![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
ராஜ மோகினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 17 ‘உலகம்’ என்று ஒரே வார்த்தையில் கூறப்படும் சொல்லுக்கு வெறும் பூகோளம் பற்றியதாகவோ, பூமி, கடல், மலை, நாடுகள் பற்றியதாகவோ மட்டுமல்லாமல் இங்கு வாழும் மக்கள், நாகரிகம், வாழ்க்கை, சூழ்நிலை, வரலாறு ஆகிய அனைத்தும் இணைக்கப்பட்டே பயன்படுத்திப் பேசுவதே வழக்கில் இருந்து வருகிறது. சாதாரணமாக பேசும் போது என்னவோ ‘உலகம் அப்படித்தான்’ என்றோ அல்லது ‘உலகம் பலவிதம்’ என்றோ, ‘உலகம் கெட்டுப் போச்சு’ என்றோ, ‘உலகம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? நாம் வாழ்ந்தால் போதும்’ என்று கூறும் பேச்சோ அன்றாட வழக்கில் இருக்கின்றன. இந்தக் கடைசி வசனம் கஜினி முகமதுக்கு முற்றிலும் பொருந்தும். அவன் உலகம் என்றால் தான் தான் என்று அதுவரை நினைத்துக் கொண்டிருந்தவன்தான். தான் வேறு உலகம் வேறு, இந்த உலகத்தில் தான் ஒரு சிறு அணிதான் என்பதற்குப் பதில் தானே உலகம், தான் இல்லையேல் இந்த உலகமே இல்லையென்று நினைத்திருப்பவன் அவன். இந்த உலகம் மட்டும் இல்லை, எல்லாமே எனக்குத்தான் என்ற மிகப்பரந்த கொள்கை படைத்தவன் அவன். இதுதான் அவன் நாளிது வரை அறிந்திருந்த உலக வரலாறு. மகா அலெக்சாந்தர் என்ற ஒரு மாவீரன் உலகை வெல்லப் புயலெனச் சீறிப் புறப்பட்டதையோ இஸ்லாத்தின் சிறப்புக்காக இவ்வுலகமே பிரமிக்கும் வகையில் மாவீரம் விளைத்த சுல்தான் கலாதீனையோ, கிறிஸ்தவ சமயம் எங்கே அழிந்து விடுமோ என்ற கவலையில் எல்லையில்லாப் போர்களை நடத்திச் சென்ற சிங்க நெஞ்சன் ரிச்சர்டையே அது நல்ல மாடாயிருந்தால் அது உள்ளூரிலேயே விலை போகும் என்ற பழமொழி போல், நல்ல அரசனாயிருந்தால் தன் நாட்டிலேயே சிறப்புற முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டிய சோழச் சக்கரவர்த்திகள் இராஜராஜ சோழ தேவர் பற்றியோ அறிந்திராதவன் அல்லது அறிந்தும் அறியாதவன் போலத் தன்னைப் பற்றி மட்டும் நினைத்திருந்தவன் சுல்தான் முகமது என்று வரலாற்றாசிரியர்கள் வரைந்திருந்தால் அதில் தவறில்லை. அவன் அமைதியாயிருந்த இந்த இந்துஸ்தானத்தில் புகுந்து கொள்ளையடித்தான், கொன்று குவித்தான், நாசம் செய்தான், எல்லையில்லாக் கொடுமைகள் புரிந்தான், அக்கிரமங்களை வரம்பின்றி நடத்திய சுயநலம், பேராசை பிடித்து நாட்டைக் காடாக்கிய நாசகாலன் என்று வர்ணித்தவர்கள்... நல்லகாலம்... அவனைச் சேர்ந்த ஃபெரிஷ்டா, நிஜாமுதீன், ஆல்பரூனி, ட்பி உசிபுன் ஆஸர், மிர்கோண்ட் போன்ற இஸ்லாமியப் பேரறிஞர்களான வரலாற்று வல்லுநர்களே கூறியிருப்பதால்... நமக்கு இவ்வளவு மோசமாகக் கூட ஒருவன் அதுவும் மாபெரும் மேதைகளை நண்பர்களாகப் பெற்றவன், இருந்திருப்பானா என்று கிலேசத்துடன் நினைக்கத் தோன்றினாலும் அவர்களே அழுத்தமாகக் கூறியது அனைத்தையும் உறுதிப்படுத்தியுள்ள போது எப்படி நம்பாமலிருப்பது.*
