உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
ராஜ மோகினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 1 கங்கை மாநதியின் எல்லையிலேயே முகாமிட்ட காவிரி நாடன், சற்றே தாமதித்திட முடிவு செய்தான். சேனா வீரர்கள் நாளிதுவரை பட்டுள்ள சிரமத்தின் உச்சகட்டம் இது. எனவே இனியும் அவர்களைச் சோதிக்கக் கூடாது. இளைப்பாறட்டும் என்ற முடிவுடன் மாமன்னன் தனது மெய்க்காவலர் தலைவன் மாவலியரையனை அழைத்ததும், பரபரப்புடன் வந்து சேர்ந்தான் அவன். இந்நேரத்தில் மன்னர் அழைக்கிறார் என்றால், உடனே முகாம் கலையட்டும் புறப்படுங்கள் என்றுதானே பொருள்? எனவே கடந்த சில நாழிகையில் படைத்தலைவர்கள் பலரும் பரிமாறிக் கொண்ட கருத்துக்களைத் தற்போது வெளியிடுவதற்கு இது ஏற்ற நேரம் அல்ல என்ற முடிவுடன் மன்னன் எதிரே பணிவுடன் நின்றான். “மாவலி, நாம் இங்கு பதினைந்து நாட்கள் தங்குகிறோம். படையினர் யாவரும் விடுமுறைக் கால முறைப்படி விருப்பம் போலக் காலமோட்டலாம் என்று அறிவித்துவிடும்படி சேனாபதியிடம் உரைத்துவிட்டு, அவரை இங்கு அனுப்பி வை” என்று சொன்னதும் மாவலி திணறிப் போனான். அடக்கடவுளே என்ற ஒரு வார்த்தை வியப்பால் எழுந்திட முயன்றாலும் அடக்கிக் கொண்டுவிட்டான். மன்னன் அவன் திடுக்கிட்ட நிலையினை அறிந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாது தனது இருக்கையில் மீண்டும் சாய்ந்து கொண்டான். மன்னனை வணங்கிவிட்டுப் புறப்பட்டவன் கூடார வாயிலை எட்டிய போது ஏழெட்டு வீரர்கள் புடைசூழ ஒரு குதிரை வீரன் நிற்பதைக் கண்டு இதென்ன புதிய பிரச்னை என்றெண்ணித் திகைத்தவாறு சில அடிகள் முன்னே நகர்ந்தான் நிதானமாக. “தலைவரே! ஆண் உடையில் ஒரு பெண்” என்று வீரர்களில் ஒருவன் அறிவித்ததும் மேலும் திகைத்தவன், இன்னும் சில அடிகள் முன்னே வந்து சற்றே ஏறிட்டு நோக்கினான் குதிரை மீது அமர்ந்திருந்தவரை. ஆயினும் அந்தக் கூர்மையான பார்வையில் குதிரை வீரன் யார் என்று புரிந்து கொள்ள இயலவில்லை. ஆண் உடை மட்டும் அல்ல. வடபுலத்து வீரர்களுக்கே உரிய ராணுவ உடை, கவசம், வாள், முகம் கூட முழுசாகத் தெரியாதபடி ஒரு முகமூடியும் கூட.. யாராயிருக்கும்? ஒரு பெண், அதுவும் இந்த நட்ட நடுநிசியில் சோழர் முகாம் நாடி வருவதென்றால்... ஏன், எதற்கு...? சற்றே குழம்பிய நிலையில் “நீங்கள் யார்? யாரைப் பார்க்க இந்த நேரத்தில் வந்திருக்கிறீர்கள்?” என்று வடபுலத்து மொழியில் மரியாதைத் தொனியில் கேட்டதும் “நான் சோழச் சக்கரவர்த்திகளைப் பார்க்க வந்திருக்கிறேன். நீங்கள்?” “அவர் தம் மெய்க்காவலன்.” “நல்லது. அவரை நான் உடனே பார்த்திட வேண்டும்.” மாவலி சிறிது நிதானித்தான். தான் யார் என்று இன்னும் அவள் கூறவில்லை. எனினும் தொனி எடுப்பாக, நான் உண்மையாகவே மரியாதைக்குரியவள் என்ற தோரணையில் இருந்ததைக் கவனித்தான். தகுந்த இடத்தைச் சேர்ந்தவளாகவே இருக்க வேண்டும் என்ற முடிவுடன் தன் வீரர்களைப் பார்த்து “நீங்கள் போகலாம்” என்று சொன்னதும் அவர்கள் மேலும் ஒரு நொடி கூடத் தாமதியாது வணங்கிவிட்டு நகர்ந்து விட்டனர். “இப்பொழுது நீங்கள் சொல்லலாம்” என்றான் மிகவும் நயமான குரலில். “நான் வந்த காரணத்தைச் சொல்லிவிட்டேன்” என்று பதில் வந்ததும் மாவலி தனது நிதானக் குரலில் சிறிது உஷ்ணத்தைக் கலந்து “காரணம் தேவையில்லை. நான் மன்னர் தம் மெய்க்காவலன் மாவலி வாணராயன்” என்றான் சிறிது வேகக்குரலில். “நான் யார் என்பதை மன்னரிடம்தான் கூற முடியும்.” “அப்படியானால் நீங்கள் மன்னரைப் பார்ப்பதற்கில்லை. யாரங்கே?” என்று ஒரு குரல் எழுப்பிக் கை தட்டினான். “இவரை அழைத்துச் சென்று எல்லையில் விட்டுத் திரும்புங்கள்” என்று கூறிவிட்டுத் தன் வேலைக்கு அரசர் இட்ட கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டான். அந்த நேரம் வரை குதிரை மீது அமர்ந்தபடியே இருந்த அந்தப் பெண் சட்டென இறங்கி “நீங்கள் மாமன்னர் தம் மெய்க்காவலர் என்ற உரிமையில் என்னைப் பற்றிய விவரங்களை அறிய விரும்புவதில் தவறில்லை. ஆனால் நான் இங்கு வந்தது, மன்னரைக் காண விரும்புவது யாவுமே ஒரு பெரிய இலட்சியத்தைக் கொண்டது. மர்மமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் கொண்டது” என்று சிறிதும் கம்பீரம் குறையாத முறையில் ஆனால் சற்றே பரபரத்துக் கூறியதும், அவன் அவளை ஏறிட்டு நோக்கிவிட்டு, “இங்கு மர்மம் எதுவும் தேவையில்லை” என்றான் மிடுக்கோடு. “பகைவர்கள் பத்துப் பேர் என்னைத் தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.” “அந்தப் பத்துப் பேர்களையும் பிடித்து வைத்திருக்கிறோம்” என்று அவளைச் சூழ்ந்து நின்ற வீரர்களில் ஒருவன் சொன்னதும், “நல்லது” என்றான் மாவலி. ஆனால் “இது நம்ப முடியாத தகவல்” என்று அவள் ஆத்திரத்துடன் குறுக்கிட்டதும் சிறிதும் பதறாத மாவலி “உங்களை யாரும் எதையும் நம்பச் சொல்லவில்லை” என்றான் சிறிதே சினமுற்ற குரலில். “என்னை அவர்கள் பிடிப்பதற்காக வந்திருப்பவர்கள். எவராலும் பிடிக்க முடியாத எத்தர்கள். உங்கள் காவலர் ஏதோ சம்பந்தமில்லாத...” “நிறுத்து! வில்லவா... கொண்டு போகலாம்.” இதற்கு மேல் ஒரு நொடியும் தாமதிக்கவில்லை மாவலி. குதிரை மீதிருந்து இறங்கியவள் தன் அருகில் நின்ற காவலனைப் பார்த்து “உன் மன்னனைக் காண வந்தவள். எல்லையில் உங்கள் வீரர்கள் என் எதிர்ப்பட்டதும் அவர்களுடன் சிறிதும் தகராறு செய்யாமல் கடமைக்காக அடங்கி வந்தவள். இங்கே வந்த பிறகும் நான் கட்டுப்பாடாகவே இருக்க முயலுகிறேன். ஆனால் உங்கள் அரசரின் மெய்க்காவலர் தனது பதவியின் தகுதிக்கு மீறி நடந்து கொண்டு என்னை எல்லை கடத்துமாறு கட்டளையிட்டதை நான் ஏற்பதற்கில்லை. எனவே உங்களில் யாராவது சற்றே புத்தி தெளிந்து என்னை அரசரிடம் கொண்டு போய்விடுங்கள். என் வேலை மிக அவசரம்; மிக முக்கியம். சற்று நேரத்துக்கு முன்பு உங்கள் தலைவனிடம். சொன்ன மாதிரி...” “பொய் இல்லை பெண்ணே. எங்கள் சோழரிடம் பொய் சொல்லித் தப்ப முடியாது. உன்னை நாலா திசையிலும் சுற்றி வந்த பத்துப் பேரும் அதோ அந்தக் கைதிகள் முகாமில் இருக்கிறார்கள்.” “இதை நம்பச் சொல்லுகிறாய்?” “மரியாதை தவறக் கூடாது பெண்ணே! எங்கள் தலைவர் மரியாதையுடன் கேட்ட கேள்விக்கு மரியாதையுடன் பதில் தரத் தவறிய உன்னை நான் மரியாதைக் குறைவாகப் பேசியதற்கு ஒரே காரணம் நீயும் எங்கள் கைதியாக அதோ அந்த முகாமுக்கே போவதால்தான்” என்று அந்தக் காவலன் சர்வ சாதாரணமாகச் சொன்னதும் சட்டென்று வாளின் மீது கை வைத்த அவள் கரம் அங்கே வெறுமையைத்தான் உணர்ந்தது! இது எப்படி? விழித்துப் பார்த்தாள் அவனை. “எங்கள் தலைவர் உன்னை எல்லையில் கொண்டு போய்விடும்படி உத்தரவிட்டார். இரண்டு காரணங்களால் அந்த உத்தரவை மீறி உன்னைக் கைதியாக்கினோம். அவ்வளவுதான்...” என்று சொன்னவன் “உம்...” என்று மட்டும் ஒரு உறுமல் போட்டான். ‘இந்த உறுமல் எதற்கு? தன்னைச் சுற்றிப் பிடிக்க வீரர்களுக்கு உத்திரவா!’ என்று அவள் யோசித்து முடிப்பதற்குள் காவலன் “உம் என்றால் நட என்று பொருள். ஒரு நொடி தாமதித்தாலும் நீ குண்டுக் கட்டாகத் தூக்கிப் போகப்படுவாய்.” “என் மீது யாரும் கைவைக்கக் கூடாது. மீறி வைத்தால் நாளை உங்கள் மன்னர் பதில் கூற வேண்டிவரும். தவிர நீ கூறியபடி அந்தப் பத்துப் பேர்களைக் கைது செய்துவிட்ட விஷயம் உண்மையென்று நான் அறிந்தால் அந்த நொடியே நான் உங்கள் விருப்பப்படி நடந்திடத் தயார்” என்று அவள் சொன்னதும் காவலன் நிதானித்தான். “நல்லது வில்லவா. அழைத்துப் போய்க் காட்டிவிட்டு அழைத்து வா!” என்று ஒரு சன்னக் குரலில் கட்டளை பிறந்ததும் அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். யாரும் இல்லை. “என்னைத் தொடர்ந்து வா பெண்ணே...” வில்லவன் முன்னே நடக்க அவளும் தயங்காமல் நடந்தாள். ஆனால் அடுத்த கால் நாழிகையில் அவள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானாள். ‘இது எப்படிச் சாத்தியமாயிற்று இவர்களுக்கு? அங்கே ஐந்து பெரும் அரசர்களும், அவர்கள் தம் திறன் வாய்ந்த வீரர்களும் கடந்த பல நாட்களாகச் சாதிக்க முடியாத அதிசயத்தை இவர்கள் மட்டும் எப்படிச் சாதித்தார்கள்? தன் தந்தை சாகும் போது சொன்ன மாதிரி இந்தச் சோழர்கள் என்ன ஜகஜ்ஜாலக்காரர்களா? இவர்களால் முடியாத காரியமே கிடையாதா? இது ஒன்றே போதுமே நான் இவர்களுடைய சக்தியில் பூரண நம்பிக்கை வைத்து...’ “நாம் திரும்பலாம்!” என்று வில்லவனிடமிருந்து எழுந்த சொற்கள் அவளை யந்திரக் கதியில் இயங்கச் செய்தது. ‘இப்போதாவது நம்புகிறாயா என்று கேட்டிருந்தால் தன் ஊகம் தவறிவிட்டது என்று கூறலாம்’ என்று நினைத்தவள் எதுவுமே நடவாத ரீதியில் ஏதோ சர்வ சாதாரணமாகத் ‘திரும்பலாம்’ என்று கூறியது தன்னை அவமதிப்பதாகவே தோன்றியது. “வில்லவா, இந்தப் பெண்ணை இன்றிரவு வேளப் பெண்களின் பாதுகாப்பில் வைத்திருந்து நாளை படைத்தலைவர் முன்னே கொண்டு நிறுத்து” என்ற கட்டளை பிறந்ததும் அவள் வெகுவாக ஆடிப் போய்விட்டாள். ‘இனியும் தான் யார் என்று கூறாவிட்டால் இவர்கள்... ஆனால் எங்கிருந்து யார் கட்டளை பிறப்பிக்கின்றார் என்று தெரியவில்லையே...’ “காவலனே, நான் யார் என்பதை உங்கள் அரசருக்கு...” “தேவையில்லை. நீ யார் என்று தெரியும். சொன்னபடி நடக்கட்டும்” என்று அதே குரல் கேட்டதும் “அப்படியா? நாளை நீயே இதற்குப் பதில் சொல்ல வேண்டி வரும். நான் யார் என்பது உங்கள் மன்னருக்குத் தெரிந்ததும் உங்கள் நிலை உங்கள் தலைவர் நிலையெல்லாம் கீழாகிவிடும்” என்று கோபக் குரலில் கூறியவள் வேறு வழியின்றி அவன் பின்னே நடந்தாள். சோழர்கள் மாயக்கள்ளர்கள்! என் இடைவாளை நானே அறியாமல்... பற்களைக் கடிக்கத்தான் முடிந்தது. அடுத்த நொடித் தன்னைச் சுற்றி ஆண்களுக்குப் பதில் இரண்டு பெண்கள் இருப்பதைக் கண்டு ஆத்திரத்துடன் மட்டுமல்லாது, அலட்சியத்துடனும் நடந்தாள். மறு நாள் காலை தன்னை மெய்க்காவல் தலைவர் எதிரே கொண்டு போய் நிறுத்திவிட்டு அந்தப் பெண்கள் வணங்கி நின்று நகர்ந்ததும் அவள் கீழ் உதட்டைக் கடித்தபடி அவனை ஏறெடுத்துப் பார்த்தாள். வயது அறுபதாவதிருக்கும், என்றாலும் தோற்றமும் பார்வையும், ஆகிருதியும் மிடுக்கும் எடுப்பாகவே இருந்ததால் நாற்பது மதிக்கப்படலாம். ஒரு சாதாரண மெய்க்காவல் தலைவர் ஏதோ தான்தான் இங்கே பெரிய ஆள் என்பது மாதிரி நடந்து கொள்வதென்றால்! ஒருவேளை அந்தப் பத்துக் கள்வர்களைப் பிடித்தத் தற்பெருமை மிதப்பாக இருக்குமோ! இது உண்மைதான் என்றால் தவறில்லை. ஏனென்றால் கடந்த ஒரு மாதத்துக்குள் இவர்களைப் பிடிக்க முயன்ற பலரும் யமனுக்கே இரையாகி விட்டார்கள். ஆனால் இந்தத் தற்பெருமையில் தங்களை ஆழ்த்திக் கொண்டு விட்டார்கள் சோழர்கள் என்றால் அது தன்னுடைய மதிப்பான நம்பிக்கை எதிர்பார்ப்புக்கு ஊக்கமளிக்காது என்றும் நினைத்தாள். “மலையரசன் மகளே! இன்னும் ஒரு நாழிகை நேரத்தில் நீ எங்கள் சக்ரவர்த்திகளைச் சந்திக்கலாம். அதுவரை அதோ அந்தக் கூடாரத்தில் தங்கியிரு” என்று மெய்க்காவல் படைத்தலைவர் மாவலிராயன் சொல்லிவிட்டு அவ்வளவுதான் நீ போகலாம் என்பது போலத் தன் வேலையில் ஆழ்ந்ததைக் கண்ட நங்கை சில நொடிகள் பிரமித்து நின்றாலும் சட்டென்று தெளிந்தவளாய் “நான் இமய நாட்டு அரசகுமாரி என்று நீ அறிந்த பிறகுமா...” “நிறுத்து பெண்ணே, இது என் கடைசி எச்சரிக்கை. திரும்பவும் நீ ஒரு அரசகுமாரி என்ற தகுதி முறைக்கேற்ப நடந்து கொள்ளத் தவறினால், உன் வாயிலிருந்து மரியாதை தவறிய வார்த்தைகள் வருமானால் நீ எந்த நோக்கில் இங்கு வந்தாயோ அது நிறைவேற்றப் படாமல் விரட்டி அடிக்கப்படுவாய் என்பதைத் தெரிந்துகொள்.” மாவலி வார்த்தைகளை முடித்ததும் தன் பக்கம் இரு காவலர் வந்து நிற்பதறிந்ததும் அவள் ‘சே! இவ்வளவுதானா இவர்கள்’ என்று நொந்து போன மனதுடன் நடந்தாள், அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு. அடுத்துக் கொஞ்ச நேரத்தில் சக்கரவர்த்திகளைக் காணலாம் என்று ஒரு காவலன் வந்து அறிவித்ததும் வெறுப்புடன் எழுந்தவள், ஒருமுறை தன்னைப் பார்த்துக் கொண்டாள். சோழர் மாமன்னர் பிராயத்தில் மூப்படைந்தவர் என்பது அவள் அறிந்ததுதான். என்றாலும் தான் ஒரு அரசகுமாரி, பேரழகி. சோழ அரசிகளை விட அழகிலோ அந்தஸ்த்திலோ எந்த விதத்திலும் குறைந்தவளில்லை என்பதை மன்னர் அறிந்திட வேண்டாமா? ஒயிலாக நடந்து மன்னர் தம் இருப்பிடத்தை நெருங்கியவள் அங்கு அதுவரை தான் ஒரு பெண்ணைக் கூடக் கண்டதில்லை என்பதை நினைவுப்படுத்திக் கொண்டதும் ஏன் என்றும் ஏன் இப்படியென்றும் யோசனை எழுந்தது. இவ்வளவு பெரிய அரசன் எவ்வளவு பெண்களை வைத்திருக்க வேண்டும்! இத்தனை வீரர்களும் ஏன் ஒரு பெண் கூட இல்லாது... ஆம் இரவில் மதுவுண்டு களித்த கோஷமும் இல்லை. ஒருவேளை இந்தச் சோழர்கள் குடிப்பது கூடத் தவறு என்றெண்ணும் விசித்திரப் பிறவிகளோ! மதுவும் கூடாது மங்கையும் கூடாது என்றால் இவர்கள் எல்லாம் என்ன வாள் பிடித்த வெறும் சாமியார்களா? பிரும்மாண்டமான முகாம்தான். எத்தனை அலங்காரம்! எவ்வளவு அமைதி! ஒருமுறை சுற்றிலும் பார்த்தவள் எவ்வளவு அழகான திரைச்சீலைகள். இவற்றில்தான் எத்தனை அழகான ஓவியங்கள். நாம் இருப்பது ஒரு கூடாரமா, அல்லது... “பனிமலைப் பாவையே! அப்படி உட்கார்” என்று கம்பீரமான ஒரு குரல் தன்னை நோக்கி வந்ததும் திரும்பியவள் அங்கு ஆஜானபாகுவான ஒரு கம்பீரப் புருஷன் நிற்பதைக் கண்டு, இவர் சோழராகத்தான் இருக்க வேண்டும் என்றெண்ணி வடபுலத்தார் வகைமுறையில் வணங்கியதும் “நல்லது. அப்படி அமர்ந்து நீ வந்த நோக்கத்தை விளக்கிச் சொல்லலாம்” என்றார் சோழர். பாவை இன்னமும் உட்காராமல் “தாங்கள் நிற்கும் போது நான் மட்டும்...” என்று இழுத்தாள். “பரவாயில்லை. மகளாக மதிக்கப்பட்டவள் அதிமரியாதையைக் காட்ட வேண்டியதில்லை” என்று மன்னர் கூறிவிட்டுத் தம் ஆசனத்தில் அமர்ந்ததும் அவளும் அடக்கமாகவே உட்கார்ந்து, “ஆனால் தங்கள் மெய்க்காவலரும் மற்றவர்களும் என்னை ஒரு அரசகுமாரியாகக் கூட மதித்திடவில்லை என்பது...” என்று நீட்டியதும், “தவறு மகளே.. எங்கள் மாவலியார் உன் தந்தை திரிலோசனருக்குள்ள நாட்டின் அளவைப் போல் பத்து மடங்குப் பெரிதான ராஜ்யத்தின் மன்னர்” என்று அவர் புன்னகைத்தபடி கூறியதும் திடுக்கிட்ட அவள், “என்ன, அவர் ஒரு அரசனா? ஒரு அரசனா உங்கள் மெய்க்காவலர்?” அவள் குரலில் பெரும் பதற்றம், நம்பிக்கையின்மை... “நீ வந்த வேலையைக் கவனிப்பது உன்னுடைய முதல் வேலை மகளே! என்னுடைய நேரமும் காலமும் எனக்கு முக்கியம்” என்று மன்னர் அழுத்தமாகச் சொல்லிவிட்டு, “யாரங்கே?” என்று ஒரு குரல் கொடுத்ததும் ஒரு காவலன் வந்து வணங்க “இளங்கோவரையனை உடன் அழைத்து வா” என்று உத்திரவிட்டதும் அவன் சட்டென்று வணங்கி சரேலென்று நகர்ந்துவிட்டான். இங்கு எல்லாமே யந்திரக் கதியில் நடக்கிறது. மனிதர்கள் கூட மாயக்காரர்கள் போல் வருகிறார்கள், போகிறார்கள். நடைச் சத்தம், பேச்சு சத்தம் எதுவுமேயில்ல. அங்கே நம் நாட்டில், பகலாயிருப்பினும் இரவாயிருப்பினும் ஒரே அமளி, அமர்க்களம். மதுவும் மாதரும் ஆட்டமும் பாட்டமும் குடியும் கும்மாளமும். எதிரி தலைவாசலில் வந்து நிற்கும் போதுகூட இப்படித்தானே. அவள் நிமிர்ந்து சோழனைப் பார்த்த போது அவள் கண்கள் கலங்கியிருப்பதையும் இதோ... இதோ என்று கண்ணீர்த் துளிகள் என்று அறிவிப்பதையும் கண்ட மன்னன், “மகளே... திரிலோசனன் மகள் ஏங்கும்படி என்ன நடந்தது...?” என்று மிக நயமுடன் அனுதாபக் குரலில் மன்னன் கேட்டதும் அவள் விம்மி வெடிக்க அதைத் தடுக்க இயலாது கோவென்று அழுதேவிட்டாள். இப்போது மன்னன் அவள் அருகே வந்து மிருதுவாக அவள் தலை மீது தன் வலக்கரம் வைத்து, “எனக்கு ஓர் அளவு புரிகிறது. திரிலோசனன் இறந்துவிட்டதும் உன் சகோதரர்கள் இருவரும் வேறுபட்டு நாடு கூறு போடப்பட்டதும் தெரியும். ஆனால் உன் சொந்த விஷயத்தில்...” “இல்லை சக்கரவர்த்திகளே, எங்கள் நாடு மட்டும் அல்ல, வடபாரதமே