18

     கண்ணனும் குழந்தை கலாவும் கட்டிலில் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்கள். சுகன்யா கீழே தரையில் ஜமுக்காளத்தை விரித்துப் படுத்துக் கொண்டிருந்தாள்.

     வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்ததால் கனத்த ஜமுக்காளத்தையும் மீறித் தரையின் ஜில்லிப்பு உறைத்தது. கட்டிலோ சிறியது. இருவர் படுக்க முடியாது. மின் விளக்கு இல்லை. மெழுகுவத்தி டார்ச்சை வைத்துச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஜூர வேகத்தில் கண்ணன் அயர்ந்து தூங்கிவிட்டான். சுகன்யா ஆழ்ந்த உறக்கமின்றித் தரையின் ஜிலுஜிலுப்பு உறைத்ததால் சும்மா புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.

     அதிகாலை மூன்று மணி இருக்கலாம். திடீரென்று ஜமுக்காளமே தண்ணிரில் நனைந்தது போல் உணர்ந்து பதறியடித்துக் கொண்டு எழுந்து டார்ச் லைட்டைப் போட்டால் தரையில் தண்ணிர் பரவிக் கொண்டிருந்தது. வீட்டுக் கூடம் சமையலறை எல்லாம் தண்ணி மயமாயிருந்தது. வெளியே பேய் மழை இன்னும் விட்டபாடில்லை. ஜன்னல் வழியாக டார்ச்சை அடித்துப் பார்த்தால் வெளியே தெருவில் தரையே தெரியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் ஆறுபோல் நீர் ஓடிக் கொண்டிருந்தது. ஜன்னலில் ஏறிப் பின் பக்கம் ஓடிக் கொண்டிருந்த வழக்கமான கால்வாயைப் பார்த்தபோது அது காட்டாறு போல இரு கரையும் தெரியாமல் பொங்கிப் பெருகியிருந்தது. பின்புறம் வீட்டுக் கழிவு நீர் வெளியேறி அந்தக் கால்வாயில் கலப்பதற்காகச் செய்யப்பட்டிருந்த வழியாகக் கால்வாய்த் தண்ணிர் எதிர்த்துக் கொண்டு உள்ளே வந்து காம்பவுண்டில், வீட்டிற்குள் என்று தாராளமாக நுழைந்து கொண்டிருந்தது. தரையில் வைக்கப்பட்டிருந்த பிரம்புக் கூடை, பிளாஸ்டிக் வாளி முதலிய பண்டங்கள் ஒவ்வொன்றாக வீட்டுக்குள்ளேயே மிதக்க ஆரம்பித்திருந்தன.

     அந்தக் காலனியில் வீடு அலாட் ஆகி அவர்களும் மற்றவர்களும் குடிவந்து பல ஆண்டுகள ஆகிவிட்டன. எந்த ஆண்டிலும் இப்படி நடந்ததில்லை. தெருவில் முழங்கால் அடி, ஓர் அடி தண்ணிர் தேங்கும், பின்புறம் கால்வாயில் இரு கரையும் நிமிர நீர் ஒடும். அதிகப்பட்சமாக அவர்கள் பார்த்திருந்தது இவற்றைத்தான். இதுவோ புதுமையான அனுபவம், முதல் பயங்கர அனுபவம். அந்தத் காலனிக்குள் ஓடிய கால்வாய் அடையாறில் போய்க் கலக்கின்றது. அடையாறில் அதிக வெள்ளமாக இருந்து, மழை நீர் போதாதென்று அந்தத் தண்ணிர் வேறு எதிர்த்துக் கொண்டு கால்வாய் வழியே காலனிக்குள்ளும் மற்றத் தாழ்வான பகுதிகளுக்குள்ளும் புகுந்திருப்பதைச் சுலபமாகவே ஊகித்து உணர முடிந்தது. மின்சாரம் இல்லாததால் எங்கே எதைத் தேடி எடுப்பது என்று தெரியவில்லை. தண்ணிர் அளவு விநாடிக்கு விநாடி மேலே ஏறிக் கொண்டிருந்தது. சுவரில் அடையாளம் பார்த்தாலே அது தெரிந்தது.

     பாத்ரும் கதவைத் திறத்தால் ஒரே கோரம். ப்ளஷ் அவுட்டிலிருந்து சகலமும் பொங்கிக் கொண்டு தண்ணிர்ப் பரப்பிற்கு வந்து மிதக்கத் தொடங்கியிருந்தது. சுகன்யாவுக்குக் கையும் ஒடவில்லே காலும் ஒடவில்லை.

