ராஜ மோகினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

16

     பாரத நாட்டின் தலைசிறந்த கலைப்பொக்கிஷத்தைத் தன்னகத்தே அமைத்துக் கொண்டுள்ள உலகப் புகழ்பெற்ற காஜுராஹோ, அன்று பாரத நாட்டின் வரலாற்றுப் புகழ் என்னும் உச்சநிலையையும் அடைய வேண்டும் என்று விதி வகுக்கப்பட்டிருந்ததோ என்னவோ! ஆம், அதிசயம் ஒன்று அன்று நடக்கவே செய்தது! ஆக்கத்தின் பிம்பமான ஓர் பேரரசன்- அழிவின் சின்னமான ஒரு அன்னிய அரசன்... சந்திக்கிறார்கள், சந்தித்துப் பேசினார்கள் என்றால் அதுவும் காஜுராஹோவில் என்றால் வரலாற்றுப் புகழ் கொண்ட சிறப்பு நிகழ்ச்சிதானே அது!

     காஜுராஹோவின் ஒரு காத தூரத்தில் உள்ள பேணி சாகர் ஏரி என்னும் குட்டிக் கடல் போன்ற ஒரு பெருந்தடாகம். அதன் கரை மீது தங்குவதற்கு என்று அன்று அதைச் சுற்றி புதிது புதிதாக இருபது முப்பது மாளிகைகள் உருவாகியிருந்தன. கட்டிடக் கலையில் காஜூராஹோவினர் தேர்ந்கவர்களாயிற்றே! அவர்கள் கை வண்ணத்தில் பிரதான மாளிகையில் ஒரு மாபெரும் தர்பார் மண்டபம், அதைச் சுற்றிலும் மிகப்பெரும் பந்தல்... அப்பப்பா! அற்புதம்! அத்தனையும் மாயசிருஷ்டி என்றே கூற வேண்டும்; அப்படிப்பட்ட சிறப்பலங்காரம்!

     ஐந்தாறு நாட்களுக்கு முன்னர் கூட அந்தப் பகுதியில் ஒரே ஒரு மாளிகை தவிர வேறு எதுவுமே இல்லை. ஆனால் அன்று...

     சோழ இராஜேந்திரன் தங்குவதற்கென்று தமது மாபெரும் பேணிசாகர் மாளிகையையே அளித்திருந்தார் காஜுராஹோவின் சந்தேல் வித்யாதர வீரமன்னன். அவனுடைய அருமை நண்பன் அருச்சுனன் காஜுராஹோவின் குதிரைப் படைகளை இரு பெரும் வியூகங்களாக அணிவகுத்து, அங்கு வருகை தரும் மன்னர்களுக்கு எவ்வெவ்வரையில் ராணுவ முறை வரவேற்பு மரியாதைகள் நடத்த வேண்டுமென்பதை அறிந்து அவ்வகையில் பயிற்சியளித்தான்.

     கஜினிக்கு வரவேற்பு மரியாதை எதுவும் கூடாது என்றான் சாந்த்ராய். வித்யாதரன் இதை ஏற்காது சந்திவிக்கிரஹனையும் ருத்திராதித்தியனையும் நாடி ஆலோசனை கேட்டான் அவர்களிடம். ஆனால் சோழ சேனாதிபதிகள் கஜினிக்கு உரிய மரியாதை தராது போனால் நம்மை நாமே அவமதித்துக் கொள்பவர்களாவோம்! என்று கூறிவிட்டனர்.

     இங்கு இத்தகைய ஆலோசனைகள் நடத்திய பொழுது சோழச் சக்கரவர்த்திகள் தனது பிரதம ஆலோசகரான நாகசந்திரனுடன் அந்தரங்கமாக வெகு நேரம் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.

     இடையிடையே அவர் முகம் சற்றே சிந்தனை காரணமாகவோ என்னவோ மாறியிருந்தது. நாகசந்திரன் அங்கு வந்து சேர்ந்தவுடனேயே அறிவித்த செய்தி சோழனைக் கலக்கிவிட்டது.

     “அப்படியானால் இது கவலைக்குரியது இல்லையா?” என்று சக்கரவர்த்திகள் கேட்டதும் நாகசந்திரன் மிகவும் அடக்கமாக, “மன்னிக்க வேண்டும் மாமன்னரே! இராஜாதித்தன் இன்னமும் திரும்பவில்லை என்றால் கவலை கொண்டுவிடுவது என்பதுதான் தவறு என்றேன். அதாவது நமது பிரும்மராயரே கவலையில்லை என்று கூறும்படி சொன்னார்.”

     “நல்லது நாகசந்திரரே! ஆனால் ஒன்பது மாதங்கள் என்றால் அது சிறிய விஷயம் அல்லவே!”

     “உண்மைதான்! சில சமயங்களில் தாங்கள் கூடச் சிறு வயதில் இப்படித்தான்.. இரண்டு ஆண்டுகள் கூடத் திரும்பாமல் இருந்த துண்டு.”

     “சரி சரி! அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஆதித்தன் இன்னும் சிறுவன்தான். பதினெட்டைக் கூட எட்டவில்லை. தவிர அவன் சென்றதோ ஒரே ஒரு சிறு கலத்தில். உடன் கப்பல்கள் எதுவும் இல்லை. கூடச் சென்றவர்கள் நாற்பதோ என்னவோதான்... பிரமராயர் சொன்னது...”

     “ஆம் சக்கரவர்த்திகளே! ஆனால் அவர்கள் மிகத் தேர்ந்த கடலோடிகள்!”

     “இருக்கலாம். ஆனால் கடல் இவர்களை மீறிவிட்டிருந்தால்...”

     “நீங்கள் கவலையால் இப்படிப் பேசுவது...”

     “எனக்குத் தகாது என்றாலும் மனம் கேட்கவில்லை. இதுவரை ஒரு தகவலுமே இல்லையா?”

