![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம்,  அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்  எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)  | 
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 24. ‘செய்தி பரவியது’  | 
10 காலனி நலன் நாடுவோர் சங்கத்தின் அவசரப் பேரவை கூடியது. புலவர் மகிழ்மாறன் தன் அடியாட்களோடு கூட்டத்துக்கு வந்திருந்ததுடன் இரண்டு நிமிஷத்துக்கு ஒருமுறை கண்ணனின் அருகே வந்து காதருகே ஏதேதோ சொல்லிவிட்டுப் போனார். கண்ணணோடு மிக நெருக்கமாகக் காட்டிக் கொண்டார். அவர் இப்படிச் சொல்லிவிட்டுப் போனதன் மூலம் கண்ணணோடு தான் மிகவும் நெருக்கம் என்று பேரவையின் கண் முன் வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ளவே, பேரவைக்குக் கண்ணன் மேலிருந்த வெறுப்பு அதிகமாயிற்று. தாம் யாரை நெருங்கி நிற்கிறாரோ அவர்களை அறவே திவாலாக்கி விடுவது புலவரின் வழக்கம். அன்றும் அதைத் தான் நடத்திக் கொண்டிருந்தார் அவர். வெற்றிகரமாகவே நடத்திக் கொண்டிருந்தார் என்று கூற வேண்டும். தலைவரும் மற்றவர்களும் கூட்ட ஆரம்பத்திலேயே புலவரின் அடியாட்கள் கூட்டத்தில் ஊடுருவியிருப்பதைக் கவனித்து இரகசியமாகப் போலீஸ் பாதுகாப்புக்குச் சொல்லியனுப்பி விட்டிருந்தார்கள். வெளியே போலீஸ் வந்து நின்றதும் தலைவர் எழுந்து அறிவித்தார்: “இந்தக் காலனி அஸோஸியேஷன் அங்கத்தினர்கள் அல்லாத அந்நியர் யாரும் இந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தால், தயவுசெய்து அவர்கள் உடனே வெளியேறி விடுமாறு வேண்டுகிறோம்.” சங்கத் தலைவர் இப்படி அறிவித்த பின்பும் சிலர் வெளியேறாமல் இருக்கவே நிர்வாகிகள் வேறு முடிவுக்கு வந்தார்கள். எல்லாரையுமே வெளியேறச் செய்து மறுபடி ஆட்களை உறுப்பினரா இல்லையா என்று அடையாளம் பார்த்து அப்புறம் உள்ளே விடுவது என்று ஏற்பாடு ஆயிற்று. போலீஸ் உதவியுடன் உறுப்பினர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு பெயராகப் படித்து ஆட்களை உள்ளே விட்டதும் கதவு உட்புறமாகத் தாழிடப்பட்டு அடைக்கப் பட்டுவிட்டது. புலவர் மகிழ்மாறனோடு வந்திருந்த தன்மானத் தமிழர் பட்டாளத்து ஆள் முப்பது பேருக்குமேல் வெளியேற வேண்டியதாகி விட்டது. உறுப்பினர் என்ற முறையில் மகிழ்மாறன் மட்டும் உள்ளே விடப்பட்டார். ஆனால் மற்றவர்கள் அங்கு அவரை ஒரு வெறுப்போடு முறைத்துப் பார்த்தார்கள் என்பது வெளிப்படவே தெரிந்தது. இந்த ஏற்பாடுகள் முடிந்ததும் தலைவர் எழுந்திருந்து பொதுவாக ஓர் உரை நிகழ்த்தினார். பொதுப்படையான பேச்சுப் போல ஒலித்தாலும் அங்கங்கே தன்னைச் சாடுவது