உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ராஜ மோகினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 10 தட்சிணலாட தேசத்தின் ரணசூரன் பெயரில் மட்டும் அல்ல, செயலிலும் சூரன்தான்! அப்படி இல்லாவிட்டால் மற்றவர்களைப் போல யோசனை செய்து செய்து காலமோட்டுவானேயன்றி ஜெகதேவ வல்லபேந்திரனுக்குத் துணையாக வருகிறேன் என்று வந்திருப்பானா? தந்தபுக்தி தர்மபாலனும், தட்சிணவங்க கோவிந்த சந்திரனுடன் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலை ரணசூரன் பூபாள நாட்டை நெருங்கிவிட்ட சோழ தூதன் ராஜா ஜெக தேவனிடம் வந்து சேர்ந்தான் அதிவேகமாக! “நான் இரண்டுங்கெட்ட நிலையில் இருக்க விரும்பவில்லை சோழ மகாசேனாதிபதி! நீங்கள் சோழ சக்கரவர்த்திகளின் தூதுவராகச் சுல்தானிடம் போவதைக் கேள்விப்பட்டவுடனேயே உங்களுக்குத் துணைவனாக வர முடிவு செய்துவிட்டேன். எனவே இதை ஏற்பதும் நிராகரிப்பதும் உங்கள் விருப்பம்!” என்று அடக்கமாகக் கூறியதும் வல்லபேந்திரன் மிக்க மகிழ்ச்சியுடன் கைலாகு கொடுத்து ஏற்றுக் கொண்டான். ரணசூரன் சோழ தூதுவரின் உதவி என்ற செய்தி எங்கும் பரவியதும் வட இந்துஸ்தானமே வியந்தது. மதுராவிலுள்ள மஹாபரணச் சிற்றரசன் ரவிகுல சந்திரன் தன்மான வீரன். அவன் முன்பு மிகத் தைரியமாகவே எதிர்த்துப் போரிட்டான் முஹம்மதை. ஆனால் முடிவில் தோல்வியுற்றான். எனவே தோல்வியுற்ற பிறகு உயிர் வாழ்வது தன்மானத்துக்கு இழுக்கு என்று முடிவு செய்து தங்கள் வாள்களாலேயே தங்களை மரணத்துக்குள்ளாக்கிக் கொண்டனர். * *நிஜாமுதீன் தமது ‘தபகதீ-இ-அக்பரியில்’ குலசந்திரனின் இந்த மரணத்தைக் குறிப்பிட்டுள்ளார். வேறு சில இஸ்லாமியர்களான வரலாற்றாசிரியர்களும் இதைப் பற்றி எழுதியுள்ளனர். ரண சூரனும் ஒரு தன்மான வீரன். போரில் தன்னிடம் தோற்றாலும் அவனுடைய அபாரப் போர் திறமையைப் பாராட்டி சோழ இராஜேந்திரன் தட்சிணலாடம் எப்போதும் போல அவனுடைய நாடே என்று அறிவித்திருந்தது அவன் மனதில் பெரிய அளவுக்கு மாறுதல் உண்டாக்கியது. அதன் பிரதிபலிப்பே அவனுடைய இந்த தூதனின் ‘துணை’ பதவி. ரணசூரன் துணை எதிர்பாராதவிதமாகப் பூபாள நாட்டில் கிடைத்ததும் தனது மெய்க்காவலர்கள் தவிர இம்மாதிரி இன்னொரு வடநாட்டு மன்னனையும் துணை சேர்த்துக் கொண்டால் கஜினியின் மனநிலையில் புதிய கிளர்ச்சியை உண்டாக்க முடியும் என்று நினைத்தான் வல்லபேந்திரன். ஏனெனில் கஜினியின் மூளைச்சலவைக்குச் சில உன்னத கருத்துக்களைக் கூறும்படி சோழ மாமன்னன் அறிவித்திருந்தான். இவற்றை கஜினி ஏற்றுக் கொள்ளாமல் உதறினாலும் பரவாயில்லை. அவன் மூளையில் இவை நுழைந்துவிட வேண்டும் என்பதுதான் சோழன் ஆர்வம். மாறாகத் தூதனையே அவமதித்து விட்டால் ‘ராட்சசனுக்கும் ஒரு புரோட்சசன் உண்டு’ என்று அறிவித்து இந்தச் சோழன் அத்தகையவனே என்று தெளிவித்திடவும் வல்லபன் துணிந்திருந்தான்! எனவே சரியான பக்கபலத்துடன் சென்றால் மதிப்பு மட்டுமில்லை, வலுவான அணுகுமுறையாகவும் இருக்கும் என்று கருதினான். ஆனால், இப்படிக் கருதி எவர் துணிந்து தனக்குத் துணை வருவார் என்று எதிர்பார்த்தவனுக்குத் திடுதிப்பென்று எங்கிருந்தோ பூரணசந்திரனும் வந்து சேருவான் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்! முதலில் திடுக்கிட்டான் வல்லபதேவன் என்று கூறுவதைக் காட்டிலும் வெகுவாகப் பதறிவிட்டான் என்று கூறுவதே சரியாகும். சில தினங்களுக்கு முன்னர்தான் தன்னுடன் தன் மகள் விஷயமாக பயங்கரமாக மோதியவன் (வார்த்தை அளவில்தான்). இப்போது தன் அருகே வந்து முகத்துக்கு நேராக ‘நான் உம்முடன் உமது மெய்யுதவியாக