16

     சில நாட்களுக்குப் பின் தபாலில் அவனுக்கு அந்த மலையாளப் பத்திரிகை வந்தது. கட்டுக்கடங்காத ஆவலுடன் காலனியிலிருந்த மலையாளமும் தமிழும் அறிந்த நண்பர் ஒருவரிடம் அதை எடுத்துச் சென்று தனக்குப் படித்துக் காண்பிக்கச் சொன்னான். புரியாததை மொழிபெயர்க்கச் சொன்னான். படிக்குமுன் அதில் தன் மனவியின் படத்தையும் பக்கத்து வீட்டு செக்ஸ் ராணியின் படத்தையும் சேர்த்துப் பார்த்ததில் அவனுக்கு ஒரே அதிர்ச்சி. ‘பக்கத்து வீட்டைப் பற்றிக் கண்ணனின் திடுக்கிடும் தகவல்கள், குடிவெறியோடு நள்ளிரவில் வந்து கதவைத் தட்டினார்களாம், பட்டுப் புடைவை விற்கும் பாகவதர்’ என்கிற மாதிரித் தலைப்புக்களுடன் அவன் கூறிய விவரங்களோடு அப்படியே இருந்தன. எதையும் மாற்றவில்லை. சொல்லியதைக் குறைக்கவோ குலைக்கவோ கூட இல்லை. ஆனால் கண்ணனைப் பற்றி அவனது இரு பக்கத்து வீட்டுக்காரர்களும் கூறிய அபிப்ராயங்களும் சேர்ந்தே பிரசுரமாகியிருந்தன. அம்மிணி அம்மாளின் பெண் ஸெக்ஸ் நந்தினி சொல்லியிருந்தாள்:

     ‘பக்கத்து வீட்டில் ஆண்கள் யாரையும் நான் பார்த்துப் பழக நேர்ந்ததே இல்லை. பக்கத்து வீடு என்றாலே சுகன்யா அக்கா நினைவுதான் எனக்கு வரும். அவங்க குழத்தை கலா ரொம்ப ஸ்வீட் கேர்ள். சுகன்யா அக்கா மாதிரிப் பொறுமையே உருவமான ஹவுஸ் வொய்ஃப் மிகவும் அபூர்வமானவங்க என்கிறது என் அபிப்ராயம். அந்த அக்காவோட சிரிச்ச முகத்தை என்னாலே மறக்கவே முடியாது. அவங்க கணவர் ரொம்ப முன் கோபக்காரராம். ஒரு ‘ஸினிக்’னு அவங்க சொல்றதிலே இருந்து நான் அந்த ஆளைப்பற்றிப் புரிஞ்சுக்க முடிஞ்சது. பாவம்! அக்காவும் அவங்க குழந்தையும் தங்க கணவனுக்குப் பயந்து பயந்து புருஷன் ஆபீஸுக்குப் போயிருக்கறப்ப, வெளியிலே போயிருக்கிற அப்போன்னு பார்த்து எங்க வீட்டுக்கு இரகசியமா வந்து பழகுவாங்க. வீடியோவில படம் பார்ப்பாங்க. நான் என் அக்கா எல்லாரும் நடிச்ச பல படங்களை அவங்க தியேட்டர்ல போய்ப் பார்த்ததே இல்லை. எங்க வீட்டிலே வீடியோவிலேதான் பார்ப்பாங்க. அவங்க புருஷன் வேலையாள் யாரும் போடாததாலே அக்காவுக்கு வீட்டு வேலை வேறு அதிகம். அத்தினி வேலையையும் பொறுமையாகச் செய்வாங்க. அவங்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை. ரெண்டு பேருக்கும் பச்சை மிளகு ஊறுகாய்க்குக் கொள்ளைப் பிரியம். கேரளாவிலிருந்து எங்களுக்கு வர்றப்ப அம்மா அவங்களுக்கும் மிளகு ஊறுகாய் குடுத்து அனுப்புவாங்க. எனக்கு எத்தனையோ லட்சக்கணக்கான இரசிகர்கள் இருந்தும் இந்தப் பக்கத்து வீட்டுச் சுகன்யா அக்காதான் முதல் ரசிகைங்கிறது என் அபிப்ராயம். அவங்களை ரசிகைங்கிறது கூடத் தப்பு. சிநேகிதி, அக்கான்னு சொல்றதுதான் மிகவும் பொருத்தம்.’

