ராஜ மோகினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

15

     இனி நாம் மீண்டும் காஜுராஹோ செல்லுவோம். காஜு என்பது கஜ்ஜூர் என்பதிலிருந்து (balm) சுருங்கியது என்றும், கஜ்ஜுர் என்றால் ஈச்சம்பழம் (Date) என்றும் ராஹோ என்றால் இரு என்றும் ஆகக்கூடி காஜூராஹோ என்றால் ஈச்சம்பழச் சோலைகளின் இருப்பிடம் என்றும் பொருள் ஆகிறது. ஊரின் பெயரே ரசமாயிருக்கிறது என்றால் இன்றைக்குச் சற்றேறக் குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சந்தேல மன்னர்கள் 85 கோயில்களை நிர்மானித்தனர் என்றும் அக்காலச் சந்தேலர்களின் மிக உன்னதமான சிற்பத் திறமைக்கும் தெய்வ பக்திக்கும் அவை அற்புதச் சின்னங்களாகும் என்றும் கூறப்படுகிறது.

     பரம சிவப்பக்தனான பரகேசரி இராஜேந்திர சோழ தேவன் இந்தக் காஜுராஹோ கோயில்களைத் தரிசிக்க ஆசை கொண்டதில் விந்தையில்லை. ஆனால் கோயில்களை இடிப்பதையே கொள்கையாகக் கொண்ட கஜினியைச் சந்திக்க விரும்பியதுதான் விந்தை! ஆயினும் சில சமயம் கற்பனைகளையும் விஞ்சியதாகச் சில நிகழ்ச்சிகள் நடந்து விடுவதுண்டு என்பதற்கு இச்சந்திப்பு ஒரு உதாரணம்! நீண்ட காலமாகக் காஜுராஹோவின் அதிசய ஆலயங்களின் அழகையும் அமைப்பையும் நேரில் கண்டுகளிக்க வேண்டுமென்று இராஜேந்திரன் விருப்பினான். தவிர நீண்ட காலமாக வங்கத்திலும் மிதிலையிலும் தனது படைகளுடன் அதாவது ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் என்றும் கூறப்படுகிறது. சோழன் தனது படைகளுடன் தங்கியதால், ஒரு மாற்றம் காண முயன்றான். தனது திக்விஜயம் முடிந்ததும் ஏன் அவன் தமிழகம் திரும்பவில்லை என்று கேட்கப்படலாம். தமிழகத்திலிருந்து புறப்பட்டவன் வடபாரதத்திலும் கடல் கடந்த நாடுகளையும் பிடித்திருப்பதால் ஆங்காங்கு நிர்வாக முறைகளை ஒழுங்குபடுத்த வேண்டியிருந்தது. அந்தந்த நாடுகளில் மக்களிடம் செல்வாக்கும் கூடியவரை நேர்மையும் நெறியாக ஆளுந்திறனும் உள்ளவர்களையே நியமிக்க வேண்டியிருந்தது. பெரும்பாலும் அந்நாட்டு அரசர்கள் உரிமை வழியிலும், ஆளுந்திறமையிலும் சரியாகத்தான் இருந்தார்கள் என்றாலும் மாளவம், மகதம், மகோதை ஆகிய நாடுகளில் சீரான நிர்வாகத் திறனுள்ளவர்களாயில்லை அந்நாட்டு அதிபர்கள்.

     மஹோதை என்று அழைக்கப்பட்டது மகதம்* என்று கூடக் கூறப்படுகிறது. ஆனால் இராஜேந்திர சோழனுடைய சோழ சாம்ராஜ்யம் மேற்கெல்லையாக மஹோதையைக் கொண்டிருந்தது என்றும் அந்த நாடு கன்னோசிக்கு அருகேயுள்ளது என்றும் கூறப்பட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும். கன்னோசி அரசன் எப்படிச் சரியில்லையோ அதே போலத்தான் மஹோதயத்திலும் இல்லை போலும்! தவிர வங்கத்தின் பகுதிகளான ஜெயபுக்தி, வர்த்தமானபுக்தி ஆகிய நாடுகளிலும் சீரான ஆட்சி முறையில்லை. தந்தபுக்தி தருமபாலனோ இப்போதுதான் திருந்திய அரசனாக விளங்குகிறான்! எனவே மகிபாலன் தான் நிலைத்திட சோழர் உதவியை எத்தனைக் காலம் பெற முடியும் என்ற பிரச்சனையும் இருந்தது. பரகேசரி சோழ இராஜேந்திரன் இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தவே ஏறக்குறைய முப்பது மாத காலம் அப்பகுதியில் தங்கினான் என்றும் கூறப்படுகிறது.

