உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
ராஜ மோகினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 2 உறையூர் எங்கே? காளிக்கட்டம் எங்கே? முதலாவது தென்னகத்தின் தென்கோடி முனை என்றால் பிந்தையது வடகிழக்குக் கோடியில் தானே உள்ளது. தங்கள் தமிழ் நாட்டின் ஒரு பகுதியைக் காளிக்கட்டத்தில் உருவாக்கி விட்டார்கள். ஆம்! எங்கு போனாலும் தங்கள் நெறியான வாழ்க்கை முறையை மறந்திடாதவர்கள் தமிழ் மக்கள். தன்னுடைய பெரும்படையை கடாரம் வரை நடத்திச் சென்ற திருபுவன சக்கரவர்த்தியான இராஜேந்திர சோழன் முதலில் கொண்ட கவலை இப்போதில்லை. ஐராவதி நதிக் கரையில் இருந்ததை விட நிம்மதியாக ஏன் சற்று ஆனந்தமாகவே இருந்தனர். கங்கை நதி முகத்துவாரத்தில் முதலில் தகராறு செய்த ஒரு சில படையினர் கூட பிறகு மாறிவிட்டனர். சோழச் சக்கரவர்த்தியைப் பொறுத்தவரைப் படையினரிடம் கெடுபிடிகளோ மிதமிஞ்சிய சலுகைகளோ இல்லை. ஒரு தந்தைக்குரிய கண்டிப்பு, ஒரு மகன் தந்தையிடம் எதிர்பார்க்கக் கூடிய சலுகைகள் கொண்ட நடைமுறையைத்தான் இராஜேந்திரன் கையாண்டான். பாலர்கள் அதாவது வங்கத்தின் பெரும் பகுதியில் ஆட்சி நடத்தியவர்கள் கெட்டிக்காரர்கள் மட்டுமில்லை. தங்கள் நாட்டின் மீது எத்தனையோ பேர் படையெடுத்துக் கொடுமைகள் புரிந்தாலும் இந்தத் தமிழர்கள் அப்படிச் செய்து விடவில்லை. மிதிலையில் அவர்கள் அதாவது சோழர்கள் நுழைந்த போதே, அங்கு தனது ஆட்களை ஊடுருவிப் பார்க்க அனுப்பியிருந்தார் மன்னர் மகிபாலர். இந்த ஊடுறுவிகள் சோழப் படைகளின் வீரப் போரையும் மகத்தான வெற்றியையும் நேரில் அறிந்து வந்து கூறியதும் அரசியல் கதாரரான அவர் சோழர்களை எதிர்க்கவில்லை. மாறாக வரவேற்று நேசக்கரம் நீட்டினார். இராஜேந்திரன் முதலில் சற்றே வியந்தாலும் தனது இலக்கான கடாரத்தை வெல்லுவதில் காட்டிய தீவிரத்தில் இவருடைய நேசம் உண்மையா அல்லது இல்லையா என்பதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். மன்னர் மகிபாலருக்கு இது முதல் சலுகை மட்டுமில்லை. வெற்றியும்கூட! ஆயினும் வங்கத்தரசர் வம்பு வேண்டாமென்று வழிவிட்டாரேயன்றி சோழர்களுடன் உறவாடித் தமது படைகளைக் கொடுத்து உதவி செய்து விடவில்லை! எனினும் கடாரம் சென்ற சோழர் தமது பெரும் கடற்படை வலிமை மட்டுமின்றி மிகச்சிறந்த தரைப்படை யொன்றையும் கொண்டு வந்துள்ளார் என்று ஊடுறுவிகள் மூலம் அறிந்ததும் மகிபாலர் திடுக்கிட்டார். எனவே கடாரம் போனவர்கள் வெற்றி பெறுகிறார்களா அல்லது தோல்வியடைகிறார்களா என்று பொறுத்துப் பார்க்க விரும்பினார். தோல்வி கண்டால்தான் தன் நாடு வழியே திரும்பும் போது எஞ்சிய படைகளை இடுப்பொடித்து சிதைத்து விடுவது. மாறாக வெற்றி கண்டால் வம்பு வேண்டாம். நீங்கள் போனால் போதும் என்று வழியனுப்பி வைப்பது. இது அவருடைய முதல் திட்டம். ஆனால் கடற்படை வந்திருக்கிறது என்றால்... தரைப்படையே ஏராளம், தேர்ச்சியோ அபாரம். யானைப்படையோ மிகவும் வலுவானது. குதிரைப் படைகளோ மின்னல் போர் நடத்தும் திறனுள்ளது. எனினும் சோழர்களின் கடற்படைக்கு வேறு எந்தப் படைகளுமே நிகரில்லையே! ‘கீழைக் கடலின் வீரப்படைகள்!’ என்று வரலாறுகளால் போற்றப்படும் சோழர்களின் அந்த சிறந்த கடற்படை வங்கத்தின் எல்லையில் வந்து நிற்கிறதென்றால்... மகிபாலன் உள்ளூரப் பதறினாலும் வெளிக்காட்டாது இனி சோழர்கள் தோல்வி காணமாட்டார்கள். கடாரத்தில் மட்டும் அல்ல, வடநாடு திரும்பியதும் அது புதிய படைகளாகவே இருக்கும். காரணம் சோழர் தம் பெரும் நாவாய்களில் புதிய வீரர்கள் பலர் வந்திருக்கிறார்கள். அவர்கள் கரையில் வர, கடாரம் போன படைகள் கப்பல்களில் ஏறும் என்பதை அறிந்தான் அவன். எனவே இந்த மாறுதல் நிச்சயமாகத் தன்னை, தான் சோழனுடன் போர் செய்ய முடிவு செய்தால் நிச்சயம் தோல்விதான். அதுமட்டும் அல்ல, சோழனுடன் நேசமாக இருந்து பெறக்கூடிய பலன்களும் இல்லாமல் போய்விடும்! தோல்வியால் உண்டாவது நஷ்டம். நம்பினால் அடைவது நல்ல பலன்! எனவே முந்தியதை நீக்கி பிந்தியதை ஏற்போம்! என்று முடிவு செய்தான். இராஜேந்திரன் உண்மையில் இந்த ‘நேசக்கரம்’ நீண்டதுப் பற்றிச் சிந்தியாமலில்லை. ஏனெனில் அவன் கேள்விபட்டிருந்ததெல்லாம் வங்க நாட்டார் வீரர்கள், மிகவும் ரோஷக்காரர்கள், மனத்தளர்ச்சி காட்டாதவர்கள், பிடிவாதம், உணர்ச்சி வசப்படும் குணமும் கொண்டவர்கள் என்றுதான்! ஆனால் மகிபாலன் ஏன் பிணக்கத்துக்குப் பதில் இணக்கம் காட்டினான் என்பதும் வியப்புற்றதும் தவிர மகிபாலன் கோழையும் இல்லை. பயந்தவனும் இல்லை. மிதிலை, கோடலை, கலிங்கம் ஆகிய வெற்றிகள் கண்டவன். வடபாரதத்தை ஆட்டிவைத்த இஸ்லாமியர்கள் கூட மகிபாலனுடன் மோத தயங்கினர். உண்மை இதுவாயிருக்க சோழன் மட்டும் நமக்கிடையே வேண்டாம் பகை, நேசமே தேவை என்று இணக்கமுடன் இருக்க முன்வருவானேன்? இராஜேந்திரன் இவ்வாறெல்லாம் பலவகைகளிலும் சிந்திக்காமலில்லை. ஆனால் மகிபாலன் நாணயமானவன். நட்பு வளர்த்து நயவஞ்சகம் செய்பவனில்லை. நேசம் காட்டி மோசம் செய்பவனில்லை என்பதையும் புரிந்து கொண்டான். எனினும் இந்த உண்மை புரிய ஒன்றல்ல இரண்டல்ல? ஏறத்தாழ முப்பது திங்கள், அதாவது ஆயிரம் நாட்கள் தேவைப்பட்டது. ஆம்! இராஜேந்திர சோழன் எவரையும் இலேசில் நம்பிவிடுபவனில்லை. அதுமட்டுமில்லை. வடபுலம் சென்றிருந்த ஜெகவல்லப தேவனும், திரிபுவன அரை பூபதியும் அப்படியே! ஆனால் சோழப் படையினர் மிகப் பெரும்பாலோர் வங்கத்தின் வாழ்வில் ஏனோ பிடிமானம் கொண்டனர். பலர் அங்கேயே தங்கிவிடவும் விரும்பினர். சோழ நாட்டைப் போன்ற வண்டல் படிந்த ஏராளமான நிலவளம் காரணமா? காவிரியைவிட உருவிலும் நீர் வெள்ளத்திலும் பெரிதான கங்கை காரணமா? அல்லது வங்க அழகிகள் காரணமா என்று புரியவில்லை. சேனாதிபதிகளில் ஒருவரான ஜெகவல்லப தேவன் கன்னட நாட்டினர். ஆஜானுபாகுவான அவர் நல்ல அழகரும் கூட. இவருடைய மகன் இளைஞன். இருபத்திரெண்டு பிராயத்தை எட்டியவன். என்றாலும் மிதிலையிலே ஒரு அழகு மங்கையைக் காந்தர்வ மணம் புரிந்து