போல் அவரது உரையில் உள்ளர்த்தம் இருப்பதைக் கண்ணன் கண்டு கொள்ள முடிந்தது. “ஒரு காலனியின் வளர்ச்சியைக் கவனிக்கும்போது எல்லார் நலனுக்கும் பாடுபடக்கூடிய பரந்த மனத்தோடு இருப்பது தான் நல்லது. தனித்தனி விரோதங்களைப் பெரிது படுத்தி வளர்த்தால் எந்தச் சங்கமும் உடைந்து விடும். ஒற்றுமையும் பொதுநல நோக்கமும்தான் இத்தகைய வெல்ஃ பேர் அஸோஸியேஷன்களுக்கு முழுமூச்சாயிருக்க வேண்டும். நமது உறுப்பினர்கள் பலர் சில மனத்தாங்கல்களைத் தெரிவிக்க இந்த அவசரக் கூட்டத்தைக் கூட்டும்படி வேண்டினார்கள். முதலில் ஏகாம்பர முதலியார் அவர்கள் பேசுவார்.” மிகவும் வயது மூத்தவராகிய ஏகாம்பர முதலியார் பேச வருவது போல வந்து திடீரென்று சட்டைப் பைக்குள் கையை விட்டு ஒரு காகிதத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். “இந்தக் காலனி நலன் நாடுவோர் சங்கத்தின் செயலாளராயிருந்து கொண்டே காலனியின் நலனுக்கும் ஒற்றுமைக்கும் புறம்பான காரியங்களில் ஈடுபடும் கண்ணன் அவர்கள் மேல் பெரும்பாலான உறுப்பினர்கள் நம்பிக்கையிழந்து விட்டதால் அவர் உடனடியாகச் செயலாளர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யவேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் இப் பேரவையில் முன் மொழிகிறேன்.” “அதை நான் வழி மொழிகிறேன்” என்றார் மாவுமில் உரிமையாளர் சங்கர சுப்பிரமணியம். “இப்படிச் செய்வது மரியாதை இல்லை. கண்ணன் இந்தக் காலனி நலனுக்காக எவ்வளவோ செய்திருக்கிறார். அவருக்கு விளக்கம் சொல்லச் சந்தர்ப்பம் தந்து அவரது விளக்கம் நியாயமாயிருந்தால் அவரே செயலாளர் பதவியில் தொடர வாய்ப்பளிப்பதுதான் முறை” என்று பாகவதர் குறுக்கிட்டது கண்ணனுக்கு ஆச்சரியமளித்தது. அதை விடப் பெரிய ஆச்சரியம், “பாகவதர் சொல்றதுதான் என் அபிப்ராயமும்! அவசரப்பட்டுக் காரியதரிசியை மாத்த வேண்டியதில்லை” என்று அம்மிணி அம்மாளும் தொடர்ந்த போது கண்ணனின் ஆச்சரியம் இன்னும் அதிகமாயிற்று. அப்போது மகிழ்மாறன் கண்ணனின் காதருகே வந்து முணு முணுத்தார். “அத்தனையும் வேஷம்! நம்பி ஏமாந்து போயிடாதீங்க... இவங்க துாண்டிவிட்டுத்தான் இத்தனையும் நடக்குது. சும்மா உங்க கண் முன்னாலே இப்பிடி உங்களை ஆதரிக்கிற மாதிரி நாடகமாடருங்க.” “என் மேல் என்ன குற்றம்னே சொல்லாமல் தீர்மானம் கொண்டு வர்றப்போ நான் எப்படி விளக்கம் சொல்லமுடியும்?” கண்ணன் இப்படி எழுந்து கேட்கவும் கூட்டத்தில் மூலைக்கு மூலை ஆத்திரமான குரல்கள் கிளம்பின. அங்கே கண்ணனுக்கும் புலவருக்கும் கடுமையான எதிர்ப்பு இருந்தது. அவர்களை எழுந்து பேசவிடாத அளவு கூட்டம் ஆத்திரமாயிருந்தது. ஏதோ எழுந்து பேச முயன்று