![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
ராஜ மோகினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 11 ஆல்பரூனி மட்டும் இல்லை. சுல்தான் கஜினி முகமதே கூட வியப்புடன் பார்த்து விழித்தான். ஆயினும் இனியும் தாமதிப்பது தவறு என்று கருதிய பரூனி “ஆப்கானிஸ்தானத்தில் ‘கஜினி’ என்பது அளவில் சிறிய ராஜ்யமானாலும் இன்று பெற்றுள்ள பெரும் புகழால் உலகம் மதிக்க வேண்டிய பகுதியாக மாறிவிட்டது. எங்கள் அமீரான சுல்தான் மன்னர் முகமது அவர்களின் மதிப்புக்குரிய தந்தையார் சபக்தஜின் அடிச்சுவட்டில் வீரப்போர் நடத்த இந்தியா மீது தமது பார்வையைச் செலுத்தினார். அதனால் மதிப்புற்குரிய அவர் இங்கு கண்டதெல்லாம் வெற்றிதான்! இதுவரை யாரும் அவரை வென்றதில்லை. இனியும் வெல்லப் போவதில்லை!” என்றார் கம்பீரக் குரலில். “பஹுத் அச்சா” என்று மிக்க மகிழ்வுடன் தலையசைத்து பாராட்டினான் சுல்தான் கஜினி! வல்லபேந்திரனும் தலையசைத்தான் தான் அதை மறுக்கவில்லை என்பது போல. தனக்கேற்பட்ட மகிழ்ச்சித் திளைப்பில் “ஐயா வல்லபரே! நாம் உமது அந்த... பேர் சொல்ல வரவில்லை. அவரைப் பற்றியும் அறிய விரும்புகிறோம்!” என்றான் உண்மையாகவே. பிரமாதமாகக் கூறுவதற்கு எதுவும் இருக்காதென்ற எண்ணத்தில்! வல்லபர் சற்றே துணுக்குற்றார். ஏற்கனவேதான் கூறிவிட்டோமே சோழ மன்னரைப் பற்றி.. மீண்டும் ஏன் கேட்கிறான் என்று வியந்தார். என்றாலும் தெரிந்ததைக் கூறித்தானே ஆக வேண்டும்! “ஐயா கஜினி சுல்தான் முகமது அவர்களே! ஏற்கனவே சுருக்கமாகச் சொன்னேன். சிலர் இருப்பதையெல்லாம் அழித்துப் புகழ் பெறுகிறார்கள்...” என்று முன்னுரை போல ஒரு வார்த்தைக் கூற அவன் முகம் சிறுத்துக் கருத்துக் களை இழந்துவிட்டது! ஆனால் வல்லபேந்திரர் இது பற்றி லட்சியம் செய்யாதவர் போல “சுல்தான், சிலர் புதிதாக ஏதாவது செய்து நல்லமுறையிலோ அல்லது மாறாகவே பெருமை படைக்கிறார்கள். அவர்களில் இவர் அதாவது இராஜேந்திர சோழச் சக்ரவர்த்திகள் ஒருவர். இவர் தந்தை இராஜராஜன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை உருவாக்கிய உத்தம வீரர். இறைவன் படைப்பில் இதயம்தான் மனிதனுக்கு தலைமை என்றால் மானம் அவனுடைய மனித தன்மைக்கு முக்கியமாகிறது. இந்த இதயம் மானுட உடலில் எவ்வளவோ பாதுகாப்பான முறையில் அமைவுற்ற மனிதனை இயக்குகிறது. அது போல மனிதன் தன்னைப் படைத்து இறைவனுக்கு இதயம் போன்ற ஆலயம் அமைத்து அங்கே இறைவனைப் பிரதிஷ்டை செய்து துதிக்கிறான். இது ஆண்டவனுக்கு உருவில்லை என்று கூறும் உங்களுக்குப் பிடிக்காது. அதற்காக ஒதுங்கி நிற்பதே உத்தமம். ஒழுக்கசீலரான நபிநாயகம் அவர்கள் உங்களுக்கு மிக்க சிறப்பான வாழ்க்கை விதிமுறையின் சீலமான நீதி நெறிகளைப் போதித்துள்ளார். ஆனால் நீங்கள் இந்நாட்டில் வந்த பிறகு உலகப் புகழ் பெற என்ன செய்ய வேண்டியிருந்தது! அதை இஸ்லாமியரது என்று சிந்தித்துக் கூடப் பார்க்காமல் நீங்கள் செய்தீர்களோ, இன்னல்களை அதை இதோ உங்கள் பக்கத்திலுள்ள அறிஞர்கள் ஏற்பார்களா? புகழ் பெறுவதற்காக நீங்கள் தோற்றோடியவர்களை விரட்டிக் கொன்றால் கூடத் தவறில்லை. பாதுகாப்பற்ற ஆலயங்களை ஆண்டவன் திருவுருவங்களை அழிக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது என்பதை அறிய எங்கள் மன்னர் விரும்புகிறார். இஸ்லாம் உன்னதமான ஒழுக்கத்தைப் போதிக்கிறதே தவிர, நேர்மையாக வாழ ஆள வழிமுறை அளித்துள்ளதே தவிர, இத்தகைய விபரீதங்களைச் செய்யும்படி சிறிதும் கூறவில்லையே! உண்மை இதுவாயிருக்க நீங்கள் ‘விக்கிரஹ நிக்கிரஹன்’ என்று தன்னை நினைத்துத் தற்பெருமை கொள்ளும்படியான நிலை எப்படி ஏற்பட்டது? என்று எங்கள் மாமன்னர் அறிய விரும்புகிறார். ஒரு அரசர் என்றால் அவர் நியாயமான ஆட்சி புரிய வேண்டும். யுத்தம் என்றால் வெற்றி பெற வேண்டும். தோல்வி கண்டவர்களைக் கருணையுடன் பராமரிக்க வேண்டும். ஆனால் ஆல்பரூனி நீங்கள் பெற்ற புகழ்மாலையைக் கூறும் போது எதிரிகளிடம் கருணை காட்டியதாகக் கூறவில்லை. ஒருவேளை மறந்துவிட்டாரோ என்னவோ...” என்று கூறிச் சற்றே நிறுத்தினார். சினத்தால் தன் நிலை இழந்துவிட்டவனாய் சுல்தான் கஜினி, “நாம் யுத்தம் செய்வது விளையாடுவதற்கல்ல. நமது வலுவை, திறமையை, வெற்றிப் பெருமையைக் காட்டவே! தோற்றவனிடம் கருணை காட்டுவது அவசியம் இல்லை. ஏன் யுத்தம் செய்ய வந்தான்? பயந்து பணிந்து விட்டால் ஓடித்தொலை என்று உயிர்ப்பிச்சை அளித்துவிட்டிருப்போமல்லவா?” என்று கர்ஜித்தான். வல்லபன் இதனாலும் கலங்கிடவில்லை. “சரணடைந்தவனையும் நீங்கள் விடவில்லை. உங்கள் மதத்துக்கு மாறும்படி நிர்ப்பந்தித்திருக்கிறீர்கள். இதை எதிர்த்தவர்களைக் கொன்றிருக்கிறீர்கள்; அல்லது தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்! உண்மையாகத்தானே?” “ஆம்! காபீர்களை சக்தி மார்க்கமான இஸ்லாமியத்தில் மாற்றியது அவர்களுக்குக் கிடைத்த நல்லதிஷ்டமேயாகும். இப்பொழுது கூட நான் ஏன் உங்களிடம் பேசுகிறேன்? நீங்கள் ஒரு தூதுவன் என்ற காரணத்தால்தான். இல்லாவிட்டால் ஒரு ‘கபீரை’ என் எதிரில் உட்கார்ந்திருக்கவும் அனுமதிக்க முடியுமா?” என்று ஆத்திரத்துடன் கேட்டதும் வல்லபேந்திரன் ‘சரி, மூர்க்கனும் முதலையும் கொண்டது விடார் என்பது போல இவன் தன் நிலையை மாற்றிக் கொள்ளமாட்டான். எனவே வேறு வகையில் நமது அணுகுமுறையைக் கையாண்டு பார்க்கலாம்’ என்று துணிந்து சில நொடிகளுக்குப் பிறகு, “சுல்தான் சாஹேப், நீங்கள் நினைப்பதுதான் சரி; செய்வதுதான் சரி