ராஜ மோகினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

20

     ஆப்கனிஸ்தானத்தின் ஒரு சின்னஞ்சிறு நாடுதான் கஜினி என்று முன்பே கூறியுள்ளோம். ஆனால் அந்த சிறு நாடு பல காலத்துக்குப் பெரும் பெரும் போராட்டங்களைக் காண வேண்டியிருந்தது. அமீர் ஆல் பக்டிஜின் என்பார் ஆண்ட கஜினி நாடு அவருக்குப்பின் அவருடைய மருமகன் சபக்டிஜினால் ஆளப்பட்டது. இவருக்கு இரு மகன்கள். மூத்தவன் பெயர் இஸ்மாயில். இளையவன் பெயர் முகமது. சபக்டிஜின் இறந்ததும் மூத்தவன் என்ற உரிமையில் முறைப்படி அந்நாட்டு மகுடம் சூடியவன் இஸ்மாயில்தான். ஆனால் முகமது எங்கோ இருந்தவன் ஓடோடி வந்தான். அண்ணனுக்கு எதிராகப் பெருங்கலகம் செய்து முடிவில் அண்ணனை ஆட்சிப் பீடத்திலிருந்து இறக்கிவிட்டு விரட்டி விரட்டியடித்தான். உயிருக்கு பயந்து ஓடிவிட்டான் இஸ்மாயில். இவ்வாறுதான் கஜினியின் அதிபனானான் முகமது.

     இந்த முகமதுதான் பிற்காலத்தில் தன்னை இந்துஸ்தான் மன்னர்களின் பயங்கரன் என்றும் விக்கிரஹ நிக்கிரஹன் என்றும் அழைத்துக் கொண்டவன்* இந்நாட்டிலிருந்து கோடானு கோடியாக கொள்ளையடித்தான். அப்பாவிகளைக் கொன்று பிணமாக்கினான். ஆலயங்களை இடித்துத் தூள் தூளாக்கி நாசகாலனாக மாறித் தன் மார்பை தட்டிக் கொண்டான்.

     இதோ ஒரு சிறு உதாரணம். மதுரா நகரைக் கொள்ளையடித்த கஜினி, அடித்த கொள்ளை எவ்வளவு என்று ஒருமுறை கணக்கிட்டானாம். 98,300# மித்குவால் தங்கம் இருந்ததாம். ஐயோ! இது ஒரு லட்சம் மித்குவாலுக்கு 1700 மித்குவால் குறைந்திருக்கிறதே என்று கூப்பாடு போட்டுவிட்டுப் புலம்பி அழுதானாம். ஆனால் இதெல்லாம் சோழனைச் சந்திக்கு முன்பு நடந்தது. சோழனைச் சந்தித்துத் திரும்பிய பிறகு அவன் ஒருமுறை விம்மி விம்மி அழுததுண்டு. ஆனால் அது முற்றிலும் வேறு காரணத்துக்காக.

     * கஜினி முகமதின் காலத்திய வரலாற்று அறிஞரான ஃபெரிஷ்டா அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக போர்ப்ஸ் எழுதியுள்ளார்.

     # மித்குவால் என்பது ராத்தல். கிலோ மாதிரி அந்நாளில் வழங்கி வந்த ஒரு எடைக் கணக்கு.

     “மதுரையின் கோயிலைப் போல் எவனாவது கட்ட விரும்பினால் எவ்வளவு சிறந்த அனுபவசாலிகளான கட்டிட வேலை ஆட்களைப் பெற்றாலும் குறைந்தபட்சம் நூறாயிரம் சிவப்பு தினார்கள் தேவைப்படும். இவ்வளவு செலவு செய்தால்தான் இம்மாதிரியொன்றை உருவாக்க இயலும்” என்று மிக உருக்கமாகக் கூறினான்.

