ராஜ மோகினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

3

     ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் போர் என்றால் அது அந்தந்த நாட்டு மன்னர்களின் போட்டா போட்டி மனோ வேகத்தால் மட்டும் உண்டாவதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளும் சற்றும் எதிர்பாராத உள்நாட்டு குமுறல்களாலும் சில சமயம் தவறான ஆசைகளாலும் ஏற்படுவது உண்டு. ஆனால் பாரத நாட்டின் தென்கோடி முதல் வடகோடி வரை கீழைக் கடலில் எங்கெல்லாமோ சென்று கடல் நாடுகள் பலவற்றில் தன் வெற்றியை நிலைக்கச் செய்தான் பரகேசரி. பரகேசரி இராஜேந்திரவர்மனென்றால் அது எதனால்? என்று வரலாற்று ஆசிரியர்களே வியந்து கேட்கின்றனர். தன்னுடைய புகழ் தரணியெங்கும் பரவ வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் இதற்கெல்லாம் காரணம் என்று ஒரு வரலாற்றுப் பேராசிரியர் கூறியுள்ளார்.* இது தவறென்று கூறுவதற்கு பதில் அனேகமாக இதை மறுத்துக் கூறும் ஆராய்ச்சியாளர்கள் மிக மிக குறைவே என்று சொல்லலாம்.

* பேரசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரிகள் தமது ‘சோழர்கள்’ வரலாற்று ஆராய்ச்சி நூலில்- சென்னை பல்கலை கழக வெளியீடு.

     ஆனால், ‘இராஜேந்திர சோழன் தனது தந்தை இராஜராஜ சோழனைக் காட்டிலும் அதிசாகசமான வரசாதனைகளை புரிந்திருக்கிறான்’ என்ற உண்மையை வரலாற்றாசிரியர் வலியுறுத்தி உள்ளனர். வங்கத்தில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் சோழப்படைகள் தங்கியிருக்க வேண்டி நேரிட்டதேன்? அவ்வூர் மகிபாலன் கோரிக்கை மட்டும் அல்ல. வடநாட்டிலே ஏதோ மாறுதல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. தந்தபுக்தி நாட்டின் தர்மபாலன் தட்சிணலாடத்தின் ரணசூரன், வங்காள பங்காளி கோவிந்த சந்திரன் ஆகிய முப்பெரும் மன்னர் இராஜேந்திரனுடன் போர் நடத்தாமலேயே அவனுடன் சமரசம் செய்து கொண்டுவிட்டது புத்திசாலித்தனமே! ஆனால் இதன் காரணமாக போர்த்தினவு எடுத்த வீரர்கள் பாதிக்கப்பட்டார்கள்; கடாரம் செல்ல முடியாது இங்கே வங்கத்துக்கு வந்தவர்கள் தவித்துப் போனார்கள். முன்பு கடாரம் சென்ற படையினர் ஒட்ட தேசத்தில் நிகழ்த்திய மாபெரும் போர் பற்றி அவ்வூர் வாசிகள் அதிசயம் அதிசயமாகப் பேசும்போதெல்லாம் இதர வீரர்கள் குமுறித் துடித்தனர். தங்கள் ஊர்க்காரர்கள் இங்கே வந்து இவ்வளவு புகழ் தேடிச் சென்றிருக்கும் போது தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ஏங்கவும் செய்தனர்!