     என்ற பேட்டியுடன் பாகவதரின் பேட்டியும் சேர்ந்து பிரசுரமாகியிருந்தது.

     பாகவதர் தன் பக்கத்து வீட்டுக்காரனான கண்ணனைப் பற்றி எதுவும் சொல்லாமல், சமாளித்திருந்தார்.

     ‘என்னோட உடனடியான பக்கத்து வீட்டுக்காரருக்கும் எனக்கும் அத்தனை சுமுகமான உறவு இல்லை. அதனால அவரைப் பற்றி நான் புகழ்ந்தாலும் தப்பா இருக்கும். நிந்திப்பதும் முறையாக இருக்காது. ஆகவே அந்த வீட்டை விட்டுவிட்டுப் ‘பொன்குன்னம்’ அம்மிணி அம்மா வீட்டைப் பத்தியே சொல்லிடறேன்.

     அந்த வீட்டார் என்னைத் தங்கள் காட்ஃபாதர் மாதிரி நினைக்கிறாங்க. நானும் அவாளை என் குழந்தைகள் மாதிரிப் பாவிச்சுப் பிரியமாப் பழகறேன். அம்மிணிக்குப் பூமாதிரி மனசு. நிறைய தர்மம் பண்றா. அவளுடைய பெண்கள் சினுமாவிலே எப்பிடி எப்பிடி நடிக்கிறாளோ, வீட்டிலே அவா எதுவும் நடிக்கிறதில்லே. பக்தி சிரத்தை, பெரியவர்களிடத்திலே மரியாதை எல்லாம் உள்ள குடும்பம் அது. இப்படிப்பட்ட ஒரு பெரிய கலைக் குடும்பத்துக்குப் பக்கத்திலேயே குடியிருக்க நேர்ந்ததை என் பாக்கியம்னே சொல்லணும்’ என்பது போல் சொல்லியிருந்தார். அருகே பாகவதரை அம்மிணி அம்மாள் வணங்குவது போல ஒரு படமும் பிரசுரமாகியிருந்தது.

     மூன்று விஷயங்களிலும் தன்னுடையதில்தான் காரம், கரம் எல்லாமே, அதிகமென்று அவனுக்கே தோன்றியது. சுகன்யாவின் மேல் ஆத்திரம் மூண்டது அவனுக்கு. அம்மிணி அம்மாளின் மகள் செக்ஸ் ராணி நந்தினி தான் இப்படி ஒரு பேட்டியளித்திருப்பதைச் சுகன்யாவிடம் சொல்லிவிட்டுத்தான் செய்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சொல்லாமலும் செய்திருக்கலாம். அப்படியானால் அவளும் சுகன்யாவும் சேர்ந்து கட்டிக் கொண்டிருப்பது போல் பிரசுரமாகி இருக்கும் புகைப் படம் ஏது? எப்போது எடுத்தது? என்ற சந்தேகம் கண்ணனுக்கு வந்தது. பாகவதர் பரவாயில்லை. ‘பக்கத்து வீட்டுக்காரரோடு எனக்குச் சுமுகமான உறவு இல்லை. ஆகவே அவரைப் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை’ என்று தப்பித்துக் கொண்டுவிட்டார். இந்த அம்மிணி அம்மாளின் பெண் நந்தினிதான் கொஞ்சம் நம்மைப் பற்றித் தாறுமாறாகச் சொல்லியிருக்கிறாள். செக்ஸ் ராணி அடங்காப் பிடாரி என்பதை நிரூபித்து விட்டாள். நான் கோபக்காரன் என்று கேள்விப் பட்டிருக்கிறாளாம். கொடுமைக்காரன் என்று தெரிந்து கொண்டிருக்கிறாளாம். ஸினிக்காம். வரட்டும். இவளை இப்படிப் பேசுவதற்குத் துணியச் செய்த சுகன்யாவைத்தான் மடக்க வேண்டும். இந்தக் கோளாறாண குடும்பத்தோடு இரகசியமாக எனக்குத் தெரியாமல் சுகன்யா பழகப் போகத்தானே இவ்வளவும் வந்து தொலைத்திருக்கிறது. சுகன்யாவுக்கு உடனே பாடம் புகட்டியாக வேண்டும் என்று மனத்திற்குள் தன் மனைவியைக் கறுவிக் கொண்டான் கண்ணன்.