*கஜினி முகமதுவின் நண்பர்களாக இருந்த மேதைகள் சாதாரணமான அறிஞர்கள், சகலகலாவல்லவர்கள். அவன் வரலாற்றை அவர்களே எழுதியுள்ளனர். எனவே அன்னியன் எழுதினான். அத்தனையும் பொய் என்று கூறுவதற்கு வேறு வாய்ப்பே இல்லை. ஆயினும் முழுக்க முழுக்க அவனை ஒரு கொடுமையாளனாக, நாசகாரனாக, பேராசைக்காரனாகக் காட்டி வர்ணிப்பதுடன் ஏன் ஏதோ ஒரு சிறு அளவிலாவது நல்லவனாக, மனிதப் பண்புள்ளவனாகக் காட்டிக் கொள்ள நாம் ஒரு சந்தர்ப்பதை அளிக்கக் கூடாது? முகமது கஜினி பேராசைக்காரனாயிருந்தாலும் சிறந்த சமய பக்தன். இஸ்லாத்திடம் அவன் கொண்டிருந்த அளவு கடந்த பக்தியும் நம்பிக்கையும் கூட அவனுடைய விபரீதச் செயலுக்குக் காரணமாகி விட்டது என்று அதே வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர். என்றாலும் அவன் ஓர் அளவுக்குப் புத்திசாலிதான். பிற மதத்தினரைக் கொடுமைப்படுத்துவதையோ, அவர்கள் மனதைப் புண்படுத்துவதையோ, இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. தனி மனிதனுடைய ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை மற்ற சமயங்களைவிட இஸ்லாமிய சமயமே அதிகமாக வற்புறுத்தியுள்ளது. தனி மனிதன் ஒழுக்கமில்லா விட்டால், மனித இனம் நேர்மையாக வாழ்வது சாத்தியமில்லை என்பதை நபிகள் நாயகம் பலவாறு வற்புறுத்தியுள்ளார். விக்கிரக ஆராதனை நமக்குத் தேவையில்லை. எல்லாம் வல்ல இறைவனுக்கு உருவம் எதற்கு? உருவம் அமைத்து வழிபாடு செய்வதை நாம் ஏற்கவில்லை. என்றுதான் அவர் வலியுறுத்தியுள்ளாரேயன்றி, பிற மதத்தினர் விக்கிரகங்களைத் தொழுதிடுவதைக் கவனித்து மதிப்பளிக்காதே என்றுதான் பொருளேயன்றி, அவர்களைத் தாக்கு என்று கூறுவதாகாது. விக்கிரகங்களைப் போய் நீ உடைத்தெறி அவர்களுடைய கோயில் களை இடித்துத் தள்ளு. மாற்றாரை மிரட்டி உருட்டிக் கொடுமைப் படுத்து என்று இஸ்லாம் புனிதமதமான இஸ்லாத்தின் தலைவர் எங்கும் எந்த நாளும் ஒரு போதும் கூறியதில்லை. ஆனால் கஜினி முகமதும், கோரி முகமதும், கில்ஜி முகமதும், அவுரங்கசீபும் தங்களுடைய அளவுக்கு மீறிய சமய பக்தியை வெறியாக மாற்றிக் கொண்டு வெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டார்கள் என்று பேராசிரியர் ஹபீப் அவர்கள் கூறியுள்ளது நினைவு கூரத்தக்கது. எனினும் கஜினிக்கு இது ஒப்புதலா இல்லையா என்பதை அவன் செயல்களே காட்டிவிட்டன. எனவே அன்றைய அரபு நாட்டுக் கலீபா அவர்களும் ஏனைய இஸ்லாமியப் பெரு மக்களும் அவன் செய்கைகளை ஏற்காதிருந்ததில் வியப்பில்லை. ஆனால் ஒரு கேள்வி எழுகிறது? கலீபா அவர்கள் இஸ்லாத்துக்குச் சிறப்பாகத் தொண்டு செய்யும் நற்பணியாளர்களுக்கே அளக்கப்படும் இரு பெரும் விருதினை ஏன் இந்தக் கஜினிக்கு வழங்கினார் என்பதே அக்கேள்வி. இதற்கு ஒரே பதில் கஜினி தனது அரசு பீடத்தில் ஏறிய ஆண்டிலேயே இந்த விருதுகளை வழங்கினாரேயன்றி, அவன் இந்துஸ்தானத்தில் புகுந்து பல முறை கொள்ளை, கொலை, அழிவு நடத்திய பிறகல்ல. தன்னுடைய தொண்டால் அவன் சிறப்புறுவான் என்று நம்பியே அவ்விருதுகளை அவர் வழங்கினாரேயன்றி, இம்மாதிரி ஏறுக்கு மாறாகச் செயல் ஏன்? மதித்திருக்கக் கூடமாட்டார் என்பதே இஸ்லாமிய வரலாற்றுப் பேரறிஞர்களின் முடிவு. இதுவும் நமக்கு ஒப்புதலே. இனி நாம் மீண்டும் சோழனிடம் அன்று சென்ற கஜினி முகமதைத் தொடருவோம். பேணிசாகர் ஏரி என்னும் அற்புதமான அந்த நீர் நிலையின் நாலா பக்கக் கரைகளிலும் ஏராளமான முஸ்தீபுகளைச் செய்யும் முன்னோடி நிகழ்ச்சியோ இது என்று கூட நினைத்தான் கஜினி. ஆனால் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான அமீர் அரூன், அருமை மகன், அறிஞர் குழாமின் துணை ஆகியவர்கள் சுற்றியிருப்பதால் அமீர் அரூனின் பத்தாயிரம் வீரர்கள் வேறு