ராஜ மோகினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

14

     காஜூராஹோவில்* அன்று என்னதான் நடக்கப் போகிறது என்று அறிய பேராவல் கொண்டதனாலோ என்னவோ சூரியனே சற்றுச் சீக்கிரமாக உதயமாகி விட்டான்! சூரியனுக்கே இந்த அவசரம் என்றால் வடபாரதத்தின் எல்லா அரசர்களுக்கும் எவ்வளவு ஆர்வம் ஏற்பட்டிருக்கும் என்று நாம் அதிகமாக விளக்க வேண்டியதில்லை. எனினும் தன்னை எதற்கு இங்கே கொண்டு வந்திருக்கிறான் அமீர் அரூன் என்ற சிந்தனையிலிருந்து மட்டும் சுல்தான் இன்னும் விடுபடவில்லை!

     *இன்று மத்தியப் பிரதேசத்திலுள்ளது இந்த அற்புதக் கலைக்கோயில்.

     ‘எங்கே அந்த அமீர்?’ என்று பரபரப்புடன் தான் தங்கியிருந்த மாளிகை வாயிலில் வந்த சுல்தான் முகமதுவுக்கு ஒரு பேரதிசயம் காத்திருந்தது!

     அவனுடைய அன்புக்குரிய இளைய மகனான மசூத்கான் (ஆம்! இவனுக்கு அண்ணன் ஒருவன் உண்டு) பேரறிஞர்கள் ஆல்பரூனி, நிஜாமுதீன், உட்பி, மிர்கோண்ட், இபுன் ஆஸர், பிர்தெளஸி.. மற்றும் பிரதம தளபதி உம்ராவ்கான், அமைச்சர் அயூப் ஆகியோர் வரிசையாக அணிவகுத்த மாதிரி வந்து இறங்கியதையும் அவர்களை அமீர் அரூன் அமர்க்களமாக வரவேற்பதையும் கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தான். அது நேரம் வரை அமீர் அரூன் போக்குப் புரியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்த கஜினிக்கு இவர்களைக் கண்டதும் புத்துயிர் வந்தது என்று கூடக் கூறலாம்.

     “தந்தையே நல் வணக்கம்!” என்று மகன் அடக்கமாகக் கூறியதும் அவனை அணைத்து வரவேற்ற சுல்தான். “எல்லோருக்கும் நல்வரவு... ஆமாம்! திடீரென்று நீங்கள் இங்கே வந்த காரணம்? எப்படி இங்கு வரவேண்டும் என்று தோன்றியது? இங்கு அப்படி என்ன பெரிய விசேஷம் நடக்கப் போகிறது?” என்று கேட்டதும் மசூத் திடுக்கிட்டுப் போய் அமீர் அரூனைப் பார்த்தான்.

     மற்றவர்களும் வியப்புடன் அவனைப் பார்த்துவிட்டு சுல்தானையும் நோக்கினர்.

     “என்ன இது? சுல்தான் எதற்காக வந்தோம் என்று எங்களைக் கேட்பதைப் பார்த்தால்...” என்று நிஜாமுதின் இழுத்ததும், “எனக்கே நிச்சயமில்லாதிருந்ததால் இதுவரை சுல்தான் சாஹேபிடம் தெரிவிக்கவில்லை. இப்போது நிச்சயமாகிவிட்டது” என்றான் அரூன்.

     “அப்படியானால் நேற்று எங்களிடம் இன்று காலையிலேயே இங்கு வந்துவிடும்படி எந்த உறுதிப்பாட்டில் அழைத்தீர்கள்?”

     “ஏதோ ஒரு நம்பிக்கையுடன், நம் சுல்தான் சாஹேப் ஒரு சாம்ராஜ்ய சக்கரவர்த்திகள் இல்லாவிட்டாலும் இந்நாட்டில் பலரை வென்றவர். சின்ன கஜினியை உலகறியச் செய்தவர் என்ற மதிப்பை பெற்றிருப்பதால் சக்கரவர்த்திகள் ஒரு சந்தர்ப்பம் அளிப்பார் என்று நம்பினேன். அது பொய்க்கவில்லை. இணங்கிவிட்டார், அவர். நம்ம சுல்தான் இவ்வகையிலும் பாக்கியசாலிதான்!” என்றான் சர்வசாதாரணமாக.

     கஜினி முகமதுக்கு இன்னமும் கூடப் புரியவில்லை.

     ‘என்ன இவன்... ஏதோ சக்கரவர்த்தி என்கிறான். இசைந்தது பாக்கியம் என்கிறான். இதெல்லாம் என்ன? ஏது என்று எதுவுமே புரியவில்லையே.’

     வியப்பு கலந்த கோபத்துடன் பார்த்தான் அவனை. சினம் கூடிற்றேயன்றி குறையவில்லை.

     “அமீர் அரூன், என்ன புதிர் போட்டுப் பேசுகிறாய் நீ...? எனக்குத் திடீர் பாக்கியம் என்கிறாய்; ஏதோ சக்கரவர்த்தி என்கிறாய். சந்திப்பு என்கிறாய்... என்ன இதெல்லாம்! யார் என்னைச் சந்திக்க வருகிறார்கள்? நீ எதற்கு இங்கு கொண்டு வந்தாய் என்னை? இவர்கள் எல்லோரும் எதற்கு இங்கு வந்து சேர்ந்தார்கள்? ஏன் இந்த மூடுமந்திரம் எல்லாம்?” என்று கேட்டபடி கோபத்துடன் அமீர் அரூனைப் பார்த்தார். அப்பொழுதும் அவன் பதற்றத்தால் மாறிவிடவில்லை.