இன்று பல கூறுகளாகச் சிதறிப்போய் எதிரி புகுந்து குதறிக் குலைக்கும்படியான கொடுமை ஒவ்வொரு நாளும் நடக்கின்றது.” “தெரியும் மகளே! அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தவிப்பை அறியாதவர் இன்னமும் இந்தப் பகுதிகளில் சிலர் இருப்பதும் வேதனைக்குரியதுதான். எனினும் அதற்கு நீ என்ன செய்ய முடியும்? எந்தத் துணிச்சலில் நீ தன்னந் தனியாகப் புறப்பட்டு வந்து கஜினியின் வெறி நாய்களால் வேட்டையாடப்படும் மானாகத் தவித்து வந்திருக்கிறாய்? எதற்கம்மா இந்தத் தவிப்பு?” என்று மன்னர் கேட்டதும் குமுறி வெடித்த அவள் சொன்னாள்: “என் நாடு பற்றியெரிகிறது சக்கரவர்த்திகளே!” “புரிகிறது. என்றாலும் நீ என்ன செய்ய முடியும்! வடபாரத மன்னர்கள் சிலர் என்னிடம் வந்து போனதுண்டு. நானும் என்னால் என்ன செய்ய முடியும் என்று வெகுவாக ஆராய்ந்து வருகிறேன். ஆனால் என்னுடைய நட்புக்கரத்தை ‘தலையீடு’ என்ற பேர் கொடுத்துச் சிலர் இங்கு எதிர்க்க முற்பட்டிருப்பதும் வருத்தந் தருகிறது. எனினும் என்னாலியன்றதைச் செய்திடவே முடிவு செய்துள்ளேன். ஆனால் நீ வந்த காரணம் என்ன என்பதைச் சொல்லவில்லையே!” “இல்லை சக்கரவர்த்திகளே. வடபாரத மன்னர்கள் யாவருமே ஒன்று கோழைகளாக இருக்கிறார்கள், அல்லது கோமாளிகளாக இருக்கிறார்கள். சிலர் பயங்கொள்ளிகள். சிலர் சுயநலமிகள். சிலர் மன்னர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள். ஒருமுறையல்ல, இருமுறையல்ல, பதினாறு முறைகள் அந்த மிலேச்சன் இந்நாட்டுக்குள் புகுந்து கோயில்களை இடித்தும், கடவுளர்களைத் தகர்த்தும், மகளிரைக் கெடுத்தும், கொள்ளையடித்தும் கோலாகலப்படுத்தும் போது இவர்கள் தம்மிலே வேறுபட்டு நெல்லிக்காய்களாகக் கிடக்கிறார்கள். ஆனால் சொந்த சுகபோகக் களியாட்டங்களில் ஒரு சிறு குறையுமில்லாமல். மன்னர் என்றாலே மகிழப் பிறந்த மதோன்மத்தர்கள், ஆடம்பர அலங்கோல படாடோபர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவில் மக்களை மறந்து, நாட்டை மறந்து, ஆட்சியை மறந்து அவலங்களாய் வாழ்வதுதான்...” “நிறுத்தம்மா நிறுத்து... என்ன வேகம்... எத்தனை அடுக்கு மொழிகள்... எவ்வளவு கோபம்... பளா பளா... சின்னஞ்சிறுமியான நீ...” “எனக்குப் பதினெட்டு பிராயம் ஆகிவிட்டது சக்கரவர்த்திகளே...” “அப்படியா? திரிலோசனன் மறைவால் உன் திருமணம் கூடத் தடைப்பட்டுவிட்டதா?” “இல்லை சோழர்பிரானே. நான் கன்னியாகவே இருக்கப் போகிறேன். காஷ்மீரத்தின் லட்சதேவி போல திரிகர்த்தத்தின் லட்சதேவியாக விளங்கவே முடிவு செய்திருக்கிறேன்!” “நல்ல விருப்பம்தான். ஆனால் அந்த அரசி தத்ததேவியும்தான் ஆணையிட்டாள். ஆனால் நடந்ததே வேறு.” “நான் அவள் அல்ல.” “இதுவே சரியாக இருக்கட்டும். நமக்குள் இந்த, இது பற்றி விவாதம் தேவையில்லை. உன்னுடைய சகோதரர்கள் இருவரும்...” “ரத்தினபாலன் சுந்தரவனத்துக்குப் போய்விட்டான். சோமபாலன் எதிரியிடம் சிக்கிவிட்டான்.” “ஓகோ.. வித்யாதரன், பீமதேவன், கோவிந்த சந்திரன் எல்லாம் உதவிக்கு வரவில்லையா?” “எங்கள் உதவிக்கு எவருமே வரவில்லை. திரிகர்த்தம் விழுந்ததும் காஷ்மீரத்தைப் பிடித்து அல்லோலகல்லப்படுத்திய அந்த மிலேச்ச கஜினி இப்போது தங்களையெல்லாம் தாக்க வருகிறான் என்பதறிந்து கஜ்ஜுரவனத்தில் கூடி ‘தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டதே! இனி என்ன செய்யலாம்’ என்று ஆலோசிக்கிறார்களாம். ஆமாம், எதிர்த்துப் போரிட அல்ல. ஆலோசிக்கத்தான் அந்தக் கூட்டம்.” “ஓகோ.. அப்படியானால் அவர்கள் என்னிடம்... அதிருக்கட்டும் மோகினி, நீ யார் அனுப்பி இங்கு வந்தாய்?” “நான் அனுப்பி வந்தவள் நான்!” மன்னர் சற்றே முறுவலித்து “சமர்த்தாகப் பேசுகிறாய். ஆனால் உன்னுடைய வரவு ஏதோ நீ ஒருத்திதான் துணிச்சல்காரி! மற்றவர்கள் யாவரும் நேர்மாறானவர்கள் என்று காட்டுகிறதல்லவா?” “சொல்லுவதில் என்ன தயக்கம்? கோழைகள்தான் அத்தனை பேரும்.” “அவசரமும் ஆத்திரமும் இளம் வயதில் சாதாரணம். அதற்கு இரையானால் வாழ்வே நாசம்தான் குமாரி.” “நான் ஒருத்தி நாசமாகத் தயார் சக்கரவர்த்திகளே! தயவு செய்து நீங்களும் மற்றவர்களைப் போல என் அழகு, யௌவனம், சுகபோகம் எல்லாம் பேசிப் புத்தி சொல்லித் திருப்பி அனுப்பினால் சரஸ்வதி என் உயிரைக் காணிக்கையாக ஏற்பாள்.” “ஓகோ... அப்படியானால் இந்த வீரப்பேச்சு எல்லாம் அந்தத் தற்கொலைக்கு முன்னோட்டம்தானா?” “இல்லை. எனது கோரிக்கையை நீங்கள் ஏற்பதாயிருந்தால் நான்...” “பதறாமல் பேசு பெண்ணே. உன் கோரிக்கை என்ன என்று நான் பலமுறை கேட்டும் நீ பதில் கூறாமல் விம்மி வெடித்துப் பிறரை ஏசிப் பேசிப் பொழுதைப் போக்கினால்?” “இங்கு வங்கத்திலும் கடல் கடந்த நாடுகளிலும்தான் சோழர் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்பதில்லை. இங்கே கூட வடபாரதத்திலும் காஷ்மீரம் வரையிலும் கூட அது சாத்தியம்! அதாவது நீங்கள் மனம் வைத்தால்...” சோழன் இது கேட்டதும் “பளா பளா” என்று கூறிவிட்டு கலகலவென்று இரைந்து சிரித்ததும் நெஞ்சங்குமுறிய சின வேகத்துடன் ராஜமோகினி “எங்கள் அவல நிலை கண்டு நீங்களே... தென்னகத்தின் மாபெரும் வல்லரசரான நீங்களே சிரித்தால் நான் என்ன சொல்ல முடியும்? எங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்” என்று வீரிட்டுக் கத்தியதும், சோழன் “பெண்ணே, நான் சிரித்தது உன் கோரிக்கையைப் பற்றியதல்ல. என்னைப் பற்றி நீ சொன்னாயே, அந்த விசித்திரமான விளக்கத்துக்காக. நீ என்னுடைய நண்பன் மகள் என்பதால் இந்த விளக்கத்தைக் கேட்டு சினப்பதற்கு பதில் சிரித்தேன். ஏன் என்றால் நீ இன்னமும் ஒரு சிறுமி” என்ற அயர்ச்சியுடன் கூறிவிட்டு நிழல் போன்று சற்றுத் தொலைவில் நின்றிருந்த சேனாதிபதியைப் பார்த்து, “பேரையரே, நான் உங்களுடன் இளங்கோவையும் எதிர் பார்த்தேன்” என்றார் சட்டென்று திரும்பிப் பார்த்து. “இதோ நானும் இருக்கிறேன் சோழ வேந்தரே!” “ஓ! நல்லது இளங்கோ.. இந்தப் பெண் நிகழ்த்திட்ட உரை, நம்மைப் பற்றிய விளக்கம் இரண்டையும் கேட்டீர்களா இருவரும்?” “ஆம், சக்கரவர்த்திகளே. திரிகர்த்தாதிபதியின் மகளான இவள், எனக்கும் மகள்தானே?” என்று சேனாதிபதி கேட்டுவிட்டு அந்தப் பெண் அருகே சென்று, “மகளே, கடந்த மூன்றாண்டு காலமாக நாங்கள் ‘பெண்’ என்ற ஒரு பிராணியை எங்கள் முகாம்களில் கண்டதுமில்லை, அனுமதித்ததுமில்லை. எனினும் அனுமதித்தோம். காரணம் உன்னைத் துரத்திக் கொண்டு வந்த பத்து வல்லூறுகளிடமிருந்து நீ மிகத் தந்திரமாகத் தப்பித்து வந்ததற்காக ஆண்டவனுக்கு நன்றி. நீ அரசரிடம் ஏதோ சொல்ல வேண்டும், அது மிக அவசரம், முக்கியம் என்று நீ கருதி இங்கு படாதபாடுபட்டு வந்திருப்பதால், அனுமதித்துள்ளோம். புரிகிறதா? எனவே தேவையில்லாததைப் பேசி எங்கள் நேரத்தை வீணாக்காதே. நல்லெண்ணத்தைச் சோதிக்காதே” என்று சேனாதிபதி கூறியதும் அவரை ஊன்றி நோக்கிய அவள் “நான் தவறாக எதையும் சொல்லவில்லையே!” “தவறு வேறு. தேவையற்ற விஷயம் வேறு. நீ முன்னதைக் கூறவில்லை. பின்னதை விளக்கினாய்.” “உங்கள் வெற்றிகளைப் பற்றிச் சொன்னது தேவையற்றதா?” “ஆம். நாங்கள் தென்புலத்தார். இதுகாறும் நடத்தியது நப்பு முறைப் பயணமேயன்றி போர் நிகழ்ச்சிகள் அல்ல. எங்களுடன் ஒத்துழைத்தவர்கள், எங்கள் நோக்கம் அறிந்தவர்கள், மறுத்தவர்கள், எங்கள் நோக்கத்தைத் தெளிவாக அறிந்ததும், அதாவது நாங்கள் அவர்களுக்குப் புரியும்படி செய்த ‘முறைகளால்’ புரிந்து கொண்டதும் ஒத்துழைத்தவர்கள், அவ்வளவுதான். ஆனால் இதை ஏதோ போர் நிகழ்ச்சிகள், வெற்றிகள் என்பதெல்லாம் வர்ணிப்பது வரலாறு புனைவோரின் வேலையாக இருக்க வேண்டுமேயன்றி உன் போன்ற இலட்சியவாதிகளுடையதாக இருந்திடக் கூடாது. புரிகிறதா?” “என் லட்சியம் இந்த மண்ணிலிருந்து அந்த மிலேச்சனை விரட்ட வேண்டுமென்பதுதான்.” “அதற்கு எங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள முயலுவதற்குப் பதில் உங்கள் பகுதி மன்னர்கள் ஒரே அணியாக