அணிவகுத்து நிற்பதால் அச்சம் தேவையில்லை. என்றாலும் உள்ளூர மனக்கிலேசம் எழாமலில்லை. எத்தனை யானைகள்... ஏ அப்பா! இவ்வளவும் ஒரே அரசனுடையதாயிருக்க முடியாது. இந்துஸ்தானத்தில் இவ்வளவு பெரும் யானைப் படையை ஒரு அரசன் வைத்திருந்தால் அவன் இது நேரம் வரை சும்மாயிருக்க மாட்டான். தன்னைத் தாக்கிப் போர் புரியப் புறப்பட்டிருப்பான். அப்படி வந்திருந்தானானால் தான் இந்துஸ்தானத்தில் நுழைந்திருக்கவே முடியாது. அப்பாடி...! எத்தனை ஆயிரம் குதிரைகள். ஒரே அரபு குதிரை வெள்ளமாகவல்லவா இருக்கிறது. கண்ணுக்கெட்டிய வரை குதிரை வீரர்கள் சாரி சாரியாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்களே... ஒருவேளை... வணக்கத்துக்குரிய காலிபாவின் திருக்குமாரன் வந்திருப்பதால் இத்தனையும் அவர் குதிரைகளாக... இல்லை இல்லை... அந்த நாட்டிலிருந்து அந்தக் கப்பல் மூலம் வந்திருக்கிறார் என்றால் இத்தனை குதிரைகளுடன் வந்திருக்க முடியாது. பல்லாயிரம் குதிரைகள்... ஒருவேளை, இன்று இங்கு ஏதாவது விசேஷம் இருக்குமானால்... நம்மிடம் தோற்றோடிய அரசர்கள், ஒளிந்து கொண்டு நம்மை எதிர் நோக்காமல் இருக்கும் அரசர்கள், வேண்டாம் நம் முன் ஏன் வம்பு என்று ஒதுங்கி நிற்கும் அரசர்கள் ஆகியவர்கள் இந்த விசேஷத்துக்காக இங்கு கூடியிருப்பார்கள்... ஆம் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனாலும் இத்தனை மன்னர்கள் சேர்ந்தாலும் அவர்களுடையது அத்தனையும் நம் படைகளின் ஒரு பகுதிக்குக்கூட ஈடாகாதே. சட்டென்று திரும்பினான் அமீர் அரூன் பக்கமாக. “அமீர், நாம் இப்போது எங்கிருக்கிறோம்?” என்று சட்டெனக் கேட்டான் கஜினி. இனி மர்மம் தேவையில்லை என்று முடிவு செய்தான் அமீர் அரூன் என்ற ஹரதத்தன். “காஜுராஹோவில்...” “என்ன காஜூராஹோவிலா? அப்படியானால் சந்தேவன் வித்யாதரனுடைய நாடல்லவா?” “ஆம், சுல்தான் சாஹேப்.” “நீ இது வரை இதை ஏன் கூறவில்லை?” “காரணமுண்டு. தவிரவும் நேரம் வரக் காத்திருந்தேன்.” “நாளிது வரை அவன் நம் எதிரில் வரவில்லை.” “இப்போது வருவார்.” “நாம் அவன் காட்டில் இருக்கும் போது, நாம் தயாராயில்லாத நிலையில். அமீர், நீ என் நம்பிக்கைக்குரியவன். அதற்கு மாறாகச் செயல்படவில்லையே.” “அதனால்தான் அந்தச் சண்டை அவசியமில்லாத இடத்துக்கு உங்களை அழைத்து வந்திருக்கிறேன். “என்னை எதிரியாகக் கருதுபவனிடம்...” “நீங்கள்தான் அவரை இப்படிக் கருதுகிறீர்கள். அவர் கருதவில்லை.” “நீ இதுதான் உண்மை என்று என்னை நம்பச் சொல்கிறாய்...” “ஆம். ஏனென்றால் அதுதான் உண்மை தந்தையே” என்று குறுக்கிட்டான் மசூத். கஜினி அவனை முறைத்துப் பார்த்து விட்டு, “மசூத், இது உனக்குப் புரியாத விஷயம். நமது நம்பிக்கைக்குப் பாத்திரமான கூர்ஜரத்தின் துர்லப் ராஜை வித்யாதரன் வெறுப்பவன்.” “உண்மைதான். ஆயினும் இன்று அவன் நம்முடன் அவன் பொருந்த மாட்டான். அவனுடைய விருந்தினர்களான நம்மை ஒருக்காலும் அவன் அவமதிக்க மாட்டான். அவன் மகன் விஜயபாலனும் அதை அனுமதிக்க மாட்டான். அவனே அனுமதித்தாலும் இன்று நம்மைப் பாதுகாக்க இந்துஸ்தானத்தின் மாபெரும் சக்தியே இங்கு வந்துள்ளது” என்றான் மசூத். “நீ என்ன உளறுகிறாய். இந்துஸ்தானத்தின் மாபெரும் சக்தி என்ற பெயருள்ள எந்த ஒரு வல்லரசும் இல்லை.” “உண்டா இல்லையா என்பதை இன்னும் சிறிது