     *வடநாட்டு வரலாற்றாசிரியர்கள்தான் மகதமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். பேராசியர் நீலகண்ட சாஸ்திரிகள் இவ்வாறு உறுதிபடக் கூறவில்லை. தவிர கன்னோசிக்கு அருகில் உள்ளது இந்த மகோதை என்றும் கூறியுள்ளார்.

     காஜுராஹேவின் மன்னர் வித்யாதரன் வயது முதிர்ந்தவன். ஆதலால் அந்நாட்டு வழக்கப்படி தன் மகன் விஜயபாலனுக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னரே பட்டஞ் சூட்டி விட்டான். ஆயினும் தந்தை இருக்கும் வரை அவருக்குத்தான் தலைமை என்று மகன் உறுதியாக இருந்துவிட்டான். சோழ இராஜேந்திரனுக்கு மகனின் தந்தையன்பு பிடித்திருந்தது. எனவே தந்தையும் மகனும் நேரில் வந்து காஜுராஹோவுக்கு விஜயம் செய்யும்படி கோரியதும் மனமகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான். ஆனால் இதே சமயம் வித்யாதரன் கூடச் சென்றிருந்த சாந்த்ராய், வல்லபரின் தூது வெற்றி பெறவில்லை என்று கூறியதும் திடுக்கிட்டான். பிறகு நிதானமாக விசாரித்தான். மூர்க்கனான கஜினிதான் இதற்குக் காரணம் என்று அறிந்ததும் “நல்லது வித்யாதரரே! நாம் அவனைச் சந்தித்து பேசும் தருணம் வந்துவிட்டது! அதையும் உமது ஊரிலேயே நடத்த விரும்புகிறோம். தேவையான ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொன்னதும் அவர் சிறிதும் தயங்காமல் ஒப்புக் கொண்டு விட்டார். ஊர் திரும்பியதும் இது பற்றி தீவிரமாகச் செயல்படத் துவங்கினார்.

     சாந்த்ராய் ஹரதத்தனைக் கொணர்ந்தான். திட்டம் தீட்டப்பட்டது. தன்னால் எப்படியாவது கஜினி முகமதை கொண்டு வந்துவிட முடியும் என்றும் ஆனால் அவன் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படக் கூடாது என்றும் உறுதி கேட்டான்.

     சாந்த்ராய் என்னென்னவோ வாதாடிப் பார்த்தான். பயனில்லை. முடிவில் வித்யாதரன்* மட்டுமில்லை, சோழனை காஜுராஹோவில் சந்தித்து மரியாதை செய்யவிருக்கும் அத்தனை மன்னர்களும் முகமதுவுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாத்துத் திருப்பி அனுப்ப உறுதி தந்த பின்னரே ஹரதத்தன் மேலே கூறியுள்ளபடி அழைத்து வந்திருக்கிறான். வித்யாதரனும் அவனுடைய முன்னோர்களும் அதி அற்புதமாக சிருஷ்டித்த காஜுராஹோ கோயில்கள் எவ்வளவுக்குப் புகழ் பெற்றவையோ அவ்வளவுக்குப் புகழ்தரக் கூடிய அரிய சாதனையை அதாவது கஜினி முகமது-இராஜேந்திர சோழன் சந்திப்பு ஏற்படச் செய்திருந்தான் என்பதுதான் உண்மை. ஆனால் அக்கால வரலாற்றாசிரியர்கள் இந்தச் சாதனையை இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள்.

     *சிவகுப்த சந்தேலன் மகன் காந்தகுப்த சந்தேலன் மகனே வித்யாதரன் என்றும், இவன் 1022 வரை ஆண்டான் என்றும், 1021 முதல் 1051 வரை விஜயன் ஆண்டான் என்றும் வரலாறு கூறுகிறது.

