4

     பத்து நாள் கழித்து ஒரு நாள் இரவு உணவின்போது மோருஞ் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ஊறுகாயாக உப்புக்காரம் ஊறிய பச்சைமிளகு ஒரு கொத்து இலையில் விழவே கண்ணன் மனைவியை நிமிர்ந்து பார்த்தான்.

     “இது ஏது?”

     “ஏது, எங்கேருந்து வந்தது எல்லாம் தெரிந்ததால்தான் - சாப்பிடுவீர்களா?”

     “சாப்பிடுவேனா இல்லையா என்பது வேறு விஷயம்! ஆனால் இது எங்கிருந்து கிடைத்தது என்பது இப்போதே தெரிந்தாக வேண்டியது அவசியம்...”

     “பச்சை மிளகு ஊறுகாய் உடம்புக்கு ரொம்ப நல்லது. ஆயுர்வேத முறைப்படி பக்குவமாத் தயாரிச்சிருக்காங்க.”

     “இந்த சர்டிபிகேட் எல்லாம் எனக்குத் தேவையில்லை. முதலில் நீ என் கேள்விக்குப் பதில் சொல்லு.”

     அவள் பதில் சொல்லத் தயங்கித் தட்டிக்கழிக்கவே கண்ணனின் சந்தேகம் வலுப்படத் தொடங்கியது. அவன் இலையிலிருந்து கையை உதறிக்கொண்டு சாப்பிடுவதை நிறுத்திவிட்டு விருட்டென்று எழுந்திருந்தான். இனியும் அவனிடம் மறைக்க முடியாதென்று அவளுக்குப் பயம் வந்தது. அவள் வழிக்கு வந்தாள்.

     “நீங்க கோபிச்சுக்க மாட்டீங்கன்ன நான் உண்மையைச் சொல்றேன்...”

     “மிளகு யார் குடுத்தாங்க?”

     “கேரளாவிலிருந்து வந்ததுன்னு பக்கத்து வீட்டு அம்மிணி அம்மா குடுத்தாங்க...”

     இதைக் கேட்டதும் அவன் கொதிக்கும் எண்ணெயில் விழுந்த அப்பளமாகப் பொரிந்து தள்ளினான். அவன் முகத்தில் கோபத்தின் தகிப்பு அதிகமாகிக் கனன்றது.

     “அம்மிணியம்மா குடுக்கறதை எல்லாம் வாங்கிக்கறதுன்னு வந்திட்டா இந்த வீடு சந்தி சிரிச்சு நாறிப்போகும். இது சம்மந்தமா நான் ஏற்கெனவே உன்னை எச்சரிச்சாச்சு...”

     இதைச் சொல்லியபடியே கலத்திலிருந்ததைச் சாப்பிட்டு முடிக்காமலே பாதியில் எழுந்து கைகழுவி விட்டான் கண்ணன்.

     மனைவி எவ்வளவோ மன்றாடியும் அவன் கேட்கவில்லை. கோபமும் பிடிவாதமும் அவனுக்கு வெறியூட்டியிருந்தன.

     “என்னை மன்னிச்சிடுங்க. நான் பண்ணினது தப்புத் தான், அவங்க பிரியமாக் கூப்பிட்டுக் குடுக்கறப்ப ‘வேண்டாம் - வாங்கிக்க மாட்டேன்’னு எடுத்தெறிஞ்சு பேசித் திருப்பிக் குடுக்க முடியலே. இனிமே எதையும் வாங்க மாட்டேன். இப்ப நீங்க உட்கார்ந்து சாப்பிட்டு முடியுங்க...”

     “முடியாது! முடியாது! கண்ட கண்ட எடுபட்ட பொம்பிளைங்க கையிலிருந்தெல்லாம் ஊறுகாயும், மத்ததும் பிச்சை வாங்கித் தின்ற நிலைமைக்கு இந்த வீட்டைக் கொண்டாந்தாச்சு. இனிமே இங்கே சாப்பிடறதே பாவம்...”

     ஒரு வெறியோடு சமையலறை முழுவதும் தேடி ஒரு பழைய ஹார்லிக்ஸ் பாட்டிலில் மூடி வைக்கப்பட்டிருந்த அந்தப் பச்சை மிளகு ஊறுகாய் முழுவதையும் ஏதோ மிகவும் அருவருப்பான செத்த எலியைத் தூக்குகிற மாதிரித் தூக்கிப் போய்க் குப்பையில் எறிந்துவிட்டு வந்தான் கண்ணன். அதைச் செய்துவிட்டு வந்த பின்பும் கூட நெடு நேரத்துக்கு அவனது ஆத்திரம் தணியவில்லை. மனைவி அவனைக் கடிந்து கொண்டாள்.