     இந்துஸ்தானத்துக்குக் கடைசி முறையாக வந்து திரும்பியவன் தனது நாட்டில் ஒரு பெரும் பல்கலைக் கழகத்தை உருவாக்குவதில் மிக மும்முரமாக ஈடுபட்டான். நாளாக ஆக மனக்கிலேசம் கூடியதேயன்றி குறையவில்லை. எதற்காகக் கொள்ளையடித்தோம். ஏன் இத்தனை உயிர்களை நாசம் செய்தோம். காபீர்களைக் கொன்று குவித்தால் இஸ்லாமியர் மகிழ்வர், ஏற்றிப் போற்றுவர் என்று நம்பியதெல்லாம் பொய்த்து விட்டதே. முன்பு தன்னை விருந்திட்டு அழைத்த காலிபா, கஜினியின் அரசர் தமது மதத்தில் பக்தி காட்டிச் சீராகச் செயல்படாது வெறியைக் காட்டி விபரீதங்களைச் செய்து விட்டார். நாம் அவற்றை ஏற்கவில்லை. நாம் மட்டுமில்லை. இஸ்லாமே ஏற்காது என்று அறுதியிட்டுக் கூறியுள்ளாரே.

     சோழன் காபீர்தான். என்றாலும் இஸ்லாத்தின் உட்கருத்தினை எவ்வளவு தெளிவாக விளக்கமாக அறிந்திருக்கிறான். எவ்வளவு அன்பாகவும் மதிப்பாகவும் நடந்து கொள்ளுகிறான். ஃபெரிஷ்டா கூறியது போல அவன் கீழை நாடுகளின் சூரியன்தான். ஒளிவீசும் முகம். உண்மை நிறைந்த இதயம். அன்பு கலந்த மனம், ஆண்மைத் தோற்றம், அறிவார்ந்த பேச்சு... ஆம். அவன் மன்னர்களுக்கு மன்னனாயிருக்கத் தகுந்தவனே... அனைத்தும் வல்ல அல்லாஹ் அவனைக் காப்பாராக.

     ஆனால்... இப்படிப் பல நாட்கள் நினைத்து நினைத்துத் தவித்துத் துடித்துப் பலவும் எண்ணிக் குமைந்து நலிந்தவன், ஒரு நாள் தன் எதிரே தான் கொள்ளையிட்ட பொருள்கள் அனைத்தையும் கொண்டு குவிக்கும்படி உத்தரவிட்டான்.

     வேலையாட்கள் அவ்வாறே செய்தனர். அதைப் பார்த்ததும் அவனுள்ளம் அளவு கடந்த மகிழ்ச்சிக்குப் பதில் அளவு கடந்த துக்கத்தையே அடைந்தது. நெடுநேரம் அந்தக் குவியலையே உற்றுப் பார்த்துப் பார்த்து நெடுமூச்செறிந்தான்.

     “இவையாவும் நான் கொள்ளையடித்த பொருள்கள். அப்பாவிகளைக் கொன்று அந்தப் பிணங்களை மேடையாக்கி அதன் மீது நான் கவர்ந்த பொருள்களுடன் ஆணவமாக நடந்து வந்தவன். ஆம். அதை நினைத்துப் பார்க்கவே... மனம் நடுங்குகிறது. என் சமாதியில் இப்பொருள்களில் சிலவற்றைக் கொண்டு சென்று புதையுங்கள். சமாதிக்கு தெய்வீகம் என்று பெயரிடுங்கள். ஆம் இனி இதைத் தவிர நான் வேறு என்ன செய்ய முடியும். ஆண்டவனே என்னை மன்னித்துவிடு” என்று வெகுவாக அரற்றி அவதியுற்று மிகவும் நொந்து தவித்தான் அவன் வாழ்க்கையின் இறுதி நாளில். ஏனெனில் அவனுடைய மகன்களும், மற்றவர்களும், உற்றாரும் மற்றாரும் இவனுக்கு எதிராகத் திரும்பி விட்டனர்.