     “இல்லை. இளவரசன் இராஜராஜன் மூன்று கப்பல்கள் அனுப்பியிருக்கிறான் முன்னூறு பேர்களுடன்.”

     “பரவாயில்லை. நல்ல ஏற்பாடுதான். இவர்கள் போய் எத்தனைக் காலமாயிற்று?”

     “முதல் கப்பல் போய் மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. இரண்டாவது கப்பல் இருபது நாட்களுக்கு முன்னரும், மூன்றாவது சென்ற கப்பல் ஞாயிரன்றும் சென்றுள்ளன. கடற்படை உபதளபதி சேந்தன் மாவலியே போயிருக்கிறார் இம்முறை” என்று நாகசந்திரன் அறிவித்ததும் “ஓ...! அப்படியா? மிகவும் நல்ல ஏற்பாடு. நான் அங்கிருந்தால் என்ன செய்திருப்பேனோ அதையே செய்திருக்கிறான் இராஜாதிராஜன். இதனால் சற்றே கவலை குறைகிறது.”

     “அதுமட்டுமில்லை, இலங்கையர்கோன் தமது கடற்படையை நாலா திசையிலும் அனுப்பியுள்ளார்” என்று அவர் கூறியதும் சோழன் மகிழ்ச்சியுடன், “அப்படியானால் இன்னும் நிம்மதி; மிக்க பயனான ஏற்பாடுகள்... இனியும் கவலை அதிகம் கொள்ளாமல் இங்கு நடக்க வேண்டியதை கவனிப்போம்” என்றான் சோழன்.

     “உத்திரவுக்காகக் காத்திருக்கிறேன்!” என்றான் நாகசந்திரன்.

     “இன்னும் சற்று நேரத்தில் இங்கு கஜினி மன்னன் சுல்தான் முகமது அழைத்து வரப்படுகிறான் நாகரே.”

     “நல்லது. நீங்கள் அவனுடன் பேசுவதற்கு முன்னர் நாங்கள் அவனுடன் பேச வேண்டுமா?”

     “தேவையில்லை. ஏனென்றால் இங்குள்ள எவருமே அவனுடன் பேச விரும்பவில்லை.”

     “அது நியாயமில்லை!”

     “உண்மை. ஆனால் இவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். தங்கள் குற்றம் என்னவென்று இவர்களில் பலருக்கும் புரியவில்லை. அவன் வெற்றிக்கு கொடுமைகளுக்குத் தங்கள் நிலைதான் காரணம் என்பதை இன்னமும் உணராமல் முரண்டு பிடிக்கிறார்கள் இவர்கள் யாவருமே.”

     “எனவே மீண்டும் அவனுக்குத்தான் வெற்றி...”

     “நான் அவனை மீண்டும் இந்நாட்டில் அழிவு வேலைக்காக புறப்பட்டு வராதே என்று பக்குவமான முறையில் கூறலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

     “தங்களுக்குத் தெரியாததல்ல. இதெல்லாம் உங்கள் முடிவே எங்கள் முடிவும். இடையே நான் ஏதாவது செய்ய வேண்டுமா?”

     “அவனுடைய நண்பர்களான அந்த அறிஞர்களைச் சந்தியுங்கள். அவர்களில் சிலர் நம் நாடு வந்தவர்களான உங்கள் நண்பர்கள்தான். புத்திசாலிகள். அவனுடைய மகன் கூட ஓரளவுக்கு நல்லவனாகத்தான் தெரிகிறது” என்று கூறி எழுந்த மன்னரைத் தொடர்ந்து “உத்திரவு!” என்று பதில் அளித்து எழுந்தான் நாகசந்திரன்.

     ஸ்ருதிமான நாகசந்திர தேவன் தங்கள் இருப்பிடம் வருவான் என்று மாமேதை ஆல்பரூனியோ, பேரரறிஞன் ஃபெரிஷ்டாவோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அமீர் அரூன், கஜினியுடன் பேணிக்கரை செல்ல ஆயத்தமான சமயத்தில் அங்கு நாகசந்திரர் வருகை தந்ததும் மகிழ்ச்சி அடைந்து இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடலாகாது என்று முடிவு செய்தனர்.

     “ஹரதத்தனே! கஜினி சுல்தானுக்கு என்னுடைய வணக்கங்கள். அரிய நண்பர்களான ஆல்பரூனிக்கும் ஃபெரிஷ்டாவுக்கும் நல்வணக்கங்கள்” என்றார். பிறகு “உனக்கு எனது பரிபூரண ஆசிகள்!” என்று சிரித்தபடியே கூறியதும் அவன் சட்டெனக் குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினான்.

     அவனை அணைத்தபடி, “ஹரதத்தா, முன் காலத்தில் நடந்த மகாபாரதத்தில் கிருஷ்ண பகவானே பல பல வேஷங்கள் போட நேரிட்டது. அது மாதிரிதான் நீயும்! அவரை நம்பியவர்களுக்கு அவரால் வெற்றி கிடைத்தது. உனக்கும் அப்படியே நடக்கும். முதலில் ஆல்பரூனி, ஃபெரிஷ்டாவைக் கொண்டு வா!” என்றான் நாகசந்திரன்.

     சில விநாடிகளில் அவர்கள் வந்தனர். பரஸ்பர வணக்கங்கள், வாழ்த்துக்கள், நல விசாரணை எல்லாம் முடிந்ததும், “எங்கோ தெற்கே சந்தித்தோம் முன்பு. இப்போது இங்கே... இது எங்கள் பாக்கியம்” என்றார் ஃபெரிஷ்டா.