கொண்டுவிட்டான். இதில் இன்னொரு ரசமான விசேஷமும் உண்டு. அவள் ஒரு அரசகுமாரி. எனவே அந்நாட்டு அரசபீடத்தில் அமரும் உரிமை இவர்களுக்குப் பிறந்த மகனுக்குமுண்டு. ஆனால் எல்லோருக்குமே இத்தகைய பாக்கியம் கிட்டுமா? இராஜேந்திரன் ஓரளவு வெற்றிப் பூரிப்பில் இருந்தாலும் சிறிதளவு கவலை கொள்ளாமலும் இல்லை. தம்முடைய ஒரு சேனாதிபதி மிதிலை மன்னரின் உறவினர். ஆனாலும் இன்னொருவரும் இங்கேயே தங்கி அப்படியாகிவிடுமோ என்ற கவலையில்லை இது. ஏனெனில் மகாசேனாதிபதி திரிபுவனர் நாளதுவரை திருமணமே செய்து கொள்ளாதவர். ஐம்பது பிராயத்தை எட்டிவிட்ட இவர் இனி அம்மாதிரி ‘தவறு’ செய்துவிடுவார் என்ற பயமில்லை. எனினும் மற்ற சேனை வீரர்கள் பற்றி அப்படிச் சொல்லிவிட முடியுமா? சோழ நாட்டிலிருந்து புறப்படும் போது படையனூரில் முக்கால்வாசிப் பேர்களை இளம் வீரர்களாகவே அல்லவா பொறுக்கியெடுத்துள்ளார்! இவர்களில் பலர் இன்றளவும் திருமணம் ஆகாதவர்களாயிற்றே! வெற்றி வேகத்தில் ஊர் திரும்பிய படைகள் விஷயம் ஒரு பிரச்னையில்லை. ஆனால் புதிதாக வந்தவர்கள் அதுவும் கடல் மூலம் வங்கம் வந்து நாளதுவரை எந்த ஒரு போரிலும் ஈடுபடாத, கட்டுவிடாத உடல் அமைப்பும், வலுவும், மிடுக்கும், போர் செய்யும் வேகமும் உள்ள இவர்கள் வங்கத்தில் நிலைக்க முயற்சிக்கிறார்கள் என்றால், அது பெரும் பிரச்னைதானே! ஆம்! சோழ மன்னருக்கு மட்டும் இல்லை. வங்கத்து மகிபாலருக்கும்தான்! இன்னும் கூறப்போனால் வங்க மக்களுக்கும்தான். ஏனெனில் பல பெற்றோர் மகிபால மன்னரிடம் வந்து எங்கள் மகளிர் கதி என்ன? என்று இறைஞ்சி நிற்கும்படியான நிலை வந்த பிறகும் அவரால் எப்படி அலட்சியமாக இருந்துவிட முடியும்? எனவேதான் மகிபாலரே பரபரப்புடன் அவரிடம் வந்ததும் எழுப்பிய பிரச்னையும் சேர்ந்து திருபுவனச் சக்கரவர்த்திகளான இராஜேந்திர சோழனை சற்றே கவலை கொள்ளச் செய்தது. இனி அவ்வளவாகக் கவலை தரும் பிரச்சனைகள் இல்லை என்றிருந்த இராஜேந்திர சோழனின் நிம்மதிக்குப் பதிலாக உண்டான இந்தக் கவலையை ஏனோ பெரிதுபடுத்தவில்லை சேனாபதி ஜெகவல்லபதேவர். ஆயினும் இதை மிகவும் பெரிதுபடுத்திக் கவலைப்பட்டவர்கள் திருபுவன பூபதியும் வங்க மன்னன் மகிபாலனும் என்றால் அதற்குக் காரணம் உண்டு. மகிபாலன் தன் மக்களைப் பற்றி, சோழர்களின் அன்புக்குப் பாத்திரமான தன் நாட்டுப் பெண்களைப் பற்றி, அவர்களின் எதிர்காலக் குழந்தைகளைப் பற்றி, ஆமாம்! இந்தக் கடைசி அம்சம் அவனைப் பெரிதும் கவலைக்கு மட்டும் அல்ல, தனது மந்திரி சபையினருக்கு, எதிர் காலம் பற்றி ஏகப்பட்ட கவலைக்குள்ளாகிவிட்ட எத்தனையோ பெற்றோர்களுக்குப் பதில் கூறும் கடமைக்கும் உள்ளாக்கிவிட்டது! ஒரு காலத்தில் வங்கத்தை ஆண்ட சேனர்கள், இப்போதைய பாலர்கள் ஆகிய இருவம்சத்தினருக்கும், ஆங்காங்கு ஆதரவு நிலவினாலும் மொத்தத்தில் மக்களிடையே பாலர்களுக்குத்தான் பேராதரவு இருந்த காரணத்தால் அவர்கள் இப்போது ஆண்டு வருகின்றனர். ஆனால் இந்தச் ‘சோழர் நிலைப்பு’ பற்றிய பிரச்னையை