19

     மறுபடி கண்ணன் கண் விழித்தபோது விடிந்து வெகு நேரமாகியிருந்தது. தான் அம்மிணியம்மாள் வீட்டு மாடியில் கட்டிலில் படுத்திருப்பதை அவன் உணர்ந்தான். பக்கத்தில் மனைவி சுகன்யாவும் குழந்தை கலாவும் இருந்தார்கள். தன் முன் நெற்றியில் ஒரு கட்டுப் போட்டிருப்பதையும் கண்ணன் உணர்ந்தான். சுகன்யா பதறினாள்.

     “என்னங்க இது? நான் சொல்லியும் கேட்காம நீங்க பாட்டுக்கு ஏணியிலிருந்து விழுந்து தண்ணியிலே கிடந்தீங்க. ஏணி அடிபட்டு முன் நெத்தியிலே காயம் வேறே. நல்ல வேளையாப் பாகவதர் உங்களைத் தேடிக்கிட்டு அங்கே வந்திருக்கலேன்னா உங்கபாடு என்ன ஆகியிருக்கும்?”

     “இதைவிட மோசமாக எதுவும் ஆகியிருக்காது. இங்கே கொண்டாறத்துக்குப் பதிலா நான் செத்துத் தொலைஞ்சு என்னைக் கண்ணம்மாப் பேட்டையிலே கொண்டு போய்ப் பொசுக்கியிருந்தால் கூட நல்லா இருந்திருக்கும்!”

     அவனுடைய வெறுப்பும் விரக்தியும் ஒரு சிறிதும் தணியவில்லை என்பது சுகன்யாவுக்குப் புரிந்தது. அவள் அவசர அவசரமாக அவன் மேலும் இப்படி உளறவிடாமல் வாயைப் பொத்தினாள்.

     பாகவதரும் அம்மிணி அம்மாளும் உள்ளே வந்தார்கள். அவனைக் கனிவாக விசாரித்தார்கள். காலனியில் அந்தத் தெருவில் மாடி இல்லாத அத்தனை வீட்டுக்காரர்களும் தங்கள் தங்கள் வீட்டைப் போட்டது போட்டபடி வெள்ளத்தில் விட்டு விட்டு அந்த வீட்டு மாடியில் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். முகம் கோணாமல் அங்கே எல்லாருக்கும் உபசாரம் நடந்தது. பாகவதர் வீட்டார்கூட அங்கேதான் வந்து தங்கியிருந்தார்கள். அன்று பால் சப்ளை இல்லை. காய்கறி, பல சரக்குக் கடைக்குப் போகப் பாதையே கிடையாது. தெருவில் இடுப்பளவு வெள்ளம். வீட்டில் ஸ்டாக்கில் இருந்த கண்டென்ஸ்ட் மில்க் டப்பாக்கள், பால்பவுடரை வைத்து அத்தனை பேருக்கும் டீ, காப்பி, குழந்தைகளுக்குப் பால் என்று சமாளித்தார்கள் அம்மிணி அம்மாள் வீட்டார்.

     காய்கறி இல்லாத குறையை வீட்டில் ஸ்டாக் இருந்த பப்படம், மரச்சேனை அப்பளம், கூழ்வடாம், நேந்திரங்காய் வறுவல் ஆகியவற்றை வைத்துச் சமாளிக்க முடிந்தது. அமமிணி அம்மாளின் பெண்கள் தங்கள் நட்சத்திர அந்தஸ்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டுச் சர்வ சாதாரணமாக நர்ஸுகளைப் போல் அங்கே எல்லாருக்கும் ஓடியாடிச் சேவை செய்தது புதுமையாயிருந்தது.

     அந்த நந்தினி வந்து கண்ணனுக்கு டெம்பரேச்சர் பார்த்து, “இன்னும் கொஞ்சங்கூட ஜுரம் இறங்கலே. ஜாக்கிரதையாப் பார்த்துக்கணும்” என்று சுகன்யாவை அன்புடன் எச்சரித்து விட்டுப் போனாள்.

