![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
8 ஒருநாள் காலை-ஐயப்பன் நகர் மேற்கு முதல் குறுக்குத் தெரு ஒன்பது, பத்து, பதினொன்று எண்ணுள்ள வீடுகளுக்கு இடையே பயரங்கரமான கூப்பாட்டுடன் தெருச் சண்டை ஒன்று நடந்தது. ஊரே தெருவில் கூடிவிட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை. எல்லாரும் வீட்டில் தான் இருந்தனர். பத்துமணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு மரக் கிளைகளும் மின்சார வயரும் உரசுகிற இடங்களாகப் பார்த்து மரக்கிளைகளை வெட்டிக் கொண்டு வந்தனர் மின்சார வாரிய ஆட்கள். மின்வாரிய லாரி கண்ணன் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தக் காலனி முழுவதும் அண்டர்கிரவுண்ட் கேபிள் இல்லாத காரணத்தால் சர்ஃபேஸ் லயனில் இடிக்கும் மரக் கிளைகள், தென்னை ஓலைகளை வெட்டிவிட்டுச் சரி செய்வதற்காக லயனை ஆஃப் செய்துவிட்டு இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இப்படி மின்சார வாரிய ஆட்கள் வந்து போவார்கள். மரஞ்செடி கொடிகள் தாராளமாகத் துவம்சம் ஆகும். இப்படி ஒவ்வொரு முறையும் காலனியின் பசுமையைச் சவரம் பண்ணும் இந்தப் பணி சவிஸ்தாரமாக நடைபெறும். காலனி வாசிகளுக்குச் சில மணிநேரம் மின்சாரம் இல்லாமல் போவதோடு மரம் செடி கொடிகளுக்கும் கடுமையான சேதம் ஏற்படும். காலனியின் பசுமை கணிசமாகப் பறிபோகும். கண்ணன் வீட்டு வாசலில் இருந்த ஒரு மின்சாரக் கம்பத்திலிருந்துதான் பாகவதர் வீட்டுக்கும் சரி, அம்மிணி அம்மாள் வீட்டுக்கும் சரி, இருவருக்குமே ஓவர்ஹெட் வயர் மூலம் கனெக்க்ஷன் போயிற்று. அதே கம்பத்திலிருந்து கண்ணன் வீட்டுக்கும் நடுவாக ஓவர்ஹெட் வயர் இழுக்கப் பட்டிருந்தது. இப்படித் திரிசூலத்தின் மூன்று கோணங்களைப் போலக் கண்ணன் வீட்டு வாயிலிலிருந்து ஓவர்ஹெட் வயர்கள் போனதால் அவ்வப்போது கண்ணனின் முகப்புத் தோட்டத்து மாமரம், வேப்பமரம், பப்பாளி, தென்னை, கிறிஸ்துமஸ் மரம் எல்லாம் வெட்டுதலுக்கு ஆளாயின. அவன் வீட்டுக்கான கனெக்க்ஷன் வாயிலுக்கு நேராக ஓவர்ஹெட் லயனில் வந்ததால் அந்த ரூட்டில் மரங்களே இல்லை. ஆனால் இருபக்கத்து வீடுகளுக்குமாக அவன் வீட்டை நடுவாக வகிர்ந்து கொண்டு போன ஓவர்ஹெட் கனெக்க்ஷன்களால் - அவற்றுக்கு இடையூறு என்ற பெயரில் வந்து அவன் தண்ணீர் ஊற்றி வளர்த்த அருமை மரங்களை அடிக்கடி சிதைத்து வெட்டினார்கள் மின்வாரிய ஆட்கள். இது வழக்கமாக நடக்கிற சேதம்தான் என்றாலும் அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் கண்ணன் கண்முன்பே அவனது பசுமை சிதைக்கப்பட்டது. ஓலையை வெட்டுகிறேன் என்ற சாக்கில் மின்சார வாரியத்தின் ஆள் கைத்தவறுதலாக ஒரு குலை இளநீரையும் கீழே வெட்டித் தள்ளி விட்டான் அன்று. இதைக் கண்டு