நாட்டின் மூலப் பிரச்னையாக்கி பாலர் கையாலாகாதவர் என்று பிரசாரம் செய்வதில் குறை வைக்கவில்லை எதிரிகள். எனவே தம்மிடம் மகிபாலன் விளக்கிய நிலை கண்டு உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தான் இராஜேந்திர சோழன். சேனாபதி திருபுவனரோ இந்தச் சோழ-வங்க மக்கள் கலப்புப் பிரச்னை ஒரு பெரிய அறைகூவலாகத் தலையெடுத்துவிடும் என்று கருதினார். இதனால் தம் வீரர்கள் பலர் இங்கே தங்கிவிட்டால் திரும்பு காலில் தம்முடன் காத்திருக்கும் எதிரிகள் போராட துணிந்தால்... துணியமாட்டார்கள் என்பதற்கு என்ன ‘ருசு’ இருக்கிறது! இந்த மகிபாலனே அத்தகைய சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தவன்தானே! தமிழகத்திலிருந்து நமக்கு புதிய படைகளும் வராமலிருந்து கடாரப் போரும் வெற்றி பெறாமல் போயிருந்தால் வங்கத்தில் ‘சோழர்கள் நிலை’ அடியோடு மாறியிருக்கும் அல்லவா? என்றும் சிந்தித்தார். எனவே இந்தப் பிரச்னை கிளம்பும் என்பதை துவக்கத்திலேயே அறிந்து முழுமையாக எதிர்த்தவர் திருபுவனர். ஆனால் ஜெகதேவர் அப்படியே ஏற்பட்டாலும் அங்கே கர்நாடகத்தில் இருப்பதைக் காட்டிலும் இங்கேயே மிதிலையில் தங்கிவிட்டால் என்ன? என்று கேட்டதும் இராஜேந்திரன் தம்மை எதிர் நோக்கி வந்துள்ள இந்தப் பிரச்னை அசாதராணமானது மட்டும் இல்லை, வெறும் போர் நடத்தும் திறமை மட்டும் போதாது என்பதுடன் அரசியல் தந்திரமும் சந்தர்ப்ப சமயோசித யுக்தியும் தேவை என்று முடிவு செய்தான். சோழ மன்னன் இராஜேந்திரனிடம் இந்தத் திறமைகள் யாவும் இல்லாமல் இல்லை. ஆனால் இந்த மலை போன்ற பிரச்னையைச் சமாளிக்க வேறு பல யுக்தி புத்திகளும் தேவைப்பட்டன! எனவேதான் மகிபாலன் நேரில் வந்து தன் நிலை விளக்கி எப்படி இந்தப் பிரச்னையைச் சமாளிப்பது என்று கேட்டதும் உடனடியாகப் பதில் கூறாமல் நீண்ட நேரம் யோசித்தான். மகிபாலனுக்கோ தனது நிலை பற்றியே இவ்வளவு ஆழ்ந்து யோசிக்கிறார் சோழர் என்று கருதிச் சற்றே தெளிவு கொள்ள முயன்றான்! சேனாபதி அரையபூபதி ஒன்று இரண்டு என்று ஆண்டுகள் கூடிவிட்டதால் ஏற்பட்டுவிட்ட ‘அவதி’ இது என்றுதான் கணித்தார் இதை. தம்முடைய வீரர்கள் தவறு எதுவும் செய்திடவில்லை. இதர இடங்களில் போர்க் காலத்தில் தங்குவது போலவே தங்கினரே அன்றி வேறில்லை. ஆனால் காலம் கூடியதால் இளவட்டங்கள் தங்களுடைய இளம் பிராயம் காரணமாக இலக்காகிவிட்ட இடையூறு இது என்றே கருதினார். மற்றும் ஒரு சேனாபதியான வல்லபதேவர், இது தவறல்ல இயற்கை! எனவே இதைப் பெரிய தவறாகக் கருதி தம்மை நாமே கண்டித்துக் கொள்ளுவது அவசியமில்லை என்றார். வங்கத்தின் அழகுக் குமரிகள் தாமாகவே விரும்பித் தமிழ் வீர இளைஞர்களுடன் இணைந்ததால் ஏற்பட்டுள்ளது பெரும் நன்மையே அன்றி இது சிறியப் பிரச்னை கூட இல்லை என்றார். மகிபாலர் இதையல்லாம் மதிப்பீடு செய்து திருப்தி அடைந்துவிட முடியுமா? சோழர் நிலையோ வேறு. கடாரத்தில் வெற்றி கண்ட படைகள் கடல் மூலம் முன்பும் தனித்தே பயணம் செய்து இப்பொழுது திரும்பு