     கண்ணன் முள் மேலிருப்பதுபோல் அங்கே இருந்தாலும் வேறெங்கும் போக முடியாதபடி சுற்றி வெள்ளம் சூழ்ந்திருந்தது. யாருக்கும் தெரியாமல் எழுந்து ஓடிவிடுவது கூட முடியாத காரியம். அம்மணி அம்மாளின் விசாலமான மாடி ஓர் அகதி முகாம் மாதிரி ஆகியிருந்தது. மின்சார சப்ளை அறவே கிடையாது. பால் சப்ளை நிறுத்தப்பட்டிருந்தது. ரொட்டி, காய்கறி, பல சரக்கு எதுவுமே கிடைக்கவில்லை. இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வேறு பேசிக் கொண்டார்கள். மாடியில் நின்று தெருவைப் பார்த்தால் எது எதுவோ நீர்ப்பரப்பில் மிதந்து வந்தது. மரச்சாமான்கள், செத்த நாய்கள், பிளாஸ்டிக் பண்டங்கள் என்று கீழே ஒரே தண்ணிர்ப் பிரவாகம். நகரில் ‘கிரவுண்ட் ஃப்ளோர்’ மட்டுமே உள்ள வீட்டுக்காரர்கள் எல்லாருமே இப்படி அங்கங்கே இருந்த மாடிகளில் அடைக்கலம் புகுந்திருக்க வேண்டும். அல்லது வேறு மேடான பகுதிகளுக்குக் குடியேறியிருக்க வேண்டும். அல்லது கார்ப்பரேஷன் ஸ்கூல்களுக்குப் போயிருக்க வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு மழையோ வெள்ளமோ வடிகிற வாய்ப்பில்லை என்றும் மக்கள் தாழ்வான பகுதிகளை விட்டு வெளியேறுமாறும் ரேடியோ அறிவித்தது. மறுநாள் காலை பத்திரிகைகளில் வெள்ளச் சேதங்களைப் பற்றிய படங்களையும், போலீஸார் படகுகளில் மக்களை மீட்கும் காட்சிகளையும் பார்த்த போது பயங்கரமாயிருந்தது. சேதம் மிக மிக அதிகம் என்பதும் புரிந்தது.

     நிதானமாய்க் கண்ணன் யோசித்தபோது தோன்றியது: ‘இந்த அம்மிணி அம்மாளுக்கு என்ன தலையெழுத்து? வீட்டையே வெள்ள நிவாரண அகதி முகாம் மாதிரி மாற்றிக்கொண்டு இத்தனை பேருக்குச் சோறு தண்ணி தங்க இடம் எல்லாம் கொடுத்துச் சிரமப்பட்டு என்ன ஆகப் போகிறது? வெள்ளத்தில் சிறிதும் பாதிக்கப்படாத நகரின் நடு மைய மேட்டுப் பகுதியான போயஸ் கார்டனில் இவளுக்குச் சொந்தமாகக் கோட்டை மாதிரி ஒரு பெரிய பங்களா இருக்கிறது. வெள்ளத்திலிருந்து தப்புவதற்குத் தானும் தன் பெண்களுமாகப் பேசாமல் அங்கே போயிருக்கலாம். அப்படிச் செய்யாமல் இங்கேயே தங்கி இந்த ஜனங்களோடு ஜனங்களாகக் கஷ்டங்களைப் பங்கிட்டுக் கொண்டு இவர்களுக்கு உதவிச் சிரமப்படுவதில்தான் அம்மிணி அம்மாள் போன்ற சூப்பர் ஸ்டார்களின் தாய் மகிழ முடிகிறது என்றால் அவள் வாழ்வில் தான் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்ததை இன்னும் மறக்கவில்லை என்றுதான் தெரிகிறது. கண்ணனுக்கு இந்த விஷயம் பெரிய ஆச்சரியமாகவே இருந்தது.