வருகிறேன். வங்கத்தின் சார்பில் உமக்குத் துணை செய்ய எனக்கு உரிமையும் உண்டு, தகுதியும் உண்டு. ரணசூரன் மட்டும்தான் தீரன் என்பதில்லை. நானும் கொஞ்சம் தைரியசாலியாக இருக்க முடியும்’ என்று கர்ஜித்ததும் வல்லபேந்திரனுக்கு இதைக் கேட்டு குதூகலிப்பதா அல்லது குழம்பித் தவிப்பதா என்று புரியவில்லை! ரணசூரன் எந்த வகையிலும் வல்லபேந்திரனால், சொந்த முறையில் பாதிக்கப்பட்டவனில்லை. யுத்தத்தினால் இதர மன்னர்களைப் போலத் தோற்கடிக்கப்பட்டடான் என்பது தவிர வேறு வம்பு இல்லை. ஆனால் தன் மகள் மகனால் அவன் மகள் பாதிக்கப்பட்டதாகக் கருதித் தவியாய்த் தவித்துப் பெரிதாகக் கூச்சலிட்ட பூரணசந்திரன் அதைவிட இரைந்து நான் உன் துணைவன் இன்று என்றால் தடுமாறி விட்டான். ஆத்திரத்துடன் முன்னே பாய வந்தவன் இப்போது ஆனந்தத்துடன் அணைத்துக் கொள்ளுவதென்றால்... யாருக்குத்தான் திகைப்பு ஏற்படாது? “பூரணசந்திரரே! நான் தங்களிடம் இத்தகைய பெருமைக்குரிய சிறப்புக்குணம் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை யென்றால் அது உங்கள் குற்றம் இல்லை. என்னுடைய அறியாமையேயாகும்!” என்றான் தனது இரு கரங்களையும் நீட்டி அவனுடைய கரங்களைப் பிடித்துக் குலுக்கியப்படி! “நானும்தான் உண்மையைப் பூரணமாக அறிந்து கொள்ளாது அவசரப்பட்டு அப்படியெல்லாம் பேசிவிட்டேன்!” என்றார் பூரணசந்திரன். “இதெல்லாம் என்ன விவகாரம் பூரணரே!” என்று ரணசூரன் கேட்டதும், “ஒன்றுமில்லாத ஒரு விஷயம் ரணசூரரே! நம் இளையமகன் விஜயன் இவர் மகளைக் காந்தருவமணம் புரிந்து கொண்டு விட்டதை இவர் அவ்வளவாக விரும்பவில்லை. ஆயினும் நடந்தது நடந்துவிட்டது. என்னுடைய மூத்த மகன் மிதிலையில் நிரந்தரமாகத் தங்கிவிட்டதைப் போல இந்தச் சின்னவனும் வங்கத்தில் தங்கிவிடுவதாக இப்போது முடிவாகிவிட்டதால் நிலைமை ஒழுங்காகிவிட்டது” என்றான் சாதாரண முறையில். “பேஷ்! பேஷ் பூரணசந்திரசேனரே, நீரும் உமது செல்ல மகளும் அதிர்ஷ்டசாலியா அல்லது வங்கம் அதிர்ஷ்டமுள்ள நாடாகிவிடப் போகிறதா என்று புரியவில்லை” என்று ரணசூரன் மகிழ்ச்சியுடன் சொன்னதும் பூரணசந்திரர் அவனை வியப்புடன் பார்த்தான். பிறகு, “ரணசூரா, எப்பவுமே நீயும் நானும் மனக்கோட்டை கட்டுவதில் சளைத்தவர்கள் அல்ல” என்றான் கேலியாக. “இல்லை! இது மனக்கோட்டையல்ல. உங்கள் பரம்பரை ஒரு காலத்தில் வங்கம் முழுமையும் ஆண்ட குலம்தான். ஏன் அந்தக் குலத்தில் மீண்டும் ஒருவன் பிறந்து இன்றைய சேனர்கள் பரம்பரையை மீண்டும் வங்க நாடு ஆளும் பரம்பரையாகச் செய்யக் கூடாது. அதுவும் கன்னட நாட்டின் வல்லபர் பரம்பரையும் வங்கத்தின் சேனர் பரம்பரையும் இணைவது என்றால் அது ஒரு பிரமாதமான எதிர்காலத்தை அமைக்கப் போகிறது என்றே நான் கருதுகிறேன்” என்றான் அழுத்தந்திருந்தமாக. பூரணசந்திரன் மட்டுமில்லை, வல்லபேந்திரன் கூட குறுக்கிட்டு மறுத்துப் பேசிவிடவில்லை. ஒருவேளை அவர்களுக்கும் அத்தகைய ஆசை உண்டாகியிருக்குமோ என்னவோ! ரணசூரன், பூரணசந்திரன் ஆகிய இருவரும் துணை வர, சோழப் படையினரான நூறு மெய்க்காவலர்கள் புடை சூழ பூபாள நாட்டிலிருந்து புறப்பட்ட வல்லபேந்திரனின் தூதுக்குழு மதுராவை நெருங்கிவிட்டது. மகாபாரத இதிகாசத்தின் மகாபுருஷனும் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றுமான கிருஷ்ணாவதாரம் எழுந்து யாதவ குலதிலகமான கிருஷ்ணபிரான் மதுராவுடன் கொண்ட உறவு தெய்வீகமானது. துவாரகையில் மன்னனாக இருந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மதுராவின் வரலாற்றினை மகோன்னதமாகச் செய்த அந்தக் கிருஷ்ண பகவான் ஒரு காலத்தில் பாண்டவர்களுக்காக