இணைந்து செயல்பட வேண்டும் என்பது உன் தந்தையின் நோக்கம் பெண்ணே!” “என் தந்தை இப்போதில்லை.” “அதற்காக அவருடைய இலட்சியமும் இறந்துவிட்டதாகக் கொள்ளுவது புத்திசாலித்தனமாகாது.” “எங்கள் பகுதி மன்னர்கள் ஒருக்காலும் ஒன்று சேரமாட்டார்கள். சிதறிப் போவதிலேயே குறியாயிருப்பார்கள்.” “முடிந்த முடிவாக இப்படிச் சொல்லுவது நியாயமல்ல. ஒரு சிலர் உன்னுடைய தந்தை திரிலோசனன், பெரிய அண்ணன் ஸ்ரீ பாலன், சின்னவன் சிவபாலனைப் போன்ற...” என்று சேனாதிபதி மிகவும் நிதானமாக நீட்டி நிறுத்தியதும், “என்ன என் சின்னண்ணனா? அவரைப் பற்றி நீங்கள் திடீரென்று ஏன் இப்பொழுது பேச்செடுத்தீர்கள்?” என்று மிகவும் பதறிப் போய்க் கேட்டதும் மாமன்னர் சிறிதும் பதறாமல் “தன் நாட்டைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டிய அவன் தன் தங்கையைப் பற்றிச் சிறிது அதிகமாகக் கவலைப்பட்டு இங்கு ஓடோடி வந்தான் பாவம்...” “அட பரமேசா... பெரிய அண்ணன்தான் சுந்தரவனம் ஓடினான் என்றால் இந்த அண்ணன் என்னை... சேச்சே! என்னைப் பற்றி, ஒரு தூசுக்கும் சமமில்லாத என்னை, எனக்காக...” “இல்லை மோஹினிப் பெண்ணே. உன்னுடைய அண்ணன் நீ ஒரு நொடியில் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் உன்னுடைய புனிதத் தன்மைக் கெட்டிடக் கூடாது என்பதில் கருத்தாயிருந்தான்” என்று சேனாபதி குறுக்கிட்டுக் கூறியதும் அவள் சிரித்துவிட்டாள்! பிறகு அதே நேரத்தில் வார்த்தைகளைத் தீப்பொறிகளாக உதிர்த்தாள். “நம் தாயகம் தன் புனிதமனைத்தும் இழந்து இன்று மாற்றான் காலடியில் குலைந்து போய்க் கிடக்கிறது என்றால் இந்தச் சுயநலப்படி தன் தங்கையின் புனிதத்தைக் காக்கப் புறப்பட்டாராக்கும். பெற்ற தாயின் மானம் பறி போக விட்டுவிட்டு, ஒரு தன்மானமுள்ள மகனுக்குரிய கடமையை விட்டுவிட்டு, தங்கையின் மானமே பெரிது என்றெண்ணி ஓடோடி வந்தான் என்றால் அது வீரம் அல்ல, மன்னரே, கோழைத்தனம். ஏன் தெரியுமா? தங்கையைத் தேடிக் காக்கும் சாக்கில் களத்திலிருந்து தப்பி ஓட முயலும் பேடியின் செயல் இது...” சேனாபதி இந்தப் பெண்ணின் விஷவேக வார்த்தைகளை அவற்றின் வேலைப் பிரயோகத்தைக் கண்டு உள்ளூர பெருமிதமுற்றாலும் வாய்விட்டுப் பாராட்ட மனமின்றி மன்னரைப் பார்த்தார். இத்தருணம் இளங்கோவன் மன்னர் அருகே வந்து நின்று வணங்கினான். “ஓ! இளங்கோவா! நல்லது. இந்தப் பெண்ணைக் கவர வந்த ஆட்கள் யாவரையும்...” “என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து முடித்துவிட்டேன்.” “நல்லது. நீ இந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு போய் பெண்களுக்கான மாளிகையில் விட்டுவிட்டு அங்கிருந்து நேராக நான் எங்கு செல்லுவதாக முடிவாயிற்றோ அங்கு வந்து சேர்.” “ஆகட்டும் சக்ரவர்த்திகளே.” “நான் வந்த காரியம் முடியும் வரை எங்கும் போக விருப்பமில்லை மாமன்னரே. சோழர் என் கோரிக்கைக்கு இணங்காவிட்டால் தீக்குளித்துச் சாவேன் என்று கூறி வந்தவள் நான்” என்று மோகினி குறுக்கிட்டுச் சொன்னதும் “பதறாதே மகளே! உன்னுடைய சுதந்திர ஆர்வமும் மனத் துடிப்பும் எனக்கு நன்றாகவே புரிகிறது. இந்தப் பிராந்திய மன்னர்கள் யாவரும் தங்களிடையே ‘பெரியவர் யார்?’ என்று மோதிக் கொண்டிருப்பதில் காட்டும் அக்கறையை வெளியிலிருந்து வரும் எதிரியைத் தாக்குவதில் காட்டினால் இந்தப் பகுதி இவ்வாறிருக்குமா? மோகினிப் பெண்ணே, அவர்கள் யாவரும் பெறாத துடிப்பை, ஆர்வத்தைக் காட்டும் உன்னுடைய கோரிக்கையின் சிறப்பை நான் மதிக்கிறேன். உன்னுடைய இந்த இலட்சியப் பயணத்தை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். எனவே நீ வெறுங்கையுடன் திரும்பிப் போக வேண்டாம். என்ன செய்தால் இந்த நாடு உருப்படும்? எம்முறையைக் கையாண்டால் பயன் விளையும் என்றெல்லாம் இப்போது என் மனதில் ஊடாடுகின்றன. இவ்வாறு ஏற்படச் செய்த பெருமைக்கு உரியவள் நீதான் மகளே. எனவே உன்னைப் பற்றியே எனக்குப் பெருமையாயிருக்கிறது” என்று தன்னுடைய இயல்பான கம்பீரத்வனியில் சோழன் தன் மன நிலையைக் கூறியதும் உணர்ச்சி வசப்பட்டு உள்ளப் பரபரப்பு தாங்கவியலாத நிலையையடைந்த அந்த இளம்பெண் “நன்றி... சோழ மகாசக்கரவர்த்திகளே நன்றி” என்று தழுதழுத்த குரலில் கூறினாள். “யாரங்கே? இந்தப் பெண்ணை அழைத்துப் போய், இளைப்பாறச் செய்யுங்கள்” என்று அவர் உத்தரவிட்டதும் இரு வேளக்காரப் பெண்கள் விரைவில் வந்து அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். ராஜமோகினி வேளக்காரப் பெண்களிடையே நலிந்து சோர்ந்த நடையில் செல்லுவதை சில நொடிகள் பார்த்துக் கொண்டேயிருந்த சோழன், “அரையரே, சற்று நேரத்துக்கு முன் நம் முன் வந்து ஆவேசமாக முழங்கிய முழக்கம் இன்னமும் என் மனதில் ஒலிக்கிறது. திரிகர்த்தன் இந்த ஒரு விஷயத்தில் நிரம்பவும் பாக்கியவான்” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஒருமுறை அவள் சென்ற திசையை நோக்கிவிட்டு “இளங்கோவா, இந்தப் பெண்புலியின் உறுமல் எப்படியப்பா இருந்தது? இன்னொரு கீதமாகவா, இரைந்திடும் புலம்பலாகவா? உன் இதயத்துக்குப் புரிந்திருக்க வேண்டுமே!” என்று கூறிச் சிரித்ததும் தன் மனதைப் படம் பிடிக்கிறாரோ மன்னர் என்று திகைத்து விழித்தான். அரையரோ, “இவள் மட்டும் ஒரு ஆண்மகனாயிருந்தால்...” என்று இழுத்ததும் இளங்கோ, “ஏனைய ஆண்வீர மாமணிகள் ஓடி ஒளிந்தது போல எங்காவது போய்ப் பதுங்கியிருக்கக்கூடும்” என்று வெடுக்கெனச் சொன்னதும் அரையர் திடுக்கிட்டார். சோழர் “பளா பளா” என்று கூறிச் சிரித்தார். பிறகு சாவகாசமாகச் சிந்தித்தவர் போல மிக நிதானக் குரலில், “அரையாரே சந்தர்ப்பம், சூழ்நிலை, ஏனைய அரசர்கள், இந்தப் பெண் அனைவரையும் மனதிற் கொண்டுதான் நாம் கஜினியைப் பற்றிய நம் நிலை பற்றிய ஒரு முடிவுக்கு வர வேண்டும். இல்லையா?” என்று கேட்டதும் அவர் “ஆம். ஆயினும் இந்தப் பெண் நம்முடைய அடுத்த நிலைக்கு ஒரு உற்சாகச் சக்தியாக வந்தாள் என்றும் கூறலாம்” என்று பதில் அளித்ததும் மன்னர் சற்றே முறுவலித்து “நல்லது அரையரே. அவள் உற்சாக மூட்டும் சக்திதான் இல்லையா இளங்கோ?” என்று கேட்டு வாய்விட்டுச் சிரித்ததும் அவன் வாய் திறக்கவில்லை! இமய மோகினி தன்னுடைய தற்போதைய சூழ்நிலையைச் சிறிதும் விரும்பவில்லை. அதுமட்டுமில்லை. தான் ஒரு பெண். எனவேதான் சோழன் இப்படிப்பட்ட ஒரு கேவல நிலையில் ஒரு கைதி போல இங்கு வைத்துள்ளார். தன் தந்தையை மதிக்கும் நண்பர், தரணி புகழும் மாமன்னர், நல்லவர் போற்றும் வல்லவன் சோழன் என்பதெல்லாம் தன்னைப் பொறுத்தவரை ஒரு கனவாகிவிட்டது. தான் நினைத்ததெல்லாம் பொய்த்துவிட்டது. மகாகுரு சர்வோத்த சாக்த பீடாதிபதியை நியாயபாலன் நாடியது போலத் தானும் நாடியிருந்தால் ஒருக்கால் ஏதேனும் பலனேற்பட்டிருக்கலாம். ஆனால் அவர் தருமம், நியாயம், நீதி, நெறி என்று ஏதாவது உளறி நீ ஒரு பெண். எனவே, இந்த நாட்டின் இன்றைய ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிவிட்டால் பிறகு நீ மீளுவதென்பது சாத்தியமல்ல. எனவே இங்கேயே இருந்துவிடு என்பார். நியாயபாலனும் ஆமாம் போடுவான். அவர்களிடமிருந்து தப்ப முடியாது. அதே சமயம் அவர்களாலும் தான் விரும்பும் செயலைச் செய்திட இயலாது. எனவே இன்றுள்ள இக்கட்டான நாட்டு நிலையில் ஒரு தெளிவான வழியைக் காட்டக் கூடியவர் இந்தச் சோழர்தான் என்று நம்பி வந்தது தவறாகிவிட்டது. தந்தை அடிக்கடி இந்த சோழரின் பெருமையைப் பிரமாதமாகச் சொல்லுவாரே? அடிக்கடி தன்னிடமும் தன் அண்ணன்களிடமும், நாடு இன்று அன்னிய மிலேச்சர்களால் நாசமாகிக் கொண்டிருக்கிறது. நம் நாட்டு மன்னர்கள் இனித் தாக்கு பிடிப்பதும் கஷ்டம். எனவே உங்களில் எவருக்கேனும் ஆபத்து ஏற்படுமானால், நிச்சயம் ஏற்படும். அந்தச் சோழனை, அவர் வங்கமகிபாலனின் விருந்தினராக நெடு நாள் தங்கப்போவதாக என்னிடம் சில காலத்துக்கு முன்பே அறிவித்துள்ளார். அனேகமாகக் கடார வெற்றிப்குப் பிறகு அவர் வங்கம் வரலாம். எனவே