாடாக வேண்டுமா? அல்லது இப்போதுள்ள மாதிரி நெல்லிக்காய்கள்தானா? என்று சீக்கிரமே நீங்கள் யாவரும் கூடி ஒரு முடிவைச் செய்யுங்கள்...”

     சோழன் தனது தீர்க்கமான உரையை முடித்ததும் எவருமே வாய் திறக்கவில்லை. ஏன்... கஜினி கூடத்தான் மவுனமாக விழித்தான்.

     “கஜினி சுல்தான், இனி நாம் சற்றேத் தனித்துப் பேசலாம்” என்று அறிவித்த சோழர் தன்னை அழைக்கிறார் என்றதும் சில நொடிகள் செயலற்று நின்றான்.

     இது நாள் வரை அவன் தனியாக எந்த ஒரு அரசருடனும் எந்த ஒரு விஷயத்தைப் பேசி முடிவு செய்ததில்லை. இப்போது தன்னையே, நேரில் அழைத்தால்...?

     “மற்றவர்களும்... கஜினியின் நண்பர்களும் அவருடன் சேர்ந்து வரட்டும்” என்று சோழன் அறிவித்ததும் ‘இதென்ன அதிசயம். நம் மனநிலையைச் சட்டென ஊகித்துவிடுகிறான் இவன்’ என்று பரபரத்த வண்ணம் கஜினி எழுந்து நடக்க யத்தனித்ததும் மற்றவர்களும் அவனைத் தொடர்ந்தனர்.