கவுரவர்களிடம் தூது சென்றதுண்டு. இன்று அதே மதுராவை நாசக்களமாக்கி அதில் தர்பார் நடத்தும் கஜினி முகமதிடம், தென்னகத்துச் சோழனின் நல்லெண்ணத் தூதனாகச் செல்லுகிறார் ஜெகதேவர். காலம் வெகுவாக வளர்ந்து மாறினாலும் பழமையின் அடிச்சுவட்டில்தானே புதுமை நடை போட முடிகிறது! அந்தத் தெய்வீக தூதர் அஸ்தினாபுரம் சென்றார். இந்தச் சாதாரண மானுட தூதர் மதுரா செல்கிறார்! ஆனால் அன்றும் துரியோதனன் என்ற கொடுமையாளனிடம்தான் அவர் தூது சென்றார்! இன்று வல்லபரும் அதே போன்ற ஒருவனிடம்தான் செல்கிறார்! அவன் தூதரை அவமதித்துப் போரை விலைக்கு வாங்கினான். அதனால் அழிந்தான். இவனும் அப்படிச் செய்தால் அதே கதிதானா! மதுரா நகர எல்லையில் ஏகப்பட்ட ஆப்கன் படைகள் குவிந்திருந்தன. நகரத்தில் வாழும் மக்கள் தொகையைப் போல பலமடங்கு படைகள் இருந்ததால் நகரமே பாழடைந்து கிடந்த மாதிரி இருந்தது. ஏற்கெனவே கோயில், குளம் எல்லாம் அழிவுக்குள்ளாகிக் கிடந்ததால் அங்குமிங்கும் ஏராளமாகக் கல்தூண்கள், சுவர்கள், பிரகாரத் தேவதைகள் யாவும் கன்னாபின்னாவென்று உடைந்து கிடந்தன. வல்லபன் தாங்க முடியாத வெறுப்புடன் இவற்றை நோக்கினாலும் இப்படிக் கூட ஒரு மனிதன் இருக்கிறானே அழிவின் பிரதிநிதியாக, அது எப்படிச் சாத்தியமாகியது! என்று வியப்பும் கொள்ளாமலில்லை. ஆனால் இவனுடைய வியப்பும் வெறுப்பும் ஒரு தூதுவன் என்ற முறையில் மனநிலையைப் பாதிக்கக் கூடாதாதலால் சுதாரிப்புடனே குதிரையை ஓட்டினான். எனினும் பூரணசந்திரன் விழிகள் ரத்தக்கண்ணீர் சிந்தியது. ரணசூரன் ஏற்கெனவே இந்தக் கொடுமையைக் கண்டவனாதலால் பற்களைக் கடித்துக் கொண்டு சென்றான். கஜினி முகமதின் வரலாற்றில் அன்று ஒரு திருப்புமுனை. ஏனெனில் இந்திய நாட்டின் ஈடில்லாப் புகழ் வாய்ந்த சோழ மாமன்னன் தூதுவனை வரவேற்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவன் இருக்கிறான். தன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு நிகழ்ச்சி நேர வேண்டியது அவசியமா! இதனால் தன்னுடைய வீர பிரதாபங்களுக்கு ஏதேனும் ஊறு நேருமா? அல்லது சீரும் சிறப்பும் கூடுமா என்றெல்லாம் அவன் பலவாறாக ஆராயாமலில்லை. ஏன் அந்தச் சோழனே தன்னை நாடிப் பேச வரக் கூடாது! இந்திய மன்னர்கள் அனைவரையும் ஒரு சேரத் துவம்சம் செய்துவிட்ட தன்னிடம் பயந்தோ அல்லது ஒரு மரியாதைக்கோ கூட அவன் நேரில் வந்திருந்தால் அது நம்முடைய மதிப்பை வெகுவாக உயர்த்தி இருக்குமே! ஒரு சாதாரண தூதுவனை நோட்டம் பார்க்க அனுப்புவானேன்! ஒருவேளை முன்னால் அவரைப் பற்றி அறிந்து வா! நான் பின்னால் வந்து பேச அது உதவும்படியாய் இருக்கும் என்று அனுப்பி இருந்தால்... எனவே இவ்விஷயத்தில் சற்று நிதானம் காட்டவே வேண்டும். மசூத் இம்மாதிரிதான் கருதுகிறான். எனவே தாதுவனை சந்தித்து அளவளாவ வேண்யதுதான். நாம் அல்பத்தனமாக இல்லாமல் பெருந்தன்மையாக நடந்து கொண்டோமானால் நாம் உண்மையில் இந்துஸ்தானம் முழுவதையுமே ஆளுந்தகுதியும் திறனும் கொண்டவன் என்பது அந்தச் சோழன் இவன் மூலம் உணர்ந்து கொள்ளுவான். அப்படி உணர்ந்தால் அச்சமுற்றுத் திரும்பி தன் ஊருக்கே போய்விட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆனால் இப்போது எந்த நோக்கத்தில் இப்படி ஒரு தூதனை அனுப்பியுள்ளான் என்பது புரியவில்லையே! ஒருவேளை இந்தத் தோற்றோடிய அரசர்கள் அவனிடம் போய் முறையிட்டிருப்பார்களா? அவர்களுக்காகப் பரிந்து பேச வருகிறானா? நான் கருணையின் எதிரி என்பதை அவன் இதுவரை அறியாதிருந்தால்... இதற்கு மாறாக நம்மை எச்சரிக்கத் துணிந்து இப்படி ஒரு அசட்டுக் காரியத்தை