கண்ணன் தெருவுக்கு வந்து கூப்பாடு போட்டான்: “விவஸ்தை இருந்தா அடுத்தவன் வீட்டு வழியாக கனெக்க்ஷன் வாங்கிக்கிட்டு உயிரை எடுக்கப்பிடாது. அவங்கவங்க வீட்டுக் கனெக்க்ஷன் அவங்கவங்க வீட்டு வழியா இருக்கணும், மானரோஷம் இல்லாத ஜன்மங்க பக்கத்து வீடுகளிலே குடியிருந்தா என்ன பண்ணமுடியும்?” இந்தக் கூப்பாடு காதில் விழுந்து முதலில் பாகவதர்தான் வெளியே வந்தார். அப்புறம் சிறிது நேரத்தில் அம்மிணி அம்மாள் வெளியே வந்தாள். கண்ணன் இருவர் காதிலும் விழுகிறாற்போல மறுபடியும் இரைந்தான். “உங்களாலே என் வீட்டு மாமரமும் தென்னை மரமும் பாழாகுது. முதல்லே பணம் கட்டி அண்டர் கிரவுண்ட் கேபிள் கனெக்க்ஷன் வாங்கப் பாருங்க. இல்லாட்டிக் கம்பத்திலிருந்து நேரே அப்படியே ஸ்டிரெயிட்டா உங்க மொட்டை மாடிக்கு ஓவர் ஹெட் கனெக்க்ஷன் வர்ற மாதரி ஒரு புதுப் போஸ்ட் நடச் சொல்லி ஏற்பாடு பண்ணிக்குங்க... உங்களுக்காக நான் தொடர்ந்து நஷ்டப்பட முடியாது.” “மிஸ்டர் கண்ணன்! கொஞ்சம் அடக்கமாகவே பேசுங்கோ. இதுக்கு ஏன் இப்பிடி ஊரெல்லாம் கூடற மாதிரிக் கூப்பாடு போடறீங்க? இந்த வீடுகளுக்கு இப்படி உங்க வீட்டுக்குள்ளே கூடி ஊடுருவி வர்ற மாதிரிக் கனெக்ஷன் தரச் சொல்லி நான் கேட்டு வாங்கிக்கலே... வீடுகள் உங்களுக்கும் எனக்கும் அலாட் ஆகிறதுக்கு முன்னாடி எல்லா வீடுகளுமே ஹவுஸிங் வாரியத்துக்குச் சொந்தமா இருந்தப்ப அவங்களே எலெக்ட்ரிசிடி போர்டுக்கு எழுதி இப்பிடி எல்லாம் தாறுமாறாக் கனெக்க்ஷன வாங்கித் தொலைச்சிருக்காங்க.” “அதுக்காக என் தோட்டம், மரங்கள் செடிகொடிகள்லாம் இப்பிடி நாசமாகணுமா?” “யார் சொன்னா அப்பிடி? அவங்க இப்பிடி அடிக்கடி வந்து என் வீட்டு ஓவர்ஹெட் லைனுக்காக உங்க வீட்டு மரங்களை வெட்டறது எனக்கும்தான் பிடிக்கலை.” “பிடிக்கலைன்னு சும்மா வாயால் சொல்லிட்டா மட்டும் ஆச்சா? அதைத் தவிர்க்க உருப்படியா நீங்களோ அந்தப் பக்கத்து வீட்டு அம்மாளோ எதுவுமே பண்ணினதாத் தெரியலேயே?” “எங்க எல்லோருக்கும் நீங்கதான் பிரதிநிதி! அதாவது காலனி வெல்ஃபேர் அஸோஸியேஷனின் காரியதரிசி. காலனி முழுவதும் உடனே அண்டர்கிரவுண்ட் கேபிள் சிஸ்டத்தை இண்ட்ரொடியூஸ் பண்ணச் சொல்லி அஸோஸியேஷன் சார்பில் எம்.இ.எஸ். டிவிஷனல் இன்ஜீனியருக்கு நீங்களே ரெப்ரஸெண்ட் பண்ணுங்களேன்! அதை விட்டு விட்டு...” இதைக் கேட்டுக் கண்ணன் தன்னை அவர் வகையாக மடக்கி விட்டது போல உணர்ந்தான். உடனே காலனி அஸோஸியேஷன் செயலாளர் பதவியையே ராஜிநாமா செய்து விடலாமா என்று கூட ஆத்திரம் வந்தது அப்போது அவனுக்கு. “பாகவதர் பறஞ்சது சரி. நீங்கதான் இதுக்கு வழி பண்ணனும்” - என்று அம்மிணி அம்மாளும் சேர்ந்து கொள்ளவே கண்ணனுக்குக் கடுப்பு மேலும் அதிகமாயிற்று. கொஞ்சம் யோசித்துச் சுதாரித்துக் கொண்டு, “அஸோஸியேஷன் மூலமாச் செய்யறதைவிட