என்று தீர்மானிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் மற்றவர்களுக்கும் இம்மாதிரி உரிமை உண்டு என்று நீங்கள் கருதினால்தான் அது நியாயமாகும். நீங்கள் ஆப்கானிய நாட்டிலிருந்து இங்கு வந்து எத்தனையோ முறை யுத்தம் என்றும், கொள்ளையென்றும் நாச வேலை என்றும் நடத்திச் செல்வது உங்கள் மனநிலைக்கு ஏற்றதாயிருக்கலாம். ஆனால் அதைப் பிறரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது நிச்சயமாகச் சரியில்லை. எனவே ஏற்காதவர்களைப் பழி வாங்க நினைப்பதுவும் சரியில்லை என்பது என் சக்கரவர்த்திகளின் கருத்து.” இப்படிச் சொல்லிவிட்டு அவர் சில நொடிகள் சிந்திக்கட்டும் என்பதற்காகவோ என்னவோ சுல்தானைப் பார்க்காமல் சுற்றுமுற்றும் பார்த்தார். அறிஞர்கள் மூவரும் ஆழ்ந்த சிந்தனையுடன் சுல்தானை நோக்க அவனோ நொடிக்கு நொடி அதிகரிக்கும் சினத்தை அடக்கப் படாத பாடுபட்டுக் கொண்டிருந்தான்! மசூத்கான் தனது தந்தையின் மனோநிலையை ஊகித்துக் கொண்டான். இதுவரை அவர் பொறுமை காட்டியது தனக்காகவும் மற்றவர்களுக்காகவும்தான். எனவே வந்துள்ள தூதுவர் தாம் எதற்காக அனுப்பபட்டுள்ளோம் என்ற அடிப்படைக் காரணத்தை விவரிக்காமல் மேலும் தாமதித்தால் நிலைமை மாறிவிடும் என்பதையும் அறிந்து கொண்டான். எனவே வாய் திறந்தான். “ஐயா! சோழ சக்கரவர்த்திகளின் தூதுவனே.. நாம் பொதுப்படையாகப் பேசுவது எதுவும் எந்த ஒரு முடிவுக்கும் நம்மை வரச் செய்யாது. ஏனெனில் எதற்கும் இருபுறம் உண்டு. இரு கட்சி உண்டு. இரு நிலை உண்டு. அதைப் போல இவற்றுக்கும் ஆதாரங்கள் காட்டலாம். ஆயினும் நீங்கள் வெகுதொலைவிலிருந்து வெகுசிரமப்பட்டு இந்நாட்டின் மாபெரும் மன்னரின் தூதுவராக வந்திருக்கிறீர்கள். எனவே நீங்கள் வந்துள்ள பிடிப்பத்தையே நாம் பிரதானமாகக் கொள்வது நல்லது என்று கருதுகிறேன்!” என்று வார்த்தைகளை அளந்து நிதானமாகச் சொன்னதும் கூடியிருந்தவர்கள் முகம் சற்றே தெளிவுற்றதைப் போல சுல்தானின் முகம் ‘பரவாயில்லை, சமயத்துக்குத் தக்கபடி பேசக் கற்றிருக்கிறான் மகன்’ என்று உள்ளூரப் பெருமையும் கொண்டான். ஆனால் வாய் திறவாது வல்லபரை நோக்கினான். வல்லபேந்திரன், மசூதைச் சில நொடிகள் உற்றுப் பார்த்துவிட்டு “நல்லது இளைய சுல்தானே! நீ இரக்கமாகப் பேசும் இங்கிதமுள்ளவன்தான். சரி, நாம் அனுப்பப்பட்ட காரணத்தைத் தெரிவிக்கிறோம்!” என்று கூறிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்ததும் கஜினி நிமிர்ந்து உட்கார்ந்தான் சட்டென்று. “இந்தப் பூமண்டலத்தின் வாழ்வுக்கு இன்றியமையாதவரான சூரிய தேவனின் குலத்துதித்து இமயத்தில் கொடி நாட்டிய மாவீரப் பரம்பரையினரான பரகேசரி இராஜேந்திர சோழ தேவர் என்றும் திருநாமம் படைத்த திருபுவனச் சக்கரவர்த்திகளின் தூதுவனாக வந்துள்ள நான், அவர் அறிவித்த செய்தியை அப்படியே சொல்லுகிறேன்! “இந்துஸ்தானம் என்னும் இந்தப் புனித பூமி, உலகம் உண்டான காலம் முதல் இருக்கும் மகோன்னதமான புண்ய கண்டமாகும். பலிதவர்ஷமென்றும், பாரத கண்டமென்றும், ஜம்புத்விடம் என்றும் புராதன காலத்திலிருந்து தர்மம், நியாயம், நேர்மை, நாணயம் பெற்றிருப்பதுடன் பெறாதசீலர்களைத் தன்னகத்தே கொண்டு வாழ்ந்து வருவதாகும். இத்தகைய நாட்டின் தருமநெறிகளும், தெய்வீக நெறிகளும் உங்களவரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவை. நீங்கள் வாழும் நாட்டில் உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வல்ல இறைவன் அளித்திருக்கிறான். ஆனால் உங்களுடைய புதிய பழக்க வழக்கங்கள் காரணமாக தேவைகள் அதிகமாகிவிட உள்ளது போதாமல் பிற நாடுகளிலிருந்து அடைய விரும்பி இந்நாட்டிற்குள் நுழைந்தார்கள். உங்கள் தந்தையார் இவ்வாறு நுழைந்த போதுதான் மன்னர் ஜெயபால் எதிர்த்து வென்றார். தங்கள் தந்தை தோற்றுத் திரும்பியதற்காகப் பழிவாங்க துடித்தவரை நீங்கள் வென்றது உண்மை. ஆனால் இந்த நாட்டின் வளமும் அழகும் சக்தியும் புத்தியும் பொருளும் போகமும் உங்களை வசீகரித்தன. இவற்றை அடைய நீர் கையாண்ட முறை எங்கள் நெறிமுறைக்கும் புறம்பானது. போர்களை நடத்தி ஆட்களைக் கொண்டு, ஆலயங்களை அழித்துப் பொருள்களைக் கொள்ளையடித்துக் கொண்டு உங்கள் ஊர் திரும்பினீர்கள். இப்படி பலமுறை செய்திருக்கிறீர்கள் இதுவரை. உங்கள் வரலாற்று துறையினரே பல ஆயிரம் பேரைக் கொன்றதாக பல லட்சம் பேரைக் கைது செய்ததாகக் கூறுகின்றனர். இப்போது நாம் கேள்விப்பட்டோம். நீங்கள் சிற்பிகள் பலரைக் கட்டிடங்களை அமைக்கப் பயன்படுத்துகிறீர்கள் என்று... இது உண்மையாயிருக்குமானால் ஒரு போர் இல்லாமல் உயிர் நஷ்டம் இல்லாமல் கொள்ளைகள் இல்லாமல் நீங்கள் எங்களவரிடம் பொருள் வேண்டும் என்று வாய்விட்டுக் கை நீட்டி கேட்டிருந்தால் தாமாகவே எம்மவர் கொடுத்திருப்பார்! நிதியானாலும், நகைகளானாலும் சரி, பொருள்களானாலும் சரி, நவதானியங்களானாலும் சரி எங்கள் நாடு வாழ இவை தேவை என்று கேட்டிருந்தீர்களானால் தானாகவே கொடுத்திருப்பர், தயக்கமின்றி. போர் நிச்சயம் தேவையில்லை. நாசம் தேவையில்லை, உயிர் நஷ்டம் தேவையில்லை. அல்லது உங்களால் இன்று கொடுமைக்குள்ளானவர் கொடுக்காவிட்டாலும் நாம் கொடுத்திருப்போம் ஒரு சாதாரண தூதனை அனுப்பிக் கேட்டிருந்தால் கூட! “அதைவிட்டுக் கொடுமையான போர்கள், அளவில்லா திரும்பவும் உண்டாக்க முடியாத அழிவுச் செயல்கள் எதற்கு? நீங்கள் விக்ரஹ நிக்ரஹனாகப் பேர் எடுப்பதற்குப் பதிலாக நல்லவர், நேர்மை