     மாமன்னன் இந்திரரதன் அதாவது கலிங்கத்தின் மன்னன் திறமை வாய்ந்தவன் மட்டுமில்லை. எதிரிகளின் காலகாலன் என்று அக்காலத்தில் புகழ் பெற்று வடநாட்டையே அலறச் செய்த மாவீரன் சோழரிடம் தோற்றான், சரண் அடைந்தான் என்ற அறிவிப்பு வந்ததைக் கூடப் பலர் முதலில் நம்பவில்லை. இதெல்லாம் புரளி! ஒட்டநாட்டு இந்திரனிடம் ஒட்டக்கூட முடியாதுதான் கோவிந்த சந்திரன் கொக்கரித்தான். தர்மபாலன், ஒருவேளை அதிசயம் நடந்திருந்தாலும் நடந்திருக்கலாம் என்று நினைத்தான்! ஆனால் ரணசூரன் இனி சமாளிக்க வாய்ப்பில்லை என்று ஓடி வந்ததும் இவர்கள் சரி, நடந்தது. யாவுமே உண்மைதான். எனவே ஆனாணப்பட்ட இந்திரரதன் கதியே இப்படியென்றால் நாம் எந்த மூலை என்று மனம் மாறிவிட்டனர்!

     பரகேசரி இராஜேந்திர சோழனுக்கு இம்மூவரும் கூடி மாபெரும் வரவேற்பளித்துக் காணிக்கைகள் வழங்கி நல்ல பிள்ளைகள் ஆனதும் போர்ப் பிரியர்களான வீரர்கள் உதட்டைப் பிதுக்கிக் கொண்டனர்!

     இங்கும் வாய்ப்பில்லையே! எனவே வேறு என்னதான் செய்வது? தமிழ் வீரம் சிறப்புப்பெற போர் இல்லை என்றால் இங்கத்திய பெண்களுடன் உறவாடி இன்புறுவது என்று தாங்களாகவே முடிவெடுத்து விட்டனர் போலும்! இதைப் பேரரசர் இராஜேந்திரர் தடுக்க இயலவில்லை! அவருடைய சேனாபதி அரையபூபதியாலும் இயலவில்லை.

     இன்னொரு சேனாபதியோ இதிலென்ன தவறு என்று ஒதுங்கி நின்று விட்டுக் கொடுத்திருக்கிறார் என்பதையும் நாம் சற்று முன்பு அறிந்தோமே!

     ஆயினும் சோழ மாமன்னனுக்கு நிம்மதி தராத விஷயங்களில் இதுவும் ஒன்று. அதாவது ‘நாங்கள் யுத்தம் செய்யவேதான் வந்தோம்! இங்கோ நம்முடன் மோதுவதற்கு எவரும் இல்லை. எங்களால் சோம்பேறிகளாகவும் இருக்க முடியவில்லை. அங்கே தமிழகத்தில் பூமியாட்சி செய்த நாங்கள் அதாவது உழுது பயிரிட்டு வாழ்ந்தவர் படையாட்சியினராக மாறி வந்தது எதற்காக? நாங்கள் வாய்வீச்சு வீரர் அல்ல, போர்க்களத்திலும் வீரம் புரிவோம் என்பதை உறதிப்படுத்தத்தானே. அதற்குச் சந்தர்ப்பம் இல்லாத போது எங்கள் மன நிலை வெகுவாகப் பாதிக்கப்படுகிறது! ஊர் திரும்பினால் ‘அங்கே ஏண்டா தண்டச்சோற்றுத் தடியன்களாய் இருந்துவிட்டு வந்திருக்கிறீர்களே! வெட்கமாயில்லை?’ என்று கேட்டால் எங்களுக்கு எப்படியிருக்கும்! புத்தி சரியில்லாத நிலையில் சித்தம் போக்கு சிவன் போக்கு என்று ஒரு லட்சியம் இல்லாத மனோபாவம்! கண்டது கண்டபடி நடக்கிறோம். எங்களுக்கே புரிகிறது! வந்த நோக்கம் வேறு. இங்கு நடப்பதோ வேறு. எதை வெறுக்க வேண்டுமோ அதை ஏற்றுக் கொண்டு விடும்படியான தடுமாற்றம். இந்தத் தடுமாற்றம் வளர்ந்து இங்கு எங்களால் நிலைமையே மாறிவிட்டது!’ என்று வீரர்களில் பெரியவர்களான சிலர் தெரிவித்த போது அரசன் ஆத்திரப்படவில்லை. கிலேசங் கொண்டான். எனவே நிம்மதி எப்படி நிலைக்க முடியும்?