     “அந்தப் பேட்டையிலே ஏழை எளியவர்களுக்கு நம்ம ரசிகர் மன்றத்தின் சார்பில் உணவுப் பொட்டலம் வழங்கணும். இந்தப் பாக்கத்திலே துணிமணி எல்லாம் வெள்ளத்திலே அடிச்சிட்டுப் போயிடிச்சு. தாய்மார்களுக்குச் சேலையும் ஆண் மக்களுக்கு வேஷ்டியும் வாங்கித் தரணும்” என்று புலவர் வந்து அவ்வப்போது பணம் வாங்கிப் போய்க் கொண்டிருந்தார்.

     கண்ணன் பார்க்க அவன் கண் முன்னாலேயே இந்தக் கொள்ளை நடந்தது. சாதி வித்தியாசம், ஏழை பணக்காரர் வித்தியாசம் பாராமல் தன் வீட்டு மாடியில் வந்து தங்கியிருந்த அத்தனை பேரையும் கவனித்தாள் அம்மிணி அம்மாள். மற்ற இடங்களில் மழை வெள்ளத்தால் நிறைய டெலிஃபோன் வேலை செய்யாமற் போயிருந்தாலும் அம்மிணி அம்மாள் வீட்டு டெலிபோன் மட்டும் அதிர்ஷ்ட வசமாக ஒரு குறையுமின்றிச் சரியாயிருந்தது. அம்மிணி அம்மாளின் மகள் நந்தினி அவளுக்கு மிகவும் வேண்டிய ஒரு டாக்டருக்கு ஃபோன் பண்ணி வரவழைத்தாள். டாக்டர் எங்கேயோ காரை நிறுத்திவிட்டுப் படகில் ஏறி வீட்டு வாசலில் வந்து இறங்க வேண்டியிருந்தது. வேறு யாராவது கூப்பிட்டிருந்தால் டாக்டர் வந்திருக்கவே மாட்டார். அத்தனை சிரமம்.

     “இவரை மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்ளவேண்டும். இந்தச் சூழ்நிலையில் ‘வைரஸ் இன்புளுயன்ஸ்’ ஜாஸ்தியாகி ஆபத்தில் கொண்டுபோய் விட முடிகிற வாய்ப்பு உண்டு. லிக்விட் டயட்தான். பார்லி அல்லது புழுங்கரிசிக் கஞ்சி மட்டும் கொடுங்கள். முழு ஓய்வு வேண்டும்” என்று சொல்லிக் கண்ணனுக்கு ஓர் ஊசி போட்டு விட்டு மேற்கொண்டு மருந்துகள் சில எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார் அந்த டாக்டர்.

     பயங்கர வெள்ளம் காரணமாக அந்த வட்டாரத்தில் எந்தக் கடைகளும் திறக்கப் படவில்லை. யாரோ ஆளைப் பிடித்துப் பணம் கொடுத்து அனுப்பி மவுண்ட்ரோடு வட்டாரத்திலிருந்து கண்ணனுக்காக மருந்துகள் வாங்கிவர ஏற்பாடு செய்தாள் நந்தினி. பார்லிக் கஞ்சியும் வேளை தவராமல் அவனது அறையைத் தேடிவந்தது.

     கண்ணனுக்கு அந்த உபசரணைகளின் இடையே இருந்து அவற்றை அநுபவிப்பதற்குப் பதில் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. ‘யாரைப் பற்றித் தான் நாக்கில் நரம்பில்லாமல் பேசியும், எழுதியும், வதந்திகளைப் பரப்பியும் வந்தானோ அவள் கையாலேயே தன்னை உபசரிக்கும்படி இப்படி ஆகிவிட்டதே’ என்று நினைக்கும் போதே உடம்பு கூனிக்கூசிக் குறுகியது.