நேரத்தில் அறிந்து கொள்ளுவீர்” என்றான் அமீர் அரூன். ஆனால் அறிஞர்கள் யாரும் குறுக்கிட்டுப் பேசவில்லை. சட்டென்று ஒரு மாறுதல். ஒரு பெரும் கூடார வாயில். அங்கு நின்றவர்கள் ஓராயிரம் கஜினி வீரர்கள். தங்கள் சுல்தானைக் கண்டதும் தாழ்ந்து பணிந்து வணங்கினர். சுல்தானுக்கு பெருமிதம், பரவசம், தன் வீரர்களைக் கண்டதில் பெரு மகிழ்ச்சி. “ஆஹா! நம் வீரர்கள்... சபாஷ் அமீர்! நீ சத்தியவான். நம்முடைய ஆட்களைக் கொண்டு வந்திருக்கிறாய். பேஷ்... பேஷ்! நான் சற்று முன் பேசியதை மறந்துவிடு. வீரர்களே! ஏன் நீங்கள் ஆயுதம் எதுவும் ஏந்தாமல் இப்படி மரம் போல நிற்கிறீர்கள். போங்கள். உடனே எடுத்து வாருங்கள்” என்று உத்திரவிட்டான் கஜினி முகமது. “மன்னிக்க வேண்டும் சுல்தான் சாஹேப். நாம் சமாதான பூமியில் இருக்கிறோம். இங்கு நாம் ஆயுதங்கள் ஏந்துவதற்கில்லை. அதோ பாருங்கள்...” என்றான் அமீர் அரூன். கஜினி சட்டென்று அவன் காட்டிய திசையில் திரும்பிப் பார்க்க அங்கே அறுபது பரிமா வீரர்கள் புடை சூழ வங்க நாட்டு மன்னன் மகிபாலன் வந்து கொண்டிருந்தான். கஜினி பார்த்திருக்கிறான் அவனை... எப்படி? ஆல்பரூணி முன்பு ஒரு படத்தில் இவனைக் காட்டியிருக்கிறார். அப்படிக் காட்டும் போது இவன் சோழ மாமன்னனிடம் தோற்றுப் பிறகு நண்பனானவன். ‘எவ்வளவு கம்பீரமாக இருக்கிறான் பார்ப்பதற்கு! இவனா அந்த சோழனிடம் தோற்றான்.’ “என்ன ஹரதத்... நலந்தானே? இவர்தான் கஜினி சுல்தானா? நல்லது பிறகு சந்திப்போம்” என்று இவர்களைத் தாண்டும் போது கூறிவிட்டுச் சென்றான் மகிபாலன். ‘என்ன திமிர். தன்னைக் கண்டு ஒரு சலாம் கூடப் போடாமல் அமீர் அரூனை ஹரதத் என்று அழைத்துப் பேசிவிட்டுப் போகிறான்? இவன் சோழனிடம் தோற்றது ரொம்ப நல்லதுதான்’ என்று மனம் பொருமியபடி நினைத்தான் கஜினி. அடுத்து அறுபது வீரர் புடைசூழ வந்தவன் கலிங்க மன்னன் வஜ்ரஹஸ்தன். ‘அடேயப்பா! எவ்வளவு பெரிய உருவம்! எவ்வளவு எடுப்பான தோற்றம்!’ “சுல்தான், இவன்தான் கலிங்கத்தின் முரட்டு மன்னன் வஜ்ரஹஸ்தன். யுத்தத்தில் நிகரற்ற வீரன். அச்சம் என்பதை அறியாதவன்” என்றார் நிஜாமுதீன். “ஓகோ! சோழனிடத்தில் இவன் மோதவில்லையோ?” “மோதித் தோற்றுப்போய் பிறகு அவரிடமிருந்து நாட்டைப் பெற்றவன்தான்” என்றான் அமீர் அரூன். உதடுகளை பிதுக்கிக் கொண்டு தன் அருகே வரும் அவனை உற்றுப் பார்த்தான் கஜினி. “ஓ...! ஹரதத்தா! இவர்தான் அந்தக் கஜினியா? உம்... மனித ஆயுள் மிகவும் குறைவு. வருகிறேன்” என்று கூறிவிட்டு நகர்ந்தான் அவன். சுல்தான் திடுக்கிட்டான். பிறகு தன்னுடைய நண்பர் ஃபெரிஷ்டாவைப் பார்த்து “ஏன் இவன் இப்படிப் பேசினான்?” என பதற்றத்துடன் கேட்டதும்... “எனக்கும் புரியவில்லை” என்றார் அவர் வெகு நிதானமாக. சுல்தான் கஜினி ஏனோ ஒருமுறை நடுங்கி விட்டான். “அதோ வருபவர்தான் சாளுக்கிய நாட்டு வீரஜெயசிம்மன்” என்றான் அமீர் அரூன். கஜினி இவனைப் பற்றி நிஜாமுதீனிடம் கேள்விப்பட்டிருக்கிறான். எத்தனையோ வெற்றிகளைக் குவித்த இவனும் சோழனிடம் தோற்றான் என்பதையும் அறிவார். அதற்கடுத்தபடி வந்தவன் மாளவத்தின் முஞ்சன். ஏற்கெனவே இருவரும் போரில் சந்தித்தவர்கள்தான். இவனைத் தொடர்ந்து வந்தவன் ராஷ்டிரகூட கிருஷ்ணன். கஜினி அருகே வந்ததும் சட்டென்று தன் குதிரையை நிறுத்தி நிஜாமுதீனிடம் கையை