     “சுல்தான் சாஹேப், சந்தர்ப்பம் வரட்டும் சொல்லலாம் என்று பொறுத்தேன். இப்பொழுது சந்தர்ப்பம் வந்துவிட்டது. சொல்கிறேன். ஆனால் உங்களை யார் சந்திக்க வருகிறார்கள் என்று கேட்டீர்களே.. அது அப்படியில்லை. நீங்கள்தான் இங்கிருந்து எங்களுடன் புறப்பட்டுப் போய் காஜுராஹோவில் அவரைச் சந்திக்கப் போகிறீர்கள்...”

     “நானா? யாரைச் சந்திக்கப் போகிறேன்? இந்த கஜினி போய் எவனோ ஒருவனைச் சந்திப்பதா?இங்குள்ள அத்தனை அரசர்களையும்...” என்று முடிப்பதற்குள் அமீர் அரூன், “கொஞ்சம் பொறுங்கள் சுல்தான்!” என்று எச்சரிப்பது போலக் கூறியதும் முகமது சட்டென நிறுத்தி அவனை வெறிக்கப் பார்த்தான்.

     “தந்தபுக்தி நாட்டின் ரணசூரரை நீங்கள் இன்னும் வெல்லவில்லை” என்று ஹரதத்தன் சொன்னதும் ஒரு எச்சரிக்கை மாதிரிதான்.

     “சந்தர்ப்பம் வரவில்லை...”

     “கோவிந்த சந்திரனை நீங்கள் இன்னும் வெல்லவில்லை.”

     “இதுவும் அப்படித்தான்.”

     “தர்மபாலனை நீங்கள் வெல்லவில்லை.”

     “இதுவும் ஏன் என்று உனக்குத் தெரியும்.”

     “தெரிந்தாலும் வெல்லவில்லை என்பது உண்மைதானே! இன்றும் காஜூராஹோவின் மன்னன் வித்யாதரனையும் நீங்கள் வெல்லவில்லை.”

     “ஏன் இப்பொழுதே வேண்டுமானாலும் புகுந்து துவம்சம் செய்துவிட்டால் போகிறது.. அவ்வளவுதானே? ஆனால் இங்கு நமக்குத் தேவையான பொருள்கள் இருக்குமா என்பதை முதலில் அறிந்தாக வேண்டும்” என்று ஆத்திரத்துடன் சொன்னதும் “அது சாத்தியமல்ல என்பது உங்களுக்கே தெரியும்!” என்று ஒரு குரல் வந்ததும் திரும்பிப் பார்த்தவன் தனக்கு வெகு அருகாமையில் புன்னகை முகத்துடன் மிகவும் கம்பீரமாக நிற்பவனை பார்த்ததும் “ஆ! நீயா சாந்த்ராய்...? நீ... இங்கே எப்படி வந்தாய்? அமீர்... பிடி இவனை... விடாதே... எத்தனைக் காலமாக நம்மை ஏமாற்றி வருகிறான் இவன்... ஆம்! அமீர்... நான் இன்று பாக்கியசாலிதான். நிச்சயம் பாக்கியசாலிதான். சைத்தான் தானாகவே என் கையில் வந்து சிக்கிக் கொண்டுவிட்டது.. ஆகாகா?” என்று பெரிதாகச் சிரித்தான்.

     சாந்த்ராய் கூடத்தான் சிரித்தான். ஆனால் அது அலட்சியச் சிரிப்பு.

     “சாந்த்ராய்... ஷார்வாவை விட்டு நீ ஓடிப் போனால் நான் விட்டுவிடுவேன் என்று நினைத்தாயா? என் அமீர் இருக்கிறான் உன்னைப் பிடிக்க. அவனுடைய பத்தாயிரம் வீரர்கள் இருக்கிறார்கள் உன்னைக் கைது செய்து புரட்டி எடுக்க.”

     “நீங்கள் பேராவின் சுகபாலனைச் செய்வது போல” என்று கூறிவிட்டு மீண்டும் ஏளனமாகச் சிரித்தான் சாந்த்ராய்.

     ஆத்திரத்தால் ஆடிப்போன சுல்தான் “அமீர், இவனுடைய திமிர்ச் சிரிப்பைப் பார்த்தாயா? அன்று போலத்தான் இன்றும் சிரிக்கிறான். ஆனால் அன்று போல என்னை ஏசிவிட்டு நீ இந்தத் தடவை தப்பிவிட முடியாது... புரிகிறதா?” என்று கத்தினான் கஜினி முகமது.

     “புரிய வேண்டிய தத்துவம் எதையும் உனக்குப் பேசத் தெரியாதே! மிலேச்சனான உனக்குச் சைத்தான் பற்றித்தான் தெரியுமேயன்றி சத்தியம் பற்றித் தெரியாதே” என்று கேலியாகக் கூறிவிட்டுச் சிரித்தான்.

     மசூத் சட்டெனத் தன் வாளை உருவினான்.