முடியாமல் போய்த் திணறிய கண்ணன், “நீங்க உங்க இஷ்டப்படி முடிவு பண்ணிக்கலாம்” என்று நிராதரவாக அப்படியே உட்கார்ந்து விட்டான். வேறு எதுவும் செய்ய முடியாத நிலைமை அவனுக்கு. “அதெல்லாம் நீங்களா முடிவு பண்ணினா ஒண்ணும் சட்டப்படி செல்லாது. முறைப்படி தீர்மானத்தை ஓட்டுக்கு விட்டாகணும்” என்று புலவர் ஆவேசமாக எழுந்து கத்தினார். அவர் அப்படிச் செய்ததும் கண்ணனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவரை அவனால் தடுக்கவும் முடியவில்லை. தலைவர் எழுந்து கூட்டத்தை அமைதியாயிருக்குமாறு வேண்டிவிட்டு, “இப்போது இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் அனைவரையும் கை தூக்குமாறு வேண்டுகிறேன்” என்றார் பாகவதரும் அம்மிணி அம்மாளும் தாங்கள் ஒட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றார்கள். முதலிலேயே ஒதுங்கிக் கொண்டார்கள். கண்ணனையும், மகிழ்மாறனையும் தவிர அனைவரும் கை தூக்கினர். முடிவு தெரிந்து விட்டாலும் ஒரு முறைக்காக, “இப்போது இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளிப்பவர்கள் கை தூக்கலாம்” என்பதையும் தலைவர் அறிவித்தார். மகிழ்மாறனின் கை மட்டுமே உயர்ந்தது. கண்ணன் ஏதோ ஞாபகத்தில் பேசாமலிருந்து விட்டான். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேறியதாகத் தலைவர் அறிவித்தார். கண்ணன் முகத்தில் ஈயாடவில்லை. புலவரால் வந்த அவமானம் பொறுக்க முடியாமல் சங்க நிர்வாக சம்பந்தமான மினிட்ஸ் புக், ரசீது, லெட்ஜர் எல்லாவற்றையும் தலைவர் முன் தூக்கி எறிந்துவிட்டு ஆத்திரமாக வெளியேறினான் அவன். “பாகவதர் ஆதிக்கம் ஒழிக” என்று கத்திக். கூப்பாடு போட்டவாறு புலவரும் தன்னைப் பின் தொடர்ந்து வெளியேறியது கண்ணனுக்குப் பிடிக்கவில்லயானாலும் அதைத் தடுக்கவும் அவனால் முடியவில்லை. பலாத்காரமாக இந்தப் புலவர் தன் மேல் விழுந்து விழுந்து ஆதரிப்பதன் மூலம் தான் இன்னும் நிறைய அவமானப் பட நேரப்போகிறது என்றே அவன் உள்மனம் அவனுக்குச் சொல்லியது. கண்ணனும், புலவரும் வெளியேறியதும் வெளியே காத்திருந்த புலவரின் கூலிப் பட்டாளம் சம்பந்தமில்லாமல் அம்மிணி அம்மாவையும், பாகவதரையும் திட்டி மிக மலிவான கோஷங்களைப் போடத் தொடங்கினார்கள். அதுவும் கண்ணனுக்குப் பிடிக்கவில்லை. கண்ணனும் புலவரும் வெளியேறிய சிறிது நேரத்தில் புலவரைச் சங்கத்திலிருந்து வெளியேற்றும் தீர்மானமும் அங்கு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கேள்விப்பட்டார்கள் அவர்கள். ஒருவகையில் கண்ணன் தொல்லைகளிலிருந்து விடுபட்டதுபோல் உணர்ந்தான். இன்னொரு வகையில் மனசு குன்றி அவமானப்பட்டு மூக்கறுக்கப்பட்டது