     ஆல்பரூனி தெற்கே சென்றதில்லை. நாகசந்திரன் ஆப்கனிஸ்தான் சென்றவர் காபூல், பாக்தாத், சமர்கண்ட் ஆகிய இடங்களுக்கு எல்லாம் சென்றவர். ஆல்பரூனியும் அக்காலத்தில் இவருடன் அப்பகுதிகளில் சுற்றியவர்.

     “உங்களை மீண்டும் இங்கே கண்டது ஒரு பேரதிசயம்! இதுவரை நாம் மீண்டும் நம் வாழ்நாளில் சந்திக்க வாய்ப்பில்லை என்றே நினைத்திருந்தேன். அது பொய்யாகிவிட்டது” என்று ஆல்பரூனி பரவசத்துடன் சொன்னதும் “ஆல்பரூனி நானும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மூன்று நாட்களுக்கு முன்னர் எங்கள் சக்கரவர்த்திகள் உத்திரவுப்படி ஓடோடி வந்தேன். கஜினி சுல்தானைப் பார்த்தும் பல காலமாகிவிட்டது!” என்று சொன்னதும் ஃபெரிஷ்டா “இப்போது பிராயம் முதிர்ந்திருந்தாலும் இளவட்டப் பிடிவாதம் போகவில்லை” என்றார் சலிப்புடன்.

     ஆல்பரூனியோ பெருமூச்சுவிட்டுக் கொண்டே, “எனக்கு இந்த ஹிந்துஸ்தானத்துக்கு வரும் போதுதான் மனம் நிம்மதி அடைகிறது. இங்கேயே இருந்து விட்டால் எவ்வளவோ மகிழ்ச்சியாயிருக்கும். ஆனால் விதி எங்களை அழிவுக்குத் துணை வரும்படியல்லவா செய்திருக்கிறது” என்றார்.

     “சாத்தானின் கைப்பாவைகளாகி விட்ட நாம் அழிவுக்குப் பதில் ஆக்கம் உண்டாக்குவது இயலுமா என்ன?” என்றார் ஞானி ஃபெரிஷ்டா.

     நாகச்சந்திரனுக்கு நன்றாகத் தெரியும். இவர்களுக்கெல்லாம் கஜினி முகமதின் நடவடிக்கைகள் பலவும் பிடிக்காது. எனினும் அவனுக்கு எதிராக எதையும் செய்ய விருப்பமில்லை என்ற கடமைப்பற்றுடன் காலமோட்டுபவர்கள். இது கஜினிக்கே தெரியும்.

     ஆயினும் அவன் தன்னைச் சுற்றிலும் எப்போதும் இத்தகைய அறிஞர்களையே வைத்துக் கொண்டிருப்பதில் மிகவும் பிடிவாதமாயிருந்தான். ஆல்பரூனிக்கு விருப்பமில்லை என்று தெரிந்தும் ஒரு கைதி போல உடன் இழுத்துக் கொண்டுதான் வருவான், போவான். ஃபெரிஷ்டா, இடின் ஆஸர், நிஜாமுதீன் போன்றவர்கள் வரலாற்றாசிரியர்கள். ஆதலால் அங்குமிங்குமாக அவனுடன் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அவனுடன் இல்லாத நேரங்களில் இந்த நாட்டில் பல இடங்களில் சுற்றினர். தாங்கள் பார்த்ததை, அறிந்ததை, கேள்விப்பட்டதை யெல்லாம் தொகுத்து எழுதினர். சோழ நாடு, பாண்டிய நாடு எல்லாம் நிஜாமுதின், ஃபெரிஷ்டா ஆகியோர் வந்து போயிருப்பது வரலாற்று உண்மையாகும். எனவே நாகசந்திரனுக்கு இவர்கள் நண்பர்கள் ஆனதில் விந்தை இல்லை. ஆனால் கஜினிக்குக் கூட நாகசந்திரனைத் தெரியும். ஏன்? கொஞ்சம் பிடிக்கவும் பிடிக்கும். நாகசந்திரன் ஆளுக்கு ஏற்றபடி தமது யுக்தி புத்தியான பேச்சுத் திறனை மாற்றிக் கொள்ளும் சாதுரியமுள்ளவர். எனவே தனது திறமையால் கஜினியைக் கூட கவர்ந்ததில் அதிசயமில்லை!

     சுல்தான் கஜினி முகமதுவிடம் எத்தனையோ குண விசேஷங்கள் இருந்த மாதிரி பலதுறை அறிஞர்கள் வெகுவாக ஆதரிப்பதை ஒரு பெருங்குண விசேஷமாகக் கொண்டிருந்தான். அதுவும் முஸ்லீம்களாயிருந்தால் மிகவும் மகிழ்ச்சி அவனுக்கு. அல்லாமல் வேறு சமயத்தினராக இருந்தாலும் விரட்டிவிடமாட்டான். அவர்களிடமிருந்து பல தகவல்களை அறிவான். சிறு வயதிலிருந்தே ஆப்கனிஸ்தானத்துக்கு தெற்கேயுள்ள மலைகளைத் தாண்டி ஏதோ ஒரு பெரும் நாடு இருக்கிறது என்பதையும் அங்கே ஏராள செல்வவளம், அறிவு வளம், கலைவளம், நாகரீக வளமுண்டு என்பதையெல்லாம் இம்மாதிரி அறிஞர்கள் மூலம் அறிந்திருந்தான்.