     உபசேனாதிபதிகளான விஜயன், அதாவது சேனாதிபதி வல்லபரின் இளையமகன், ஆண் அழகன். இந்த இருபதாண்டிளைஞன், வெறும் அழகன் மட்டுமில்லை. கம்பீரத் தோற்றம். எடுப்பான, மிடுக்கானக் காளை என்று கூறலாம். அவன் பேச்சில் இனிமையும் கற்பனையும் இணைந்து ருசியூட்டும். முகத்திலே நிலவிய புன்னகை கூட அவன் அழகுத் தோற்றத்தினை மிகைப்படுத்திக் காட்டும். இதில் ஒரு பெரும் விசேஷம் என்னவென்றால் அவன் எதிரியுடன் வாள் வீசும் போதுகூட இந்தப் புன்னகை மாறாது மறையாது. அப்படியே இருக்கும்! இதனால் எதிரியின் ஆத்திரம் மேலும் கூடும். வாளை வேகமாக வீசாமல் வீசுவான் கோபம் தாங்காமல்.

     வீரத்தின் எதிரி ஆத்திரம்தானே!

     விஜயன் எளிதில் அவனை வீழ்த்திவிட்டு வெற்றிப் புன்னகையுடன் அடுத்த எதிரியைச் சந்திப்பான் அநாயாசமாக! இது அவன் சுபாவம். மாமன்னன் இராஜேந்திரன் சில சமயம் வியந்ததுண்டு. அவனுடைய இந்தத் தனித் திறமையைக் கண்டு போர் செய்யும் போது கூடவா புன்சிரிப்பு! ஏன் ஒருமுறை சோழரே கேட்டார் இது பற்றி அவனிடம்!

     அவன் வழக்கம் போலப் புன்னகைத்துக் கொண்டு “சோழ தேவனே! நீங்கள் என்னையும் பொருட்படுத்தி இவ்வாறு கேட்பது தங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. நான் வெளித் தோற்றத்தில்தான் அவ்வாறிருக்கிறேன். உள்ளத்தின் நிலையைக் காட்டாமல் இவ்வாறு செயல்படப் பழகி விட்டேன். தவிர, எங்கள் தந்தை என்னையும் அண்ணனையும் வேட்டையாட அழைத்துச் செல்லும் போது கொடிய விலங்குகளைக் கண்டு அஞ்சிவிடக் கூடாது. கண்களில் திகைப்புக் காட்டினால் கூட அவை உணர்ந்துவிடும் நம் நிலையை. புன்னகையுடன் அவற்றை வெகு அலட்சியமாக நோக்கினால்தான் சற்றே தயங்கி நகரும். இவன் நம்மைக் கண்டு நடுங்கவில்லை, அஞ்சி ஓடவில்லை. எடுப்பாக நோக்கிப் புன்னகையுடன் பார்க்கிறான். எனவே இவனிடம் நாம் எச்சரிக்கையாக இருந்து ஒதுங்கி விட்டால் கூட நல்லது என்று ஊகித்து உணர்ந்து ஒதுங்கி விட்டாலும் அதிசயமில்லை என்று கூறுவதுண்டு. அந்த மிருகங்களைவிட இந்த ஆத்திரக்காரர்கள் உயர்ந்தவர்கள் இல்லையே!” என்று கூறினான்.

     மாமன்னர் இதற்குப் பதிலாக சிரக்கம்பம் செய்தாரே தவிரப் பதில் கூறவில்லை. ஆனால் விஜயன் நெஞ்சழுத்தக்காரன். ஆனால் எதிரியிடம் கருணை காட்டுவதே ஒரு கோழைத்தனம் என்று எண்ணுபவன் என்பதனைப் புரிந்து கொண்டவர். வல்லப தேவரின் மகன் பின்னே வேறு எப்படி இருப்பான்.