நீங்க ரெண்டு பேரும் தனித்தனியே பணத்தைக் கட்டி உங்க ரெண்டு வீட்டுக்கும் கேபிள் கனெக்க்ஷன் கேட்டுக்கிறது ரொம்ப சுலபம்” என்றான். “நான் காலனியில் இருக்கிற எல்லாருடைய பிரசினைகளும் தீர யோசனை சொல்றேன். நீங்க என்னடான்னா எங்க ரெண்டு பேர் பிரசினையும், உங்க பிரசினையும் தீர மட்டும் யோசனை சொல்றீங்க...” “அதெல்லாம் எனக்குத் தெரியாது! நீங்க ரெண்டு பேரும் இதற்கு வழி பண்ணிக்கலேன்னா நான் சட்டப்படி ஏதாவது கடுமையாகச் செய்ய வேண்டியிருக்கும்.” இதைக் கேட்டுப் பாகவதருக்கும் பொறுமை மீறி ஆத்திரம் வந்துவிட்டது. அவரும் கறாராக ஒரு பதிலை உடனே தெரிவித்தார். “நான் உம்மைப் பொது மனிதர்னு மதிச்சு இதுவரை மரியாதை கொடுத்தேன். நீரோ சுயநலமாக மட்டுமே பேசுகிறீர். உம்மால் முடிஞ்சதை நீர் செய்துக்கலாம். கவலையில்லை.” மேற்கொண்டு அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று கேட்கக் காத்திராமல் பாகவதரும் அம்மிணி அம்மாளும் தத்தம் வீட்டுக்குள்ளே திரும்பிப் போய்விட்டார்கள். இப்போது கண்ணனுக்கு அவமானப்பட்டு விட்டது போன்ற உணர்வு துடிதுடித்தது. ஏதாவது தீவிரமாகச் செய்தாக வேண்டுமென்று எண்ணினான். அவன் உள்ளே வந்ததும், “ஒண்ணுமில்லாத விஷயத்தை எல்லாம் ஏன் பெரிது படுத்தி அக்கம்பக்கத்தாரை வம்புக்கு இழுக்கிறீர்கள்? எலெக்ட்ரிசிடிக்காரன் வந்து லயன்லே இடிக்கிறதுன்னு மரம் செடி கொடிகளை வெட்டினா அதுக்கு இவங்க என்ன பண்ணுவாங்க? இவங்களை ஏன் திட்டறீங்க?” என்றாள் சுகன்யா. “உன் மரமண்டைக்கு இதெல்லாம். புரியாது! அவங்க ரெண்டு பேருடைய வீட்டுக்கும் போற ஓவர்ஹெட் லைனாலே தான் நம்ம தோட்டம் பாழாகுது.” “அதை அமைதியா அவங்ககிட்டே எடுத்துச் சொன்னாக் கேட்டுப்பாங்களே! இத்தனை சத்தம் போட்டு எம்.இ.எஸ். காரன் முன்னாடி அங்கேயே தெருவிலே வச்சா அவங்களை வம்புக்கு இழுக்கணும்?” சுகன்யாவின் வார்த்தைகளை அவன் பொருட்படுத்தவே இல்லை. ‘உம்மால் முடிஞ்சதை நீர் செஞ்சுக்கலாம்’ - என்று பாகவதர் கடைசியாகச் சவால் விட்டு விட்டு உள்ளே போனதுதான் நினைவுக்கு வந்தது. அந்த வேளை பார்த்துச் சகுனியைப் போல் அந்த நண்பனும் வந்து சேர்ந்தான். கண்ணனின் போதாத வேளையோ அல்லது நண்பனின் அதிர்ஷ்டமோ அவனிடம் போய் மின்சார லைன் தகராறு முதல் பாகவதர் சிபாரிசின் பேரில் அம்மிணி அம்மா காலனியில் கோயில் கட்ட நன்கொடை கொடுத்தது வரை எல்லாம் சொல்லித் தொலைத்தான். நண்பன் பதிலுக்குக் கண்ணனைக் கேட்டான்: “உண்மை விளம்பியிலே பச்சை பச்சையாப் புட்டுப்புட்டு வச்சப்புறமும் அவங்க இன்னும் மிரளலையா? ஊர் சிரிச்சுதேப்பா?” “உஹும்! ‘அதுலே வந்தப்புறம் தான் தனக்குப் பப்ளிஸிடி அதிகமாயிருக்குன்னு’ பாகவதர் பெருமையாச் சொல்றாரு. அந்தம்மா