     “இது நடுநிலை நாடு! எனவே இங்கு ஆயுதம் ஏற்கும் உரிமை, அதைப் பயன்படுத்தும் உரிமை இரண்டும் எங்களுக்கே உரியது!” என்று ஒரு குரல் எச்சரிக்கையாக எழுந்ததும் “நீ யார் எனக்குக் கட்டளையிட?” என்று மீண்டும் இரைந்தபடி சுல்தான் முகமது தனது வாளை எடுக்க முயல... அது அங்கே இல்லை என்பதைக் கண்டு... “அமீர்! இதென்ன? என் இடை வாள் இல்லையே! யார் எடுத்தது? இவர்களிடையே நாம் சிறுமைப்படுவது எவ்வளவு கேவலம்? எடு உன் வாளை... இவர்களைத் தீர்த்துக் கட்டு!” என்றான் மூர்க்கமாக.

     ஆனால் இவ்வளவு நடந்தும் அமீர் அரூன் நகரக்கூட இல்லை! அவன் கையிலும்தான் ஆயுதம் இல்லை; மற்றவர்கள் நிலையோ பரிதாபமாக இருந்தது.

     “ஏ! கஜினிப் பூச்சாண்டியே! சும்மாயிரேன். ஏன் கண்டது கண்டபடி கத்திப் புலம்பித் தள்ளுகிறாய்? உன்னைத் தவிர உனக்கு இந்த உலகில் உள்ள அத்தனைப் பேரும் சைத்தான்கள். உன்னுடைய மதத்தைத் தவிர ஏனைய அத்தனை மதங்களும் போலி என்று இறுமாந்து கிடக்கும் உனக்கு நற்புத்தி வரும் நாள் இன்றுதான் என்று நினைக்கிறேன். ஆகவே பிலாக்கணம் பாடாமல் ஒழுங்காக இருந்து தொலை” என்று மிக ஏளனமாகப் பேசிய சாந்த்ராய்... காஜுராஹோ தளபதியிடம் “சகோதரரே! இந்தக் கஜினியார் மிகவும் பதட்டமாயிருக்கிறார்! சற்றே நிதானமடையட்டும். அதுவரை இதர நண்பர்களை உரிய மரியாதைகளுடன் கவனித்து அழைத்து வாருங்கள்” என்று கூறிவிட்டுப் புறப்படயத்தனித்தவன் சட்டென்று நின்று... “கஜினியின் இளம் சுல்தானே, நீ என் நண்பன். உன்னுடைய தந்தை தன்னுடைய பரந்த சேவைகளுக்கு கழிவிரக்கப்படும் நாள் அதிக தூரத்தில் இல்லை. ஆனால் உன் கரம் அல்லது மனம் அத்தகைய பாவக்கரை படிந்தவையில்லை. எனினும் ஹரதத்தர் கூறிய மாதிரி உன் தந்தை ஒரு வகையில் பாக்கியசாலிதான். இல்லாவிட்டால் இந்த நாட்டின் செல்வம் எல்லாம் கொள்ளை கொள்ளையாகக் கிடைத்திருக்குமா? அல்லது இவ்வளவு வெற்றிகள்தான் கிட்டியிருக்குமா? ஆனால் இதெல்லாவற்றிலும் பேரதிர்ஷ்டமாக இன்று கிடைத்துள்ள வாய்ப்பு அதாவது சந்திப்பு இருக்ககிறதே... அது உண்மையிலேயே உன் தந்தை கனவில் கூட காணக் கிடைக்காததோர் பாக்கியம்! ஆம்! ஒருவேளை மாமேதையான ஆல்பரூனி போன்றவர்களும் நீயும் ஹரதத்தனும் சுல்தானுக்கு வேண்டியவர்களாக இருப்பதனால் தானோ என்னவோ.. இத்தகைய அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது போலும்... உம்... எல்லாமே நாம் நினைக்கிறபடி மட்டும் நடந்துவிட்டால்...” இங்கு நிறுத்திவிட்டு ஒருமுறை எல்லோரையும் சுற்றி நோட்டம் விட்டுவிட்டு, “நல்லது நண்பர்களே! விடைபெறுகிறேன்.” சட்டெனப் புறப்பட்டுப் போய்விட்டான் சாந்த்ராய்.

     இதுகாறும் ஆத்திரமும் அருவருப்புமாய் செயலற்றுப் போன சிலை மாதிரி உருவாகி நின்ற சுல்தான் முகமது, “மசூத், நீ கூட அந்தக் காபீரை விட்டுவிட்டாய். நீ ஒரு முஸ்லீமாயிருந்தும்... என்னுடைய மகனாயிருந்தும்... இதை நான் மறக்கவேமாட்டேன்!” என்று கத்தினான்.

     “தந்தையே! சற்றே நிதானியும். நாம் இப்போது நடுநிலை நாட்டில் இருக்கிறோம். இங்கு நாம் நமது சொந்த விருப்பு வெறுப்புகளைக் கொண்டு செயல்படுவதற்கில்லை. இத்தருணம் நம் நினைவை தராசு போல வைத்திருக்க வேண்டியது அவசியம்” என்றான்.

     கோபத்தால் மனம் குமுறித் தன் வசமிழந்துவிட்ட சுல்தான் மசூத்கான் மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்து “நீ கூடவா எனக்கு நீதிபோதனை செய்யத் துணிந்தாய்?” என்று கூக்குரலிட்டான்.