     ஆயினும் மிதிலைப் போர் முடிந்த பிறகு நாளிதுவரை வேறு இடங்களில் போர் எதுவுமில்லை என்னும் போது இவனை ஏதாவது ஒரு பகுதிக்கு அனுப்பி விடுவதே நல்லது என்று எண்ணினார் மன்னர் இராஜேந்திரன். வேறு இடம் எதுவும் இல்லாததால் வங்கத்தின் மேற்கெல்லையிலுள்ள குடதேசத்துக்கு ஒரு சிறுபடைக் குழுவுடன் அனுப்பி வைத்தார்!

     விஜயன் அங்கு சென்று மாதங்கள் பல ஆகிவிட்டன. அந்தப் பகுதியின் சிற்றரசன் பூரணசந்திரன் என்பான் திடுதிப்பென்று சோழ மன்னன் எதிரில் வந்து குதித்த பிறகுதான், அவர் வியப்புடன் ‘சரி ஏதோ நடந்துவிட்டது அங்கே!’ என்று முடிவு செய்தான். எனினும் அன்புடன் வரவேற்றுப் பேசுவதில் குறை வைக்கவில்லை. ராஜரீக முறைப்படி வணக்கம் செய்தல், நலம் அறிதல் ஆகியன முடிந்ததும் பூரணசந்திரன் “சோழ தேவரே, நான் இங்கு வந்தது நாடு பற்றிய ஆபத்து இல்லை. என் வீடு பற்றிய ஆபத்து” என்றான் கிலேசமும் சற்றே சினமும் கலந்த குரலில்!

     சோழ மன்னன் சட்டெனப் புரிந்து கொண்டார். ஆனால் சோழ சேனாதிபதியான வல்லபர் புரியாத மாதிரி சற்றே கேலித் தொனியில் “உங்கள் வீட்டுக்கு ஒரு ஆபத்து என்றால் அதை ஒரு சிறு கொத்தனாரை வைத்துத் திருத்திக் கொள்ளலாமே? இதற்காக எங்கள் மாமன்னரைக் காண வந்து நல்ல பொழுதை வீண் பொழுதாக்குவானேன்!” என்றான் சிறிதும் இரக்கமற்ற முறையில்!

     “எப்பவுமே அவர் அப்படித்தான் பூரணரே! இதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் அவசரம் அவசரமாக வந்திருப்பதிலிருந்தே ஏதோ நடந்து விட்டதென்பதை ஊகிக்க முடிகிறது. ஆனால் நாட்டுக்கு ஆபத்து இல்லை என்று கூறிவிட்டீர்கள். நல்லது. ஆனால் வீட்டுக்கு என்றீர்களே! அது சற்று கவலை தருகிறது!” என்றார் இன்னொரு சேனாபதியான அரைய பூபதி!

     சோழ இராஜேந்திரன் இதை ஆமோதிப்பது போலச் சிரக்கம்பம் செய்தானேயன்றி பேசி விடவில்லை!

     “நாங்கள் குடதேசத்துச் சேனர்கள் அதாவது இந்த வமிசம் இன்றளவும் வங்கத்தின் ஆட்சியுரிமை மூலம் மக்கள் சேவையில் முழு ஈடுபாடு கொண்டது!” என்றார்.

     மகிபாலரும் இதை ஆமோதிப்பது போல “நாளிதுவரை வங்கத்தை ஆண்டு வரும் எங்கள் வமிசத்தினரைப் போல நெருங்கால பெருமை கொண்டதுதான் இவர்கள் வம்சமும். ஆனால் நாடாளும் மன்னர் ஒருவரை இவர்கள் நாளிதுவரை நாட்டுக்குத் தராததற்கு நாங்கள் பொறுப்பில்லை! ஏனெனில் நாங்கள் இன்று வரை இவர்களுக்கு எதிரிகள் இல்லை!” என்றார் மீண்டும்.