     காரணம் எதுவாயிருக்கும்? சோழனுக்கு எதற்காக இவ்வளவு பெருமை என்றுதானோ! கஜினிக்கு உள்ள கெட்ட பெயர் நீங்கிவிடக் கூடாதே என்றா! ஒரு தமிழனுக்கு வடநாட்டில் மகத்தான மதிப்பேற்பட்டிருந்ததைக் காணப் பெருமை ஏற்பட்டதாலா? அந்நியனான முகமமதுவிடம் தோற்றதினால் அடைந்த அவமானத்தைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். தலைசிறந்த ஒரு தமிழனின் பெருமையைப் பெருமிதத்துடன் ஒப்புக்கொண்டு விடக் கூடாது என்ற எண்ணத்தாலா?

     எதனாலோ புரியவில்லை! ஆனால் உண்மை என்றாவது ஒரு நாள் தலைதூக்கவே செய்யும். தருமத்தின் வாழ்வைச் சூது கவ்வினால் அது பிறகு எப்படியும் தலைதூக்கி எழுந்து வென்றுவிடும் என்பது போல உண்மையும் ஒரு நாள் எப்படியாவது தலைதூக்கி நிமிர்ந்தெழுந்து பொய்மையைத் தகர்த் தெரியும் என்பது நிச்சயம்.

     சுயநலம் பிடித்த சில வரலாற்றாசிரியர்களும், துதிபாடும் வகையிலே தாங்கள் மன்னர்களே எப்போதும் வெற்றி பெறுவார்கள். மற்றவர்கள் தோல்வியே காண்பர் என்று கூறும் துன்மதிபடைத்த வரலாற்றாசிரியர்கள் சரித்திரக் குறிப்புக்களை எழுதினால் அது ஒரு சார்பாகவே இருக்கும். நடுநிலையாக இருக்காது என்பதற்கு இந்த இணையற்ற சம்பவத்தைக் குறிப்பிடாமலிருந்ததே தகுந்ததோர் சான்றாகும். இன்று போல் அன்று நாடு இருந்ததில்லை. ஏகப்பட்ட அரசர்கள் அவர்களின் சுயமதிப்புக்காகவும் ஏகபோக ஆட்சிக்காகவும் இருந்த நாடுகள், சிதறிக் கிடக்காமல் எப்படி ஒரு குடைக்கீழ் சேர மனம் வரும்? எனவேதான் திக்விஜயம் மேற்கொள்ளும் நிர்ப்பந்தத்திற்குள்ளானார் சோழ இராஜேந்திரன்.

     கங்கை முதல் காவிரி வரை அவனுடைய பரந்த சாம்ராஜ்யம் விரிந்து கிடந்தாலும், அந்த ஒன்றியத்தில் தாங்கள் சிறு நாடுகளை நேர்மையாக ஆளும் பொறுப்பான ஆட்சியாளர்களாக பல அரசர்கள் மாற முடிந்தது. ஒரு சிலர் முதலில் எதிர்த்தாலும் நாளடைவில் அவர்கள் மாறியாக வேண்டிய சூழ்நிலை சுற்றுப்புறத்தில் உருவானதால் நிர்ப்பந்தம் காரணமாகவே நல்லாட்சியாளர்கள் ஆனார்கள்.

     ஆனால் சோமநாதபுரத்தில் எவன் சீரான ஆட்சி நடத்த முடியுமோ அவன் கையில் ஆட்சியை தராமல் அரசும் வேண்டாம் அவதியும் வேண்டாம் என்று ஒதுங்கி நின்றவனிடம் அதாவது ராஜா துர்லாப்சென்னிடம் தனது பிரதிநிதியாக ஆளும்படி அந்த ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டான் கஜினி முகமது. அந்த நாட்டின் வரலாற்றில் இது இன்னொரு சாபக்கேடு என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

     கஜினி ஏன் இப்படிச் செய்தான்? துர்லாப்தான் கஜினி விருப்புக்கு ஏற்றபடி ஆள்வானேயன்றி, அவனுடைய சொற்படியெல்லாம் ஆடுவானேயன்றி மற்றவர் அப்படிச் செய்ய மாட்டான் என்றுதான். இந்த உண்மை யாருக்கும் தெரியாமல் இல்லை.

