7

     காலனி வெல்ஃபேர் அஸோஸியேஷன் கூட்டம் நடந்தது. ஒரு முக்கியமான நோக்கத்தோடு அந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருந்ததால் எல்லா அங்கத்தினர்களும் வருவதற்கு வசதியாக ஜெனரல் பாடியாகவே கூட்டப்பட்டிருந்தது. காலனிவாசிகள் எல்லாரும் வந்தனர்.

     கொஞ்சம் கூடக் கூச்ச நாச்சமின்றி ஊர் என்ன பேசும் என்ற பயமோ பதற்றமோ இல்லாமல் அம்மிணி அம்மாவும், நாகசாமி பாகவதரும் சேர்ந்தே வந்தார்கள். பாகவதர் அழகிய சால்வை போர்த்திக் கொண்டு சிவப் பழமாகக் காட்சியளித்தார். கையகலப் பொன் சரிகைக் கரையிட்ட நேரியல் முண்டு கட்டி நெற்றியில் அழகிய சந்தனக் கீற்றைத் தீற்றிப் பொட்டுக்கும் நெற்றிக்கும் வித்தியாசம் தெரியாத சந்தன நிற மேனி மினுமினுக்கப் புன்சிரிப்போடு ஒவ்வொருவராகக் கைகூப்பி வணங்கியபடி அம்மிணி அம்மா மீட்டிங் நடக்கும் ஹாலில் நுழைந்தபோது காரியதரிசி கண்ணன் மட்டும் அவள் வந்த திசையிலேயே பாராமல் முகத்தை வெறுப்போடு வேறுபக்கமாகத் திருப்பிக் கொண்டான்.

     அம்மிணி அம்மா உள்ளே நுழைந்தபோது நாட்டியக்காரிகளாகவும், நட்சத்திரங்களாகவும் இருக்கும் அவள் பெண்களின் பெயர்களை முணுமுணுத்து, “இவதான் அதுகளோட அம்மாக்காரி! நம்ம காலனி வாசி! இஞ்சிக்குடி பாகவதரிட்ட சகலமும் அடக்கம்” என்று கூட்டத்தில் இரகசியமாய்க் காதும் காதும் வைத்தாற் போல் முணு முணுத்துப் பேசிக் கொண்டார்கள்.

     ஓரிருவர், “யோவ்! இவதான்யா ஸெக்ஸ் பாம் நந்தினி யோட மதர்! நல்லாப் பார்த்துக் கோ” என்று கூடச் சொல்லிச் சிரித்தனர். அப்படிச் சிரித்தவர்களுக்கு அதில் ஒரு நமட்டு மகிழ்ச்சி.

     காலனி நலம் நாடுவோர் சங்கத்தின் தலைவரான சுந்தரவரதனையே - ரிட்டயர்டு போஸ்டு மாஸ்டரையே - கூட்டத்துக்குத் தலைமைதாங்கி நடத்திக் கொடுக்கச் சொல்ல வேண்டும் என்று செயலாளர் கண்ணன் நினைத்திருந்தான்.

     அந்தக் காலனி எல்லையில் ஒரு சிறிய பிள்ளையார் கோயில் கட்ட ஏற்பாடு செய்யவே அந்தப் பேரவை கூட்டப் பட்டிருந்தது. பிள்ளையார் கோயில் என்பதால் கூடியிருந்தவர்களில் சிலர் கண்ணனைக் கலந்து பேசி யோசிக்காமலே திடீரென்று பாகவதரை அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்குமாறு முன்மொழிந்து விட்டனர். உடனே கூட்டமும் அதைப் பேராரவாரத்துடன் கைதட்டி வரவேற்று விட்டது. பாகவதர்தான் ஊரறிந்த பிரமுகராயிற்றே.