கவலையே படலே...” “அப்பிடியா? இன்னும் ‘டோஸேஜ்’ அதிகமாக்கணும் போல் இருக்கு. வரட்டும் ‘மஸாஜ் பார்லர்’ விவகாரத்தை ஒரு பிடி பிடிக்கிறேன். அவனவன் இப்பிடி இலேசா ஒரு ஃபீலர் வீட்டாலே ஐயாயிரம், பத்தாயிரம் ரொக்கத்தை எடுத்துக்கிட்டு ஒடியாந்து, ‘இதை வச்சுக்க! இனிமே என்னைப் பத்தி எழுதாதே... வுட்டுடு’ங்கறான். இந்த மலையாளத்துப் பொம்பிளைக்கும் இஞ்சிகுடிக் கஞ்சித் தொட்டிக்கும் இத்தினி திமிரா? பார்த்துடறேன் ஒரு கை.” இதில் நண்பனின் சுயரூபம் ஓரளவு புரிந்தாலும் கண்ணனால் அவனை அறவே கத்திரித்துக் கொள்ள முடியவில்லை. பாகவதர், அம்மிணி அம்மா விரோதத்தில் அவர்களை எதிர்க்க உதவியாயிருக்கும் புலவர் மகிழ்மாறன், உண்மைவிளம்பி நண்பன், எல்லாரையுமே அரவணைத்துக் கொண்டுதான் போக வேண்டியிருந்தது. குறுகிய நோக்கங்களிலும் மொழி இன வெறுப்புக்களிலுமே காலந்தள்ளிய மகிழ்மாறனும் சரி, பிளாக் மெயிலை நாசூக்காகச் செய்து பிழைத்து வந்த உண்மைவிளம்பி நண்பனும் சரி, முழுமையான மனிதர்களாகக் கண்ணுக்குத் தோன்றவில்லை என்றாலும் கண்ணன் அப்போது அவர்களைத் தட்டிக் கொடுக்க வேண்டியிருந்தது. மின்சார லைன் தகராறு நடந்த தினத்தன்று மாலையே வல்வழக்குகள் போடுவதில் செஞ்சுரி போட்ட ஒரு வம்புக்கார வக்கீலிடம் கண்ணனை அழைத்துப் போய்ட்டான் நண்பன். அந்த வக்கீல்தான் உண்மை விளம்பியின் சட்ட ஆலோசகராம். கண்ணன் அவரிடம் மின்சாரத் தகராறு பற்றி எல்லாவற்றையும் விவரித்ததும் அவரே பொய்யாக ஒரு கேஸை ஜோடித்துச் சொன்னார். “இரண்டு பக்கத்து வீட்டு ‘லைன்’கள் அவ்வப்போது அறுந்து விழ நேர்ந்ததனாலேயும், செடிகள்லே உரசறதுனாலேயும் தோட்டத்திலே நடமாடற உங்க குழந்தைகளோட. உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்னு கேஸைக் கொண்டு போகலாம். முதல்லே ஒரு இருநூறு ரூவா கொடுங்க... இந்த வக்காலத்துலே ஒரு கையெழுத்தும் போட்டுடுங்க... பாகவதர், அம்மிணி அம்மா, எம்.ஈ.எஸ் மூணு பேருக்கும் நோட்டீஸ் குடுத்திடுவோம்.” கண்ணன் தயங்கினான். “இப்பக் கையிலே அவ்வளவு பெரியதொகை இல்லே! நூறு ரூபாய் வரை இருக்கும்...” “சரி அதைக் குடுத்துவிட்டுப் போங்க! பாக்கியை நாளைக் காலையிலே கொண்டாந்து குடுத்துடுங்க.” கண்ணன் கையிலிருந்த பணத்தை எல்லாம் திரட்டி நூறு ரூபாயை வக்கீலிடம் கொடுத்தான். உண்மை விளம்பி நண்பன் வக்கீலிடம் தனக்குத் தனியே கொஞ்சம் வேலையிருப்பதாகச் சொல்லவே அவனை அங்கேயே விட்டுவிட்டு வீடு திரும்பினான் கண்ணன். அங்கே வீட்டில் ஏற்கெனவே புலவர் மகிழ்மாறன் வந்து கண்ணனுக்காகக் காத்திருந்தார். கூட இருவர் சேர்ந்து வந்து காத்திருந்தனர். கண்ணனைப் பார்த்ததும் புலவர் தொடங்கிக் கூறலானர். “இவங்க தமிழர் தன்மானப் படையைச் சேர்ந்த இளைஞர்கள். நம்ம குடியிருப்பு