நீட்டி “சுகந்தானே நிஜாமுதீன். நீங்கள் இன்னும் இந்த நாட்டில் இருந்தும் கூட உங்கள் சுல்தானின் விபரீத செயல்களைத் தடை செய்யாமல் இருக்கிறீர்களே?” என்று கேட்டதும் சுல்தானுக்கு உண்மையில் கோபமே உண்டாகி விட்டது. “ஏ சைத்தான். நீ யார் என்னைக் கேட்க?” என்று திடீரென்று அவன் பக்கம் பாய்ந்ததும் தடுத்து நிறுத்தினர் அவன் மகன் மசூதும், அமீர் அரூனும். “எத்தனை முறை எச்சரித்தும் நீங்கள் நிதானம் படாமல் இருப்பது நல்லது அல்ல தந்தையே” என்றான் மசூத். ஆனால் அரசர் கிருஷ்ணர் வாய்விட்டுச் சிரித்தது சிம்ம கர்ஜனையாயிருந்தது. “பரவாயில்லை நண்பர்களே. இந்த சுல்தான் சொன்ன மாதிரி நான் இவனுக்கு சைத்தானாகவே மாற விரும்புகிறேன். ஆனால் அதற்கு என்று வேறு ஆள் இருக்கும் போது நான் குறுக்கிட விரும்பவில்லை” என்று கூறிவிட்டு மீண்டும் ஒருமுறை சிரித்துவிட்டு நகர்ந்துவிட்டார். சுல்தான் விழித்தான். ‘அப்படியானால் எனக்கு சைத்தானாக வரும் ஆள் ஒருத்தன் இப்போது வருகிறானா?’ என்று உள்ளூரப் பொருமிக் கொண்டு அடுத்து வருபவனை உற்றுப் பார்த்தான். இரு வீரர்கள் மட்டும் வந்தார்கள். சுல்தான் உற்றுப் பார்த்த போது அவர்கள் ராஜ்யபாலனைக் கொன்ற அர்ச்சுனனும், சேனாபதி ஜெயந்திரனும் என்பதை அறிந்து கொண்டான். ‘தனியாகத்தான் வருகிறார்கள். என்ன தைரியம்? கையில் மட்டும் ஆயுதம் இருந்தால் ஒரே வீச்சில் இருவரையும்... ராஜ்யபாலனை மட்டுமா இவர்கள் வீழ்த்தினார்கள்? அவன் மகனைத் தப்பிவிடச் செய்தார்கள்? சாந்த்ராய் தப்பியோட உதவினார்கள். இவர்கள் இப்போது தன் எதிரில்... இவ்வளவு தைரியமாய் வருகிறார்களே!’ “என்ன சுல்தான் சாஹேப்... இன்னொரு கன்னோசியோ, சோமநாதபுரமோ கிடைக்கவில்லையா? பாவம்! இந்தக் காஜுராஹோவுக்கு வந்து சேர்ந்திருக்கிறாய். இனியாவது புத்தி வருமா உனக்கு? ரத்தக்கறை படிந்த உன் கரங்கள், யுத்த வெறி பிடித்த உன் மனம், கொள்ளை கொள்ளும் பேராசை, அழிக்கும் ஆணவம் எல்லாம் விலகி நல்ல வழி செல்லுமா... பார்க்கலாம்” என்று அர்ச்சுனன் சொன்னதும் ஜெயந்திரன் அலட்சியமாகச் சிரித்துவிட்டு உதட்டைப் பிதுக்கியபடி நகர்ந்தான். “என்ன ஆணவம் பார் இவர்களுக்கு. ஏ! அமீர், நீயும் மற்றவர்களும் ஏன் இப்படி...” என்று ஆத்திரத்துடன் அவன் கத்த “அதோ பாருங்கள் சுல்தான்... அவர்தான் ஒட்ட நாட்டு இந்திரரதன். அவர் கம்பீரத் தோற்றத்தையும் அவர் அமர்ந்திருக்கும் அந்தக் குதிரையையும்.” “ஆமாம் அமீர். அந்தக் குதிரை ஒரு அற்புதமான ஜாதிக் குதிரை” என்றான் சுல்தான் முகமது. “எது தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் நம் சுல்தானுக்கு அசுவசாஸ்திரத்தில் அபார பாண்டித்தியம்” என்று ஒரு குரல் புறப்பட்டு வந்ததும் அந்தப் பக்கம் திரும்பினான் கஜினி. அங்கே நின்றவன் சாந்த்ராய். பற்களை நறநறவென்று கடித்தான் கஜினி. ‘தன்னிடம் தோற்றோடியவனுக்கு இவ்வளவு இறுமாப்பாகப் பேச வேண்டுமென்றால் எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? அது இங்கு அவன் இருப்பதனால்தானே...? முன்னமே தேடிப் பிடித்திருந்தால், அந்தச் சுக்பால்* மாதிரி இவனையும் சிறையில் அடைத்திருக்கலாம் அல்லவா’ என்று நினைத்த சுல்தான் மனதில் ஓடும் எண்ணங்களை அறியாமலிருப்பானா சாந்த்ராய்.