காலிலும் அவ்வாறே செய்துள்ளதால் அதன் மூலம் வம்பு இல்லை. புதிய படைகள் கடல் மூலம் வந்ததும் உடன் திரும்ப இயலவில்லை. தவிர வந்த இடத்தில் தங்கள் வீர விளையாட்டான போர் ஒன்றிலாவது ஈடுபடத் துடித்த நெஞ்சங்கள் வங்கத்தில் தங்கியதால் இயல்பாகவே விளைந்திட்டப் பிரச்னை இது. எனவே இதற்கு ஒரு முறையான கூட்டு யோசனைதான் பலன் தரும் என்று முடிவு செய்தே தமது சேனாபதிகள் இருவரையும் வரவழைத்து இருந்தார். எப்பவுமே மதுவினில் மூழ்கி மகிழ்ந்திடும் இராஜாவல்லப தேவன் (ஆனால் போர்க்காலத்தில் ஒரு துளியும் அருந்துவதில்லை) அன்று அந்த மதுவைத் தொடாமலே ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்திருந்தான்! பிரும்மாண்டமான கூடாரத்தின் அலங்கார அறை ஒன்றில் நடு நாயகமாக அமர்ந்திருந்த இராஜேந்திர சோழன் சிந்தனை வயப்பட்டிருந்தாலும் கம்பீரக்களை இழக்கவில்லை. வங்க மன்னன் மகிபாலன் முகத்தில் கவலை, கலக்கம் இரண்டும் களையிட்டிருந்தது. சேனாபதி அரையபூபதி முகத்திலும் ஒரே சிந்தனைக்களை. ஆனால் வல்லபதேவன் முகம் வாடியிருக்கவில்லை. ஏதோ சாதாரண விஷயத்தை இவர்கள் பெரிதாக்குகிறார்கள் என்ற அலட்சிய பாவனை காணப்பட்டது! “மன்னர் மகிபாலர் கவலைப்படுவதில் நியாயம் உண்டு. எனவே அதை பரிகாரிக்கும் கடமையும் நமக்குண்டு” என்று நிதானமாகவும் அழுத்தமாகவும் சோழர் கூறியதும் வல்லபதேவன் திடுக்கிட்டான். ஆனால், அரையர் திடுக்கிடவில்லை. மகிபாலன் முகத்தில் இலேசாக நம்பிக்கை ரேகை படர துவங்கியது. “நமது வீரர்கள் இங்கு வந்தது, தங்கியது இரண்டும் அவசியத்தை முன்னிட்டு நிகழ்ந்திருக்கிறது மாமன்னா” என்றான் வல்லபன். சோழன் அவனை ஒருமுறை ஊன்றிப் பார்த்துவிட்டு, “ஆம் வல்லபரே, நமது வீரர்களில் ஒரு சிலர் மிதிலையில் தங்கியிருந்த விளைவினை இங்கு பலமடங்காகப் பெருக்கி விட்டோம் அல்லவா? அங்கு சிறியதாக எழுந்த பிரச்னை, இங்கு மிகப் பெரியதாக வளர்ந்துவிட்டது. ஒரு சிலர் விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள்தான் அங்கு! உன்னுடைய மகனோ அங்கு ஒருவன்தான். அதுவும் அவன் கொண்ட சம்பந்தமோ அரச குலத்தாரிடம்! எனவே அங்கு பிரச்னை விபரீதமாகவில்லை. இங்கு அப்படியா?” “ஆம் சோழரே! இங்குள்ள பரதவப் பெண்கள் முதல் பெரும் பிரபுக்கள் குலம் வரை, ஏன் எங்கள் அந்தப்புரத்தில் கூடத்தான், இந்தத் தொடர்பு வலுத்துவிட்டது. இதனால்தான் போச்சு, போச்சு! என்று எதிரிகள் புலம்புகிறார்கள். வந்தது ஆபத்து என்று குதிக்கிறார்கள்! எப்பொழுது கிடைக்கும் தங்களுக்கு ஒரு தருணம் அமைதியைக் கெடுத்து ஆட்சியைப் பிடிக்க என்று காத்திருக்கும் எதிரிகளுக்கு இது ஒரு பெரும் சாதனமாகிவிட்டது. ஆம்! சாதனமாக மட்டும் அல்ல, நாட்டிலே கலகம் உண்டாகச் செய்வதற்கான பெரும் காரணமும் ஆகிவிட்டது!” என்றான். மன்னரை இராஜேந்திரன் மறுதலிக்காது தலையாட்டினான். ஏனெனில் வங்க மக்கள் வேகமும், ரோஷமும் உள்ளவர்கள். அவர்களுடைய பரபரப்பும், சுறுசுறுப்பும் அவர்களை ஒரு