     இதனால் கஜினி சாகும் போது வெகுவாகக் கழிவிரக்கப்பட்ட பிறகே மரணமுற்றான் என்ற செய்தி சோழனுக்குக் கிடைத்த பொழுது, அவன் தென்நாடு திரும்பிவிட்டான். ஆயிரத்தெட்டு பெருங் கலசங்களில் புனித கங்கை நீரை நிரப்பி நூற்றெட்டு யானைகள் மீது அவற்றைத் தமிழகத்துக்கு ஏற்றி வந்தவன், தன்னுடைய மாபெரும் படைகளுடன் காஞ்சியையும் தாண்டி பாடலியை (இன்றைய திருப்பாப்புலியூர்) நெருங்கும் நேரத்தில் கிடைத்தது அந்த துக்கச் செய்தி.

     சோழனுக்குத் தாங்கவில்லை. கஜினி முகமது கொள்ளைக்காரன்தான், கொலைக்காரன்தான், நாசக்காரன், என்றாலும் உண்மையான முஸல்மான் அவன் என்பதில் சந்தேகமே இல்லை. நாள் தவறினாலும் அவன் பிரார்த்தனை செய்யத் தவறாதவன். தன் சமயபக்தியை வெறியாக மாற்றிக் கொண்டவன். விபரீதங்களைச் செய்தது உண்மைதான் என்றாலும் புத்தி தெளிந்து வெறி விலகியதும் அங்கே பக்தி புனிதமாகிவிட்டது. கழிவிரக்கம் தொடர்ந்தது... பாவம்... ஒரே ஒருமுறைதான் சந்தித்தோம் என்றாலும் அந்தச் சந்திப்பை என்றைக்குமே மறக்க முடியாது.

     தென்னாடு போந்தவன் வழுதாவூர் மசூதியில் எங்கோ மரணமுற்று இறைவனுடன் கலந்து விட்டவருக்கு அஞ்சலிப் பிரார்த்தனை செலுத்துங்கள் என்று தனது நண்பர்களான முஸ்லீம்களுக்கு உத்திரவிட்டான். அவ்வாறே நடந்தது. தான தருமங்கள் செய்தான். இறந்தவனுக்கு நற்கதியருளப் பாடலியில் இறைவனைச் சோழனே பிரார்த்திக்துக் கொண்டான்.

     மூன்று தினங்கள் பாடலியில் சோழப் படையினர் முகாமிட்டனர். நாலாம் நாள் சோழன் தனது யானை மீது ஏறியதும் படைகள் அதிர்வேட்டுக்களை முழங்கி ஆர்ப்பாட்டத்துடன் புறப்பட்டன. இன்னும் தில்லை ஆறே கால்கள்தான். ஆம். அடுத்த முகூர்த்த காலத்தில் தில்லையில் இருக்க முடியும். நூற்றெட்டு யானைகளும், மூவாயிரம் குதிரைகளும், பதினாறாயிரம் படை வீரர்களும், புடைசூழ மிகப் பிருமாண்ட நீர்க்குடங்களை தாங்கி அசைந்து அசைந்து நடந்து சென்ற அற்புதக் காட்சி, அதைப் பார்த்துப் பரவசமுற்ற மக்கள் கூட்டம், படை வீரர்கள் தாயகம் வந்துவிட்டோம். இனி. உறவினர்களை, வீடுகளை காண்போம் என்ற உற்சாகத்தில் கடந்த வேகம்... மன்னருக்குக்கூட நம் மகன் ஆதித்தன் திரும்பி இருப்பான். அனேகமாக அந்தச் செய்தி கூற உடனடியாக ஆட்களை அனுப்புவார் பிரம்மாதிராயர் என்றும் கூட நினைத்துச் சற்றே நிம்மதி காண முயற்சித்தான் சோழன்.

     ஆனால் அன்று மாலையில் வந்து சேர்ந்தவர் உத்தம சோழப் பிரும்மமாராயர் என்னும் அந்த மறையன் அருண்மொழிதான்.

     மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மாமன்னரைச் சந்திக்கிறார் பிரும்மமாராயர். பேரரசரின் முகாரவிந்தம் ஏன் எதிர் பார்த்த அளவுக்குக் களை நிறைந்திருக்கவில்லை? ஏதோ ஒரு கவலை. ஒருவேளை இளைய மகன் ஆதித்தன் பற்றிய கவலையோ... உத்தமர் வணங்கினார்.

     “வாழ்க சோழர் குலமும் கொற்றமும். நம் இளவரசர் ஆதித்தர் இன்று அதிகாலை திருமறைக் காட்டுக் கடற்கரையில் வந்து இறங்கிவிட்டார் சுகமாக” என்று சுருக்கமாக கூறியதும் பரகேசரியின் முகம் மலர்ந்தது. பிரும்மமாராயர் இதயமும் நிறைந்தது. ஆயிரமிருந்தாலும் அரசனும் ஒரு மனிதன்தானே. பாசம் யாரைத்தான்விடும்.

     “நல்ல செய்தி கொணர்ந்தீர் பிரம்மமாராயரே. சோழர் குலம் உங்களுக்கு வெகுவாகக் கடமைப்பட்டிருக்கிறது. எப்போதுமே நீங்கள் நல்ல செய்திதான் கொண்டு வருவீர்.”

     “அன்பின் பெருக்கால் அடியேனை மிகையாகப் பாராட்டலாம்; பரவாயில்லை. பேரரசியாரும் இளவரசர், இளவரசிகளும் தில்லையம்பதியிலே தங்களை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்” என்று விநயமுடன் அறிவித்தார்.

     “நல்லது பிரம்மமாராயரே...” என்று ஒரே வார்த்தையில் பதில் கூறினான். ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் ஓடிவிட்டன அல்லவா... பிரிவு என்பது சாதாரண விஷயமா? தந்தை இராஜராஜ சோழனைக் காட்டிலும் தனயன் இராஜேந்திரன் சில நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் தீவிரமாக இருந்தான். யுத்தத்துக்குப் போகும் போது படை வீரர்கள், தளபதிகள், சேனாதிபதிகள் ஏன் அவனும்தான் பெண்களை அழைத்துச் செல்லக் கூடாது. பெண்கள் விஷயத்தில் கவனமே இருக்கலாகாது என்பது அவற்றில் முக்கியமானது. ஆனால் எந்த நேரத்தில் கன்னட நாட்டு வீரர்களயும், அரசர்களையும், தன்னுடைய சேனைகளில் இணைத்துக் கொண்டானோ அந்த நேரம் முதல் அவனுடைய இந்தப் புனிதமான கொள்கை வெகுவாகச் சோதிக்கப்பட்டுவிட்டது.

     ஜெகதேவ வல்லபதேவனுடைய மூத்த மகன் மிதிலையில் அந்நாட்டு மன்னன் மகளை மணந்து கொண்டு விட்டதால் அங்கேயே தங்கிவிட்டான். இளையமகன் விஜயனோ பூரணசந்திர சேனன் மகள் விலாசவதியை மணந்து கொண்டு அங்கேயே வங்கத்தில் தங்கிவிட்டான். இவர்களுடைய குழந்தையின் முதலாண்டு விழாவைக் கொண்டாடிய நேரத்தில் கணியர்கள் அவன்தான் வங்கத்தின் சேனர் ஆட்சிக்கு அடிகோலும் முதல் அரசனாக இருப்பான் என்று அறிவித்தனர்.

     பூரணசந்திரனுக்கு இதனால் எல்லையற்ற மகிழ்ச்சி. வல்லபனுக்கும்தான். சோழ இராஜேந்திரன் இவ்விபரம் அறிந்த பிறகே தற்போது தமிழகத்துக்குத் திரும்பி வந்திருக்கிறார். பாடலியைத் தாண்டிவிட்டான். தில்லையின் எல்லையில் பழைய நினைவுகளில் மூழ்கியவன் புதிய சூழ்நிலை காணத் திரும்பிவிட்டான்.

