![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
முன்னுரை இத் தொகுதியில் என்னுடைய இரண்டு நாவல்கள் (குறு நாவல்கள் என்ற பெயர்தான் உங்களுக்குப் பிடிக்குமானால் எனக்கும் ஆட்சேபணையில்லை) உள்ளன. ‘விரோத வெள்ளம் வடிந்தபின்’ ஒரு பகைமை முற்றிய மனம் நல்ல படி மாறுவதைச் சித்திரிக்கும் ‘முள் வேலிகள்’ என்ற நாவலும், அழகுள்ள ஆண்மகனைவிடச் சமூக உணர்வுள்ள ஓர் ஆண்பிள்ளையைத்தான் பெண் நேசிக்க முடியும் என்று கூறுகிற சுலட்சணாவை அறிமுகப்படுத்தும் - ‘சுலட்சணா காதலிக்கிறாள்’ என்ற நாவலும் சேர்ந்தது இப்புத்தகம். அதாவது இரண்டு முழு நாவல்கள் அடங்கிய ஒரே புத்தகம். இவ்விரண்டு நாவல்களும் சில சில பக்கங்கள் வீதம் பல வாரங்கள் தொடராக வெளிவந்து பின்பு ஒன்றாக நூலாக்கியவை அல்ல. முழுமையாக எழுதப்பட்டு வெளி வந்து முழுமையாகவே இன்று புத்தக வடிவிலும் வருபவை. அக்கம் பக்கத்திலுள்ள பிறர் தனக்கு விரோதிகளோ என்கிற வீண்கற்பனையில் ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றித் தானே அநாவசியமாக ஒரு முள்வேலி போட்டுக் கொள்கிறான், அந்த வேலி தகரும்போதுதான் உண்மை அவனுக்குப் புரிகிறது. விரோதம் என்கிற வெள்ளம் வடிந்தபின்பே கண்ணனுக்கும் உண்மை புரிகிறது. சுற்றி இருந்த முள்வேலிகள் தகர்கின்றன. மனிதனோடு மனிதனைப் பற்றிய முக்கால்வாசி விரோதங்கள் கற்பிதமானவை. அவை தவிர்க்க வேண்டியவை. தவிர்க்க முடிந்தவை - தவிர்க்கக் கூடியவை என்பது முதல் நாவலில் விவரிக்கப்படுகிறது. இரண்டாவது நாவல் 'சுலட்சணா காதலிக்கிறாள்' என்பது. பணமும் படிப்பும் முகவசீகரமுமுள்ள ஒரு பயந்தாங் கொள்ளியைவிட வறுமையும், அழகின்மையும் உள்ள ஒரு தைரியசாலியைத் தன் பிரியத்துக்குரியவனாகத் தேர்ந்தெடுக்கும் புதுமைப் பெண்ணாகிய சுலட்சணாவின் கதை இது. வசதியும், அறிவும் வசீகரமும், உள்ள ஒரு பரம்பரைப் பணக்கார இளைஞனைவிடப் பொதுவாழ்வில் ‘சிவிக் கரேஜ்’ என்கிற சமூகத் துணிச்சலோடு ‘ரிஸ்க்’ எடுத்துக் கொள்ளத் துணிந்து முன் வருகிற ஒரு சாதாரண இளைஞனையே சுலட்சணாவால் காதலிக்க முடிகிறது. இது ஒரு நுணுக்கமான மனோதத்துவக் கதை. ஒரு ரெஸிடென்ஷியல் பல்கலைக் கழகச் சூழ்நிலையில் எழுதப்பட்டிருக்கிறது. துணைவேந்தர், ஆக்டிங் வி. சி. எல்லாரும் வருகிறார்கள். போராட்டம் வருகிறது. அரசியல் பின்னணி, சூழ்நிலை எல்லாம் கூட வருகின்றன. ஆனால் கதைக்கு மையமானவள் சுலட்சணா தான். அவளைச் சுற்றியே கதை நடக்கிறது. கதையைச் சுற்றி அவள் நடக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த இரு நாவல்களையும் படியுங்கள், சிந்தியுங்கள். கருத்துக்களைக் கலந்து பரிமாறவும் வாசகர்களாகிய உங்களுக்குத் தாராளமான உரிமை இருக்கிறது. கருத்துப் பரிமாற்றம் மூலமே விமரிசனமும் வளர முடியும். இலக்கியப் படைப்பும் வளர முடியும் என்ற நம்பிக்கை உடையவர்களில் யானும் ஒருவன். முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ளப்பட்டு விடுகிற நிர்ப்பந்தமான விருப்பு வெறுப்புக்களோடு எந்த ஒரு நூலையும் அணுகும் பழக்கம் இலக்கிய உலகில் தவிர்க்கப்பட வேண்டும். திறந்த மனத்தோடு ஒரு நூலை அணுகிப் படித்து அதன்பின் முடிவு செய்வதே இயல்பான விமர்சன நிலை. ஆனால் இன்று விமர்சகர்களில் பலருக்கும் வாசகர்களில் சிலருக்கும் அத்தகைய இயல்பான விமர்சன மனப்பான்மை இல்லை என்பதால் தான் இதை இந்த முன்னுரையில் சற்றே அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. இனி நீங்கள் புத்தகத்தைப் படிக்கலாம். நா. பார்த்தசாரதி தீபம் சென்னை - 600002 27-8-1986 |