நொடியும் சும்மா இருக்க விடுவதில்லை. தவிர, நாட்டிலே சேனர்களும் பாலர்களும் முட்டி மோதிக் கொள்வது அண்மையில் குறைந்திருப்பதேன் என்பதும் தெரியும் அவருக்கு. மூன்றாம் வருண சோழ மன்னனும், அவருடைய மாபெரும் வீரப்படைகளும் வங்கத்தில் வந்து தங்கியிருப்பதனால்தான்! முதலில் சில காலமே தங்குவர் சோழர் என்று நம்பிய பாலரின் உள்நாட்டு எதிரிகள் இந்த நீண்ட காலம் தங்கியமைப் பற்றி வெகுவாகக் கலங்கினர். ஆனால் புதியப் பிரச்னை ஒன்று வங்கத்தில், தமிழர் வங்கக் கலப்புக் குழந்தைகள் ‘ஜனனப் பிரச்சினை’ கிளம்பியது கண்டு ஆகா! இதுவும் நமக்கு ஒரு சாதனமே என்று கூறி எழுந்தனர். மக்களில் ஒரு சாரார் தங்கள் நாட்டில் இன்னொரு இனத்தின் ரத்தக் கலப்புள்ள வம்ச விருத்தியா? என்று பதறியதில் விந்தை இல்லை. ஆகவே தமிழர் இந்தப் பரந்த பரத கண்டத்தின் இன்னொரு பகுதி மக்கள்தான், அன்னியர் இல்லை என்ற பேச்சினை அவர்கள் ஏற்கவில்லை. இந்தக் ‘கலப்பு’ ஒரு மாபெரும் கொடுமை என்ற ஆவேசப் பேச்சு அவர்களை ஆவேசம் கொள்ளச் செய்ததில் ஆச்சரியமில்லை. ஏனெனில் உக்கிரமும் ஆவேசமும் கொண்டுவிட்டால் நிதான சிந்தனைக்கு இடமில்லை. நியாய அநியாய ஆராய்ச்சிக்கும் மனநிலை இடமளிக்காது. “மகிபாலரே! இந்த இருபது மாதங்களுக்கு மேல் நமது வீரர் இங்கு தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்!” என்றார் நயமாக. அந்த சுருக்க விளக்கத்தில் இரண்டு கருத்துக்கள் உண்டாவது அனுபவ மிக்க மகிபாலனுக்கு தெரியாமலில்லை. “என்னுடைய எதிரிகள் அன்று என் மீது திடீர்த் தாக்குதலுக்கு இலக்காக ஏற்பாடுகள் செய்தனர். ஆகவேதான் உங்கள் வீரர்களுடன் தங்கும்படி வேண்டினேன். அவர்களும் ஏற்பாடுகளைத் தற்காலிகமாகக் கைவிட்டனர். ஆனால் இப்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு அவர்கள் காரணமில்லை.” “உண்மை பாலரே! நானும் ஊகித்தேன். எனினும் இந்த உண்மை இயற்கைக்கும் பருவத்துக்கும் தெரிவதில்லை. இயற்கை கண்களை மூடச் செய்துவிடும்! பருவம் கருத்தினை மாற்றிவிடும். எனவேதான் ‘இது’ நிகழ்ந்தது. இங்கு மட்டும் அல்ல! எங்கும் எந்த நாட்டிலும் உள்ள பிரச்னைதான்!” “எனக்கும் புரிகிறது மாமன்னரே! ஆனால் இது என் எதிரிகளுக்குப் புரியவில்லை!” “புரியாமலில்லை வங்க மன்னரே! உங்கள் எதிரிகளும் புத்திசாலிகள். நாங்கள் கடந்த இரு மாத காலமாக இங்கு இருப்பது அவர்களுக்குத் தெரியாதா? தெரியும்! எதற்காக தமிழர்கள் இங்கே தங்க வேண்டும் என்று இது நாள் வரை கேட்கவில்லை. உங்கள் நாட்டுப் பெண்கள் பலர் எங்கள் வீரர்களுடன் காந்தர்வ விவாகம் செய்து கொண்டதையும் அவர்கள் அறிவார்கள். ஆனால் அப்பவும் கூடத் தடுக்கவில்லை. ஏதோ வேடிக்கை ஒன்றைப் பார்ப்பதைப் போலக் காத்திருந்துவிட்டு இப்பொழுது பதறுவது என்றால் உள் அந்தரங்கம் வேறு, அதாவது நல்ல நோக்கத்துடன் இல்லை என்பதுதானே!” “ஆம் என்றாலும் அவர்கள் நோக்கம் பற்றிய ஆராய்ச்சி பிறகு. முதலில் நிகழ்ந்துவிட்டதைச் சீர்படுத்துவதே