     பதறிப் போய்க் கணவனே எழுப்பினள். அவன் உடம்பு நெருப்பாய்க் கொதித்தது. தன் நினேவே இல்லாமல் அடித்துப் போட்ட மாதிரி தூங்கிக் கொண்டிருந்தான். கீழே நீர்ப்பரப்பில் காலை வைத்து விடாமல் தடுத்து அவனுக்கு அவள் நிலைமையை விளக்கிப் புரிய வைக்கச் சில நிமிஷங்கள் பிடித்தன. கண்ணனுக்குக் கால்கள் தள்ளாடின.

     வீட்டிற்குள் நீர் மட்டம் கிறுகிறுவென்று ஏறிக் கொண்டிருந்தது. கட்டில் முழுக இன்னும் ஓர் அடி தண்ணிர் அதிகமானாலே போதும். ஜுரத்தையும் பொருட்படுத்தாமல் அவன் கீழிறங்கி நனைந்தபடி தள்ளாடித் தள்ளாடி ரேடியோ, டெலிவிஷன், அரிசி மூட்டை என்று முடிந்தவற்றைத் தரையிலிருந்து ஏணியைச் சாத்திப் பரணுக்கு மாற்றினான். அவனால் முடியவில்லை. அதிகமாகத் தள்ளாடியது. இருட்டு வேறு. டார்ச்சில் ஸெல் வீர்யம் குன்றி ஒளி மங்கிக் கொண்டே வந்தது. இருட்டில் தீப்பெட்டி வைத்திருந்த இடத்தைத் துழாவியபோது அது நழுவித் தண்ணிரில் விழுந்து விட்டது. கைவிளக்கோ, மெழுகுவத்தியோ கொளுத்த வழி இல்லை.

     இருட்டில் ஒன்றும் நினைத்த வேகத்துக்கு நடக்க வில்லை. குழந்தையும் கட்டிலும் தண்ணிரில் நனைவதற்கு இன்னும் கால் அடி தண்ணிர்தான் பாக்கி. சுகன்யா பதறிப் போய்க் குழந்தையை எடுத்துத் தோளில் சாத்திக் கொண்டாள். வேறு எதுவும் தோன்றவில்லை. வாசலிலிருந்து தண்ணிரில் யாரோ நடந்து வரும் ஓசையும் டார்ச்சுகளின் ஒளியும், “சுகன்யா! சுகன்யா! சீக்கிரம் குழந்தையை எடுத்துக்கிட்டு வெளியே ஓடி வாங்க. செம்பரம்பாக்கம் ஏரியை உடைச்சு விட்டிருக்காங்க. காலனியிலே வெள்ளம் பூந்திடிச்சு. எங்க வீட்டு மாடிக்குப் போயிடலாம் வா” என்று அம்மிணி அம்மாளின் குரல் மங்கலாகக் கேட்டது.

     மழை ஓசை, தண்ணிர் பாயும் ஓசை எல்லாம் பயங்கரமாக இருந்ததால் அந்தம்மாள் மிக அருகிலே இருந்து கத்தியும் அது பெரிதாகக் கேட்கவில்லை. “இதோ வந்திட்டேம்மா” என்று அந்தம்மாளுக்குப் பதில் குரல் கொடுத்துக் கொண்டே.

     “ஏங்க... கூப்பிடறாங்களே, என்ன செய்யட்டும்?” என்று சுகன்யா மெதுவாகக் கணவன் காதருகே கேட்டாள்.

     அப்போதே இருவரும் முழங்காலளவு தண்ணிரில் நின்று கொண்டிருந்தார்கள். தண்ணிர் ஏறியபடி இருந்தது. வீட்டுக்குள் நீர் அகல மோதியது. அவன் முகம் கடுமையாகியது.

     “நான் வரலே. வர மாட்டேன் நீ வேணாப் போய்க்க.”

     “என்னங்க இது? இந்த ஜுரத்திலே இப்படி அடம் பிடிக்காதீங்க. ஆபத்துக்குப் பாவமில்லே. உங்க பழைய விரோதத்தை எல்லாம் வெள்ளம் வடிஞ்சப்புறம் வெச்சுக்கலாமே?”

     “முடியாதுன்னா முடியாதுதான். நான் மானஸ்தன்.”

     இப்படி விவாதம் நடந்து கொண்டிருந்த போதே அம்மிணி அம்மாளும், பாகவதரும் கூப்பாடு போட்டு அவளை அழைத்தபடி வாசல் தகவைத் தட்ட தொடங்கியிருந்தார்கள்.

     “அப்படிப் பார்த்தாலும் நீங்கதான் அவங்களுக்கு நெறையக் கெடுதல் பண்ணியிருக்கீங்களே ஒழிய, அவங்க உங்களுக்கு ஒரு கெடுதலும் பண்ணலியே? இந்த ஆபத்திலே விரோதம் பார்க்காமே அவங்க உங்களைத் தேடிவந்து கூப்பிடறாங்க. நீங்க இப்படி நேரங் காலம் தெரியாம முரண்டு பிடிச்சா எப்படி?”