மேற்கொண்டிருப்பானா? இமயமலையில் முட்டிக் கொள்ளுவதும் என்னிடம் எச்சரிக்க வருவதும் ஒன்றுதான் என்பதை ஒருவேளை அவன் அறியாதிருந்தால் நாம் தெளிவாக விளக்கிட வேண்டும்! ஆகக் கூடி மசூத், மற்றவர்கள் திருப்திக்காகவாவது அவனை வரவேற்று, அவன் வந்த நோக்கமறிந்து, பிறகு பயங்கரமான எச்சரிக்கையுடன் திருப்பியனுப்பி விடுவதுதான் இப்போதைக்கு நான் செய்யக் கூடியதாகும். வேறு வழியில்லாத வேண்டா வெறுப்புடன் சுல்தான் கஜினி முகமது இந்த முடிவுடன் இருந்த நேரத்தில் காவலன் ஒருவன், “இளவரசர் மசூத் கோட்டை வாயிலிலேயே சோழ தூதுவனை வரவேற்கச் சென்றிருக்கிறார்!” என்று அறிவித்ததும் “வெட்கக் கேடு” என்றபடி சுற்று முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. “அப்படியானால் அந்தச் சோழனுடைய தூதை வரவேற்க இந்த நிஜாமுதீனும், அந்த பரூனியும் கூடப் போய்விட்டார்களாக்கும்!” என்று பலமாக முணுமுணுத்துவிட்டு, “எதற்காகவோ இங்கே வந்தோம்! அதைக் கவனிக்காமல் இவர்கள் ஒரு உப்புக் காசுக்கு பயனற்ற வேலையில் பொழுதை வீண் விரயம் செய்கிறார்கள்! நாளை எந்த ஊரில் நமது சூறையாட வேண்டும் என்பது பற்றி இந்தப் பிருகஸ்பதிகள் சிந்திக்காமல் இந்தப் பைத்தியக்காரச் செயலில்... தூதனாவது சந்திப்பதாவது...*” *1030 A. D. என்று திட்டமாகக் கூறலாம். “சுல்தான் சாஹேப், உள்ளே வரலாமா?” என்று கேட்டபடி வாசற்படியில் வந்து நின்றவனைக் கண்டதும் சில நொடிகள் திகைத்துவிட்டுப் பிறகு பெரும் வியப்புடன் அதியார்வம் கொண்ட குரலில் “யார்! இபுன் அறிஞர் பிரானா... உண்மையாகவா? வாரும்... வாரும்! நல்ல சமயத்தில் சமய சஞ்சீவி போல வந்துவிட்டீர்! உள்ளே வாரும்! இப்படி அமரும்...” என்று கூறியபடி எழுந்து சென்று கைலாகு கொடுத்தபடி அமர்த்த முயன்றதும் அவர் முறைப்படி வணங்கிவிட்டு அமராது நின்றார். ஆனால் பதற்றத்தாலும் அவருடைய திடீர் வருகையால் ஏற்பட்ட மனக் கொந்தளிப்பாலும் உலுக்கப்பட்ட அவன் “போதும் ஆசிர்... முதலில் இப்படி உட்காரும்... நீங்கள் இப்படி வருவீர் என்று நான் துளிக் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் சற்றும் எதிர்பாராத சிறிதும் விரும்பாத ஒரு ‘காபீர்’ நம்மிடம் வருகிறானாம். அவனை நான் சந்திக்க வேண்டும் என்று இந்த முட்டாள் மசூதும் அந்தப் புத்திசாலிகள் நிஜாமுதீனும் பரூனியும் உளறினார்கள். வேறு வழியில்லாமல் தவித்தேன். நல்ல காலம், நீங்கள் வந்து விட்டீர்கள். முதலில் அந்தக் காபீரை இங்கு வந்ததும் விரட்டிவிட்டு உங்கள் அனுபவங்களை கேட்கிறேன். நீங்கள் போய் வந்த இடங்கள் அனைத்தையும் பற்றியெல்லாம் விசாரிக்கிறேன்.” “சுல்தான் சாஹேப்...” என்று சற்று இரைந்தே கூவினார் பாவம் அந்த இபுன ஆசீர்! சட்டெனத் தன் பேச்சை நிறுத்திவிட்டு அவரை வெறித்துப் பார்த்தான் கஜினி. ஆனால் அவர் அந்தப் பார்வையைக் கண்டு அஞ்சாமல் “கஜினி என்னும் ஒரு சின்னச் சிறு நாட்டின் சுல்தான் முகமதைக் காண உலகின் மாபெரும் சக்கரவர்த்தியின் தனிச் சிறப்பு பெற்ற தூதுவர் வருகிறார் என்றால் அது உங்களுக்கு அசாதாரணப் பெருமை. நீங்கள் இதுவரை சாதித்ததெல்லாம் இதன் எதிரில் திரண மாத்திரம். நான் ஓடோடி வந்தது இதற்காகவே! சோழ தூதர் வருகிறார் என்று நான் அறிந்ததுமே ‘சரி, உம் வாழ்க்கையில் ஏதோ ஒரு உன்னத மாறுதல் நிகழப் போகிறது’ என்று முடிவு செய்தேன். இந்நாட்டின் பேரரசர்கள் எவருக்குமே கிடைக்காத பாக்கியம் இது! அவர்கள் அவரிடம் போர் நடத்தாமலிருந்தால் வம்பில்லை. நடத்தினால் தோல்விதான்! எனவே அவர்கள் யாவரும் சிம்ம சொப்பனமாக இருக்கும் போது சுல்தான் கஜினி மீது அவர் கவனம் செல்லுவானேன் என்று கூட நான் மட்டும் அல்ல, வணக்கத்துக்குரிய ஆல்உட்பி அவர்களும், மதிப்புக்குரிய மிர்கோண்ட் அவர்களும் வெகுவாக யோசித்துப் பார்த்தோம். காரணம் புலப்படவில்லை. ஆயினும் உட்பி மட்டும் என்னிடம் ‘சுல்தான் அசட்டுத்தனமாக நடந்து விடப் போகிறார் அந்தத் தூதனிடம்... ஒருவேளை மதியாமல் அல்லது வெறுப்பாகப் பேசி, ஆத்திரத்துடன் வார்த்தைகளை அத்துமீறி உதிர்த்து...’ என்றார். ‘எனவே நீங்கள் உடனே போங்கள்.. இந்த இந்துஸ்தானத்தில் நமக்கு வரலாற்றுச் செய்திகளைத் தொகுப்பது மட்டும் அல்ல. அச்செய்திகளின் ஆதாரமான அரசர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று புத்தி கூறுவதும் கடமையாகும் என்று சுல்தானிடம் அறிவியுங்கள்’ என்று என்னை விரைவாக இங்கு அனுப்பியுள்ளார்” என்று விளக்கமாகப் பேசியதும் கஜினி மனோநிலை கலகலத்து விட்டது. இந்த மூன்று அறிஞர்களும் இந்நாடு முழுமையும் சுற்றி வருபவர்கள். இவர்கள் மதித்தற்குரிய மாபெரும் அறிஞர்கள். இவர்கள் இல்லையேல் ஆப்கானியனான தான் இந்தியா என்று ஒரு நாடு இருப்பதையே அறிந்திருக்க முடியாது. பிறகு எப்படி இவ்வளவு பொருள்களை அள்ளிச் செல்ல முடியும்? இவர்கள் வார்த்தைகளை மதியாமல் எதிர்த்தால் நடப்பதே வேறு... இவர்களில் எவரும் ஒரு சிறிதளவு கூட பிறரை அநாவசியமாகத் துதிப்பவர்கள் அல்ல. உண்மைக்கு மாறாக ஒரு வார்த்தையும் பேசுபவர்கள் அல்ல; எனவே இனியும் அலட்சியமாக இருப்பது சரியல்ல என்று முடிவை மாற்றிக் கொண்டு “நல்லது ஆசீர்! நீங்கள் காரணமில்லாமல் எதையும் கூறுபவர் அல்ல. எனவே வரும் தூதுவர் எப்படிப்பட்டவரானாலும் நான் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு உஷாராகவே இருக்கிறேன். ஆனால் என்னுடைய லட்சியத்துக்கு விரோதமாக வருபவர் நடந்து கொண்டால் அதற்கு...” “இல்லை சுல்தான், அவர் நிச்சயமாக நாம் மதிக்க வேண்டிய தூதுவர்! இந்த நாட்டில் நாம் தூதுவர்களிடம் கண்ணியமாக நடந்து கொண்டோமானால் அரசர்கள் வெகுவாக மதிப்பார்கள். இது பொதுநிலை. ஆனால் நாம் சோழ தூதரிடம் மதிப்புடன் நடந்து கொண்டோமானால் இந்நாடு முழுமையும் நம்மை மிக்க மதிப்புடன் கவனிக்கும். தமக்கு இப்போதைய பொன்னும் பொருளும் புகழும் எவ்வளவு தேவையோ, அவ்வளவுக்கு இந்நாட்டில் நிச்சயமாக மதிப்பும் தேவையென்பதில் சந்தேகமில்லை!” என்றார் அழுத்தமாக. கஜினி இது கேட்டுத் திடுக்கிட்டாலும் வாய் திறந்து மறுக்கவில்லை! இத்தருணத்தில் காவலன் ஒருவன் வந்து மரியாதையாக “சுல்தான் மசூத் தங்களைக் காண வந்துள்ள சோழ தூதுவனுடன் வந்து கொண்டிருக்கிறார்!” என்று அறிவித்தான். “வரச் சொல்!” என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தான் கஜினி. அவன் பக்கத்திலிருந்த ஆஸிர்* ஒரு பெருமூச்சுவிட்டு “சுல்தான், இப்போது வருபவரும் ஒரு மன்னர். அவருடைய ராஜ்யம் அமைதியும் சுத்தமும் அடக்கமும் உள்ள மக்கள் நிறைந்த பகுதி. இவர் மாவீரர். இவருடைய இரு மகன்களும் சிறந்த வீரர்களே!” என்றார். *இபுன் ஆஸிர்: இவர் எழுதிய கபீல்-உத்-தவாரிக் என்னும் அக்காலத்திய வரலாற்று நூல், மிர்கோண்ட் எழுதிய கெளஸத் அஸ்சஃபா என்னும் நூலும், ஆல்உட்பி எழுதிய தரீக்-இ-யாமினி ஆகிய வரலாற்று நூலும் அக்கால நிலையை நன்கு விளக்கும் அரிய ஆராய்ச்சி நூல்களாகும். இதெல்லாம் பிடிக்காவிட்டாலும் கஜினி வாய்திறக்கவில்லை. முதலில் மசூத்கான் விநயமாக நடந்து வர, ஜெகதேவ வல்லபேந்திரன் அவனுக்குப் பின்னால் தமது கதையைத் தோள் மீது இருத்தி இடது கரத்தால் அதைப் பிடித்தபடி வலக்கரத்தை வீசி நடந்து வந்தார் மிடுக்காக. அவர் இருபுறத்திலும், ரணசூரனும் பூரணசந்திரனும் பின்னால் நிஜாமுதீனும், ஆல்பரூனியும்! ‘தூதுவன்தானே! எழுந்து வரவேற்க வேண்டுமா என்ன?’ என்று ஆராய்ந்தபடி தயங்கிய சுல்தான் அவர்களிடையே ஒரு பெரும் ‘கதை’ தாங்கிவரும் நெடிய உயரமும் பரந்த மார்பும் மிகமிக எடுப்பான தோற்றமுள்ள ஒரு ஆசாமியைக் கண்டதும் திடுக்கிட்டுப் பதறிபெழுந்து “ஓ... மசூத்! இதென்ன? யார் இவர்? இவ்வளவு பெரிய இரும்பு உலக்கையை எதற்கு எடுத்து வருகிறார்?” என்று வெகுவாக அதிர்ச்சியடைந்து ஆப்கானிய பாஷையில் கத்திவிட்டான். இதைக் கேட்டதும் வல்லபேந்திரர் ஒரு நொடி கஜினியைப் பார்த்துவிட்டுப் பிறகு “பளா... பளா!” என்று கூறிவிட்டு கடகடவென வாய்விட்டு இரைந்து சிரித்துவிட்டார். இந்தச் சிரிப்பு அந்த அறை பூராவும் எதிரொலித்ததும் கஜினி அதையும் பயங்கரமாகக் கருதி உண்மையிலேயே ஆடிப்போய்விட்டான். ‘இதென்ன சங்கடம்? எவனோ ஒரு தூதுவன் அடங்கி ஒடுங்கி குலாமாக இருப்பான் என்றால் இந்த மசூத் வேறு எவனோ ஒரு முரட்டு ஆசாமியை அல்லவா... அப்பாடி...! ஆசாமிதான் என்ன உயரம்? என்ன கம்பீரம்? எவ்வளவு பெரிய மீசை? அந்தக் கையில் பிடித்திருக்கும் ‘குண்டு’ ஒரு யானை கனமிருக்குமே! அதை அலட்சியமாகத் தோளில், பிறகு இறக்கி இவ்வளவும் போதாதென்று பயங்கரமாக. சிரிக்கிறானே... இவன்தான் உண்மையில் அந்தத் தூதுவனா? அல்லது தூதன் உருவில் வந்த எமனா? வல்லபேந்திரன் தன்னுடைய சிரிப்பை முடித்துக் கொண்டு அவனுடைய அதே ஆப்கானிய பாஷையிலேயே. “ஐயா கஜினி முகமது, நான் கீழை உலகின் அகண்ட சாம்ராஜ்யாதிபதியான சோழ தேவரின் சாதாரணமான தூதன். என் பெயர் ஜெகதேவன். இதோ என் கையிலிருப்பது ஒரு சாதாரணமான ஆயுதம்! இதன் பெயர் கதை” என்றான் வெகு சாதாரணமாக. இந்தப் பாஷா நயங்கண்டு பதறிவிட்ட சுல்தான் கஜினி, ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “ஓ! அப்படியா? நல்லது! நான் தூதர்கள் என்றால் ஆயுதம் இல்லாமல் வருபவர்கள் என்பதைத்தான் அறிந்திருக்கிறேன்!” என்றான் தனக்கும் கொஞ்சம் ராஜதந்திர நடைமுறைகள் தெரியும் என்ற வீறாப்புடன். ஆனால் வல்லபேந்திரன், “இது என்னுடன் பிறந்த ஆயுதம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இது எங்கள் குடும்பச் சொத்து. நாங்கள் பாரம்பரிய சொத்துக்களைப் புனிதமாகக் கருதிப் பேணி வருவோமேயன்றி அதை உடைத்து விட்டெறிந்து விட மாட்டோம்” என்று கம்பீரமாகக் கூறியதும் சுல்தான் சில நொடிகள் தூதுவனை விழுங்கி விடுவது போலப் பார்த்தான். ஆனால் இதையும் கவனியாதவன் போல, “ஐயா! இபின் ஆசிர் அவர்களே... என்னை யார் என்பதை நீங்கள்தான் நன்கு அறிவீர்களே! எனவே என்னையும் இந்தக் கதையையும் பற்றி முன்னரே உங்களுடைய மதிப்பிற்குரிய சுல்தானிடம் கூறியிருக்கக் கூடாதா?” என்று புன்னகைத்துக் கேட்டதும் அவர் சட்டென்று “மன்னிக்க வேண்டும் வல்லப ராஜரே! நீங்கள் இங்கு வருவதற்குச் சற்று முன்னர்தான் இங்கு வந்தேன் நான்!” என்ற பரபரப்புடன் பதில் அளித்தார். ஆனால், மசூத் சூழ்நிலை வேறு வகையில் மாறுகிறது என்பதை உணர்ந்தவனாய், “ராஜா சாஹேப், என்னுடைய மதிப்பிற்குரிய தந்தையாரும் கஜினியின் மாவீர மன்னருமான சுல்தான் அவர்கள், தங்கள் வருகையை உண்மையிலேயே நல்ல வருகையாகக் கருதி மதிப்புடன் வரவேற்கிறார்” என்று கூறியதும் சுதாரித்துக் கொண்டான் சுல்தான். “அல்லா அனைவர்க்கும் நலமருள்வாராக!” என்று கூறிவிட்டு “ஐயா சோழ ராஜ தூதுவரே, அப்படி உட்காரும்...” என்று தன் பக்கத்தில் இருந்த ஆசனத்தைக் காட்டியதும் வல்லபன் இளவரசனின் மதியூகத்தைச் சிலாகித்தபடி தனது கதையை யாரிடம் தருவது அல்லது