     ஆனால் இவை யாவினும் நிதிவளம் நிறையப்பெற்ற நாடு என்பதையும், கோயில்கள் பல உண்டு என்றும், அங்குள்ள விக்கிரஹங்களில் அவற்றின் பீடங்களில் ஏராளமான தங்கம், வைரகற்கள் பதித்து வைக்கப்பட்டுள்ளன என்பதையும் கேள்விப்பட்டிருந்தான். தங்கம், வைரம் என்று கூறப்படும் போதெல்லாம் ஏற்பட்ட பேராசை பெருகப் பெருக எப்படியாவது இந்தியாவின் மீது பாய வேண்டும் என்று முடிவு செய்தான். இதன் காரணமாக அவ்வப்போது வந்து போவோரிடம் எல்லாம் இந்துஸ்தான மன்னர்கள் பற்றி விசாரிப்பான். அவர்களிடையே ஒற்றுமையில்லாமல் தகராறுகள் ஏற்படுவதைப் பற்றியெல்லாம் கேள்விப்பட்டு முதலில் சிறு சிறு சமஸ்தானாதிபதிகளைத் தாக்கித் தான் வெற்றி பெற்றால் பெரிய மன்னர்களுக்கும் பயம் தானாகவே ஏற்பட்டுவிடும். பிறகு இந்தப் பயமே போதும்... அவர்கள் மனதில் தோல்வி உணர்வு ஏற்பட்டுவிட. இதற்குப் பிறகு போர் எளிதில் சாதகமாகிவிடும். இப்படித்தான் முன்பு ஒருமுறை கஜினி முகமதின் தந்தையான சபக்திஜின் நாகசந்திரனை விசாரித்தார். அவன் வடநாடு அதாவது இந்துஸ்தானத்தின் வடபகுதி மன்னர்கள் பற்றி அதிகம் தெரியாது என்றும் தான் சோழனின் பிரதிநிதி என்றும் கூறினான். வாலிபப் பிராயத்தை எட்டியிருந்த அமீர் முகமது இதையெல்லாம் நெருங்கி வந்து ஊன்றிக் கவனித்து கேட்டான்.

     “சோழன் என்றால்... அவன் எந்த ஊரான்?” என்று கஜினி கேட்ட போது பதில் சொன்னவன் நாகசந்திரன் இல்லை. பாக்தாதிலிருந்து கஜினி வந்திருந்த கலிபாவின் தூதன்!

     கஜனிக்குத் தூக்கி வாரிப்போட்டது. இந்தக் கலிபாவின் நன்மதிப்புக்கு ஆளாக விரும்பும் தான் அதற்கான அரும்பாடுபடும் போது இந்தச் சோழன் பற்றி தனக்குத் தெரியும் என்று எங்கோ உள்ள அரபு நாட்டிலிருந்து வந்த மாபெரும் பிரதிநிதி பேசுவதென்றால்...

     “நான் கூறுகிறேன் சுல்தான். தமிழ் நாட்டின் அந்தச் சோழன் உலக மாமன்னர்களில் ஒருவன். நம் அரபு நாடுகளின் மதிப்பு மிக்க நண்பன். கலிபாவே மிகவும் மதிக்கும் கிழக்கத்திய வல்லரசன். அவனுடைய நூற்றுக்கணக்கான கப்பல்கள் இன்று மூன்று கடல்களிலும் ஓடுகின்றன! ஸல் அவருக்குப் பூரண ஆசி அருள்வாராக. ஏனெனில் நம் அரபு நாடுகள் அவருடைய வாணிபப் பொருள்களைப் பெறாமற் போனால் நமக்கு பெரிய நஷ்டம். எனவே அவர் வெற்றியும் வளமும் பெற்ற மாமன்னனாயிருப்பது நமக்குத்தான் இலாபம்” என்றான் கலிபாவின் பிரதிநிதி.

     கஜினி திடுக்கிட்டான் இது கேட்டு. தன்னிடம் ஒரு காபீரைப் பற்றி மதிப்புடன் பேசுவதை அவன் விரும்பவில்லை. ஆனால் அவரோ கலிபாவின் தூதர்! கலிபாவே அந்தக் காபீருக்கு நண்பர் என்றால் கேட்கக் கசப்பாகத்தான் இருக்கிறது. என்றாலும் கலிபாவின் பிரதிநிதி உண்மையைத் தவிர வேறு எதுவும் பேசமாட்டார். ஆகவே மேற்கொண்டு அந்தச் சோழனை பற்றிப் பேசாமல் வேறு பேச்சுக்குத் திரும்பினான்.

     ஆனால் கலிபாவின் பிரதிநிதி இதை ஊகித்தவர் போல “சபக்திஜின்! நீங்கள் முதிய பிராயம் எய்தி விட்டீர்கள். ஆனால் அமீர் முகமது, ஒரு நாள் நீ இந்துஸ்தானத்துக்கு எக்காரணங் கொண்டாவது சென்றால் நீதான் அந்நாட்டுக்குச் செல்ல ஆர்வமாயிருக்கிறாயே, அப்படிச் சென்றால் அந்த மாமன்னரைச் சந்தித்து அவருடைய நட்பையும் நீ பெற்றாயானால் அது உனக்குச் சிறப்பு நமக்கு. அதாவது அரபு நாட்டுக்கு பெரும் லாபம். கலிபாவுக்கோ மிக்க மகிழ்ச்சி ஏற்படும். ஒருநாள், அவர் தமது வணக்கத்துக்குரிய மஃப்டி அவர்களையே அந்தச் சோழர் நாட்டுக்கு அனுப்பவிருக்கிறார்.”

     “என்ன... என்ன...? அரபுக்களின் மதிப்புக்குரிய மஃப்டியையா! உண்மைதானா?” என்று வெகுவாகப் பதறிக் கேட்டுவிட்டான்.

     கலிபாவின் தூதர் தமது தாடியை ஒருமுறை நீவி விட்டுக் கொண்டே! “ஏ சுல்தான்... நீ உன்னைச் சற்றே மறந்து இப்படிக் கேட்டதற்கு நாம் ஒருமுறை பொறுக்கிறோம். நாம் இன்று நேரில் வந்து உனக்கு இரு விருதுகளை அளித்ததற்கு நீ காட்டும் நன்றி இதுதானா? யாரைப் பார்த்து உண்மையா? என்று கேட்கிறாய்... எல்லாம் வல்ல எம்பெருமான் பேரன்பிற்குரிய நபிநாயகம் அவர்களின் ஏகப்பிரதிநிதியான என்னைப் பார்த்து இஸ்லாமானவர் அத்தனை பேருடைய வணக்கத்துக்கு உரியவரின் பிரதிநிதியிடம் நீ இவ்வாறு கேட்பது...”