     அம்மிணி அம்மாவையும் பாகவதரையும் பற்றித் தான் பத்திரிகைப் பேட்டியில் கொடுத்த தகவல்கள் எவ்வளவு துாரம் அவர்களைக் கேவலப் படுத்துமோ அந்த அளவுக்குத் தன்னைக் கேவலப்படுத்திய பாகவதரோ, நந்தினியோ எதுவும் சொல்லி விடவில்லை என்பது கண்ணனுக்கு ஆறுதலாக இருந்தது. வீணாக எதை எதையோ கற்பனை செய்து கொண்டு, தான் அவர்களைப் பற்றி இத்தனை கேவலமாகச் சொல்லியிருக்க வேண்டாமோ என்று கூட இப்போது நினைத்துக் கழிவிரக்கப்பட்டான் கண்ணன். பாகவதரோ, அம்மிணியோ அந்த மலையாளப் பத்திரிகையைப் படித்தது பற்றி எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.

     அன்றே தன் மனைவியிடம் அந்த மலையாளப் பத்திரிகையில் பிரசுரமான புகைப்படத்தைக் காட்டிக் கூப்பாடு போட்டான் கண்ணன்.

     “இதெல்லாம் என்ன கூத்து?”

     “எனக்கு எதுவும் தெரியாதுங்க. ரொம்ப நாளைக்கு முன்னாடி இப்பிடி ரெண்டு வீட்டுக்கும் சண்டை எல்லாம் வர்றத்துக்கு முன்னாலே மாலா பாலா சிங்கப்பூர்லேருந்து வாங்கிட்டு வந்த புதுக் காமிராவிலே என்னையும் நந்தினியையும் பிடிச்ச படம் இது. அது மட்டும்தான் இப்ப ஞாபகம் இருக்கு. இதை அவங்க வீட்டிலேருந்துதான் இந்தப் பேப்பர்க்காரன் வாங்கிக்கிட்டிருக்கணும். சத்தியமா எனக்கு வேற எதுவும் தெரியாது...”

     “இந்தப் பத்திரிகையிலே வந்திருக்கிற பேட்டியைப் பற்றி...”

     “என்ன பேட்டி? யாரோட பேட்டி?”

     “அதான் உன்னோட ஃப்ரண்ட் நந்தினியோட பேட்டி...”

     “அவ பேட்டி குடுத்திருக்காளா என்ன? என்னன்னு குடுத்திருக்கா?”

     “நீ ரொம்பத் தங்கமானவளாம். உன் பொண் கலா ஸ்வீட் கேர்ளாம். நான்தான் கோபக்காரனாம், கொடுமைக்காரனாம், ஸினிக்காம்...!”

     “அப்படீன்னு யார் சொல்றாங்க?”

     “வேற யாரு? எல்லாம் உன் சினேகிதி நந்தினிதான்.”

     “அடப் பாவமே ஏன் அப்பிடிச் சொன்னா?”

     “சொல்லியிருக்காளே! எல்லாம் நீ எனக்குத் தெரியாமே அவளோடவும் அந்தக் குடும்பத்தோடவும் பழகறதாலே வந்தவினை. அங்கே வீடியோ பார்க்கப் போறே. அந்த நந்தினி மாதிரி ஒரு மட்டமான அரை நிர்வான ஆபாச நடிகை உன்னைத் தன்னோட முதல் ரசிகைன்னு பீத்திக்கிறா. கெளரவமான குடும்பப் பெண்ணான நீ அவளை இப்பிடிச் சொல்ல விட்டிருக்கலாமா? இதுனாலே உம் பேரு என் பேரு, நம்ப குடும்பப் பேரு எல்லாமே சீரழியறதுதான் மிச்சம்.”

     “நான் ஒரு தப்பும் பண்ணலிங்க... அவ பாட்டுக்கு என்னைக் கேட்காமே ஒரு பத்திரிகைக்கு இப்பிடிப் பேட்டி கொடுத்தா அதுக்கு நான் என்ன பண்ணுவேன்?”

     “பேட்டியில் என்னைப் பத்தியும் என் கணவரைப் பற்றியும் அந்த நந்தினி சொன்னதெல்லாம் பொய்னு இங்கிலீஷ்லே நான் சொல்ற மாதிரி அந்தப் பத்திரிகைக்கு ஒரு மறுப்பு உடனே எழுதிப் போடுவியா?”

     “நீங்க என்ன சொல்றீங்களோ அப்பிடியே செய்யறேன். எனக்கு ஒரு பாவமும் தெரியாது.”