     இன்னும் இரண்டே கல் தொலைவுதான். எனவே தண்டு இறங்கும்படி உத்தரவு பறந்தது.

     நூற்றியெட்டு யானைகளையும் ஆயிரத்தெட்டு குதிரைகளையும் பிரம்மாதிராயர் தலைமையில் கொள்ளிடக்கரை மீது சென்று சூரியனார் கோயிலுக்கு அண்மையில் நிலைக்கும்படி உத்திரவிட்டான்.

     “பிரம்மமாராயரே, எங்கெங்கோ சென்றோம், போர், அமைதி யாவும் நம்முடன் வந்தன. இறைவன் அருளால் என் தந்தை தஞ்சைப் பெருவுடையரின் பேரருள் பெற்று இராஜராஜேஸ்வரம் அமைத்தார். நான் வடநாடு சென்று கங்கையின் புனித நீர் கொணர்ந்தது ஏன்? நான் அடைந்த வெற்றிகளைப் பற்றிப் பறைசாற்றவா? இல்லை. கங்கைகொண்ட சோழீஸ்வரமுடையவராக ஒரு இறைத்தலத்தை அமைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய அவா. ஏறத்தாழ பதினெட்டு ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இவ்வாசை பூர்த்தியாக கங்கைகொண்ட சோழபுரம் உருவாக வேண்டும். இராஜராஜேஸ்வரம் போலவே சூரியனார் கோயிலுக்கு அருகே ஒரு பேராலயம் அமைத்திட வேண்டும். தந்தையை மீற அல்ல, தந்தை வழி தனயன் என்று உலகோர் மதித்து வாழ்த்திட. பெரிய பிராட்டியார் சூரியனார் கோயிலிலேயே இனி தங்கப் போவதாக நான் திக்விஜயம் புறப்படும் முன்னர் அறிவித்தார்.”

     “அவ்வாறே அவர் அங்குதான் அன்று முதல் தங்கி சூரியனாரை மூன்று வேளையும் பூசித்து வருகின்றார்.”

     “நல்லது. சோழர் குல மூலவரைப் பிராட்டியார் பூசிப்பது நம் அனைவருக்குமே நலமாற்றும் திருத்தொண்டாகும். எனவே நாமும் அவ்வூருக்கு அண்மையில் இந்தக் கங்கைகொண்ட சோழபுரம் அமைத்தோமாயின் பெரிய பிராட்டியாருக்கு மகிழ்ச்சி. நம் பிராட்டியாருக்கு, காலிங்கராயருக்கு, எனக்கு நம்... நம் எல்லோருக்குமே...” என்று ஏதோ கனவில் கூறுவது போலச் சொன்னதும்...

     “எங்களுக்கும்தான், இந்தச் சோழ நாட்டுக்கும்தான்... ஏன்? இந்தத் தமிழ்கூறும் நல்லுலக மாந்தர் அனைவருக்குமே பெருமைதான் பரகேசரி... தமிழ் உள்ளளவும் இராஜராஜேஸ்வரமும் கங்கைகொண்ட சோழபுரமும் நிலைத்திருக்கும்” என்றார் பிரம்மமாராயர்.

     “ஆம். நாம் இந்த நம்பிக்கையுடன்தான் செயல்பட வேண்டும். தென்னகத்துச் சிற்பிகள் அனைவரையும் ஆட்களை அனுப்பி அழைத்து வரச் செய்யுங்கள்.”

     “உத்திரவு சோழ தேவரே. ஆனால் ஒரு சிறு சிக்கல் ஏற்படுவதற்கு வழியேற்பட்டுள்ளது...”