     “மன்னிக்க வேண்டும். கிருபை கூர்ந்து மன்னித்திடுங்கள். என்ன இருந்தாலும் நான் இத்தகைய விஷயங்களில் அனுபவம் பெறாதவன். தவிர ஒரு காபீர் ஆயிற்றே அந்தச் சோழன். அவனைப் போய்... நம்முடைய வணக்கத்துக்குரிய...”

     “ஆம்! சுல்தான்... அவன் முஸ்லீம் அல்ல. ஆனால் நமக்கு மிக அவசியமான நண்பன். அவன் தயவில்லையேல் அரபு நாடுகளின் வர்த்தகமே அற்றுவிடும். நம் மதத்தினை அவன் எதிர்க்கவில்லை. பழிக்கவில்லை, மாறாக அவன் சர்வ சமய நோக்குள்ளவன். நம்மிடம் பிரியமுள்ளவன். மதிப்பவன், மதித்தற்குரியவன். அவரவர்கள் சமயம் அவரவர்கள் சொந்த விஷயம். பிறர் தலையிட உரிமையில்லை. எனவே நமது பொது வாழ்க்கையில் இந்த மதம் குறுக்கிடக் கூடாது என்ற பெரு நோக்குள்ளவன். இது நம் அனைவருக்கும் ஏற்புள்ள கருத்துதான். எனவேதான் அடுத்த ஆண்டோ அல்லது சற்றுத் தாமதித்தோ அவரைச் சந்திக்க கலிபா விரும்புகிறார். இது நிறைவேற ‘ஸல்’ நிச்சயம் துணை புரிவார்” என்று அழுத்தமான குரலில் கூறியதும், சுல்தான் முகமது பாடு பெரும் சங்கடமாகிவிட்டது.

     அன்று அதாவது இந்தச் சந்திப்பு அரபு நாட்டு தூதுவர், நாகசந்திரன் ஆகியவர்களுடன் கஜினி சந்தித்த போது சுல்தான் இந்தியா மீது முதல் முறைகூடப் படையெடுக்கவில்லை. பேராசை மட்டுமிருந்தது. நிஜாமுதீன், ஆல்பரூனி, உல்பி போன்றோர் இந்துஸ்தானத்தின் சிறப்பைக் கூறும் போதெல்லாம், தனது நாட்டு வறிய நிலையை, மக்கள் வாழ்வை, தனது நிலையை எல்லாம் வெகுவாக எண்ணி இனியும் பொறுப்பதற்கில்லை. அந்த நாடு செல்ல வேண்டும். கிடைத்ததை எல்லாம் சுருட்ட வேண்டும் எதிர்ப்படுவதை யெல்லாம் நாசமாக்க வேண்டும். தங்கத்தால் கோயிலாம், விக்கிரஹமாம், தூண்களாம், துரும்புகளாம்! சேச்சே! அனுபவிக்கத் தெரியாத காபீர்கள். சும்மா விடுவதற்கில்லை. என்றெல்லாம் உறுமிக் கொண்டிருந்தான். எனவேதான் வருவார் போவாரிடமெல்லாம், நாகசந்திரன் போன்ற அரசியல் தந்திரிகளிடமெல்லாம் இந்துஸ்தானம் பற்றி வெகு சிரத்தையுடன் அவ்வப்போது விசாரித்துக் கொண்டிருந்தான். வயதும் வளர்ந்தது பேராசையும் வளர்ந்தது.

     ஆனால் மூல்தான், காஷ்மீர், கன்னோசி, ஆஜ்மீர், மதுரா, மாளவம், கூர்ஜரம் என்று தான் எதிர்ப்பட்டனரேயன்றி சோழன் என்பவன் நாளிது வரை சந்திக்கவும், ஏன்... இப்போதுதான் கேள்விப் படுகிறான். அதுவும் அரபு தூதுவனே பாராட்டிப் பேசும் பெரு மன்னன் அவன் என்றால்... ஏன் நிஜாமுதின் மீண்டும் கூறவில்லை. இதுவரை இபுன் ஆஸர் கூறவில்லை. ஏன்? ஏன்?

     தவிர சுல்தான் முகமது சோழனை சில நாட்களில் அதாவது தனது முதல் இந்துஸ்தானப் படையெடுப்பில் அடைந்த வெற்றியால் உண்டான மமதை, காரணமாகவோ என்னவோ மறந்து விட்டான். இன்று ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை நாடி சோழனின் தூதன் வந்த போதுதான் முந்தைய அரபு தூதுவர் கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் தான் முந்தைய சின்ன கஜினி இல்லை. இந்துஸ்தானமே நடுங்கும் தன்னுடைய பேரைக் கேட்டால் என்ற அளவுக்கு பயங்கரனாக வளர்ந்து விட்டவன். எனவே அரபு தூதுவர் முன் போல் அவ்வளவு பெருமை பேசமாட்டார். அந்தச் சோழனைப் பற்றி என்றும் இறுமாப்புடன் நினைத்தான்.

     ஆனால் காஜுராஹோவுக்குத் தன்னைக் கொண்டு வந்துள்ள அமீர் அரூனின் நோக்கம்தான் என்ன என்பது இன்னமும் மூடுமந்திரமாயிருக்கும் நேரத்தில் இந்த நாகசந்திரன் அவன் எதிரில் வந்து குதித்தால்... மீண்டும் சோழன் நினைவு எப்படி எழாமலிருக்கும்.