அவருடைய உதவியை அப்போது நாடலாம். இங்கு நிகழ்ந்ததையும், இன்று நிகழ்வதையும் கூட அவரிடம் சொல்லி ஒரு மாமன்னர் என்ற முறையில் நீங்களும் பரிகாரம் செய்திட உதவலாம் என்று வேண்டினால் இசைவார். பலனும் உண்டு என்று பலபடக் கூறினாரே. அதெல்லாம் பொய்யாகிவிட்டதே! சோழன் தன்னை ஒரு சாதாரணப் பதட்டக்காரப் பெண்ணாகவல்லவா கருதி இப்படி உள்ளே தள்ளி... சினம் அவள் சிந்தனையைச் சிதறச் செய்துவிட்டது. நாம் இங்கு வந்தது பெருந்தவறு. ஒருவேளை பெண்களுக்கு சோழன் மூலம் மானஹீனம் ஏற்படாமல் இருக்கலாம். அவ்வளவுதான். ஆனால் இங்கு மானஹீனம் ஏற்படும் என்று தெரிந்த மாத்திரத்திலேயே தீக்குளிப்புச் செய்வார்கள் என்பதை ஏன் இந்த சோழன் அறியவில்லை? உண்மையிலேயே வடநாடு முழுமையும் இன்று தீப்பற்றி எரிந்தது என்பதை இந்தச் சோழன் அறிந்திருந்தால் அல்லது இந்தக் கொடுமையைப் பற்றி சிறிதாவது அக்கறையும் அனுதாபமுமிருந்தால் இங்கே வந்து ஏதோ உல்லாச நேர ஓய்வு மாதிரி ‘முகாம்’ போட்டிருப்பானா? தன் தந்தையும் மற்ற நல்லவர்களும் இந்தத் தென்னகச் சோழனைப் பற்றி ஏதேதோ கற்பனைகளைச் செய்து தன் போன்ற இளவட்டங்களின் மன நிலையில் அவனைப் பற்றிய விபரீத கற்பனைகளைப் பெரிதாக உருவகித்து நிலைத்திடச் செய்துவிட்டதுதான் மிகப் பெருந்தவறாகிவிட்டது. நாமும் வீண் நம்பிக்கைக் காரணமாக இன்று நம்மைப் பற்றி வெகுவாக லட்சியம் செய்யாமல் வந்தது பெரும் பிசகு. நாட்டின் சுதர்ம சுதந்திரத்தைப் பற்றி ஒரு நாடு பிடிக்கும் பேராசைக்காரனுக்கு என்ன தெரியும்? இப்படியெல்லாம் எத்தனையோ வகையில் இங்கு வந்தது பற்றி மோகினி ஒரு முடிவினைச் செய்துவிட்டாள். இனியும் இங்கிருக்கக் கூடாது. எப்படியாவது தப்பிவிட வேண்டும். அதையும் இன்றே செய்திட வேண்டும். வேறு வழியில்லை. மகாகுரு சர்வோத்தமரே மேல். எனவே அந்த நியாய பாலனுடன் சேர்ந்து வேறு வகையில் முயற்சிப்பதே இப்போது செய்யக் கூடியது. அண்ணன்மார்கள் ஸ்ரீபாலனும், சிவபாலனும் குய்யோ முறையோ என்று அடித்துக் கொண்டுத் தன்னை அங்கும் இங்கும் தேடி அலைவதற்கு முன்பாக சர்வோத்தமரிடமே போய்ச் சேர்ந்துவிட்டால் நல்லது. ஆனால்... எப்படித் தப்புவது இங்கிருந்து? தன்னை இங்கேயே இருத்திக் கொண்டு இவர்கள் தன்னுடைய சகோதரர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு மோகினியை வந்து அழைத்துப் போய் எச்சரிக்கையுடன் பாதுகாத்து வைத்திருங்கள் என்று தகவல் கொடுத்திருப்பார்கள். அதுவரை தன்னை இங்கு ஒரு கைதியாகவே... முடியாது. இருக்கக் கூடாது. எப்படித் தப்புவது? இரண்டு கிங்கனிகள்தான் இங்கு ‘காவல்’ என்றால் ஓடிவிடலாம். ஆனால் வெளியில் நடமாட்ட ஒலியைக் கவனித்தால் குதிரைப்படைக் காவலர்கள் இருப்பது புரிகிறது. தனக்கு ஒரு குதிரையும் தேவை. சும்மா தப்பிவிட்டால் போதாது. என்ன செய்தால் இங்கிருந்து ஒரு குதிரையுடன் தப்பி ஓட முடியும்? சுற்றுமுற்றும் நோட்டம்விட்டாள். நெடிதுயர்த்த சுவர்கள், வலுவுள்ள கதவுகள் கொண்ட அறைதான். அனைத்து வசதிகள் இருந்தாலும் இதுவும் ஒரு சிறைதானே எனக்கு! காவற் பெண்டுகள் பெரிய பெரிய தங்கத் தாலங்களில் கொண்டு வந்த உணவு, பால் பழம் எல்லாம் ஏதோ ஒரு ராணிக்கு உரிய மரியாதையாகத்தான் வெளிப்பார்வைக்குத் தோன்றுகிறது. இந்த கிங்கனிகளும் மிகவும் பணிவாகவும் பயந்தவர்கள் போலவும், ஏதோ எல்லாமே தன் நன்மைக்குத்தான் என்னும் பான்மையில் நடைபெற்றாலும் அத்தனையும் வேஷம் என்பது எனக்குத்தானே புரிகிறது. “இளவரசி, நேரம் ஆகிறது. உணவு ஆறிப்போனால் உடம்புக்கு ஆகாது” என்று ஒரு காவல் கிங்கரி பணிவுடன் வேண்டியதும் அவளை வெறுப்புடன் பார்த்தாள். ஆனால் அவளோ கனிவுடன் பார்த்து “இளவரசி, இது இரவு வேளை. எனவேதான் நாங்கள் பாதுகாவலாயிருக்கிறோம். பொழுது புலர்ந்ததும் நீங்கள் இந்த முகாமுக்குள் எங்கு வேண்டுமானாலும் போகலாம். வரலாம். இந்த ஓர் இரவு மட்டும்தான் இப்படி காவல்” என்று அறிவித்ததும் மோகினி தன் மன நிலையை அறிந்த மாதிரி பேசுகிறாளே இவள் என்று வியந்தாலும் “நான் உன்னை கேட்காத போது ஏன் இந்த அறிவிப்பு?” என்று வெடுக்கெனக் கேட்டதும் இன்னொரு காவற் பெண்மணி, “சிறு பெண், விவரம் அறியாதவள் என்று புரிந்தும் உனக்கென்ன பேச்சு?” என்று அதட்டியதும் அந்தக் காவற்பெண் அப்பால் நகர்ந்துவிட்டாள். என்ன திமிர் இவர்களுக்கு? நான் சிறு பெண்ணாம், விவரம் தெரியாதவளாம். அறுபது காத தூரம் வந்திருக்கிறேன். தன்னந்தனியாக எதிரிகள் அத்தனை பேர் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு! நான் சிறு பெண்ணாம். நாடு நாசமாகிறதே, ஆண்கள் பலரும் சுயநலம் காரணமாகக் கோழைகளாகி விட்டார்களே என்று மனம் நொந்து தானே நேரில் வந்து இந்தக் கொடிய நிலையின் கோர விளைவைக் கூறலாம் என்று வந்தால் நீ சிறு பெண், உள்ளே கிட என்று என்னை... சேச்சே! இனியும் பொறுப்பதற்கில்லை, தப்பிவிட வேண்டும். எப்படித் தப்புவது எப்படித் தப்புவது என்ற சிந்தனையின் காரணமாக இமய சுந்தரி நடுநிசிவரை தூங்கவேயில்லை. பிறகு எங்கும் ஒரே அமைதியாக இருக்கிறது. காவலாவது மண்ணாங்கட்டியாவது! சற்று நேரத்துக்கு முன்புகூட குதிரை வீரர்கள் நடைச் சத்தமிருந்தது. இப்போது அதுவுமில்லை. சோழர்கள் பெண்களை மதியாத திமிர் பிடித்தவர்கள் மட்டுமில்லை. சுத்த சோம்பேறிகளும் கூட. இல்லாவிட்டால் இப்படித் தூங்குவார்களா? எட்டிப் பார்த்தாள் முன் பகுதியை. காவற் பெண்கள் தங்களை மறந்து தாயம் ஆடிக் கொண்டிருந்தார்கள். பின்புறம் சென்றாள். கதவுகள் எவ்வாறு பூட்டப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்திட. அடிமேல் அடி எடுத்து வைத்துப் பூனை போல நடந்தவள் பின்கட்டுக்குச் சென்று சில விநாடிகள் நின்றாள். இரு பெரும் சாளரங்கள் மூலம் ‘ஒளி’ அந்தப் பகுதியில் பரவுவதைக் கண்டு சிறிதே வியந்தவள் அவ்வழியே எட்டிப் பார்க்க முயன்றதும் வெளியில் யாரும் தென்படவில்லை. ஒரே இருட்டு. எனவேதான் யாரும் தென்படவில்லை. மேலும்... அல்லது... அவர்களும் ஒரு மூலையில் தூங்கிக் கிடப்பார்களோ? பின்புறத்தின் கதவை நெருங்கி நின்றாள். ஒரு சிறு அரவமும் இல்லாது எப்படிக் கதவைத் தொட்டுத் திறக்க முயற்சிப்பது என்று நிதானித்தாள். பிறகு மிக மெதுவாகக் கதவைத் தொட்டாள். அட அதிசயமே! கதவு தொட்டதுமே திறந்து கொண்டுவிட்டதே! சே! இது ஏன் நமக்கு இதுவரை தெரியவில்லை. ஒருவேளை பூட்டுப்போட மறந்து போயிருப்பார்களோ! உம் அப்படித்தானிருக்கும். இல்லாவிட்டால் நம்மைக் கட்டுக் காவலில் வைத்திட உத்தரவிட்ட சோழ மன்னனை மீறி இருக்காது. சோம்பேறிகள்! மறந்துவிட்டார்கள். அவ்வளவுதான். இது ஏதோ நம் நல்ல காலம்தான்! இப்படி எண்ணியவள் கதவை மெதுவாகத் திறந்து வெளியே தலையை நீட்டினாள். சற்றுத் தொலைவில் இரு உருவங்கள் நீண்ட நிழல்களாகத் தெரிந்தது. ஆனால் அவை அசையவில்லை. நிற்கிறார்களா? இல்லை. உட்கார்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு அடியாக முன்னேறினாள். இல்லை, ஆழ்ந்து தூங்குகிறார்கள். அடப்பாவி சோழனே. உன்னுடைய ஆட்களெல்லாம் இப்போர்க்கொத்த தூங்குமூஞ்சிகளாக இருக்கும் போது ஒரு பாவமும் அறியாத ஒரு உன்னதக் கொள்கைக்காக உன்னிடம் ஓடோடி வந்த என்னையல்லவா கைதியாக்கி விட்டாய். இவர்கள் எல்லாம் உன் உப்பைத் தின்று உனக்குத் துரோகம் செய்யும் போது என்னையல்லவா உன்னுடைய கைதியாக்க... சேச்சே. இரண்டு காவலர்களும் ஒரு புறமாகச் சுவரொன்றில் தலை சாய்ந்து விழிகள் மூடிய நிலையில் வானத்தைப் பார்த்து உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்தனர். சற்றுத் தொலைவில் ஏழெட்டுப் பேர்கள் ஒரு கூடாரத்திற்குள் ‘ஆ ஊ!’ என்று ஆர்ப்பரித்தபடி சதுரங்கம் ஆடுகிறார்களா? அல்லது... அவர்கள் எப்படி தொலைந்தால் என்ன? குதிரைகள் ஏழெட்டு இங்கும் அங்குமாக நின்றிருந்தன. நடந்தாள். யாரும் இதுவரை குறுக்கிடவில்லை. குதிரைகளில் ஒன்று வெகுவாகக் கனைத்தது. ஓ... வந்தது ஆபத்து. ஓடிவரப் போகிறார்கள், தன்னைப் பிடிக்க. எங்கே ஓடலாம் எங்கு மறையலாம் திகைத்தாள். தவித்துப் போனாள். ஆனால் ஒரு பாவியும் வரவில்லையே! அட சோம்பேறி தூங்கு மூஞ்சிகளா? கேவலம் ஒரு பெண் தப்பி ஓடுகிறாள். அவளைப் பிடிக்கக்கூடத் துப்பில்லாத கூட்டம். குதிரைகளை நெருங்கிச் செல்லத் தைரியம் வந்துவிட்டது. நடந்தாள். இக்குதிரைகளின் நடுவே தன்னுடைய ‘காலா’ இருக்குமா? உம்! அது எங்கே இங்கே இருக்க முடியும்? என்னைக் கைது செய்து இங்கே அடைத்து வைத்த மாதிரி அதையும் வேறு எங்காவது ஒரு கொட்டகையில்... அடேடே! இதோ நம்ம குதிரைதான். அட அதிசயமே! காலா நீயும் என் மாதிரி அந்தத் தூங்கு மூஞ்சிக் காவலர்களிடமிருந்து தப்பிவிட்டாயாக்கும். பேஷ், நல்லது. இதோ நான், சேணம், அதற்கென்ன? இங்குதான் இதோ வரிசையைக்கூட வைத்திருக்கிறார்களே? இவற்றில் ஒன்றை எடுத்துக் கொண்டு ஓடி வேண்டியதுதான். அடேடே! நம்ம குதிரையின் சேணமே இதோ இருக்கிறதே. பைத்தியக்காரக் கூட்டம். எதிலுமே அக்கறையில்லாத தூங்கு மூஞ்சித் தடியன்கள். மிகச் சிரமத்துடன் சேணத்தைத் தூக்கித் தன் குதிரை மீது போட்டவள் மீண்டும் ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்தாள். அண்மையில் உறங்கிக் கிடந்த இரண்டு தடியன்கள் தவிர, அதோ சற்றுத் தொலைவில் ஒரு குதிரை வீரன் ஓ! அவன் பக்கத்தில் இன்னொருவன். அடடே! இரண்டு குதிரை வீரர்கள் தங்கள் குதிரைகள் மீதே அமர்ந்து நம்மை, இல்லை இல்லை... அப்பாடி! இருவரும் நம் பக்கம் வரவில்லை. சட்டெனக் குதிரை மீது தாவினாள். ‘படபட’வென்று சிறிதே குளம்பொலிச் சத்தம்... அந்த அமைதிச் சூழ்நிலையில். “காலா! உம்...” ஒரே ஒரு தட்டு... அவ்வளவுதான். காலன் பறந்தான். கூண்டிலிருந்து விடுதலை பெற்ற பறவை மாதிரி... அவள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. ஆனால் ஏதோ பின்புறம் ‘படபட’வென்று ஒலி வருகிறதே. ஒருக்கால் அந்த இருவரும் தன்னைப் பார்த்து விட்டார்களோ? தளரக்கூடாது. திரும்பிப் பார்த்து அஞ்சிவிட்டதாகக் காட்டிக் கொள்ளக் கூடாது. கடந்த பல நாழிகைகளாக நன்கு இளைப்பாறிவிட்ட காலன் சுறுசுறுப்பாயிருந்தது அதிசயமில்லை. மீண்டும் ஏகப்பட்ட குதிரைக் குளம்போசை தொடர்ந்த மாதிரி ஒரு பிரமை.. ஆனால் சற்று நேரத்தில் எந்த ஒரு அரவமும் இல்லை. என்ன ஆயிற்று! தன் குதிரையின் வேகத்தை அவர்களால் பிடிக்க முடியவில்லையா? ஆமாம், அப்படித்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து வந்திருப்பார்கள். உம், தன்னைப் பற்றி இவர்களுக்குத் தெரியாது. தன்னையே தெரியாத போது தன்னுடைய குதிரையைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்க முடியாது. வெகு தொலைவு சென்றபின் திரும்பிப் பார்த்தாள். எவரும் இல்லை. உம்! என்று ஒரு உறுமல் போட்டுவிட்டு தான் நடுநிசி, இருட்டு, தனிமை, காடு, மலை எதற்குமே அஞ்சியவளில்லை என்பதை வெளிப்படுத்துவது போல குதிரையின் வேகத்தைக் கட்டுப்படுத்தி நிதானமாக ஓட்டினாள். நிதானிக்க வேண்டும். அதோ நாலா திசையிலும் மலைச்சிகரங்கள் சூழ்ந்த இடம். அங்கு சென்றதும் ஏதாவது ஒரு மலை மீது ஏறி நின்று திசையைக் கணக்கிட வேண்டும். சர்வோத்தம குருநாதர் இருப்பிடம் மேற்கு திசையிலிருப்பதால்தான் ஊன்றி ஆராய்ந்த பிறகே... குதிரையின் நடை தளர்ந்தது. ஏனென்றால் இப்போது மலைச்சரிவின் மீது ஏற வேண்டிய நிலை ஏற்பட்டது. நிதானமாகவே ஏறிற்று. நாம் எங்கிருக்கிறோம்? தான் வந்த தொலைவு அனேகமாக இரண்டு காதங்களுக்குள்தான் இருக்க வேண்டும். எனவே இது சோனச மலையாயிருக்கலாம். இது நிச்சயமானால் இனி மலைச்சரிவுகளை நாடாமல் காட்டு வழிப் பாதையில் செல்ல வாய்ப்புண்டு. நல்ல காலம், சோழர் கூட்டத்திலிருந்து தப்பிவிட்டேன். இனி தொல்லையில்லை. மோகினி இப்படி நினைத்துக் கொண்டே மிகவும் எச்சரிக்கையுடன் மலை மீது குதிரையை நடத்திச் சென்றாள். மிக்க சிரமத்துடன் அடுத்த கண நாழிகையில் அந்த மலையின் எந்தப் பகுதி மீது நின்று திசையறிய வேண்டுமோ அந்த இடத்தை அடைந்துவிட்டாள். சிறிது நேரம் அங்கேயே நின்றாள். குதிரை மீது அமர்ந்தபடி நாலா திசையிலும் நோக்கினாள். மேகத்திரள்கள் பனி மண்டலத்தின் போர்வையுடன் மூடிக் கொண்டிருந்ததால் தேவையான தெளிவான ஒளி கிடைக்கவில்லை. எப்படியோ அந்தக் கிராதகக் கூட்டத்திலிருந்து தப்பிவிட்டோம். இந்நேரம் ஆ... ஊ... என்று ஊளையிடுவான் சோழன். அவனுக்கு நடுங்கி ஒடுங்கி நின்று சலாம் போடும் பேர்வழிகள் ‘விட்டோமோ பாருங்கள். கொண்டு வராவிட்டால் நாங்கள் ஆண்பிள்ளைகள் இல்லை’ என்று மீசை முறுக்குவார்கள்! மீசை... ஆமாம், என்ன மாதிரியெல்லாம் அவர்கள் மீசை வைத்திருக்கிறார்கள். எவ்வளவு எடுப்பாகத் தோற்றமளிக்கிறது. அவர்கள் முகத்தோற்றம் இந்த மீசையால் கிழவன் கூட அல்லவா குமரன் போலத் தோற்றமளிக்கிறான்? ஆனால் உண்மையிலேயே அங்கு ஒரு குமரனும் இருக்கத்தானே செய்தான்? ஆள் நல்ல அழகன்தான். ஏன், முகம் கூடக் கம்பீரமாகத்தான். அதிகம் பேசவில்லை என்றாலும், இன்னும் சற்று ஊன்றி நோக்கியிருக்கலாம். அந்த இளம் சேனாபதி என்னை வெறுத்தோ மட்டந்தட்டியோ பேசவில்லை. மரியாதை தெரிந்தவன்தான். என்றாலும் தான் ஏன் அவனைக் கவனமாக நோக்கவில்லை. தனக்கு அப்போதிருந்த மன நிலையில்... ஆயினும் எல்லாச் சோழர்களுமே ஒரே மக்குக் கூட்டம் அல்லது திமிர்க் கூட்டம் என்பது சரியல்ல என்பதற்கு அவன்... ஏதோ தன் அருகே ஒலி கேட்பதாக உணர்ந்தவள் அதென்னவென்றறிய திரும்புவதற்குள் சட்டென அவள் வாய் பொத்தப்பட்டது. அடுத்த நொடியே யாரோ அவளைக் கட்டித் தூக்க முயன்றதும் ‘கீறிச்‘ சென்ற குரல் எழுப்பியவள் தன்னைக் கட்ட முயலும் பேர்வழியினை விலக்கிட முயன்றாள். இயலவில்லை. மூர்க்கமான பிடித்தான். அடுத்துத் தாக்க முயன்றதும் மீண்டும் குரல் எழுப்பியவள் திடீரென்று துள்ளியெழும்பி தொபீல் என்று குதித்துக் கடகடவென்று உருண்டுவிட்டாள். அவ்வளவுதான். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரியாது அவளுக்கு! எப்பொழுது கண் விழித்தாளோ, அது அவளுக்கே தெரியாது. ஆனால் கண் விழிக்க இயலாவிட்டாலும் உடல் முழுதும் ரணமாகிவிட்டது என்பதை அளவு கடந்த வலியினால் ஏற்பட்ட வேதனை ருசுப்படுத்தியது. மலையிலிருந்து உருண்டது நினைவு வந்தது. அப்படியானால் சாகவில்லை என்பது உறுதி. பின்புற மண்டையில் அடிபட்டிருக்கிறது என்பதும், மூக்கு, மார்பு, முழங்கால் எல்லாம் வலிப்பதால் சரியான அடிபட்டிருப்பதும் உணர முடிந்தது. ஏதோ சப்தம் வருகிறது. தன் அருகிலோ அல்லது தொலைவிலோ புரியவில்லை. ஏதோ பேசுகிறார்கள். என்ன பேசுகிறார்கள்? காதுகள் கூட செவிடாகிவிட்டது போலத் தோன்றுகிறது! யார் எங்கிருந்து பேசுகிறார்கள்? தான் படுத்திருக்கும் இடம் எது? கைகால்களில் ரண வேதனை என்றாலும் கட்டுப் போடவில்லையே. ஒருவேளை அந்தப் பாவிச் சோழனின் ஆட்கள்தான் தன்னைப் பிடித்துவிட்டார்களோ? இருக்கலாம். வெகு தூரம் விட்டுப் பிடித்து இத்தகைய கொடுமையைத் தனியான இடத்தில் செய்திருக்கிறார்கள். போயும் போயும் தனித்துச் செல்லும் ஒரு பெண்ணிடம் அல்லவா இவர்கள் வீரத்தைக் காட்டி... மீண்டும் பேச்சுக் குரல். இப்போது வெகு அருகாமையில் கேட்கிறது. இருவரும் ஆண்கள். ஆம்... சோழத் தடியன்கள்தான். வாய்விட்டுக் கத்தலாமா...? ஊகூம் கூடாது. தனக்கு உணர்வு தெரிந்துவிட்டது என்பது அவர்களுக்குத் தெரியக் கூடாது. பிறகு வாய் திறந்து பேசமாட்டார்கள். என்னதான் பேசுகிறார்கள் என்பதையும் அறிய முடியாது. “சிவபாலா, நாம் ஏன் தாமதித்தோம் அப்படி?” “இல்லை, இளங்கோவரையரே. தவறு என் மீதுதான்!” “நாம் அது பற்றி விவாதிக்கத் தேவையில்லை. நடந்தது நடந்துவிட்டது.” “இல்லை இளங்கோ, இல்லவேயில்லை. உண்மை தெரிந்தால் என் தங்கை என்னைக் கோழை மட்டுமில்லை, என் முகத்திலே விழித்ததே பாவம் என்று கத்தி விரட்டிவிடுவாள்.” “மாட்டாள். உன் தங்கை புத்திசாலி. அனுபவம் அவளுக்கு நல்ல பாடம் கற்பித்திருக்கும்.” “இல்லை