தவறாதவர், மாற்றாரைத் தம்மவராகக் கருதுபவர், தன் சமய ஒழுக்கம் பிசகாது செயல்படும் தங்கமான மன்னர் என்ற பெயர் எடுப்பது எவ்வளவு பெருமைக்குரியதாயிருக்கும். “எதிரியை வென்றதும் அவரை அழைத்து இன்னின்ன நிபந்தனைகள் என்று கண்ணியமாக விதிமுறைகள் செய்து தேவையானதைப் பெறுவது கூட ஒரு சிறந்த முறைதான். நான் கூடத்தான் பல நாடுகளை வென்று வருகிறேன். பிறகு அவர்களிடமே அந்நாட்டை ஒப்புவித்துவிட்டு ‘நீர் நம்முடைய சிறப்புக்குத் தகுந்தபடி ஒத்துழைப்பு அளித்தால் போதும்’ என்று ஒதுங்கி விடுகிறேன். நாம் ஒரு குடைக் கீழ் நாடுகளை ஒன்றிணைத்து ஆள வேண்டிய முறையே கொடுங்கோல் முறையாகும். வன்முறை வீணர் முறை. விரோதத்தையே வளர்க்கும். பசியைத் தூண்டும். வன்மத்தை வளர்த்து மேலும் போர்களையுண்டாக்கும். “எனவே நான் இந்தப் பகுதியின் பரந்தோர் சாம்ஜ்ஜியபதி என்ற முறையில் உங்களுக்குக் கூறிக்கொள்வதாவது, நீங்கள் உடனடியாக இந்தியாவைவிட்டு உங்கள் நாடு திரும்பிடுங்கள். இரண்டாவதாக இங்கு ஏற்கனவே உமது எதிரியாக இருப்பவர்களிடம் நண்பராக முயலுங்கள். மூன்றாவதாக இங்குள்ள புனிதத் தலங்களை ஏற்கனவே சூறையாடியது போதும். இனி வேண்டாம் என்று மனதில் இடம் செய்து கொள்ளுங்கள். நாலாவதாக இந்திய விஜயம் செய்தது வீணாகத் திரும்ப அல்ல என்று நீங்கள் கருதினால் ஏதேனும் பொன்னோ பொருளோ எது தேவையோ அதைக் கேளுங்கள். இயன்றதைக் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். பெற்று திருப்தியுடன் திரும்பி வறுமையாலும் இயற்கைச் சூழ்நிலையாலும் துன்புறும் உங்கள் மக்கள் நலம் பெற தேவையானதைச் செய்யுங்கள். மனித ஆயுள் நிரந்தரம் மட்டுமல்ல. நீங்களோ நானோ என்றுமே இப்படி இருந்துவிட முடியாது. இந்த மாதமோ இந்த வருடமோ கூட நம் வாழ் நாட்களில் கடைசி நேரமாக இருக்கலாம். எனவே நன்மையை நினைத்து, நன்மையைச் செய்து நல்லவராகச் சென்றால் உடன் வேறு எதுவும் வராதென்பது உறுதியாயினும் செய்த நன்மைகள் வரும் என்ற மறையுரை நிச்சயம் என்பதை நம்பிச் செயல்படுங்கள். “எமது தூதுவர் உமது மொழி அறிந்தவர். எனவே நாம் அறிவிப்பதை அவர் உமது பாஷையிலேயே அறிவிப்பார். ஏற்பது என்பது நிறையச் சிந்தித்த பிறகே செய்ய முடியும்; மறுப்பது என்பது ஒரு நொடியில் செய்துவிடலாம். ஆனால் அதனால் விளையும் பயனை இந்தத் திடீர் முடிவு அறிந்திட முடியாது. எனவே நின்று நிதானித்து நன்றாகவே சிந்தியுங்கள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லோருக்கும் எல்லா நலமும் அளிப்பராக.” வல்லபர் தமது கம்பீரமான கர்ஜனைக் குரலில் இந்த நீண்ட தூதுச் செய்தியை அறிவிக்கும் வரை சுல்தான் நிதானிக்கவே செய்தான். அவர் சொல்லச் சொல்ல அவன் மனோநிலை வெகுவாக மாறிக் கொண்டுதானிருந்தது. குறுக்கே இரண்டொரு முறை ஏதோ சொல்ல விரும்பினாலும் ஏனையவர்கள் மிகவும் அமைதியாகவும் ஆர்வமாகவும் அவர் விளக்கத்தை ஊன்றிக் கேட்பதைக் கண்டுவிட்டுப் பேசாமலிருந்தான். ஆனால் அவர் விளக்கும் போது அவன் மனம் மட்டும் இல்லை, உடல் கூடத்தான் பரபரப்படையத்தான் செய்தது. கோபம், தாபம், வேகம், வெறுப்பு எல்லாம் உண்டாகத்தான் செய்தது. ஆனால் அவர் முடிவாகக் கூறிய முடிவான வாக்கியங்கள் உண்மையிலேயே சிந்திக்கும்படி செய்துவிட்டன! ஆனால் வயதில் மூத்தவரும் கஜினி முகமது போன்றே ராஜ குடும்பத்தில் சம்பந்தமுள்ளவருமான இபுன் அரசர், மேலும் மவுனமாயிருக்க விரும்பாமல் “சோழர்கள் தமிழகத்தின் அரசகுடும்பத்தில் மூத்த குலத்தினர் என்று கூடக் கூறலாம். வரலாற்றுப் பூர்வமாகப் பாண்டியர் என்ற பெருங்குலத்தினர்தான் இவர்களைவிட ஆதிகுடிகள் என்றும் தமிழ் வளர்த்த பெருங்குடியினர் என்றும் கூறுவர்.” “தமிழ் என்றால்...?” கேட்டது மசூத். “அதுமட்டுமல்ல, அந்த மொழியில் தேர்ந்த அறிஞர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகச் சங்கம் அமைத்து மொழி வளங்கண்டதுண்டு. வேறு எந்நாட்டிலும், எம்மொழிக்கும் இத்தகைய திட்டமிட்ட வளர்ச்சிக் கண்டதில்லை. இம்மொழியில் உள்ள திருக்குறள் என்னும் பேரறிவுப் பெட்டகம் வேறு எம்மொழிக்கும் கிடைக்காத ஓர் அறிய நூல். தமிழ் சாகாவரம் பெற்ற மொழி என்பது போல இந்தத் திருக்குறளும் சாகாவரம் பெற்ற நன்னூலாகும்!” “நீங்கள் அந்த நூலை நம் மொழியில் மொழி பெயர்திருக்கிறீர்களா?” “முயற்சிக்கிறேன்!” என்றார். “நல்லது! இந்தச் சோழர்கள் பற்றி மேலும் கூறுகிறேன். இந்தப் பரகேசரி இராஜேந்திர தேவர் தற்போது சுமார் ஐம்பத்தைந்து பிராயம் ஆனவர். ஆனாலும் அரசியலிலும் படை நடத்தும் பயிற்சியிலும் தன் தந்தையிடமே பயிற்சி பெற்றவர். ஏறத்தாழ இருபதாண்டுகளாக பட்டத்திளவரசராக இருந்த இவர் பலமுறை கடல் கடந்து போய் அனைத்திலுமே வெற்றிகளாகப் பெற்றவர். இவருடைய தந்தையார் ராஜகேசரி இராஜராஜ சோழ தேவர் உலக மகா மன்னர்களில் மகா மன்னர். அவருடைய மெய்க்கீர்த்திகளை நாம் படித்தால் அவர் பெருமை நன்கு புரியும்.” “மெய்க்கீர்த்தி என்றால்?” “சுருக்கமான வரலாறு என்று கூறலாம். அவர் பெற்ற வெற்றிகளைக் காட்டிலும் அவர் தஞ்சை மாநகரில் உருவாக்கிய தஞ்சைப் பெருவுடையார் கோயில்தான் நிரந்தரப் பெருமை தருவதாகும். “சோமநாதபுரம் போலவா?” “அதைவிடப் பன் மடங்கு பெரிது. அதிஅற்புதமான சிற்பங்களை கொண்டது. நந்தி என்ற மாடு- உருவம் ஒன்றை நான் நேரில் கண்ட போது மனிதனால் இத்தகைய பேருருவத்தை எப்படி உருவாக்க முடிந்தது? அதுவும் ஒரே கற்பாறையில்? என்று வியந்து திகைத்து திணறிப் போய் நின்றேன். அந்தக் கோயிலின் நடுநிலையிலுள்ள கோபுரத்தைக் காணக்காண எனக்கு மேல் உலகமே பயணம் செய்வதாகக் தோன்றியது. அதன் ஒவ்வொரு பகுதியிலும் எத்தனையோ வகை சிற்பச் சிறப்புகள்... கோபுர உச்சியில் பெரும் கலசங்கள். அத்தனையும் தங்கக் கலசங்கள்...” “என்ன தங்கமா?’’ என்று சட்டெனக் கேட்டான் சுல்தான் கஜினி. வல்லபர் “பளா.. பளா!” என்று வாய்விட்டுச் சிரித்துவிட்டு, “அறிஞர் அரசே! நீங்கள் இத்தனை நேரம் சொன்ன எதிலுமே தங்கம் இல்லையே! அது கலந்திருந்தால் தானே நம் சுல்தானுக்கு இனிப்பாயிருக்கும் என்பதைத் தங்கள் கடைசி வார்த்தை நிரூபித்தது... இனி சொல்வதில் கூடக் கொஞ்சம் தங்கத்தைக் கலந்தே சொல்லுங்கள்!’’ என்று சிரித்துக் கொண்டே கூறினார். மசூத் தன் தந்தையின் பேராசை கண்டு நாணி என்றான். ஆனால் சுல்தானோ, “எனக்கு இனிப்பது இருக்கட்டும் தூதுவரே! அந்தத் தங்கம் அந்தக் கோபுரத்தின் மீது இருப்பதால் யாருக்கு லாபம்?’’ என்று வெடுக்கென்று கேட்டான். அதைவிட வேகமாகவே பதில் கூறினார் வல்லபர். “அந்தத் தங்கத்தால் எல்லாருக்கும் லாபம்?” “எப்படி?” “உச்சி மீது அமர்ந்து இறைவன் முடிக்கு முடியாக இருக்கும் சிறப்பு வேறு எந்த உலோகத்துக்கும் இல்லை! நீங்கள் தேடியலையும் தங்கம் எல்லா உலோகத்தையும்விடச் சிறந்தது என்பது நீங்கள் அறிந்ததுதானே!” “ஆமாம்! இல்லாவிட்டால் நான் ஏன் அதைத் தேடி அலைகிறேன்.” “ஆசையை அதிகமாக்கி மனிதனை தன்நிலையிழக்கச் செய்து மிருகமாக்கும் அந்த உலோகம் உச்சிக்கோபுரம் மீது உட்கார்ந்தால் மக்கள் இறைவனுடன் அதையும் கை எடுத்து கும்பிட்டுவிட்டு ‘எங்களைப் பேராசை கொள்ளச் செய்யாதே இறைவா! போதுமென்ற மனமே பொன் தரும் கருத்து என்றமன நிலையை அருள்புரிவாயாக!’ என்று வேண்டிக் கொள்ளுவோம்!” சுல்தான் வாய்விட்டுச் சிரித்தான். இதைக் கேட்டதும், மீண்டும் அடக்க முடியாது சிரித்தான். வல்லபர் கூட வியப்புற்றுத் திகைத்துவிட்டார். “ஐயா தூதுவரே! இப்படி நீர் வேண்டியதால் உமது ஆசை அடங்கி ஓடிவிடாதா? உமது தலைவரான அந்தச் சோழரின் ஆசை போதும் என்றாகிவிட்டது என்று கூற முடியுமா? இன்று அவர் நாடு நாடாகப் பிடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லை, சற்று முன்னே எனக்கே எவ்வளவு பொருள் வேண்டுமானாலும் தருகிறேன் என்கிறார்! எவ்வளவு இருந்தால் இப்படித் தாமாகத் தர முன் வருவார்! சற்று நிதானமாக யோசித்திருந்தால் சாம்ராஜ்யாதிபதி என்பது சரிதான். இதற்காக நாம் கையாளும் முறைகள் வேறு. இன்னொருவன் சாம்ராஜ்யாதிபதியாவது அவனுடைய சொந்த வழிமுறைகள் மூலம் என்றால் அதை மாற்ற நமக்கு என்ன உரிமை என்று யோசித்தாரா? தருமம் கேள் என்று இன்னொருவனைப் பார்த்துச் சொல்லுகிறோமோ! இது அவன் தன்மானத்துக்கு இழுக்கில்லையா என்று சற்றேனும் யோசித்தாரா? அல்லது ஒருவன் போராடிக் கெலிக்காத சொத்தைத் தாமாகக் கொடுக்கத்தான் நாம் விரும்பலாமா? பிச்சையெடுப்பவனை நாம் மேலும் பிச்சையெடுக்கவிடுவது நியாயமா என்று ஆராய்ந்தாரா? சிங்கம் மாமிசம் தின்னும், யானை கரும்பைத் தின்னும். ஏ சிங்கமே நீ மாமிசம் தின்பது எனக்குப் பிடிக்கவில்லை என்று யானை கூறினால் அதன் புத்தியை என்னவென்று கூறுவது தூதுவரே! யானை யானையிடம் உபதேசம் செய்யட்டும். வீராதி வீரன் வீராதி வீரனிடம் செய்யட்டும். அதைவிட்டு... நாம் நீர் தூதுவர் என்பதால் நாம் பொறுமைக் காட்ட வேண்டியது நியாயம். ஆனால் உங்கள் சோழர் ஆசை, தவறான இடத்தில் தவறான முறையில், தவறான நோக்கத்தில், தவறாக வந்தவையாதலால் நம் கவனத்துக்குரியனவல்ல. புரிகிறதா?” என்று ஏளனமாகவும் அலட்சியமாகவும் எக்காளத் தொனியில் பேசியதும் வல்லபர் உண்மையில் திடுக்கிடவே செய்தார். ஏனெனில் அறிஞர் பெருமக்களும் அவனுடைய இந்தப் பதிலை ஓர் அளவுக்கு ஆமோதிப்பதாகவே அவர்களுடைய முகபாவனையிலிருந்தே கண்டு கொண்டார். இந்நேரம் வரை எதுவும் பேசாமல் பொறுமையாக கேட்பது போலிருந்தவன் இப்போது உதிர்த்த வார்த்தைகள் உண்மையாகவும் வெறுப்பையும் அலட்சியத்தையும் தெளிவாகக் காட்டின. இதை வல்லபேந்திரன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தவிர இது வரை தமது தூதுப் பணிக்கு ஓர் அளவு நல்லாதரவும் இணக்கமும் இங்கு காணப்படுவதாக ஊகித்துத் தெளிவாகவே இருந்தார். ஆனால் சுல்தானின் இந்தப் பேச்சு அவரை வெகுவாக அலட்டிவிட்டது. என்றாலும் அவர் கருத்தினைப் பதிலாகக் கூறுவதற்குள் மசூத்கான் பேசினான். “ஐயா தூதுவரே! எமது மதிப்புக்குரிய சுல்தான் கூறிய விளக்கம் அவரைப் பொறுத்தவரை வேறு விதமாக இருப்பதற்கில்லை. தருமம் கேட்டுப் பெற்றுக் கொள் என்று கூறுவது அசாதாரணமான ஒரு புத்திமதி. ஆனால் தாங்கள் உண்மையில் இவ்வார்த்தையை எங்கும் உபயோகித்ததாக என் காதால் நான் கேட்கவில்லை. தவிர நாசம், கொள்ளை இரண்டையும் தவிர்த்து வேறு முறைகளைக் கையாளுவதை உங்கள் தூது உரை மறுக்கவில்லை. ஆனால் என் தந்தை கூறியது போல அவரவர்களுடைய முறை அவரவர்களுக்குச் சரியாகவே தோன்றும். ஆனால் இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம், மனிதர்க்கு மனிதன் செயல் முறைகள் மாற்றங்காணத்தான் செய்யும். ஒரே மாதிரியாயிருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறேயாகும்...” என்று அவன் மேலும் ஏதோ கூறுவதற்குள். “சபாஷ்!” என்று குறுக்கிட்டார் சுல்தான். “கொஞ்சம் பொறுத்துக் கூறுங்கள் உங்கள் சபாஷை. ஏனெனில் நான் என்னுடைய சில கருத்துரைகளைக் கூறியாக வேண்டும். சோழர் நம்மை