     ‘இந்த நாகசந்தர் அந்தச் சோழனை சேர்ந்தவனாயிற்றே!’ என்று எண்ணியபடி அவனை வரவேற்றான்.

     சுல்தானுக்கு பல சலாம்களைப் போட நாகசந்திரன் மறந்துவிடவில்லை.

     “எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன சுல்தான்! நீங்கள் அப்படியேதான் இருக்கிறீர்கள்...” என்று துவக்கினான் தனது உரையாடலை.

     கஜினி திடுக்கிட்டான்!

     இதென்ன? தான் ஒரு மகா பயங்கரனாக, இந்துக்களின் சிம்ம சொப்பனமாக வளர்ந்திருப்பதை இவன் ஏன் இன்றும் அறியவில்லை! என்று குழம்பி விட்டான்.

     ஆனால் நாகசந்திரனுக்குத் தெரியாதா அவன் குழப்பத்தின் காரணம்.

     “இந்துஸ்தானத்தில் இருக்கும் தங்கங்களை, பொருள்களைக் கொள்ளையடிக்கும் நாசக்காரனான கஜினி என்று என் காதில் ஒரு கேவலச் செய்தி விழுந்ததும் நான் பதறிப் போனேன். இல்லை. இது பொய்... இருக்கவே இருக்காது. நான் அறிந்த கஜினியின் இளம் சுல்தான் இம்மாதிரி அக்கிரமங்களை செய்பவர் அல்ல! வேறு எவனோ ஒருவன் அவர் பேரை மாசுபடுத்தவே இவ்வாறு செய்கிறான்... என்று சொன்னேன். சிரிக்கிறார்கள் சுல்தான்! சிரிக்கிறார்கள்! தயவு செய்து நீங்களே சொல்லுங்கள் உண்மையை! இது அபாண்டம். உண்மையான இஸ்லாமியனான நான் அவ்வாறெல்லாம் செய்பவனில்லை என்று அடித்துச் சொல்லி அந்தக் கயவர்களைப் பொய்யர்களாக்கி விடுங்கள்!” என்று அடுத்த கணையைத் தொடுத்ததும் கஜினி ஆடிப் போய் விட்டான்.

     இதென்ன விபரீதம்! தன்னை என்னதான் செய்யச் சொல்லுகிறான் இவன்... நாகச்சந்திரனும் ஒரு சைத்தான் ஆகிவிட்டானே.

     “இதோ பாருங்கள் சுல்தான்! நீங்கள் பேசாமலிருக்க... இருக்க என் மனம் என்னவோ சங்கடப்படுகிறது. அறிஞர் ஆல்பரூனி, மேதை ஃபெரிஷ்டா, நிஜாமுதீன், உட்பி, இபுன், ஆல் ஆஸர் ஆகிய பல புத்திமான்களை ஆலோசகர்களாக்கிக் கொண்டு செயல்படும் நீங்கள் சோமநாதபுரம் கோயிலையே அழித்தவர், விக்கிரஹம்சனை உடைத்தவர் என்றால் அதை நான் நம்ப முடியுமா? கேவலம் அந்தப் பொருள்களுக்காக நாசகாரனாக மாறிவிட்டவர் நீங்கள் என்றால், என்னால் எப்படி நம்ப முடியும்? உண்மையிலேயே உங்களுக்கு நிறையப் பொருள்கள் தேவையானால், தங்கம் தேவையானால். நவநிதிகள் தேவையானால், நவதானியங்கள் அல்லது உணவுப் பொருள்கள் தேவையானால் இதோ இப்போதே உத்தரவிடுங்கள்... எங்கள் சோழ மாமன்னரிடமிருந்து கப்பல் கப்பலாகக் கொண்டு குவித்து விடுகிறேன். நீங்கள் பிச்சையெடுப்பதாகப் பொருள் இல்லை இதற்கு. எங்களிடம் நிறைய இருக்கிறது. உங்களிடம் இல்லை. எனவே கேட்கிறீர்கள்! அவர் கொடுக்கிறார். அவ்வளவுதான்! இதில் கெஞ்சல் கொள்ளை இல்லை, வம்பில்லை. தன்மானப் பிரச்னை இல்லை. சென்ற மாதம்தான் அரபு நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் கஷ்டத்தைத் தீர்க்க நாற்பது வங்கங்கள் நிறைய ஏராளமாக பொருள்கள் சென்றன!” என்று கூறி முடிப்பதற்குள் பதறி எழுந்தான் சுல்தான் முகமது.

     “என்ன? அரபு நாட்டுக்கா? பாக்தாத்துக்கா? கலிபாவிடமா? உண்மையாகவா” என்று கத்திவிட்டான்.

     ஆனால் நாகசந்திரன் பதறிவிடவில்லை. அரசியல் சதுரணான அவன் தேர்ந்த ராஜரீக நடிகன் இல்லையா?

     “சுல்தான் சாஹேப், முன்னர் ஒருமுறை அதாவது நீங்கள் அப்போது உங்கள் வார்த்தைப்படி உலக அனுபவம் இல்லாதவர். ஆனால் இம்மாதிரி உண்மையா? என்று ஒரு கேள்வியை அரபு தூதுவரிடம் போட்டுவிட்டுப் பிறகு பாவம்! பெரிதும் வருந்தி மன்னிப்புக் கேட்டீர்கள். பரவாயில்லை! என்னிடம் நீங்கள் எதுவும் கேட்கத் தேவையில்லை. ஆனால் முன்பு கலிபாவின் தூதர்தான் எங்களிடம் வந்தார். இப்போது அவரிடம் அந்தக் கலிபாவின் மகனே வந்திருக்கிறார் சோழரிடம் என்பதை அறிந்தால்...”