     “சுல்தான் சாஹேப், ஏன் இந்தப் பதற்றம்? இந்த நேரமா நாம் தன்நிலை இழப்பது? நம் வாழ்க்கையில் கிடைத்தற்கரியதோர் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் போது அது பற்றிச் சிந்தித்துச் செயல்படத் தயாராகாமல்... வீணாக மனதை அலட்டி அவதியுறுவது அவசியம்தானா?” என்று இபுன் சூல் ஆஸர் இங்கிதமாக ஆனால் ஊசி குத்துவது போல வார்த்தைகளை உச்சரித்துக் கேட்டதும் சற்றே திகைத்த கஜினி அவரை வெறிக்கப் பார்த்தான். பிறகு பாரசீகக் கவியரசன் ஃபெரிஷ்டாவை நோக்கினான் வியப்புடன்.

     இதுவரை வாய் திறவாமல் இருந்த அந்த மாமேதையும் இப்போது வாய் திறந்து பேசினார்.

     “யாமிர் உத்தௌலாவாகவும் அமீர் உத்தௌலாவாகவும் விளங்கும் கஜினி சுல்தான் முகமது அவர்களே... ஆண்டவன் அருள் பரிபூரணமாகப் பெற்றவர் ஆவீராக” என்று தமது பேச்சைத் துவக்கினார் அவர்.

     சுல்தான் முகம் மாறிவிட்டது! மலர்ந்தது. தனிச் சோபையுண்டாயிற்று. கம்பீரத் தோற்றமும் உண்டாகிவிட்டது. பூரிப்புடன் பார்த்தான் கவிஞரை.

     “தங்கள் நல்வாக்கினைக் கேட்க ஆர்வமாயிருக்கிறேன். அகிலம் போற்றும் அரும்பெரும் கவிஞர் திலகமே! சொல்லுங்கள், கவனமாகக் கேட்கிறேன்.”

     “நல்லது! ‘அவன் எனக்கு இனிமையானவனே! அவனுக்கு என் ஆசியும் அருளும் எப்போதும் உண்டு. ஏனெனில் அவன் தனது நற்பணிகளால் எல்லோருக்கும், எக்காலத்தும் நல்லவனாகவும் இனியவனாகவும் இருக்க முயலுகிறான்!’ என்று அருளியிருக்கிறார் நம் நாயகம் அவர்கள். நீங்களும் அவ்வாறே இருப்பீராக... நாம் இன்று நம் வாழ்க்கையில் அரியதோர் வாய்ப்பினைப் பெற்றுள்ளோம். ஆண்டவர் அருளால் இன்று கிட்டியுள்ள இவ்வாய்ப்பினை நாம் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வோமாயின் நாம் நிம்மதியும் நிறை மகிழ்வும் காண முடியும். எனவே பரபரப்படையாது அனைத்துமே ‘அவர்’ அருளால் நடப்பனவாகும் என்ற நன்னம்பிக்கையுடன் தயாராகுங்கள். சுறுசுறுப்புடன் தயக்கம்விட்டு உடன் செயலில் இறங்குங்கள். இப்பொழுது கிடைத்துள்ள பெரும் வாய்ப்பு இனி கிடைப்பதன்று” என்றார் ஏதோ அருள் வாக்கினை உபதேசிப்பவர் மாதிரி.

     சுல்தானுக்கு இன்னும் கூட எதுவும் புரியவில்லை. என்றாலும் எல்லோருமே ஏதோ பெரும் பரவசமடைந்தே பேசுகிறார்கள். தங்களை மறந்த ஆனந்த நிலையில், அமைதிப் பொறுப்புடன், நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நம்மைச் சுற்றியிருப்பவர்கள் பெருங்கவி ஃபெரிஷ்டா உள்ளிட்ட அத்தனை பேருமே இப்படிப் பரவசப்பட்டு மகிழ்ச்சியுடனிருக்கும் போது நாம் மட்டும் பதட்டத்தால், கோபத்தால், ஆசாபங்கத்தால்... தன் நிலை இழந்த தனியாளாக மாறிவிடக் கூடாது என்று முடிவு செய்து கொண்டு “நல்லது நடக்கப் போகிறது என்றால் நமக்கு அதில் நிச்சயமாக ஈடுபாடுண்டு, நம்பிக்கையுண்டு. நம்மாலியன்றதை நாமும் செய்வோம்!” என்றான் நிதானமாக.

     அவ்வளவுதான்...

     அம்மாளிகை வாசலில் அதற்குள்ளே விரிந்து பரந்து கிடந்த பெரும் மைதானத்தில் மிக அழகாக அணிவகுத்து நின்ற பத்தாயிரம் பாரன் வீரர்கள் மும்முறை வெற்றி முழக்கம் செய்தனர்.

     மீண்டும் திடுக்கிட்டுப் போனான் கஜினி.

     ‘ஏன் இவ்வளவு உற்சாகம்? யாருக்கு என்ன கிடைத்துவிட்டது! ஒன்றுமேயில்லாத அல்லது என்னதான் நடக்கப் போகிறது? யாரை யார் சந்திக்கிறார்கள்... அவர்கள் என்ன பாக்தாதிலிருந்த கலீபாவா...? எனக்கு அவர் விருதுகள் வழங்கிய நாளன்று நடந்த விழாவில் கூட இந்த ஆர்ப்பரிப்பு இல்லையே! இப்போதென்ன வந்துவிட்டது இவர்களுக்கு...!’

     சுல்தான் திகைப்பும் குழப்பமும் நீடித்தாலும் இதர வேலைகள் அதாவது சுற்றுச் சூழ்நிலையில் ஏகப்பட்ட பரபரப்புடன் நடைபெற்றன. காஜுராஹோவின் ஆட்கள் வெள்ளை அணியும் சிவப்புக் கவசமும் அமைதி காப்போருக்கு உரிய தலையணியும் தரித்து அங்குமிங்கும் வேகமாக செயலாற்றினர்.