     கண்ணனுக்கு எதிர்பாராத அதிர்ச்சி. நிலைமை அவன் கையை மீறிப் போயிருந்தது. இனி ஒன்றும் செய்வதற்கில்லை. காலனி அஸோஸியேஷன் தலைவரே இந்தக் கூட்டத்தையும் தலைமை வகித்து நடத்தட்டும் என்று எண்ணியிருந்தான் கண்ணன். அதில் இப்போது மண் விழுந்திருந்தது. பாகவதர் ‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ - என்ற பழமொழியில் தொடங்கி ஆலயம் கட்டுவதன் அவசியத்தை வற்புறுத்தி ஒரு குட்டிப் பிரசங்கம் செய்தபின் திருப்பணிக்குத் தாராளமாகப் பொருளுதவி செய்யவேண்டும் என்று எல்லாரையும் வேண்டிக் கொண்டார். அவரே மேலும் கூறினார்: “என்னோட அபிப்ராயம் வெறும் பிள்ளையார் மட்டும் போறாது. ஒரு சின்ன குருவாயூரப்பன் சந்நிதியும், ஐயப்பன் சந்நிதியும் கூட வேணும். எல்லாருக்கும் பிரயோசனமாயிருக்கும். மலைக்குப் போறவாளுக்குப் பூஜை பண்ண வசதி. குருவாயூரப்பன் சந்நிதி சைவ வைஷ்ணவ பேதமின்றி இரு சாராருக்கும் தரிசனத்துக்கு ஏற்ற ஏற்பாடாயிருக்கும்.”

     இப்படிப் பாகவதர் கூறியதை அடுத்து உடனே அம்மிணி அம்மாள் எழுந்து, “பாகவதர் கூறியபடி குருவாயூர் கிருஷ்ணர் சந்நிதி ஐயப்ப சுவாமி சந்நிதிகளைக் கட்டி முடிக்க ஆகிற அவ்வளவு செலவையும் நான் ஏத்துக்கறேன்” என்று கூறியபோது அதைப் பாராட்டி வரவேற்றுப் பலத்த கரகோஷம் அங்கே எழுந்தது.

     அதன்பின் பேசிய பலரும் அம்மிணி அம்மாளின் தாராள மனத்தையும் பக்திப் பாங்கையும் பாராட்டிப் புகழ்ந்தனர். கூட்டத்தின் போக்கே திசை மாறி அவள் பக்கம் திரும்பிவிட்டது.

     முடிவில் கண்ணன் அஸோஸியேஷனின் காரியதரிசி என்ற முறையில் பேரவைக்கு நன்றி கூறவேண்டும். பாகவதரையும், அம்மிணி அம்மாவையும் தன் வாயால் புகழும்படி ஆகிவிடக் கூடாதே என்று கண்ணனுக்கு ஒரே பதற்றம். மெல்லத் தான் நன்றி கூற நேராமல் தட்டிக் கழிக்க ஓர் ஏற்பாடு செய்தான். காலனி அஸோஸியேஷன் தலைவரிடம் போனான், “தலைவர் நீங்க இருக்கறப்ப நீங்க நன்றி கூறினாத்தான் மத்தவங்களுக்குப் பெருமையா இருக்கும். நீங்க கூட்டத்துக்குத் தலைமை வகிச்சா நான் நன்றி கூறியாகணும்னு நேர்ந்துவிடும். இன்றோ தலைமை பாகவதருக்குப் போய்விட்டது. நன்றியையாவது தலைவர்ங்கிற முறையிலே நீங்க சொல்லிடணும்” என்று பவ்யமாக எடுத்துரைத்தான்.

     முதலில் அடக்கமாக மறுத்து ஒதுங்கப் பார்த்த தலைவர் அப்புறம் சரி என்று சம்மதித்தார். அப்பாடா என்று நிம்மதியாகப் பெருமூச்சு விட்டான் கண்ணன். தலைவர் தம்முடைய நன்றியுரையில் தமது பங்கிற்கு அம்மிணியம்மாளின் தர்ம சிந்தனையையும், தெய்வ பக்தியையும் வானளாவப் புகழ்ந்தார். பாகவதர் இருப்பதானது தங்கள் காலனியின் பெருமையையே உயர்த்தக் கூடியது என்றும் புகழ்ந்து கூறினார். கண்ணன் சாமர்த்தியமாக ஒதுங்கி விட்டதைப் பாகவதரும், அம்மிணி அம்மாளும் கவனித்துப் புரிந்து கொண்டார்கள். அவன் ஏதோ ‘காம்ப்ளெக்ஸ்’ காரணமாக வீணுக்கு அலட்டிக் கொள்வதாக அவர்களுக்குத் தோன்றியது. காலனியில் யாருமே ‘உண்மை விளம்பி’யைப் படித்துப் பாதித்ததாகவோ, பாகவதர் - அம்மிணி அம்மாள் நெருக்கத்தைப் பற்றிக் கவலைப் பட்டதாகவோ காண்பித்துக் கொள்ளவில்லை. ஒருவேளை ‘இத்தகைய செய்திகள் மூலம் இன்று ஒருவருடைய கவர்ச்சி அதிகமாகுமே ஒழியக் குறையாது’ - என்று பாகவதர் கூறிய விளக்கம்தான் சரியானதோ என்று கண்ணனுக்கே இப்போது தோன்றியது.