போலவும் தோன்றியது. அவன் புலிமேல் சவாரி செய்பவனுடைய நிலையிலிருந்தான். மகிழ்மாறனை அவனால் விடவும் முடியவில்லை. மகிழ்மாறன் அவனை விடவும் தயாராயில்லை. அன்று மாலையிலேயே அவசர அவசரமாக அச்சிடப்பட்ட ஒரு புதிய ‘லெட்டர் ஹெட்’டுடன் மறுபடி கண்ணனை வந்து சந்தித்தார் மகிழ்மாறன். ‘அய்யப்பன் நகர அன்பர் கழகம்’ தலைவர்: கண்ணன் - பொதுச் செயலாளர்: புலவர் மகிழ்மாறன் என்று அச்சிடப்பட்டுப் புலவருடைய வீட்டு முகவரியே விலாசமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. கண்ணன் சற்றுக் கோபமாகவே அவரைக் கேட்டான்: “சட்டி சுட்டது - கையை விட்டது - அந்த மட்டில் தொல்லையில்லை என்று நான் ஒதுங்க விரும்புகிறேன் புலவரே! எனக்கு ஆயிரம் சொந்த வேலை இருக்கிறது. இதெல்லாம் ஏன் பண்றீங்க? நாமா ஒரு லெட்டர் பேடு போட்டுத் தலைவர், செயலாளர்னு மட்டும் எழுதிக்கிட்டாப் போதுமா? காரியம் நடக்க வேணாமா? யாரு செய்வாங்க...?” “அப்படி விட்டுடப்பிடாதுங்க! அப்புறம் அவங்க துளுத்துப் போயிடுவாங்க. நம்மைக் கையாலாகாதவங்க... உப்புக் கல்லுக்குத் துப்பில்லாதவங்கன்னு நினைப்பாங்க... நீங்க ஒண்ணும் பண்ணவேண்டாம். பேசாம இருங்க... போறும். எல்லாம் நானே பார்த்துக்கிறேன்.” “என்னத்தைப் பார்க்கப் போகிறீர்! மத்தவங்க மெம்பர் ஆவாங்களா இல்லியான்னு தெரியாம நீரா ஒரு பேரைச் சூட்டிக்கிட்டுக் காசு செலவழிச்சு லெட்டர் ஹெட் அடிச்சிருக்கீரே?... அதுதான் போகட்டும்! இதென்ன ‘அன்பர் கழகம்’னு போட்டீரு? இது எப்படி வெல்ஃபேர் அஸோஸியேஷனைக் குறிக்கும்?” “நீங்க ஒண்ணு! அனாவுக்கு அனா வருதில்லே? அய்யப்பன் நகரத்து மேலே அன்புள்ளவங்க கழகம்னு பொருள் கொள்ளணும். நகர் வளர்ச்சியிலே அன்பில்லாதவங்களா அதிலே உறுப்பினரா இருப்பாங்க...?” “அது ஏன்யா கழகம்னு போட்டீரு? அரசியல் வாடை அடிக்குதே? சங்கம்னு போடக் கூடாதோ?” “அவங்க சங்கம்னு போட்டிருக்காங்க! சும்மா மிரளட்டும்னு தான் கழகம்னு போட்டேன். பாருங்க! ரெண்டே மாசத்துலே அத்தனை பேரும் அஸோஸியேஷனை விட்டுட்டுக் கழகத்துக்கு ஓடி வரப் போறாங்க...” புலவர் போகும்போது லெட்டர் ஹெட் முதலிய செலவு வகைக்கு ரூபாய் ஐம்பது ஆகிவிட்டது என்று தலையைச் சொறிந்து கொண்டு நின்றார். கண்ணன் மனத்துக்குள் அவரைத் திட்டித் தீர்த்துக் கொண்டே பணத்தைக் கொடுத்துத் தொலைக்க வேண்டியதாகிவிட்டது. அடுத்து வந்த காலம் அவனைப் படாதபாடு படுத்தியது. மின்சார இலாகா, பாகவதர், அம்மிணி அம்மாள் இவர்கள் மேல் அவன் போட்டிருந்த வழக்கு ஆறுமாத காலம் இழுத்தடித்து ரூபாய் நாலாயிரம் செலவுக்குப் பின் கோர்ட்டில் தள்ளுபடி ஆகிவிட்டது. அவனுக்கு