     கஜினி தந்திரக்காரன் இல்லையா? தன்னைக் கடைசிவரை எதிர்த்த வீரதேவன், வீரவாலும், சாந்த்ராயும் ஆகியவர்களின் தீவிர எதிர்ப்பைக் கண்டு சரி இவர்களைப் போல இல்லாமல் துர்லாப் ராஜ் தனக்கு அடங்கி நடக்கும் நல்ல குணம் படைத்தவன் என்ற உண்மையை அனுபவரீதியாக அறிந்து கொண்ட பிறகுதான் அவனையே தன் பிரதிநிதியாக ஆக்கிவிட்டான்.

     கஜினியின் இந்தத் தந்திரங் கண்டு வெறுப்புற்ற காரணத்தினால்தான் பலர் வித்யாதரர் பக்கமும், சர்வோத்தமர் வழிமுறையையும் பின்பற்றத் துணிந்தனர். சக்தி பீடாதிபதியான சர்வோத்தம்மர் சாந்த்ராயை ஆசீர்வதித்தார். நியாயபாலனை இளம் வயது முதல் தன் ஆதரவிலேயே வைத்துக் கொண்டு பெரும் வீரனாகத் தன்மான தீரனாக உருவாக்கினார்.

     கன்னோசியின் முதல் அரசனாக இருந்த நாகபட்டன், உஜ்ஜனியின் மிஹிரபோஜன், பூபாள மகேந்திரபாலன் ஆகியவர்கள், சர்வோத்தமர் ஸ்தாபித்திருந்த சக்தி பீடத்தைச் சேர்ந்தவர்கள். மிதிலையின் போஜன், வங்கத்தின் மகிபாலன், விதேகத்தின் ராஜா ராமபத்ரன் ஆகியோர் வைஷ்ணவர்கள் என்றும் கூறப்பட்டது. ஆயினும் முதலில் இவர்கள் சக்தி பீடத்தாருடன் ஒத்துழைக்கா விட்டாலும் நாளாவட்டத்தில் முகமது கஜினியினால் நாடு படும்பாடு கண்டு தங்களுடைய சாதி சமய வேறுபாடுகளை மறந்து சர்வோத்தமரின் வழிகாட்டு நெறியில் ஒருங்கிணைய ஒப்பினர்.

     இதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும் பான்மையில் கர்நாடக நாட்டுத் திரிலேசான சிவாசாரியார் வங்கம் வந்ததுமே பல செயல் முறைகளை மேற்கொண்டார். சர்வோத்தமரின் சக்தி பீடம் ஒருபுறம் இத்தகைய ஐக்கியப் பணிகளையும் மேற்கொண்டதும் சோழன் தன்னுடைய பேராதரவையும் நல்கினான்.

     சமயச்சார்பு காரணமாக நாட்டில் அரசர்களிடையே பிளவுண்டு பண்ணாதிருக்க என்னென்ன ஏற்பாடுகளைச் செய்ய முடியுமோ அத்தனையையும் செயல்படுத்தும்படியான முயற்சிகளை எங்கும் எல்லோரும் மேற்கொள்ளும்படியாக முடிக்கிவிட்டான் சோழன். அதுகாறும் சமயம் காரணமாக வேறுபட்டிருந்த பலரும், இம்முயற்சி காரணமாகத் தங்கள் தனி நிலையை உதறிவிட்டுப் பொது நோக்கில் ஒன்றுபட்டிருக்க முடிவு செய்ததும் சோழனுக்குக் கிடைத்த இன்னொரு பெரும் வெற்றியாகும். எனவேதான் அன்று, அதாவது பரகேசரி இராஜேந்திர சோழ தேவன் காஜுராஹோவுக்கு விஜயம் செய்திருந்த நேரத்தில் வடநாட்டு அரசர்கள் பலரும் வந்தனர். அவர்கள் மட்டுமில்லை, அவர்களுடன் அவர்களுடைய சிறந்த மதியூக மந்திரிகள் சிலரும் வந்தனர்.