மிரட்டுவதற்கோ, எச்சரிப்பதற்கோ, உடனடியாக விரட்டுவதற்கோ தூதுவரை அனுப்பவில்லை. நம்மை வெறுத்தோ அவமதித்தோ அவர் எதுவும் கூறவில்லை. ஆனால் ஒரு நல்ல நண்பருக்கு இன்னொரு நண்பர் நல்லெண்ணத்துடன் புத்திமதி கூறும் உரிமை இருப்பதாகக் கருதி இவ்வாறு தூது அனுப்பி தம் நிலை பற்றிய விளக்கம் அளித்துள்ளார் என்றே நாம் கருத வேண்டும்! இது வரவேற்கத்தக்க ஒன்றே அன்றி வெறுக்கத்தக்க ஒன்றல்ல” என்று வார்த்தைகளைப் பிசிறில்லாமல் உச்சரித்துத் தெளிவாகப் பேசியதும் வல்லபர் திடுக்கிட்டார். ‘நீ யாரடா பயலே குறுக்கிட்டுப் பேச’ என்று பாயப்போகிறான் சுல்தான் என்று நினைத்தார். ஆனால் அப்படி நடந்துவிடவில்லை. சுல்தான் பாயவும் இல்லை, பதறவும் இல்லை. ஆனால் பதுங்குவது போலப் பின்னால் சாயமட்டும் செய்தான். மற்றபடி வாய் திறக்காமல் மகனையே உற்றுப் பார்த்தான். “சுல்தான் அவர்களும் சோழ சக்கரவர்த்திகளின் நல்லெண்ணத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால் ஒரு வீரனை இன்னொரு வீரன் தர்மம் கேள் என்று கூறுவது சரியல்ல என்றுதான் கூறுகிறார். சோழர் தேவையானதைக் கேள் என்றதும் தர்மம் கேள் என்றே கருத்துக் கொண்டுவிட்டார். ஆனால் இந்நாட்டில் நான் பார்த்தவரை சில பழக்க வழக்கங்கள் விசித்திரமாகவே இருக்கின்றன!” என்றார் இபுன் நாஸர். “அவை என்னவோ?” “எவரோ விருந்தினர், அவர் யாரோ எந்த ஊரோ, பேரோ தெரியவில்லை. தெரிய வேண்டிய அவசியமில்லை. வந்தவரையெல்லாம் வரவேற்கிறார்கள். மிகவும் மரியாதையாக உபசரிக்கிறார்கள். அதுவும் இந்தச் சோழர்களுடைய தமிழ் நாட்டில் வந்தாரையெல்லாம் வாயார வரவேற்று உபசரித்து பெரு விருந்தளித்து அவர்களின் தேவைகளையெல்லாம் இவர்களாகவே தந்து முழு திருப்தி கொண்டவர்களாகவே அனுப்புகின்றனர். முன்னெல்லாம் யவனம், பாரசீகம், பைஸாண்டியம், உரோமம், அராபியம் ஆகிய நாடுகளிலிருந்து இங்கு வந்தவர்கள் முற்றிலும் மாறி நண்பர்களாக, வர்த்தகர்களாகவே வந்து இங்கு மிகவும் வளமாக வாழ்ந்து திரும்புகின்றனர். ஆல் மன்சூர் போன்ற அராபியத் தலைவர்கள் கூட சோழர்களுடன் நட்புரிமைக் கொண்டுள்ளார். கிரேக்கர்கள் சோழர்களின் பெரும் நண்பர்களாகிவிட்டனர். யவன ஆண்கள் பல்லாயிரவர் இங்குள்ளனர். யவன மங்கையர் பலர் சோழர் அரண்மனைகளில் வாழ்கின்றனர். சோழர்களுக்கு எம்மதமும் சம்மதம். தம் மதத்தைப் பிறர் மீது திணிப்பதில்லை. அது போல பிறர் திணிப்பதையும் ஏற்பதில்லை. மதம் என்பது அவரவர்களுடைய சொந்த விஷயம். அந்தப் பகுதியில் சைவம், வைணவம், சாக்தம், பௌத்தம், சமணம் என்று பல மதத்தினர் உண்டு. ஏன்? இஸ்லாமியரும் நிறைய உண்டு. அவர்கள் யாவருக்கும் சமசந்தர்ப்பமே அளிக்கப்படுகிறது. மாற்றார் சமயத்தை அவர்கள் வெறுக்காது சம சந்தர்ப்பமே அளிப்பது பாராட்டுக்குரியது.” “என்ன? சமசந்தர்ப்பமா?” என்று குறுக்கிட்டார் கஜினி. “ஆமாம்! இதோ இருக்கிறாரே இந்த ஜெகதேவ வல்லபேந்திரர் இவர் சைவர். ஆனால் இன்னொரு மகாசேனாபதி சைவர் அல்ல; மந்திரிகளில் ஒருவர் வைணவர். அரச நிதிக்காப்பாளர்களில் ஒருவர் பௌத்தர். புலவர்களில் பலர் சமணர், வர்த்தக மந்திரி கூட ஒரு சமணர்தான்! குதிரைகள் படைக்குத் தலைமை ஆலோசகரும் ஓர் இஸ்லாமியர். ஆச்சர்யம்! அது எப்படிப் பிற சமயங்களைப் பொறுக்க முடிகிறது இவர்களால்! தவிர எப்படி ஒரு முஸ்லீமுக்குக் காபீரிடம் சேவகம் செய்ய மனம் வருகிறது! மனித்தன்மை இருந்தால் போதும்தானே. பொறுமையும் இருக்கும் என்று எங்கள் அனுபவம். நாம் மதப்பக்தர்களாயிருக்க முடியுமேயன்றி மதவெறியர்களாக இருக்கக் கூடாது. வெறி உணர்ச்சியைத் தூண்டி மனிதத்தன்மையை மறக்கச் செய்துவிடுகிறது. இந்த உண்மையை நாம் அறிந்தோமானால் நாம் மனிதர்களாகவே இருப்பது சாத்தியம்!” என்றார் அறிஞர் ஆல்பரூனி. சுல்தான் அவரை உறுத்துப் பார்த்தாலும் முன் போலக் கத்திப் பேசவில்லை. கோபத்துடன் வல்லபேந்திரன் சற்றே சூழ்நிலை மாறுவது பற்றி சிறிதளவு தெளிவுற்று இச்சமயத்தில் தமது உரையைத் துவக்கலாம் என்று துணிந்து “ஐயா சுல்தான்! நாம் புரிந்து கொள்ள வேண்டுவன இவ்வுலகில் எத்தனையோ உள்ளன. ஆனால் உங்களைப் போன்ற நிலையில் இருப்பவர்கள் ஒரு அரச தூதுவன் விளக்கத்தைப் பூரணமாக உணரக் கூட முடியாமல் பரபரக்கும் போது நாம் மேற்கொண்டு பேசிப்பொழுதை வீணாக்குவதால் உங்களுக்கும் சரி, எங்களுக்கும் சரி லாபமில்லை. தவிர எங்களுடன் வந்திருக்கும் இவ்விரு அரசர்களும் எப்பவுமே அவர்களுடைய நாடுகளில் தாங்கள் மக்களிடையே இருக்க விருப்பமுள்ளவர்கள். ஏனெனில் இது அவர்களுடைய கடமை. ஒரு நாட்டரசன் தன் நாட்டை மறந்து பிறர் நாட்டில் படையெடுப்பது என்ற பெயரில் நாட்டுக்கு நாடு ஓடிக் கொண்டிருந்தால் தன் நாடு என்ன ஆகும்?” “இவர்கள் யார் என்று நீங்கள் கூறவில்லை!” “இதுவரை சந்தர்ப்பம் நேரவில்லை. இதோ இவர் தட்சிணலாட நாட்டின் மன்னர் ரவிசூரர். இவர் பூரணசந்திரர் மிதுனபுர மன்னர்!” “இவர்கள் ஏற்கனவே உங்களுக்கு நண்பர்கள் ஆனவர்களா?” “இல்லை! நாங்கள் சோழர்களிடம் தோற்றவர்கள்!” என்றார் ரணசூரர். “என்ன? தோற்றவர்களா? சோழர்களிடம் தோற்றுவிட்ட நீங்கள் எப்படி இவருடன் சேர்ந்து வந்தீர்கள்?” என்று வியப்புடன் கேட்டுவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான் சுல்தான். தோற்கடிக்கப்பட்டவன் எதிரியிடம் வஞ்சினம் அல்லவா கொள்ள வேண்டும்? என்பது அவனுடைய சிந்தனை! இதற்கு மாறாக இப்படிக் கூட நடப்பது உண்டா? “சோழருடன் நாங்கள் போர் தொடுத்தோம். முதலில் ‘தம்முடன் போர் மூலம்தான் என்னுடைய லட்சியம் சாதனையாக வேண்டும் என்பதல்ல. இந்த நாடு முழுமையும் ஒரே தலைமையில் இயங்கும் சாம்ராஜ்யம் ஒன்றை அமைப்பதே எனது இலட்சியம். இது நிறைவேறினால் சீனா போன்ற மாபெரும் நாடாக இந்நாடு விளங்க முடியும். சிதறிக் கிடக்கும் மன்னர்கள் தங்கள் பகுதிகளை சுயமாக ஆளுவதில் தவறில்லை. ஆனால் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டால்! நீ பெரியனா, நான் பெரியவனா என்ற பிரச்னையில் போட்டா போட்டியிட்டுச் சண்டையிட்டால் அந்நியனுக்குத்தான் லாபம். எனவே நமக்குள் எதற்கு வேற்றுமைகள்?’ என்றுதான் கூறினார். ஆனால் நாங்கள் அப்படிக் கருதவில்லை. நான், தர்மபாலன், கோவிந்த சந்திரன் ஒன்று கூடி மாபெரும் போர் ஒன்றைத் துவங்கினேன். ஆனால் சில நாழிகைகளில் எங்கள் துவக்கமே பிசுபிசுத்துவிட்டது! தோற்றோம். உடன் எங்களை அழைத்து எங்கள் நாட்டை எங்களிடமே ஒப்புவித்து தமது மேல் பார்வை என்பது எங்கள் நலத்துக்கே என்பதையும் நிரூபித்தார். அவர் தம் நன்னோக்கத்தையும் நேர்மையான நடைமுறையையும் பூரணமாக ஏற்று ஒத்துழைப்புத் தந்து வருகிறோம்!” என்று விளக்கினான் ரணசூரன். சுல்தான் கஜினி இவ்விளக்கம் கேட்டதும் பலநொடிகள் பேசாதிருந்துவிட்டுப் பிறகு, “ராஜபுத்திரரான நீங்கள் சோழரின் தலைமையை ஏற்றதை மற்ற ராஜபுத்திரர்கள், அங்கீகரித்துள்ளனரா?” என்று கேட்டார். பூரணசந்திரர் அவருடைய கேள்வியின் கருத்தைப் புரிந்து கொள்ள தீவிரமாக முயன்றபடி தயக்கமாகவே, “ராஜபுத்திர மன்னர்கள் சிலர் இன்றும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அவரை எதிர்த்தவர்கள் மட்டும் தோல்வியுற்ற பிறகு ஒப்புக் கொண்டுள்ளார்கள். சிலர் சண்டையிடாமலே ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கும் சரி, தோல்வியுற்றவர்களுக்கும் சரி, அவர் அதே சலுகைகளை வழங்கி சுதந்திரமாக ஆளும் உரிமையும் வழங்கியுள்ளார்!” என்றார். “அப்படியானால் இந்த மன்னர்கள் கஜினியுடன் மட்டும் ஏன் சண்டையிட வேண்டும்?” “காரணம் உங்களுக்கே தெரியும். நீங்கள் தோற்றவரை வாழ வைத்தால்தானே... அவர்கள் நாட்டை உருப்படியாக வைத்திருந்தால்தானே! அவர்களுடைய சொத்தை சுதந்திரங்களைச் சூறையாடாமல் இருந்தால்தானே? கோயில் குளங்களை அழிக்காமல் விட்டிருந்தால்தானே அவர்கள் உங்களை மதிக்க முடியும்?” என்று உணர்ச்சிகரமாக கேள்விகளைப் பூரணச் சந்திரன் கேட்டதும் சுல்தான் முகம் கோபத்தால் சிவந்துவிட்டது. உதடுகள் துடித்தன. கண்கள் கோவைப்பழம் எனச் சிவந்துவிட்டன. “நீங்கள் எல்லோரும் தூதுவர்களும் அல்ல, மதிப்புக்குரிய மன்னர்கள் அல்ல. சைத்தானின் பிரதிநிதிகள். நாம் உங்களை மதித்துப் பேசியதே தவறு. அரே மசூத், காபீர்களை மதிக்காதே. அவர்களை விரட்டி விரட்டி அடி! என்று நான் ஏன் அடிக்கடி செல்லுகிறேன் என்று உனக்கு இப்பொழுதாவது புரிகிறதா?” என்று ஆத்திரத்துடன் கத்திவிட்டு எழுந்ததும், “சுல்தான்!” என்று ஒரு மாபெரும் கர்ஜனை திடீரென்று ஒலித்ததும் அவன் சடக்கென்று தன் இடத்திலேயே உட்கார்ந்துவிட்டான். ‘யாருடையது இவ்வளவு பெரிய குரல்.. யார் இப்படிக் கத்தியது? அதுவும் நம் மஹலுக்குள்ளேயே வந்து நம் அருகேயே இரைவது’ என்ற பீதியும் அலாதி திகைப்பும் உண்டாகி அவனை உலுக்கிவிட்டது. சுல்தான் மட்டுமில்லை. சுற்றியிருந்த அறிஞர்களும், மசூத்தும் கூடத்தான் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தனர். வல்லபேந்திரன்! அவரோ மிரள மிரள விழிக்கும் சுல்தானை உற்றுப் பார்த்துவிட்டு. “ஏன் சுல்தான் சாஹேப் இப்படி நடுங்குகிறீர்?” என்று அலட்சியப் புன்னகையுடன் கேட்டதும் அவன் அவரை விழுங்கிவிடுவது போலப் பார்த்து, “யார் இப்போது ஒரு பெரும் கோஷம் போட்டது? ஏன் அப்படிக் கத்தினீர்கள்?” என்று நிதானமாக கேட்க முயன்றாலும் இன்னமும் நடுக்கம் தீர்ந்த பாடில்லை என்பது அவனுடைய குரலில் ஏற்பட்ட தடுமாற்றம் புலப்படுத்திவிட்டது. “சுல்தான் நான் அப்படி அழைத்திராவிட்டால் நீங்கள் இந்நேரம் உங்களுடைய கோபத்துக்கே இலக்காகி உருப்படியில்லாமல் போய்விடுவார்களோ என்ற கவலை ஏற்பட்டுவிட்டது. எனவே உங்களை உங்களிடமிருந்து காப்பாற்றவே அப்படி அழைத்தேன். இது என்னுடைய சாதாரண குரல்தான். என்னுடைய அசாதாரணமான குரலைக் கேட்க விரும்புகிறீர்களா? ‘அரே சிப்பாய் பகஹதூர்!’” என்று மீண்டும் ஒரு இடியை எழுப்பியதும், “ஐயோ செத்தேன்!” என்று அலறிவிட்டான் சுல்தான் கஜினி. இப்பொழுது நாலா திசைகளிலிருந்தும் ஏகப்பட்ட சிப்பாய்கள் வாள்களை வீசியபடி பாய்ந்தோடி வந்தனர் மஹலுக்குள். சுல்தானோ தன் திண்டில் சாய்ந்து கிடந்தான் அடியுண்ட ஓநாய் போல! ‘ஏன் இந்த மாதிரி சத்தத்துக்கே இந்த ஆள் இப்படி நடுங்குகிறான்?’ என்று புரியாமல் வல்லபரே கூட விழித்தார் அவனைப் பார்த்து. மசூத் பாய்ந்து வந்த சிப்பாய்களைப் போகச் சொல்லிவிட்டு, “ராஜா சாஹேப்! என் தந்தைக்கு எந்த ஒரு பேரொலியும் ஆகாது. இதனால் அவருடைய காது, மூளை, உடல் மூன்றும் ஏக காலத்தில் பாதிக்கப்படுகிறது. நாங்கள் ‘அல்லாஹோ அக்பர்’ கோஷத்தைக் கூட அவர் காதுகளைப் பஞ்சால் மூடிய பிறகே போடுவோம். நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ இன்று இருமுறை கொஞ்சம் இரைந்து விட்டீர்கள். இது விரும்பத்தக்கதில்லை!” என்று அழுத்தமாகவே கூறினான். வல்லபர் சட்டென்று “மசூத்கான் அவர் என் துணைவர்களை சைத்தான் என்று கூறியது பெருந்தவறு. பிறகு ஏதோ எங்கள் மீது பாய்வது போலப் பதறி எழுந்தது அதையும் விடத் தவறு. எனவேதான் அப்படி எச்சரித்தேன். எனக்கு உங்கள் சுல்தானின் சங்கட நிலை தெரியாது. தெரிந்திருந்தால் நான் வேறு முறையை கையாண்டிருப்பேன். அதற்காக வருந்துகிறேன். ஆயினும் அவர் எங்களைச் சைத்தான் என்று ஏசியதை உடன் அவர் வாபஸ் வாங்க வேண்டும். ஏனென்றால் நானும் அவர் மாதிரி இகழ்ந்து பேசும் தரத்துக்கு இறங்க முடியாது. நான் ஒரு தூதுவன். எங்கள் சக்கரவர்த்திகளின் மதிப்புக்குக் குந்தகமாக நடக்க நான் இடந்தரலாகாது. நீங்களும் இடந்தரலாகாது. இதுதான் முறை!” மசூத் தந்தையைப் பார்த்தான். அவன் இப்போது நிமிர்ந்து உட்கார முயன்று கொண்டிருந்தான். கண்களை மேல் துணியால் துடைத்துக் கொண்டு, “ஐயா தூதுவரே, மேலும் விபரீதம் எதுவும் நடப்பதற்கு முன்னர் நீங்கள் புறப்பட்டுவிடுவது உங்களுக்கு நல்லது. உங்கள் தலைவரான அந்தச் சோழர் கூறியனுப்பியது எதையும் நாம் ஏற்பதற்கில்லை என்று அறிவித்துவிடுங்கள்” என்று கூறிவிட்டுச் சட்டென மகனைப் பார்த்து, “மசூத்! இவர்களை நம் எல்லைவரை சென்று வழியனுப்பி வை! பிறகு நமது படைகளைப் புறப்பட யத்தனமாயிருக்க உத்தரவிட்டு வந்து சேரு... உம்!” என்று பரபரப்புடன் பேசிவிட்டு மீண்டும் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். அறிஞர் பெருமக்கள் அதாவது அங்கு கூடியிருந்தவர்கள் யாவரும் தூது இம்மாதிரி தோல்வியடைந்தது கண்டு வருத்தத்துடன் பெருமூச்சுவிட்டனர். இந்துஸ்தானத்தின் இணையற்ற வீரர்களில் ஒருவரான ஜெகதேவ வல்லபேந்திரர், இதுகாறும் பனிரெண்டு நாடுகளில் வெற்றியைத் தவிர வேறு எதையும் காணாதவர். கேவலம் இந்த சுல்தானிடம் தூது என்ற முறையில் வந்து தோல்வியுடன் சோழரைப் போய்ப் பார்ப்பதென்றால்... நீண்டதொரு பெருமூச்சுவிட்டு எழுந்தார். பிறகு தமது கதை இருந்த இடத்தை நோக்கினார். நாலு வீரர்கள் ஓடோடி வந்து அதைத் தூக்க முன்வர அவர் அலட்சியமாக வாங்கினார். பிறகு ஒரு “உம்” போட்டுத் தம் இடத்தோளில் வைத்து வலக்கை வீசி நடக்க முற்பட்டவர், “நண்பர்களே, உங்கள் அன்புக்கு நன்றி. நாம் நல்லதைச் செய்ய முயன்றோம். பயனில்லை! ஆனால் எப்பவுமே நல்லது முதலில் வெற்றி காணாது. கெட்டதுதான் முதலில் வெற்றி பெறும். ஆனால் இறுதியில் தோற்கும். எனவே நல்லதுதான் இறுதியில் வெற்றி பெறும்; இது நிச்சயம்!” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று நடந்தார். அவருடைய துணைவர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர். ரணசூரன் முகம் வெகுவாக மாறியிருந்தது. பூரணசந்திரன் நடையில் மிடுக்கில்லை. எனினும் முகம் கடுகடுவென்றிருந்தது! மஹலின் வாயிலுக்கு வந்துவிட்டார்கள் அவர்கள். வெளிவாயிலிலே ஒரு பெரும் குதிரை மீது கனகம்பீரமாக உட்கார்ந்தபடி நெடியதோர் முதிய வீரன் தூதுவரை உற்றுப் பார்த்தான். யார் அவன்? என்று ஆராய்வது போல ஊன்றி நோக்கினார் வல்லபேந்திரர். வாயிலிலிருந்த குதிரை வீரன் சில அடிகள் முன்னே தமது குதிரையை நகரச் செய்து சட்டென்று நின்றார். மீண்டும் உற்றுப் பார்த்தார். அவருக்குப் பின்னால் பத்து குதிரைகளில் பத்து வீரர்கள் பரந்த அணியாக வந்தனர். பிறகு பத்து குதிரை வீரர்கள், அவர்களுக்கு பிறகு பல அணிகள்.. ஆமாம்! எத்தனையோ அணிகள் வந்து கொண்டிருந்தன. முதலில் வந்து நின்றவன் மிக அருகாமையில் வந்ததும் வல்லபேந்திரர் தன்னையும் தன் பின்னால் இருப்பவர்களையும் ஊன்றிப் பார்ப்பதைக் கண்டு நீண்ட பெருமூச்சுவிட்டபடி “ராஜா சாஹேப், நமஸ்காரம். என்னைத் தங்களுக்குத் தெரிகிறதா?” என்று கேட்டபடி சட்டெனக் குதிரை மீதிருந்து இறங்கிவிட்டான். “நான் பராண் நாட்டின் ராஜா ஹரதத்தன்!” வல்லபருக்குப் புரிந்துவிட்டது! பூரணசந்திரர் வாய் திறக்கவில்லை. ஆனால் ஆத்திரத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டார். ரணசூரனோ ஏதோ ஒரு புதிய சூது இது! என்று நினைத்துக் குமுறியபடி நின்றார். புதிதாக முஸ்லீம்களாகிவிட்டவர்கள் தங்கள் சுல்தான் பக்தியைக் காட்ட ஒருவேளை இம்மாதிரி திரண்டு வந்து தங்களை மடக்கி வளைக்க முயலுகின்றனரோ என்றும் வல்லபர் நினைத்தார். ஆயினும் மசூத்கான் இதை அனுமதிப்பானா! சுல்தான் இதனால் தைரியமடைந்து “பிடிவிடாதே...” என்று குதித்தாலும் வியப்பதற்கில்லை. எனவே ஹரதத்தன், அவனுக்குப் புதிதாகக் கிடைத்துள்ள முஸ்லீம் பெயர் என்னவென்று கூட தெரியவில்லை, இப்படி ஒரு வெகு அழகாக அணிவகுத்து நிற்பானேன்? வல்லபன் அஞ்சிப் பதறிவிடவில்லை. ஆயினும் சிந்தித்தான்! ரணசூரன் நினைப்பது போல இது தங்களைப் பிடிக்க ஒரு சூழ்ச்சியா! அல்லது சமரச சமிக்ஞையா?” “ராஜா சாஹேப்! என்னை நீங்கள் இதற்குள் மறந்திருக்க முடியாது என்று நம்புகிறேன். இருந்தாலும் தாங்கள் சோழச் சக்கரவர்த்திகளுடைய மஹாசேனாபதி மட்டுமன்றி எப்படி சித்ர துர்க்கத்தின் மன்னரோ அப்படி நானும் இப்போதைக்கு ஒரு இஸ்லாமியன் என்றாலும் பாரணின் மன்னன் ஹரதத்தனுமாவேன்!” என்றான். வல்லபேந்திரன் இனியும் தாம் பேசாமலிருப்பது சரியல்ல என்று நினைத்தவராய், “நல்லது ராஜா ஹரதத்தா! நான் வந்த வழியே திரும்ப புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நீ வந்திருக்கிறாய் இப்போது. அதுவும் ஒருவனாக அல்ல, உன்னுடைய பத்தாயிரம் துணைவர்களுடன். இதை நான் ஒரு கவுரவமாக நினைப்பதா? அல்லது புதிய மதத்தில் மாறியுள்ளவனின் புதிய முறை செயல் இது என்று நினைப்பதாவென்று புரியவில்லை” என்றார் நமது