     “பேஷ்! பேஷ்!” என்றார் பல்லவதேவர். ஆனால் தமது அரசர் ஒரு வார்த்தை கூடப் பேசாது அவர்களுக்குள்ளேயே விவாதம் நடத்திக் கொள்ளும்படி விடுவதேன் என்று ஆராய முயன்றார் அரைய பூபதி!

     மகிபாலர் இந்த ஆவேசப் பேச்சை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. பூரணசந்திரன் ஏதோ பெரும் வேதனைக்குள்ளாகி இங்கு வந்திருக்கிறார். எனவே தமது குறுக்கீடு அவருடைய அடங்கியிருந்த ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டது. கூடிய வரை இந்தச் சமயம் தாம் ஒதுங்கியிருப்பது கூட நல்லது என்று எண்ணிச் சட்டென எழுந்து அப்பால் போய்விட்டார். அவர் போவதைக் கூட பூரணச் சந்திரர் ஆத்திரத்துடன் பார்த்தார்.

     ஆனால் சோழ மன்னன் அதைக் கவனியாது போல “பூரணரே! முதலில் நீங்கள் திடுதிப்பென்று வந்த காரணம் கூறுங்கள். பிறகு விவாதங்களை வைத்துக் கொள்ளலாம்!” என்றார் நிதானக் குரலில்.

     “சோழரே! நான் பதறிப் பேசியதற்கு வருந்துகிறேன். ஆனால் அவர் அப்படிக் குத்திக் காட்டியிருக்கக் கூடாது. பாலர்கள் ஆட்சியில் இன்றைய வங்க தேசம் தன் மானமிழந்துவிட்டது! நல்லகாலமாக நீங்கள் உங்கள் பெரும் படையுடன் இங்கு வந்திராவிட்டால் மிலேச்சர்களின் தாக்குதல்களுக்குள்ளாயிருக்கும். ஆப்கானிய நாட்டிலிருந்து கூட்டங் கூட்டமாகத் துருக்கியர்கள் வருகிறார்கள். சிந்துச் சமவெளியில், டில்லியில், குஜராத்தில் எல்லாம் அவர்கள் அட்டகாசம் தாங்கவில்லையாம். நீங்கள் இங்கு இருப்பதால், உமது மாபெரும் வெற்றிப்படைகள் தங்கியிருப்பதால், அவர்கள் இந்தப் பக்கம் திரும்பவில்லை. நீங்கள் உங்கள் நாட்டுக்குத் திரும்பிவிட்டால் அப்புறம் அவர்கள் தாக்குதலால் இங்கத்திய நாடுகள் யாவும் சிதறிச் சின்னாபின்னமாகிவிடும் என்பதில் ஐயமில்லை. ஆனால்...” என்று மேலே ஏதோ சொல்ல நினைத்தவர் சட்டென்று “நான் வந்துள்ள விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். எனக்கு ஒரு மகள் உண்டு. காமினி என்பது அவள் பெயர். எனக்கு இவள் ஒரே மகள். வேறு சந்ததியில்லை. அவளுக்கு அதாவது நான் அறிந்து மணம் நடத்தி வைக்காததால் அவள் திடீரென்று மறைந்து விட்ட கொடுமையைக் கூறத்தான் இங்கே வந்தேன்!” என்றார் பரபரப்புடன்.

     “உங்கள் மகள் திடீரென்று காணாமல் போனாள் என்றால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று கேலியாக வல்லபர் கேட்டதும் உண்மையிலேயே கோபம் கொண்டுவிட்டார் பூரணசந்திரர்!