     “ஓ...! ஓ...!” என்று இரைந்து பேய் போலக் கத்தினான் கஜினி. “என்ன உளறல் இது? ஏ...! சைத்தான் நாக்சந்தர்... உனக்கு என்ன பைத்தியமா...? எங்கள் கலிபாவின் கால் தூசுக்குக் கூட...” என்று மேலே ஏதோ ஆத்திரத்துடன் கூற இருந்தவன் காதில்...

     “கஜினி!” என்று ஒரு சிம்ம கர்ஜனை விழுந்ததும் சட்டென வாய்மூடி சப்த நாடியும் ஒடுங்கிப் போய் அப்படியே சிலையாக நின்றுவிட்டான் அவன்.

     ஏனெனில் அவன் எதிரில் அரபு நாட்டின் மாபெருந் தலைவனான மஃப்டியே வந்து கொண்டிருந்தார்.

     “ஏ... சுல்தான்! உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? ஏன் இப்படி உளறிக் கொட்டினாய்? யாரை யார் கால் தூசுக்கு என்று ஏசினாய்? நீ வந்திருக்கும் இடம் நாம் வந்துள்ள இடம் அசாதாரணமான இடம்... கீழை உலகத்தின் சூரியன் அருகில் நாம் வந்திருக்கிறோம். ஜாக்கிரதை! அந்தச் சூரியன் தன்னை அன்பு என்ற திரையால் மூடிக்கொண்டு நம்மை பொசுக்கி விடாமல் இருக்கிறது. அது புரியாமல் ஏன் இப்படி உளறுகிறாய்? பெரியவர்களிடம் வணக்கமாயிரு. நண்பர்களிடத்தில் அன்பாயிரு. நல்லவர்களிடத்தில் நம்பிக்கையாயிரு என்று நம் பெரியவர்கள் கூறியதை மறந்து விட்டாயா? இதற்காகாவா உனக்கு நாங்கள் யாமீர் உத்தௌலாவும், அமீர் உத்தௌலாவும் அளித்தோம்? இஸ்லாத்தைக் காப்பதென்றால் கோயில்களை இடிப்பது, அப்பாவிகளை அழிப்பது, விக்கிரஹங்களை உடைப்பது, நல்லவர்களை ஏசுவது மட்டுந்தான் என்று நீ நினைத்தால் அது நீ உனக்கே தீமையைத் தேடிக் கொள்ளுவதில்தான் முடியும். காபீர்களை நாம் ஏற்பதற்கில்லை. எனவே அவர்களை நாம் ஒதுக்கி விடுவோம் அல்லது நாம் ஒதுங்கி விடுவோம் என்பதுதான் நியாயம். மாறாக காபீர்களிலும் நல்லவர்கள் இருக்க முடியும் என்பதை மறந்து விட்டால் அது நம்மை நாமே அவமதித்துக் கொள்ளுவதாகும். மீண்டும் இத்தகைய எண்ணத்தைக் கொள்ளாதே. இன்னும் சற்று நேரத்தில் நீ அதுமட்டும் மேன்மைக்குரிய கலிபாவின் திருமகனாரைச் சந்திக்கும் போது இம்மாதிரி யெல்லாம் பிதற்றி உளராமல் மிகமிக எச்சரிக்கையாயிரு...” என்று படபடவென்று சினங்கொண்ட வார்த்தைகளைக் கூறிவிட்டுச் சட்டெனக் குதிரை ஏறிச் சென்றுவிட்டார்.

     சுல்தான் முகமது இடிந்து போய் இன்னும் கூடச் சிலையாகவே நின்றான்! மஃப்டி வந்த போது அவரை வணங்க மறந்தது, திரும்பும் போதும் வணங்கி வழியனுப்ப மறந்தது தன்னை எல்லோரும் ஆம்! பேரறிஞர்களானஃபெரிஷ்டா, ஆல்பரூனி, இபுன் ஆல், அமீர் அரூன், மகன் மசூத் ஆகிய அனைவரும் அதிர்ச்சியடைந்து நின்றவர்களாய்ப் பார்ப்பாதையும் கூட அவன் கவனிக்கவில்லை.

     கலிபாவின் திருக்குமாரன் வந்திருக்கிறார்...

     ‘இது என்ன கனவா? அல்லது நினைவா...? அல்லது உண்மையாகவே நிகழ்ந்திருக்கிறதா?’

     அமீர் அரூன் நெடுநேரம் பேசாமலிருக்க முடியாமல் “சுல்தான் சாஹேப்.. நாம் புறப்படும் நேரத்தில் இதெல்லாம் தடைகள் போல நம்மைத் தாமதிக்கச் செய்துவிட்டன. இனியும் காலம் தாழ்த்தாமல் புறப்படுவோம்” என்று கூறினான்.

     கஜினி திடீரென்று விழிப்படைந்தவனாய், “நாம்... நாம்... எங்கே போகிறோம் அமீர்?” என்று பரபரத்துக் கேட்டான்.

     “போன பிறகு தெரியும் சுல்தான்” என்றான் அடக்கமாக ஆனால் அழுத்தமாக.

     “அதெல்லாம் முடியாது அமீர். நீ எங்கே வேண்டுமானாலும் அழைத்துப் போ! வரத்தயார். ஆனால் நான் முதலில் நாம் மேன்மைக்குரிய கலிபாவின் திருக்குமாரனைச் சந்திக்க வேண்டும். எனவே அவரை வணங்கி வழிபட்டு நம் மரியாதையைச் செலுத்திய பிறகுதான் நீ அழைக்கும் இடத்துக்குப் புறப்பட முடியும். மசூத்... முதலில் நீ அதற்கு ஏற்பாடு செய். என் அன்புக்குரிய அறிஞர் பெருமக்களே... நாம் இனியும் தாமதிக்காமல் அவர்களைப் போய்க் காண்போம். நம்மை மதித்து அவர்கள் இந்த இந்துஸ்தானத்துக்கு வந்திருக்கிறார்கள். அது பெருமைக்குரியது. ஸல் அவர்களின் நற்கருணையினால் நமக்குக் கிடைத்துள்ள பாக்கியம் இது. அமீர் அரூன், முதலில் எங்கள் கடமையைச் செய்யவிடுவது உன்னுடைய கடமை” என்று பரவச உணர்ச்சியுடன் கூறியதும்,

     ஃபெரிஷ்டா நிதானமாக “சுல்தான் சாஹேப், நாம் அவர்களைச் சந்திக்கத்தான் புறப்படுகிறோம். ஏனெனில் அவர்கள் கீழ் உலகச் சூரியனைச் சந்திக்க வந்திருக்கிறார்கள்” என்றார்.