சோழரே. நீங்கள் எனக்காகச் சப்பைக் கட்டு கட்ட வேண்டாம். அவள் வரவு பற்றி நான் மாமன்னரிடம் தெரிவித்ததுடன், அவளைச் சூழ்ந்து ஆட்கள் கொடுமையாக விரட்டுகின்றனர் என்று அறிவித்ததுடன் நின்றிருக்க வேண்டும். மாறாக அவள் பிடிவாதக்காரி. எனவே விட்டுவிடாமல் பிடித்து வைத்துக் கைதி மாதிரி நடத்துங்கள் என்று கெஞ்சியதுதான் தவறு. அதனால் வந்த வினைதானே இது. இல்லாவிட்டால் இவள் இப்படி ஓடிவந்து அந்த மூர்க்கனிடம் சிக்கியிருப்பாளா?” “நடந்தது நடந்துவிட்டது. அந்தக் கொடியவனிடம் சிக்காமல் இவள் தானாகவே தப்பி...” “மலையிலிருந்து உருண்டு புரண்டு மண்டையை உடைத்துக் கொண்டு கிடக்கிறாளே...” “பிழைத்துவிட்டதற்காக கடவுளுக்கு நன்றி கூற வேண்டும்.” “இல்லை இளங்கோ. நீ இவளை அப்படித் தாங்கினதால்தான், உன் உயிரையும் திரணமாக மதித்து நீ பாய்ந்தோடித் தடுத்து நிறுத்தித் தூக்காவிட்டால், மோகினி உயிராவது, பிழைப்பதாவது.” “சரி, சரி. நாம் நம்ம வீரபிரதாபங்களை அப்புறம் பேசிக் கொள்ளலாம். முதலில் இவளை தெளிவிப்பதைக் கவனி.” “இல்லை இளங்கோ.. வைத்தியர் சொன்ன மாதிரி இவள் பிழைத்துவிடுவாள். மூன்று நாட்களுக்குப் பிறகு புரண்டு கொடுப்பவள் அனேகமாக உணர்வும் பெற்றிருப்பாள். இன்று மதியத்துக்கு முன்னரே தெளிந்துவிடுவாள் என்று வைத்தியர் சொன்னது போல.” “மகிழ்ச்சி கொள்ள வேண்டியதுதானே?” “இல்லை இளங்கோ, மோகினியின் சுபாவம் அறியாத ஆசாமி நீ. அவள் உணர்வு பெற்றுக் கண் விழித்த உடனே என்னைத்தான் விரட்டுவாள். நீங்கள் இருப்பதைக் மதிக்காமல், கோழையென்றும், குரங்கென்றும் தேசத்தைக் காட்டிலும் தங்கை பெரிதன்று நினைக்கும் மட்டியென்றும் மட்டம் தட்டுவாள். தவிர...” “போதும் சிவபாலா, உன்னுடைய தங்கைக்கு உலக அனுபவம் போதுமானது இல்லையென்றாலும் நம் யாவரையும்விட தேசபக்தி அதிகம் கொண்ட வீரப்பெண்.” “நீங்கள்தான் மெச்ச வேண்டும். எங்கள் மகாகுரு என் அண்ணனிடமும் என்னிடமும் ‘மோகினி இன்னும் சிறுமிதான். அவள் ஆவேசப் பதற்றம் எல்லாம் அவளுக்கு ஆபத்தானது. எனவே இந்த நாட்டைக் காப்பாற்றுவது, மிலேச்சர்களை விரட்டுவது என்பதெல்லாம் நம் போன்றவர்கள் வேலை. ஆனால் அனைத்தையும்விட உங்கள் முதற்கடமை உங்கள் தங்கையைக் காப்பாற்றுவதுதான். இந்த என்னுடைய வாக்கை மீறி நீங்கள் செயல்பட்டீர்களானால் என் முகத்திலேயே விழிக்காதீர்கள்’ என்று கூறிவிட்டார். நியாயபாலரோ ‘இவர்கள் அவள் கூடப் பிறந்த அண்ணன்மார். நானோ அவள் கூடப்பிறக்காவிட்டாலும் அன்பால் அண்ணன். எனவே இவர்களால் அவளைக் காக்க முடியாவிட்டால் நான் இருக்கிறேன்’ என்று சூளுரைத்தான். என் தங்கையோ எந்த நொடி என் அண்ணன் ஸ்ரீபாலன் சுந்தரவனம் சென்றானோ அந்த நொடியே என்னை ஏமாற்றிவிட்டுச் சோழரிடம் புறப்பட்டுவிட்டாள். நான் மட்டும் அச்சமயம் அவளுக்கு முன்னாலேயே வந்து உங்களிடம் அறிவித்திராவிட்டால் இந்நேரம் அந்த மிலேச்சன் கபூரிடம் சிக்கியிருப்பாள்.” “எனினும் இப்போது அவன்தான் நம்மிடம் சிக்கிவிட்டானே. அவனைப் பிடிப்பதற்குக் கூட உன் தங்கைதானே காரணமாயிருந்திருக்கிறாள்.” “ஆமாம். ஆனால் உங்கள் மாமன்னர், பேரரையர், நீங்களும் எல்லாம் என்னுடைய இந்தத் தந்திரச் சாதனையை விரும்பாது...” “ஆமாம் சிவபாலா! நீ உன் தங்கையை இம்மாதிரி நாங்களறியாமல் வெளியே வரும்படி செய்தது கபூரைப் பிடிக்கும் கண்ணி என்று சொல்லி ஏதோ பெரிய சாதனையைப் புரிந்ததாகக கருதிய முறை இருக்கிறதே அது வெட்கக்கேடானது, கேவலமானது. நம்மைத் தலைகுனிய வைப்பது. இதை எங்கள் மாமன்னர் மன்னிக்கவே மாட்டார். நீ இவள் தப்பிவிட்டாள் என்று எங்களிடம் அறிவித்த நிலையும் தவறானது. நீயே பின்புறம் கதவைத் திறந்து வைத்துவிட்டுக் குதிரையும் கொண்டு நிறுத்தி இவளைத் தப்ப வைத்துவிட்டு, நீதான் அவளைப் பாதுகாக்கும் பொறுப்பேற்றிருக்கிறாயே என்று நாங்கள் எங்கள் கூடாரங்களில் இருந்த நேரத்தில், இம்மாதிரி செய்ததை உடனடியாக எங்கள் வேவுப் படையினர் அறிந்து வந்து கூறியிராவிட்டால், இந்நேரம் கபூர் இவளைக் கவர்ந்து சென்றிருப்பான்.” “நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான். ஆயினும் இந்தக் கபூரைப் பிடித்திட எனக்கு வேறு எந்த வழியும் புலப்படவில்லை. தவிர ஏற்கனவே இருமுறை இவளைக் கவர்ந்திடும் முயற்சியில் அவன் தோற்றுவிட்டான். நீங்கள் அவனுடைய கையாட்களையெல்லாம் பிடித்திருந்தும் அவனைப் பிடிக்க இயலவில்லை. தவிர இவள் உங்களிடம் வந்த போதுதான் அவர்கள் விரட்டி வந்து உங்களிடம் மாட்டிக் கொண்டார்கள். எனவே நான் அதே மாதிரி இவள் மூலமாகத்தான் அவன் சிக்க முடியும் என்று ஊகித்தே அவ்வாறு செய்தேன். அது மிகத் தவறான செய்கை என்று தெரியாமலில்லை. எனினும் கபூரைப் பிடித்தாக வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் என்னை...” “கபூரை நாம் வீரனுக்கு வீரன் என்ற வகையில் பிடித்திருக்க வேண்டுமேயன்றி, இது போன்ற பெண், கண்ணி வைப்பு வேலை செய்து பிடித்தது ஆண்மையில்லை. நாம் சற்றே தாமதித்திருந்தால் இந்நேரம் ஒரு வீராங்கனையை இழந்திருப்போம். நீ உன் தங்கையை இழந்திருப்பாய். நான்...” என்று சொல்ல துவங்கியவன் சட்டென நிறுத்தினான். என்ன சொல்லப் போகிறான் அந்த இளங்கோ வாலிபன்? என்று அறியக் காதுகளை நன்கு தீட்டிக் கொண்டாள் மோகினி. “நீங்கள் ஏதோ சொல்ல வந்தீர்கள் இளங்கோ?” “இல்லை சிவபாலா. அது இப்போது தேவை இல்லை. முதலில் நாம் உன் தங்கையைக் கவனிக்க வேண்டும்.” “அதுதான் இனிக் கவலை இல்லையென்று வைத்தியர் சொல்லிவிட்டாரே.” “அது உண்மைதான். ஆனால் அவள் எழுந்து நடமாட இன்னும் சில நாட்களாகும் அல்லவா?” “நான் அப்படி நினைக்கவில்லை சோழரே. இவள் ஒரு பெண்புலி... சாவு, வலி, வேதனை, காயம், அடிதடியெல்லாம் இவளை ஒன்றும் செய்யாது. ஆனால் இவளை மதியாமல் பேசிவிட்டால் மட்டும் அவர்கள் மீது பாய்ந்து பாய்ந்து குதறிவிடுவாள்.” “நல்லது சிவபாலா, நல்ல சமயத்தில் எச்சரித்தாய். நாளை இவளிடம் எச்சரிக்கையாகவே பேசுகிறேன்.” “அப்படியானால் நாளையும் நீங்கள் இங்கேதான்...” “ஆமாம் சிவபாலா. நாளை மட்டும் அல்ல, உங்கள் நாட்டுக்கோ அல்லது நீங்கள் இருவரும் எந்த இடத்தில் ஆபத்தின்றி இருக்க முடியுமோ அந்த இடம் வரை உங்களுக்குத் துணையாகச் செல்லும்படி எனக்கு மாமன்னர் உத்தரவு.” “அப்படியானால் இனி பயமில்லை” என்று சிவபாலன் குதூகலித்துச் சொன்னதும் இளங்கோ தனக்கும் உள்ளூர உண்டான மகிழ்ச்சியும், நிம்மதியும் பன்மடங்காகியது. மோகினியையே அவர்களைக் கண் திறந்து பார்க்கும்படிச் செய்துவிட்டது! எதிரே தன்னை மிகவும் நெருங்கி உற்றுப் பார்ப்பது யார்? ஓ! அந்தச் சோழ இளங்கோவரையன் அல்லவா? என்ன இது, உண்மைதானா? தன் மனதில் உருவகித்து நிலை நிறுத்திக் கொள்ள முயன்ற அவள் கண்கள், மலர மலர விழிக்க முயன்றன. ஆனால் சட்டென்று திறக்கவும் முடியவில்லை. ஓடவும் இயலவில்லை. அந்த நெட்டையான ஆணழகனான அவனேதான். சோழ மாமன்னர் எதிரில் கூட குறும்புப் புன்னகையும் நயமானக் குறும்புத் தொனியும், தன்னையும் அவரையும் மாறி மாறி பார்த்த அந்தப் பார்வை, நானிருக்க பயமேன் என்று ஆதரவு காட்டுவது போலல்லவா இருந்தது. “சிவபாலா, உன் சகோதரி நன்றாகத் தெளிந்திடுவாள். இன்னும் சில விநாடிகளே போதும்” என்று இளங்கோ சொன்னதும், “அப்படியானால், இனி அவள் பாடு, உங்கள் பாடு. நான் கொஞ்சம் எட்டவே இருக்கிறேன். எந்த நொடியும் என் மீது பாய்ந்து தொலைப்பாள்” என்று அவன் கலக்கத்துடன் கூறியதும் இளங்கோ வாய்விட்டுச் சிரித்துவிட்டான். ஏன் இந்தச் சிரிப்பு என்று கேட்பது போலப் பார்த்தான் சிவபாலன். “உன்னைவிட உன் தங்கை வயதில் மிகச் சின்னவள். அபலை. உண்மை இதுவாயிருக்க நீ ஏன் இவளிடம் இப்படிப் பயந்து சாகிறாய்” என்று இளங்கோ கேட்டுவிட்டு, தொடர்ந்து “பதில் எச்சரிக்கையுடன் சொல். உன் தங்கை கண்விழித்துவிட்டாள்” என்று கேலியாகச் சொன்னான். “நான் அபலை என்று யார் சொன்னது?” என்று