     ஒன்றன்பின் ஒன்றாக இருபத்தி நாலு யானைகள் அணியாக வீதிவலம் வர அவற்றின் மீதிருந்த அற்புதமான அம்பாரிகளைக் கண்டு கஜினி... ‘ஆகா! அத்தனையும் தங்க ரேக்காக ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்றனவே! ஒருவேளை அவை யாவுமே தங்கம் தானோ... உம்!’ எதையோ நினைத்து ஒரு பெருமூச்சுவிட்டபடி பார்த்தான் அவற்றை!

     இரு அணிகளிலுமிருந்த நாற்பத்தியெட்டு யானைகளும் மாளிகையின் எதிரே வந்ததும் எங்கிருந்தோ மூவாயிரம் குதிரை வீரர்கள் அதிவேகமாக வந்து சட்டுப்புட்டென்று அணிவகுத்து நின்றனர்.

     ‘தனக்கேன் திடீரென்று இவ்வளவு பெரும் மரியாதை!’ என்று மீண்டும் திகைத்தான் சுல்தான் கஜினி.

     ஆனால் மாளிகை வாயிலில் இன்னொருபுறம் நின்ற ஜெகதேவ வல்லபர் மட்டும் புன்னகைத்தபடி ஒருமுறை கஜினியைப் பார்த்துவிட்டுச் சட்டென முன்வாசல் படிகளின் விளிம்பில் சென்று நின்றார்.

     ஒருமுறை அத்தனை யானைகளும் ஒரே மாதிரி பிளிறின.

     சுல்தான் இந்தப் பயங்கர முழக்கம் கேட்டதும் வெகுவாக ஆடிப் போனான். ஆனால் ‘ஏன் இந்தத் தூதன் போய் நமக்கு முன்னே நம்மை மறைத்த மாதிரி மூன்றாள் மட்டத்துக்கு நிற்கிறான். சிறிதும் மரியாதை தெரியாமல்’ என்றும் நினைத்தான். எனினும் வாய் திறக்கவில்லை.

     வல்லபேந்திரன் “உம்...” என்று ஹூங்கார ஒலியெழுப்பித் தன் கதையைத் தூக்கி இடத்தோள் மீது வைக்க மீண்டும் ஒருமுறை யானைகள் வானமிடிப்பது போல் பிளிறின.

     சுல்தான் பாடு திண்டாட்டமாகி வெலவெலத்துப் போய்விட்டான்.

     சட்டென்று வாயில் முகப்பிலிருந்து வல்லபர் இறங்க...

     “வாழ்க வல்லபேந்திர தேவர்!” என்ற பேரொலி அரிமாப் படையினரிடமிருந்து எழுந்ததும் ‘ஓ! அப்படியானால் இந்த அணிவகுப்பு, மரியாதையெல்லாம் இந்த காபீர் தூதுவனுக்குத்தானா, நமக்கில்லையா? இதென்ன கொடுமை?’ என்று புழுங்கத் துவங்கினான் பாவம்!

     நல்ல உயரமும், பார்ப்பதற்கு வெகு கம்பீரமாகவும் மிடுக்கும் துடிப்புமாக இருந்த ஒரு பெரும் குதிரை முன்னே வந்து நிற்க, ஒரு சிங்கம் துள்ளுவது போலத் துள்ளி ஏறினார் வல்லபர் அதன் மீது.

     மீண்டும் யானைகள் பிளிறிவிட்டுத் திரும்பத் துவங்கின. அவை செல்லு மட்டும் மூவாயிரம் வீரர்களும் சற்று விலகி நிற்க, அவை சென்றதும் அவர்கள் முன்னே வந்து தங்கள் மஹாசேனாபதியை முறைப்படி வணங்கினர்.

     “நல்லது நீங்கள் உங்களில் ஒரு நூற்றுவர் இங்கே தங்கி காஜுராஹோவினருக்கு உதவட்டும். இங்குள்ள மதிப்புக்குரிய விருந்தினர்களை உரிய மரியாதையுடன் அழைத்து வாருங்கள். நான் மற்றவர்களுடன் முன்னே செல்லுகிறேன்” என்று அறிவித்துவிட்டுக் குதிரையை விரட்டினார். அது பறந்ததும் ஏனையோரும் தொடர்ந்தனர்; நூற்றுவரைத் தவிர.

     காஜுராஹோ* அந்தக் காலத்தில் மிக அற்புதமான ஒரு நகரம் வடநாட்டில். மாகிஷ்மதி. கன்னோசி, வாரணாசி, அவந்தி, புவனேஸ்வரம், மிதிலை, உஜ்ஜயினி ஆகிய மகோன்னதமான நகரங்களுக்கு ஈடானதுதான். சந்தேல அரசர்களின் கலையார்வத்துக்கு அன்றே ஒரு அற்புதச் சின்னமாக உருவாகியிருந்த காஜுராஹோவின் மன்னன் அசாதாரணமான ஒரு வீரன், அறிஞன். கலைஞன். வித்தியாதரதேவன் என்னும் அற்புதமான பெயர் கொண்ட அவன் சிறந்த அழகனும் கூட என்று முன்பே கூறியுள்ளேன்!

     *மத்தியப் பிரதேசத்திலுள்ள காஜுராஹோ இன்று ஒரு அரிய காட்சி தலமாக அதாவது மலைக்கோயில்கள் உள்ள உல்லாசப் பயணிகள் வரும் இடமாகச் சுருங்கிவிட்டிருக்கிறது.