*பேரா நாட்டதிபனான சுக்பால், முதலில் முகமதின் கொடுமைக்குப் பயந்து முஸ்லீமாக மாறினான். பிறகு இந்துவாகத் திரும்பினான். இதனால் ஆத்திரங்கொண்ட கஜினி அவனை சாகும் வரை சிறையில் இருக்குமாறு செய்தான். “ஏ... சுல்தான்! மீண்டும் சொல்லுகிறேன். நான் பேரா நாட்டு சுக்பால் இல்லை. அவனைப் போல் சிக்கவும் மாட்டேன். சித்திரவதைப் படவும் மாட்டேன். புரிகிறதா? நீயோ நாட்டைப் பிடித்த பீடை. நீ இங்கு புகுந்து கொள்ளையும், கொலையும், அழிப்பதும், சிரிப்பதுமாக ஆட்டம் போட முடிகிறது. இது ஒரு நாள் மாறும். அன்று நாம் வேறு நிலையில் வேறு இடத்தில் சந்திப்போம்” என்று கூறிவிட்டு ஏளனமாகச் சிரித்துக் கொண்டே குதிரையைத் தட்டிவிட்டான். “அமீர், மீண்டும் அவனை தப்பவிட்டு விட்டாய். ஒருவேளை உன்னுடைய இந்து ரத்தம் இன்னும் மாறவில்லையோ என்னவோ?” என்று அவன் மீது பாய்ந்தான் கஜினி. ஹரதத்தன் சற்றும் சலனமுறாமல் “ஆம் சுல்தான். நான்தான் முஸ்லீமாக மாற முடிந்தது. என்னுடைய ரத்தம் இன்னும் முன்மாதிரியாக சிவப்புத்தான். வேறு நிறமாக மாறத்தான் இல்லை. எனவே நீங்களாவது தயவு செய்து உங்களுடைய ரத்தம் என்ன நிறம் என்பதைக் காட்டி அவ்வாறே என்னையும் மாற்றி விடுங்கள். எனக்கு மறுப்பில்லை” என்று சற்றே சினமுற்ற குரலில் ஏக்கமும் பெருமூச்சும் கலந்த நிலையில் பதில் கூறினான். அவனுக்கு என்ன மாதிரி பதில் கூறுவதென்று பதற்றத்துடன் துடித்த கஜினியின் எதிரே... “சலாம் சுல்தான் சாஹேப்!” என்று குரல் கொடுத்தபடி சுமார் 50 குதிரை வீரர்கள் பின் தொடர்ந்து வருமுன்னே வந்த ஒருவன்... காஜுராஹோவின் ராஜாங்க சின்னமணிந்த ஒருவன் வந்து நின்றதும் சுல்தான் அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு “உம்” என்று உறுமினான். பதில் சலாம் கூறாமல். “நான் சலாம் போட்டேன் சுல்தான். ஒரு உண்மையான முஸ்லீம் தனக்கு ஒருவன் சலாம் போட்டால் பிரதி சலாம் போடாதிருத்தல் இஸ்லாமியப் பண்பாட்டுக்கு விரோதமில்லையா?” என்று அந்தக் காஜுராஹோ வீரன் கேட்டதும் “ஆமாம் சுல்தான் சாஹேப், அவர் கூறுவது உண்மை” என்றார் ஃபெரிஷ்டா. முகத்தைச் சுளித்துக் கொண்டே “சலாம்” என்றான் கஜினி. “போயும் போயும் ஒரு சாதாரண வீரனுக்குப் பிரதி வணக்கம் சொல்லும்படியான மரபு நம் மதத்தில் இருப்பது நம்மையே நாம் அவமதித்துக் கொள்ளுவது போல் அல்லவா இருக்கிறது” என்றும் குமுறினான். “அது இருக்கட்டும் சுல்தான். எங்கள் மன்னர் வித்யாதரர் இன்னும் கால் நாழிகையில் தங்களைக் காண வருகிறார். அதை அறிவிக்கவே வந்தேன். வருகிறேன்” என்று கூறிவிட்டு அவன் திரும்பியதும் சுல்தான் திடுக்கிட்டான். ஃபெரஷ்டாவைப் பார்த்தான். “சுல்தான், நம்மை உண்மையிலேயே மதித்து வரும் அம்மன்னனை தக்க மரியாதையுடன் நாம் வரவேற்க வேண்டும். இதுவரை நம்மைப் போர் முனையில் சந்திக்காதவன். இன்று சமாதான முறையில் வருகிறான் என்றால்...” என்று அவர் கூறி முடிக்கு முன் குறுக்கிட்ட அமீர் அரூன்... “பேரறிஞரே, அவர் நம் சுல்தானைத் தமது விருந்தாளியாக இருக்குமாறு அழைக்க வருகிறார் என்று நம்புகிறேன்” என்றான். “அப்படியானால் நமக்கு பெரும் மகிழ்ச்சி. கஜினி சுல்தான் முரடன், நாசக்காரர்கள் என்றெல்லாம் ஏசும் அவர்களை இங்கிதத்துடன் வரவேற்று உபசரித்து மதிப்புடன் நடந்து கொண்டால், அவர்களுக்கே வியப்புண்டாகி ‘சே! நாம் இவரைப் போயா