     “உங்களுக்கு வேண்டாம்னா நீங்க சாப்பிடத் தேவையில்லை அநாவசியமாப் பெறுமானமுள்ள பண்டத்தைக் குப்பையிலே கொண்டுபோய்க் கொட்டிட்டீங்களே; இது உங்களுக்கே நல்லா இருந்தாச் சரிதான்.”

     “ஒழுக்கங் கெட்டவங்க வீட்டுப் பண்டத்தை விவஸ்தை உள்ள யாரும் கையாலே தொடமாட்டாங்க.”

     “நமக்குக் கறிகாய் விற்கிற கூடைக்காரி, அரிசி விற்கிற - கடைக்காரர், பலசரக்குத் தருகிற வியாபாரி எல்லாரும் ஒழுக்கமுள்ளவங்களான்னு பரீட்சை பண்ணிப் பார்த்தப்புறம்தான் நாம வாங்கிச் சாப்பிடறமா?”

     அவளுடைய இந்த வாதத்துக்கு அவனிடம் சரியான பதில் இல்லாவிட்டாலும் ஒரேயடியாகக் கோபத்தின் சுருதியை மேலேற்றி உரத்த குரலில், “நீ இப்போ வாயை மூடப் போறியா இல்லியா?” - என்று கூப்பாடு போடவே அவள் அடங்கிவிட்டாள். அவனுக்குப் பயந்து மேலும் அவள் விவாதிக்கவில்லை.

     ஆனாலும் தன் மனத்திலிருந்த அதே வெறுப்பையும் துவேஷத்தையும் வீட்டிலிருந்த மற்றவர்களின் மனத்தில் விதைக்க முடியாததைக் கண்ணனே உணர்ந்தான். தெரிந்தும் தெரியாமலும் தன் வீட்டிலுள்ளவர்கள் அம்மிணி அம்மாவின் வீட்டோடு பழகிக் கொண்டிருப்பதை அவன் அநுமானித்துக் கொள்ள முடிந்தது, அதற்கு வசதியாக இரண்டு வீட்டுக்கும் நடுவே சுவரோ வேலியோ எதுவும் இல்லை. இந்த வீடும், அந்த வீடும் சந்திக்கிற எல்லையின் பின் பக்கத்திலிருந்து முன்பக்கம் வரை உள்ள நூற்றுக்கு மேற்பட்ட அடி தூரத்தில் எந்த இடத்திலும் யாரும் யாரோடும் நின்று பேசலாம், பார்க்கலாம், சைகைகள் காட்டலாம் என்கிற மாதிரி இருந்தது. வீட்டின் நான்கு பக்கத்திலும் இப்படித் திறந்து கிடந்த எல்லையாகத்தான் இருந்தது.

     இந்தப் பக்கத்து வீட்டுக்குக் குடி வந்திருந்த நாகசாமி பாகவதரையும் கண்ணனுக்குப் பிடிக்காமல் போயிற்று. காரணம், அவர் பணத்துக்கு ஆசைப்பட்டு அம்மிணி அம்மாளின் வீட்டோடு நெருங்கிப் பழகி நாராயணீயம், தேவி பாகவதம் என்று சொல்லிக் கொண்டிருந்ததுதான். அவன் எச்சரித்ததையும் அவர் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

     கண்ணனுக்கு இருந்த அத்தனை விரோதமும், வெறுப்பும் அக்கம்பக்கத்து வீட்டாரிடம் அவன் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு இல்லை. அவர்கள் கண்ணனுக்குத் தெரியாமல் அக்கம்பக்கத்தாரிடம் பழகி வந்தார்கள். இது கண்ணனுக்கும் தெரிந்துதான் இருந்தது. எப்படியாவது இதைத் தடுத்தாக வேண்டுமென்று அவனும் யோசித்துக் கொண்டு தான் இருந்தான். கண்மூடித்தனமான விரோத வெறி அவனுள் மூண்டிருந்தது.

     அவனைப் போன்ற மத்திய தர வர்க்கத்து என்.ஜி.ஒ.வுக்குக் காம்பவுண்டுச் சுவர் எடுக்கப் போதுமான பணவசதி குதிரைக் கொம்பாக இருந்தது. ஆனாலும் ஏதோ ஒரு வெறியில் வட்டிக்குக் கடன் வாங்கியாவது காம்பவுண்டுச் சுவர்களை எடுத்து விடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தான் கண்ணன். மனைவி எவ்வளவோ தடுத்துப் பார்த்தாள்: “இப்போ இருக்கிற பணமுடையிலே காம்பவுண்டுச் சுவர் இல்லாட்டி என்ன கொறைஞ்சிடப் போவுது. வீண் செலவை இழுத்து விட்டுக்கிட்டுப் பின்னாலே கடனை அடைக்கக் கஷ்டப்படப் போறீங்க...”