     “என்னை எதுவும் கேட்காதே! செத்தாலும் நான் அங்கே வரமாட்டேன்.”

     கட்டில் மூழ்கிவிட்டது. அதிக நீர்மட்டத்தில் அவள் குழந்தையின் சுமையும் சேர்ந்து நிற்க முடியாமல் தள்ளாடினாள்.

     “நீ போயிடு... கோபமாகச் சொல்லலே. நிஜமாவே சொல்றேன்.”

     அவள் தண்ணிர்ச் சுழிப்பில் கீழே தடுமாறி விழுந்து விடாமல் குழந்தை கலாவோடு அடையாளமாக நடந்து போய் வாயிற் கதவுத் தாழ்ப்பாளைத் திறந்தாள்.

     “அவர் எங்கேம்மா? எல்லாருமா வாங்க. எங்க வீட்டு மாடிக்குப் போயிடலாம்.” இப்படிப் பாகவதரும் அம்மிணியம்மாளும் ஒரே சமயத்தில் சுகன்யாவிடம் கேட்டதை உள்ளே ஏணியில் ஏறி நின்றபடி அவனும் கேட்க முடிந்தது. ஒரு சண்டையை அல்லது தர்மசங்கடத்தைத் தவிர்க்கக் கருதி, “நாம் முதல்லே போயிடலாம்! அவர் பரண் மேலே நனையாமல் சில சாமான்களே ஏத்திட்டு வரேன்னார்” என்று சுகன்யா வெளியே பொய் சொல்லிச் சமாளிப்பதை அவனும் ஏணிப் படியில் நின்று கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.

     உள்பக்கமாக உடனே டார்ச் அடித்துப் பார்த்த பாகவதர் கண்ணன் ஏணியில் நின்று கொண்டு பரணில் என்னவோ எடுத்து வைப்பதுபோல் தோன்றவே அதை நம்ப முடித்தது. குழந்தை கலாவைப் பாகவதர் வாங்கிக் கொள்ள, சுகன்யாவை அணைத்தபடி அம்மிணி அம்மாள் அழைத்துச் சென்றாள். நீரில் ஆட்கள் நகரும் சளகள ஓசையைக் கேட்டபடி கண்ணன் ஏணியில் நின்றான். இன்னும் சிறிது நேரத்தில் ஏணி கீழே தரையில் தரிக்காமல் மிதக்க ஆரம்பித்து விடுவோ என்று கூடப் பயமாக இருந்தது.

     அதை அவன் அவமானமாக எண்ணினான். அவர்களைப் பற்றி இத்தனை எழுதி இத்தனை பேசி இவ்வளவு கேவலமாக எல்லாம் செய்துவிட்டு இப்போது இந்த மழைக்கும் வெள்ளத்திற்கும் அவர்கள் வீட்டிலேயே அடைக்கலமாவதைப் போல் கேவலம் வேறில்லை என்று எண்ணினான். புலவரைப்போல் அந்த உண்மை விளம்பியைப்போல் பணத்துக்காகத் தானும் மானங்கெட்டுப் போய்விடக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தான் கண்ணன். முதல் நாள் மழையில் நனைந்ததால் சளியும் தும்மலுமாக ஏணியில் நிற்க முடியாதபடி அவன் உடல் நடுக்கி எடுத்தது. ஜூர உடம்பு தகித்தது. ஆனாலும் பிடிவாதம் தளரவில்லை. சிறிது நேரத்தில் பாகவதர் டார்ச்சுடன் வந்து அவனிடம் மன்றாடப் போவதையும் எதிர்பார்த்து அவரிடம் அதை எப்படிக் கடுமையாக மறுப்பது என்பதையும் இப்போதே யோசிக்க ஆரம்பித்திருந்தது அவன் மூளை.

     பாகவதர் மிக மிக இங்கிதமான ஆள். எப்படியும் அவனை மனம் மாற்றி வசியப்படுத்தி அம்மிணி அம்மாள் வீட்டு மாடிக்கு அழைத்துப் போகத்தான் பார்ப்பார். அவரை எதிர்த்து வாதிட்டுப் பிடிவாதம் பிடிப்பது கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்று நினைத்து உஷாராயிருந்தான் கண்ணன். பித்தக் கிறுகிறுப்புப் போல தலை சுற்ற ஆரம்பித்தது. பரணியிலேயே ஏறி உட்கார்ந்து விடலாமா என்று அவன் மேலே ஏற ஆரம்பித்ததும் ஏணி எதிர்பாராத விதமாக இடறியது. அவன் அப்படியே தண்ணிரில் மட்ட மல்லாக்க விழுந்தான். அதுவரைதான் அவனுக்கு நினைவு இருந்தது. அப்புறம் நடந்ததை எதையும் அவனறியான்.