     காலனியில் கோவில் கட்டுவதற்கான துணைக் கமிட்டியில் பாகதவர் - அம்மிணி அம்மாள் இருவருமே இடம் பெறுவதை அவனால் தடுக்க முடியவில்லை. தாங்கள் அந்தக் கூட்டத்திலும் கமிட்டியிலும் அவ்வளவு முக்கியத்துவம் பெற்றது, கண்ணனுக்கு எரிச்சலூட்டியிருக்கும் என்பதைப் பாகவதரும் அம்மிணி அம்மாவும் உள்ளூர உணர்ந்தே இருந்தனர்.

     அன்றைய கூட்டம் எல்லாம் முடிந்து சங்கத் தலைவரும், பொருளாளரும் தானும் மட்டும் தனியானபோது கண்ணன் மெல்ல ஆரம்பித்தான். “எனக்கு ஒரு சின்ன சந்தேகம்! இந்த மலையாளத்து அம்மாவையும் இஞ்சிக்குடியாரையும் பற்றி ஊர்லே ஒரு மாதிரிப் பேசிக்கிற சூழ்நிலை இருக்கு, சில பேப்பர்களிலே கூட ஏதோ இவங்க ரெண்டு பேரையும் பத்தித் தாறுமாறா வந்திருக்குன்னு கேள்விப் பட்டேன். இவங்களைப் போய்க் கோயில் கமிட்டியிலே போட்டிருக்கோமே?”

     “கமிட்டியிலே நாமா போட்டோம்? ஜெனரல் பாடியின்னா விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கு. பாகவதர் ரொம்பப் பிரபலமா இருக்கார். அவர் குருவாயூரப்பன், ஐயப்பன் சந்நிதிகள் வேணும்னு சொல்லி முடிக்கிறத்துக்குள்ளே அந்தம்மா எழுந்திருந்து அதுக்கான அத்தனை செலவையும் ஒத்துக்கறேன்னுட்டா. இதெல்லாம் பார்த்து மத்தவங்களுக்குப் பிரமாதமாப் படத்தானே செய்யும்?” என்றார் தலைவர்.

     “நாமும் இதிலே, சம்பந்தப்பட்டிருக்கோமே! அதான் பார்க்க வேண்டியிருக்கு...”

     “அவா ரெண்டு பேரோட பெர்ஸனல் லைஃபைப் பத்தி நாம என்ன பண்ணமுடியும்? நாடு இன்னிக்கு இருக்கிற நிலைமையில் எத்தனையோ பெரிய பாலிட்டீஷியன்ஸ், தொழிலதிபர்கள், வியாபாரிகள் இவங்களோட பெர்ஸனல் கேரக்டர்னு பார்த்தோம்னா ஒருத்தர் கூடத் தேர்றது கஷ்டம்.”

     “அதுக்கில்லே! கோயில் விஷயமாச்சேன்னுதான் பார்த்தேன்! வேற ஒண்ணுமில்லே.”

     “அதெல்லாம் ரொம்ப டீப்பா ஒண்ணும் பார்க்காதீங்க கண்ணன்! பட்டும் படாமலும் இருந்துக்குங்க! நமக்குக் காரியம் ஆகணும். கோயில் கட்டி முடிக்கிறோமா இல்லையாங்கிறதை வச்சுத்தான் நம்ம கமிட்டிக்கு ஊர்ல மரியாதை. கோவில் கட்ட மனுஷா உதவியும், பணமும் வேணும். பணம் யார் தரான்னு தேடி வாங்கிக்கணுமே ஒழிய அது எப்பிடிப் பட்டவா கையிலேருந்து வரதுன்னு வீணா ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கறதுலே பயனில்லே! முதல்லே இதை நீங்க புரிஞ்சிக்கணும்.”