அப்படிப் பேசினோம்’ என்று வருந்தவும் செய்யுங்கள்” என்று மிகவும் நிதானமாகக் கூறினான் மகன் மசூத். கஜினி ஆத்திரத்துடன் மகனைப் பார்த்து ஏதோ சொல்ல யத்தனித்தவன் அவன் முகத்தைப் பார்த்ததும் பேசாமல் “உம்...” என்று ஒருமுறை உறுமிவிட்டுப் பிறகு ஃபெரிஷ்டாவிடம், “அறிஞரே? நம்மைச் சுற்றி நீங்கள் எல்லாம் இருக்கும் போது நாம் நிதானம் இழப்பதில் நியாயம் இல்லை. ஆனால் எதற்கு இதெல்லாம்...? பிடிக்கவேயில்லை. அமீர் அரூன் அழைத்து வந்த நோக்கம் புரியவில்லை. நாம் யாரைச் சந்திக்கப் போகிறோம் என்றும் தெரியவில்லை. இடையே இந்த காஜுராஹோக்காரன் என்றால்...” “கொஞ்சம் பொறுத்துப் பேசுங்கள் சுல்தான். இந்தக் காஜுராஹோவின் இன்னொரு பெயர் புந்தேல்கண்ட் என்பது. இந்த வித்யாதரன் சிறந்த வீரன். நிறைந்த அறிவாளி. தனக்கு வயது சற்றே கூடிவிட்டதென்று நினைத்துத் தன் மகனுக்கு அதாவது விஜயபாலனுக்குச் சென்ற ஆண்டில் மகுடம் சூட்டிவிட்டுப் பெயருக்குத்தான் அரசராயிருக்கிறார். ஆனால் பெரும் கலைஞர். தன்னுடைய முப்பாட்டன் வகுத்த வழிமுறைகளில் கலைச் சிற்பங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இந்தச் சிற்பங்கள் உங்களுக்குக் கூடப் பிடிக்கும் தவிர...” என்று நிஜாமுதீன் கூறி முடிக்கு முன், “எனக்கு காபீர்களின் தெய்வ சிற்பங்கள் பிடிக்காது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும் நிஜாமுதீன்” என்று ஆத்திரமாகக் கூறினான் கஜினி முகமது. ஆனால் நிஜாமுதீன் பதறாமல் “இவை நீங்கள் சொல்லும் வகையில் உருவாகவில்லை. மாறுபட்டது. பார்த்தால்தான் புரியும். என்றாலும் நான் வற்புறுத்தவில்லை” என்றார். ஏராளமாக குதிரைகள் படபடவென்று சத்தமிட்டு வந்ததும் “அதோ காஜுராஹோ மன்னர் வித்யாதரன்” என்று அறிவித்தான் ஹரதத்தன். ஆண் அழகன் என்றால் அவ்வளவு சிறந்த அழகனாகவே இருந்தான், அந்த முதிய வயதிலும் வித்யாதரன். அவன் தலையில் ஆரோகணித்திருந்த வைரமுடி அதியற்புதமாக இருந்தது. காதில் குண்டலங்கள். பன்னா வைரங்கள் பதித்த ஹாரம் தொலை தூரத்திலேயே கண்களைக் கூசச் செய்யும்படி ஜ்வலித்தன. அருகில் வந்ததும் தன்னைத் தலைகுனிந்து முதலில் வணங்கிய நிஜாமுதீனை பார்த்துவிட்டு, “ஓ...! சலாம் சலாம்ஹை” என்று கூறிக் கொண்டு தமது குதிரை மீது இருந்து இறங்கி அவர் கைகளைப் பிடித்துக் குலுக்கினான் வித்யாதரன். பிறகு ஃபெரஷ்டாவைப் பார்த்துவிட்டு “பல ஆண்டுகள் ஓட்டிவிட்டாலும் உங்களுடைய உருவம் சிறிதும் மாறவில்லை” என்று கூறிக் கொண்டே கைகுலுக்கிவிட்டு ஆல்பரூனியைப் பார்த்து... “பேரறிஞரே! கஜினி சுல்தான் மஹாபாக்கியசாலி. இந்தப் பரந்த இந்துஸ்தானத்தில் அவர் சாதித்துள்ளவை பற்றி வருங்காலம் எவ்வகையில் மதிப்பீடு செய்தாலும் கஜினி எப்பொழுதும் பேரறிஞர்களால் சூழப்பட்டிருந்த பெருமையைப் பெருமையாகவே வரைந்திருக்கும். ஆம். சலாம் ஆலேகும் சுல்தான் சாஹேப்... காஹுராஹோ உங்களை நேசக்கரம் நீட்டி மதிப்புடன் வரவேற்கிறது...” என்று தனது இரு கரங்களையும் அவர் நீட்டியதும் சில விநாடிகள் வியப்பால் திக்பிரமை பிடித்தவன் போல் நின்று விழித்த கஜினி சட்டெனச் சுதாரித்துக் கொண்டு “ஆலேகும் சலாம்... சலாம்.” என்று பதில் கூறியபடி நீட்டிய கரங்களை பிடித்துக் குலுக்கினான். வித்யாதர மன்னன் புன்னகைத்துக் கொண்டே “சுல்தான், காஜுராஹோவுக்கு