     அவள் இப்படிக் கூறியதை அவன் பொருட்படுத்தவே இல்லை.

     “உன்னை ஒன்றும் யோசனை கேட்கலை. எதைச் செய்யணுமோ அதைச் செய்ய எனக்குக் தெரியும்.” கண்ணன் மனைவியிடம் எரிந்து விழுந்தான்.

     உண்மையில் உடனே சுற்றுச் சுவர் எடுப்பதற்கான எந்த அவசரமும் அப்போது இல்லை. பின்புறம் ஒடிய கால்வாய் எல்லா வீடுகளுக்கும் ஒரு வகையில் எல்லையாகவும், பாதுகாப்பு அகழியாகவும் இருந்தது. முன்புறம் சாலை இருந்ததனால் எந்நேரமும் பயமில்லாமல் ஆள் நடமாட்டமும் கலகலப்பும் இருந்தன. இருபக்கத்திலிருந்த அண்டை வீட்டார்கள் இருவர் மேலும் ஏற்பட்ட வெறுப்பைத் தவிர, காம்புவுண்டுச் சுவர் எடுக்க வேறு வலுவான காரணங்களே இல்லை. ஒரு வீம்புக்காகத்தான் கண்ணன் கஷ்டப்பட்டு அதிக வட்டிக்குக் கடன் வாங்கிக் காம்பவுண்டுச் சுவரை எடுக்கும் முயற்சியில் அப்போது தீவிரமாக இறங்கியிருந்தான். யார் தடுத்தும் கேட்கக் கூடிய மனநிலையில் அவன் அப்போது இல்லை. கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் இருந்தான்.

     சுவர் எடுக்குமுன் மாநகராட்சியில் வரைபடம் கொடுத்து அநுமதி வாங்க அலைய வேண்டியிருந்தது. சிமெண்ட் தட்டுப்பாடு இருந்ததனால் நல்ல சிமெண்ட் கிடைக்கவில்லை. இலட்சக்கணக்கில் காண்ட்ராக்ட் எடுத்த பெரிய கட்டிட வேலைகளுக்கு அலைந்து கொண்டிருந்ததனால் வெறும் காம்பவுண்டுச் சுவர் எடுப்பது போன்ற சிறிய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாயிருந்தது. இருந்தாலும் கண்ணன் முரண்டு பிடித்து இறங்கினால் இறங்கினதுதான். கிடைத்த சிமெண்டை வைத்து அவசரத்துக்கு வாங்கின அரை வேக்காட்டுச் செங்கல்லைக் கொண்டு தவித்த மாடு பிடிப்பதுபோல் பிடித்த ஆட்களால் இரண்டே நாட்களில் காம்பவுண்டுச் சுவர் எடுத்து முடிக்கப்பட்டது. மேலே ஓர் அடி உயரம் பார்ப்பட் வயரும் போடப்பட்டது.

     “நாலு மாசமா உடுத்திக்கொள்ள இரண்டாவது புடவை இல்லாமல் கஷ்டப்படறேன். அதுக்கு ஒரு வழி பண்ணாத நீங்க அதிக வட்டிக்குக் கடன் வாங்கி வீம்புக்காக இந்தச் சுவரை எடுத்து முள்வேலியும் போட்டாச்சு...! அழுத்தி ஒரு உதை உதைச்சால் கீழே விழுந்துடும் இந்தச் சுவர்...” - என்று கண்ணனின் மனைவி கூறியதை அவன் காதில் வாங்கிக் கொண்டதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆயிற்று.

     உண்மையில் அப்போதிருந்த பொருளாதார நிலையில் கண்ணன் அந்தச் சுவர்களை எடுத்தது அநாவசியமான காரியம்தான். பள்ளிக்கூடம் போய் வரும் பத்து வயதுச் சிறுமி கலாவுக்கு ஒரு பட்டுப் பாவாடை எடுத்துத் தர வேண்டும் என்று அவள் கெஞ்சி - இரண்டு மூன்று பிறந்த நாள்களும் ஒடிவிட்டன. வாங்கிக் கொடுக்க முடியவில்லை. ஹவுஸிங் போர்டு ஒதுக்கிய வீட்டிலேயே உட் பகுதியில் சமயலறை மேடை, குளியலறை இவை எல்லாம் சரியாயில்லே. சுவர்களில் இரண்டொரு பகுதி உப்புப் பரிந்து சதா ஈரமாகச் சொத சொத என்று காட்சியளித்தது. சிரம தசையைக் கருதி அதை எல்லாம்கூட அப்புறம் எப்போதாவது சரிப்படுத்திக் கொள்ளலாம் என்று விட்டு வைத்திருந்தவன், இதில் மட்டும் அதிக பட்ச அவசரமும் ஆத்திரமும் காட்டியிருந்தான். கண்ணனின் மனைவி சுகன்யாவுக்கே இதில் தாங்க முடியாத மனவருத்தம் இருந்தாலும் அவள் அதிகம் தலையிடவில்லை.