     சுல்தான் திடீரென்று வாய்விட்டுக் கடகடவெனச் சிரித்தான்.

     “அறிஞரே! நீங்கள் மதிப்புக்குரிய மஃப்ட்டியவர்களின் உரையின் கருத்தினைப் புரிந்து கொள்ளவில்லை. சூரியனிடம் யாராவது போக முடியுமா? பூமத்தியரேகையின் அருகே நாம் இராமல் இந்தப் பகுதிக்கு வந்திருப்பதை குறிக்கவே சூரியன் நம் அருகே வந்திருப்பதாக அவர் சிலேடையாகக் குறிப்பிட்டார். இது புரியவில்லையா உமக்கு!” என்று சற்றே ஏளனங் கலந்த குரலில் கேட்டதும்,

     ஆல்பரூனி “சுல்தான், நீங்கள் இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் பிரத்தியட்ச உண்மையை அறிய உங்களால் முடியாது. அவர் வந்ததும், விளக்கமாக யாரைப் பற்றி பேசினார் என்பதையும் கூட புரியாத நிலையில் தன்னைப் பற்றியே நினைத்துத் தற்பெருமை கொள்ளும் உங்கள் கண்கள் இன்னமும் திறக்கப்படாமலிருப்பதில் விந்தையில்லை. ஆனால் எங்களையும் கண்களை மூடிக் கொள்ளச் சொல்லுகிறீர்களே... அதுதான் வித்தை!” என்று வெறுப்புடன் வார்த்தைகளை உதிர்த்தும் கஜினி அவரை ஆத்திரத்துடன் நோக்கினான்.

     ஆனால் மசூத் குறுக்கிட்டான் சட்டென்று.

     “தந்தையே! இதோ நாம் புறப்படுகிறோம். இனி வாதப் பிரதிவாதங்களுக்கு நேரமில்லை” என்று அவர் கரத்தைப் பிடித்து அழைத்ததும் சுல்தான் சற்றே மகிழ்வு கொண்டார்.

     ‘என்ன இருந்தாலும் தன் மகன் புத்திசாலி, சமய சந்தர்ப்பமறிந்த நல்லப்பிள்ளை’ என்று நினைத்த நினைப்பு காரணமாக அவன் உற்சாகத்துடன் குதிரை ஏறிவிட்டான். மற்றவர்களும் தாமதிக்கவில்லை.

     ஆனால் குதிரையின் வேகத்தைக் காட்டிலும் மனம் பன் மடங்கு வேகமாகத்தானே ஓடும்.

     சுல்தானுக்கு ‘நாளது வரை இந்தக் கீழ்நாடுகள் பற்றி மறந்திருந்த காலீபா இன்று தமது மஃப்டியை தமது திருமகனையே இந்துஸ்தானத்துக்கு அனுப்பியிருக்கிறார் என்றால் சின்னஞ்சிறு கஜினி இந்துஸ்தானத்தில் ஒருமுறையல்ல, இரண்டு முறையல்ல, பதினேழு முறைகள் படையெடுத்து கண்ட வெற்றியை, அடித்த கொள்ளைகளை அழித்த அதிசயங்களை, பொருள்களை, குவித்த சிறப்புக்களை நேரில் காணவே கண்டு மகிழ்ந்து மேலும் சிறப்பு விருதுகளை வழங்கவே இவ்வாறு இருவரையும் அனுப்பியுள்ளார். ஆம்! இது ஒரு தனிப்பெருமை... இதுவரை அரபு நாட்டுக் கலிபாவினால் இந்த அளவுக்கு மதிக்கப் பெற்றவர் தன் ஒருவனைத் தவிர வேறு யார் இருக்க முடியும்!

     மஃப்டி வந்த சமயம் நான் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தது மாபெருந்தவறுதான். ஆனால் அது ஏன் நிகழ்ந்தது? கேவலம் ஒரு காபீரைப் பற்றித் துதிபாடும் இன்னொரு பாபிரியை தான் மதித்துப் பேசியதால்தான்... சே! என்று முதலிலேயே விரட்டியிருந்தால்... சரி சரி! இதெல்லாம் நடக்கட்டும். அப்புறம் அந்த நாகசந்தரை ஒரேயடியாகத் தீர்த்துக் கட்டிவிடலாம். எவனோ... சோழனாம்... கப்பலாம்... வெற்றியாம்... மன்னாதி மன்னனாம்... உம்...’

     “சுல்தான்! இனி நாம் குதிரை மீது செல்லுவதற்கில்லை. இறங்குங்கள்” என்று எவனோ கத்தியதும் தனது கனவுகள் சிதறிவிட்ட வேகத்தில் சட்டென இறங்கினான் முகமது.

     எதிரே பேணிசாகர் ஏரி! அதைச் சுற்றிலும் எத்தனையோ கூடாரங்கள்... மாபெரும் படை அணிகள்... நாலா திசைகளிலும் ஏகக்கூட்டம்.

     கஜினி சுல்தான் முகமது நாளிது வரை இவ்வளவு பெரிய உற்சாகமான மகிழ்ச்சி பொங்கும் கூட்டத்தைக் கண்டதேயில்லை.