     கண்ணன் சுகன்யாவை மிரட்டியிருந்தானே ஒழிய அந்தக் கடிதத்தை மலையாளப் பத்திரிகைக்கு எழுதி அனுப்பும்படி மீண்டும் அவளை வற்புறுத்திக் கேட்கவில்லை அவன். நந்தினி விஷயத்தை மட்டும்தான் அவன் சுகன்யாவிடம் விசாரித்திருந்தான். தன் பேட்டியும் பாகவதர் பேட்டியும் அதே பத்திரிகையில் வந்திருப்பதைப் பற்றி அவளிடம் மூச்சே விடவில்லை.

     அவன் அலுவலகம் சென்றபின் பாகவதரும், அம்மிணியம்மாளும் சுகன்யாவிடம் வந்து கண்ணனின் அந்தப் பேட்டியைப் பற்றிக் குறை சொல்லி வருத்தப்பட்டார்கள்.

     “உன் புருஷன் இப்படிப் பண்ணியிருக்க வேண்டாம் அம்மா! நான் உன் புருஷனைப் பத்தி எதுவுமே சொல்லாமக் கெளரவமா விட்டிருக்கேன். நந்தினி ஏதோ கோபக்காரர் அது இதுன்னு கண்ணனைப் பத்தி வருத்தப்பட்டிருக்கா... ஆனா உன் புருஷன் எங்களைப்பத்தி எழுதியிருக்கிறதை அம்மிணியைப் படிச்சுக் காட்டச் சொல்றேன், கேளு. இது உனக்கே நியாயமா இருந்தாச் சரி.”

     அம்மிணியம்மாள் அதைப் படித்துக் காட்டி விவரித்த போது சுகன்யாவுக்கு அதைக் கேட்கவே கூச்சமாயிருந்தது. குடும்ப கெளரவம் அது இது என்றெல்லாம் பேசுகிற தன் புருஷனா அடுத்தவர்களைப் பற்றி இத்தனை கொச்சையாகவும் பச்சையாகவும் சொல்லியிருக்கிறான் என்று எண்ணிய போதே அவளுக்கு அருவருப்பாயிருந்தது.

     அப்போது பாகவதரே மேலும் சொன்னார்: “மலையாளத் தோட போகாம இது தமிழ் சினிமாப் பத்திரிகையிலேயும் வந்திருக்கு அம்மா! நாங்க அம்மிணிக்கு மிகவும் வேண்டிய ஒரு பெரிய வக்கீலக் கலந்து பேசினதிலே ‘இந்தப் பேட்டி ரொம்பத் தந்திரமான வார்த்தைகளில் கொடுக்கப்பட்டிருந்தாலும் நீங்க விரும்பினா இந்தப் பேட்டியைக் கொடுத்தவர் மேலும் பிரசுரித்த பத்திரிகைகள் மேலும் தலா ஒரு லட்ச ரூபாய்க்குக் கேரக்டர் அஸாஸிநேஷன்னு ஸூட் போட்டுக் கேஸை ஜெயிச்சுத் தரேன். சுப்ரீம் கோர்ட் வரை போனாலும் பரவாயில்லை. ஜெயிச்சுத் தர்றது என் பொறுப்பு’ன்னார். நானும் அம்மிணியும் உன்னைப் பத்தி நினைச்சோம். வீணா உனக்குச் சிரமம் குடுக்கப்பிடாதுன்னுதான் அதை நாங்க செய்யலே. முரடனான உன் புருஷன் பண்ணின தப்புக்காக உன்னைப் போல ஒரு நல்ல சுமங்கலி சிரமப்படக் கூடாதும்மா!”

     “உங்களுக்கு நான் ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன். நீங்க ரெண்டு பேரும் என்னோ அப்பா அம்மா மாதிரி! கெட்ட சகவாசத்தாலேதான் இவர் இப்படி ஆயிட்டாரு. சுபாவத்திலே இவர் கெட்டவர் இல்லே. சீக்கிரம் கடவுள் இவருக்கு நல்ல புத்தியைக் குடுக்கணும்” என்று அவர்கள் முன் கண் கலங்கிக் கை கூப்பினாள் சுகன்யா.

     பாகவதர் அம்மிணி அம்மாள் இருவருமே ‘அவளுடைய நல்லெண்ணத்திற்கு ஒரு குறையும் வராது’ என்று சொல்லி அவளை மனப்பூர்வமாக ஆசீர்வதித்து விட்டுச் சென்றார்கள்.