     அன்று அவன் வாழ்நாளில் மிக்க விசேஷமான ஒரு நாள். உலக சாம்ராஜ்யங்களில் எல்லாம் உன்னதமான பொற்காலங் கண்ட சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தியான இராஜேந்திர சோழ தேவர் காஜூராஹோவுக்கு வருகை புரிந்திருக்கிறார் என்றால் அது அவன் வாழ்க்கையில் மகத்தானதோர் நிகழ்ச்சிதானே! எந்த வடநாட்டு அரசனுக்கும் கிடைக்காத பேறு இது! அதுமட்டுமல்ல, அந்த நகரத்தில் அதே சோழர் வடநாட்டின் அதாவது அங்கத்திய அரசர்கள் அத்தனை பேரையும் படாதபாடு படுத்தி வரும் கஜினி முகமதை சந்திக்கப் போகிறார்! ஆம்! பாரத நாட்டுக் ‘காபீர்களின்’ பரமவைரி என்று தன்னைக் கூறிக் கொண்டு பாரத நாட்டின் புனிதத் தலங்களை அழித்தும் கோயில்களை இடித்தும், விக்கிரஹங்களை உடைத்தும் அட்டகாசம் செய்து வரும் இந்தக் கஜினி முகமதை நலம் விசாரித்து நல்லவனாக்கப் பார்க்கிறார் போலும்!

     இப்படித்தான் நினைத்தனர் வடநாட்டு அரசர்கள். வங்கத்தின் மகிபாலன், கோவிந்த சந்திரன், தர்மபாலன், கலிங்கத்தின் வஜ்ரஹஸ்தன், சாளுக்கிய ஜெயசிம்மன், மாளவத்தின் முஞ்சன், ராஷ்டிரகூட கிருஷ்ணன், ஒட்ட நாட்டு இந்திரரதன், கொல்லிப் பாகைக் கோபாலர், தந்தபுக்தி வக்ரதத்தன் ஆகிய பலரும் சோழர் தம் சக்தியை உணர்ந்திருந்த பேராவலால் தூண்டப்பட்டும், நேரிலேயே சோழச் சக்கரவர்த்திகளைக் காண வேண்டும், கண்டு மரியாதை செய்ய வேண்டும் என்பதை மட்டுமின்றி சுல்தான் முகமதுவும் சோழன் இராஜேந்திரனும் சந்திக்கும் அரியதோர் காட்சி எத்தகையதாயிருக்கும்? யாருக்கு இதனால் பெருமை? எவருக்கு இதனால் வெற்றி? என்பதை நேரிலேயே கண்டு அறிந்து கொண்டும் உற்சாகத்துடனும் காஜுராஹோ வந்து சேர்ந்தனர்.

     அவர்களில் பலர் கஜினி சுல்தானிடம் தோற்றவர்கள். சிலர் பல முறை அவனிடம் பேரவதிப்பட்டவர்கள். ஒரு சிலர் சண்டையிடாமலேயே ஒதுங்கி நின்றவர்கள். ஏதோ இரண்டொருவர்தான் அது வரை கஜினியால் தாக்கப்பட முடியாத சூழ்நிலை கொண்ட சமஸ்தானாதிபதிகள்.

     ஆயினும் இவர்களில் பலர் நாளிதுவரை சோழ சக்கரவர்த்திகளை நேரில் கண்டவர்களில்லை. அருவா நாட்டரசன் ஒருவன் எப்படி அகிலம் புகழும் அரசர்க்கரசனாக வளர்ந்துள்ளான் என்று அறியும் ஆவல் அவர்கள் எல்லோரிடமும் ஒரே மாதிரி இருந்தது.

     சந்தேல வித்தியாதரனும் தன் நாட்டுக்குச் சோழ சக்கரவர்த்தி வருகை புரிகிறார் என்று அறிந்ததுமே நேராக வங்கத்துக்கே சென்றான் அவரைக் காண. தாம் வருவது உண்மைதான் என்றும் காஜூராஹோவையும் அதனுடைய சூழ்நிலையையும் பார்ப்பதுடன் அங்கு சுல்தான் முகமதை வரச்செய்து அளவளாவதற்கு ஏற்பாடு ஆகியிருப்பதாகவும் அறிவித்தான். தான் இதனால் அடைதற்கரிய பெருமையை அடைந்ததாக அறிவித்து நன்றியறிதலைக் கூறிய வித்யாதரன் தன்னுடைய நண்பர்களான ஏனைய பல இந்து அரசர்களும் அந்த மகத்தான சந்திப்பு நிகழ்ச்சியின் போது அழைக்கலாமா என்று கேட்டதும், தாராளமாக வரட்டும் என்று மனமுவந்து அனுமதி தந்தார்.

     இதன் காரணமாக மிக்க உற்சாகமடைந்த வித்யாதரன் காஜுராஹோவை அன்று முதல் அமோகமாக அலங்கரிக்கலானான். முக்கியமான அரசர்களுக்கு அவனே அழைப்புகள் அனுப்பினான். சாந்த்ராய் யோசனையின் பேரில் ஹரதத்தன் அதாவது அமீர் அரூனையே கஜினி முகமதுவிடம் அனுப்பி அவனைக் கொணரச் செய்வதென்று முடிவு செய்தான். அவ்வாறே நடந்திருப்பதை நாம் இப்போது படித்தோம். சோழ மாமன்னன் காஜுராஹோ வந்த மூன்றாம் நாள் கஜினி அங்கு வந்து சேர்ந்தான்.