இன்று பெரும் அதிர்ஷ்ட நாள். இந்துஸ்தானத்தின் மன்னர்கள் பலர் வந்துள்ளனர். அரபு நாட்டிலிருந்து நம் நன்மதிப்பிற்குரிய கலிபா அரூன் ஆல் ரஷீத் அவர்களின் திருமகனார் வந்துள்ளார். அவருடைய வணக்கத்துக்குரிய குருநாதரும் வந்துள்ளார்.” “இங்கேயா? உங்களிடமா?” என்று வெகுவாகப் பதறிக் கேட்டான் சுல்தான் கஜினி. வித்யாதரர் மீண்டும் புன்னகை புரிந்து கொண்டே “ஆமாம் சுல்தான். அவரையும் மற்ற மன்னர்களையும் ஏன்? உங்களையும் கூட நாம் வரவேற்று உபசரிக்கும்படியான பாக்கியத்தை நமக்கு அளித்த பெருந்தகை கீழை உலகத்தின் சூரியன். நீங்களும் மேன்மைக்குரிய கலிபாவின் திருமகனாருடன் அந்தச் சூரியனைச் சந்திக்கும் பாக்கியத்தைப் பெறப் போகிறீர்கள்.” “என்ன... என்ன சொன்னீர்கள்? கீழை உலகின் சூரியனா? யார் அது...? எங்கள் இஸ்லாமியப் பெருந்தலைவர் கலிபாவின் திரு நாமத்தைக் கூறிய அதே வாயால் வேறு ஒரு சூரியனைப் பற்றிப் பேசுவதென்றால் உண்மையான முஸ்லீமான எனக்கு எப்படியிருக்கும் என்பதை உணர்ந்தீரா?” என்று பதற்றத்துடன் கேட்டான் கஜினி. ஆனால் இன்னமும் புன்னகை மாறாமல் நிதானம் விடாமல் “சுல்தான், உமது கலிபாவின் மகன் எப்படிச் சொல்ல சொன்னாரோ அப்படியே சொல்லியிருக்கிறேன். தவிர உம்மை அவர் உடனே தம்மை வந்து கண்டு தம்முடன் இருக்கும்படி சொல்லியனுப்பியுள்ளார்.” “என்ன... என்னையா? இதை நீங்கள் முதலிலேயே சொல்லாமல்...” “இல்லை சுல்தான். நீங்கள் அனைவரும் இருப்பது எங்கள் நாட்டில். எனவே யார் எங்கு எப்படி இருக்க வேண்டுமென்று கூறுவதெல்லாம் எங்கள் உரிமையும் கடமையும் ஆகும். இது உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியும் என்று நம்புகிறேன்” என்று சற்றே அழுத்தமாகக் கூறியதும் சுல்தான் அயர்ந்து போனான். ஆனால் மசூத் முன் வந்து “சலாம்... காஜுராஹோ மன்னரே. என் பெயர் மசூத். இவர் தம் மகன்” என்று கூறியதும் “ஓ! அலேகும் சலாம்... நல்லது... என்னுடைய நண்பர்கள் மூவரும் அதாவது உங்கள் அறிஞர்கள் எனக்கு அறிமுகப்படுத்த சந்தர்ப்பம் இல்லை, பரவாயில்லை. தங்கள் தந்தை உடனே கலிபாவின் திருமகனைப் பார்க்கப் பதறுகிறார். அவரோ கீழை நாடுகளின் சூரியனை பார்க்கப் பதறிக் கொண்டிருக்கிறார். நல்லது... என்னுடைய வீரர்கள் உங்கள் அனைவரையும் கலிபாவின் திருமகன் தங்கியுள்ள கூடாரத்துக்கு அழைத்துச் செல்வார்கள். எமது காவலன் வந்து அழைக்கும் வரை நீங்கள் அங்கேயே அளவளாவலாம். நேரம் கிடைத்ததும் ஆளை அனுப்புகிறேன். வருகிறேன்... சலாம் எல்லோருக்கும். சுல்தான் நாம் மீண்டும் சந்திப்போம். அதுவரை எங்கள் அன்பு கலந்த வரவேற்பு... நல்லது வருகிறேன்” என்று கூறிவிட்டுக் குதிரை ஏறிவிட்டார். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவர் மாதிரி ஹரதத்தனைப் பார்த்து “ஹரதத், நீ கஜினி சுல்தானை அழைத்து வந்ததற்கு மிக்க நன்றி. அவர் வாழ்நாளில் ஏதேதோ பார்த்திருக்கிறார். என்னென்னவோ செய்திருக்கிறார். ஆனால் அவர் நம்மைவிடப் பாக்கியசாலி. ஏனெனில் இவரைக் காண வேண்டும் என்று சூரியனே காணார் என்றால்...” சட்டெனப் போய்விட்டார் அவர். கஜினி மீண்டும் திக்பிரமை பிடித்தவன் போல அந்தத் திசையைப் பார்த்தபடியே நின்றான். ராஜ மோகினி : ஆசிரியர் உரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|