     சங்கத் தலைவர் இவ்வாறு கூறியதிலிருந்து இந்த விஷயத்தில் தன்னளவு மனச் சங்கடம் அவருக்கு இல்லையென்று கண்ணனுக்குப் புரிந்துவிட்டது. நண்பன் பாகவதரையும், அம்மிணி அம்மாவையும் பற்றி ‘பிளாக் மெயில்’ செய்வது போல் தோன்றுவதையே பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தாலும் கண்ணனுடைய அடி மனத்திலும் அவர்கள் இருவர் மேலும் ஏதோ ஒரு துவேஷம் முளைக்கத் தான் செய்திருந்தது. அடுத்த வீட்டுக்காரர்கள், உத்தியோகங்களில் அடுத்தடுத்த நிலையிலிருப்பவர்கள், சக்களத்திகள், மாமியார் மருமகள், எலியும் பூனையும் என்று இவர்களுக்கிடையே இனம் புரியாத வெறுப்பும் விரோதமும் கடவுளாலேயே படைக்கப்பட்டு விட்டதோ என்னவோ தன்னளவுக்குத் தன் மனைவியோ குழந்தையோ கூட அம்மிணி அம்மாவையும், பாகவதரையும் வெறுக்கவோ, விரோதித்துக் கொள்ளவோ தயாராயில்லை என்பதையும் அவன் உணர்ந்துதான் இருந்தான். தான் இதில் தனித்து ஒதுக்கி விடப்பட்டு விட்டோமோ என்றுகூட அவன் உள்ளத்தில் தோன்றியது. தன்னை எதிரியாகப் பாவிக்காத இரண்டு பேரைத் தான்மட்டும் எதிரிகளாகப் பாவிப்பதும் வெறுப்பதும் ஏன் என்று அவனுக்கே புரியவில்லை. மர்மமாக இருந்தது. வெறுப்பை விடவும் முடியவில்லை. தவிர்க்கவும் இயலவில்லை.

     இதனால் அவனுக்குப் பயந்து மனைவியும், குழந்தையும் அவன் வீட்டில் இருக்கும்போது அவனறியப் பக்கத்து வீட்டோடு பேச்சு வார்த்தைகள் இல்லாமல் ஜாக்கிரதையாக நடிக்கக் கற்றுக் கொண்டிருந்தனர். கண்ணனின் போக்கு அவர்களை மிகவும் பாதித்திருந்தது.

     கோயில் கட்டுவதற்கான கமிட்டி அமைக்கப்பட்டுப் பதிவானதும் முதல் வருமானமே அம்மிணி அம்மாளிடமிருந்துதான் வந்தது. கமிட்டியின் பெயருக்கு ரூபாய் இருபத்தையாயிரத்துக்கு ஒரு செக் அனுப்பியிருந்தாள் அந்த அம்மாள். கமிட்டி அப்படியே அவளைக் கொண்டாடியது, புகழ்ந்தது.

     அடுத்த கமிட்டிக் கூட்டத்திலேயே தங்களுக்கு விருப்பமான இன்னொரு காரியத்தையும் பாகவதர் சுலபமாகவே நிறைவேற்றிக் கொண்டார்.

     அவர்கள் வசித்த அந்தக் காலனிக்கு வெறும் ஹவுஸிங் யூனிட் நம்பர் 64 என்று மட்டும் அநாமதேயமாக ஒரு எண்ணின் பெயர் இருந்து வந்தது. அதை ‘சாஸ்தா நகர் எக்ஸ்டென்ஷன்’ என மாற்ற வேண்டும் என்றார் பாகவதர்.

     அன்று எப்படியாவது அதை எதிர்த்தாக வேண்டும் என்பதற்காக அதே கூட்டத்தில் மற்றொருவரிடம் சொல்லி அதை மறுத்து வேறு பெயரை முன்மொழியச் செய்தான் கண்ணன். மறுப்பதற்கு அவன் தேர்ந்தெடுத்த ஆள்தான் புலவர் மகிழ்மாறன்.

     “இங்கே ஏற்கெனவே மலையாள ஆதிக்கம் அதிகமாயிருக்குன்னு நம்ம காலனிவாசிகள் மத்தியிலே ஒரு கெட்ட பெயர் வந்திருக்கு! எனவே நம் பண்பாடுகளையும் கற்பின் சிறப்பையும் வற்புறுத்துகிற மாதிரி இதற்குக் ‘கண்ணகி நகர்’ என்று பெயர் சூட்டுவதே சாலச் சிறந்ததாய் இருக்கும்” - என்றார் புலவர் மகிழ்மாறன். ‘சாஸ்தா நகர்’ என்பதில் வருகிற வடமொழி ‘ஸ்’ அவருக்குப் பிடிக்கவில்லை.

     காலனிவாசிகளில் ஒருவரான தமிழ்ப்புலவர் மகிழ்மாறனே மறுக்கவும் பாகவதருக்குச் சங்கடமாகப் போய் விட்டது.