நலிந்து போன குரலில் மோகினியே அவனை நேரிடையாகக் கேட்டதும் சிவபாலன், சட்டென அப்பால் சென்று, “ஐயா அரையாரே, கேள்வி தங்களுக்குத்தான்” என்று மென்று விழுங்கினான். இளங்கோ கீழே கிடப்பவளைச் சற்றே கனிவுடன் பார்த்துவிட்டு “பொதுவாகச் சொன்னேன் பெண்ணே. சாதாரணமாக உலகினர் கூறும் வார்த்தை இது, பெண்கள் அபலைகள் என்பது.” “அபத்தம். நான் அபலையில்லை. தவிரப் பெண்கள் அபலைகள் என்று கூறுவோர்தான் பலஹீனர்கள்” என்று அவள் தொடர்ந்து சொன்னதும். ‘சரி. இவள் வெகுவாக உணர்ச்சி வசப்பட்டுப் பேசுபவள். எனவே சற்று நிதானித்து நகர வேண்டியதுதான்’ என்று முடிவு செய்து, “பெண்ணே உன்னுடைய...” என்று அவன் ஏதோ சொல்வதற்குள் “ஏன் நீங்கள் என்னைப் பெண்ணே பெண்ணே என்று அழைக்கிறீர்கள். ஏன் அப்படி ஒரு சந்தேகம்?” என்று அவள் தன்னுடைய நைந்த குரலில் நயமாகக் கேட்ட முறை கேலி செய்வது போலிருந்தது இளங்கோவுக்கு. “இதுவும் பொதுவாக இருந்து வருவதுதான்” என்று தயங்கிக் கூறியதும், “எனக்கு ஒரு பெயர் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும்” என்று சற்று வேகமாகவே பதில் வந்ததும், அவனும் வேகமாகவே “நன்றாகத் தெரியும். ஆனால் அந்தப் பெயரைச் சொல்லி அழைக்கும் முறையை நானாக எடுத்துக் கொள்ள முடியாது.” “நான் அனுமதிக்கிறேன்.” “மகிழ்ச்சி. ஆனால் பெரியவர்கள் அனுமதித்து அதை ஏற்கும் வழக்கம்தான் பொதுவான சம்பிரதாயம்.” “நான் சம்பிரதாயங்களுக்குக்கெல்லாம் விரோதி.” “ஏற்க முடியாது.” “எதை?” “நீ இப்போது எதற்கோ விரோதி என்றாயே, அதை. ஏன் என்றால் உன்னால் யாருக்குமே எதற்குமே விரோதியாக முடியாது” என்று இளங்கோ அழுத்தமாகச் சொன்னதும் அவள் சில நொடிகள் பேசாமலிருந்துவிட்டு, “நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமென்பதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?” என்று கேட்டதும் இளங்கோ நிதானமாக “நன்றியா, யாருக்கு, எதற்காக? தவிர நான் ஏன் உன்னிடமிருந்து நன்றியை எதிர்பார்க்க வேண்டும்?” என்று படபடவென்று கேட்டதும் அவள் அவனை வியப்புடன் பார்த்துவிட்டு, “நீங்கள் எதிர்பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் நான் கூறப் போவதில்லை. ஏனென்றால் சோழர்கள் அத்தனை பேர் மீதும் எனக்குக் கோபம்.” “துரதிர்ஷ்டசாலிகள்...” “யார்?” “சோழர்கள்தான். ஒரு அழகியின் அன்புக்குப் பதிலாகக் கோபத்தைப் பெறுகிறார்கள் என்றால்...” “நீங்களும் ஒரு சோழர் ஆசாமிதானே?” “இல்லையென்று யார் சொன்னது?” “என் சின்னண்ணனும் நீங்களும் சற்று முன் பேசியதை நான் கேட்டேன்.” “ஓகோ!” “என்ன ஓகோ? அவன் சொன்னான் என்பதற்காக நீங்கள் என்னைக் கைது செய்த நாடகத்தை நடத்தலாமா?” “நாடகம் என்று நீயே சொல்லும் போது அது எப்படி உண்மையாக நடந்ததாகும்?” “நான் என்னைக் கைதி என்றுதான் நம்பினேன். சோழர்களையெல்லாம் சாபமிட்டேன்.” “துரதிர்ஷ்டசாலிகள்.” “இதென்ன கிண்டல் பேச்சு. சோழர்கள் துரதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லுவதில் உங்களுக்கு என்ன பெருமை?” “பெருமையோ? இல்லையோ; சிவபாலன் நோக்கம் வென்றுவிட்டது அல்லவா? அதனால் உன்னை இன்னும் சில தினங்களாவது தங்கள் விருந்தாளியாக வைத்திருக்க முடியயாமற் போனது அந்தச் சோழர்களின் துரதிர்ஷ்டம்தானே?” “வக்கணையாகப் பேசும் வாசாலகர் நீங்கள்.” “இதில் பாதி சரி, மறுபாதி தவறு.” “எது சரி?” “வாசாலகன் நான் என்பது. எங்களவர்களின் பொது கருத்து. வக்கணை என்றால் பெண்கள்தான் அப்படிப் பேசுவார்கள் என்று கேள்வி. மாறாக நீ என்னைப் பற்றி அப்படி எண்ணினால் அது என் சொந்த அதிர்ஷ்டம்.” “ஏன் இந்த சொந்தபந்தப் பேச்சு...?” “இது வரை என்னை யாரும் புத்திசாலித்தனமாய் பேசுபவன் என்று சொன்னதில்லை. பொதுவாக என்னை ஒரு வாயாடி என்று அகத்தில் நினைத்துப் புறத்தில் வாசாலகன் என்று பட்டம் அளிப்பார்கள். ஆனால் இன்றுதான் வாசாலகன் என்று விருது, அதுவும் ஒரு அழகியிடமிருந்து கிடைப்பதென்றால்...” “ஏன் அடிக்கடி அழகி அழகி என்று கேலி செய்ய வேண்டும்?” என்று வெடுக்கென்று கேட்டதும் அவன், “நீ அழகி என்பது என் கருத்து. பொதுவாக ஒரு பெண் தான் அழகி என்று அழைக்கப்படுவதை விரும்புவாள் என்றும் ஒரு கருத்துண்டு.” “நான் அதை விரும்பவில்லை. அழகி என்ற சொல்லை மட்டுமில்லை. பெண் என்றும், அபலை என்றும் ஐயோ பாவம் என்று அனுதாபச் சொல்லை எல்லாம் அடியோடு வெறுக்கிறேன்.” “உனக்கு எதை வேண்டுமானாலும் நினைக்க உரிமையுண்டு. இதே போன்று மற்றவர்களுக்கு அந்த உரிமையுண்டு என்பதையும் நீ ஏற்க வேண்டும். ஏனென்றால் நாம் நமக்காக வாழ்கிறோம் என்றாலும் மற்றவர்களிடையே வாழ்கிறோம் என்பதை மறந்திடக் கூடாது.” “மறந்திடவில்லை. ஆனால் நான் எனக்காக வாழவில்லை. இந்த நாட்டுக்காக என்னை அர்ப்பணித்துவிட்டேன். எதிரியை எதிர்த்து சாகவிரும்பாத கோழைகளிடையே நான் இருப்பதைவிட அவனை நேரிடையாக எதிர்த்து சாக விரும்புவதே மேல் என்று நினைக்கிறேன்” என்று படபடவென்று சொன்னதும் இளங்கோ சிறிதும் தயங்காமல் “உன்னதமான நோக்கம்தான். ஆனால் சாதனைதான் சிறப்பேயன்றி சாவது சிறப்பல்ல. நீ இன்று மற்ற ஆண்கள், இந்த நாட்டு மாவீரர்கள், அரசர்கள், அரசியல் தந்திரிகள் சாதிக்காத ஒன்றைச் சாதித்துவிட்டாய். அது சிறப்பு. இதனால் நீயும் உன் குலத்தாரும், இந்தப் பகுதி வாழ் மக்களும் பெரும் நிம்மதி பெற்றுள்ளதைப் போல், நான் கூடப் பெருமை கொண்டுள்ளேன் என்று கூறினால்...” சற்றே தயங்கி அவளைப் பார்த்தான். அவளோ இப்போது அவனை விழுங்கிவிடுவதைப் போல ஊன்றிப் பார்த்தாள். பிறகு, “நீங்கள் வீணுக்காகத் துதி செய்யக் கூடியவர் என்று நான் நினைக்கவில்லை.” “உண்மையைத்தான் நினைக்கிறாய்!” “என்னைத் திருப்தி செய்வதற்காகக் கூட...” “உன்னுடைய ஊகம் மிகச் சரியானதுதான்.” “பின்பு ஏன் நான் எதையோ சாதித்ததாகச் சொல்லி நீங்கள்...” “நீ சாதித்திருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. அதுவும் கடந்த நூறு மாத காலமாகப் பலர் முயன்றும் சாதிக்க முடியாத ஒன்றை நீ சாதித்துவிட்டாய் என்று எண்ணும் போது அது மகத்தான சாதனையாகிவிட்டது.” “நீங்கள் எது பற்றி இவ்வாறெல்லாம் கற்பனை செய்து எனக்காகப் பேசுகிறீர்கள் என்று புரியவில்லை. மேலும் மேலும் நீங்கள் இம்மாதிரியே பேசினால், சற்று முன்பு உங்களைப் பற்றிக் கொண்ட கருத்தைக் கூட மாற்றிக் கொள்ள நேரிடும்.” “என்னைப் பற்றி நீ கொண்ட கருத்து என்னவென்று எனக்குத் தெரியாது. நீ சொல்லுவதிலிருந்து அது கொஞ்சம் நல்லதாகவே இருக்குமென்று ஊகிக்கிறேன். ஆனால் நான் மட்டுமில்லை, உன் அண்ணன் சிவபாலனும் சேர்ந்து சொல்லப் போவதை அதாவது உன் அரும்பெரும் சாதனையைக் கூறும் போது இந்த கொஞ்சமான நல்லபிப்ராயம் மகத்தானதாக மாறும் என்று நம்புகிறேன்.” “நீங்கள் இப்போதுதான் உங்கள் வாக்கு சாதுரியத்தையெல்லாம் காட்டுகிறீர்கள். விஷயம் ஏதாவதிருந்தால் சொல்லியிருப்பீர்கள். தயவு செய்து சிவபாலனை என் அருகே வரச் சொல்லுங்கள்.” “இதோ வந்திருக்கிறேன் மோகா. இளங்கோவரையர் சோழர்தம் மெய்யுதவி மட்டுமில்லை. அவருடைய பூரண நம்பிக்கையைப் பெற்றுள்ள உத்தம வீரர். எனவே அவரிடமிருந்து சத்தியம் ஒன்றைத் தவிர வேறு எதுவுமே வராது” என்று சுருக்கமாகக் கூறியதும், “அப்படியானால் நான் எந்த ஒரு சாதனையும் செய்திடாமல் வெறுங்கையுடன், சோழர் தம் கைதியாக இருந்த அவமானம் தாங்காமல் தப்பியோடி வந்து...” “தேவையில்லாத பேச்செல்லாம் இப்போது எதற்கு? நீ எந்த நோக்கத்துடன் சோழச் சக்கரவர்த்திகளைச் சந்திக்க வந்தாயோ அது மிக வெற்றிகரமாகச் சாதிக்கப்பட்டுள்ளது. சுல்தான் அலாவுதீன் கில்ஜியைச் சோழச் சக்கரவர்த்திகள் நேரிடையாகச் சந்திக்கத் தயாராகிவிட்டார்” என்று வார்த்தைகளை அழுத்தமாகக் கூறியதும் “என்ன என்ன?” என்று வெகுவாகப் பதறிக் கேட்டபடி எழ முயற்சித்தவள் அடுத்த நொடியே மயங்கிச் சாய்ந்துவிட்டாள். உடன் தன் நினைவையுமிழந்து விட்டாள். |