     கண்ணன் வீட்டில் இல்லாத நேரத்தில் அம்மிணி அம்மாவே சுகன்யாவைக் கூப்பிட்டு ஒரு யோசனைகூடச் சொன்னாள்: “உங்க வீட்டுக்காரர் எதுக்கும்மா தான் மட்டும் சிரமப்பட்டுச் செலவழிச்சுக் கஷ்டப்பட்டுக் காம்பவுண்டுச் சுவர் எடுக்கணும்? எங்கிட்டக் கொஞ்சம் முன்னாலேயே கலந்து பேசியிருந்தா ஒரு பக்கத்துச் சுவருக்கான செலவை நான் ஒத்துப்பேனே? அதே போல அந்தப் பக்கத்திலே பாகவதரிடம் பேசிப் பார்த்திருந்தா அவர் இன்னொரு பக்கத்துச் சுவரை ஒத்துக்க வைச்சிருக்கலாம். உங்களுக்கு முன்பக்கம் - பின்பக்கச் சுவர்ச் செலவு மட்டும் மிஞ்சியிருக்கும்! இத்தனை செலவு ஆகியிருக்காதே?”

     “இதைப் பத்தி அவர் எங்கிட்டக்கூட எதுவும் சொல்லலேம்மா! திடீர்னு ஏதோ நினைச்சார். கொத்தனாரைக் கூட்டிக் கொண்டுவந்து வேலையை ஆரம்பிச்சிட்டார்” என்று அம்மிணி அம்மாளிடம் பூசி மெழுகினற்போலப் பதில் சொல்லி வைத்தாள் சுகன்யா. ஏதாவது பதில் சொல்லியாக வேண்டுமே?

     ‘உங்கமேலேயும், உங்க வீட்டுமேலேயும் இருக்கிற வெறுப்பாலேதான் சுவரே எடுக்கக் கிளம்பினார் இவர்’ என்று அம்மிணி அம்மாவிடம் உள்ளதைச் சொல்ல முடியுமா? சொன்னால்தான் அது நன்றாகயிருக்குமா? உச்சியில் முழ உயர முள் வேலியுடன் சுவர்தான் எடுக்க முடிந்ததே ஒழிய அதற்கு மஞ்சள் கோபி கூட அடிக்க முடியவில்லை. தொட்டுக்கொள் துடைத்துக்கொள் என்று கடன் வாங்கிய பணத்தை வைத்துச் சுவரை எடுத்து முடித்தாயிற்று. அம்மிணி அம்மாவின் மூத்த பெண்கள் மாலா - பாலா - இருவரும் ஒரு நாள் கண்ணன் வீட்டில் இல்லாத போது சுகன்யாவிடம் வந்து பேசிக் கொண்டிருந்த போது, “அவசர அவசரமாகக் கட்டி, மேலே முள் கம்பியும் போட்டதாலே இந்தச் சுவர் அசிங்கமாத் தெரியுது அக்கா! மேலே வெள்ளையோ கோபியோ பூசாததாலே ரொம்ப விட்டுத் தெரியுது. இத்தனை அவசரமா இதைச் செய்திருக்கவே வேண்டாம்” - என்று குறைப்பட்டுக் கொண்டு போனார்கள்.

     குழந்தை கலாவுக்குக்கூடச் சுவர் வந்தது பிடிக்கவில்லை. பக்கத்து வீட்டிலிருந்து சாக்லேட், பென்ஸில், பால்பாயிண்ட் பேனா என்று கை நீட்டி வாங்க முடியாதபடி சுவர் குறுக்கே நின்றது. வாசல் வழியாகப் பக்கத்து வீட்டுக்குள் போய், இதெல்லாம் வாங்கிக் கொள்ள அப்பா வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்துக் காத்திருக்க வேண்டியிருந்தது.

     சுவரைப் பற்றி அம்மிணி அம்மாவும் அவளது பெண்களும் கூறிய விவரங்களைக் கணவனிடம் சுகன்யாவால் தெரிவிக்கக் கூட முடியவில்லை. தான் அவர்களோடு பேசிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தாலே கணவனுக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும் என்பதை அவள் நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாள்.