     “கண்ணகி மதுரையை எரிச்சது மாதிரி இந்தக் காலனியும் ஏதாவது சாபத்திலே எரிஞ்சிடுமோன்னு பலருக்கு ஒரு அச்சான்யம் உண்டாகும்.”

     “இதை நான் வன்மையாக மறுக்கிறேன். தமிழர் காப்பியமாம் தன்னிகரற்ற சிலம்பின் மாபெரும் பத்தினி கண்ணகிக்குக் களங்கம் உண்டாக்கும் முயற்சி இது! கண்ணகி எரித்தது மதுரையிலுள்ள தவறு புரிந்தவர்களை மட்டுமே! இங்கும் தவறு புரிந்தவர்கள் - புரிகிறவர்கள் குடியிருந்தால் அவர்களுக்குத்தான் இப்படிக் கண்ணகி நகர் எனப் பெயரிடுவது பிடிக்காது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது தமிழர் பழமொழி! குற்றமுள்ளவர் எரிக்கப்படவே வேண்டும்.”

     புலவர் மகிழ்மாறன் சுற்றி வளைத்து எதைத் தொடுகிறார் என்று புரிந்து பாகவதர் அடங்கி விட்டார். சங்கத் தலைவருக்கோ பாகவதரை விரோதித்துக் கொள்ள விருப்பமில்லை. அவர் சமாதானமாக முடித்தார்:

     “புலவர் மகிழ்மாறன் அவர்களுக்கும் பாகவதர் அவர்களுக்கும் பொதுவாக நான் ஒரு பெயர் சொல்லுகிறேன். நல்ல தமிழில் ‘ஐயப்பா நகர்’ என்று வைத்து விடுவோம். பாகவதர் கூறிய அர்த்தமும் வந்து விடுகிறது. மகிழ்மாறன் கருதிய தமிழும் வந்துவிடுகிறது! இருவருமே இதை ஆட்சேபிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.”

     “நாளடைவில் சொல்லிச்சொல்லி மக்கள் அதை ‘ஐயோ அப்பா நகர்’ என்பது போல ஆக்கி விடுவார்கள். ஆகவே ‘ஐயப்பன் நகர்’ என்று இருந்தால் எமக்கு மறுப்பு இல்லை” - என்றார் புலவர்.

     “எனக்கும் அது சம்மதம்தான்” - என்றார் பாகவதர். கூட்டம் முடிந்ததும் கண்ணன் புலவரைத் தனியே அழைத்துச் சென்று அவருக்குத் தன் அந்தரங்கமான பாராட்டுக்களைத் தெரிவித்தான்.

     “புலவரே! உங்களை மாதிரிச் சிலர் இருப்பதால்தான் நம் காலனியின் தன்மானமும் இனமானமும் பாதுகாக்கப்படுகிறது. என் பாராட்டுக்கள். என் ஒத்துழைப்பு எப்போதும் உங்களுக்கு உண்டு” - என்று கண்ணன் கூறியவுடன் புலவர் உச்சி குளிர்ந்தார்.

     எப்படியோ பாகவதர் கூறிய ‘சாஸ்தா நகர்’ என்ற பெயரை மாற்றி விட்டோம் என்ற திருப்தியில் கண்ணன் புலவரைப் பாராட்டினாலும் மற்றவர்கள் எல்லாரும் பாகவதர் கொடுத்த பெயரின் மறு வடிவமே ‘ஐயப்பன் நகர்’ எனக் கூறி அவருக்கு நன்றி தெரிவித்தனர். பெயர் சூட்டிய பெருமை பாகவதரின் பெருமையாகவும் வெற்றியாகவுமே அவர்களால் கொண்டாடப்பட்டது. காலனியின பெயர் சாமி பெயராக இருக்க வேண்டுமென்று பாகவதரும் மற்றவர்களும் விரும்பினார்கள். அது பலித்துவிட்டது. சாஸ்தாவானால் என்ன? ஐயப்பனானால் என்ன? நினைத்தபடி பெயர் கிடைத்துவிட்டது. உண்மையில் ‘சாஸ்தா நகர்’ என்று பெயர் வைக்கும் யோசனையைப் பாகவதருக்குக் கூறியதே அம்மிணி அம்மாதான். நல்ல வேளையாக அது கண்ணனுக்குத் தெரியாது. பாவம்! தெரிந்தால் கூட்டத்தில் அதுவும் கடுமையான விமர்சனத்துக்குட்பட்டிருக்கும்.