     “புரிகிறது. என் தந்தையாரின் ஐயம் காரணமாக. மனம் வெறுத்து சிற்பி சிலாயனர் சிங்களம் சென்ற விட்டாரே தமது ஆறு வயதுக் குழந்தையுடன்... பெரும் மதிப்புக்குரிய அவர் இல்லையே என்ற பெருங்கவலை எனக்கும் உண்டு. ஆனால் தந்தையுடன் அவர் முரண்பட்டது ஒரு கொள்கை காரணமாக இல்லாமல் ஐயம் காரணமாக என்று எண்ணும் போது நான் தந்தையை அன்று ஆதரித்து நிற்க வேண்டிய நிலையிலிருந்தேன். ஏனெனில் எனக்கும் அந்த ஐயம் ஏற்பட்டிருந்தது.”

     “உண்மைதான். எங்களில் பலரும் அப்படித்தான் இருந்தனர்.”

     “இல்லை பிரம்மமாராயரே. உங்களில் பலர் எங்களை ஆதரிக்கவில்லை.”

     “ஆனால் நான் நடுநிலைவகித்தேன். ராஜகேசரி சந்தேகப்பட்டதும் தவறு; சிற்பி அவசரப்பட்டதும் தவறு; எனவே இரு தவறுகள் எந்த ஒரு நலத்தையும் செய்துவிட முடியும் என்று நான் ஒதுங்கி நின்றேன் சோழ தேவரே.”

     “பெரிய பிராட்டி மட்டும் தந்தையை எதிர்த்தார்.”

     “அவர் பெரிய பிராட்டியராய் இருந்ததால்...”

     “தெய்வீகப் பிராட்டியார் செம்பியன் மாதேவியாரும் எதிர்த்தார்...”

     “அவர் கோனேரி கொண்டவரின் பேரருளுக்குப் பாத்திரமாயிருந்ததால்... சோழ குல மூதாட்டியாதலால்...”

     “வாசாலகமாகப் பேசுகிறீர்கள் பிரம்மமாராயரே. ஆனால் நான் தந்தையை எதிர்க்கச் சந்தர்ப்பம் இடந்தரவில்லை.”

     “இல்லை. கடமையும் பொறுப்பும் இடந்தரவில்லை சோழதேவரே.”

     “ஆம், அதுவும் உண்மைதான்.”

     “ஆயினும் ஆரூர் சிற்பியார் கோபங்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறியதும் முறையல்ல மாமன்னரே.”

     “என்றாலும் நாம் அவரை இந்தக் கங்கைகொண்ட சோழபுரக் கோயில் உருவாக்க அழைக்காமலிருக்க முடியாது.”

     “அவர் சிங்களத்தில் இப்போது இல்லையாம். ஆயினும் அவர் மீண்டும் இங்கு வரமாட்டார்.” பிரம்மமாராயர் அழுத்தந்திருத்தமாகக் கூறியதும் மன்னர் சிறிது நேரம் எதுவுமே பேசவில்லை. பிறகு நீண்ட ஒரு பெருமூச்சுவிட்டுக் கொண்டே “தந்தை கலைஞர்களிடம் காட்டிய அன்பு எல்லையற்றது. இந்த பேரன்பு காரணமாகவே அவர் சிற்பி சிலாயனார் வேறு எங்காவது போய் எவருக்காவது ஒரு புதிய கோயில் நிர்மாணிக்க எண்ணினார்.”

     “கலைஞர்கள் ஒருவருக்கோ, ஒரு சமூகத்துக்கோ ஒரு நாட்டுக்கோ மட்டும் உரியவர் அல்ல என்ற உண்மை பேரரசர் இராஜராஜ சோழ தேவனுக்குத் தெரியாததில்லை சக்கரவர்த்திகளே.”

     “தெரிந்ததும் அவர் அதிக அன்பு காரணமாகவோ மதிப்பு காரணமாகவோ சந்தேகங் கொண்டுவிட்டார்.”