எங்கு வைப்பது என்னும் முறையில் அப்படியும் இப்படியும் பார்க்க மசூத் அதை ஏற்க முன்வந்தான். ஆனால் அவனால் மட்டும் அதை தாங்க இயலவில்லை! காவலர்கள் இருவர் வந்தனர். “இளஞ்சுல்தானே, இதைத் தூக்க உடல் வலு மட்டும் போதாது! உளவலுவும் நிறையத் தேவை. எங்கள் சோழர் ஆட்சியில் முதலில் உளவலுவுக்கு அதாவது அறிவுக்குத்தான் மதிப்பு! பிறகுதான் மற்றவை... ஏன்? உங்கள் இபின் ஆசிர் அவர்களே இதை நன்கு அறிவாரே” என்று கூறிவிட்டுத் தன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்! பிறகு சுல்தான் கஜினியைப் பார்த்து. “ஐயா சுல்தான்! உங்களிடம் என்னைத் தூதுவனாகச் சென்று பேசி வரும்படி எங்கள் சக்கரவர்த்திகள் அனுப்பியது பற்றி எமக்கும் பெருமையே” என்று கூறியதும் சுல்தானுக்கு உச்சி குளிர்ந்து விட்டது. ஆசாமி பார்க்கப் பயங்கரமாக இருந்தாலும் பேசுவதில் சரளம் இருக்கிறது என்று நினைத்தான். பிறகு தன்னிடம் வந்தது நமக்குப் பெருமை என்று அறிவித்தது பற்றியும் உள்ளூரக் கொண்ட உவகையை வெளிக்காட்டும் பான்மையில் “நாமும் மகிழ்வு கொண்டுள்ளோம்!” என்றான் அமர்த்தலாக. ஆனால், அடுத்தாற் போல, “நீங்கள் மகிழாமல் எப்படியிருக்க முடியும்? உலகப் புகழ் பெற்ற ஆல்பரூனி உங்களிடமே இருக்கும் போது. அடுத்து நடப்பதென்ன என்பதை அந்தக் கணமே அறிவிக்கக் கூடிய சக்தி பெற்ற அவர் உங்களுக்குக் கிடைத்துள்ள பொக்கிஷங்களிலேயே உன்னதமான பொக்கிஷமில்லையா? அதுமட்டுமா? பேரறிஞர்களான இபின் ஆசிர், மிர்கோண்ட், ஆல்உட்பி, நிஜாமுதீன் போன்ற புத்திமான்களை எல்லாம் ஆலோசகர்களாய்ப் பெற்ற அதிர்ஷ்டக்காரரும் கூட நீங்கள்...” என்று கூறிவிட்டுச் சற்றே நிறுத்தினார். சுல்தான் கஜினி தன்னைவிட்டுத் தன் அறிஞர்களைப் பாராட்டுவதை விரும்பாவிட்டாலும் தலையாட்டி வைத்தான் சிரத்தை காட்டாமல். ஆயினும் அவர் சளைத்து விடவில்லை. சட்டென்று ஒரு கேள்வி போட்டார்! “இப்படிப்பட்டவர்கள் உங்கள் பக்கத்திலிருக்கும் போது நீங்கள் உலகம் புகழும் மகோன்னதமான பல சாதனைகளைப் புரியாததேன்?” என்று அவர் போட்ட கேள்வி சற்றே அவனைச் சிந்திக்கச் செய்தது! “ஐயா தூதுவரே! நீங்கள் இப்படி திடீரென்று ஒரு கேள்வி போடும் காரணம் என்ன?” என்றான் வியப்புடன். “விக்கிரஹ நிக்கிரஹன் என்ற விருதில் நாசகாலன் என்ற அவதூறான பேரையும் ‘ஐயோ! அந்தப் பாவி கஜினியா!’ என்று இங்குள்ளவர்கள் எல்லாம் வெறுத்து ஏசுவதற்குப் பதில் ‘உன் அண்டை வீட்டானை உன்னுடைய சகோதரனாக நேசி. பிறர் சொத்துக்களில் ஆசை வைக்காதே. பிறர் மனம் நோகச் செய்யாதே! மகிழ்ச்சியுள்ளவனாக இருக்க வேண்டுமானால் பிறரையும் மகிழ்விப்பவனாகச் செயல்படு’ என்று மிகவும் சிறப்பான மனித சமூகத்துக்கே பொதுவான நீதிகளைக் கொண்ட இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த நீங்கள், இந்த அரிய பெரிய நண்பர்களைத் துணையாகக் கொண்ட நீங்கள்... எவ்வாறு இத்தகைய அவதூறான தூஷணைகளுக்கு இலக்காகும்படி நடக்க முடிகிறது! என்றுதான் நான் வியப்படைகிறேன். எவருக்கும் எளிதில் கிடைக்காத இத்தனை பெரியவர்களைத் துணை கொண்ட நீங்கள் இவர்களுக்கெல்லாம் பெரியவராக இருந்து பெரு வாழ்வு வாழ வேண்டாமா?” என்று மிகவும் நயமாகக் குரலை ஏற்றி இறக்கிக் கேட்டதும் ஆல்பரூனி, “ஆகா! இதுவன்றே அறிவாளிகள் பேச்சு!” என்றார். “பேஷ் பேஷ்!” என்றார் இபுன் ஆசிர்! மசூதோ தந்தையைப் பார்த்தான்! அவனோ தரையை நோக்கிக் கொண்டிருந்தான் தலை நிமிராமல். பிறகு சட்டென்றுக் கேட்டான்! “ஐயா, தூதுவரே! நீர் இத்தகைய ஆராய்ச்சிகளுக்காக இங்கு வந்திருப்பதாகக் கருதவில்லை நான்! உங்கள் அரசன் என்ன