     “ஊர் பேர் இல்லாத எவனோ அநாதைப் போக்கிரியால் வஞ்சிக்கப்பட்டுக் களவாடப்பட்டாள் என் மகள். அதற்குப் பழி தீர்க்கவே, இங்கு வந்திருக்கிறேன் நான்” என்றார் பூரணசந்திரர். இப்படி அவர் கூறிய போது பிறகும் நிதானமாக அமர்ந்திருக்க முடியுமா? அல்லது மற்றவர்கள்தான் பதறாமல் இருக்க முடியுமா? எல்லாரும் அவருடைய விபரீதப் பேச்சைக் கேட்டதும் பதறித்தான் எழுந்தனர். பிறகு சோழரையும் பார்த்தனர். அவரோ எப்படி இதைச் சமாளிப்பது என்பதைப் போல சேனாபதி அரைய பூபதியைப் பார்த்தார்.

     வல்லபரோ நாம் ஏதோ ஒரு பேச்சுக்குச் சொன்னது இப்படி மாறும் என்று எதிர்பார்க்க வில்லையானாலும் ஒரு குறுநில மன்னனிடம் தனக்கென்ன பயம் என்பது போலப் பார்த்தார் அவரை அலட்சியமாக! பிறகு நிதானமாகவே கேட்டார்!

     “பழி தீர்க்க வந்த பெரியவரே! உங்கள் மகளை எவனோ ஒரு அநாதைப் போக்கிரி அயோக்கியப்பதர் களவாடி விட்டான் என்றால் அவனுடன் மோதாமல் இங்கே வருவானேன்? வந்தவர் எங்கள் மாமன்னர் எதிரே பழி தீர்ப்பதாக பிதற்றுவானேன். யாரோ யாரையோ பழிவாங்கும் வெறிப் பேச்சுக்கு இங்கு இடமில்லை” என்றார், எழுந்து நின்ற வேகத்தில் இரண்டடி முன் வந்து! வல்லபர் கோபம் கொண்டால் அது ஒரு வரம்புக்குட்படாது!

     தவிர பெரிய வாளுக்குப் பதிலாக பெரிய ‘கதை’யைத்தான்* வைத்திருப்பார் வல்லபர். ஆனால் அது இப்போதில்லை. என்றாலும் அவர் நின்ற தோரணை ‘கதை’யைத் தாங்கி நிற்பது போலவே இருந்தது.

*கதாயுதம் என்பதைக் ‘கதை’ என்று சுருங்கக் கூறுவர். இது புராதனகால ஆயுதம்!

     பூரணச்சந்திரர் இதற்கு சற்றும் அஞ்சாமல், “சோழ மாமன்னரே, என் மகளை இன்று ஏமாற்றி அழைத்துப் போய் அலங்கோலமாக்கி விட்டவன் உங்கள் உபதளபதி விஜயன்!” என்று தமது கர்ஜனைக் குரலில் கூறியதும் “என்ன...?” என்று பதறிக் கேட்டவை இரு குரல்கள். ஒன்று சோழ மாமன்னருடையது. இன்னொன்று வல்லபருடையது.

     பூரணச் சந்திரர் தம்மிடம் ஏன் வந்தார் என்று இதுவரை புரிந்து கொள்ள முடியாத சோழருக்கு இப்பொழுது காரணம் புரிந்துவிட்டது. ஆனால் அந்தக் காரணம் ஏன் புரிந்தது என்றும் கிலேசம் எழுந்தது.

     வல்லபருக்கோ தம்மிடம் இன்று வகையாகச் சிக்கிக் கொண்டவரை வாய்ப் பேச்சாலேயே குதறிவிட்ட எக்களிப்பில் திளைத்தவர் இப்பொழுது திகைப்பில் ஆழ்ந்து வாய் மூடிவிட்டார். எனவே சேனாபதி அரைய பூபதிதான் பேசும்படி நேரிட்டது.

     “குடதேசத்துச் சேனரே, சற்றுப் பொறுமையாக விளக்கினால்தானே புரியும்! எங்கள் உபசேனாதிபதி உங்கள் மகள் அவள் விருப்பமில்லாமல், கவர்ந்து போனது முற்றிலும் நியாயமற்றது. இந்தக் கொடுமையைச் சகிக்க முடியாது. பொறுக்கவும் கூடாது என்பது உறுதி. எனவே சற்று விளக்கமாக எப்படி இது நடந்தது? உங்கள் மகள் தனது அந்தப்புரத்தில் கட்டுக்காவலுடன் இருந்த நேரத்தில் எப்படி இவன் உள்ளே நுழைந்து இந்த அக்கிரமத்தை, ஓரு அபலையை, மற்றவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் கவர்ந்து சென்றான் என்பதையாவது கூற முடியுமா?”