     “கடையூர், குடந்தை, ஐயாறு நாட்டாரெல்லாம் இராஜராஜேஸ்வரத்தைக் கண்டு பிரமித்து ‘ஆகா! இது போல நம் ஊரிலும் இருந்தால்’ என்று பேராசை கொண்டனர். சிற்பியார் மனம் வைத்தால் நடவாதா என்ன என்றார் அரிபூரார். அவ்வளவுதான். சக்கரவர்த்திகள் ஐயம் பெருகிவிட்டது. ‘தன் வாழ்நாளில் சிற்பி இந்த இராஜராஜேஸ்வரம் அமைத்ததுடன் நிற்க வேண்டும். அதுவே நியாயம்... நாம் விரும்புவதும் கூட’ என்று என்னிடமே சொன்னார். இதனால் சிற்பியார் சிந்தை நொந்தார். கலைஞன் கையைக் கட்டிப் போடுவது நியாயமில்லை என்றார். ஆனால் மற்றவர்கள் அச்சத்தால் சிற்பியாரை நாடவில்லை. எனவே அவர் மனம் நொந்து செய்த முடிவை நீங்களே அறிவீர்” என்று பிரம்மமாராயர் கூறியதும், “ஆம். நன்றாக அறிவேன். ஆனால் நாளிதுவரை அவர் சிங்களத்தில் இருப்பதாகவே நம்பியிருந்தேன்.”

     “இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது நீங்கள் திக்விஜயம் புறப்பட்டக் காலத்திற்குச் சற்றே ஏறத்தாழ உட்பட்டக் காலத்தில் அவர் தமது பதினாறு வயது மகனுடன் சென்றுவிட்டாராம். இலங்கையர் கோன் எவ்வளவோ வேண்டியும் அவர் தங்க விரும்பவில்லையாம்.”

     “காரணம் ஏதாவது தெரிந்ததா?”

     “இதுவரை தெரியவில்லை...”

     மீண்டும் ஒருமுறை நீண்ட பெருமூச்சுவிட்ட மன்னர் பயணத்தைத் தொடங்க தம் குதிரை மீது ஏறினார். இன்னும் ஒரே கல்தான் எண்ணாயிரம் என்னும் சிற்றூர். அங்குதான் வைணவப் பெரியார் நாதமுனி அவர்கள் சோழனைச் சந்தித்து ஆசி கூறக் காத்திருக்கிறார் என்பதைத் தமது பேரமைச்சர் மூலம் அறிந்தான் பரகேசரி.

     ‘இனியும் பெரியவர்களைத் தாமதிக்கும்படி செய்யக் கூடாது. சிவாசாரியார் வைணவாசாரியார் இருவரும் நம்மை எதிர்பார்த்து இருப்பதென்றால்... தில்லையம்பதிப் பெருமானின், எம்பெருமானின் திருவருளே காரணம்’ என்று கருதிட சோழ மாமன்னன் குதிரையை விரட்டினான்.

     வழியெல்லாம் திரள் திரளாக மக்கள் அணிவகுத்த மாதிரி குழுமியிருந்தனர். தொண்டை நாட்டுச் சான்றோர் யாவரும் “கங்கைகொண்ட சோழ சக்கரவர்த்திகளே வருக! நீவிர் நீடு வாழ்க!” என்று அகமும் முகமும் மலர வரவேற்று அமோகமாக வாழ்த்தியது காணப் பெருமகிழ்வு கொண்டான். தண்டமிழ் நாட்டில் காலடி எடுத்து வைத்தது முதல் சோழன் மனதில் பெரும் மகிழ்ச்சியுணர்வும் பெருமிதமும் உண்டானாலும் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒரு சிறு கிலேசம் ஏன் தோன்றுகிறது? பிரம்மமாராயர் தனக்கு எது மிக அவசரமோ, அவசியமோ அதைத்தான் இப்போதைக்குக் கூறுவார். எனவே பொறுத்திருக்கலாம் என்றெண்ணியபடி நகர்ந்தான்.