     ஆஸ்பத்திரி ஜெனரல் வார்டு போல் மாடிக் கூடத்திலும் வராந்தாவிலும் ஆட்கள் விழுந்து கிடந்த அந்தச் சூழ்நிலையிலும் கண்ணனின் உடல் நிலை கருதித் தனது குளியலறை யிணைத்த படுக்கை அறையைத் தனியே விட்டுக் கொடுத்திருந்தாள் நந்தினி. அந்த அறையில் சுகன்யா, குழந்தை கலா, கண்ணன் ஆகிய மூவர் மட்டுமே தனியாகத் தங்கியிருந்தனர். தாங்கள் மட்டும் அப்படித் தனிக் கவனிப்பையும் வசதியையும் அடைவது கண்ணனுக்கு என்னவோ போலிருந்தது. அம்மிணி அம்மாளுடைய குடும்பத்தின் மிக உயர்ந்த குரு ஸ்தானத்திலிருந்த பாகவதரே தமது மனைவி மக்களுடனும் மற்றவர்களுடனும் மாடிக் கூடத்தில் நடுவாக ஒரு பாயை விரித்து எல்லாருடனும் உட்கார்ந்திருக்கும்போது தான் மட்டும் இப்படித் தனியறையில் சொகுசாக அங்கே இருப்பது உறுத்தியது. ஏற்கவும் மனமில்லை, மறுத்து வெளியேறவும் முடியவில்லை. மழை நிற்காததால் மேலும் நீர் மட்டம் உயர்ந்துவிட்டது.

     குழந்தைகள் கடைசி மாடிப்படியில் மேலே இருந்தபடியே காகிதக் கப்பல் செய்து கீழே மிதக்க விடுகிற அளவு தண்ணிர் அதிகமாயிருந்தது. நீச்சல் தெரியாதவர்கள் மாடியிலிருந்து கீழே இறங்கவே வழியில்லாமல் போயிற்று. இறங்கி நீந்தி எங்காவது ஓடிவிடலாம் என்றால் கூடக் கண்ணனுக்கு நீந்தத் தெரியாது. இத்தனை கஷ்டத்திலும் எதுவும் உறைக்காமல், எதுவும் புரியாமல் நிச்சலனமான, திருப்தியுடன் காகிதக் கப்பல்களை மிதக்கவிட்டுக் கை தட்டிச் சந்தோஷப்படும் சிறு குழந்தைகளைப் பார்த்துக் கண்ணனுக்குப் பொறாமையாயிருந்தது. ஒருவண்டி பழைய காகிதங்களை எடுத்துக் குவித்து வைத்துக் கொண்டு அந்தக் குழந்தைகளுக்குக் கப்பல் செய்து கொடுத்து அவர்களை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்த பாகவதரையும் அம்மிணி அம்மாளையும் பார்த்தபோது இன்னும் பொறாமையாக இருந்தது அவனுக்கு. இவ்வளவு பெரிய சிரமங்களுக்கு நடுவில் இந்தக் குழந்தைகளோடு குழந்தைகளாக உட்கார்ந்து இவர்களுக்குக் காகிதக் கப்பல் செய்து கொடுத்துத் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் மனம் எத்தனை தூரம் அகந்தையின்றிக், களங்கமின்றி, ஆசாபாசமின்றித் தூயதாய் இருக்க வேண்டும் என்பதை நினைத்தபோது இதுவரை அவர்களைத் தப்பாக எடை போட்டுத் தப்பாகவே கருதிய தன் கீழ்மைக் குணத்துக்காக வெட்கப்பட்டான் கண்ணன். மூன்று பகல் மூன்று இரவுகள் மழை விடவும் இல்லை. வெள்ளம் தணியவும் இல்லை. சூரியன் வெளியே முகத்தைக் காட்டவுமில்லை. எங்கும் ஒரே பிரளயம்தான்.