*****

     உலக நாடுகளின் வரலாற்று நிகழ்ச்சிகளை ஆராய்ந்தவர்கள் பலர் சில சிறிய சம்பவங்களை பெரிதாகவும் சில பெரிய சம்பவங்களை சிறிதாகவும் தமது ஆராய்ச்சிக் குறிப்புக்களை எழுதியுள்ளதாகக் குறைபடுவார் உண்டு. இந்தக் குறைபாடு உலகத்தின் வரலாற்று நிபுணர்களிடையே மட்டும்தான். பாரத நாட்டு வரலாற்றினை எழுதியவர்களிடமில்லை என்றும் கூறுவதற்கில்லை. ஏனெனில் பெரும்பாலும் மேலைய நாட்டு நிபுணர்கள் அல்லது ஆப்கன், பாரசீக நிபுணர்கள் ஆகியோர் வரைந்த குறிப்புக்களையே நம்மவர் தொகுத்துப் படித்தனர். அந்த அறிஞர்கள் எழுதியதெல்லாம் நூற்றுக்கு நூறு சரியானது என்று கூறுவதற்கில்லை. அப்படியே எழுதியிருந்தாலும் பிற்காலத்தில் சில சுயநலமிகள் அவற்றுள் புகுந்து உண்மையை திரித்தும் எழுதியுள்ளனர்.

     கஜினி முகமது கி.பி. 998 முதல் 1030 வரை நாடாண்ட மன்னன் என்று வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளது உண்மை. அதே போல சோழ இராஜேந்திரன் 1012 முதல் 1044 வரை நாடாண்டவன் என்று கூறியிருப்பதும் உண்மை. இந்த அடிப்படை உண்மைகள் சரியானது என்பதைத் தவிர வேறு பல விவரங்கள் தவறாகவே தரப்பட்டுள்ளன. இந்தியா மீது பதினேழு முறை படையெடுத்து வடபாரதத்தைச் சின்னா பின்னமாக்கினான் கஜினி என்று கூறுபவர்கள் அதே காலத்தில் வடநாட்டில் கலிங்கம், வங்கம், மகதம், மிதிலை, மாளவம், கோசலம் ஆகிய நாடுகளை வென்று அவர்களிடமே பெரும் தன்மையுடன் அவரவர்களது நாடுகளை ஒப்படைத்த சோழன் அப்பகுதிகளின் எல்லையில் நாசம் விளைவித்து நடப்பதெல்லாம் நடக்கட்டும் என்று சும்மா விட்டுவிட்டு எட்டியிருந்து எதுவும் அறியாதவன் போல் இருந்தான் என்று கூறினால் அதை நாம் எப்படி உண்மையான தகவல் என்று ஒப்புக்கொள்ள முடியும்? சோழனுக்கும் அந்தப் பகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவன் விந்தியத்துக்கு அப்பால் செல்லவேயில்லை என்றால் கவலையில்லை. அவன் இமயம் வரை சென்று வடகிழக்குப் பாரதத்தில் உள்ள பல நாடுகளை வென்றிருக்கும் போது இது பற்றி அலட்சியமாயிருந்திருப்பான் என்பதை நம்ப முடியுமா?

     சோழ இராஜேந்திரன் 1023-ல் வங்கத்தில் படையெடுத்துச் சென்றான் என்று கூறப்படுகிறது. 1027-ல் தான் இந்நாட்டில் பதினேழாவது முறையாக அதாவது கடைசி முறையாகக் கஜினி படையெடுத்து வந்தான் என்று ஃபெரிஷ்டா கூறியுள்ளார். எனவே மேற்கூறிய கணக்கில் ஐந்து ஆண்டுகள் வித்தியாசம் உண்டாகிறது. இது சரியா என்று சற்றே ஆராய்ந்து பார்ப்போம்.

     சுல்தான் கஜினி முகமது தனது நாட்டைவிட்டுப் பாரதத்தின் மீது அதாவது சோமநாத்துக்கு 1024 செப்டம்பர் புறப்பட்டான் என்று இன்னொரு ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். முதலில் அவன் தனது பெரும் படைகளுடன் மூல்தான் வந்து சேரவே சில மாதங்கள் ஆனதாக அறியப்படுகிறது. பிறகு ஆஜ்மீருடன் போர் நடந்து பல முறை வெற்றி தோல்விகள் மாறி மாறி இரு சார்பிலும் பெரும் நஷ்டம் ஏற்பட்ட பிறகு போரில் முகமது வெற்றி பெற்றதாக அறியப்படுகிறது. நிஜாமுதீன் குறிப்பிட்டுள்ள ஆண்டோ 1026 தவிர தனது பதினாறாவது படையெடுப்பின் போதுதான் சோமநாதபுரத்தை அழித்தான் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கிபுனி ஆசர் வேறு ஒரு ஆண்டை அதாவது 1025ஐக் குறிப்பிட்டுள்ளார். ஆக சுல்தான் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்த வரலாற்றாசிரியர்களின் குறிப்புக்களே இவ்வாறு சில பல ஆண்டுகள் மாறுபட்டால் நாம் ஏன் வேறு ஒரு ஆண்டில் நடந்திருக்கக் கூடாது என்று கேட்கும் நிலை எழுவது இயற்கையே. தவிர இந்நாட்டில் சுல்தான் கஜினியின் கடைசி படையெடுப்பு 1026 பிப்ரவரி 17ந் தேதி என்று வெகு தெளிவாக மிர்கோண்ட் கூறியிருப்பதைப் பார்த்தால் அவன் தனது 16வது படையெடுப்பில்தான் சோமநாதபுரத்தை அழித்தான் என்று உறுதியாகக் கூறும் கணக்கைப் பார்த்தாலும் 1023-1024-ல் தான் அப்படையெடுப்பு நடந்திருக்க முடியும்.* ஏனெனில் மீண்டும் அதாவது பதினேழாவது முறை அவன் மதுராவையே கொள்ளையிட்டு அழித்தான் என்று கூறப்படுவதால் இடைக்காலத்தில் கஜினியிலும் அதன் சுற்றுப்புறத்திலும் ஏற்பட்ட கலகங்கள் காரணமாக அவன் பல மாதங்கள் கஜினியிலேயே இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றும் இன்னொரு அறிஞரான உட்பியும் குறிப்பிடுவதால் இந்த ஊகம் ஏன் சரியாயிருக்கக் கூடாது? இது தவிர, 1019-ல் கஜினி முகமது இந்நாட்டில் படையெடுத்தான். பிறகு 1021-ல் படையெடுத்தான். அதற்கப்புறம் 1023-ல் படையெடுத்தான் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