சொல்லியனுப்பினார்? எதற்காக அனுப்பினார் என்பதை இனியும் தாமதியாது சொல்லுவீர்கள் என்று நம்புகிறேன்” என்றான் ஏதோ கண்டிப்புடன் பேசுந்தோரணையில். வல்லபர் இலேசாகப் புன்னகைத்தார். “என்னுடைய கடமை முதலில் ஒரு தூதுவனுடையதுதான் என்றாலும் நீ யாரைப் பார்த்துப் பேசுகிறாயோ அவரையும் நன்கு அறிந்து கொண்ட பிறகே பேச்சைத் துவங்கு என்று எமது சக்கரவர்த்திகள் உத்திரவிட்டுள்ளார். தவிர நாம் புறப்படும் வேலை, சேரும் இடத்தில் உள்ள நிலை இரண்டையும் முன்கூட்டியே அறிந்து அதற்குத் தக்கபடி இணக்கமாக நடந்து கொள்ளுவதும், நாம் எவருடன் அதாவது எத்தகைய அனுபவ அறிவு பெற்றவருடன் பேசுகிறோம் என்பதறிந்து அதற்கேற்ப நடப்பது என்பதும் தூதுவர்களின் இன்றியமையாத கடமையாகும். தங்கள் அவையின் அறிஞர் மணியான ஆல்பரூனி பகவத் கீதையை அதாவது உலகத்தின் மிகப் புராதன கால தூதுவனான கிருஷ்ணனின் கீதையினை ஆராய்ந்தவர் ஆயிற்றே. அவர் தூதரின் இலட்சணத்தையும் கடமையையும் கூறியிருக்கலாமே! பரவாயில்லை. ஆனால் நீங்கள் மும்முறை பேசும் போது எங்கள் சக்கரவர்த்திகளை அரசர் என்று கூறினீர்கள். அது பெருந்தவறு. நான்தான் அரசன், அதாவது நீங்கள் கூறும் கருத்துக்கேற்ப அவர் சக்கரவர்த்திகள். எனவே அவரை உங்கள் கருத்தில் அரசர் என்று கூறுவது அவரை கவுரவிப்பதாகாது. ஒரு தூதன் என்ற முறையில் நான் இதற்காக தங்களிடம் கோபித்துக் கொள்ளக் கூடாது. ஆனால் நெறிமுறையை விளக்கலாம்” என்று கூறிவிட்டு இபுன் ஆசிரை உற்றுப் பார்த்தான். இத்தருணம் தன்னைச் சற்றே விளக்கம் கூறத் தூண்டுகிறான் வல்லபேந்திரன் என்று ஊகித்துக் கொண்டே ஆசிர் “சுல்தான் சாஹேப்... நமது சோழ சக்கரவர்த்திகளின் முழுப் பெயர் பரகேசரிவர்மன் இராஜேந்திர சோழ தேவர் என்பது. இவருக்குட்பட்ட மன்னர்கள் அதாவது அவர்கள் ஆளும் நாடுகள் வடக்கே கங்கை நதியும், தெற்கே இலங்கையும் மேற்கே மஹோதையும், கிழக்கே கடல் நாடுகளான கடாரம் வரையிலும் உள்ளிட்ட பெரும் நிலப்பரப்பாகும். எனவே இவரை திரிபுவன சக்கரவர்த்திகள் என்று கூறுவர். இதோ தூதுவராக வந்திருக்கும் சேனாபதி ஜெகதேவ வல்லபேந்திரதேவர், கர்நாடகத்தின் சித்திர துர்கம் என்னும் நாட்டின் அரசர். அதுவே நம்முடைய கஜினியைப் போல பதின்மடங்குப் பெரிது. இவரைப் போல சோழ சக்கரவர்த்திகளிடம் ஒன்பது பிரதம சேனாபதிகள் இருக்கிறார்கள். அந்த நவசேனாபதிகள் நாலா திசையிலும் பரந்து கிடக்கும் மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தினை நிர்வகித்து வரும் பெரும் அரசுக்குத் துணை நிற்கும் பெருந்தலைவர்களாகும். இவை தவிர நூற்றியிருபது கப்பல்களைக் கொண்ட மாபெரும் சோழர் கடற்படை, மேற்கே எகிப்து வரை போய் வாணிபத் தொடர்பு கொள்ளுகின்றன. கிழக்கே மாப்பாளம்* வடக்கே சீனா வரையில் வணிகத் தொடர்பு, அரசியல் தொடர்பு, கல்வி கலாசாரத் தொடர்பு கொண்டவர்கள் இந்தச் சோழர்கள்” என்று வர்ணித்ததும் சுல்தான் கஜினி “உம்” என்று உறுமினானே தவிர இதனால் தனக்குச் சலிப்பு ஏற்படுகிறது என்பதைத் தெளிவாகக் காட்டிக் கொண்டுவிட்டான். *இன்றைய பிலிப்பைன்ஸ் என்று கூறப்படுகிறது. எனினும் அக்காலத்தில் சாவகம், ஸ்ரீவிஜயம் போலப் பெயர்கள் வேறு இருந்ததாலும் பல ஆயிரம் திசைகள் சிறிதும் பெரிதுமாகச் சிதறிக் கிடந்ததாலும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. வல்லபேந்திரன் இது பற்றி கவலைப்படவில்லை. இதை எதிர்பார்த்து வந்தவரேயன்றி வேறு வகையில் அல்ல. ஆயினும் “அறிஞர் ஆல்பரூனி அவர்களே, உங்கள் சுல்தான் பற்றி சற்றே விளக்கந்தரலாகாதா?” என்று வாய்விட்டு கேட்கவும் செய்தான். |