     பூரணசந்திரருக்கு அரைய பூபதியின் இந்தத் திருப்பி திருப்பிக் கூறும் வார்த்தைகள் பிடிக்கவில்லையோ என்னவோ, சட்டெனக் குறுக்கிட்டார்!

     “என் மகள் ஒரு அப்பாவி, அபலை, வஞ்சிக்கப்பட்டாள் என்பதும் உண்மை. ஆனால் அதே சமயம் அவள் விருபப்படாமல் நடந்துவிட்டது இந்த அக்கிரமம் என்று கூறுவதற்கில்லை. அதாவது அவனிடம் ஏமாந்து போய்த் தன் மனதைப் பறிகொடுத்து விட்டாள் அவள்! எவனோ ஒருவன் ஆண் அழகன் என்பதனால், ஏமாந்து தன்னை இழந்துவிட்டவள் மீண்டும் அவன் தன்னைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் ஓடிவிடுவான் என்பதை அறியவில்லை” என்று எரிச்சலுடன் சொன்னதும் சோழ மாமன்னர் “பூரணசந்திரரே! உங்கள் மகள் சிறு குழந்தையல்லவே! தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தெரியாதா?” என்று கேட்டார் வெடுக்கென்று.

     பூரணசந்திரர் சற்றே தயங்கி, “அவள்தான் அவனிடம் பைத்தியம் கொண்டிருந்திருக்கிறாளே!” என்று கூறினார்.

     அரைய பூபதி சிறிதே புன்னகைத்துவிட்டு “தங்கள் மகள் வயது வந்தவள், நல்லது பொல்லாதது அறிந்தவள். எனவே தனக்கு அவன் மீது ஏற்பட்டுள்ள ஆசை உண்மையானது, நலமளிப்பது என்றே அவள் கருதியிருக்கலாம் அல்லவா?” என்று கேட்டார்.

     “ஆமாம்! அவள் என்னிடம் இப்படித்தான் வாதித்தாள். எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. ஆனால் அவள் என்னிடம் ‘ஏன் குடி முழுகிவிட்டது போலக் குதிக்கிறீர்கள் அப்பா. நானும் அவரும் கடவுள் சாட்சியாகக் காந்தருவ விவாகம் புரிந்து கொண்டு விட்டோம்’ என்று உளறியதுடன் நிற்கவில்லை” என்று கூறிவிட்டுச் சட்டென மவுனமானார். ஏனெனில் அச்சமயம் அங்கு மீண்டும் மகிபாலர் வந்தார்.

     “பின்பு என்ன சொன்னாள் உங்கள் மகள்?” என்று கேட்டார் அரையர்.

     ஆனால் பூரணசந்திரர் “நான் இப்போது அது என்னவென்று சொல்ல விரும்பவில்லை” என்றார்.

     மகிபாலருக்கு இதைக் கேட்டதும் இவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். தான் வந்ததும் அவர் நிறுத்திவிட்டார் என்றுதான் நினைத்தார்.

     ஆனால் ஏன் இந்த மர்மம் என்பது போல இராஜேந்திர சோழன் தன் சேனாதிபதிகளை நோக்க, வல்லபர் வாய் திறக்கவில்லை. ஆயினும் அவர் உள்ளூரக் குமுறுகிறார் ஆத்திரம் தாங்காமல் என்பதை பூரணசந்திரர் தவிர மற்றவர்கள் உணராமலில்லை. ஆனால் அத்தருணம் யார் என்ன செய்ய முடியும்!