     *ஹிண்டு அன்னால்ஸ் ஆஃப் வெஸ்டர்ன் இண்டியா என்ற வரலாற்று நூலில் இவ்வாண்டையே குறித்துள்ளார் அலெக்சாண்டர் கில்லாக் ஃபோர்ப்ஸ் என்னும் பேராசிரியர்.

     இதெல்லாம் நம் ஊகத்தை உறுதிப்படுத்தும் அதே சமயத்தில் இந்தியாவின் மீது கஜினி பன்னிரண்டு அல்லது பதின்மூன்று முறைதான் படையெடுத்திருக்க முடியும் என்பதாக முஸ்லீம் அறிஞர்கள் எழுதியுள்ள அக்காலக் குறிப்புக்கள் சரியல்ல என்றும் வரலாற்று அறிஞர் அபீப் என்பவர் குறிப்பிட்டு ஏற்கனவேயுள்ள குழப்பத்தை இன்னும் பெரிதாக்குகிறார்.

     மேற்கூறியவை எதுவும் சரியல்ல. இந்தக் கூற்றுத்தான் சரியானது என்று ஏதோ ஒன்றை நாம் கொண்டோமானால் பிரச்னையேயில்லை. அவன் தனது கடைசி படையெடுப்புக்கு முன் படையெடுப்பில்தான் சோமநாதபுரத்தைத் தாக்கியிருப்பான் என்று உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். கஜினி முஸ்லீம் மதவிரோதிகளை அழிப்பதும் அவர்களுடைய கோயில்களை அழிப்பதும் இஸ்லாமியனான தனது கடமை என்று கொக்கரித்ததையும் அறிஞர் அபீப் ஏற்கவில்லை. இஸ்லாமியக் கொள்கை அவ்வாறு அழிக்கும்படி கூறவில்லை என்று கூறுகிறார். அதுமட்டுமில்லை, இடித்து நொறுக்கிய பிறகு அந்த இடிபாடுகளிலிருந்து சில சிற்பங்கள் தூண்கள் பலவற்றை ஜாக்கிரதையாகத் தன் நாட்டுக்குக் கொண்டு சென்று அங்கு அவற்றைக் கொண்டு சில கட்டிடங்களை மட்டுமின்றி தன் சமாதியைக் கட்டினான் என்றும் கூறப்பட்டது. இது மட்டும் எப்படி நியாயமாகிவிடும்? காபீர்களின் கோயில்கள் கூடாது! ஆனால் அவர்களுடைய பொருள்கள் மட்டும் வேண்டும் என்பது பொருத்தமான கொள்கையா? எனவே கஜினி முகமது நடத்திய நாசவேலைகள் ஒரு தனி மனிதனின் வெறிபிடித்த செயல்கள் என்று வெறுத்து விலக்கப்பட வேண்டுமேயன்றி அதற்கு மத மேற்பூச்சு வேலைகள் செய்து நியாயம் கற்பிக்க முயல்வது முறையற்றதாகும் என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

     நாம் இதையெல்லாம் ஏன் இங்கு கூறப் புகுந்தோம் என்றால் கஜினி முகமதின் படையெடுப்புக்கள்* பற்றிய கணக்குகள் உறுதிப்பாடாக எத்தனையென்றோ, எப்பவெல்லாம் நிகழ்ந்ததென்றோ கூறுவது சரியில்லை என்பதற்காகத்தான்.

     *புளோரா அன்னிஸ்பீல் என்னும் வரலாற்று ஆசிரியை தமது ‘இந்தியா துருத ஏஜஸ்’ என்னும் நூலில் இதை அதாவது 12 தடவை படையெடுப்பே சரி என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

     சோழ இராஜேந்திரன் வடநாட்டுப் படையெடுப்புக் கணக்கு ஆதாரபூர்வமாகச் சரியாயிருப்பதால் சிக்கலில்லை. எனவேதான் சந்தேகத்தின் பலனை சந்தர்ப்பத்துக்குப் பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தில் இராஜேந்திரன் வடநாட்டு திக்விஜய காலத்தில் கஜினி முகமமதின் கடைசிப்படையெடுப்பு நடந்ததாக நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.