நம்முடைய இப்போதைய பிரச்னை!” “இல்லை அரசே இல்லை! இது பிரச்னையே அல்ல. இயற்கை! அவ்வளவுதான்! தீயும் பஞ்சும் நெருங்கினால் ஏற்படும் விளைவும் இதுவும் ஒன்றே. இல்லை! அது அழிவு. இது ஆக்கல்! உலகம் உண்டானது முதல், மனித இனம் தோன்றியது முதல் இயற்கை நடத்தும் திருவிளையாடல் இது. எனவே நாமே இதை மேலும் பெரிதுபடுத்திப் பெரிய சிக்கலாக்க வேண்டாம் என்பது என் கருத்து” என்றார் சேனாதிபதி வீரவல்லப தேவராயர்! ஏன் இவ்வளவு அலட்சியமாய் பேசுகிறார் அவர் என்று திரிபுவன அரைய பூபதியும் நினைத்தார். பிறகு வாய்விட்டு கேட்டுவிட்டார். “ஏற்கனவே இது சிக்கலாகிவிட்டதில்லையா வல்லபரே?” “இல்லை, மிதிலை மாதிரி இங்கும் மாறுதல் நிகழ வேண்டியதுதான். விருப்பம் உள்ளவர் திரும்பட்டும். ஏனையோர் இங்கே தங்கியிருக்கட்டும். தென்னவரும், வங்க வாசிகளும் இணைந்த ஒரு புது சமூகம் உருவாகட்டும்! அதிலென்ன தவறு? மிதிலையில் உருவாகலாம் என்றால் இங்கும் அப்படியே நடக்கட்டுமே!” என்று அவர் சாதாரணமாகக் கூறியதும் அரைய பூபதி தீயை மிதித்தவர் போல் துள்ளியெழுந்தார்! சோழ மன்னர் முகம் கூட சினத்தாலோ அல்லது திகைப்பினாலோ சற்றே மாறிவிட்டது. என்றாலும் அவர்கள் இருவரும் வாய்விட்டுப் பேசவில்லை. மகிபாலர் மட்டும் சொன்னார். “நீங்கள் இந்தச் சிக்கலைச் சாதாரணமாக நினைத்துவிட்டீர்கள். நீங்களோ அல்லது இன்னொரு மகனான விஜயனோ இது போன்ற சிக்கலில் சிக்கிவிட்டால் என்ன ஆகும் என்பதையும் நினைத்துப் பேச வேண்டும்.” “ஒன்றும் ஆகாது! ஏண்டா மகனே! அவளுடன் நீ வருகிறாயா? அல்லது இங்கேயே தங்கிவிட விரும்புகிறாயா? என்றுதான் கேட்பேனேயன்றி ஒரு பெண்ணை வஞ்சித்துவிட்டு ஓடவிடமாட்டேன். அதற்கு பதில் அவனைப் பலி வாங்கிவிடுவேனேயன்றி விடமாட்டேன்!” என்று முழங்கியதும் அரையர் விழித்தார். மகிபாலனோ பிரம்மை பிடித்த மாதிரி அவரைப் பார்த்தான். ஆயினும் சோழர் அப்படி பார்க்கவில்லை. மற்ற இருவர் போல பதற்றமும் கொள்ளவில்லை. “விஜயன் இந்நாட்டின் மேற்குப்பகுதி அதாவது குடதேசம் சென்றவன் இன்னமும் திரும்பவில்லை!” என்றார் தம் குரலில் ஒரு அலாதி அழுத்தம் கொடுத்து! வல்லபர் சட்டென அரசரைப் பார்த்தார்! பிறகு ஏதோ புதியதொரு நினைவுப் பெற்றவர் போல் “ஆறு மாதங்களுக்கு முன்னே போனவன்...” என்றார் தம் கூற்றை மன்னர் ஒப்ப வேண்டும் என்பது போல! “ஆமாம்! அறுபது உதவிகளுடன் சென்றான். இன்றளவு திரும்பவில்லை. அவர்களில் மூவரே திருப்பியுள்ளனர்.” “அப்படியானால்...” என்று வல்லபர் மிகத் தயக்கத்துடன் கேட்டுவிட்டுத் திருபுவன அரையரைத் திரும்பிப் பார்த்தார். தம்முடைய மெய்க்காவல் படைத்தலைவனைப் பற்றித் தாம்தானே பொறுப்பான பதில் தர வேண்டும் என்று துணிந்த அரைய பூபதி “தங்கள் மகனும் இந்த பெரும் சிக்கலுக்கு ஏற்கனவே இலக்காகி விட்டதாகவே தோன்றுகிறது!” என்றார், உள்ளத்தில் ஏற்பட்டிருந்த பரபரப்பை வெளிக்காட்டாமல். இப்பொழுது உண்மையில் திடுக்கிட்டவர் வல்லப தேவர்தான்! சிறிது நேரம் எதுவுமே