     வங்கத்தின் மகிபாலன், கோவிந்த சந்திரன், தர்மபாலன், ரணசூரன், பூரணசந்திரன், மாளவத்தின் பிரதான மந்திரி ருத்ரா நித்யன், கோவிந்த சந்திரனின் யுக்தி மிக்க மந்திரி சக்தி விக்ரஹன், இவன் அந்நாளில் பலமுறை வடபுல மன்னர்களிடையே ஐக்கியம் உண்டு பண்ண அரும்பாடுபட்டவன். வித்யாதரனின் அருமை நண்பன் அர்ஜுனன், ராஜ்யபாலனின் முன்னால் சேனாபதியும் இந்நாள் கன்னோசி மன்னனையே ஆட்டி வைப்பவனுமான சூத்ரதாரி ஜெயந்திரன், மன்னன் கோபாலன், அவன் மந்திரி மதனன் ஆகியவர்கள் தங்களுடைய ஏராளமான மெய்யுதவிகளுடன் காஜுராஹோவுக்கு வந்து சேர்ந்தனர்.

     சோழனின் வடபகுதிப் பிரதான சேனாபதியான திரிபுவன பூபதி, ஜெகவல்லப தேவர் தவிர, அவருடைய வடபகுதி அரசியல் ஆலோசகரான ஸ்ருதிமான் நாகசந்திர தேவன் என்றும் அக்காலத்தின் அதிமேதையான அரசியல் தந்திரியும் அங்கு வந்து சேர்ந்தான். இவன் வந்ததுமே இராஜேந்திரனுக்குப் புதியதோர் உற்சாகம் கூட உண்டாகிவிட்டது.

     நாகசந்திரனின் வரவு கண்டு சோழப் படைகள் கூட பெருந்தெளிவு கொண்டுவிட்டது.

     அவன் எல்லையில் வரும் போதே சோழ சேனாபதிகள் மட்டுமில்லை, வித்யாதரனே நேரில் சென்று வரவேற்றான்.

     “எங்கள் அரசர் இந்த நாட்டு ஐக்கியத்துக்காகத் தன்னாலானதைச் செய்யத் துணிந்திருக்கும் போது நான் அங்கே எங்கோ உறங்கிக் கிடக்கலாமா? பிராயம் காரணமாக ஏற்படும் பயணச் சிரமம் கூடப் பாராமல் பரகேசரி முதன் முதலாக ஒரு அன்னிய எதிரியை வாள் முனையில் அன்றி நேர் முறையில் சந்திப்பதாக அறிந்ததும், புது உற்சாகம் பிறந்துவிட்டது. புறப்பட்டுவிட்டேன்” என்று சுருதிமான் நாகசந்திர தேவர் அறிவித்ததும் சோழ சாம்ராஜ்ய மகாசேனாதிபதிகள் இருவரும் பெருமகிழ்ச்சி கொண்டனர்.

     சுருதிமான் நாகசந்திர தேவன்* வடமொழிப் புலமை படைத்த அக்காலத்தில் சாணக்கியன் என்று போற்றப்பட்டவன். கோவிந்த சந்திரனின் மந்திரி சந்தி விக்ரஹன், மூஞ்ச ராஜனின் மந்திரி ருத்ராதித்தன் இருவரும் இவனுடைய அடிச்சுவட்டில் வளர்ந்த அரசியல் மேதைகள் என்றும் கூறப்பட்டதுண்டு. நாகசந்திரன் பலிதம் மட்டுமின்றி, வடஎல்லையைத் தாண்டி சீனத்துக்கும், ஆப்கானிஸ்தானத்துக்கும், பாரசீகத்துக்கும், அரபு நாட்டுக்கும் சென்று வந்தவன். கீழைக்கடல் நாடுகளுக்கும் சென்றவன். இலங்கை, மலையம், மாயிருடதங்கம், நச்சவரம், மப்பாளம் ஆகிய நாடுகளில் எல்லாம் சுற்றுப்பயணம் செய்தவன். சிறந்த கணித நிபுணன். வான இயல் வல்லவன். இவனிடம் சில காலம் ஆல்பரூனி பீஜ கணிதம், வான இயல், வடமொழி ஆகியவற்றைப் பயின்றான் என்றும் கூறப்படுகிறது.

     *சுருதிமான் நக்கன் சந்திரன் என்னும் பெயருள்ள ஒருவன் ஹத்தூரைச் சேர்ந்தவன், சோழன் இராஜேந்திரன் காலத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. மேற்கூறிய பெயருக்கும் ஒற்றுமையிருப்பதால் இருவரும் ஒரே ஆளாகவும் இருக்கலாம் என்று கொள்ளவும் செய்யலாம்.