அளவில் பிறமொழி விளம்பரப் பலகைகளை நீக்கித் தமிழில் எழுதணும்னு ஒரு இயக்கம் தொடங்கியிருக்கோம். உங்க ஒத்துழைப்பு எங்களுக்கு வேண்டும்.” “தாராளமா உண்டு! நீங்க தொடங்கற எந்த மூவ்மெண்டிற்கும் என் ஒத்துழைப்பு உண்டு. இந்தக் காலனியிலே ரெண்டு தமிழ் எதிரிங்க இருக்கிறது உங்களுக்கே நல்லாத் தெரியும். ரெண்டு பேருமே எங்க பக்கத்து வீட்டுக்காரங்கதான்.” “வலையிடைப்பட்ட மானென அலையிடைப்பட்ட துரும்பென மலையிடைப்பட்ட மீனென நீங்கள் நடுவே சிக்கித் தவிப்பதும் எனக்குத் தெரியும்” என்று தன் பாணியில் வர்ணித்தபடியே நன் கொடை தருவோர் பட்டியல் என்ற ஒரு வசூல் நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கண்ணனிடம் நீட்டினார் புலவர். கண்ணன் உள்ளூர எரிச்சலும் வெளியே ஒப்புக்கு முகமலர்ச்சியுமாக வக்கீலிடம் அழுதது போகக் கைச் செலவுக்கு மிச்சமிருக்கட்டும் எனப் பர்ஸில் ஒதுக்கி வைத்திருந்த ஒரு பத்து ரூபாயை எடுத்துப் புலவரிடம் கொடுத்து விட்டு நோட்டில் தன் பெயரை எழுதிக் கையெழுத்துப் போட்டுத் திருப்பிக் கொடுத்தான். புலவர் எழுந்து போனால் போதும் என்றாகிவிட்டது அவனுக்கு. “உங்க ஒப்புதல் கிடைக்கும்கிற நம்பிக்கையிலே இதில் ஒரு சிறு திருத்தம் செய்துக்க அநுமதியளிக்கணும் நீங்க! முதல் முதல்லே கையெழுத்துப் போட்டு நன்கொடையைத் தொடங்கி வைத்திருக்கிறீர்கள். நீங்களே பத்து வெண் பொற் காசுகள்தான் தந்திருக்கிறீர்கள் என்று பார்த்ததும் இதற்குக் கீழே கையொப்பமிடுகிறவர்கள் ஐந்து, இரண்டு என்று தொகையைப் படிப்படியாய்க் குறைத்து விடுவார்கள். ஆகவே நீங்க எழுதியிருக்கிற 10க்குப் பக்கத்திலே ஒரு ஒண்ணு மட்டும் போட்டு நூத்தி ஒண்ணுன்னு திருத்திக்கறேன் அதனாலே உங்களுக்குச் செலவு ஒண்ணுமில்லே. எனக்கு வரவு உண்டு.” “ஒ எஸ்! தாராளமாப் பண்ணிக்குங்க புலவரே! நமக்குள்ளே இதெல்லாம் சொல்லிட்டுத்தானா செய்யணும்? என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரி உரிமையை நீங்க தாராளமா எடுத்துக்கலாம்.” புலவர் தொகையைத் திருத்திக்கொண்டு விடைபெற்றார். உண்மை விளம்பி நண்பன், புலவர் மகிழ்மாறன் இவர்களால் தனக்கு ஒரு பயனும் இல்லாவிட்டாலும் மற்றவர்களை எதிர்க்க இவர்கள் தன்னோடு துணை நிற்கிறார்கள் என்ற ஒரே காரணத்தால் கண்ணன் இவர்களைத் தாங்கிச் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்ற சர்வதேச இராஜ தந்திரக் கொள்கையை அண்டை வீட்டார் விஷயத்திலும் கண்ணன் கடைப்பிடித்தான். எதிரியின் எதிரிகளை நண்பர்களாக்கிக் கொள்ள ஆகிற செலவைவிடச் சிக்கனமாக எதிரிகளையே நண்பர்களாக்கிக்கிக் கொள்கிற மிகச் சுலபமான முயற்சியைக் கண்ணன் ஏனோ மறந்து போயிருந்தான். குருட்டுத்தனமான துவேஷம் அவன் கண்களை நன்றாக மூடி மறைத்திருந்தது. |