கதையைக் கீழே சட்டென்று எடுத்து வைத்துக் கொண்டு! பத்துப் பத்துப் பேராக கண் பார்வைக்கு எட்டியவரை அணிவகுத்து நின்றவர்கள் எவரும் தங்கள் குதிரைகளிலிருந்து இறங்கவில்லை. ஆனால் தனது குதிரையை விட்டிறங்கி ஒவ்வொரு படிகளாய் நிதானமாக ஏறி வந்த ராஜா ஹரதத்தன் “சோழ மஹாசேனாபதி அவர்களே, நீங்கள் வந்த வேலை வெற்றியடையாமல் திரும்புவதை நான் விரும்பவில்லை. என்னுடைய பத்தாயிரம் வீரர்களும் விரும்பவில்லை. எனவேதான் வந்தோம். சோழர்கள் வாழ்வில் தோல்வி என்பது நம்ப முடியாத ஒன்று. தாங்க முடியாத ஒன்று” என்றான் இடையில் உள்ள வாளைத் தொடாமல். ஆனால் கம்பீரமாக நின்றபடி நிமிர்ந்தே பார்த்தான்! ‘தன்னைவிட இரண்டொரு வயது குறைவாகத்தான் இருக்கும். அதிகமில்லை. நல்ல கம்பீரத் தோற்றம். திடமான பேச்சு. எடுப்பான தொனி. இத்தனை இருந்தும் ஏன் இந்த மாற்றம்! ஒரு லட்சம் குதிரை வீரர்கள், நூற்றுக்கணக்கில் யானை படைகள், காலாட் படையின் கணக்கு எவ்வளவோ, இவற்றைக் கொண்டு வந்த கஜினியைக் கண்டு உண்டான பயத்தில் இவன் நடுங்கிப் போய் மதம் மாறி குலாமானதாகக் கூறப்பட்டதே! இவன் தோற்றமோ அல்லது தொனியோ பேச்சோ அப்படிக் காட்டவில்லையே?’ என்று நினைத்த வல்லபேந்திரன் தன் விஷயத்தில், தனது தூது விஷயத்தில், ஏன் இவனுக்கு இவ்வளவு அக்கரை என்றும் வியந்தான். ஆனால் புதிய மதம் மாறி புதிய எஜமானைத் திருப்தி செய்ய நம்மை என்னவோ செய்ய வந்துள்ளனர் என்றுதான் இன்னமும் கருதினர், ரணசூரனும், பூரணசந்திரனும். “எங்கள் விஷயத்தில் நீ காட்டும் அக்கரைக்கு நன்றி. எனினும் நடந்தது நடந்துவிட்டது. ஒரு தூதன் என்ற முறையில் இனி நான் ஒன்றும் செய்வதற்கு இல்லை. எங்கள் சக்கரவர்த்தியிடம் போய் நிகழ்ந்ததை அறிவிப்பதைத் தவிர!” என்றார் வல்லபேந்திரர்! “இல்லை வீரவல்லபரே? உங்கள் தூது தோற்கவில்லை. தோற்கவிடுவதும் நியாயமல்ல! என்ன நான் சொல்வது. சரிதானே சாஹேப்!” என்று ஹரதத்தன் அழுத்தமாகக் கேட்டதும் ‘இதென்ன? சுல்தான் கஜினியும் தங்கள் பின்னால் வந்து நிற்கிறானா?’ என்று திகைத்த வல்லபேந்திரன் திரும்பிப் பார்த்த போது, சுல்தான் கஜினி திகிலடைந்தவனைப் போல் இவர்களைப் பார்த்தபடி அங்கே நின்ற நிலை பரிதாபமாக இருந்தது. ஹரதத்தனின் கேள்விக்கு அவன் தயக்கத்துடன், “அமீர் அரூன் அவர்களே தாங்கள் வந்த வேலை தோல்வி என்று திரும்புகின்றனர்!” என்றான் ஏதோ பேச வேண்டுமே என்ற தோரணையில். “இல்லை என்று நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன் சுல்தான். உங்கள் நலத்தில் கருத்துள்ள உங்களுக்காகவே எங்களவர்கள் அத்தனை பேரையும்விட்டு வந்துள்ள நாங்கள் கூறுகிறோம். இந்தத் தூது தோற்கக்கூடாது என்று! எனவே நீங்களும் புறப்படுங்கள் எங்களுடன். மசூத்... உன் தந்தை திரும்பும் வரை நீயும் மற்றவர்களும் கவனமாக இருங்கள்” என்று கூறிவிட்டு, “வாரும் வல்லபதேவரே. நம்முடன் எங்கள் சுல்தான் அவர்களும் வருகிறார்! புறப்படுங்கள்!” என்று கூறியதும் கஜினி பரிதாபமாக விழித்தபடி சுற்று முற்றும் பார்த்தான். பிறகு தளர்ந்த நடையில் தன் குதிரையண்டை சென்று அதன் மீது ஏறினான்! வல்லபர் அதிசயித்தார் இந்தத் திடீர் மாறுதலைக் கண்டு. ஏன் இந்த ஹரதத்தனிடம் இவ்வளவுக்குப் பயப்படுகிறார்கள் இவர்கள்? அவன் அல்லவா நடுநடுங்கிப் பயத்தால் மதம் மாறிவிட்டக் கோழை என்று இன்று நாடெல்லாம் கூறுகிறது. அவன் பேரைக் கேட்டாலே ‘துரோகி’ என்று ஏசுகிறது... இதென்ன விபரீதம்... ஓ! சற்று முன்னர்தான் மேலும் விபரீதம் விளையும் முன்னர் புறப்பட்டு விடுங்கள் என்று கஜினி எச்சரித்தது நினைவுக்கு வந்தது அவருக்கு! ஆனால் தங்களை எங்கோ அழைத்துச் சென்று ஏதோ செய்யவிருக்கிறான் இந்த ‘மதமாறி’ முறைகேடன் என்றுதான் இன்னமும் வல்லபரின் துணைவர்கள் நினைத்து உள்ளூரப் பொருமினர். புலியிடம் தப்பி எலியிடம் சிக்குவதா என்று முணுமுணுத்தான் பூரணசந்திரர். ஆயுதம் இல்லையே கையில் என்று அதிர்ச்சியுடன் நடந்தான் ரணசூரன். அவரவர்கள் குதிரை மீது அவரவர்கள் ஏறியதும் ஹரதத்தன் என்னும் அமீர் அரூன் தன் குதிரை மீது ஏறி சுல்தான் பக்கத்தில் வந்து சேர்ந்தான். அந்நேரத்தில் கஜினி முகமதின் மனதில் எத்தகைய நினைவுகள் எழுந்தன என்பதை எவரும் சரியாக ஊகிக்க முடியவில்லை. ஆனால் ஹரதத்தன் மட்டும், “சோழ மஹாசேனாபதி, எங்கள் சுல்தான் எல்லாம் வல்லவர்; நீங்கள் நினைப்பது போல அவர் வெறும் விக்ரஹ நிக்ரகர் மட்டுமில்லை. இந்துஸ்தானத்தின் தலைவிதியையே மாற்ற வந்திருப்பவர். என்னைப் போன்ற வீராதி வீரர்கள் எல்லாம் ஒன்று இவருடைய மதத்தில் சேர்ந்துவிட வேண்டும். ஆனால் இவரிடம் அவர்களால் ஜெயித்துவிட முடியாது. சோமநாதபுரத்தின் கோகாபாபா மஹாசக்தி வாய்ந்தவராயிருக்கலாம். எங்கள் சர்வோத்தம சாக்கபீடாதிபதியும் மகா பெரியவராயிருக்கலாம். இன்று எங்களுடைய இந்த சுல்தானை எதிர்ப்பதற்காக அந்த மாஜ் கன்னோசி சேனாபதி ஜெயந்திரன் ஆள் திரட்டுகிறானே! அதுவும் நடைபெறாது. இந்த ஹரதத்தனாலும் கண்டதேவனாலும் முடியாத ஒரு காரியம் அதாவது கஜினியை வென்று விரட்டுவதென்ற வேலை வேறு எவராலும் சாத்தியமில்லை. ஒரே ஒருவரைத் தவிர... ஆனால் அந்த ஒருவர் யார் என்று இப்போது கூற அவசியமில்லை. ஏன் என்றால் அமீர் அரூன் ஆக நான் இருக்கிறேன் இவருக்குத் துணையாக!” என்று அவன் கூறியதும் சுல்தானும் புன்னகையுடன் ஆமோதித்துத் தலையசைத்தான்! ராஜ மோகினி : ஆசிரியர் உரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|