     சுருதிமான் பதினெட்டு மொழிகள் அறிந்த பல மொழி வல்லுனன் என்றும் வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

     எனவே இத்தகையவனைத் தனது வடநாட்டுப் பிரதிநிதியாக, சோழன் தேர்ந்தெடுத்து நியமித்துக் கொண்டது அரசியல் தந்திரமும் சாதுரியமான சாதனையுமாகும் என்று அக்காலத்தில் மூத்த சேனாபதியான மறையன் அருண்மொழி கூடப் பாராட்டினான் என்றால் வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? எனவே எண்பேராயமோ, ஐம்பெருங்குழுவோ அல்லது அமைச்சரவையோ இவனைச் சோழன் தனது வடநாட்டு அரசியல் பிரதிநிதியாக நியமித்ததைப் பூரணமாக ஆதரித்தது. மூத்த மகன் இராஜாதிராஜனும் ஆமோதித்திருந்தான். இனி அந்தக் குறிப்பிட்ட தினத்துக்கு வருவோம்!

     தமது மெய்யுதவிகள் தவிர உடனுதவித் துணைவனாக ஒட்ட நாட்டு இந்திரரதனை இந்த நாகசந்திரன் உடன் கொண்டு வந்திருந்தது, ஏனைய மன்னர்களிடையே பெரும் திகைப்பையும் இது உண்மைதானா என்ற சம்சயம் கூட ஏற்படுத்திக் குழப்பிவிட்டது. ஏனெனில் இந்திரரதன் யௌவனன் இல்லாவிட்டாலும் நடு வயதைத் தாண்டியவன் அல்ல. நல்ல பலசாலி, முரட்டுப் பிடிவாதமுள்ள உறுதி மனத்தினன். உரமுள்ள உடலும் உறுதியான மனமும் கொண்டவனாயிருந்ததால்தான் இலேசில்விட்டுக் கொடுக்காமல் சோழனுடன் முன்பு போராடினான். இத்தகைய எதிரியுடன் போரிடுவதில் சற்று அதிகமாகவே அக்கரை காட்டினான் சோழனும். ஜெகதேவ வல்லபன் சண்டையின் போது அவனைத் தன்னுடன் தனித்துக் கதைச் சண்டைக்கு வருமாறு அறை கூவினான். அஞ்சவில்லை இவன். இருவரும் பயங்கரமான கதைப் போர் ஒன்றை நடத்தினர்! வெற்றி தோல்வி யாருக்கு என்றே புரியாவிட்டாலும் அந்தப் போரில் முதலில் சளைத்துக் களைத்தவன் இந்திரரதன் இல்லை.

     ஆயினும் திரிபுவன பூபதியின் தந்திரமான போர் முறைகளை புரிந்து கொள்ள முடியாமல் அவர் நடத்திய படைகளுடன் இவன் மோதிய போது அவர் இவனை ஒட்டார தேசப்படைகளிடமிருந்து பிரித்து விட்டார். எனவே வெற்றி சோழர் பக்கம் திரும்பிவிட்டது. எனினும் இவன் சோழனிடமிருந்து தனது நாட்டை பிச்சையாக ஏற்க விரும்பவில்லை. இத்தருணத்தில்தான் தமக்கே இயற்கையாக உள்ள சாகசத்தைக் கையாண்டார் நாகசந்திரர்.

     “நிபந்தனை எதுவுமேயில்லை. நஷ்ட ஈடுபாடு மட்டும் உண்டு. சோழர் சாம்ராஜ்யாதிபதி என்று ஒப்பினால் போதும். சோழர் தம்மை ஒட்டார தேசாதிபதியாக அறிவிக்கவில்லை” என்றார்.

     தன்னை அவர் ஒட்டார தேசாதிபதி என்று கூறிக் கொள்ளவில்லை என்பதே தனக்கு ஒரு வெற்றிதான் என்று இவன் கருதும்படியான சூழ்நிலை உருவானதும் நிறைமனதுடன் நாட்டைத் திரும்பப் பெற்றான். அன்று முதல் இவன் நாகசந்திரனின் அன்பு நண்பன்; அவருடன் நெருக்கமாக ஒட்டிக் கொண்டு நம்பிக்கையாக இழைந்தான் என்றும் கூறலாம்.