அலைச்சலும் வீண் பணச் செலவும்தான் கண்ட பலன். அங்கே வீடுகளைக் கட்டும்போது ஹவுஸிங் யூனிட்காரர்கள் அநுமதித்து இசைந்ததனால்தான் வீடுகளுக்கான ஒவர் ஹெட் லயன் கனெக்க்ஷன் தரப்பட்டிருக்கிறது. அதனால் மின்சார வாரியமோ, பாகவதரோ, அம்மிணி அம்மாளோ இதற்குப் பொறுப்பாக முடியாது என்று காரணம் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார்கள். ஹவுஸிங் யூனிட்டுக்கு இன்னும் அவன் முழுமையாகப் பணம் கட்டி முடித்துப் பத்திரம் பதிவு செய்து வாங்கிக் கொள்ளவில்லை. தவணை முறையில் பல ஆண்டுகள் பணம் கட்டி முடித்த பின்பே வீட்டைப் பதிவு செய்து வாங்கிக் கொள்ள முடியும். ஆகவே ஹவுஸிங் யூனிட்காரர்கள் மேல் கேஸ் போட அவன் துணியவில்லை. உண்மையில் கேஸ் தள்ளுபடி செய்யப்பட்ட அன்று அவனைவிட அதிகமாக அவனுக்காகப் பாகவதரும், அம்மிணி அம்மாவும் வருத்தப்பட்டார்கள். அவர்களோடு அவனாகவே விரோதம் பாராட்டிப் பேசுவதை நிறுத்தி விட்டதால் அவனிடம் பேசமுடியாது என்று அவன் வீட்டில் இல்லாத போது சுகன்யாவிடம் சொல்லி வருத்தப் பட்டார் பாகவதர். “உங்க வீட்டுக்காரருக்குச் சத் சங்கம் - நல்ல சகவாசம் இல்லே... தார் பூசறவன், சண்டைக் கோழி, தகராறுப் பிரியர்களோட வார்த்தையைக் கேட்டிட்டு அநாவசியமா அலைஞ்சு பணத்தையும், மனத்தையும், கெடுத்துக்கிறதைப் பார்த்து எனக்கே வருத்தமா இருக்கும்மா! பணத் திமிர்லே வம்புக்காகக் கொழுப்பெடுத்துப் போய்க் கோர்ட்டுக்குப் போறவா நெறையப் பேரை எனக்குத் தெரியும். உங்க வீட்டுக்காரரை மாதிரி ஒரு குடும்பஸ்தன் இப்பிடி ஒண்ணுமில்லாததுக்காக மூவாயிரம், நாலாயிரம்னு கோர்ட்டுக்கு அழுததைப் பண்ணின பாவம்னுதான் சொல்லணும் அம்மா...” சுகன்யாவைத் தனியே பார்த்து அம்மிணி அம்மாவும் வருத்தப்பட்டாள்: “அநாவசியமா உம் புருஷன் எங்களை விரோதியாப் பாவிச்சு இப்பிடி நடந்துக்க வேண்டாம். எங்களை விரோதிச்சுக்க ஆசைப்பட்டுக் கடைசியிலே அந்த மகிழ்மாறனத் தவிர இந்தக் காலனி முழுதுமே உம் புருசனுக்கு விரோதமாப் போயாச்சு.” கணவனுக்காக - ஏங்கல் தாங்கலில் பணமோ பண்டமோ ஒத்தாசையோ எதுவும் செய்யக்கூடிய அம்மிணி அம்மாளைச் சுகன்யா ஒரு நாளும் தவறாகப் புரிந்து கொண்டதில்லை. புருஷன் வீட்டில் இல்லாத போது சுகன்யா அவர்கள் வீட்டில் போய்ப் பேசிக் கொண்டிருப்பது உண்டு. வீடியோவில் புதுப் புதுப் படங்கள் போடும் போது புருஷன் வீட்டில் இல்லா விட்டால் போய்ப் பார்ப்பது கூட உண்டு. சில ஓய்வான வேளைகளில் பாகவதரும் கூட வந்து சினிமாப் பார்க்க உட்காருவார். கணவனைப் போல இவர்களை வெறுக்க அவளால் முடியவில்லை. கணவனின் அர்த்தமற்ற வெறுப்பை அவளால் முயன்று மாற்றவும் இயலவில்லை.  |