பேச இயலாது மற்றவர்களைப் பார்த்துவிட்டு பிறகு சற்றே கண்களை மூடினார். இரண்டே மகன்கள்தான் அவருக்கு. ஆறு பெண்கள் உண்டு என்றாலும் இரண்டு மகன்கள் இவ்வாறு விட்டுவிட்டால்! அவர் புறப்படும் போதே அவருடைய மனைவி சொன்னாள் “நீங்கள் மட்டும் போனால் போதாதா? உங்களுடைய மகன்கள் எதற்கு? அப்படியே இருந்தாலும் ஒருவனை இங்கே விட்டுவிட்டு மற்றொருவனை அழைத்துச் செல்லுங்கள்” என்றாள். வீரவல்லபதேவர் கேட்கவில்லை. “பரகேசரி இராஜேந்திர சோழர் வெறும் சோழ நாட்டு மன்னர் மட்டுமில்லை இன்னும் கூட கங்கர்கள், கதம்பர்கள், சாளுக்கியர்கள், இராஷ்டிர கூடர்கள், கலிங்கர்கள் ஆகிய அத்தனை பேரும் அவர் முன்னே தூசுகள் போலச் சிதறுண்டு விட்டார்கள். அவர் போரை ஒரு வீர விளையாட்டாகக் கருதுகிறாரோ, அல்லது புகழே அவர் தம் இலட்சியமோ தெரியாது. ஆனால் நிகழ்ந்துள்ளது இதுதான். கடந்த பத்து ஆண்டுகளாகக் கடல் கடந்த நாடுகளில் எல்லாம் வானத்தில் பறந்து ஆடிடும் சோழர் கொடி இன்று இந்நாட்டிலும் எல்லாப் பகுதிகளிலும் பறந்திடுவதைப் பார்க்கப் போகிறோம். வடக்கே கங்கை, தெற்கே இலங்கை, மேற்கே மகோதயம், கிழக்கே கடாரம் என்ற விரிந்து பரந்த எல்லைகளில் அவருடைய சாம்ராஜ்யம் உருவாவதைக் காண்கிறேன் நான். அத்தகைய மாமன்னரிடம், வீராதி வீரரிடம் இணைந்து நிற்பது இந்த ஜேகதேவ ஜெயராய வல்லபேந்திர தேவராயன் குலத்துக்குச் சிறப்பு. எனவே இதை நானும் சரி நம் மகன்களும் சரி உதறிவிடுதல் சாத்தியமில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதே வீரர்களின் இலட்சணம்” என்று அழுத்தமாக விளக்கிப் பேசிய பிறகு அவர் மனைவி மறுத்துப் பேசி என்ன பயன்? எனினும் வல்லபர் நினைத்தார்! அன்று மனைவி சொன்னாளே! அப்படியே செய்திருந்தால்... ஒருவனாவது கர்நாடகத்தில் தங்கியிருக்கலாமே.. உம்... அங்கே தங்கி மட்டும் புதிதாக என்ன செய்துவிடப் போகிறான்! இங்காவது லாடதேசத்தில் தன்னுடைய வீரத்தைக் காட்ட வாய்ப்பேற்பட்டது. மன்னரே பாராட்டினார். மனமுவந்து நீங்கள் பாக்கியவான் என்றார் என்னைப் பார்த்து. எனவே அங்கே ஒரு கன்னடச்சியை கட்டிப் பெறுவதை எல்லாம் இங்கே பெறட்டுமே...! அல்லது இங்கேயே இருக்கிறேன் என்றால் உம்... வேறு வழியில்லை... இருந்துவிடட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான். “சோழ மாமன்னரே, ஆறு மாதங்கள் என்றால் சாதாரணமில்லை. எனவே நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். ஜெயதேவன் மிதிலையில் என்றால் இந்த விஜயன் இங்கு நிலைத்திட விரும்பினால் நான் மறுக்கப் போவதில்லை” என்று சொல்லியதும் மாமன்னரே பதறி எழுந்துவிட்டார். “நிதானித்துச் செய்யலாம் எந்த ஒரு முடிவையும்!” என்றார் அவர் தோள் மீது கை வைத்து! “தங்கள் வாக்கை எதிர்க்கவில்லை பரகேசரி! ஒருகால் அப்படி நடக்குமானால் நான் பின் வாங்கப் போவதில்லை!” என்றார் மகிபாலனை உற்றுப்பார்த்துக் கொண்டே வல்லப தேவர்! இன்னும் கனத்து அங்கே நிலவியது மவுனம்தான். |